Loading

காவேரி மருத்துவமனையில்… “எவ்வளவு அடிச்சுக் கேட்டாலும் அந்த பொறுக்கி ரேவதி எங்க இருக்கான்னு சொல்ல மாட்டேங்கிறான்” சரவணன் டென்ஷனில் தலையைப் பிடித்துக் கொள்ள, மற்றவர்கள் அச்சத்துடன் அவனைப் பார்த்தார்கள்.

யாருக்காக அழுவது, யாரைப் பற்றிக் கவலைப்படுவது என்ற நிலையில் தான் இருந்தனர். அழுது அழுது கண்ணீர் வற்றிப் போய் சோர்ந்து போயிருந்தனர். இந்தர் இங்கு இருப்பவர்களுக்கும், அங்கு வித்யா ஹாஸ்பிடலில் இருக்கும் தீபா அமுதினிக்கும், தன்னிடம் வேலையில் இருக்கும் பாடிகார்ட்களை பாதுகாப்பிற்காக நிறுத்தியிருந்தான்.

சிங்கண்ணன் பேசிய அந்த போன் கால் கணினியின் வழி வந்திருந்ததால் அதன் இடத்தைக் கண்டறிய முடியவில்லை. இந்தர் தனக்குத் தெரிந்த ஒரு கம்ப்யூட்டர் ஹேக்கர் மூலம் அந்த கணினியின் IP முகவரியைக் கொண்டு அதன் இருப்பிடத்தைக் கண்டறிய ஏற்பாடு செய்தான்.

அமுதினிக்கும் இளமாறனுக்கும் ஆபரேஷன் நல்லபடியாக முடிந்திருந்தது. பசி, தாகம், தூக்கம் என எதுவுமின்றி மொத்த பேரும் கலங்கியிருந்தனர். அந்த நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும் கடப்பது அவர்களுக்கு அவ்வளவு எளிதாக இருந்திடவில்லை. காதல் இணையின் பிரிவும், தவிப்பும், அன்பாய் வளர்த்த மகளின், மகனின் நிலையும் அவர்களை வாட்டியது.

இந்த நாளாவது, மொத்தமாய் உடைந்து போனவர்களுக்கு தன்னைப் போல ஒளியை தந்திடாதா என்ற எண்ணத்தில் தன் பணியை செய்ய வந்தான் கதிரவன்.

அமுதினி கண் விழித்த போது, அருகில் சரவணனும், தீபாவும் இருந்தனர். குழந்தை “அப்பா..” “அம்மா..” என்றிட, இருவருக்கும் போயிருந்த உயிர் அப்போதுதான் திரும்பியிருந்தது. தலைமுடியை நீக்கி ஆபரேஷன் செய்து, தலையில் பெரிய கட்டு போட்டு சோர்வாய் விழித்திருந்தவளின் கையை ஆதரவாக பிடித்துக் கொண்டவர்கள், “உனக்கு ஒண்ணும் இல்லடா அம்மு. சீக்கிரமே சரியாகிடும்” என்றனர்.

இளமாறன் கண் விழித்ததும் நர்ஸ் வந்து அழைக்க, செந்தமிழ் முதலில் உள்ளே சென்றிட, அதன்பிறகு புனிதா சென்றார். தன்னிடம் ஏதோ வித்தியாசத்தைத் தெரிந்து கொண்டவன், கால்களை நகர்த்த, நன்றாக இருந்த காலில் கட்டுப் போட்டிருப்பதையும், அதை அசைக்கக் கூட முடியாமல் இருப்பதையும் உணர்ந்தான்.

செந்தமிழ் உள்ளே வந்தவள், கண்களில் கண்ணீரோடு இருந்தவனைப் பார்த்ததும், “என்னாச்சு மாமா.. எதாச்சும் பண்ணுதா? எங்கயாச்சும் வலிக்குதா?” கண்ணீர் வறண்டிருந்த விழிகளுடன் அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“நான் உனக்கு பண்ண பாவத்துக்கெல்லாம் எனக்கு இது தேவைதான் தமிழ். இருக்கிறதை நினைச்சு சந்தோஷப்படுறதை விட்டுட்டு, நான் குறையவே பேசிப் பேசி இப்போ கடவுள் எனக்குப் பெரிய குறையை குடுத்திட்டார் போல” அவன் சொல்லி முடிப்பதற்குள் அவனது வாயைக் கையால் மூடியவள், “அப்படி சொல்லாதீங்க மாமா.. உங்களுக்கு ஒரு குறையும் இல்ல. கால்ல அடிபட்டிருக்கு, ஆபரேஷன் பண்ணியிருக்காங்க, அவ்வளவுதான்” அவனுக்கு அருகில் அமர்ந்து, அவன் தலை வருடினாள்.

