Loading

தழல் 23:

 

15 ஆண்டுகளுக்கு முன்பு:

 

ஆராவும் கனியும் கைகளால் கன்னங்களை தாங்கியபடி, குறுக்கும் நெடுக்குமாய் பதற்றத்துடன் நடந்துக் கொண்டிருந்த தந்தையைத் தான் விழியகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் இன்று. ஆராவும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தாள். முடிவு என்னாகுமோ என்ற பயம் மகளை ஆட்டிப் படைத்ததோ இல்லையோ அந்த தந்தையைப் பாடாய் படுத்திக் கொண்டிருந்தது.

 

“ஆரும்மா… நல்லா எழுதி இருக்க தானே… கண்டிப்பா ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்துடுவ தானே…” என்றார் ராஜன் மீண்டுமாய் மகளிடம்.

 

“ப்பா…” என்ற மகளின் குரலில் சலிப்புடனான சிணுங்கல் இருந்தது.

 

“அதில்லை ஆரும்மா… அப்பாவுக்கு உன்மேல ரொம்ப நம்பிக்கை தான்… இருந்தாலும்…” என்றவர் மகளின் முகம் போனப் போக்கில் மேலே கேட்க முடியாமல் பதற்றத்தோடு குறுக்கும் நெடுக்கும் நடக்க துவங்கி இருந்தார்.

 

“இப்பவே நெட் சென்டருக்கு கிளம்பிடுவோமா..? அப்பதான் முதல் ஆளா பாக்க முடியும்… இல்ல வேண்டாம்… நாம நேரா ஸ்கூலுக்கே போய்டலாம்… எப்படியும் ஆராதானே  பர்ஸ்ட் வருவா…” என்றார் மீண்டும் மகள்களிடம்.

 

“ப்பா…” இப்பொழுது இரு மகள்களும் சலிப்போடு சிணுங்குவது கேட்டது. கூடவே “ராஜன்…” என்றபடி உள்ளே நுழைந்த மனைவியின் கண்டிப்பான அதட்டல் குரலும் கேட்டது. அவர் அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியராய் பணியில் இருந்தார். இரவு நேரப் பணி முடிந்து இப்போது தான் வீடு திரும்புகிறார் பர்வதம்.

 

மனைவியின் அதட்டிலில் வாயை மூடிக் கொண்டவர், பொறுமை இல்லாமல் குறுக்கும் நெடுக்கும் நடக்க தொடங்கி இருந்தார். அவரையே ஓரப் பார்வை பார்த்தபடி பால் பாக்கேட்டோடு சமையல் அறைக்குள் நுழைந்திருந்தார்.

 

“அப்பாவுக்கும் மகளுங்களுக்கும் ராத்திரி முழுக்க கொட்ட கொட்ட முழிச்சு இருக்க ஆவுது… ஆனா இந்த பால் பாக்கேட்ட எடுத்து ஒரு காபி போட்டு குடிக்க ஆவுதா… எல்லாத்துக்கும் நான் வர வேண்டியது இருக்குது…” உள்ளே இருந்து பர்வதத்தின் புலம்பல் குரல் கேட்க, ராஜனின் குரல் சுத்தமாய் அடங்கிப் போயிருந்தது.

 

பத்து நிமிடத்திற்கு மேல் அந்த மௌனத்தை அவரால் தாக்கு பிடிக்க முடியவில்லை.  “ஆரும்மா… கண்டிப்பா 490க்கு மேல வந்திடும் தானே…” என்றார் மகளிடம் மீண்டுமாய்.

 

“ஸ்ஸ்ஸ்… ஹப்பா… ஏன் புள்ளைய போட்டு இந்த பாடு படுத்தறீங்க… எத்தனை தடவ இதே கேள்விய கேட்பீங்க… எனக்கே கேட்டு கேட்டு சலிச்சுப் போச்சு…  அவளும் எத்தன தடவதான் பொறுமையா சொல்லுவா வரும் வரும்னு… ஏன் ஒன்னு ரெண்டு மார்க்கு குறைச்சு வந்தா தான் என்ன..? குடியா மூழ்கி போகுது… இந்தாங்க…  காபிய குடிங்க முதல…” என்றார் பர்வதம் அதட்டலாய்.

