Loading

இனிதாய் தொடர்ந்த நொடிகள், கண்ணிமைக்கும் நேரத்தில் கருகிப்போனது இதயாம்ரிதாவிற்கு.

அந்தப் புகைப்படம் எடுத்த பொழுதை தானாய் எண்ணித் துவண்டது அவளது உள்ளம்.

அப்போது தான் தூக்க மாத்திரைகளை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விஷாலின் அரவணைப்பில் உறங்கத் தொடங்கி இருந்தாள்.

எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு அவனது. அப்படி நம்பித் தானே, நண்பனுக்கும் மேலான உரிமை உணர்வை அவனிடம் வளர்த்துக் கொண்டாள்.

தான் வேண்டுமென்றே அவனது உணர்வுகளைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தது போலான மாயையை அவன் வளர்த்துக் கொண்டது பிறகு தானே உறைத்தது.

அப்படியொரு நாள் இரவு தான், முதன் முதலாக தூக்க மாத்திரை இல்லாமல் தானாய் உறக்கம் வந்தது.

அதுவும் அவனது கைவளைவில்!

“ஹே அம்ரி… ரொம்ப நாள் கழிச்சு எந்த தடையும் இல்லாம தூங்கப் போற. அதை மெமரியாக்கிப்போமா?” என்ற விஷால், அவளுடன் இணைந்து செல்ஃபி எடுத்திருந்தான்.

அவளது கலைந்த கேசமும், ஸ்லீவ்லஸ் நைட்டியாதலால் மார்பு வரை பரவியிருந்த போர்வையும் அவனது கைவளைவினுள் வாகாய் சுருண்டிருந்த நிலையும், அவன் தானாய் முகத்தை அவள் முகத்திற்கு வெகு அருகில் இணைத்ததையும் பார்ப்பவர்களுக்கு கூடல் பின்னான பொழுதுகள் போன்ற சாயலைக் கொடுத்து விடும்.

அந்த உண்மை புகைப்படத்தை வைத்து தான், அதற்கு பின்னான வீடியோவைத் தயாரித்து இருந்தான்.

அப்பட்டமான நெருக்கங்களைத் தாங்கியிருந்தாலும், “ஐ மிஸ் மை லவ்!” என்ற அவனது வாசகம் பலருக்கு கோபத்தைக் கொடுத்தாலும் பரிதாபத்தையும் கொடுத்தது.

இத்தனை அன்னியோன்யமாய் காதலித்து விட்டு விட்டுச் சென்றவளை சமூக ஊடக ‘நியாயவாதிகள்!’ காதில் இனிமை பயக்கும் ‘நல்ல’ வார்த்தைகளைப் பயன்படுத்தி நாராய் கிழித்துக் கொண்டிருந்தனர்.
அதில் சில கருத்துகள் அப்பட்டமாய் அவளது குணத்தை வேசிகளுடன் ஒப்பிட்டு இருக்க, அந்த பதிவினூடே வினாடிக்குள் அந்த கருத்துகளும் அவள் கண்ணில் பட்டு இறுக வைத்தது.

அவளே கவனிக்கும்போது அவன் கவனிக்க மாட்டானா என்ன? சலனமின்றி அனைத்தையும் பார்த்தவன், அவளது அலைபேசியை அவன் கையில் இடம் மாற்றிக்கொண்டான் சத்ய யுகாத்ரன்.

“எவ்ளோ நேரம்டி போஸ் கொடுக்குறது?” எனச் செல்லமாய் கடிந்து கொண்டவன், தானே கையை உயர்த்தி அவளது தோள் மீது கை போட்டு புகைப்படம் எடுக்க விழைய, அவள் முகமே செத்திருந்தது.

“சிரிங்க மேடம்! நம்ம ரிசப்ஷன் தான்…” என அழுத்திக் கூறியதில், அவளால் துளியும் புன்னகைக்க இயலவில்லை.

அந்நேரம் அவளது அலைபேசிக்கு அமைச்சரின் உதவியாளர் அழைத்தார்.

அப்போது தான் அவளது ரிசப்ஷனிற்கு வந்து விட்டுச் சென்றிருந்தார்.

அதற்குள் அவரையும் சமூக ஊடகம் கிண்டல் செய்து, அவரையும் இதயாவையும் இணைத்தே தவறாய் சித்தரித்து அசிங்கம் பிடித்த வார்த்தைகளால் வதந்திகள் தீயாய் பரவிக்கொண்டிருக்க, இதற்கு இடம் கொடுத்த இதயாம்ரிதாவின் மீது தான் கடுங்கோபம் வந்தது அவருக்கு.

சத்யா தன்னவளையே ஊடுருவியபடி அலைபேசியை நீட்ட, அவள் அழைப்பை ஏற்று காதில் வைத்தார்.

அமைச்சர் முருகவேலின் உதவியாளர் மணிகண்டன் பேசினார்.

“மேடம், உங்களை சார் உடனே வந்து பார்க்க சொன்னார்.”