“எனக்கு சந்தோஷம் தான் தமிழ். நான் எப்படி இருந்தாலும் என்னைக் காதலிக்க, என்னை அப்படியே ஏத்துக்க, எனக்கு காலே இல்லைன்னாலும் என்னைத் தாங்க நீ இருக்கும் போது, எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லடி. உனக்கும் குழந்தைக்கும் ஒண்ணும் இல்லைல? அதுதான் எனக்கு ரொம்ப சந்தோஷம்” மருந்து மயக்கத்தில் மனதில் உள்ளதை தெளிவாகவே உளறினான்.

“நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம். பேசாம தூங்குங்க. லவ் யூ இளா” என்றவள், அவன் தலையை வருடித்தர, நிம்மதியாய் கண்ணயர்ந்தான்.

கம்ப்யூட்டர் ஹேக்கர் அந்தக் கணினி இருக்கும் இடத்தைக் கண்டறிந்திட, சரவணனும் இனியனும் அங்கு விரைந்தனர். அது ஆண்கள் மட்டுமே தங்கியிருக்கும் மேன்சன். சரியாக அறை எண்ணைக் கண்டுபிடித்து உள்ளே நுழைந்தால், நாலைந்து பேர் கணினியுடன் அமர்ந்திருந்தனர். உள்ளே போலீஸ் உடையுடன் நுழைந்தவனைப் பார்த்து அவர்கள் ஆளுக்கொரு பக்கம் தெறித்து ஓட, இருவரும் அவர்களை மடக்கிப் பிடித்து அடித்தனர்.

“சார். எதுக்கு எங்களை அடிக்கிறீங்க? நாங்க என்ன தப்பு பண்ணோம்?” அடி வாங்கியவர்களில் ஒருவன் பயந்தவாறு கேட்க, “சிங்கண்ணனை உங்களுக்கு எப்படித் தெரியும்?” எதிர்கேள்வி கேட்டான் சரவணன்.

“சார் அப்படி யாரையும் எங்களுக்குத் தெரியாது” மற்றொருவன் சொல்லிட, இனியன் தன்னுடைய போனில் இருக்கும் சிங்கண்ணன் பேசியதைப் போட்டுக் காட்டினான்.

“சார் எங்களுக்கு ரெக்கார்ட் பண்ணி அனுப்பினாங்க. நாங்க அதை உங்களுக்கு வாய்ஸ் கால் பேசுன மாதிரி அனுப்பினோம். அவங்க யாரு என்னன்னு லாம் தெரியாது. பணம் தருவாங்க பண்ணுவோம், அவ்வளவுதான்” அங்கிருந்தவர்களில் மூத்தவன் போலத் தெரிந்தவன் சொன்னான்.

“ஏன்டா நல்ல விஷயத்துக்காகக் கண்டுபிடிச்ச டெக்னாலஜியை, பணத்துக்காக கேவலமான வேலைக்கு யூஸ் பண்றீங்களா?” ஆளுக்கு இரண்டு குத்துகளை முகத்தில் தந்தான் காவலன்.

“சார்.. எங்களை விட்டுருங்க. அந்த ஆள் இருக்கிற லோகேஷனை நான் கண்டுபிடிச்சு சொல்றேன்” என்று ஒருவன் முன்வந்தான்.

சொன்ன மாதிரியே சில மணி நேரங்களில் கண்டுபிடித்துத் தந்தான். ஸ்டேஷனில் இருந்து வேறு போலீஸை வரவழைத்து அவர்களை ஒப்படைத்த பின், இனியனும் சரவணனும் அவர்கள் சொன்ன லோகேஷனுக்குச் சென்றனர்.

அது செயல்படாமல் இருக்கும் ஒரு பழைய ஃபேக்டரி. வெளியே இருந்து பார்க்கும் போதே, நிறைய ஆட்கள் உள்ளே இருப்பது போலத் தெரிந்தது. முன்னால் பாதுகாப்பிற்கும் ஆட்கள் இருந்தனர். “இன்னும் ஆளுங்களை வரச் சொல்லலாமா?” சரவணன் யோசனையுடன் கேட்க, “லேட் பண்ணாம நாமளே உள்ளே போய் பார்த்திடலாம்” என்றான் இனியன்.

“கொஞ்சம் பொறு இனியா? ஒருவேளை ரேவதி இங்க இல்லனா என்ன பண்றது?” காவலனின் மூளை எல்லா பக்கமும் யோசித்துப் பார்த்தது. திடீரென்று உள்ளே சத்தங்களும், சலசலப்பும் கேட்க, அதைத் தொடர்ந்து முன்புறத்தில் இருந்தவர்களும் உள்ளே ஓட,

இருவரும் காம்பவுண்ட் சுவரை தாண்டி உள்ளே சென்றனர். சரவணன் முன்னே இருந்த சிலரை அடித்துக் கொண்டிருக்க, இனியன் “ரேவதி..” “குட்டிமா..” என அழைத்துவாறு அவளைத் தேடி உள்ளே ஓடினான்.

