Loading

தேடல் 19:

மொத்த வீடுமே நிசப்த வெள்ளத்தில் மூழ்கி கிடக்க, மெல்ல எட்டி எட்டி பார்த்தபடியே உள்ளே நுழைந்தான் அக்னி. வாசலில் நுழையும் போதே தெரிந்தது மொத்த குடும்பமும் முற்றத்தில் தான் கூடி இருக்கிறதென்று. ஆனாலும் எவரும் பேசிக் கொள்வதைப் போல் தெரியவில்லை. அப்படி ஒரு அமைதி. அதை இடையிடையே குலைக்கும் விதமாக சில கிசுகிசுப்பு குரல்கள்.

அத்தனை பேருக்கும் நடுவில் அவனின் கண்ணில் முதலில் பட்டது என்னவோ ரகசிய குரலில் திவ்யாவிடம் ஏதோ கிசுகிசுத்துக் கொண்டிருந்த இசைதான். “இந்த ரணகளத்திலயும் இவனுக்கு மட்டும் ஒரு குதூகலம் கேக்குது பாரேன்…” என்றெண்ணியவன் பார்வையை சுழற்ற, ஆளுக்கு ஒரு தூணாய் பிடித்துக் கொண்டு அத்தையர் மூவரும் மூக்கை சிந்திக் கொண்டிருந்தனர். அவர்களின் கணவன்மார்களும் மக்களும் அருகில் ஆறுதல் படுத்தும் விதமாக நின்றுக் கொண்டிருந்தனர்.

“ஏதோ என் பொண்ணு நிச்சயம் நின்னு போச்சேனு பெரியத்த அழுதா அதுல ஒரு நியாயம் இருக்கு… இதுங்க இரண்டும் எதுக்கு  இப்போ ஓவர் ஒப்பாரி வைச்சு ஊரக் கூட்டுதுங்க…” என்று எண்ணியவாறே அவன் தனாவை தேட சிக்கியது எண்ணவோ கற்பகம் பாட்டிதான். அவர் தம் மகள்களை முறைத்துக் பார்த்துக் கொண்டிருக்க, அவருக்கு பின்னே தெய்வாவோ எரிச்சல் மண்டிய பார்வையோடு  நாத்தனார்களை பார்த்துக் கொண்டிருக்க, அவருக்கும் பின்னே பாதி ஒளிந்துக் கொண்டிருந்த சித்ரா மௌனமாக கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தார். மீண்டும் அவன் தனாவை தேட அவர்களை தான்டி அவனின் கண்களுக்கு சித்தப்பரும் தெரியவில்லை. அவனின் எட்டப்பரும் தெரியவில்லை.

“ஸ்ஸ்ஸ்… ஸ்ஸ்ஸ்…” மெல்லிய சத்தம் எழுப்பி அவன் பாட்டியை அழைக்க சிலபல ஸ்ஸ்ஸ்ஸ்களுக்கு பிறகே அவனை கவனித்தார் அவர். ‘என்ன’ என்று அவர் கண்களாலேயே வினவ, ‘தனா எங்கே..?’ என இவனும் கண்களாலேயே கேட்க, ‘அங்கே..’ என முற்றத்துக்கு நடுவே கண்ணைக் காட்டினார்.

அங்கே தனாவோ அப்பாவியாய் முகத்தை வைத்து தனது அண்ணனையும் அக்காக்களையும் மாறி மாறி ஓரக் கண்ணால் பார்த்தபடி தவறு செய்த குழந்தையாய் தலை குனிந்து நின்றிருக்க, ஜெயாவோ கடுகடுவென்ற முகத்தோடும், ‘எப்போதடா அக்னி வருவான்… அவனை வறுத்தெடுக்கலாம்…’ என்ற எண்ணத்தோடும் அவரின் வழக்கமான மரநாற்காலியில் தோரனையாய் அமர்ந்திருந்தார்.

“அப்பா… அக்னி வந்துட்டான்…” இசைதான் அவன் வந்து நின்றிருப்பதை கவனித்து தந்தையிடம் சொன்னான்..

“டேய் அண்ணா… ஏன்டா… ஏன்…” என்ற பார்வையோடே அக்னி காலை நொண்டியபடியே  தனாவின் அருகில் போய் அவரைப் போலவே தலை கவிழ்த்து நின்றுக் கொண்டான்.

