
அத்தியாயம் – 30
தாங்கள் இப்போது காணும் காட்சியைவிட மார்சில்(mars) போய் மாரியம்மா மக்காயலா சாங்கிற்கு காலை மடக்கி குத்தாட்டம் போடுகிறது என்று சொல்வதைக் கூட நம்பிவிடலாம் போலிருந்தது ஹரியின் குடும்பத்தினருக்கு.
ஆச்சரியத்தில் ஹரிக்கு கண்கள் வெளியே தெறித்துவிடுமளவிற்கு விரிய, கார்த்திக்கோ இதுதான் சாக்கு என்று அதிர்ச்சியில் மயங்கி சரிவதைப் போல் தன் அருகில் இருந்த வர்ஷூவின் தோளில் தலையை சாய்த்தான்.
அவன் தலையை தள்ளிவிட்ட வர்ஷூ, “கொன்றுவேன்” என வாயை அசைத்து மிரட்ட, ஹிஹி என அசடு வழிந்தவன் ,”என்ன ஷாக் ஆனாலும் உஷாரா இருக்காளே” என தனக்குள் கூறிக்கொண்டு மீண்டும் அறைப்பக்கம் பார்வையை திருப்பினான்.
அங்கே ஸ்ரீ புன்னகை முகமாக வெளியே வர,அவள் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு ஸ்ரீயின் முகத்தையே ஆவலாக பார்த்துக் கொண்டு வந்தாள் சந்து.
இது எப்படி சாத்தியம் அந்த ஹாஸ்டலில் போதி மரம் ஏதும் இருந்ததா என்ன?? என ஸ்ரீயை நினைத்து ஹரி குழம்ப, சந்துவிற்கு ஸ்ரீயின் மீது வந்த இந்த திடீர் ஒட்டுதல் அவனை மேலும் குழப்பியது.
சந்து நான்கு வருடமாக அவளிடம் பழகி வரும் கார்த்திக்கிடமே ஒதுங்கியிருப்பவள், பார்த்து ஒரே நாளான அதுவும் அவள் ஆழ்மனதில் யாரை நினைத்து இன்னும் பயந்து கொண்டிருக்கிறாளோ அதே ஸ்ரீயுடன் இப்படி ஒட்டிக்கொண்ட மாயம் புரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்டான் ஹரி.
அனைவரின் முகத்தையும் பார்த்து ஸ்ரீ இதழோரம் பூத்த குறும்புப் புன்னகையுடன் சந்துவின் பக்கம் திரும்பி ,”சந்து ஸ்ரீ போய் சந்து குட்டிக்கு மம்மம் எடுத்துட்டு வரேன் இங்க சமத்தா உட்கார்ந்திருங்க” என அவளை சோபாவில் அமர வைத்து நகரப் போக,
சந்துவோ அவள் கையை விடாமல் பற்றிக் கொண்டு ,”வேணாம்” என்பது போல் தலையசைக்க, ஸ்ரீயின் மனம் அவள் செயலில் பாகாய் உருகிவிட்டது.
அவள் கையை அழுத்திக் கொடுத்த ஸ்ரீ,”ஒரே நிமிஷம் சந்து குட்டி” என மூக்கைச் சுருக்கி வினவ,
அதில் என்ன நினைத்தாளோ, அவள் கையை விட்டுவிட்டாள் சந்து.
அங்கு தங்களை ஏதோ ஏலியன் போல் பார்த்துக் கொண்டிருந்த குடும்பத்தாரை கண்டுகொள்ளாமல் அவள் சமயலறைக்குள் போய் தன் பாட்டி கருப்பட்டி தட்டி போட்டு செய்து வைத்திருந்த குழிப் பனியாரத்தை தட்டில் நிரப்பியவள் நேராக சந்துவின் அருகில் வந்தமர்ந்தாள்.
முதல் வாயை பிட்டு சந்துவின் வாயருகில் கொண்டு போக, என்ன ஒரு அதிசயம் சாப்பிட அவ்வளவு அடம் பிடிக்கும் சந்து ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல் வாயைத் திறந்து அமைதியாக வாங்கிக் கொண்டாள்.
அப்போது தான் தன் அன்னை தந்தையுடன் போனில் உரையாடிவிட்டு உள்ளே நுழைந்த சித்துவிற்குமே சந்துவின் செயல் உலக மகா அதிசயமாக இருந்தது.
ஆம் அன்று சித்து வருவதற்கு முன்பே வர்ஷூவின் பெற்றோரிடம் ஹரியும் கார்த்திக்கும் சேர்ந்து நடந்த அத்தனையும் ஆதியிலிருந்து அந்தம் வரை தெளிவாகக் கூறி விளக்கியிருந்தனர்.
முன் இதுபோல் கூறியிருந்தால் கூட அதைக் கேட்டு கொதித்துப் போயிருப்பரரோ என்னவோ , ஆனால் இப்போது தேவைக்கும் அதிகமாக துன்பத்தை தங்கள் பெண்ணின் வாழ்வில் அனுபவித்துவிட்டதால் சந்துவையும் தங்கள் பெண் போல் நினைத்து அனைத்தையும் ஏற்றுக் கொண்டனர்.
சித்துவின் மனநிலையையும் புரிந்து கொண்டவர்களுக்கு அவன் மேல் வருத்தம் இருந்தாலும் அதை அவனிடம் காட்டிக்கொள்ளாமல் நன்றாகவே உறையாடினர்..பெற்றோர்களல்லவா ?? அதான் தங்கள் பிள்ளையின் நலனுக்காக தங்கள் துன்பத்தை தங்களுக்குள்ளே விழுங்கிக் கொண்டனர்.