உள்ளே அங்கிருந்தவர்கள் கத்தியால், வெட்டரிவாளால் வெட்டப்பட்டு கிடக்க, அவர்களைத் தாண்டி உள்ளே சென்றான்.

********************************************

ரேவதி இளமாறனின் வீட்டிலிருந்து வெளியேறி அந்த தெருமுனைக்குச் சென்றவள், சிங்கண்ணன் சொன்னபடி அங்கிருந்த காரில் ஏறினாள். கார் நேராக பழைய ஃபேக்டரிக்கு வந்தது.

காரிலிருந்து இறங்கியவளை தரதரவென உள்ளே இழுத்துச் சென்றனர். “வாம்மா ரோகிணி.. உன்னைக் கல்யாணம் பண்ணா என்னோட அரசியல் வாழ்க்கை உச்சத்துக்குப் போகும்னு சொன்னாங்க. ஆனா நீயும் உன்கூட இருக்கவங்களும் சேர்ந்து என்னோட அரசியல் வாழ்க்கையை மொத்தமா முடிச்சு விட்டீங்க. என் பொண்டாட்டி, பிள்ளை கூட என்னை ஏத்துக்கல. என்னை வீட்ல கூட சேர்த்துக்க மாட்டேங்கிறாங்க. இதையெல்லாம் செஞ்ச உங்களை நான் சும்மா விடுவேனா?” சிங்கண்ணன் ஆக்ரோஷமாகப் பேச,

“என்னை என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க. ஆனா மத்த யாரையும் எதுவும் செஞ்சுடாதீங்க” கண்ணீரோடு சொன்னாள் ரேவதி.

“ஹ்ம்ம். பண்ணிட்டா போச்சு. உன்னை மட்டுமில்ல, உங்க எல்லாரையும் மொத்தமா வச்சு செய்யத்தான் போறேன்” என்றவன் அங்கிருந்தவர்களுக்கு கண்ணைக் காட்டியதும், இருவர் அவளை இறுக்கமாக பிடித்துக் கொள்ள, இன்னொருவன் அவளுக்குப் போதை ஊசிகளைப் போட்டான்.

அளவுக்கு அதிகமாக மருந்து உள்ளே சென்றதும் அவளை தூக்கிச் சென்று அங்கிருந்த மெத்தையில் போட்டனர். சிங்கண்ணனோடு சேர்ந்து அங்கிருந்த மொத்த மனித மிருகங்களும் அவளை வேட்டையாட ஆரம்பிக்க, சுயநினைவின்றி கிடந்தாள். ரேவதி மயக்கம் தெளிந்து விழித்துப் பார்க்க மீண்டும் போதை ஊசியைப் போட்டனர்.

“நீ அன்னைக்கு என்னை கல்யாணம் பண்ணியிருந்தா எனக்கு மட்டும் பொண்டாட்டி ஆகியிருப்ப. இப்போ பாரு எல்லாருக்கும் பொண்டாட்டியாக வேண்டியதா போச்சு. இப்படி இருக்கிற உன்னை எந்த புருஷனாவது ஏத்துப்பானா? ஒண்ணு நீ உயிரோட இருந்தா, வேற வழியே இல்லாம, இதையே தொழிலா பண்ணனும். இல்லனா தற்கொலை தான் பண்ணிக்கணும்” குரூரமாய் சிரித்தவனின் குரல் அவளுக்கு ஒலித்துக் கொண்டிருக்க, தன்னை அழித்துக் கொண்டிருப்பவர்களை எதிர்க்க முடியாமல் இயலாமையில் கண்ணீர் சிந்தினாள்.

“தலைவா.. அவனுங்க எல்லா பக்கமும் பாதுகாப்பு போட்டுட்டானுங்க. ஹாஸ்பிடலுக்குள்ள நாம உள்ள போக முடியாது. அவனுக்கு வேற யாரோ சப்போர்ட் பண்றாங்க. அவ அம்மாவை கொல்ல போனவன் மாட்டிக்கிட்டான். அந்த போலீஸ் நம்ம கிட்ட நெருங்கிட்டான்” வெளியே இருந்து உளவு பார்த்தவன் வந்து சொல்ல,

“அந்த போலீஸும் அவ புருஷனும் இவளைத் தேடித்தான சுத்துறாங்க. அவனுங்களை முடிச்சு விடுங்க. அவளையும் கொன்னு போட்டு மத்தவங்களுக்கு சொல்லு. பதறிப் போனவங்க அவளைத் தேடி இங்க வரட்டும். எல்லாரையும் கூண்டோட மேல அனுப்பிடலாம்” சிங்கண்ணன் சொல்லிக் கொண்டிருக்க, அறையில் இருந்தவர்களை அவளது கைக்கு கிடைத்த ஆயுதங்களால் கண்மண் தெரியாமல் தாக்கி கொன்றபின், ஆக்ரோஷமாக அறையிலிருந்து வெளியே வந்தாள் ரேவதி.