“மார்னிங் வரேன்…” சலனமின்றி கூறியவளிடம், “இல்ல மேடம் இப்பவே வர சொன்னாரு. உங்களுக்கு நடக்குறது எல்லாம் தெரியுதா இல்லையா” எனக் கண்டனத்துடன் பேசியதில்,

“இப்ப எப்படி சார் வரமுடியும்? என் ரிசப்ஷன்…” என்றவளின் பேச்சைக் கத்தரித்தாற் போல முருகவேல் அலைபேசியை கைமாற்றிக்கொண்டார்.

“ஏம்மா, அந்த விஷால் பயலோட ஒழுங்கா நீ வாழ்ந்துருந்தா இந்த அவமானம் எங்களுக்கு தேவையா? ரெண்டு பேரும் மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங்ல கல்யாண வாழ்க்கைல இருந்துட்டே யார் கூட வேணா தொடர்பு இருந்துட்டு போயிருந்தா, இந்த ரெப்புட்டேஷன் போயிருக்காதுல. ராம்குமார் சார், பல அரசியல்வாதிகளோட பினாமியா இருந்ததுனால தான், நான் இவ்ளோ பொறுமையா போறேன்.

நீ நிவோராவை விஷால்ட்ட குடுத்து, பினாமி சொத்தை எல்லாம் நீ வச்சுருக்குறதா அவன் வச்சுருக்குறதான்னு அலைக்கழிக்கிறப்பவே உங்கள்ல ஒருத்தரை போட்டுருக்கணும்.

இப்ப ரெண்டு பேரும் மாறி மாறி ஷோ காட்டுறீங்களா?” என எரிச்சலடைந்தார்.

“இந்த லட்சணத்துல ரிசப்ஷன் ஒரு கேடு… முதல்ல கிளம்பி வா. இதுக்கு ஒரு முடிவு கட்டாம விடுறதா இல்ல” என அழைப்பைத் துண்டித்து விட, இதனை எதிர்பார்த்திருந்தவளுக்கு முகம் சுண்டிப் போனது.

இன்னும் மற்றவர்களுக்கு விஷயம் தெரியாதலால், இதயாம்ரிதாவின் முக மாற்றத்தில் குழம்பினர்.

“என்னமா ஏதும் பிரச்சினையா?” மாலதி வினவியதில், “ஒன்னும் இல்ல அத்தை… நான் கொஞ்சம் வெளில போகணும்” என்றாள்.

“இப்பவா?” ரிசப்ஷன் எல்லாம் முடிந்திருந்தாலும் கூட, அவளும் மகனுமாக தனியாய் நேரம் செலவழிக்க வேண்டிய தருணமல்லவா?

சத்ய யுகாத்ரன் ஒன்றும் பேசவில்லை. கையைக் கட்டிக்கொண்டு அவளையே பார்த்திருந்தான்.

அவள் அவனை முற்றிலும் பாராமல் தவிர்க்க, நெற்றியை நீவிக்கொண்டவன், “டேய் ராம்… எங்க போய் தொலைஞ்ச?” என சத்தம் கொடுத்ததில், அத்தனை நேரமும் அவர்களின் கண்ணில் படாமல் சுற்றிக்கொண்டிருந்த ஸ்ரீராம் அனைத்தும் சொதப்பி விட்டது அறிந்து அவன் முன் வந்தான்.

விதரனுக்கோ கண்ணில் நீர் திரண்டது.

“மேம்… நான் இதை எதிர்பாக்கல. தெரிஞ்சுருந்தா கண்டிப்பா கிராஷ் பண்ண ட்ரை பண்ணிருக்கலாம்…” எனும்போதே சத்ய யுகாத்ரன் தம்பியை நோக்கி அனல் பார்வை வீசிட, அவன் ஒரு கணம் குழம்பி விட்டுப் பின் சட்டென,

“சாரி அண்ணி… பட், இத டிஃபன்ட் பண்ணிடலாம் அண்ணி” என்று உறவுமுறைக்குத் தாவி இருந்தான்.

“ஆமா இதயா அவன் வேணும்னே செய்றான்…” ஸ்ரீராமும் அவளுக்கு ஆதரவாய் பேசினான்.

“ம்ம்! நான் மினிஸ்டரை பார்த்துட்டு வரேன்” என மாலையை கழற்றி மிதுனாவிடம் கொடுத்தவளின் கைப்பற்றிய சத்யா, “நானும் வரேன்” என்றான்.

அப்போது தான் அவனைத் திரும்பி பார்த்தவள், “எதுக்கு?” எனப் புருவம் சுருக்க,

“என் பொண்டாட்டியை நிக்க வச்சு கேள்வி கேட்க எவனுக்கும் அதிகாரம் இருக்க கூடாதுல. சோ குடுக்க வேண்டிய பதிலை நானே குடுத்துடுறேன்” என்றவன் “ட்ரெஸ் சேஞ்ச் செஞ்சுட்டு காருக்கு வா…” என்று விட்டு ஸ்ரீராமிற்கு கண்ணை காட்டிவிட்டு நடந்தான்.

அவனை மறுக்க இயலாமல் நொந்து போனவள், அறைக்குச் செல்ல அங்கு முகத்தை தொங்க போட்டுக்கொண்டு நின்றிருந்த அகிலுக்கு இப்படி சொதப்பி விட்டோமே என்றிருந்தது.

