
நவிலன் தனது படிப்பு முடிந்தவுடன் தனது மர ஆசாரி வேலையை தொடங்கியிருந்தான். கூலிக்கு தான் வேலைக்கு சென்று கொண்டு இருந்தான் .தனக்கு தெரிந்த ஒரு அண்ணனிடம் பெரிதாக வேலையை பற்றிய முன் அனுபவம் இல்லாததால் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்ளலாம் என்று கற்றுக் கொள்ள தொடங்கி இருந்தான்.
அப்பொழுது , மதியம் சாப்பிடும் வேலையில் அவனுக்கு போன் செய்து இருந்தாள். ‘அதிசயமா இருக்கே. இவளே நமக்கு போன் பண்ண மாட்டாளே? நம்ம போன் பண்ணா கூட கட் பண்ணி விட்டுட்டு மெசேஜ் தான செய்வா? ‘ என்று எண்ணத்துடனே போனை எடுத்தான்.
“சொல்லுடி என்ன அதிசயம் போன் பண்ணி இருக்க?”.
” ஏன்? நான் போன் பண்ண கூடாதா ?”.
” சரி விஷயம் என்ன அத சொல்லு ?”என்று முறுவலித்தான்.
“இல்லடா அ…அது ” என தயங்கினாள்.
“விஷயம் இல்லாம நீ இந்த நேரத்தில் பேச மாட்ட. அதுவும் நான் வேலையில இருக்கேன்னு தெரிஞ்சு தான போன் பண்ணி இருக்க சொல்லு”.
அவளும் தன் வீட்டில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி இருந்தாள்.
நேற்று இரவு தன் மாமியார் தன்னை தனியாக சமைக்க சொல்லிய வரை சொன்னாள்.
” அத தான் டி. நான், ஏற்கனவே சொன்னேன். ஒரு வாரமா மதியம் சாப்பிடாமல் கூட இருக்க .அதையும் என்கிட்ட கூட நீயே சொல்லல. நான ஏன் ஒரு மாதிரி இருக்கனு கேட்டதுக்கு அப்புறம் தான் சொல்ல ஆரம்பிச்ச. ஒரு வாரமா சாப்பிடாம இருக்க. அதை மாமா கிட்ட சொல்லணும்னு கூட உனக்கு தோணலையா ?சொல்லு.” என்று எகிறினான்.
” ஏதாவது என்ன வச்சு பிரச்சனை ஆனா, நான் சண்டையை மூட்டி விட்ட மாதிரி ஆயிடாதடா டா? அதான்”.
“இப்பயும் உங்க மாமியார் உன்னால தான் சண்டை வந்துச்சுன்னு சொல்லி இருக்காங்க. பேசுறவங்க பேச தான் டி போறாங்க ,எப்படி இருந்தாலும் பேச தான் செய்வாங்க. நல்லது செஞ்சாலும் பேச தான் செய்வாங்க. கெட்டது செஞ்சாலும் பேச தான் செய்வாங்க. நமக்கு புடிக்கலன்னா காரணமே இல்லாம நம்ம மேல தப்பு சொல்லுவாங்க சண்டை போடுவாங்க, புடிச்சிருந்தா தப்பா இருந்தாலும் கூட அது கண்ணுக்கு தெரியாது.ஆனா, நீ உங்க அம்மா எனக்கு சாப்பாடு இல்லதா மாறி அரிசி ஊற வைக்கிறாங்கன்னு கூட நேரடியா சொல்லாம அதை நீ வேற மாதிரி கூட சொல்லி இருக்கலாம்” என்று திட்டிவிட்டு “சரி மாமா என்ன சொன்னாரு” என்று கேட்டான்.
“அவரும் பெருசா எதுவும் பேசல தனியா சமைச்சுக்கலாம் என்று சொல்லிட்டாரு. நேத்து நைட் எங்களுக்கு நானே தான் சமைச்சுக்கிட்டேன். இன்னைக்கும் சமைச்சுட்டேன்” என்றாள்.