“யோவ்… சித்தப்பு… எத்தன தடவ சொல்லிக் கொடுத்தேன்… எப்படி நடிக்கனுமுனு… இப்படி சொதப்பிட்டியே சித்தப்பு…”

“டேய் மவனே… எப்படி நடிக்கனுமுனு சொல்லிக் கொடுத்தியே… சூசூவ எப்படி அடக்கனுமுனு சொல்லிக் கொடுத்தியா..? உன் அப்பன் என்னடானா… பாசமழைய பொழியறேனு… அந்தாண்ட இந்தாண்ட நகராம பக்கதுலேயே உக்காந்துட்டாரு… லைட்டா அசைஞ்சா கூட என்னடா தம்பி… தங்க கம்பினு உயிர வாங்கிட்டாரு… நானும் எவ்வளவு நேரம் தான் அடக்க… அப்போதான் டாக்டர் கூப்பிட்டாருனு உக்க அப்பா போனாறா… நானும் வெறிக் கொண்ட வேங்கையா… சினம் கொண்ட சிங்கமா பாத்ரூமா நோக்கி பாஞ்சேனா… போன உங்கப்பன் எக்ஸ்ரே ரிப்போட்ட மறந்துட்டேனு திறம்ப வந்தானா… மாட்டிக்கிட்டேன்…” என அவர் பாவமாய் பார்க்க, அவனோ அவரை பார்வையாலேயே காறி துப்பிக் கொண்டிருந்தான்.

அவர்கள் இருவரும் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டிருக்க, “ம்ம்கூம்…” என்ற செறுமலோடு ஜெயா பேச ஆரம்பிக்க, ‘இந்த சேர தூக்கி போட்டு உடைக்கனும் முதல… என்னமோ இதுல உக்காந்துட்டாலே தன்ன நாட்டமை பட விஜக்குமாரா நினைச்சுடுறாரு இவரு…’ மனதில் கறுவிக் கொண்டே அந்த நாற்காலியை தான் பார்த்திருந்தான் அவன்.

“என்னடா…” என அவர் ஆரம்பிக்கவும் அனிச்சை செயலாய், விஜயகுமாரின் குரலில் ‘ஏன்றா…’ என்றுதான் கேட்டு தொலைக்கிறது பாவம் அவனுக்கு.

“என்னடா காரியம் பண்ணி வச்சு இருக்க… இதுல இவன வேற கூட்டு சேர்த்து இருக்க… அறிவில்ல உனக்கு… கல்யாணம்னு சொன்னப்ப மண்டைய மண்டைய ஆட்டுன தானே… அப்புறம் என்னடா வந்து தொலைச்சுது உனக்கு… இல்ல நீயும் உன் நொண்ணங்காரன  மாதிரி கண்ட கழுதையும் காதலிக்கறியோ..? அப்படி மட்டும் வந்து நின்னு பாரு… அப்போ தெரியும் செய்தி…” அவர் சொல்லவும் திவ்யாவின் கண்களில் முனுக்கென்று கண்ணீர் சுரந்துவிட்டது. அவருமே அவளை சாட  வேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கனவே பெரிய மகனின் மீது இருந்த அதிருப்தி. இப்போது சின்ன மகனும் அவ்வாறு நடந்துக் கொள்ள, தன்னை அறியாமல் வார்த்தை வெளிப்பட்டு விட்டது.

“இப்போ எதுக்கு திவ்யாவ பேசறீங்கப்பா… திவ்யாவுக்கும் இசைக்கும் இதுல என்ன சம்பந்தம் இருக்கு… அதுவும் இல்லாம திவ்யா கண்டவ இல்ல… எங்க சொந்த தாய்மாமன் பொண்ணு… அதுவும் கட்டிக்க எல்லா உரிமையும் உள்ள பொண்ணு… இப்போ இதுல என்ன தப்பு கண்டுட்டீங்க நீங்க…” அவன் அழுத்தம் திருத்தமாக வினவ, இசை என்னவோ அமைதியாக தான் நின்றிருந்தான்.

