
அருண் பிரதன்யாவுடன் வீடு திரும்பி இருக்க அங்கே மகிழனின் அம்மா தன் கணவனோடு நின்றிருந்தாள்.
‘இவங்க ஏன் இங்க நிற்கிறாங்க’என்று இருவருக்குமே தோன்ற கேள்வியாக அவளைப் பார்த்தனர்.
“கொஞ்சம் பேசணும் உள்ளே போய் பேசுவோமா”என்று மகிழனின் அம்மா சத்யா கேட்க மகிழன் அருணின் கழுத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு இருவரையும் பார்க்க மாட்டேன் என்பது போல அவனின் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.
“உங்க கிட்ட பேச என்ன இருக்கு. எதுவும் இல்லைங்க”என்றான் அருண்.
“ஏன் இல்லை என் பையன்”எனும் போதே “மகிழனை உள்ளே தூக்கிட்டு போ தனு”என்று அவளிடம் கொடுத்த அருண் கதவை அவளுக்காக திறந்து விட்டான்.
பிரதன்யா மகிழனை வாங்கிக் கொண்டு உள்ளே செல்ல
“ஏங்க அவ பிள்ளையை வச்சுக்கிட்டு அவ கிட்ட தர மாட்டேன் னு நிற்கிறீங்க”என்று சத்யாவின் கணவன் சண்டைக்கு வர
“ஓஓஓ இப்போ தான் தெரியுதா அவங்க பிள்ளை னு. ஏன் பால்குடி மறக்காத பிள்ளையை விட்டுட்டு ஓடினப்ப தெரியலையா இது அவங்க பிள்ளை னு”என்றவனுக்கு உள்ளமெல்லாம் கொதித்தது.
“ஆஃப்டர் டெலிவரி டிப்ரஷன். அதோட ஆதரவு இல்லாம”
“ஆதரவு இல்லாமையா யாருங்க அவங்களை ஆதரவு இல்லாம விட்டது. நானா இல்லை என் அப்பாவா”என்று சொல்லி கேட்கும் போதே அந்த அப்பார்ட்மெண்ட்டில் இருந்த வீடுகளின் கதவுகள் ஒவ்வொன்றும் திறந்து சாத்தப்பட்டன.
“இதோ பாருங்க சத்யா இங்கே நாங்க இருக்கிற இடம் தெரியாமல் வாழ்ந்துட்டு இருக்கோம்.இங்க வந்து எங்க மானத்தை வாங்கணுமா நீங்க. உங்க லைஃப் தான் செட்டில்மென்ட் ஆகியிருச்சே அப்புறம் ஏன் மகிழனை கேட்கிறீங்க. எனக்கு புரியலை”என்றான் கடுப்பாக.
“நாங்க கேட்கிறதை தந்தா நாங்க ஏன் உங்க வீட்டு வாசல்ல நிற்க போறோம். ஏன் கேட்கிறீர்களா என் பையன் நான் கேட்க மாட்டேனா. ஒத்துக்கிறேன் ஏதோ டிப்ரஷன் போயிட்டேன் அதுக்காக மகி என் பையன் இல்லை னு ஆகிடுமா… இதோ பாருங்க அருண். என் பையன் எனக்கு வேணும். பிரச்சினை பண்ணாம குடுத்தா உங்களுக்கு நல்லது. இல்லையா நான் கோர்ட்டில் பேசிக்கிறேன். ஆட்டோமேட்டிகா மகிழ் என் கிட்ட வந்திடப் போறான்”என்று மிடுக்காய் கூறியவள்”உனக்கு ஏற்கனவே என்னால கஷ்டம் னு தான் அருண் இதுவரைக்கும் கோர்ட் போகிற ஐடியாவை ஹோல்ட் பண்ணி இருக்கேன்”என்றாள் பெருந்தன்மை போல
“அவ்வளவு பெருந்தன்மை எல்லாம் நீங்க என் புருஷனுக்கு பார்க்க வேண்டாங்க. இங்கிருந்து போயிடுங்க அதுவே பெரிய கைமாறு எங்களுக்கு”என்றபடி வெளியே வந்தாள் பிரதன்யா.