“சரி என்ன சமைச்ச?” என்று கேட்டுவிட்டு அவளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்திருந்தான்.
நாட்கள் அழகாக சென்று இருந்தது. வேகமாக நாட்கள் உருண்டோடி இரண்டு வருடங்கள் சென்று இருந்தது. இந்த இரண்டு வருடங்களில் வீடு கட்டுவதற்கான வேலைகளை ஆரம்பித்திருந்தான்.
ஏற்கனவே கடக்கால் மட்டும் போட்டு இருந்தது. இப்போது அங்கும் ,இங்கும் ,தெரிந்த இடம் என்று கொஞ்சம் கடன் வாங்கி , கையில் இருக்கும் பணம் என போட்டு வீடு கட்ட ஆரம்பித்து இருந்தான் நவிலன்.
முதல் ஒரு வருடம் தனக்கு தெரிந்த ஒரு அண்ணனுடைய கடையில் வேலை செய்து கொண்டே வேலையை முழுமையாக கற்றுக் கொண்டவன்..
அடுத்த வருடம் புதிதாக வாடகைக்கு ஒரு இடம் வாங்கி அங்கு கடை அமைத்துக் கொண்டான். வேலையை முழுமையாக கற்றுக் கொண்டான்.
வீட்டு வேலையும் வேகமாக கட கடவென்று நடைபெற, முழுவதாக கட்டி முடித்திருந்தான்.பண உதவியாக இல்லை என்றாலும், தன்னால் முடிந்த வரைக்கும் அவனுக்கு பக்க பலமாக இருந்தாள் நிவி.
வீடு குடி போகும் விழாவிற்கு பெரிதாக யாரையும் அழைக்கவில்லை… தங்களது தெருவில் இருக்கும் ஒரு சிலரை மட்டும் அழைத்து இருந்தான்.
அப்போது கூட அவனது அண்ணன் முருகன் வந்து சத்தம் போட்டு கொண்டு இருந்தான். “நான் ஒருத்தன் அண்ணன்னு இருக்கேன் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும் என்று கூட தோணலையா” என்று தனது அம்மா சுந்தரியிடம் கத்திக் கொண்டிருக்க,
அவர் எதுவும் பேச முடியாத நிலையில் கையை பிசைந்து கொண்டு நின்றார்.
இரண்டு மகனும் வேண்டும். ஆனால் ,யார் பக்கம் நிற்பது என்று அவருக்கு புரியவில்லை.
“நான் வீடு குடி போறதுக்கு யாரை கூப்பிடனும், கூப்பிடக்கூடாதுனு நான் தாண்டா முடிவு பண்ணனும். நீ முடிவு பண்ண கூடாது. உன்னை கூப்பிடனுமா ?வேணாமா ?என்று நான் தான் சொல்லணும் சரியா?” என்று நவிலனும் கோபத்தோடு சண்டைக்கு வர,
“டேய்! கொஞ்ச நேரம் அமைதியா இரு” என்று பிரேம் அவனை அடக்க முயன்றான்,
“மச்சான் அவன் என்னா பேச்சு பேசிட்டு இருக்கான்.”என்று மீண்டும் எகிறினான்
“பேசட்டும் கொஞ்ச நேரம் அமைதியா இரு, இந்த ஃபங்ஷனை நம்ப நல்ல படியா நடத்தி முடிக்கணும் அவ்வளவுதான்.. வந்துட்டாங்களா விடு, வீடு தேடி வந்தவங்கள வாங்கன்னு கூப்பிட்டு பழகு அவ்வளவுதான்” என்று விட்டு அவனது கையில் அழுத்தம் கொடுத்தான் .
நேற்று இரவே நிவி தன்னால் முடிந்து அளவிற்கு அவன் அமைதியாக இருப்பதற்காக நிறைய விஷயங்களை சொல்லி இருந்தாள்.