இப்போது வர்ஷூவின் அப்பாவிற்கு சற்று உடல் நிலை சரியில்லாததால் இன்னும் ஒரு வாரம் கழித்து அவர்கள் சென்னை வருவதாய் இருந்தது. அதைப்பற்றி பேசிவிட்டு உள்ளே நுழைந்த சித்து தான் இவர்களை பார்த்து வியந்து போய் அங்கேயே கன்னிவெடி மேல் காலை வைத்தது போல் அசையாமல் நின்றிருந்தான்.
அவர்கள் இருவரைத் தவிர அந்த வீட்டில் யாருமில்லை என்பது போலிருந்தது ஸ்ரீ சந்துவின் செய்கை.
அவளுக்கு ஊட்டி முடித்தவள்,”குட் கேர்ள்” என அவள் தலையை லேசாக கலைத்துவிட்டு தட்டை சமையல்கட்டில் கழுவி வைத்து விட்டு வந்தாள்.
அதன் பின் சித்துவிடம் வந்தவள் ,”அண்ணா சந்துக்கு இப்போ எந்த எந்த டேப்லட்ஸ் குடுக்கனும்” என கேட்க,
அவனோ கனவிலிருந்து விழிப்பவன் போல,”ஹான்..என்ன மா கேட்ட??” என பேந்த பேந்த முழித்தான்.
அதைப் பார்த்து பொங்கி வந்த சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டவள் ,”மாத்தரை மாத்தரை கலர் கலரா இருக்குமே சாப்பிட்டா கூட பாகற்காயை பல்லு விளக்காம சாப்பிட்டா ரொம்ப கசப்பா இருக்க மாதிரி இருக்குமே..இப்போ புரிஞ்சுதா அண்ணா??” என அவள் கிண்டல் செய்ய,
இவளுக்கு இன்று என்னானது என நினைத்துக் கொண்டே ,”இல்லை மா சந்து என் கிட்டையே ரொம்ப அடம் பண்ணி தான் மாத்திரை முழுங்குவா.. உனக்கு எதுக்கு சிரமம் நானே கொடுத்துக்கிறேன்” என சித்து மறுக்க,
“இதுல என்னண்ணா சிரமம் நீங்க கொடுங்க அவ சாப்பிடுவா” என அவனை வற்புறுத்தி மருந்தை அவனிடம் இருந்து வாங்கிக் கொண்டே விட்டாள் ஸ்ரீ.
அவ்வளவு நேரம் சமத்தாய் அவள் சொன்னதை செய்து கொண்டிருந்த சந்து மாத்திரை என்று வந்ததும் ,”எனக்கு வேணாம் நீ போ” என அடம் பிடிக்கும் முரட்டுக் குழந்தையாய் மாறிப் போனாள்.
“சந்து குட்டி இதை மட்டும் குடிச்சிட்டு நீங்க போய் தூங்குவீங்களாம் யாரும் உங்களை ஒன்னும் பண்ண மாட்டோம் ப்ளீஸ்” என கெஞ்ச,
சந்துவிற்கு அந்த மாத்திரையின் மீதிருந்த கடுப்பும் , சுற்றியிருந்த புதியவர்களைக் கண்டு பயமும் சேர என்ன செய்கிறோம் என தெரியாமல் பக்கத்திலிருந்த சிறிய பூஜாடியை எடுத்து எரிய,அது சரியாக ஸ்ரீயின் நெற்றியை பதம் பார்த்தது.
“லட்டு!!!” என ஹரியும் ,”சது!!” என சித்துவும் தங்கள் மனைவியிடம் விரைந்தனர்.
ஸ்ரீயின் நெற்றியில் அந்த கண்ணாடி ஜாடி உடைந்து ஆழமாக பதம் பார்க்க, இரத்தம் வழிய நின்றிருந்தவளின் அருகே பதறிப்போய் வந்த ஹரி ,”லட்டு வா ஹாஸ்பிடல் போலாம்” என தன் கைக்குட்டையை அவள் நெற்றியில் வைத்து கட்டிக்கொண்டே கூற,
“அதெல்லாம் வேண்டாம் ஹரி..இது நான் செஞ்ச தப்புக்கு கிடைச்ச மிகக் குறைவான தண்டனை.. இந்த வலி தான் எனக்கு இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு” என நெகிழ்ந்திருந்த குரலில் ஸ்ரீ கூற,
“ப்ச் லூசு மாதிரி உளறாம கிளம்பி வா, எவ்ளோ ரத்தம் போகுது பாரு” என இவனுக்கு அடிபட்டதைப் போல் அவன் வலியில் கூற,
அங்கு சந்துவோ ரத்தத்தைக் கண்டு எப்போதும் போல் பயந்து போனவள் சித்துவிடம் ஒன்றிக் கொண்டே, ஸ்ரீயை பயத்துடன் ஏறிட, அந்தப்பார்வை ஸ்ரீயின் உயிர் வரை சென்று தாக்கியது.
தன் வலியை மறைத்துக் கொண்டு புன்னகை பூத்த ஸ்ரீ, அவள் அருகில் சென்று “சந்து இப்போவாச்சும் இந்த மாத்திரையை சாப்பிடுறியா?? நீ சாப்பிடலைன்னா இன்னும் எனக்கு வலிக்கும்” என இன்னும் ரத்தம் வழிந்து கொண்டிருந்த தன் நெற்றியைத் தொட்டுக் காட்டி ஸ்ரீ பாவமாக கூறினாள்.