“அவன் என் பையன்”என்று சத்யா குதிக்க
“ஏய் போயிரு அடிச்சுட போறேன். பையனாம் பையன். விட்டுட்டு போகையிலே தெரியலையா அவன் உன் மகன்னு. அஞ்சு வயசு வரைக்கும் வளர்த்து விடுவாரு. நோகாம வந்து என் பையன் னு சொல்லி கேட்பியா. கொஞ்சமாவது மனசாட்சி இருந்தா இப்படி வந்து நிற்பியா நீ”என்று திட்டி விட்டாள் பிரதன்யா.
“முதல்ல நீங்க ரெண்டு பேரும் என்னை புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க. அந்த நேரம் எனக்கு அத்தனை மன அழுத்தம் அதான் விட்டு போனேன். நான் ஒண்ணும் தெருவில் விட்டு போகலையே. சொந்த சித்தப்பா தாத்தா கிட்ட தானே விட்டு போனேன்.என் உரிமையை நான் கேட்க கூடாதா… வளர்த்தா உங்களுக்கு உரிமைப்பட்டவன் ஆகிடுவானா அவன்”என்றாள் சத்யாவும்.
“அதைத் தான் நானும் கேட்கிறேன் சொந்த தாத்தா சித்தப்பாவின் வளர்ப்பில் தானே மகிழன் இருக்கான் அப்புறம் ஏன் அவனை எங்கேயோ தெருவில் விட்டு அநாதையா வளர்ற மாதிரி ஆசிரமத்தில் அவன் இருக்கிற மாதிரி வந்து கேட்கிறீங்க. அவன் இப்ப இருக்கிற இடத்தில் சந்தோஷமா நல்லா தானே இருக்கான் அப்புறம் ஏன் கேட்கிறீங்க”என்று பிரதன்யாவும் மல்லுக்கு நிற்க இருவருக்குமான வாக்குவாதம் நீண்டு கொண்டே சென்றது.
“இதோ பாருங்க சத்யா. மகி என் அண்ணன் வாரிசு அவனை இத்தனை வருஷமா நான் தான் வளர்க்கிறேன். என் மனைவிக்கும் அதில் சம்மதம். நீங்க கோர்ட் போனா உங்களுக்கு சாதகமா தான் தீர்ப்பு வரும். இல்லை னு சொல்ல மாட்டேன். ஆனா என் அண்ணனை விரும்பினது உண்மைன்னா நீங்க மகிழனை என் கிட்ட விட்டுடுங்க உங்களுக்கு னு ஒரு லைஃப் அமைஞ்சிருக்கு அதை வாழப் பாருங்க. எங்களை விட்டுடுங்க”என்ற அருண் மனைவியோடு உள்ளே சென்றவன் கதவை அறைந்து சாத்தினான்.
மகிழனை வாங்காமல் விட மாட்டேன் என்று சத்யா கத்தி விட்டு செல்ல உள்ளே மகிழன் குப்புறப் படுத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தான்.
மனமே ஆறவில்லை இருவருக்கும்.
“மகிக்குட்டி டீவி பார்ப்போமா”என்று அவனருகில் இருவரும் அமர்ந்து கொள்ள
“வேணாம்”என்றான் அழுகையோடு.
“எதுக்கு என் தங்கப்புள்ள அழுகுதாம்”என்று அவனைத் தூக்கி அமர வைக்கவும் அருணின் கழுத்தை கட்டிக் கொண்டு “அது யாரு ப்பா. எனக்கு போவ வேணாம் ப்பா. நானு உங்கூடவே இருக்குவேன். மாட்டேன் போ மாட்டேன்”என்று தேம்பியபடி பேச
“உன்னை யார் கிட்டயும் தர மாட்டேன். நீ அப்பா கூட தனும்மா கூட அப்புறம் தாத்தா கூட தான் இருப்ப சரியா”என்று மகனை சமாதானம் செய்ய
“பிள்ளை முன்னாடி பேச வச்சு இப்ப அவனை அழுக விட்டு போயிருக்கா பாரு அறிவு கெட்டவ அவளை சொல்றேன் எனக்கு எங்க போச்சு புத்தி”என்று தலையில் அடித்துக் கொண்ட பிரதன்யா “மகி நீ வா நாம நூடுல்ஸ் கிண்டுவோம். டாப்பிங் நீ போடுவியாம் ஓகே”என்று அவனை இழுக்க
“எனக்கு வேணாம் நானு போவ மாட்டேன் அப்பா விட்டு போவ மாட்டேன்”என்று இன்னும் இன்னும் அருணை அணைத்துக் கொள்ள இருவருக்கும் வேதனையாக இருந்தது.