“உன் அண்ணன் இல்லை, வேறு யாரு சண்டைக்கு வந்தாலும், எந்த ஒரு பிரச்சினையும் பண்ணாத, கஷ்டப்பட்டு வீடு கட்டி இருக்கோம் ..அதை உன் மனசுல பதிய வச்சுக்கோ ..வேற எதைப்பத்தியும் யோசிக்க கூடாது. அம்மாவை நல்லபடியா பார்த்துக்கணும், அவங்க மனசு கஷ்டப்படக்கூடாது, அவங்கள சந்தோஷமா பாத்துக்கணும்,அது மட்டும் தான் நம்மளோட மைண்ட்ல இருக்கணும், யார் எந்த பிரச்சனை பண்ண வந்தாலும், பங்க்ஷன கலைக்க வந்தாலும், அதை எதையும் நீ மைண்ட்ல ஏத்திக்காம பங்க்ஷனை நல்லபடியா நல்ல முறையில நடத்தி முடி ..உன்னோட முழு கவனம் இந்த ஃபுங்ஷன்ல வர எல்லா எதிர்ப்பையும் மீறி நல்லபடியா முடிச்சு, நீயும் சந்தோசமா இருக்கிறது தான் “என்று சொல்லியிருந்தாள்.
பிரேம் கையைப் பிடித்து இழுத்து அவனது கையில் அழுத்தம் கொடுக்கவும், நேற்று நீவி பேசியதை நினைவில் கொண்டு வந்தவன். எதுவும் பேசாமல் “சரி வாங்க!” என்று விட்டு நகர,
“கடமையேனு வந்து நின்னதுக்கு கூப்பிடுறீங்களா? கொழுந்தனாரே!” என்று அவனது அண்ணி கேட்க,
ஒரு முறை தனது அண்ணியை மேலும் கீழும் பார்த்தவன். “வீட்டுக்கு வந்தவங்கள வானு ஆச்சும் மரியாதைக்கு நான் கூப்பிடுறேன். அதைக்கூட, நீங்க கூப்பிட்டது கிடையாது, தெருவுல போற நாய் மாதிரி பாத்திருக்கீங்க! அதை மறந்திட மாட்டீங்க நினைக்கிறேன்” என்று அவன் வேறு எதுவும் பேசாமல் நகர்ந்து விட்டான்.
அவனது அண்ணனும், அண்ணியும் வீடு எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக இவன் எப்படி இவ்வளவு பெரிய வீடு கட்டினான் என்ற ஆதங்கத்திலும் , வயிற்று எரிச்சலிலும் தான் வந்தார்களே தவிர ,பாசத்தில் வரவில்லை. ஃபங்ஷன் நல்லபடியாக முடிய, வயிறு எரிந்த அண்ணனும், அண்ணியும் சாப்பாடு சாப்பிட சொன்னதற்கு கூட ஒன்னும் வேணாம் என்று விட்டு நகர்ந்து விட,
அப்பொழுது அவனது அம்மா சுந்தரி தான் கெஞ்சி கூத்தாடி இருவரையும் சாப்பிட வைத்து அனுப்பி வைத்தார்.
இங்கு வனிதா மூன்றாம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்து இருந்தாள்.
அப்பொழுது அவளுடைய அண்ணி வனிதாவின் அம்மாவிடம் வந்து “அத்தை வனிதாவுக்கு இந்த வருஷம் படிப்பு முடிஞ்சிடுச்சில்ல, நம்ம சொந்தத்திலேயே மாப்ள இருக்கு பேசி முடிச்சிடலாமா ?எங்க அப்பா கூட கேட்டாரு” என்று வந்து நிற்க,
அப்பொழுதுதான் மாலை வேளையில் தலை சீவி கொண்டிருந்த வனிதா தன் அண்ணியின் பேச்சில் சீப்பை கீழே விட்டிருந்தாள்.
வேகமாக திரும்பி தனது அண்ணியை பார்க்க ..,
அவளது அம்மா அவளை முறைத்துவிட்டு, “மாமா வரட்டும் மா என்னன்னு பேசிய முடிவு பண்ணுவோம். இவளை இனியும் வீட்ல எல்லாம் வச்சுட்டு இருக்க முடியாது தான் பாப்போம்” என்றவர் அமைதியாகி விட்டார்.
