Loading

 

 

 

அத்தியாயம் 13

 

“ஏய் நில்லு!” என்ற அர்ச்சனாவின் சொற்களில் சரணை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்த மௌனிகா ‘என்ன?’ என்பது போல் கேள்வியாய் நோக்கினாள்.

 

“அசிங்கமா இல்லையா உனக்கு.?”

 

அவரின் வினாவில் சட்டென்று சினம் துளிர்த்தாலும், அதை வெளிக்காட்டிடாது மெலிதாய் புன்னகைத்தாள்.

 

“எப்படி உன்னால சிரிக்க முடியிது?”

 

“ஏன், இந்த வீட்டுல சிரிக்கக்கூட உங்கக்கிட்ட பர்மிஷன் வாங்கணுமா?”

 

“அவன் உன்னோட தங்கச்சிக்கு பார்த்த மாப்பிள்ள. அவனைப் போயி கல்யாணம் செஞ்சுக்க போற?”

 

“தப்பு சித்தி. நான் அவரை முதல்ல பார்த்தது, லாவண்யாவுக்குப் பார்த்த மாப்பிள்ளையா இல்ல. சரண் அப்படிங்கிற தனி மனுஷனை. சோ, இதுல எனக்கு எதுவும் அசிங்கமா தோணல.”

 

“வீடு, காசு, பணம், சொத்து இருக்குனு வளைச்சுப் போட்டுட்டியாக்கும்.?”

 

“உங்க பொண்ணும் இதே காரணத்துக்காக தான கல்யாணத்துக்கு ஓகே சொன்னா. அதையே நான் செஞ்சா, தப்பா.?”

 

“பாருங்க, எப்படிப் பேசுறானு..” என அவர் கணவரிடம் புகார் வாசிக்க, “நானா எதுவும் பேசல  சித்தப்பா. அவங்க கேட்டதுக்குப் பதில் சொன்னேன், அவ்வளவு தான்.” என்று மறுமொழி தந்துவிட்டு, அவர்கள் பேசுவதற்கு வாய்ப்பு கொடாது அங்கிருந்து நகர்ந்தாள்.

 

மனதில் லேசாய் வலி.

 

அர்ச்சனா இப்படித்தான் என்று மௌனிக்குத் தெரியும். அவரின் வரைமுறை அற்ற பேச்சையும் அறிந்தவள் தான். அதனாலேயே, அந்த வீட்டில் இருக்க விரும்பாது அன்னைக் காவேரியின் பெற்றோருடன் சென்னைக்குச் சென்று விட்டாள்.  விடுமுறைக்குக் கூட, ஊரிற்கு வர மாட்டாள். அத்தருணங்களில், ரெங்கநாயகி தான் கிளம்பிச் சென்று பெயர்த்தியுடன் சில நாட்கள் தங்கி விட்டு வருவார்.

 

இயல்பிலேயே அர்ச்சனா அதிகார மற்றும் மூர்க்க குணம் கொண்டவர். ஆனால் வெளி இடங்களில் இயன்ற மட்டும் தனது இயல்பு வெளிப்படாது நடந்துக் கொள்வார். அதுபோலான ஒரு சமயத்தில் தான், அவரைப் பார்த்து இளைய மகனிற்குப் பெண் பார்த்து பேசி முடித்து இருந்தார், ரெங்கநாயகியின் கணவர். 

 

திருமணம் முடிந்து சில மாதங்கள் வரையிலுமே, அர்ச்சனா அமைதியாகவே இருந்தார். பின்னர் நாட்கள் செல்ல செல்லத்தான், அவரது சுயம் மெல்ல வெளிவர தொடங்கியது.

 

மூத்தது மோழை, இளையது காளை என்ற பொதுவான பழமொழி ஒன்று உண்டு. ஆனால் ரெங்கநாயகியின் பிள்ளைகளோ, அதற்கு நேர்எதிர்.

 

மூத்த மகன் சங்கரன் காளை. படிப்பிலும் குணத்திலும் சிந்தனையிலும் சிறந்தவர் இளையவரோ.. எடுப்பார் கைப்பிள்ளை. எவரேனும் ஒரு விஷயத்தை நான்கைந்து முறை திரும்பச் சொன்னால், அதுதான் உண்மை என்று எளிதில் நம்பிவிடும் ஏமாளி. 

 

கல்வியில் ஓரளவிற்குத் தேர்ச்சி பெற்றிருந்தாலும், அதனை பயன்படுத்தும் முறையில் சிந்தனை அற்றவர் என்றே சொல்ல வேண்டும்.

 

அதனால் பொறுப்புகள் அனைத்தையும், மூத்தவரான சங்கரனிடமே கொடுத்து விட்டனர், பெற்றோர்கள்.