பின்னே அவன் திவ்யாவிற்காய் பேச போய், “பாத்தியாண்ணே… கல்யாணம் ஆன ஒரே நாள்ல எப்படி பொண்டாட்டிக்கு வரிஞ்சு கட்டிட்டு வரானு… இத தானே நாங்களும் அப்போ சொன்னோம்… அதேப் போல ஆகிப்போச்சு பாத்தில…” என அவன் அத்தைமார்கள் ஒருபக்கம் குதிக்க, “பொடி பயல பேசவிட்டு பாத்துட்டு இருகியளா மச்சான்… அப்புறம் எங்களுக்கு என்ன மரியாதை… இப்பவே கிளம்பறோம் நாங்க…” என்று சம்பந்தமே இல்லாமல் அவனின் மாமன்களும் மறுபக்கம் குதிக்க ஆரம்பித்து விடுவார்களே!

“அப்போ நாங்க எல்லாம் கண்டவங்க… எங்களுக்கு இந்த வீட்டுல பொண்ண குடுக்க எந்த உரிமையும் இல்ல… அதனால தான் இந்த நிச்சயத்த நிறுத்த இப்படி பண்ண… அப்படிதானேடா…” அதுவரை தூணோடு தூணாக மூக்கை சிந்திக் கொண்டிருந்த ஆதி லட்சுமி எழுந்து, மூக்கை சிந்தி அதே தூணில் துடைத்து விட்டு, முந்தானைய ஒரு உதறு உதறி இடுப்பில் சொறுகிக் கொண்டு தம் தமக்கைகளை பார்க்க, அவர்களும் அதே தோரனையில் எழுந்து நின்றனர்.

“ஐய்யையோ பெரியத்தை… நான் எப்போ அப்படி சொன்னேன்… நீங்களா ஏன் தப்பும் தவறுமா நினைக்கறீங்க…” சத்தியமாக அவன் பேசுயதை தங்களோடு சம்பந்தபடுத்தி பேசுவார்கள் என்று அவன் கொஞ்சமும் எண்ணவில்லை.

“அப்போ நான்தான் மூளைக்கெட்டு போய் கெட்ட தனமா நினைக்கறேன்… ஏன்னா நான் பொறாமை புடிச்சுப் போய் புத்திக்கெட்டு அலையறேன்…  அப்படிதானே மறுமவனே… ரொம்ப சந்தோஷம்… சின்ன வயசுல இருந்து உன்ன தூக்கி தூங்கி வளத்ததுக்கு நல்லா சன்மானம் குடுத்துட்டா எனக்கு…” என்னவர், கூந்தலை அள்ளிக் கொண்டையாக முடிந்துக் கொண்டு, “ஏன் ண்ணே… நானா என் பொண்ண எடுத்துக்கோனு வந்து நின்னதுக்கு தான் சின்ன பயல பேசவுட்டு வேடிக்க பாத்துட்டு இருக்கியா..? சொல்லி இருக்கலாமுல… உன் பொண்ண எடுக்க எனக்கு இஷ்டமில்லனு… நான் பாட்டுக்கு போய் இருப்பனா இல்லையா..? இப்படி நடுகூடத்துல கூட்டி வச்சு அவமான படுத்தற…” என ஜெயாவிடம் பொறிந்தவர், நிவியின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு, “என்ன  வாயா பாத்துட்டு நிக்கறீங்க… கழுத்த பிடிச்சு வெளிய தள்ளுனாதான் போவோமுனு சபதம் எதுவும் எடுத்து இருக்கீங்களா… மரியாதை இல்லாத வூட்டுல சோத்துல உப்பு போட்டு திங்கற எவனாவது நிப்பானா..?” என தன் கணவனை சாடியவர், தன் தங்கைகளை ஒரு அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்துவிட்டு, விறுவிறுவென்று முன்னே நடக்க, மற்ற இருவரும் தங்கள் கணவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு அக்காவை பின்தொடர, அவர்களும் மூவரும் மல்லு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, மச்சானையும் மறுமகன்களையும் ஒரு முறை முறைத்து பார்த்துவிட்டு பொண்டாட்டிகளின் பின்னே சென்றனர்.

“அடே… இப்ப என்னத்த சொல்லிட்டேனு இப்படி பண்ணுதுங்க இதுங்க மூணும்…” அவன் மலைத்துதான் போனான் அடுத்து என்ன செய்வதென தெரியாது.

