
வேகமாக ஓடி வந்து அவளருகே வந்தான். இருவரும் ஹோட்டலுக்கு அருகே வந்து விட்டனர்.
“புருஷனா??? உனக்கா??? வாய்ப்பே இல்ல… அப்படியே இருந்தாலும் இன்னும் அவன் உயிரோட இருந்தால் அது ஆச்சர்யம் தான் . உன்னை கட்டினதுமே நீ பண்ற கொடுமையிலே போய் சேர்ந்திருப்பானே இந்நேரம் ! என்ன இன்னும் உயிரோட இருந்து கின்னஸ் சாதனை எதுவும் பண்ணிட்டு இருக்கானா ?”என விளையாட்டாக கேட்டு வைத்து ஏதோ ஹாஸியம் பேசினது போல சிரித்தான்.
நடந்தவளின் கால்கள் சட்டென நின்று விட்டன, தன் பக்கவாட்டில் வந்து நின்றவனின் புறம் திரும்பி அவனை தீயாக முறைத்தாள்.
அவளது தீப்பார்வையில் வார்த்தைகள் தடுமாறி போயின”அது வந்து நான்..!” என தந்தியடிக்க, அவளது நெருப்பு பார்வையை தாள முடியாதவனைப் போல இரண்டடி பின் சென்றவன்” கூல்… கூல்… ஐ… ஆம் ஜஸ்ட்… ஜோக்கிங்” என்று தடுமாறி பதில் அளித்து விட்டு இளிக்க, அவளோ வேக நடை போட்டு தன் அறைக்கு சென்று விட்டாள்.
“என்ன இவ? ஒரு ஜோக்கு கூட தீயா முறைச்சிட்டு போறா? இதே பார்வையை வச்சிட்டு எப்படி தான் காலத்தை ஓட்றது? எப்படி இவளை நான் சமாளிக்க போறேனோ?
ஓ எம் ஜி, உலகத்தில எத்தனையோ ட்யூப் லைட் இருக்கும் போது எனக்கு ஏன் இந்த கேண்டில் (மெழுகுவர்த்தி) மேலே பிடிப்பு வரணும்?” என மேலே பார்த்து பேசியவன், விடை தெரியாது போக, தோளை குலுக்கி விட்டு அறைக்குச் சென்றான்.
காலை உணவை முடித்துக் கொண்டு அறையே கதியென இருந்தனர் துருவனும் அவனது நண்பர்களும் ஜெஸியும் அவளது படையும் வாசு வீட்டிற்குச் செல்ல ஆயித்தமானார்கள்.
வாசுவிடம் அலைபேசியில் தனது படையுடன் வருதாகச் சொல்ல, அவனோ துருவனை சேர்த்து அழைத்து வர சொன்னான். அதில் அவளுக்கு இஷ்டமில்லை என்றாலும் வாசுவிற்காக, அலைபேசியில் எடுத்து அவனது எண்ணிற்கு அழைத்தாள்.
கை பேசியில் விளையாடிக் கொண்டிருந்தவன், அவளது அழைப்பைக் கண்டதும் கண்கள் பளிச்சிட, வேகமாக அதை ஏற்றான்.
அவனுக்கு அவளுடன் பேச பிடித்து இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாது வெறுப்பாக பேசுவது போல ” சொல்லு !” என்றான்.
“நானும் என் டீமும் வாசு வீட்டுக்கு லஞ்சுக்கு போறோம்… உங்களுக்கு எதுவும் வெளிய போற பிளான் இருக்கா? இல்ல ஹோட்டல்ல இருக்கறதா பிளான்னா? சொன்னா உனக்கு பாடிகார்ட் அரேஞ்ச் பண்ணிட்டு நான் போவேன்”என்றாள்.
“அதென்ன நீயும் உங்க டீம் மட்டும் போறீங்க? அப்போ நாங்க? நீங்க மட்டும் நான்வெஜ் , பிரியாணின்னு வீட்டு சமையல் சாப்பிடுவீங்க, நாங்க மட்டும் இந்தக் காஞ்சு போன ரொட்டியும் ராஜ்மாவையும் திங்கணுமா? முடியாது உங்க பிரண்ட் என்னையும் தான் வர சொல்லிருக்கார் நாங்களும் வருவோம்”என்றான்.