அவனைப் பார்வையாலேயே வெளியில் செல்லும்படி பணித்தவள், தளர்ந்து கட்டிலில் அமர்ந்தாள்.

அத்தனை நேரம் குளுகுளுத்த மனது ஏனோ தீயாய் எரிந்தது.

ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவள், சடுதியில் உடையை மாற்றிக்கொண்டாள்.

நகைகளை கழற்றும்போதெல்லாம் நாயகனின் நினைவே!

எத்தனை ஆசையாய் அணிந்து விட்டான்… தனது காதல் என்றுமே அவனுக்கு திகட்ட திகட்ட வலியையும் அவமானத்தையும் மட்டுமே தருமென்று எப்படி புரிய வைப்பது?

ராமிற்கு சில வேலைகளை கொடுத்து விட்டவன் விதுரனுக்கும் சைகை காட்டிட, அவனும் அவசரமாக தனது குழுவினரைத் தொடர்பு கொண்டபடி அலுவலகத்திற்கு விரைந்தான்.

மற்ற நால்வரும் மனதில் வருத்தத்தை மறைத்துக்கொண்டு குடும்பத்தினரை சரி செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு அலுவலகத்திற்கே சென்றனர்.

நீலாவும் கீர்த்தனாவும் நேராக ஸ்வேதாவை அனுமதித்திருந்த மருத்துவமனைக்குச் சென்றனர்.

ஸ்வேதாவிற்கு சின்னதாய் விபத்து ஏற்பட்டிருந்ததாக அவர்களை நம்ப வைத்திருந்தான் சத்யா.

அவளுக்கு உடலாலும் மனதாலும் ஓய்வு தேவைப்பட, மருத்துவர்கள் உடனே டிஸ்சார்ஜ் செய்ய வாய்ப்பில்லை என்றதும், அன்று ஒரு நாள் அங்கேயே தங்கி இருந்தாள்.

அவளுக்கும் விஷாலின் செயல் அருவருப்பைக் கொடுத்திருந்தது. இதே மாதிரியான புகைப்படங்களை தன்னை வைத்தும் ரிலீஸ் செய்து விடுவானோ என்ற பயம் வேறு அப்பியது.

அமைச்சரின் தனி சொகுசு பங்களாவிற்கு கணவனும் மனைவியுமாக சென்றனர்.

இதயாம்ரிதாவை காரிலேயே இருக்குமாறு கட்டளையிட்ட சத்யாவை விழித்துப் பார்த்தவள், “நான் வரலைனா அந்த ஆளு இஷ்டத்துக்கு பேச ஆரம்பிச்சுடுவான்” என்றாள்.

“நான் பாத்துக்குறேன்…” என்றவனைத் தடுத்தவள்,

“இல்ல சத்யா. நானே போறேன்” என மீண்டும் மீண்டும் கூறியவளை அழுத்தமாய் முறைத்து வைத்தவன்,

“என்னை காயப்படுத்த கூடாதுன்னு உன்னை நீயே காயப்படுத்த வச்சுக்கிட்ட… அதுவும் என்னை காயப்படுத்த கூடாதுன்னு மறைக்க நினைச்சா ஒரு நாள் வெடிச்சுடும் இதயா. நம்ம கடந்த காலத்தையோ அதுல இருந்து வர்ற இன்ப துன்பத்தையோ நம்ம மறைச்சு வைக்க முடியாது. அக்செப்ட் பண்ணி தான் ஆகணும். அது காயம் குடுக்குதா, அப்போதைக்கு பீல் பண்ணிட்டு அடுத்த வேலையைப் பார்த்துட்டுப் போய்டணும்” எனும்போதே இறுகிய விழிகளில் நீர் தேங்கியது அவளுக்கு.

“அந்த போட்டோஸ் ஃபேக் இல்ல…” தானாய் உதிர்த்தவளிடம்,

“அது ஃபேக்கா தான் இருக்கணும்னு நான் சொல்லவே இல்லையே!” என்றான் அழுத்தமாய்.

அவளோ சக்தியெல்லாம் வடிந்த நிலையில் அவனை சோர்வாய் ஏறிட,

“கெட்ட கனவா நினைச்சு எல்லாத்தையும் மறந்துட முடியாது இதயா. ஆனா கெட்ட கனவுன்னு நினைச்சதுக்கு அப்பறம், அதையே நினைவுகள்ல தூக்கிட்டு சுமக்கிறது முட்டாள்தனம்.

எது நடந்தாலும் ஜஸ்ட் அக்செப்ட் இட். உன்னைப் பொறுத்தவரை, அவனுக்கு உண்மையா இருக்கணும்னு நினைச்சு உன்னை நீயே வருத்திட்ட. இப்ப எனக்கு உண்மையா இருந்தே ஆகணும்னு இன்னும் துன்புறுத்திக்காத. அது உன்னை விட எனக்கு வலிக்குது.”

“உங்களுக்கு என்மேல கோபம் இல்லையா?” மெல்லமாய் அவள் கேட்டதில்,

“கோபம் தான். ரொம்பவே!” என்றதில் துடித்து தான் போனது அவள் இதயம்.