 

“நான் படற கஷ்டம் உனக்கெங்க தெரிய போகுது… அவ லைப்போட பேஸே இதான்… இத நல்லா பண்ணா தான் அவ எதிர்காலமும் நல்லா இருக்கும்…” என்றவரின் உரை குறைந்தது இன்னும் அரை மணி நேரம் நீளும் என்பதை அங்கிருந்த மூவருமே அறிவர்.

 

“ஸ்ஸ்ஸ்… ரிலாக்ஸ் ராஜு… முதல காபிய குடிங்க…” வலுக்கட்டாயமாக அவர் கைகளில் காபியை திணித்து பக்கத்தில் பிஸ்கட்களையும் வைத்தார் பர்வதம்.

 

“நீ ஈஸுயா சொல்லிட்டற…” என மீண்டும் புலம்ப தொடங்கியவரின் இதழ்களில் விரலை வைத்து, “ஸ்ஸ்ஸ்… மூச்… சத்தம் வெளிய வர கூடாது… புரியுதா..?” என்றார் பர்வதம் சிறுப்பிள்ளையை கண்டிக்கும் தோரணையில்.

 

“பச்… ரொம்ப பண்ணற பாரும்மா நீ..?” என்றார் அதையும் மீறி சிணுங்கல் குரலில் முணுமுணுப்பாய் அவர்.

 

“நீங்க டென்ஷன் ஆனது போதாதுனு அவளையும் டென்ஷன் பண்ணறீங்க… ரிசல்ட் வர நேரத்துல பயந்து மயங்கி விழ போறா அவ… எப்படியும் இன்னும் நாலு மணி நேரத்துல தெரிய போகுது… அதுக்குள்ள எதுக்கு இவ்வளவு டென்ஷன்… ஆர்பாட்டம்… நீங்களும் டென்ஷனாகி அவளையும் டென்ஷனாக்கி… மார்க் அனோன்ஸ் பண்ணற வரைக்கும் வாயே திறக்க கூடாது நீங்க… சொன்னது புரியுதா..? மீறி ஒரு வார்த்தை வெளிய வந்துச்சு உங்கள விட்டுட்டு நாங்க மட்டும் கிளம்பி போய்டுவோம் சொல்லிட்டேன்…” என்றார் பர்வதம் மிரட்டலாய்.

 

“இதுக்கு தான் அம்மா வேணுங்கறது… நைட் பூரா நம்மள பாடா படுத்துட்டு பாருவ பாத்ததும் இந்த அப்பா பம்மறத பாரேன்…” என்றாள் கனி கிசுகிசுப்பாய் ஆராவிடம்.

 

“அதுவும் சரிதான்… இந்த அப்பாவ ஹேண்டில் பண்ண அம்மாவல மட்டும் தான் முடியும்…” என்றாள் ஆராவும் கிசுகிசுப்பாய்.

 

மகள்கள் இருவருக்கும் காபியை கொடுத்தவர், “என்ன இரண்டு பேர் கண்ணும் இப்படி சிவந்துப் போயிருக்கு… நைட்டெல்லாம் தூங்கலையா நீங்க…” என அதட்டலாய் வினவ, இருவரின் பார்வையும் தந்தையை தொட்டு நின்றது. சட்டென்று வேறு பக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்டவர் காபியில் கவனமானதைப் போல் காட்டிக் கொண்டார்.

 

“சரிசரி… முதல காபியை குடிங்க…” என்றவர் தனக்கானதை எடுத்துக் கொண்டு சோபாவில் மகள்களின் பக்கத்தில் அமர்ந்து அமைதியாய் பருக தொடங்கிவிட்டார்.