“நீ எங்கயும் போக வேண்டாம் உங்க அப்பா கூட தான் இருப்ப. சும்மா அழுக கூடாது அப்புறம் அம்மா உனக்கு சாம்பார் வச்சு சாப்பாடு ஊட்டுவேன்”என்று பிரதன்யா சொல்லி மிரட்ட
“நானு போவ மாட்டேன் ம்மா போவவே மாட்டேன்”என்று திரும்ப திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருந்த பிள்ளை அப்படியே உறங்கிப் போனான்.
இருவரும் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தனர்.
*”******
யுகாதித்தன் தேஜஸ்வினியுடன் பெங்களூர் கிளம்ப சாரதா இம்முறை மன நிம்மதியுடன் தான் அவர்களை அனுப்பி வைத்தார். செந்தாளம்பட்டியில் நந்தினியின் கர்ப்பம் கொண்டு தேஜுவைப் பார்க்க கெஜலட்சுமி தான் சாரதாவையும் சுந்தரியையும் சமாதானம் செய்து வைத்தார்.
“புள்ள பொறக்கறதும் பூமி செழிக்கறதும் அவன் மனசு வச்சா நடக்காம போவாது சாரதா. புள்ளைங்க ரெண்டும் ஒத்துமையா இருக்குதுகளா அது தான் நமக்கு முக்கியம். எம்பேரன் பேத்திக எல்லாம் ஒத்துமையா தான் வாழுதுக சும்மா அதுங்க மனசை கலைச்சுக்கிட்டு… சுந்தரி சூதானமா இரு ஆமா”என்றார்.
“நாங்களும் அவங்க நல்லபடியா இருக்கணும்னு தான் நினைக்கிறோம் த்தை”என்ற சுந்தரி வேறு பேசத் துவங்கி விட்டார்.
சாரதாவிற்கு மகன் முன்பை விட இப்போது தெளிவாக இருக்கிறான் என்பதே பெரும் ஆறுதலாக இருந்தது. எதையோ பறி கொடுத்தது போல் வலம் வந்தவன் இப்போது முகத்தில் ஒரு வித புன்னகையுடனேயே வலம் வந்தான். இருவரும் தங்கள் திருமண வாழ்வை சிறப்பாக நடத்துவர் என்று உணர்ந்து தனியாக தான் பெங்களூர் அனுப்பி வைத்தார்.
இருவரும் பெங்களூரில் வந்து இறங்கியதுமே அவர்களைப் பார்க்க ஒரு குடும்பம் வந்திருப்பதாக கூறினார் அந்த அபார்ட்மெண்ட் செக்ரட்டரி.
“எங்களைப் பார்க்கவா”என்று கேட்டபடியே செக்ரர்ட்டி அலுவலகத்தைப் பார்க்க அங்கே யுகாதித்தனுக்கும் கவிலயாவுக்கும் பொதுவான தோழன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவனருகில் கவிலயாவின் அண்ணன் இருந்தான்.
‘யார் இவர்கள்’என்று யோசிக்க
“மச்சான்”என்று அணைத்துக் கொண்டான் யுகாதித்தனின் நண்பன்.
“நீயா ராகுல் நான் யாரோ னு நினைச்சுட்டேன் எப்படி டா இருக்க”என்று மகிழ்ச்சியுடன் கேட்க.