“அவன் எங்க உன்னை கூப்பிட்டான். நீ தான வான்டட்டா நானும் வர்றேன் சொன்ன?”
“ஆமா, சொன்னேன். நான் கேட்டதும் நீங்களும் வாங்கன்னு சொன்னாரு தான? ஒழுங்கா கூட்டிட்டு போற, இல்லை வீரமதிக்கு போன் போட்டு, வேற யாரையோ பாடிகார்டா நியமிச்சிட்டு இவளும் இவ டீமும் ஊர் சுத்த போறாங்க மா சொல்வேன். உங்க செக்கியூருட்டி மெண்யிடென்ஸ்க்கு போன் பண்ணி கம்பளை பண்ணுவேன்… எப்படி?”எனக் கேட்டதும் அவளோ” சரி வந்து தொலைங்க ” என்றவள் அழைப்பை அணைக்காமல்”சரியான இம்சை”என்று முனங்க, அது அவனுக்கு தெளிவாக கேட்க, இதழை மடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
அவர்கள் அனைவரும் கிளம்பி வாசு வீட்டிற்குச் சென்றனர். தோட்டங்களுக்கு நடுவே அழகாக இருந்தது அவனது வீடு. விருந்தினராய் வந்தவர்களை வரவேற்றனர் வாசுவின் தந்தை விக்ரமனும் தாய் விஷாலாட்சியும்.
தோட்டத்தில் வேலை செய்த இருவரும், அவர்களை வரவேற்று உள்ளே அனுப்பி வைத்தனர்.
அவர்கள் உள்ளே நுழைய,
” டேய் தேவா ! பாப்பாக்கு பம்பர்ஸ் மாத்தாம அங்க என்னடா பண்ணிட்டு இருக்க ?” என அறையிலிருந்த வாசுவின் துணைவி இந்திராவின் குரல் கேட்க, வாசுவும் சமையலறையிலிருந்து “அடியே நீ தானடி குழம்புல உப்பு இருக்கா பார்க்க சொல்லி அனுப்பி விட்ட, அதை தான்டி செக் பண்ணிட்டு இருக்கேன்…!” என்றான் பதிலுக்கு.
“உப்பு இருக்கான்னு டேஸ்ட் தான பார்க்க சொன்னேன். பிளேட்ல போட்டு சாப்பிட சொல்லல… சீக்கிரமா வாங்க இங்க !” என மீண்டும் கத்திய படி வெளியே வந்தவள் , அங்கே நிற்பவர்களை கண்டு வாயில் கை வைத்து நின்றாள்.
அதை அறியாத இவனோ பதிலுக்கு” உப்பு இருக்கான்னு பார்க்கறதே கஷ்டப்பட்டு பார்த்திட்டு இருக்கேன். இதுல நான் பிளேட் போட்டு சாப்பிடறேனா, இவ சாப்பாட மனுசன் சாப்பிடுவானா?” என சத்தமாக புலம்பிக் கொண்டு வெளியே வந்தவன் அவர்களை கண்டதும் அப்படியே நின்று விட்டான்.
“என்னது மனுசன் சாப்பிடுவானா வா? அப்போ எதுக்குங்க எங்களை கூப்டீங்க? எங்களை பார்த்தால் உங்களுக்கு மனுசனா தெர்லையா?”என வித்யாசாகர் அரண்டவனை போல கேட்க,
வாசுவோ வழிந்து கொண்டு தன் மனைவியை பார்க்க அவளோ அவனை தீயாக முறைத்தாள்.
“ஐயோ !!! அப்படி எல்லாம் இல்ல ப்ரோ ! என் ஒயிப்ப கிண்டல் பண்ண அப்படி சொன்னேன். மத்தபடி என் ஒயிப் நல்லா சமைப்பாங்க… ட்ரஸ்ட் மீ என் ஒயிப் பிரேபரேஷன் உண்மையிலேயே நல்லா இருக்கும்” என்றான் எல்லாரையும் சமாளிக்கும் விதமாக. அவர்களும் தலையாட்டி சிரித்துக் கொண்டனர்.