“என் மேல நம்பிக்கையே வராதா? உங்களுக்கு எல்லாம்” என்று கீழே இருந்த சிப்பை எடுத்தவள் தூக்கி எறிய,
“எப்படி நம்பிக்கை வரும், எப்படி டி நம்பிக்கை வரும் “என்று அவளுடைய அம்மா கத்திக் கொண்டிருக்க,
அப்பொழுதுதான் வேலை முடிந்து வீட்டிற்குள் நுழைந்தான் அவளது அண்ணன் சுந்தர்..
எனவென்று விவரம் கேட்க.. கோமதியும் விவரத்தைக் கூறினார்.
” அம்மா இப்ப என்ன வயசு ஆகுதுனு அவளை இப்பவே கல்யாணம் பண்ணி தரணும்னு பேசிட்டு இருக்க?, என் பொண்டாட்டி சொல்லிட்டா எதனாலும் கேட்பியா?”
“நீதானடா அப்போ தாம் தூம் னு குதிச்ச?”.
“ஆமா அப்ப இவ பண்ண வேலைக்கு அண்ணனா கோவம் வந்துச்சு ,பேச தான் செஞ்சேன்.., திட்ட தான் செஞ்சேன். அதுக்காக, இப்போ, இரண்டு வருஷமா சைலன்டா தானே இருக்கா”
” நீங்க பாத்தீங்களா? உங்க தங்கச்சி சைலன்ட்டா இருக்காளான்னு ? நமக்கு தெரியாம அந்த பையனை பார்த்து பேசிட்டு இருந்தா?” என்றாள் வேகமாக அண்ணிக்காரி.
தனது மனைவியை முறைத்தவன்.”உனக்கு அவ்வளவு தான் மரியாதை, உன்ன பத்தி பேசறதுனா மட்டும் பேசு, என் தங்கச்சி வாழ்க்கையை நீ முடிவு பண்ண வேணாம் சரியா? “என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் தங்கையை ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாக ரூமுக்குள் நுழைந்து கொண்டான்.
அவனது மனைவி இங்கு “எது நான் முடிவு பண்ண வேணாமா? அப்போ நான் இந்த வீட்ல ஒருத்தி இல்லையா? அவ என்னோட நாத்தனார் இல்லையா? அவ வாழ்க்கையில நல்லது கெட்டது முடிவு பண்ற உரிமை எனக்கு இல்லையா?” என்று தாம் தூம் என்று வாய்க்கு வந்தபடி பேசி கத்த,
ரூமில் இருந்து எட்டிப் பார்த்தவன். “யாரும் நீங்களா எந்த முடிவும் எடுக்க வேணாம். அப்பா வரட்டும். எதுவா இருந்தாலும் பேசலாம்,அதுவரை அமைதியா இருந்தா எல்லோருக்கும் நல்லது” என்று கதவை அடைத்துவிட்டான்.
இரவு போல், வனிதாவின் அப்பா சங்கரும் வர.. அம்மா கோமதி பேச்சை தொடங்குவதற்கு முன்பாகவே, அண்ணி சுகந்தி பேச்சை தொடங்கியிருந்தாள்.
“மாமா நம்ப வனிதாவுக்கு வரன் பார்க்கலாம் இல்ல. கல்யாணம் வயசு வந்துடுச்சு, டிகிரியும் முடிச்சுட்டா ,நம்ம சொந்தத்துலையும் நல்லா படிச்ச மாப்பிள்ளை இருக்காங்க. அப்பா கூட சொல்லி இருந்தாரு, அவருக்கு தெரிஞ்ச ஒரு வரன் இருக்குனு..”என்றாள் நைசாக..
ரூமுக்குள் இருந்து வெளியே வந்த சுந்தர். தன் மனைவியை முறைத்து விட்டு, “அப்பா நீங்க முதல்ல சாப்பிடுங்க! பொறுமையா பேசலாம் ” என்றான்.