 

வேகமாய் காபியை குடித்து முடித்தவள், அன்னையின் மடியில் தலை சாய்த்துக் கொண்டாள். அதே வேகத்தில் கால்கள் இரண்டையும் கனியின் மடியில் தூக்கி வைக்க அதைவிட வேகமாய் கீழே தள்ளி விட்டிருந்தாள் கனி.

 

“ம்மா… பாரும்மா… இவள…” உடனே இரு மகள்களிடம் இருந்தும் புகார் மனு தாய்க்கு பறந்தது.

 

“எங்க நான் உன் மடியில படுத்துடுவனோனு சுடசுட காபி வாயில ஊத்திட்டு இடத்த புடிச்சதும் இல்லாம என்மேலேயே காலப் போடறா பாரும்மா…”

 

“போட்டா என்னடி… குறைஞ்சா போவ… ரொம்ப தான் பண்ணறீயே என்னமோ..?” என்றாள் ஆரா மூக்கை சுருக்கிக் கொண்டு பழிப்புக் காட்டி.

 

“அப்படி தான்டி பண்ணுவேன்…” என்றபடியே இன்னொரு பக்கமாய் ஆராவின் தலையை நகர்த்திவிட்டு தானும் தாயின் மடியில் தலைசாய்த்துக் கொண்டாள் கனி.

 

“அடியே… உங்க ரெண்டு பேரையும் வச்சுட்டு ஒரு காபி நிம்மதியா குடிக்க முடியுதா..? ஏந்திரிங்கடி முதல…” என்றபடியே இரண்டு மகள்களையும் விலக்கி விட்டார் பர்வதம்.

 

“பாத்தீயா..? நான் சொன்னப்ப நம்ப மாட்டேனு சொன்னீயே… நான் படுத்தப்ப அம்மா ஏதாவது சொன்னாங்களா..? நீ படுத்ததும் தான் தள்ளி விடறாங்க… இதுல இருந்து என்ன தெரியுது… கார்பரேஷன் கக்கூஸ்க்கு பக்கத்துல இருந்து தான் தூக்கிட்டு வந்தாங்கனு தெரியுது…” என்றாள் ஆரா வெகு தீவிரமாய்.

 

“ம்மா… பாரும்மா இவள…” என்றபடியே அன்னையை தாண்டிக்கொண்டு அவளை அடிக்க பாய்ந்தாள் கனி.

 

“அடியே பம்பிளிமாஸ்… உண்மைய சொன்னா கசக்குதா உனக்கு… நான் உன்ன பாத்ததுமே சொன்னேன்… இந்த அழுமூஞ்சி நமக்கு வேண்டாம்மா… வேற நல்ல தங்கச்சி பாப்பாவ தூக்கிட்டு வரலானு… இந்த அம்மா தான் கேக்கவே இல்ல… ஏன்ப்பா…” என அப்பாவையும் துணைக்கு அழைத்தாள் ஆரா.

 

“ஆமான் ஆரும்மா… நானும் அதான் சொன்னேன்… இந்த பாரு தான் கேக்கவே இல்ல…” என்றார் ராஜனும் மூத்த மகளோடு சேர்ந்துக் கொண்டு.

 

“பாத்தீயா..? பாத்தீயா..? அப்பாவும் அதான் சொல்லறாங்க…” என்றாள் தங்கையிடம் அவள் வேகமாய்.

 

“அப்ப… நான் உன் பொண்ணு இல்லையாம்மா…” என்ற கனி எந்நேரமும் அழுகையில் வெடிக்க தயாராய் இருந்தாள்.

 

“அவதான் சொல்லறானா… நீயும் நம்புவீயா..? என்ன ராஜன் நீங்களும் அவளோட சேர்ந்துட்டு…” என்றார் பர்வதம் மகளிடம் சமாதானமாய்.

 

“அதெல்லாம் இல்ல… அம்மா நீ அழறீயேனு சும்மா சொல்லறாங்க… உன்னை கார்பஷேன் கக்குஸ் பக்கத்துல இருந்து எடுத்துட்டு வந்தது தான் உண்மை… ஏன்ப்பா…” என்றவளுக்கு அன்னையை தாண்டி வலுவாய் இரண்டு அடிகளை வைத்திருந்தாள் கனி.