ஸ்ரீயின் இந்த அவதாரம் அந்த குடும்பத்திற்கே புதிதாக இருந்தது. அவளுக்கு இவ்வளவு பொறுமை எங்கிருந்து வந்தது என புரியாமல் குழம்பிப் போய் நிற்க,
வர்ஷூவோ ஆச்சரியத்தில் கார்த்திக்கிடம் ,”ஏய் உன் அத்தை பெத்த ரத்தினத்துக்கு முட்டையை எதும் மந்திருச்சு வச்சுட்டிங்களா அண்ணனும் தம்பியும்..அவளாம் ஒருத்தி தெரியாம அவளோட துப்பட்டாவை கிளிச்சதுக்கு அந்த பொண்ணோட அஞ்சாயிரம் ரூபாய் சுடிதாரை ஓட்டை போட்டுட்டு வந்தவ டா..இன்னைக்கு அவ மண்டையே உடைஞ்சு போய் இருக்கு ஈன்னு இழிச்சுக்கிட்டு இவ மறுபடியும் மாத்திரை தின்னுட்டு திரும்ப என் மண்டையை உடைன்னு சொல்லுவா போலயே” என அவள் புலம்ப,
அவனோ அவள் தன்னிடம் பேசியதை ஆவென பார்த்துக் கொண்டிருந்தான்.
என்ன ஒன்னும் பதிலில்லை என திரும்பி பார்த்த வர்ஷூ அவன் தன்னையே விழுங்கி விடுவதைப் போல் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு தலையிலே அடித்துக் கொண்டவள் “திருந்தாத ஜென்மம் உன் கிட்ட போய் சொன்னேன் பாரு” என அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
பயத்தில் இருந்த சந்து அவள் சிரித்ததும் சற்று தெளிவடைந்தவள் அவள் கொடுத்த மாத்திரையை எந்த அடமும் செய்யாமல் சுழித்த முகத்துடனே குடித்து முடித்தாள்.
அதைக் கண்டு ஸ்ரீ திருப்தியாக புன்னகைக்க, மெதுவாக அவள் அருகில் வந்த சந்து காயமடைந்த அவள் நெற்றியை மெதுவாக வருடிக் கொடுக்க,
ஸ்ரீக்கு அவள் செய்கையில் முனுக்கென்று கண்ணீர் வந்துவிட்டது, தான் அழுதால் அது சந்துவையும் ஹரியையும் இன்னும் பாதிக்கும் என நினைத்தவள் குனிந்து கண்ணீரை மறைத்துக் கொண்டாள்.
அதன் பின் சந்துவை உறங்க வைக்க, சித்து அழைத்துச் சென்று விட,
ஹரி ஸ்ரீக்கு தானே மருந்திட்டுக் கொண்டிருக்க, குடும்பத்தார் அனைவரும் அவளிடம் முன்பு போல் பேச முயற்சித்துக் கொண்டிருந்தனர்.
என்னதான் ஹரி அனைத்தையும் மறந்து விடுமாறு கூறினாலும் அவர்களைனவருக்கும் தங்களால் தான் சந்து,ஸ்ரீயின் வாழ்க்கை திசை மாறிப் போய்விட்டது என்ற குற்றவுணர்ச்சி இன்னும் மனதை அரித்துக் கொண்டிருந்ததால் இருவரிடமும் பேசத் தயங்கினர்.
அவளிற்கு மருந்திட்டு முடித்த ஹரி அவளை அறைக்குள் அழைத்துச் சென்று கட்டிலில் படுக்க வைத்தவன் ,”ரெஸ்ட் எடு மா” என கூறிவிட்டு அவள் அருகிலே அமர்ந்து தன் லேப்டாப்பை எடுத்து அலுவலகத்தில் குவிந்து கிடந்த வேலைகளை இங்கிருந்தே செய்ய ஆரம்பித்தான்.
ஸ்ரீயோ உறங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அதை உணர்ந்த ஹரி திரையிலிருந்து கண்களை விலக்காமலே “தூங்கு ஸ்ரீ ரொம்ப வலிக்கும் இல்லைன்னா” எனக்கூற,
லட்டு இப்போது ஸ்ரீயாக மாறியிருந்ததை மனதில் குறித்துக் கொண்ட ஸ்ரீ அவனைப் பார்த்து ,”ஏன் ஹரி நானும் சந்துவும் எப்படி திடீர்னு க்ளோஸ் ஆனோம்னு உனக்கு கேட்க தோணலையா??” என தன் மனதில் அரித்துக் கொண்டிருந்ததைக் கேட்க,
அவனோ அவளை திரும்பிப் பார்க்க, அந்த பார்வையில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியாத ஸ்ரீ என்னவென கேட்டாள்.
“உனக்கா சொல்லனும்னு தோணுச்சுனா சொல்லு ஸ்ரீ இல்லைனா விடு..நீ நான் வேணாம்னு கிளம்பிப் போனப்போவே உன்னை கேள்வி கேட்குற உரிமையை நான் இழந்துட்டேன்” என்றவனின் குரலிலிருந்தது கோபமா ஆற்றாமையா என அவளால் பிரித்தரிய முடியவில்லை.
அவனுக்கு இன்னமும் அவள் அவனை விட்டுச் சென்றது உள்ளே வலியைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அவளுக்கு அடிபட்டதும் உள்ளம் பதற தன்னையும் மறந்து தன் கோபத்தையும் மறந்தே அவளிடம் சென்றிருந்தான் இருந்தும் ஒரு கணவனாய் அவளின் செயல் அவனை மிகவும் காயப்படுத்தியிருக்க அதை வெளிப்படுத்தி அவளை சாட மனம் வராமல் அவளுக்கு ஒரு தாயாய் இருந்து செய்ய வேண்டிய கடமைகளை மட்டும் மறக்காமல் செய்து கொண்டிருந்தான்.
“என் மேல கோவமா ஹரி??” என அவள் மெதுவாக கேட்க,
அவன் பதிலேதும் பேசவில்லை அமைதியாக அமர்ந்திருந்தான்.
“நான் ஏன் அப்படி பண்ணேன்னு கேட்க மாட்டியா??” என கேட்டவளின் குரல் இப்போது சற்று உள்ளே போயிருந்தது.