“ஹேய் ஜெஸி ! நீ என்ன சிரிப்ப அடைக்கிட்டு இருக்க?” என இந்திரா கேட்க,
“இல்ல இந்து , நேத்து பார்த்த உன் புருசனையும் இன்னைக்கும் பார்க்கற உன் புருஷனையும் சேர்த்து வச்சு கற்பனை பண்ணி பார்த்தேன் சிரிப்பு வந்திடுச்சி.
இந்த தினத்தந்தில வார இதழ் கொடுப்பங்கள ஒரு கேம். ரெண்டு படம் கொடுத்து எட்டு வித்தியாசங்கள் கண்டுபிடின்னு. அது மாதிரி நேத்து இருந்த உன் புருஷனுக்கு இன்னைக்கு இங்க இருக்க உன் புருசனுக்கும் எட்டு என்ன பத்து , இருபது வித்தியாசம் சொல்லலாம் போல இருக்கே !”என்று சொல்லி சிரித்தாள்.
” முதல் வித்தியாசத்தை நான் சொல்றேன் மேம்”என்று ஆரம்பித்து வைத்தாள் தன்யா “அது என்ன?” என அனைவரும் அவளை ஆர்வமாக பார்க்க,
“நேத்து கையில கன் வச்சிருந்தார். இன்னைக்கி கரண்டி வச்சிருக்கார் “என்றதும் அனைவரும் வெடித்து சிரித்தனர்.
“இன்னொன்னு நான் சொல்லட்டுமா?”அசோக்,
“நேத்து அவர் தோள்ல ஸ்டார் இருந்தது. இன்னைக்கு அவர் தோள்ல அழுக்கு துணி இருக்கு”
“இப்ப நான் சொல்லட்டுமா?”ஶ்ரீ ஆரம்பிக்க”நேத்து காக்கிச் சட்டை இன்னைக்கி கருப்பு சட்டை அதான?”என வாசுவே சொல்லி முடிக்க,
அவனும் ‘ ஆம் ‘ என தலையை ஆட்டினான் சிரிப்பை அடக்கிய படி.
” அடியே இவனுங்கள நிறுத்த சொல்லுடி முடியல என்னால ! கூப்பிட்டு வாண்ட்டடா அசிங்கப்படறேன் ! உள்ள வந்து உட்காருங்க டா திரா மா கொஞ்சம் இவங்களை கவனி இதோ வந்திடறேன்”என்று அறைக்குள் சென்று விட்டான்.
இவளோ ஜெஸியை அணைத்து வரவேற்றவள் மற்றவர்களை வரவேற்று அவர்களுக்கு ஜுஸ் எடுத்து வர சென்றாள்.
உள்ளே சென்றவன் கையில் சுமந்த படி ஒரு குழந்தையும் கைப்பிடித்து நடந்த படி ஒரு குழந்தையும் வெளியே அழைத்து வந்தான்.
ஜெஸியோ வாயை பிளந்தபடி”அடப்பாவி ! செகண்ட் ரிலீஸ் சொல்லவே இல்லை”என்று அவனிடம் குழந்தையை வாங்கி கொண்டு முகத்தை பார்த்தாள்.
ரோஜா நிறத்தில் இருந்தது. மென்மையாக அதன் நெற்றியில் முத்தம் வைத்தாள். தன் மூத்த மகளை அவன் தூக்கிக் கொள்ள அவளையும் கொஞ்சினாள்.
அவனது மனைவியும் அனைவரிடமும் ஜூசை கொடுத்து விட்டு ஜெஸியிடம் வந்தாள்.” இந்த புதுவரவ ஏன் சொல்லவே இல்ல ரெண்டு பேரும்…?” என கேட்க, இருவரும் சங்கடமாக அவளை பார்த்தனர்.
அவளோ அவர்களது பார்வையை புரிந்து கொண்டவள் வெறும் தலையை மட்டும் ஆட்டினாள். அவர்கள் மூவரையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான் துருவன்.