“அவனை பத்தின பேச்சே நமக்கு தேவையில்லாத ஆணின்னு புருஞ்சும், அவனை ஒரு பொருட்டா நினச்சு அவன் செஞ்ச கிறுக்குத்தனத்துக்கு நீ ரியாக்ட் பண்றது தான் செம்மயா கோபம் வருது.

ஃப்ரெண்ட்ஷிப்போ ரிலேஷன்ஷிப்போ நம்ம மட்டுமே ஹண்ட்ரட் பர்சண்ட் குடுத்து அன்பை நிலைநாட்டிட முடியாதுடி. எதிர்பக்கம் இருந்தும் அதே 100 பெர்சன்ட் வரணும். அட்லீஸ்ட் 70 / 30 யாவது வரணும். இல்லன்னா, அந்த ரிலேஷன்ஷிப் துரோகத்துல தான் முடியும்.

நீ ப்ரெண்டா, மகளா, லவரா, ஏன் வைஃபா கூட உன் ஹண்ட்ரட் பர்சன்ட் குடுத்துட்ட… எதிர்பாக்காம குடுத்துட்ட இதயா. நிதானமா எதிர்ல இருந்து அன்பு வருதா, சுயநலம் வருதான்னு பார்க்கணும். பாசத்தை பகிர்ந்துக்க கூட இங்க எதிர்வினைன்னு ஒன்னு இருக்கணும்.
என்னை லவ் பண்றேன்னு சொன்னப்ப கூட அப்படி தான? என் எதிர்வினை என்னவா இருந்தாலும் நீ கவலைப்படல.

இப்ப உனக்கு ஈடா அதே காதலை நான் காட்டுனதும் ஒட்டு மொத்தமா உனக்கு உன்னை நினைச்சே குற்ற உணர்ச்சி வந்துடுது.

உன் சோக மூஞ்சியெல்லாம் போதும், மணி பத்தை தாண்டி போகுது, இப்ப இருந்து மார்னிங் வரை நீ என் லவர். நம்ம டீலிங் ஞாபகம் இருக்குல்ல. என் லவரா மூஞ்சில ஒரு டன் ரொமான்ஸை வழிய விட்டுட்டு இரு. இல்லன்னா இதுக்கும் சேர்த்து மார்னிங் ஹஸ்பண்ட் டியூட்டிக்கு வந்ததும் லிப்ஸ கடிச்சு வச்சுடுவேன் எனக் கடிக்க வருவது போல பாவனை செய்தான் சின்னப்புன்னகையுடன்.

அவனையே மலைத்து பார்த்திருந்தாள்.

என்னவாகினும், நீ என் காதல் என்று விட்டான்!

இந்தக் காதலை எப்படித்தான் உதறி எறிய இயலும்? தானே தவமிருந்த நேசம் தான். தற்போது தன்னையே தவிக்க வைக்கிறது.

“ரொமான்டிக் லுக் விடுடி. அப்ப தான் எனர்ஜிடிக்கா இருக்கும்” தலைசாய்த்து கேட்டவனை கழுத்தோடு கட்டிக்கொண்டாள்.

அத்தனை நேரம் இருந்த இறுக்கத்தை வெடித்து விட்ட கேவலுடன் அவன் நெஞ்சிலேயே இறக்கி வைத்தாள்.

விஷாலின் மீது அடிமனதில் அடங்கி ஆட்டமெடுத்த ஆத்திரத்தை சமன்செய்து, அவளை இறுக்கி கட்டிக்கொண்டவன் “இட்ஸ் ஓகே இதயாம்மா!” என்றான் கனிவாய்.

“அந்த நாயை நான் சும்மாவே விட மாட்டேன் ப்ரொஃபி? லீகலா போகணும்னு தான் அமைதியா இருக்கேன்” மூக்கை உறிஞ்சிக்கொண்டவளிடம்,

“நீ லீகலா மூவ் பண்றதுனால தான் நானும் பல்லைக்கடிச்சுட்டு இருக்கேன்!” என்றான் பல்லிடுக்கில் கோபத்தை மறைத்தபடி.

சில நொடிகள் அவனது மார்பில் இளைப்பாறியவளுக்கு புத்துணர்வு வந்தது போல இருந்தது.

அழுது தீர்த்த அழுத்தங்கள் கண்ணீரோடே கரைந்து போனது.

எந்த நிலையிலும் தன்னுடன் தூணாய் தாங்கி நிற்கும் ஆடவனின் நேசம், நொடிக்கு நொடி அவளுக்கு நேர்மறை அலைகளையே தோற்றுவித்தது.

அவளது கேசத்தை மெல்ல வருடியவன், “இதை முதல்லயே செய்வன்னு எதிர்பார்த்தேன். ஏன்டி, என்னைக் கட்டி பிடிச்சு அழுக கூடவா உனக்கு நான் தேவைப்படல…” சின்னதொரு ஆதங்கம் அவனிடத்தில்.