 

காவேரியைக் கரம் பற்றுவது கூட, சங்கரன் எடுத்த முடிவுதான். தான் எடுத்த முடிவில் திடமாய் இருந்து, காதலித்த பெண்ணையே திருமணமும் செய்து கொண்டார்.

 

அவர் சென்னையில் பணி செய்ததாலும், காவேரிக்கும் அதுதான் ஊர் என்பதாலும், அங்கேயே வீடு ஒன்றை வாங்கி, வசிப்பிடமாய் மாற்றினார். ஆனால் மாதம் ஒருமுறை குடும்பத்துடன் ஊரிற்கு வந்து.. காடு கரையின் கணக்கு வழக்கு முதல் வீட்டின் நிலவரம் வரை அனைத்தையும் சரி பார்ப்பதை வழக்கமாய் வைத்திருந்தார்.

 

அர்ச்சனாவிற்கோ, புகுந்த வீட்டின் இந்த நடவடிக்கையில் பிடித்தம் இல்லாது இருந்தது.

 

‘தனது கணவர் ஊரிலேயே இருக்க அவரிடம் பொறுப்பைக் கொடுக்காமல், இங்கு வந்து எந்த வேலையும் செய்யாத சங்கரனின் கரத்தில் அனைத்து அதிகாரத்தையும் தந்திருக்கின்றனர்!’ எனக் குரோதம்.

 

நாளுக்கு நாள் அந்த குரோதம் வளர்ந்து கொண்டே தான் சென்றது. அதனால் ஊரிற்கு வந்து போகும் தருணங்களில் கூட, சங்கரனின் குடும்பத்துடன் ஒட்டாமலேயே இருந்தார். மௌனிகா, தனது சிறுவயதில் இருந்தே அர்ச்சனாவை பார்ப்பதால், எப்பொழுதும் அவரிடம் இருந்து விலகியே இருந்து கொள்வாள்.

 

இளைய மருமகளின் அந்த குணம் ரெங்கநாயகிக்கு வருத்தத்தைக் கொடுக்க, தனது ஆதிக்கத்தைச் செலுத்திக் கட்டுப்படுத்த முயன்றார். தற்போது வரை அதுதான் நடந்து வருகிறது.

 

சங்கரன் மற்றும் காவேரியின் எதிர்பாராத விபத்தும் அவர்களின் மரணமும் குடும்பத்தாருக்கும் உறவுகளிற்கும் வேதனையைத் தந்தது என்றால், அர்ச்சனாவிற்கோ இரகசிய கொண்டாட்டமாய் மாறியது.

 

முன்னரே கணவர் மரண தேவனை அடைந்திருந்த நிலையில், மூத்த மகன் மற்றும் மருமகளின் எதிர்பாராத இழப்பு, ரெங்கநாயகியை அதீத துக்கத்தில் தள்ளி விட்டது. அதனால் சில காலம் குடும்பத்தின் நிலையைக் கவனிக்க தவறி போனார்.

 

வீட்டின், இளைய மருமகளிற்கு அது வசதியாய் போயிற்று.

 

“உங்க அண்ணன் தான் போயி சேர்ந்துட்டாரு இல்ல? இனி, எல்லாத்தையும் நீங்க தான் பார்த்துக்கணும்!” எனக் கணவரிடம் மீண்டும் மீண்டும் சொல்லி, சேகரனை முன்னிறுத்தி வீட்டின் பொருளாதார சூழலையும் நிதி பயன்பாட்டையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். தற்போது வரை, அதுதான் தொடர்கிறது.

 

‘மூத்த பிள்ளை இறந்து போன நிலையில், இனி குடும்பத்தைப் பார்க்கப் போவது இளைய மகன் தானே?’ என்று ரெங்கநாயகியும், அதனை அப்படியே விட்டு விட்டார்.

 

வீட்டின் முதல் பெண் வாரிசான மௌனிகா சென்னைக்கு சென்றதும், மாமியார் வருமானம் மற்றும் அதன் செலவு பயன்பாடுகளை பற்றி விசாரிக்காமல் இருப்பதும், அர்ச்சனாவிற்கு வசதியாய் போயிற்று.

 

வினா எழுப்பவோ கட்டுப்படுத்தவோ ஆள் என்று எவரும் இல்லாததால், ‘தான்தான் இனி அனைத்திற்கும் உரிமையாளினி!’ என்ற எண்ணத்தை அவருள் விதைத்து, சற்று திமிர் மற்றும் தலைக்கணத்தையும் ஏற்றி இருந்தது.