அவன் இப்போது அவள் புறம் திரும்பி ,”ஸ்ரீ பேசாம கண்ணை மூடி ரெஸ்ட் எடு.. நடந்ததை பத்தி பேசுறதுனால ஒன்னும் மாற போறது இல்லை ..அதுனால அதை பத்தி நினைச்சு உன்னை நீயே கஷ்ட படுத்திக்காம தூங்கு..” என தன்மையான குரலிலே கூறினான் ஹரி.
முன்பிருந்த ஸ்ரீ என்றால் எதையும் யோசிக்காமல் மீண்டும் அவனிடம் சண்டையிட தொடங்கியிருப்பாள், ஆனால் இப்போது அவள் ஓரளிவிற்கு சற்றே யோசித்து செயல்படவேண்டும் என முடிவு செய்திருந்தமையால் அமைதியாக அவன் சொன்னது போல் கண்ணை மூடி படுத்துக் கொண்டாள்.
வாயை அடக்க முடிந்த அவளால் மனதை அடக்க முடியாமல் எண்ணங்கள் எங்கெங்கோ தறிகெட்டு ஓட அதன் விளைவாக மூடியிருந்த அவள் நயனங்களிலிருந்து கண்ணீர் முத்துக்கள் உருண்டோடி விழுந்தன.
என்னதான் வேலை செய்து கொண்டிருந்தாலும் அவள் மீதும் ஒரு கண்ணை வைத்திருந்தவனுக்கு அவள் கண்ணீர் அவன் பார்வையிலிருந்து தப்பவில்லை.
“அப்படி என்ன தான் டி உன் மனசுல இருக்கு.. எதுக்கு என்னையும் கஷ்டப்படுத்தி உன்னையும் இப்படி வதைச்சுக்கிற .. ஏன் டி என்மேல இவ்ளோ பைத்தியம் உனக்கு??” என மௌனமாக தன் மனதில் கேட்டுக் கொண்டவனின் மனம் முழுக்க ரணமாக வலித்தது.
மருந்தின் வீரியத்தில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த ஸ்ரீயின் அருகிலே அவள் கையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த ஹரி, அவளின் குழந்தை முகத்தையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது திடீரென்று அவள் தூக்கத்தில் ,”எனக்கு ஆதுவை(ஆதிரா) விட சந்துவைத் தான் பிடிக்கும் ஹரி” என உளற,
‘இது என்ன புதுக்கதை’ என ஹரி அவளின் கூற்றில் அதிர்ந்திருந்தான்..
சற்று நேரத்திற்க்கெல்லாம் மீண்டும் அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருக்க, அவள் புருவங்கள் சுருங்க,அவள் முகம் மீண்டும் கசங்கியது ..
ஏதாவது கெட்ட கனவு கண்டிருப்பாள் என நினைத்தவன் ஒரு கையால் அவள் கையை அழுத்திக் கொடுத்து , இன்னொரு கையால் அவள் தலையை மென்மையாக கோதிக் கொடுத்தான்.
அவள் மீண்டும் ஏதோ உளற அது அவனுக்கு புரியவில்லை.. எனவே அவள் அருகில் காதைக் கொண்டு போய் என்ன உளறுகிறாள் என கேட்க, அவள் கூறியதைக் கேட்டு அவன் மின்சாரம் தாக்கியதைப் போல் அதிர்ந்து வேகமாக தன் முகத்தை அவள் அருகில் இருந்து நிமிர்த்தினான்.
மீண்டும் அவள் உறங்கி விட, அவனுக்கு தான் அவள் கூறிய வார்த்தைகள் காதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்க, அவன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.
“உன்னைப் பத்தி எல்லாமே எனக்கு தான் தெரியும்னு நினைச்சிட்டு இருந்தேனே லட்டு..எனக்குக் கூடத் தெரியாம உன் கிட்ட பல ரகசியங்கள் இருக்கோன்னு தோணுது இப்போ..” என தனக்குள் கூறிக் கொண்டான்.
முன்பு பருவ வயதில் எதையும் யோசிக்காமல் செய்யும் ஹரி இப்போது தொலைந்து போயிருந்தான்..இப்போதிருக்கும் ஹரிக்கு எதையும் அலசி ஆராய்ந்து பொறுமையாக கையாள நினைக்கும் அளவிற்கு முதிர்ச்சி வந்திருந்ததால் அவன் இந்த விஷயத்தைப் யாருடைய மனதையும் காயப்படுத்தாமல் அனைத்தையும் தெரிந்து கொள்ள விளைந்தான்.
அவள் முகத்தை காதலுடன் பார்த்தவன் ,”இனி நமக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் லட்டு..நான் என்னைக்கும் உன் கூட இருப்பேன்” எனக்கூறியவன் அவள் முன் உச்சியில் முத்தமிட்டு விலகினான் மனதில் எடுத்த தீர்மாணத்தோடு.
அந்த சம்பவம் நடந்து மூன்று நாட்கள் கடந்திருந்தது. மூன்று நாட்களும் சந்துவும் ஸ்ரீயும் ஒட்டிக்கொண்டே அலைய, வீட்டிலிருப்போரோ அதை ஒரு எட்டவது அதிசயம் பார்த்துக் கொண்டிருந்தாலும் எப்படியோ நன்றாக இருந்தால் சரியென ஸ்ரீயிடம் சென்று என்னவென்று தோண்டித் துருவாமல் விட்டு விட்டனர்.
ஹரியும் அவள் அன்று தூக்கத்தில் உளறிய பின்பு அவளிடம் தன் வருத்தத்தைக் கூட மறைத்துக் கொண்டு நன்றாகவே பழகினான். அவளும் அடிபட்டிருப்பதினால் தோன்றிய பரிதாபத்தில் பேசுகிறான் என தோன்றினாலும் எப்படியோ அவன் பேசினால் போதும் என நினைத்துக் கொண்டவள் அவனிடம் பழைய ஸ்ரீயாகவே கலகலத்தாள்.