“அதெல்லாம் இல்ல சத்யா. என்னவோ தெரியல, உங்களை இப்படியே கட்டிப்பிடிச்சுட்டு எல்லாத்தையும் மறக்கணும்னு தான் தோணுது. இந்த ஹக் என் குற்ற உணர்ச்சியை கூட குறைச்சுடுது. ஆனா, இதையே நான் இன்னொருத்தன்கிட்ட பீல் பண்ணிருக்கேனே. நீங்க என்னை விட்டுப் போய்ட்டீங்கன்னு நான் இன்னொருத்தன்கிட்ட ஆறுதல் தேடிருக்கேன். அப்போ இதை என்னன்னு சொல்றது… யார் கட்டிப்பிடிச்சாலும்” என்றவளின் இதழ்களில் விரல் வைத்து தடுத்தவன், அவளை நிமிர்த்தினான்.

அவன் முகத்தில் கோப ரேகைகள் தெரிந்தாலும் நிதானமாய் இருந்தான்.

ஒட்டுமொத்தமாக குழம்பியிருப்பவளின் மனநிலையைத் தெளிவாய் உள்வாங்கிக்கொண்டவன்,

“நான் கூட சோகமா இருந்தா என் அம்மாவை கட்டிப்பிடிச்சுப்பேன். ஏன், ஸ்வே என்னை விட சின்ன பொண்ணு தான். என் அத்தை பொண்ணு. அவள் எத்தனையோ தடவை ரொம்ப சந்தோஷமா இருந்தா என்னைக் கட்டிப்பிடிச்சுப்பா, சோகமா இருந்தா கூட என் மடில விழுந்து தான் அழுவா. நான் அவளை தோளோடு எத்தனையோ தடவை ஆறுதலா அணைச்சுருக்கேன்.
எனக்கும் அது ஆறுதலை குடுத்துருக்கு.

அப்போ, என் காதல் உண்மையா இருந்திருந்தா ஆறுதலை உங்கிட்ட மட்டும் தான பீல் பண்ணிருக்கணும், நான் ஏன் என் அம்மா, சித்தி, அத்தை, ஸ்வேன்னு என் வீட்டில இருக்குற எல்லா பொண்ணுங்ககிட்டயும் ஆறுதலையும் அரவணைப்பையும் பீல் பண்ணிருக்கேன். அப்போ இது நான் காதலுக்கு செஞ்ச துரோகமா?”

அவன் நிறுத்தி நிதானமாய் ஆழமாய் கேட்ட கேள்வியதில் ஆயிரம் விளக்கங்கள்!

இதயாம்ரிதாவின் புருவங்கள் யோசனையில் சுருங்கியது.

“சரி ஆஸ் அ ப்ரெண்டா, நீ விஷால்ட்ட இருந்து நாலு ஸ்டெப் தள்ளி நின்னேவா பழகிருப்ப? சின்ன வயசுல இருந்து எத்தனையோ விஷயங்களுக்கு நீ அவனுக்கு ஆறுதலா இருந்திருப்ப, அவன் உனக்கு ஆறுதல் குடுத்துருப்பான். ஈவன், உனக்கும் அவனுக்கும் கல்யாணம் முன்னாடி வரை கூட, ஏதோ ஒரு வகைல ஒரு அவன் உனக்கு சப்போர்ட் குடுத்து இருக்கான் தான?

அப்போ அதெல்லாம் விட்டுட்டு, இதை மட்டும் ஏன் கம்பேர் பண்ணிக்கிற இதயாம்மா. இங்க ஆறுதலும் அரவணைப்பும் காதலும் யார் வேணாலும் யாருக்கு வேணாலும் குடுக்கலாம்.

நீ விஷால்ட்ட காதலை கூட பீல் பண்ணிருக்கலாம்” எனும்போதே அவள் மறுப்பாய் பேச வர,

“இரு… காதல்னா ஒரே பரிமாணம் எல்லார்ட்டயும் இருக்கணும்னு தேவை இல்ல. அம்மா மகனுக்கு இருக்குறதும் காதல் தான். அப்பா பொண்ணுக்குள்ள இருக்குறதும் ஒரு வகையான காதல் தான். நட்புக்குள்ள இருக்குறதும் ஒரு காதல் தான்.

இவங்க அன்பெல்லாம் நமக்கு பல நேரம் சிலிர்ப்பை தந்திருக்கு தான? அதே சிலிர்ப்பை வேற ஆங்கிள்ல காதல்ல பீல் பண்ணுவோம் அவ்ளோ தான்.

நீ அவன்கிட்ட ஆறுதலை உணர்ந்ததுக்கும், இப்ப நீ என்கிட்ட இருந்து எதிர்பார்க்குற ஆறுதலுக்கும் என்னடி சம்பந்தம்?

அமைதியா யோசிச்சு பாரு. உனக்கே புரியும்!” என்றவன் அவளைத் தனியே விட்டு விட்டு அமைச்சரின் வீட்டினுள் நுழைந்தான்.

சத்ய யுகாத்ரனைக் கண்டதும், அமைச்சர் முருகவேல் “நீ எதுக்கு வந்த? நான் அவளை தான வர சொன்னேன்…” என்று பொங்கினார்.

அவனோ கூலாக, “சார் ஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் எக்ஸ்போர்ட் ஆப்ஷனை யூஸ் செஞ்சு கருப்பு பணத்தை பாரின்ல இருந்து இந்தியாக்கு கை மாத்துன ஆள் தான நீங்க?” என்றான் யோசனையாக.

முருகவேலின் முகம் சிறுத்து விட்டது.