 

அதுதான், அவரை இதுபோல் வரைமுறை இல்லாது பேச வைத்தும் கொண்டிருக்கிறது.

 

அர்ச்சனாவின் இந்த குணத்தை நன்கு அறிந்ததால், எப்பொழுதுமே அவரின் எவ்வகை பேச்சையும் செவியிலேயே ஏற்க மாட்டாள் மௌனி. இப்பொழுதும் அதையே செய்தாள்.

 

“ஏண்டா.. டிரஸ் எடுக்கணும், நகையை மாத்தணும்னு என்கிட்ட அவ்வளவு பேசுனியே? அந்தப் பொண்ணை நீயும் வானு ஒரு வார்த்தை கூப்பிடாம வந்திருக்க?” என வினவிய அன்னையைப் புரியாமல் பார்த்த சரண், “கூப்பிடணுமா?”

 

“அடப்பாவி! என்ன கூப்பிடணுமானு கேக்குற? முதல்ல லாவண்யாவை எல்லாத்துக்கும் கூட்டிட்டு தான போனோம்?”

 

“போனோம் இல்ல, போனீங்க! நான்தான் எதுக்குமே வரலயே?”

 

“அதைச் சொல்லு! காசைக் கொடுத்துட்டு, பார்த்துக்கோங்க அம்மானு அனுப்பி விட்டவன் தான நீ? ஆனா, இப்ப பாரு. முதல் ஆளா கிளம்பி நிக்கிற?”

 

“அப்ப நிறைய டைம் இருந்துச்சு. நீங்க ஒன்னொன்னா பார்த்து மெதுவா செஞ்சீங்க. ஆனா இப்ப நாள் இல்லையேமா, அதான்.”

 

“ம்ம்..” எனப் பாகீரதி பெருமூச்சு விட, மௌனிகாவிற்கு அழைப்பு விடுத்தான்.

 

மறுபுறம் அவள், “ஹலோ..”

 

“நான் சரண் பேசுறேன்.”

 

“தெரியும், சொல்லுங்க.”

 

“உனக்கு டிரஸ் எடுக்க போகணும். ரெடி ஆகிட்டுச் சொல்லுறியா? வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.”

 

இரண்டு நொடிகள் இடைவெளி விட்டவள், “இல்ல சரண்.”

 

“என்னாச்சு.?”

 

“நான் வரல. அதான் ஆன்ட்டியும் ரோகிணியும் இருக்காங்க இல்ல. அவங்களே செலக்ட் பண்ணட்டும்.”

 

“என்ன ஆச்சுனு கேட்டேன்.?”

 

“இண்ட்ரெஸ்ட் இல்லனு வச்சுக்கோங்களேன்.”

 

“இண்ட்ரெஸ்ட் இல்லையா.?” என நொடி நிதானித்தவன், “டிரஸ், ஃபங்ஷன், நான்.. இதுல உனக்கு எதுல இணட்ரெஸ்ட் இல்ல மோனி.?”

 

மறுபுறம் இருந்து, அவளின் மெலிதான சிரிப்பொலி கேட்டது.

 

“டோண்ட் கீப் இன் மைண்ட், வாட் ஐ செட். பேஸிக்கா நான் ஒரு லேஸி பர்ஸன். கூட்டமா போய் டிரஸ் எடுத்து எல்லாம் பழக்கம் இல்ல. மோஸ்ட்லி ஆன்லைன் ஷாப்பிங் தான். அதுனால தான் சொன்னேன்.”

 

“டிரஸ் உனக்குப் பிடிக்க வேண்டாமா?”

 

“ஐம் நாட் எ பிக்கி பர்ஸன். ஐ திங்க், ரோகிணி’ஸ் டேஸ்ட் இஸ் குட். இன்னைக்கு, அவ போட்டு இருந்த சுடி நல்லா இருந்துச்சு. அவளையே செலக்ட் பண்ண சொல்லுங்க.”

 

“மோனி, ஆர் யூ ஸுயர்?”

 

“யா..”

 

“சரி.. நான் ரோகியை உன்கிட்டப் பேசச் சொல்லுறேன்!” என அவன் பேச்சை முடிக்க, ஒரு பெருமூச்சை வெளிவிட்டுக் கைப்பேசியை அணைத்தாள் மௌனிகா.

 

அறையில் ஜன்னல் கம்பியினைப் பற்றிய படி நின்று இருந்தவளின் விழிகள், தூரத்தில் எதையோ வெறித்து இருந்தது.

 

அனைத்தும் துரித கதியில் நடந்து கொண்டிருக்கிறது. அவளும் மனதளவில் தன்னை தயார்படுத்திக் கொண்டாள் தான். எனினும் சற்று முன்னர் அர்ச்சனா பேசியவை.?