 

“ஆமான்… அவள கார்பரேன் கக்கூஸ் பக்கத்துல எடுத்தேன்… உன்ன பஸ் ஸ்டான்ட் கக்கூஸ் பக்கத்துல இருந்து எடுத்தேன்… எப்படியோ அடிச்சுகிட்டு கிடங்க… வேலைக்கு போய்ட்டு வந்தவள கொஞ்சமாச்சும் ரெஸ்ட் எடுக்க விடறாளுங்களா..? எப்பதான் திரும்ப ஸ்கூல் திறப்பாங்களோ தெரியல… தள்ளுங்கடி…” என்றபடியே மகள்கள் இருவரையும் விலக்கிக் கொண்டு எழுந்தவர் அறை நோக்கி நடக்க, மகள்கள் இருவரும் கட்டி உருளும் சத்தம் கெட்டது.

 

மகள்கள் இருவரையும் விலக்கி விட்டபடியே, “ஆரும்மா… 490க்கு மேல கண்டிப்பா மார்க் வந்திடும் தானே…” என்றார் ராஜன்.

 

“இன்னும் அங்க என்ன பண்ணறீங்க நீங்க… வந்து குளிச்சுட்டு ரெடியாகுங்க முதல…” அறைக்குள்ளிருந்து பர்வதத்தின் குரல் அதட்டலாய் வரவும், “இதோ வந்துட்டேன்… பாரு…” என அவரமாய் உள்ளே ஓடினார் மனிதர். ஓடும் தந்தையைக் கண்டு, சண்டையை மறந்து ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு வாய்விட்டு சிரிக்க தொடங்கி இருந்தனர் மகள்கள் இருவரும்.

 

மகாராஜன் – பர்வதத்தின் திருமணம் காதல் திருமணம். ஒதுங்கி ஒதுங்கி ஓடியவரை துரத்திப் பிடித்து மணமுடித்துக் கொண்டது பர்வதம் தான். பொருளாதாரத்தில் மிகவும் அடிமட்டத்தில் இருந்தது ராஜனின் குடும்பம்.  அதுவே காதல் இருந்தும் பர்வதத்திடமிருந்து அவரை விலகிப் போக வைத்திருந்தது. திருமணத்திற்கும் பிறகும் கூட நிலையான வேலையில்லை அவருக்கு.

 

எத்தனையோ அவமானங்களை தாண்டி தான் அரசு வங்கி ஒன்றில் மேலாளர் பதவி கிடைத்திருந்தது அவருக்கு. இன்று அனைவரும் மதிக்கும் இடத்தில் இருக்கிறார் என்றால், அது அவருக்கு கல்வி தந்த கொடையும் மனையாளின் துணையும் மட்டுமே. அதனாலே எப்படியாவது மகள்கள் இருவரும் படிப்பில் படு கெட்டியாக இருக்க வேண்டுமென்பது அவர் விருப்பம். விருப்பம் கொஞ்சம் கொஞ்சமாய் வேர்விட்டு அடிமனதில் அடமாய் இன்று மாறி நிற்கிறது.

 

தன் பட்ட துன்பங்கள் கஷ்டங்களின் சுவாடுக்கூட தெரியாமல் மகள்களை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சராசரி தந்தை. எதற்காகவும் இதுவரை மகள்களை கண்டித்ததோ ஏன் அதட்டியதோ கூட இல்லை அவர். அவரின் ஒரே ஆசை மகள்கள் படிப்பில் சிறக்க வேண்டும் என்பது தான். அவரின் எதிர்பார்ப்புபடி அதிக மெனகெடல்கள் இன்றி இருவருக்கும் படிப்பு தன்னாலேயே நன்றாக வந்தது.