“மினிஸ்டருக்கு நான் அங்க ஜி. எம் ஆ இருந்தது தெரியாதோ?” ஒற்றைப்புருவம் உயர்த்திக் கேட்டவனிடம், “இது எனக்கும் ரவிச்சந்திரனுக்கும் மட்டும் இருந்த டீலிங்” என்றார் இருண்டு.

அட்டகாசப் புன்னகை சிந்திய சத்ய யுகாத்ரன், “நான் அங்க ஜி. எம் சார். எனக்குத் தெரியாம என் பாஸ் கூட எதுவும் செய்ய முடியாது. பொலிட்டிகள் ப்ரெஷர்ல நான் அந்த விஷயத்துல தலையிடல அவ்ளோ தான். ஆனா இப்ப தலையிடலாமோன்னு தோணுது” என இழுத்ததில் முருகவேல் பதறி விட்டார்.

“ஏய்… அதெல்லாம் மேலிடத்து சங்கதி. நானே உன்னை உருத்தெரியாம அழிச்சுடுவேன்!”

“என்ன சார் நீங்க… இப்ப காலத்துல போய் வெட்டுவேன் குத்துவேன்னு” என சலித்தபடி அவருக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டவன், அவனையே வெறித்து பார்த்து நின்றிருந்த முருகவேலிடம், “மரியாதை மனசுல இருக்கட்டும். உக்காருங்க சார்” என்றான் நக்கலாய்.

கோபத்தை அடக்கிக்கொண்டு அவன் எதிரில் அமர்ந்த முருகவேல், “உனக்கு எவ்ளோ கமிஷன் வேணும்?” என்று நேராய் விஷயத்திற்கு வந்திருந்தார்.

“உங்க கமிஷன் எனக்கு எதுக்கு சார்… என் வைஃபோட வெல்விஷர், அவளுக்கு அரசியல் ரீதியா சப்போர்ட் பண்றீங்க… உங்ககிட்ட போய் பேரம் பேசுவேனா?” என அப்பாவியாய் கேட்டவனைக் குழப்பமாய் ஏறிட்டார்.

“நீங்க சொன்ன மேலிடத்து ஆள்களோட பினாமி ப்ராபர்ட்டி எல்லாம் இன்னும் ராம்குமார் பேர்ல தான் இருக்கு. நீங்க பாட்டுக்கு என் பொண்டாட்டியை போன்ல கண்டமேனிக்கு பேசுறீங்க… எனக்கு கோபம் வந்து, அதை எல்லாம் இல்லீகல்னு இன்கம்டேக்ஸ் ஆபிசர வர வச்சு, பினாமி சொத்தை எல்லாம் அரசு உடைமையாக்கிட்டா, நீங்க நக்கிட்டு தான் போகணும்!” என அமர்த்தலாக உரைத்ததில் சடாரென எழுந்து விட்டார் முருகவேல்.

அந்த சொத்துகளுக்கு ஏதேனும் சேதம் நேர்ந்தால், அவனுக்கும் மேல் உள்ளவர்கள் அவரை சேதப்படுத்தி விடுவார்களே!

கையை சோம்பல் முறித்தபடி எழுந்த சத்ய யுகாத்ரன், “இவ்ளோ செஞ்ச விஷால் உங்களை மட்டும் சும்மா விடுவான்னா நினைக்கிறீங்க… நீங்களும் உங்க பெர்சனல் கீப்பும் கும்மியடிச்ச வீடியோவை எல்லாம் அவன் குத்தகைக்கு எடுத்ததா கேள்விப்பட்டேன்.

அதை தடுக்க உங்ககிட்ட ஒரு நல்ல டெக்னீகல் டீம் இருக்கா சார்? அதுக்கும் நீங்க எங்ககிட்ட தான் வந்தாகணும். நீங்க கோ ஆபரேட் பண்ணுனா, உங்களை பத்தின தப்பான வதந்தி வர்றதுக்குள்ளவே தடயம் இல்லாம அழிச்சுடுவோம்…” என்றவனைக் கண்டு திருதிருவென விழித்தார்.

“சரி உங்களுக்கு இன்னொரு மேட்டர் சொல்லட்டா?” என ரகசியமாய் கிசுகிசுத்தபடி அவர் அருகில் சென்றவன்,

“ஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ்ல நீங்க எக்ஸ்போர்ட் பண்ணுன கருப்பு பணம் எல்லாம் இப்ப ரிஸ்க்ல இருக்கு. புரியல? சேர்மன் ரவிச்சந்திரனுக்கும் அவர் பையன் ஸ்ரீராமுக்கும் முட்டிக்கிச்சு. அதுனால அவன் அவங்க அப்பாவை பழி வாங்க இந்த கருப்பு பணத்தை பத்தி மீடியால சொல்லப்போறதா பிளான் பண்ணிருக்கான்” என்றதும் படபடத்து விட்டார் முருகவேல்.