 

அதனைச் சிந்தையில் ஏற்கக் கூடாது என்று தான் நினைத்தாள் மௌனிகாவும். இயன்ற அளவு அதைச் செய்யவும் முனைந்தாள். 

 

ஆனாலும், ‘அவனிடம் இருக்கும் பணத்திற்காக திருமணத்திற்குச் சம்மதித்து இருக்கிறாள்!’ என்ற சொல்.

 

ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும் என்பர். பாவையை அச்சொல் கொல்லப் பார்த்தது.

 

மௌனி இதுவரை தன்னைப் பற்றி எவரிடமும் விளக்கிக் கூறியது இல்லை. சரணிடம் கூட தன்னை அறிமுகம் தான் செய்து கொண்டாளே தவிர, மனநிலை யாதென வெளிப்படுத்த நினைக்கவில்லை.

 

தற்போது அர்ச்சனா அவளிடம் பேசியதை, நாளை விழாவில் உறவுகளின் முன்பும் பேசக்கூடும். மகளிற்குக் கிட்ட இருந்த வாழ்வு பறிபோன நிலையில், நிச்சயம் பேசத்தான் செய்வார். அப்பொழுது அதனை எப்படி எதிர்கொள்வது?

 

‘ஆச்சி ரெங்கநாயகி தனி ஒருவராய் நின்று எவ்வளவு தான் செய்வார்? அவரை தவிர்த்து தனக்கென்று ஆதரவாய் பேசிட அருகே எவரும் இல்லையே?’ என்ற எண்ணம் நீண்ட மாதங்களிற்குப் பின்னர், அவளை இன்று வதைத்து. பத்து வயதில் இழந்த தாய் தந்தையை எண்ணி மனம் கனக்க, சுவாசத்தை உள்ளிழுத்துக் கொண்டு, கண்களை மூடி ஜன்னல் கம்பிகளின் மீது நெற்றியை சாய்த்தாள்.

 

பாரமான மனம் கொண்டாட்ட நிலையுடன் இணைய இயலாது தவிக்க, சரண் கேட்டதற்கு மறுத்துவிட்டாள். உண்மையில் மௌனிகாவிற்கு இந்த நிச்சயதார்த்த விழாவில் ஆர்வம் என்று எதுவும் எழவில்லை. ஆச்சி ரெங்கநாயகிக்காகத் தான், அனைத்தும்.

 

கைப்பேசிக்குக் குறுஞ்செய்தி வந்ததற்கான அறிவிப்பு ஒலி கேட்க, தனது நிலையில் இருந்து சற்று வெளிவந்து அதனை நோக்கினாள்.

“ஹாய்.. அண்ணி. திஸ் இஸ் ரோகிணி. அண்ணாதான் உங்க நம்பர் தந்து பேசச் சொன்னாரு!” என்று வருங்கால நாத்தனாரிடம் இருந்து புலனச் செய்தி வந்திருந்தது.

பேசி முடித்த இரண்டு நிமிடங்களில் தங்கையிடம் விஷயத்தைப் பகிர்ந்து, உடனே அவளையும் அதில் ஈடுபடுத்தி விட்டவனை எண்ணி லேசான புன்னகையும் வியப்பும் தோன்றியது.

“சொல்லு ரோகி..” என பதில் செய்தி அனுப்பினாள்.

“உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்?”

“எதுனாலும் ஓகே தான்.”

“என்ன அண்ணி இப்படிச் சொல்லுறீங்க?”

பூனைக்குட்டி சிரிப்பது போன்ற பொம்மையை அனுப்பி விட்டாள் மௌனிகா.

“நாங்க கடைக்குக் கிளம்பிட்டோம். நான், அங்க போயி டிரஸ் எல்லாம் கொஞ்சம் பார்த்துட்டு உங்களை வீடியோ கால்ல கூப்பிடுறேன். நாம சேர்ந்தே செலக்ட் பண்ணுவோம்.”

“நான் பேசுறது உனக்குக் கேட்காதே ரோகிமா?”

“டிரான்ஸ்லேட்டர் விமல் கூடதான் இருக்கான். சோ, டோண்ட் வொர்ரி!” என்று பேசி பதிவு செய்த குரல் செய்தியோடு, இரு முயல்கள் அணைத்து இருப்பது போலான படத்தையும் சேர்த்து அனுப்பினாள் ரோகிணி.

அவளின் சொற்களில் தோழி ரஞ்சனியின் நினைவு வர, சற்று முன்னர் இருந்த இறுக்கம் தளர்ந்து மனம் லேசானது பாவைக்கு.

 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 24

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
27
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்