பெரியவர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்தனர். பின் சமைத்து வைத்த உணவுகளை எல்லாம் மேசையில் பரப்பி வைக்க, பெரியவர்களுடன் இளையவர்கள் அமர்ந்து விட, வாசு, ஜெஸி, இந்திரா மூவரும் சேர்ந்து அவர்களுக்கு பரிமாற, அவர்கள் சாப்பிட்டதும் மூவரும் அமர்ந்து சாப்பிட்டனர்.
மூவரும் பேசிய படி சாப்பிட்டு கொண்டிருக்க, இந்திரா தான் ஆரம்பித்தாள். “எப்படி கோவா வர சம்மதிச்ச? நீயும் ஆரோவும் அதிகமா வந்தது இங்க தான். உன்னால கோவா வா மறக்க முடியாதுல?”என்றாள்.
சோற்றை பிசைந்தவளின் கண்களில் நீர்த்துளி உருண்டு கன்னத்தில் வழிந்தது.”பார்க்க தான் நார்மலா இருக்கிறது போல இருக்கேன் இந்து. ஆனா இங்க இருக்க ஒவ்வொரு செக்’கும் என்னை கொன்னுட்டு இருக்கு. இட்ஸ் கில்லிங் மீ லாட் ! அவனோடே போயிருக்கலாம், டெனிக்காக தான் இருக்கேன்”என்று அழுகையை அடக்க முடியாமல் அழுது விட, வாசு எழுந்து வந்து அவளை அணைத்துக் கொண்டான். அவன் வயிற்றில் முகம் புதைத்து அழுதாள். வாசு, இந்திராவிடம் கண்களால் வேண்டாம் என்றான். அவளும் சரியென தலையை ஆட்டினாள்.
தண்ணீர் பருக வந்த துருவனின் கண்ணில் வாசுவின் வயிற்றில் குலுங்கி குலுங்கி அழும் ஜெஸியை கண்டு அதிர்ந்தான்.
காரணம் அறிய அவன் மூளையும் மனமும் குடைய அதற்கு வழி தான் ஏது? யாரும் சொல்வதாக இல்லை தானாக தான் கண்டு பிடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அவளது கண்ணீரை பார்க்க முடியாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
வாசு வீட்டில் நேரத்தை செலவிட்டு, அனைவரும் அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டு தங்கள் அறைக்கு வந்து சேர்ந்தனர்.
மாலையில் தான் பிளைட் என்பதால் அனைவரும் ஒரு குட்டி தூக்கம் போட, துருவனுக்கு இருந்த களைப்பில் அவனும், தூங்கி விட்டான்.
ஜெஸி மட்டும் அங்கிருக்கும் கடை வீதியில் தன் மகனுக்கும் எட்வர்டின் மகள், மகனுக்கும் விளையாட்டு பொருட்கள் வாங்கியவள், வரும் வழியில் டாட்டு போடுவதை பார்த்தாள். ஒருவன் காதலியின் முகத்தை தன் நெஞ்சில் டாட்டுவாக வரைய, அதை பார்த்து அழுது கொண்டே நின்ற அவனது காதலியை கண்டு அவளுக்கு அவளும் ஆரோனும் கண் முன்னே வந்தனர்.
“ஆரோஓஓஓ… இதெல்லாம் வேணாம். இதெல்லாம் செஞ்சு தான் உன் காதல்ல நிரூபிக்கணும் இல்ல… உன் பார்வையே உன் காதலை எனக்கு உணர்த்திடும்… இப்படி நீ உடம்ப வருத்தி என் மேலே உயிரே வச்சிருக்கன்னு காட்டணும் கட்டாயம் இல்ல டா ! ப்ளீஸ் இதெல்லாம் வேணாம் வா டா போலாம்”என்று அவனை இழுக்க,
” ஐ க்னோ டி ! பட், என்னுடைய ஆசைடி இது. உன் முகத்தை என் நெஞ்சுல டாட்டுவா போட்டுக்கணும். அதுக்கு இன்னைக்கி தான் நேரமே அமைஞ்சிருக்கு. ப்ளீஸ் ! என் ஆசை இது தடுக்காத ! ” என்றான் கெஞ்சுதலாக.