ஜெயாவும் தனாவும் அவர்கள்  பின்னோடே ஓடிச் சென்று கெஞ்சிக் கொண்டிருந்தனர், திரும்பி வரும்படி. நிவியும் கெஞ்சுகிறாள் தான். ஆனால், அதையெல்லாம் ஆதிலெட்சுமி காதில் வாங்கிக் கொண்டால் தானே.

ஏற்கனவே தனது மூத்த மகளை எடுப்பதாக கூறிவிட்டு, பின்பு இசைக்கு திவ்யாவுடன் கல்யாணத்தை முடித்தது; இப்போது நிவியின் நிச்சயமும் திட்டமிட்டு நிறுத்தப் பட்டிருப்பது என அனைத்தும் சேர்ந்து அவரை கொதிநிலைக்கு கொண்டுச் சென்றிருந்தது.

“அம்மா… நான் சொல்லறத கேளும்மா… சின்னமாமா மேலையும் அக்னி  மாமா மேலையும் தப்பில்லம்மா… நான் சொல்லறத கேளு…” நிவிதான் தன் அன்னையிடமிருந்து தன் கைகளை பிரிக்க முயன்றபடியே கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

அதையெல்லாம் அவர் காதில் வாங்கினால் தானே. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாதவள், ஆவேசம் வந்தவள் போல தன் கைகளை அன்னையிடம் இருந்து உதறிக் கொண்டு, “நான்தான் சொல்லறேன் இல்ல… சின்னமாமா மேலையும் அக்னிமாமா மேலையும் எந்த தப்பும் இல்ல… நான் தான் இந்த கல்யாணத்துல இஷ்டமில்ல நிறுத்துங்கனு சொன்னேன்… ஏன்னா நான் ஒருத்தர காதலிக்கறேன்… போதுமா…” வீடே அதிரும்படி அவள் கத்தி முடிக்க, மொத்த குடும்பமுமே ஆடிப் போய் நின்றது.

“ஏய்… என்னடி சொல்லற…” ஆதிலட்சுமி அதிர்ந்து மகளிடம் பாய,

“ம்ம்ம்… நான் ஒருத்தன லவ் பண்ணறனு சொல்லறேன்… அவன தான் கல்யாணம் பண்ணிக்க போறேனு சொல்லறேன்… அதனால தான் இந்த நிச்சயத்த நிறுத்த ஏதாவது செய்யுங்கனு அக்னி மாமாகிட்ட சொன்னேன்… நான் கேட்டதால தான் மாமா இப்படியெல்லாம் செஞ்சாங்க… போதுமா…” அவள் சொல்லி முடித்த நேரம் ஆதிலெட்சுமியின் கரம் அவளின் கன்னத்தில் பதிந்திருந்தது.

“நாசமா போறவளே… இப்படி குடும்ப மானத்த குழி தோன்டி பொதைச்சுட்டீயேடி… உடம்புல எவ்வளவு திமிரேறிப் போய் இருந்தா… எங்ககிட்டையே காதலிக்கறேன் சொல்லுவ… காதலாம் கத்திரிக்காயாம்… கல்யாணமாம்… உன்னையெல்லாம் வெட்டி பொதைச்சா என்ன..? நீயெல்லாம் இன்னும் ஏன் உயிரோட இருக்க… சாவுடி… சாவு…” என்றபடியே அடுத்தடுத்தும் நிறுத்தாது அவர் மகளை அடிக்க, எவர் தடுக்க முயன்றும் முடியவில்லை.

பளார் என இடி முழக்கம் போல ஒரு சத்தம் கேட்க, அனைவரும் அதிர்ந்து பார்க்க, ஆதிலெட்சுமி ஒரு தரையில் கிடக்க, நிவியை இழுத்து தனக்கு பின்னால் பாதுகாப்பாய் நிறுத்தி இருந்தார் ஜெயா.

உண்மையில் ஆதிலட்சுமியால் மட்டுமல்ல, யாராலுமே இதை நம்ப முடியவில்லை. அவருக்கு தங்கைகளின் மீது இருக்கும் அளப்பறிய அன்பு அவர்கள் அனைவரும் அறிந்தது தானே. ஏன் இதுவரை அவர்களின் மீது ஜெயாவின் விரல்கூட பட்டதில்லை. ஏன் தன் தாய்தந்தையரையும் கூட அடிக்கவிட்டதில்லை. ஆனால், அவர் இன்று தன் தங்கையை அடித்து விட்டார் என்பதை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர் மற்றவர்கள்.