அதற்குப் பின் ஹரிக்கும் விஜய்க்கும் அலுவலகத்தில் வேலைகள் குவிந்து கிடந்ததால் மறுநாளே அங்கு கிளம்பி சென்று விட, கார்த்திக்கும் தன்னுடைய வேலையை கவனிக்க சென்று விடுவான்.
வர்ஷூவிற்கும், ஸ்ரீக்கும் ப்ராஜெக்ட் மட்டுமே மீதமிருப்பதால், கல்லூரிக்குச் சென்று வர அவசியமில்லை. எனவே அவர்கள் கிளம்பியதும் சந்துவை தங்கள் அறைக்குள் அழைத்துச் செல்லும் ஸ்ரீ மதியம் உணவு உண்ண அழைக்கும் வரை வெளியே வர மாட்டாள்.
இருவரும் பூட்டிய கதவிற்குள் அப்படி என்ன தான் செய்வார்கள் என வர்ஷூவிற்கும் சித்துவிற்கும் மண்டையை பிய்த்துக் கொள்ளலாம் போலிருக்கும்.சந்துவிடம் கேட்டுவிட வேண்டும் என நினைக்கும் சித்து அவள் வெளியே வரும்போது அவள் முகத்தில் என்றுமில்லாத அளவிற்கு தோன்றும் புன்னகையைக் கண்டு அப்படியே கேட்க நினைத்ததையே மறந்து விடுவான்.
எப்படியோ அவள் சந்தோஷமாக இருக்கிறாள் அது போதும் என வீட்டிலுள்ளோர் நினைத்து மகிழ்ந்து போவர்.
அன்று எப்போதும் போல் சந்து வெளியே வரும் போது அவளுக்கு வயிறு வலிப்பது போல் இருக்க, அவள் முகம் வலியில் சுருங்கியது.
அதைக் கண்ட ஸ்ரீ பதறி,”என்னாச்சு சந்து என்ன பண்ணுது??” என கேட்க,
சந்துவிற்குமே அவள் இருந்த நிலையில் இது பெண்களுக்கு நிகழும் மாதவிடாய் என்று சொல்லத் தெரியாமல், தனக்கு ஒவ்வொரு மாதமும் இப்படி வலிக்கும் போது ஏதேதோ செய்து தன்னை கவனித்துக் கொள்ளும் சித்துவை மனம் தேடியது.
அவள் சுற்றும் முற்றும் அவனைத் தேட, வர்ஷூவின் வீட்டிலிருந்து அப்போது தான் உள்ளே நுழைந்த சித்து அவளின் முகத்தை வைத்தே என்ன நடந்திருக்கும் என யூகித்தவன் ஆதரவாக அவள் தோள் மீது கையை போட்டு அணைத்தவன் அவள் கையை அழுத்திக் கொடுத்தான்.
அவன் வந்ததும் அவள் முகம் தெளிய, “வலிக்குது!!!” என சிறு பிள்ளை போல் முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல, அவன் மனம் அப்படியே உருகி விட்டது.
“சது செல்லம் ஒன்னும் இல்லை டா.. நான் தான் வந்துட்டேன்ல எல்லாம் சரியா போய்ரும்” என ஆறுதல் கூறியவன் அவளை அழைத்துக் கொண்டு தங்கள் அறைக்குள் நுழையப் போக,
“அண்ணா அவளுக்கு என்னாச்சு??” என ஸ்ரீ பயத்துடன் கேட்க,
அவனுக்கு இதை எப்படி அவளிடம் சொல்வது என முதலில் தடுமாறியவன் பின்,” அந்த மூனு நாள் வலி தான் மா வேற ஒன்னும் இல்லை” என நாசூக்காக அவன் பதிலளித்தான்.
“ஓஹ் அதானா நான் கூட பயந்துட்டேன்.. அவளை என் கூட அனுப்புங்க அண்ணா நான் பார்த்துக்குறேன்” என அவள் பெண்கள் சமாச்சாரம் அவனுக்கு சிரமமாக இருக்கும் என்ற நினைப்பில் கூற,
சந்துவோ எங்கே அவன் தன்னை தனியாக விட்டு சென்று விடுவானோ என சட்டையை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.
என்னதான் அவள் ஸ்ரீயிடம் இப்போது நன்றாக பழகினாலும், வலி என்று வரும் போது தாய் மடி சேரும் பிள்ளையாய் அவள் மனம் தன்னவனைத் தவிர யாரையும் எதிர்பார்க்கவில்லை.
இத்தனை வருடங்களாக தன்னை கண்ணும் கருத்துமாக கவனித்து வரும் சித்துவே அவளுக்கு தாயுமானவனாகிப் போனதால், அவள் அவனை விட்டு நகராமல் இன்னும் ஒண்டிக் கொண்டாள்.
அவளை புரிந்து கொண்ட சித்துவும் ,”பரவாயில்லை மா நான் பர்த்துக்குறேன்” என்று கூறியவன் அவள் மறுத்துக் கூறும் முன் சந்துவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றிருந்தான்.
ஸ்ரீக்கு தான் கொஞ்சம் சங்கடமாக இருந்தது , ஏனென்றால் ஹரி அனைவரிடமும் அங்கு ஒரு லேடி நர்ஸ் இருந்ததாக கூறியதால் அவளின் இந்த சமயங்களில் அவர் தான் சந்துவிற்கு உதவி புரிந்திருப்பார் என நம்பியவள் இப்போது அண்ணா என்ன செய்ய போகிறார்கள் என கவலையுடனே அவர்கள் ரூமையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பாவம் அவளுக்கு என்ன தெரியும் நர்ஸை சந்துவின் அருகில் கூட வர விடாமல் அவளுக்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்து அவளுக்கு தாயும் தந்தையுமாய் விளங்கியது சித்து என்று.