” எது முகத்தை வரைய போறீயா ? அதெல்லாம் வேணாம்… ஏதோ உன் ஆசைக்காக, என் நேமோட ஃபர்ஸ்ட் லெட்டரும், உன் நேமோட ஃபர்ஸ்ட் லெட்டரை மட்டும் போடு போதும். என் மூஞ்சி தான் வரையனும் இல்லை…”என்றவளின் அன்பை கண்டு நெகிழ்ந்து போனவன் அவளை ஆசையாகப் பார்த்தான்.
அவளோ டாட்டு போடுவதையே பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். அடுத்து இவன் தான் என்பதால் அவனிடம் கெஞ்சிக் கொண்டும் அதை பார்த்து அஞ்சிக் கொண்டு நிற்பவளின் கழுத்தை வளைத்து அவள் எதிர்பாராத நேரத்தில் அவள் இதழில் தன் இதழை வைத்து உரசி விட்டு தள்ளி நின்றான்.
எதிர்பாராத அவன் முத்தத்தில் அவளுக்கு பித்து பிடிக்க, கெஞ்ச வேண்டிய வார்த்தைகளை எல்லாம் முத்தத்தினுடே முழுங்கி விட்டு உறைந்து நின்றாள்.
பட்டாம் பூச்சியை போல படபடவென இமைகளை சிமிட்டிக் கொண்டு நின்றவளை இழுத்து வைத்து இதழை சுவைக்க ஆசை தான். ஆனால் பொது இடம் என்பதால் உள்ளே எழுந்த மோன உணர்ச்சிகளை தட்டி உள்ளுக்குள் அடக்கி வைக்க முயற்சித்து கொண்டிருந்தான்.
“ஹேய் பொண்டாட்டி ரொம்ப கொல்றடி… நீ கொடுக்கற ரியாக்ஷனுக்கு ஐ ஆம் டோட்டலில் பினின்ஸ்ட் ! இப்போவே உன்னை தூக்கிட்டு ரூமுக்கு போகணும் தோணுது தூக்கட்டுமா?” என கிறக்கமாக கேட்டு அவளை மேலும் கிறங்கடித்து, எப்படியோ சம்மதிக்க வைத்து, அவள் பெயரை மட்டும் நெஞ்சில் பச்சை குத்தினான்.
அன்று முழுக்க அவனுக்கு மருந்திடுவதாக சொல்லி நெஞ்சிலே
முத்தம் வைத்துக் கொண்டிருந்தாள். அவனும் அதான் நேரம் என்பது போல பொய்யாக வலிப்பது போல நடித்து, தன்னை விட்டு அவளை நகர விடாமல் தன் அணைப்புக்குள்ளே வைத்துக் கொண்டான்.
ஆரோனுடம் இருந்த கணங்களை நினைக்க நினைக்க கண்ணீரை வார்த்தாள்.
அதை துடைத்து விட்டு டாட்டு போட்டு விடுபவனின் முன் அமர, அவனும் “என்ன எழுத?” எனக் கேட்டான்.
ஆரோனின் முழுப் பெயரையும் சொல்லி தனது இடது கையில் அவனது பெயரை பச்சையாக குத்திக் கொண்டாள் ஆசையாக.
பச்சை குத்தும் போது கொஞ்சம் வலிக்கத் தான் செய்தது பொறுத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவன் பெயரை பச்சை குத்தியதும் அதை மெல்ல வருடிக் கொண்டாள். இரு பெரிய துளிகள் ஆரோனின் பெயரை தொட்டு முத்தமிட்டன.
வாங்கிய பொருட்களுடன் அறைக்கு வந்தவள், கொஞ்சம் நேரம் ஆரோனின் பெயரை வருடிய படி உறங்கி போனாள். மாலையும் வர, தனது உடமைகளை எடுத்துக் கொண்டு கீழே வரவேற்பு அறைக்கு வந்தனர்.