“என்ன காரியம் பண்ணுற பெரிசு… பொம்பள புள்ள மேல கை வைக்கற… இப்படி அடிச்சு கொல்லதான் அரும்பாடு பட்டு அருமை பெருமையா புள்ளய வளத்து வச்சிருக்கோமா… கொஞ்சமாச்சும் கூறு இருக்கா உனக்கு…” ஜெயா தான் இன்னும் ஆற்றாமை தாங்காமல் தங்கையிடம் வினவினார். பிறந்த முதல் நாளிலிருந்து தூக்கி வளர்த்த குழந்தை, கதறி அழுவதை எந்த தகப்பனால் காணமுடியும். அவரும் அவளுக்கு தந்தையின் ஸ்தானம் தானே. இப்போதும் பட்டு பாவாடை சட்டை அணிந்து தத்தக்கா பித்தக்கா என தளிர்நடையிட்டு நடந்து  வரும் சிறு குழந்தையாக தான் நிவி அவரின் கண்ணுக்கு தெரிந்தாள். அவளை அடித்தற்கு எத்தனை காரணங்கள் சொன்னாலும் அது அவருக்கு என்றுமே ஏற்புடையாதாக இருக்காது. அவளின் மீது கொண்ட நேசம் தங்கையின் பொருட்டே என்றாலும் அந்த நேசம் இன்று தன் உயிரான தங்கையே அடிக்க வைத்திருக்கிறது.

நேசமும் பாசமும் கொஞ்சம் வித்தியாசமானதும் நிறையவே  விசித்திரமானதும் தான். எவருக்கு எவரிடத்தில்  நேசம் தோன்றி அது எத்தனை ஆழமாய் வேரூன்றி இருக்குமோ எவரும் அறிவதில்லை? அந்த நேசம் எப்போது எந்த சூழ்நிலையில் அது அணை உடைத்த வெள்ளமாய் பெருகும் என்பதும் எவரிம் அறிவதில்லை.

“மொதல உனக்கு கூறு இருக்காடா…” கற்பகம் தான், கீழே விழுந்த மகளை தூக்கி நிறுத்தியபடி கேள்வி எழுப்பினார்.

“அம்மா…”

“பொண்ண கட்டிகுடுத்து பேரபுள்ள எடுத்துட்டா அவள போய் அடிக்கற… நெசமாத்தேன் கேக்கறேன் கூறு எதாவது இருக்கா உனக்கு… கண்டிச்சு தண்டிச்சு வளக்க வேண்டிய நேரத்த எல்லாம் வுட்டுபோட்டு இப்ப வந்து குதிக்கற… மாப்பிள்ள முன்னாடி கை நீட்டற… அவரென்ன நினைப்பாருனு கூறு வேணாம்…”

“புள்ளய அடிக்கலாமா அவ… பாத்துட்டு சும்மா இருக்க சொல்லறீயா…”

“அவ பொண்ண அவ அடிக்கற… கொல்லாற… உனக்கென்னடா…”

“அப்போ எனக்கு உரிமை இல்லையாமா…” உண்மையில் குரல் உடைந்து நலிந்து தான் போனது முழுதாய் கேட்டு முடிப்பதற்குள்.

“ஐய்யையோ அண்ணா… நீ எனஞ அடிண்ணே… கொன்னே போடு… உன்ன யாரு கேட்பா… உனக்கு இல்லாத உரிமையா… நீ கலங்காதண்ணே…” ஆதிலட்சுமிதான் அண்ணனின் கலக்கம் தாங்காது கலங்கிப் போனார்.

“இங்காருடா பெரியவனே… ஆதியாவது அவள உடம்புல நாலு அடி அடிச்சா… அது இன்னைக்கோ நாளைக்கோ மாறிபோவும்… மறைஞ்சுப் போவும்… ஆனா நீங்க எல்லாம் கல்யாணங்கற பேருல இரண்டு மனச கொல்ல பாக்கறீங்க… அந்த காயமும் அதோட வடுவும் எத்தனை நாளானாலும் மறைஞ்சுப் போவாது… அத ஏன் நீங்க புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க…”

“அம்மா… குடும்பம் ஒன்னா இருக்கனுமுனு நாங்க நினைச்சது தப்பா… எங்க தலைமுறைக்கு அப்பறமும் இந்த பந்தம் தொடரனுமுனு நினைச்சது தப்பா…”