“பட் டோண்ட் வொரி சார், நாங்க இருக்கோம்” என்று கண் மருத்துவமனை விளம்பரம் போல பேசியவனிடம், “யப்பா… அம்ரிதாட்ட சொல்லி அதை உங்க குடோன்ல மாத்தி வைங்க. எந்த பிரச்சினையும் வராம நான் பாத்துக்குறேன். இந்த மீடியால வந்த வீடியோ, அப்பறம் அதுக்கு தப்பு தப்பா கமெண்ட் பண்ணுன ஆள்களை பிடிக்கிறது பெரிய வேலையா. அவங்களை பிடிச்சு ஜெயில்ல போடறது தான் என் வேலையே… மணி உடனே சைபர் ஆபிஸ்க்கு உத்தரவு போடு” என்று பரபரவென வேலையைத் தொடங்க,

“அப்ப நான் உத்தரவு வாங்கிக்கிறேங்கய்யா…” என்று வெகு பணிவாய் அங்கிருந்து கிளம்பியவன், அவருக்கு மரண பயத்தை காட்டியிருந்தான்.

அவன் திரும்பி வரும் வரையிலும் கூட ஆழ்ந்த யோசனையில் புதைந்திருந்தாள் இதயாம்ரிதா.

அவளை காரினுள்ளேயே லாக் செய்து விட்டுப் போனது கூட அவளுக்கு உறைக்கவில்லை.

“மினிஸ்டர் என்ன சொன்னான்?” அவன் வந்ததும் வினவ,

“ஒரு 100 கோடி கருப்பு பணத்தை நீ தான் பாதுகாக்கணுமாம். டாஸ்க் குடுத்து இருக்கான்” என்றபடி காரை கிளப்பினான்.

“எதே? இதெல்லாம் நான் பண்றது இல்ல! என் அப்பா பினாமின்ற பேர்ல செஞ்ச அட்டகாசமெல்லாம் போதும். எவனுக்கும்லாம் நான் பினாமியா இருக்க முடியாது” என்று அவள் முறுக்கிட,

“ஹே பொண்டாட்டி, இப்போதைக்கு அந்த ஆள் எது சொன்னாலும் மறுக்காத. அந்த ஆளுக்கு ஒரு பாயசம் ரெடி. டைம் வரும்போது சுகர் தூக்கலா போட்டுக் குடுத்துடலாம்” என்று கண் சிமிட்டியதில், அவள் தலையாட்டிக் புன்னகைத்துக் கொண்டாள்.

ஆனால் அவனது கார் வீட்டிற்கு செல்லாமல் நேராய் ஒரு உயர்ரக பாருக்கு சென்றதில் குழம்பினாள்.

“இங்க ஏன் வந்துருக்கோம் சத்யா?”

“ரெண்டே நிமிஷத்துல உனக்கே தெரிய போகுது…” என கேலியாய் நகைத்ததில், புருவம் சுருக்கி பார் வாசலை பார்க்க அங்கு கையில் பீர் பாட்டிலுடன் விஷாலும் ஷ்யாமும் வந்து கொண்டிருந்தனர்.

“என்ன செய்ய போறீங்க?” நிலையை உணர்ந்து அவனிடம் விவனும் போதே சத்யா காரை விட்டு இறங்கி இருக்க, அவசரமாக இதயாம்ரிதா இறங்கும்போதே அனைத்து கதவுகளையும் லாக் செய்திருந்தான்.

உள்ளிருந்து கூட திறக்க இயலாதவாறு!

“சத்யா கதவை திறங்க… கேஸ் போயிட்டு இருக்கு. ஆல்மோஸ்ட் முடியிற நிலைமையில இருக்கு. இப்போ போய் ஏதாச்சு செஞ்சா அவனுங்களுக்கு சாதகமா முடிஞ்சுடும்” என்று கத்த, அவனோ காதை குடைந்தபடி “கொஞ்ச நேரம் சத்தம் போடாம உக்காருடி. என் சக்காளத்தனுக்கு ஒரு ஹாய் சொல்லிட்டு வரேன். சமத்தா இருக்கணும்… ம்ம்?” என்று காற்றிலேயே உதடு குவித்து அவளுக்கு முத்தமிட்டான், அவள் கோவிலில் செய்தது போலவே.

“யோவ் ப்ரொஃபி…” அவனது உடல்மொழியே அவளுக்கு பயத்தை தர, “கடவுளே… கொலை கேஸ் எதுவும் ஆகிட கூடாது” என்று கும்பிடும்போதே,

ஷ்யாமின் தலையில் இருந்து குருதி வழிவது தெரிந்தது.

விஷால் சத்யாவைக் கண்டதுமே கோபம் தலைக்கேற தாக்க முயல, அதற்கு முன் அருகில் நின்றிருந்த ஷ்யாமின் தலையைப் பிடித்து சுவரில் முட்ட வைத்திருந்தான்.

விஷால் ஒரு கணம் திகைத்துப் பின் மீண்டும் தாக்க வர, அவனது சட்டையை ஒரு கையால் பற்றியவன் ஒட்டு மொத்த வெறியையும் தேக்கி அவன் கன்னத்தில் பளாரென அடித்தான்.

ஒரு அடிக்கும் அடுத்த அடிக்கும் நொடி கூட இடைவெளி இல்லாமல், ஒவ்வொரு அடியையும் கன்ன எலும்புகள் உடையும் அளவு அடிக்க, விஷால் சுயநினைவை இழக்க தொடங்கினான்.