உள்ளே வந்தவன் சந்துவை அழைத்துக் கொண்டு போய் அவளுக்கு முதலில் தலைக்கு வெண் தண்ணீர் ஊற்றி குளிக்க வைத்தவன் பின்பு பேடை(pad) வைத்து விட்டுவிட்டு ஒரு காட்டன் பாவடை சட்டையை அணிவித்து விட்டவன் அவளை வெளியே கூட்டிக் கொண்டு அமர வைத்து தலையை நன்றாக துவட்டி விட்டான்.
அவனின் இந்த அந்தனை செய்கைகளிலும் காதலையும் தாண்டி தாய்மையே அதிகம் இருந்தது என்று சொன்னால் மிகையாகது.
என்னதான் அவளுக்கு தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டாலும் , அவளை தன் குழந்தையாகத் தான் பாவித்து வருகிறான் அந்த தாயுமானவனாகிய தலைவன்.
அவனும் ஒரு சாதரண மனிதன் தானே தான் காதலித்து தொட்டு தாலி கட்டிய மனைவியின் ஆரம்பத்தில் எப்போதாவது அவனையும் மீறி அவள்பால் அவனுக்கு தோன்றும் உணர்ச்சிகளை சட்டென்று கட்டுக்குள் கொண்டு வந்து விடுவான். பின் அவள் இந்த நிலமையில் இருக்கும் போது தான் இப்படி உணர்ச்சிகளின் பிடியில் சிக்கித் தவிப்பது எவ்வளவு கேவலம் என தன்னைக் குறித்தே அவமானமாக தோன்றும் அவனுக்கு.. அப்போது அவனுக்கும் சிறிய வயது என்பதாலும் முதலில் தடுமாறினாலும் அடுத்த நிமிடமே அவள் மேல் உள்ள காதல் முன்னே வந்து அவனை கட்டுப்படுத்திவிடும். பின்பு இப்போது நாட்கள் ஓட ஓட அவனுடைய உணர்ச்சிகளை மொத்தமாக தன் கட்டுக்குள் கொண்டு வந்தவன் இப்போது முழுநேரமும் அவளுக்கு ஒரு தாயாகவே நடந்து கொண்டிருக்கிறான் அந்த பாசமிகு காதலன்.
அவன் கதவைத் திறந்ததும் ஸ்ரீ வேகமாக உள்ளே எட்டிப்பார்க்க, சித்துவிற்கு சிரிப்பு வந்துவிட்டது.
அதை அடக்கிக் கொண்டு “நீ போய் அவகிட்ட பேசிகிட்டு இரும்மா..நான் அவளுக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன்” என்று கூறியவன் சமயலறைக்குள் சென்று முதலில் அவளுக்கு ஒரு மாதுளம் பழச்சாறை தயார் செய்தான்.
அவனுடைய மாமியார்கள் தாங்கள் செய்து தருகிறோம் என எவ்வளவு கூறியும் மறுத்துவிட்டவன் ,தன் மனைவிக்கு அனைத்தையும் நான் தான் செய்வேன் எனக் கூறி கண்ணடித்துவிட்டு பழச்சாறை அவளிடம் சென்று கொடுத்து பருக வைத்தான்.
அவள் மறுத்தாலும் அவளை கடைசி சொட்டு வரை குடிக்க வைத்து விட்டே அவன் கிளம்ப, அங்கு அமர்ந்திருந்த ஸ்ரீக்கும் உள்ளே வந்த வர்ஷூவிற்கும் சித்துவை நினைத்து பெருமையாக இருந்தது.
அதன் பின் அவனே சென்று அவளுக்கு இந்த வயிறு வலிக்கு உகந்ததாக வெந்தயம் போட்டு சாம்பார் வைத்தவன் , சாப்பாட்டையும் ஒரு டம்ளரில் மோரையும் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
சந்து அதுவரை ஸ்ரீ வர்ஷூ பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தவள் இப்போது அவன் வரவும் ஸ்ரீயின் அருகில் போய் அமர்ந்து கொண்டாள்.
இவ்ளோ நேரம் நல்லாதான இருந்தா இப்போ என்ன ஆச்சு என ஸ்ரீயும் வர்ஷூவும் புரியாமல் பார்க்க, புன்னகையுடன் அவர்கள் அருகில் வந்தவன் ,”மேடம்க்கு வெந்தயம் பிடிக்காது இப்போ நான் கண்டிப்பா வெந்தய சாம்பார் தான் செஞ்சு கொண்டு வந்திருக்கேன்னு அவளுக்கு தெரியும் அதான் உஷாரா உங்க பக்கத்துல வந்து உட்கார்ந்துகிட்டா” என்று வாய் அவர்களுக்கு பதிலளித்தாலும் பார்வை என்னமோ சந்துவிடம் தான் இருந்தது.