“த்ரீ ரூம்ஸ் வெக்கேட் பண்ணனும் ” என்று சொல்லி துருவன், மீதி பணத்தை கொடுக்க,
“நீங்க ஒரு ரூம்ல தான சார் இருந்தீங்க… அதுக்கு மட்டும் பே பண்ணுங்க… மத்த ரெண்டு ரூமுக்கும் மேடம் பே பண்ணிட்டாங்க “என்றான். துருவனுக்கு கோபம் சுள்ளென்று வந்தது அவளை நோக்கி சென்றான்.
“நான் தான உங்க எல்லாரையும் கூட்டிட்டு வந்தேன்… நான் தான செலவு பண்ணனும்? நீங்க ஏன் செலவு பண்ணிட்டு இருக்கீங்க? எதுக்கு நீ அமௌண்ட் பே பண்ணிருக்க?எதுக்கு இப்படி பண்ற?”
“பின்னாடி நீ என்னையோ என் பசங்களையோ ஓசின்னு சொல்லிட்டா அதுக்கு தான். நானே பே பண்ணிட்டேன்”என்று சொல்லி திமிராக நடக்க, அவன் வார்த்தைகள் அவனுக்கே அம்பாக திரும்பி நின்றன.. அவமானம் அவனை பிடிங்கி தின்றது.
மாலையில் விமான நிலையத்திற்கு வந்து விட, சென்னை நோக்கிப் பயணித்தனர். துருவனையும் அவனது நண்பர்களையும் வீட்டில் விட்டு அவர்கள் ஐவரும் தத்தமது இல்லம் நோக்கிச் சென்றனர்.
வீட்டுக்கு வந்தவளை அரவணைத்த ஆரோக்யா அவள் கையில் அடிப்பட்டு இருப்பதை கண்டு பயந்து போக அவளோ விவரங்களை எடுத்துச் சொன்னாள்.
‘இந்த வேலை வேண்டுமா?’ என்ற ரீதியில் அவளை கண்ணீருடன் பார்த்து வைக்க, அவரை சமாதானம் செய்து விட்டு உறங்க சென்றவள், மறுநாள் காலையில் தான் எழுந்தாள். வழக்கம் போல மகனை பள்ளிக்கு அனுப்பி விட்டு , மீண்டும் இல்லம் வந்து உறங்கி விட்டாள்.
உடல் சோர்வு அவளை மேலும் வாட்ட உறங்கி விட்டாள்.. மதியம் எழுந்து கொஞ்சம் சாப்பிட்டவள் மீண்டும் மெத்தையில் விழுந்தாள். இது அவளுக்கு புதிதாக இருந்தது. இருந்தாலும் கோவா சென்று வந்த அலுப்பு என்று சாதரணமாக விட்டு விட்டாள்.
மாலை வேளையில் எட்வர்டு அவள் வீட்டிற்கு வந்தான். இருவரும் தனியாக சென்று பேசினார்கள்.
“நிவாஸ பத்தி ஒரு நியூஸ் கிடைச்சிருக்கு ஜெஸி !”என்றதும் அவளும் ஆர்வமாக “என்ன நியூஸ்? அவன பார்த்தியா? அவன அடிச்சி, அவன் கிட்ட சண்டை போட்டீயா என்ன?”
“சண்டை போடற நிலமையில அவன் இல்ல ஜெஸி”என்றான் புதிராக,
“என்ன சொல்ற அந்த நிலமையில இல்லேனா, வேற எப்படி இருக்கான்?”
“பைத்தியம் பிடிச்சது போல ‘ நான் ஆரோவ கொல்லலனு ‘ சொன்னதையே சொல்லிட்டு இருக்கான் “என்றான்.
“நீ நான், ஷர்மி, யாரும் அவனுக்கு நியாபகத்தில் இல்லை. கடைசி
நொடியில என்ன நடந்ததோ அது தான் அவனுக்கு நியாபகத்தில இருந்திருக்கு. சொன்னதையே சொல்லிட்டு இருக்கான்… என்ன சொல்ல அவனை பத்தி”என்றான் தழுதழுத்த குரலில்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
+1
+1