“ஆளைப் பார்த்தா தான் கேட்க தோணுது உனக்கு.”என்று கடிந்து கொண்ட ராகுல் அவனின் நலம் விசாரித்தான்
“நல்லா இருக்கேன்டா என்ன திடீர்னு சர்ப்ரைஸ் விசிட்”என்று அவன் எப்படி தன்னை தேடிக் கண்டு பிடித்தான் என்பதைக் கேட்டு விட்டு அருகில் இருந்தவர்களை கேள்வியாக பார்க்க
“கவியோய அண்ணன் டா. யூ எஸ் ல இருந்தாரே அவர்”என்று அறிமுகம் செய்ய யுகாதித்தன் முகம் சிந்தனையை தத்தெடுத்தாலும் கவிலயாவின் நினைவில் கசங்கியது.
“நான் ரூபேஷ். கவிக்கு நீங்க யார் னு ராகுல் சொன்னாங்க அதான் உங்களை பார்க்க ஆசைப்பட்டேன்”என்றான் வந்தவன்.
இன்னுமே அவன் எதற்காக வந்திருக்கிறான் என்று யுகனுக்குப் புரியவில்லை. அவனிடம் என்ன பேசுவது என்று கூட தெரியாமல் நிற்க ரூபேஷே பேசினான்.
“உங்களை இன்ட்ரோ பண்றேன்னு ரொம்ப நாளா சொல்லிட்டு இருந்தா ஆனா பார்க்க சிச்சுவேஷன் அமையவே இல்லை. இந்த டைம் ஏனோ உங்களை பார்க்க தோணுச்சு. அதான் பார்க்க வந்தேன்”என்ற ரூபேஷ் அவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு “என் சிஸ்டரை உங்க ரூபத்தில் பார்க்கிற மாதிரி ஃபீல் ஆகுது எனக்கு”என்றிட யுகனுக்கு முகம் வேதனையில் சுருங்கியது.
”சாரி உங்களை ஃபீல் பண்ண வைக்க நினைக்கலை”என்ற ரூபேஷ் தன் குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்தான். அவனின் குழந்தை துறுதுறுவென இருந்தது. யுகன் கையை நீட்டவுமே வேகமாய் தாவியது அவனிடம்.
“அவ நேமும் லயா தான்”என்று ரூபேஷ் கூற யுகன் குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
தேஜஸ்வி இருவரையும் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அஸ்வி நேம் கேட்டியா லயாவாம்”என்று கண்கள் கலங்க கூறவும் புன்னகை சிந்தினாள் தேஜா.
அவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரித்தவன் அங்கே தங்களோடு இருக்கும் படி கேட்க ரூபேஷ் மறுத்து விட்டான்.
“உங்களை பார்க்க நினைச்சேன். எங்க நீங்க மேரேஜே பண்ணாம இருந்துடுவீங்களோனு கவலையோடு தான் வந்தேன். உங்களை இப்ப ஃபேமிலி மேனா பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷமா இருக்கு. என் சிஸ்டர் ஆத்மா ரொம்ப ஹாப்பியா இருக்கும். இந்த பொண்ணை நல்லா பார்த்துக்கோங்க”என்று சொல்லி விடை பெற்றான் ரூபேஷ்.
ரூபேஷ் கிளம்பும் தருணத்தில் திரும்பி வந்த அவனின் மனைவி யுகனின் கையைப் பிடித்துக் கொண்டவள்”உங்களைப் பார்க்க வந்த காரணம் என் மாமியார் உங்களை நேரில் பார்க்க ஆசைப்பட்டாங்க. டெத் பெட் ல இருக்காங்க. கடைசி ஆசையா உங்களை அதாவது கவியோட ஹஸ்பண்டா உங்களை நினைச்சு கேட்டாங்க” என்றாள் தயக்கமாக.
யுகனுக்கு அவர்கள் வந்த நோக்கம் புரிந்தது. தான் திருமணம் ஆகாமல் தான் இருக்கிறேன் என்று எண்ணியவர்களுக்கு தற்போது தேஜாவுடன் இருக்கவும் இதை எப்படி சொல்லி அழைத்துச் செல்வது என்று தயங்கி வந்த விஷயத்தை பேசாமல் கிளம்புகிறார்கள் என்று மிகச் சரியாக கணித்தான். யுகன் அவர்களோடு செல்வானா
….. தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
1
+1