தன்னை நோக்கி வந்தவர்களை தயவுதாட்சண்யமின்றி வெட்டியபடி, சீறும் காளியாய் வெளியே வந்தவளைக் கண்டு பயந்தாலும், அவளைத் தாக்கவும், தடுக்கவும் முற்பட்டனர். அவளோ இவர்களை விட்டால் எல்லாருக்கும் ஆபத்து என்ற வேகத்தில், ஆத்திரத்தில், சின்ன சின்ன அடிகள் அவளின் மேல் விழுந்தாலும், அங்கிருக்கும் எல்லோரையும் அழிக்கத் தொடங்கினாள்.

உள்ளே சத்தம் கேட்டு, இதை எதிர்பாராமல் வெளியிலிருந்து உள்ளே வந்தவர்களும், அவளுடைய கைகளில் இருந்த ஆயுதங்களுக்கு இரையாகிப் போயினர்.

“ரேவதி..”, “குட்டிமா..” என அழைத்தவாறு இனியன் அவளை அந்த இடம் முழுதும் தேடிக் கொண்டேயிருக்க, “இனி நீ இங்க வராத. போயிடு வேணாம். நான் உனக்கு வேணாம்” அவள் குரல் மட்டும் எங்கிருந்தோ கேட்டது.

“குட்டிமா.. எங்க இருக்க? என்கிட்ட வந்துடு” அவளது குரலைக் கேட்ட மாத்திரத்தில் அவன் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டது.

“வேணாம் இனி. நான் அசிங்கம். நான் தப்பு. எது நடக்கக்கூடாதுன்னு நினைச்சேனோ அது நடந்திடுச்சு. நான் கெட்டுப் போயிட்டேன். நான் உனக்கு வேணாம். என்னை இப்படிப் பார்க்காத. நான் செத்துப் போயிடுவேன். போயிடு” அவனிடம் போக்குக் காட்டி, அவன் கண்களில் படாதவாறு நகர்ந்தவண்ணம் இருந்தாள்.

“குட்டிமா.. நீ இல்லனா எனக்கு யார் இருக்காங்க. நீ எங்க இருக்க. நீ எப்படி இருந்தாலும் பரவாயில்ல. நீ எனக்கு வேணும்” கண்கள் நீரில் நனைந்துவிட கண்ணாடியைக் கழற்றி கண்ணீரைத் துடைத்தான்.

‘அவனுடன் வாழ முடியாமல் என்னை இப்படி சிதைத்து விட்டார்களே’ தன்னுடைய நிலையை எண்ணிக் கதறி அழுதவாறு, கையில் இருந்த கத்தியால் தன்னைக் குத்திக் கொள்ளப் பார்த்தவளை, வேகமாக பின்னிருந்து அணைத்துக் கொண்டான் இனியன். அவள் விடும் மூச்சுக் காற்றைக் கூட அறிந்தவன் அல்லவா? அவளைக் கண்டறிந்து விட்டான்.

பதறிப் போனவள், “என்னைத் தொடாத, விடு.. எனக்கு அருவருப்பா இருக்கு. வேணாம் இனி” அவனைத் தள்ள முயன்றிட,

“குட்டிமா.. நீ செத்துட்டா நான் மட்டும் உயிரோட இருப்பேன்னு நினைச்சியா? உன்னை விட்டா எனக்கு யார் இருக்காங்க. என்னைப் பாரு. உன் இனியை விட்டுப் போகப் போறியா?” அவனது பிடியை இறுக்கியவாறு சொன்னான்.

ரேவதியும் அவனை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டு அழுதாள். அவளுடைய அத்தனை வலிகளுக்கும் அவன் காதல் ஒன்றே மருந்து. அவன் மார்பில் தஞ்சமடைந்தவள், “நீ ரொம்ப நல்லவன் இனி, ஐ லவ் யூ டா” என்றவாறு மூர்ச்சையாகி விழுந்திட,

ஆடைகளின்றி பிறந்த மேனியாய், உடலெங்கும் காயங்களுடன், ரத்தக் கறைகளுடன் இருந்தவளை கைகளில் தாங்கியவன், “குட்டிமா.. என்னைப் பாரு..” பதற்றத்தோடு அவள் கன்னத்தைத் தட்டி எழுப்பினான்.

காதலாய் வருவாள்💞 

அடுத்த அத்தியாயத்தில் முற்று பெறும். நன்றி!!!

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்