“வேண்டாம் உவ்வே” என சந்து மறுக்க ஸ்ரீக்கு சிரிப்பு வந்துவிட்டது, வர்ஷூவோ தன் அண்ணனை அதிசயமாக பார்த்தவள் ,”டேய் அண்ணா உனக்கு வெங்காயத்துக்கும் வெந்தயத்துக்கும் வித்தியாசமே தெரியாதே டா..எப்போ இருந்து சமைக்க கத்துக்கிட்ட” என சொல்ல,
அப்போது தான் ஸ்ரீக்கும் அவன் வர்ஷூவின் உடன் பிறப்பு என மண்டையில் உரைக்க, தங்கச்சியே இப்படி சமையல் பண்ணா அப்போ அண்ணன்??? அதான் சந்து பயப்படுறாளோ?? என நினைத்தவள் “அண்ணா நிஜமாவே உங்களுக்கு சமைக்க தெரியும் தான?? நான் வேணும்னா பாட்டியை சமைக்க சொல்றேன்” என அவள் பயத்துடன் கூற,
அவள் முகம் போன போக்கைக் கண்டு சிரித்தவன் ஒரு வாயை உருட்டி அவள் கைகளில் தந்தான் “எப்படி இருக்குனு பாரு மா” எனக்கூற,
பயத்துடனே கொஞ்சமாக அதை சுவைத்தவள் , பிரம்மிப்பில் கண்களை விரித்து ,”நிஜமாவே நீங்க வர்ஷூவோட அண்ணா தானா ??” என கேட்க,
அவன் வாய்விட்டு சிரித்துவிட, வர்ஷூவோ ஸ்ரீயின் மண்டையில் நங்கென கொட்டியவள் ,” இருடி நைட் உனக்கு குக்கர்ல குடைமிளகாய் பஜ்ஜி செஞ்சு உன் வாயை அடைக்கிறேன்” என மிரட்டினாள்.
அது வரையில் சிரித்துக் கொண்டிருந்த சந்து அவன் தனக்கு ஊட்ட வரவும் , முகத்தை சுழித்து வேண்டாம் என பின்னால் சென்றாள்.
அவனா விடுபவன் அவனும் ஏதேதோ பேசி, விளையாட்டு காண்பித்து அவள் கவனத்தை திசை திருப்பி முக்கால்வாசி உணவை அவள் வாய்க்குள் அனுப்பிவிட,
அடுத்த வாய் ஊட்ட வரும் போது அவள் அனைத்தையும் அவன் மீதே துப்பியிருந்தாள்.
இது எப்போதும் நடக்கும் ஒன்று தான், சிலரின் உடல் வாகு அப்படி இந்த சமயத்தில் எது சாப்பிட்டாலும் அதை வயிறு உள்ளே அனுமதிக்காமல் வெளியே தள்ளி விடும்.
சந்துவிற்கும் அப்படித் தான்.
இவள் என்ன தான் வாந்தி எடுத்தாலும் கொஞ்சமாவது அவள் வயிற்றிற்க்குள் சென்றிருக்குமே என அவனும் வேளாவேளைக்கு சாப்பாடை அவள் மறுத்தாலும் ஊட்டி விட்டு அவள் வாந்தி எடுப்பதையும் ஏதோ வெகுமதி கிடைத்ததைப் போல் புன்னகையோட வாங்கிக் கொள்வான்.
இன்றும் அவள் அனைத்தையும் அவன் மீதே எடுத்துவிட, அவன் கொஞ்சம் கூட முகம் சுழிக்காமல் ,”கொஞ்சமாச்சும் இந்த குட்டி வயிறுக்குள்ள போச்சே” என சிரிப்புடன் கூறிவிட்டு பாத்ரூமிற்குள் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டவன் அவளின் முகத்தையும் கழுவி துடைத்து விட்டான்.
அதன் பின் அவளுக்கு மோரை குடுக்க, அதை சமத்தாக அவள் வாங்கி குடித்து விட்டு அவனிடம் காலி டம்ளரை கொடுக்க, அதையும் தட்டையும் கழுவி வைத்துவிட்டு வந்தவன் அவளை மெத்தையில் அமரச் சொல்லி அவள் வலிக்கு இதமாக கால்களை பிடித்து விட, அவள் அப்படியே மெது மெதுவாக கண்ணயர்ந்தாள்.
இவை அனைத்தையும் ஸ்ரீ , வர்ஷூ மட்டுமல்லாமல் மற்றவர்களும் பார்த்து சித்துவின் அன்பில் உருகித் தான் போனார்கள்.
இப்படி ஒரு நல்லவன் கையில் அவள் சேரத்தான் இத்தனை துன்பங்களை அனுபவித்தாளோ என்று கூட அவர்களை எண்ண வைத்தது சந்துவின் மேலுள்ள சித்துவின் காதல்.
இனி சந்துவைப் பற்றி கவலையில்லை அவளை அவன் பத்திரமாகப் பார்த்துக் கொள்வான் என்ற நிம்மதி அனைவர் மனதிலும் தோன்ற, அவர்களை தொல்லை செய்யாமல் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.
தங்கள் அறைக்கு வந்த வர்ஷூவிற்கு முகமெல்லாம் கோபத்தில் தக்காளி பழம் போல் சிவந்திருந்தது. அதற்குக் காரணம் அவள் கணவனே என்று சொன்னால் மிகையாகாது.
தன் அண்ணன் சந்துவிற்கு செய்ததெல்லாம் அவள் கண்முன் படம் போல் ஓடிக் கொண்டிருக்க, தான் இவ்வாறு மாதவிடாய் பிரச்சனையால் அவதி பட்ட போது கார்த்திக் பண்ணிய அலும்பும் அவள் மனதில் தோன்றியதே அவள் கோபத்திற்கு காரணம்.
அப்போது வர்ஷூ முன்றாம் ஆண்டு இறுதியில் படித்துக் கொண்டு இருந்தாள்.
மாதாமாதம் யாருக்கும் தெரியாமல் அவளை வந்து சந்தித்து விட்டுச் செல்வான் கார்த்திக்.
அவள் பெற்றோரிடம் தன் மனைவிக்கு தானே அனைத்தையும் செய்வேன் என கூறி விட்டதால், மாதம் ஒரு நாள் வந்து அவளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பவன் கையில் செலவிற்கு பணம் கொடுத்தால் வாங்க மாட்டாள் என அவளுக்காக வாங்கி வைத்திருக்கும் திண்பண்டங்களுக்குள் பணத்தை வைத்து அனுப்பி விடுவது அவன் வழக்கம்.