“டேய் உன்னை விட மாட்டேன்” என்ற முனகலுடன் அரை மயக்கத்தில் சத்யாவை தாக்க வர,

“நீ செஞ்சதுக்கு எல்லாம் உன்ன விட்டு வைப்பேன்னு கனவு கூட காணாத” என்று முட்டியால் அவனைக் குனிய வைத்து தாடையில் ஒரு இடி இடிக்க, முற்றிலும் மயங்கி தரையில் சரிந்தான்.

பார் வாசலில் பாடி கார்ட்ஸை தவிர வேறு யாரும் இல்லை. உள்ளே அரங்கம் அதிரும் அளவிற்கு பாடல் ஓடிக்கொண்டிருக்க நடந்த கலவரம் கூட யாரும் அறியவில்லை.

தடுக்க வந்த பாடிகார்ட்ஸையும் பதம் பார்த்திருந்தவன், சற்றே கோபம் மட்டுப்பட வலித்த கையை உதறியபடி காரினுள் அமர்ந்தான்.

அவனையே மூச்சிரைக்க முறைத்துக்கொண்டிருந்த மனையாளைக் கண்டு கண்ணடித்தவன், “ஹாய் சொன்னதுக்கு எல்லாம் மயங்கிட்டான்டி பொண்டாட்டி… வெரி வீக் பாய் பெஸ்டி” என உதட்டைப் பிதுக்கி அவளைக் கிண்டல் செய்ததில், “உங்களை…” என்று அவன் முடியைப் பிடித்து ஆட்டி வைத்தாள் அவள்.

“ம்ம்… என்னை என்ன செய்யணும்னு சொல்லு? இப்பவாச்சு மேடம்கு லவ் மோட் வருதா?”

அவன் கேட்ட தோரணையில் அவளுக்கும் புன்னகை மிளிர,

“சீரியஸ் மோட்ல ரெண்டு பேரை போட்டுத்தள்ள ட்ரை பண்ணிட்டு, லவ் மோட் கேட்குதாமே… இருக்குற பிரச்சினைல ஏன் ப்ரொஃபி” என்று அங்கலாய்த்துக்கொண்டாள்.

“விடுடி… நம்ம அடிமை மினிஸ்டர் பாத்துப்பாரு” என்று நமுட்டு நகையுடன் கூறியவனை அகல விழித்தவள், “அடப்பாவி!” என வாயில் கை வைத்துக் கொண்டவளுக்கும் அவன் அடித்த அடியில் மனம் சற்று நிம்மதி பெற்றது நிஜமே!

மீண்டும் அவளது வீட்டிற்கே சென்றனர்.

அவளாக தனது வீட்டிற்கு வராமல் அவனாக அழைப்பதில் அவனுக்கு உடன்பாடில்லை.

அவளது அறைக்குச் சென்றதும் அவளைக் கையில் அள்ளிக்கொண்டவன் “செம்ம தூக்கம் வருதுடி” என்றபடி பால்கனிக்குச் சென்று அங்கு போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அவளை அமர வைத்து அவள் மடியில் படுத்துக்கொண்டான் வாகாக.

“ஹலோ ப்ரொஃபி தூக்கம் வருதுன்னு சொல்லிட்டு, இங்க வந்து படுத்துருக்கீங்க?” தானாய் அவனது கேசத்தை கோதி விட்டபடி கேட்டவளுக்கு அவனை மடியில் ஏந்தும் நொடிகள் தேனாய் இனித்தது.

“தூங்க வைடி! நீ தான் விடிய விடிய முழிச்சுருப்ப. நான் தூங்க வைக்க வந்தாலும் என்னை வலிக்க வைக்கிற மாதிரி ஏதாச்சு காரணம் சொல்லுவ. அதுனால, நீ முழிச்சே இரு. அதுக்கு பதிலா என்னை தூங்க வச்சு, என்னை பார்த்து ரசிச்சுட்டே உக்காந்துரு! லவரா உன்னோட டாஸ்க் இது தான்” என்றான் மேலுதட்டை மடித்து.

தனக்காய் அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அவளை ஆழமாய் நேசிக்க செய்தது.

அவன் கன்னத்தை ரசனையாக வருடியவள், அவனது இரு கண்ணிலும் இதழொற்றி, “ரொம்ப சுவீட் டாஸ்கா இருக்கே இது!” என்றபடி கன்னத்திலும் முத்தமிட்டு, இதழையும் அடைந்தாள்.

முத்தத்தின் சத்தங்களையே தாலாட்டாய் மாற்றினாள்.

இரவின் ஆழ் அமைதியினூடே, வண்டுகளின் ரீங்காரத்துடன் பெண்ணவளின் முத்த ஓசைகளும் இணைந்து ஆடவன் இழந்த இன்பத்தை இருமடங்காக கொடுத்திருக்க,

அவள் இதழொற்றல் தொடர,
அவன் இதமாய் கண்ணயர்ந்தான்.

புது காதல் மலரும்
மேகா

haai dears… comments like panna elarum manamarntha nandrigal… konjam work la sikiten, free agitu vanthu elarukum reply panren drs… thank you sooo much al for ur lovable suport!!!

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 95

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
15
+1
104
+1
3
+1
3

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. சத்யா கலக்கிட்டான்.