 

❀❀❀❀❀

 

பெருமிதத்தில் ராஜனின் மார்பு விம்மிக் கொண்டிருந்தது. 500க்கு 497 மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்திலேயே முதல் இடத்தையும் மாநில அளவில் மூன்றாம் இடத்தையும் பிடிருத்திருந்தாள் ஆரா. அவள் பிறந்த அன்றுக் கூட இத்தனையாய் பூரித்துப் போயிருக்க மாட்டார் மனிதர். அவரின் மகிழ்ச்சி ஒரு கட்டுக்குள் இல்லை. நிலைக் கொள்ளாமல் தவித்தவரை பிடித்து நிறுத்தி வைப்பதற்குள்ளாகவே ஒரு வழியாகிப் போனார் பர்வதம்.

 

திண்பண்டத்தை மொய்க்கும் ஈக்கள் கூட்டமாய் நிமிடத்தில் அந்த பள்ளி வளாகத்தையும் ஆராவையும் சூழ்ந்துக் கொண்டது ஊள்ளூர் தேசிய தொலைக்காட்சிகளின் குழு.

 

“இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் யார்னு நினைக்கறீங்க ஆரல்மொழி..?” என்றார் நிருபர் ஒருவர்.

 

“என் அப்பா…” என்றாள் நொடியும் தாமதிக்காமல் பளிச்சென்று அவள். அதனைத் தொடர்ந்து போனால் போகிறதென்பதைப் போல் அன்னைக்கும் ஆசிரியர்களுக்கும் கூட கொஞ்சப் பங்கைப் பிரித்துக் கொடுத்தாள் அவள்.

 

“அடுத்து என்ன பண்ண போறீங்க..?” என்றார் நிருபர் ஒருவர் மைக்கை நீட்டி ஆராவிடம்.

 

“நல்லா நிம்மதியா தூங்க போறேன்…” என்றாள் குறும்பாய் தலைசாய்த்து ஒற்றை கண்சிமிட்டி ஆரா.

 

மென்னகையுடன், “அதில்லை… ஆரல்மொழி மேல என்ன படிக்கணும்னு ஆசைப்படறீங்கனு கேட்கறேன்…” என்றார் அந்த நிருபர் விளக்கமாய்.

 

“டாக்டருக்கு படிக்க போறேன்…” என்றாள் கர்வமாய் அவள்.

 

“ஏன்… உங்களுக்கு சின்ன வயசுல இருந்து டாக்டர் ஆகணும்னு ஆசையா..?”

 

“இல்ல… நான் பொறந்ததுல இருந்தே டாக்டர் ஆகணும்னு அப்பாவுக்கு ஆசை… இப்ப எனக்கும் அதான் ஆசை…” என்றாள் ஆரா கண்களை விரித்து. அந்த கண்களுக்குள் கனவுகள் விரிந்தது.

 

இன்னும் வழக்கமாய் முதலிடங்களை பிடித்த மாணவ மாணவியரிடம் கேட்கும் அத்தனை கேள்விகளும் அவளிடம் கேட்கப்பட்டது. அவள் சொன்ன அத்தனை பதிலும் அவளின் சார்ந்தே வந்தது. அத்தனை கேள்விகளிலும் பெருமிதமாய் மகளை தோளோடு சேர்த்து அணைத்து பிடித்தபடி நின்றிருந்தார் ராஜன். இந்த புகழ்தான் மகளை பெரும் இக்கட்டில் இழுத்து தள்ளப் போகிறது என்பதை உணராதவராய், வாழ்வில் இத்தனை மகிழ்ச்சியை அவர் இதுவரை அனுபவதில்லை என்தைப் போல முகம் விகாசித்து பெருமிதத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது அவரின் கண்கள்.

 

சாதாரண நபர் தடுமாறி விழ நான்குப் பேர் காத்திருக்கிறார்கள் என்றால், புகழைத் தொட்டவர்கள் தடுமாறி விழும் தருணத்திற்காய் நாற்பதாயிரம் பேர் காத்திருக்கிறார்கள்.

 

    – பற்றி எரியும்…

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்