அன்று முழுதும் அவள் பேசவில்லை என்றாலும் இவன் ஏதாவது மொக்கை போட்டுக் கொண்டு அவள் காதை பஞ்சர் ஆக்காமல் விட மாட்டான்.
அன்று அவளுக்கு வயிற்றுவலி போட்டு பாடாய் படுத்தியது, இருந்தும் போகவில்லை என்றால் அவன் வருந்துவான் என நினைத்து அவள் வலியுடனே அவனைப் பார்க்க கிளம்பிச் சென்றாள்.
அவள் வந்ததும் அவளை அழைத்துக் கொண்டு தாங்கள் எப்போதும் செல்லும் தன் அசிஸ்டென்ட் வீட்டிற்கு சென்று அவளிற்கு வாங்கி வந்ததைக் கொடுத்தான்.
அவள் அதை வாங்கி வைத்துவிட்டு சோர்வாக அமர, அவன் அவளிடம் ,”என்னாச்சு வர்ஷூ” என பாசமாக கேட்டான்,
அவளோ அவன் இரு தங்கைகளுடன் வளர்ந்ததால் இதை புரிந்து கொள்வான் என நினைத்து ,”வயிறு வலி ” என்று மட்டும் கூறினாள்.
அந்த லூசோ ,”நல்லா செனப்பன்னி மாதிரி கிடைக்கிறதெல்லாம் தின்னா வயிறு வலிக்காம” என முனுமுனுக்க, அவன் நேரம் வீட்டில் ஓடிக்கொண்டிருந்த அந்த ஓட்டை ஃபேன் கரன்ட் இல்லாமல் நின்று போனதில் இவன் கூறியது அவள் காதில் தெள்ளத் தெளிவாக விழுந்தது.
அவள் அவன் கூறியதைக் கேட்டு பத்ரகாளியாக முறைக்க, உஷாரன கார்த்திக் ,”அதில்லைமா நான் வரும்போது ஒரு பன்னி கண்டதெல்லாம் தின்னுகிட்டு அப்படியே ரோட்டுல விழுந்து கிடந்துச்சா அதான் அதை பொலம்பிட்டு இருந்தேன்.. ஆமா உனக்கு எதுக்கு வயிறு வலி கேஸ் ட்ரபிலா??” எனக் கேட்க,
அவளுக்கு வந்ததே கோபம் ,”பேசாம என்னை கொண்டு போய் ஹாஸ்டல்ல விடு.. என் கோபத்தை கிளப்பாத” என அவள் கடுப்புடன் கூற,
“எதுக்கு வயிறு வலின்னு தான கேட்டோம் எதுக்கு இப்படி டென்ஷன் ஆகுறா” என அவன் குழம்ப,
பெண்களுக்கு இந்த சமயத்தில் ஹார்மோன்களின் கோளாறுகளால் கோபம் , வருத்தம், ஆங்காரம் என அனைத்து உணர்ச்சிகளும் கட்டுக்கடங்காமல் வரும் என்பது இன்னும் பல ஆண்களுக்கு புரியாததால் தான் பல பிரச்சனைகள் உருவாகின்றன.
கார்த்திக்கும் அந்த கட்சியை சேர்ந்தவன் என்பதால் மீண்டும் தன் வாயை வைத்துக் கொண்டு அமைதியாக இருக்காமல் ,”ப்ரேமம் படம் பார்த்ததுல இருந்து சாய்பல்லவி மேல க்ரஷ்னு சொன்னதுக்காக இப்படியா நீயும் முகமெல்லாம் பருவை வளர்த்துட்டு வருவ வர்ஷூ டார்லிங்?? அதெல்லாம் சாய்பல்லவிக்கு தான் நச்சுன்னு இருந்துச்சு உனக்கு ஏதோ நோய் வந்த மாதிரி இருக்கு” என விளையாட்டாக கிண்டல் பண்ண,
அது அவள் மனதை மிகவும் பாதித்தது.
பெண்களின் இந்த சமயத்தில் மனம் மிகவும் பலவீனமாக இருக்கும், சாதரண கேலியைக் கூட அவர்கள் மனம் பூதாகரமாக யோசித்து அவர்களை மேலும் வருத்தி மற்றவர்களையும் காயமுறச் செய்வர்.
வர்ஷூவும் அன்று அந்த மனநிலையில் அவன் இவ்வாறு சொல்லவும் ,’அப்போ இவனுக்கு என்ன பிடிக்கலை கட்டாயத்துல தான் என்னை கல்யாணம் பண்ணிருக்கான்’ என தாறுமாறாக சிந்தித்தவள் ,”அப்போ அந்த சாய் பல்லவி கூடவே போய் பஜனை பாடு என்னை ஆளை விடு” என கத்தியவள் அங்கிருந்து வேகமாக வெளியேற,
அவனும் அவளின் கோபத்திற்கான காரணம் தெரியாமல் அவள் பின்னாலே துரத்திக் கொண்டு ஓடினான்.
அந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தவள் , இப்போது கண்ணாடி முன்னே சென்று நின்று கொண்டு தன் முகத்தை இடமும் வலமும் திருப்பிப் பார்த்தாள்.
இப்போது முகப்பருக்கள் ஏதுமின்றி முகம் பளிங்கு போல் இருக்க, அவள் இதழில் ஒரு மந்தகாசப் புன்னகை தோன்றியது.
ஏன் அவனுக்கு பிடித்தது போல் தான் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம் என அவள் மனம் யோசித்திருந்தால் அவன் மீது அவளுக்கு மலர்ந்துல்ல காதலைப் பற்றி தெரிந்திருக்கும்.இனிமேல் வரும் பிரச்சனைகளையும் சமாளித்திருப்பார்கள்!!! விதி யாரை விட்டது!!!