“அப்படி நினைச்சது தப்பே இல்ல… ஆனா இதுல உங்க புள்ளைங்களுக்கும் விருப்பம் இருக்கானு கேக்கனுமில்ல… உங்களுக்கு எல்லாம் சொந்தம் நிலைக்கனுமுனு உறவுலையா பெண்ணெடுத்தேன்… இல்ல பொண்ணெடுத்து பொண்ணு குடுத்தோமா… நீயும் தனாவும் விருப்பட்ட பொண்ணுங்கள தானே கட்டிக்கிட்டீங்க… இல்ல என்னோட இரண்டு மருமகளுங்களும் வந்து உன்னையும் உன் தங்கச்சிங்களையும் பிரிச்சுட்டாங்களா… சொல்லுடா… சொல்லு…”

“அம்மா…”

“இங்க பாரு பெரியவனே… ஏதோ உங்க விருப்பம் முக்கியமுனு இரண்டு பேரும் இப்போ கல்யாணம் பண்ணிகிட்டு… இன்னும் கொஞ்ச நாள்ல தனக்குள்ள ஒத்து வராம டைவர்ஸ் கோர்ட்டு கேஸுனு போய் நின்னா நல்லா இருக்குமா… சொல்லுடா… அப்போ உன் சொந்தம் நிலைச்சுடுமா…”

அனைவரும் அமைதியாக இருக்க, அவரே தொடர்ந்தார். “இசை, ஶ்ரீ விசயத்துலையும் இதேதான் பண்ண… இசைக்கு மட்டுமில்ல… ஶ்ரீக்கும் அந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல… அதனால தான் எப்படி எப்படியோ பொய் சொல்லி ஏமாத்தி… அவ விரும்பன பையனுக்கே அவள கல்யாணம் பண்ணி வச்சோம்… இப்போ நிவி விசயத்துலையும் அதையே தான் பண்ணறீங்க… எங்க இஷ்டமில்லனு சொன்னா உங்க மனசு கஷ்டபடுமேனு தான் அக்னியும் தனாவும் இப்படி பண்ணாங்க… எல்லாம் நீங்க கஷ்டபட கூடாதுனு மட்டும் தான்… அவங்க பண்ணது தப்புனு எனக்கு தோனல… அதான் நானும் ஹேல்ப் பண்ணேன்…”

“அம்மா…”

“என்னடா அம்மா… நொம்மானுட்டு… எந்த சொந்தத்தையும் வலுகட்டயமா இழுத்து பிடிச்சு வைக்க முடியாது… யாரையும் கட்டாய படுத்தி பாசமா எல்லாம் இருக்க வைக்க முடியாது… இப்பவாது புள்ளைங்க மனச புரிஞ்சு நடந்துக்கோங்க…” என அவர் முடிக்கவும்.

“சார்…” என அழைத்தபடியே ஒரு கான்ஸ்டபிள் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

“சொல்லுங்க…” அக்னி தான் முன் வந்து கேட்டான்.

“வண்டி சாவி சார்…” என்றபடியே அவர் சாவியை நீட்ட, “கொடுங்க… என்னோடது தான்… வண்டி வாசல நிக்குதா…” என்றபடியே சாவியை வாங்கினான் இசை. அவன் வாங்கவும் அக்னி திருதிருவென திருட்டு முழி முழிக்கவும் எதோ சரியில்லை என புரிந்து போனது அனைவருக்கும்.

“என்ன சார் விளையாடுறீங்களா… லாரிக்கு அடியில சிக்கன வண்டி சார்… ஹாரன் கூட மிச்சமில்ல… மொத்தமா நசுங்கிப் போச்சு… வொர்க் சாப்ல என்ன பண்ணாலும் ரெடி பண்ண முடியாதுனு சொல்லிட்டாங்க… சும்மா குடுத்தா கூட வாங்க மாட்டாங்களாம்…”

“எது லாரில நஞ்சுப் போச்சா… அது என் மாமா நேத்து தான்யா கல்யாணத்துக்கு சீரா வாங்கிக் குடுத்த புது வண்டி… இப்போ அவரு கேட்டா என்ன பதில் சொல்வேன் நானு… டேய் அக்னி என்னடா பண்ணி தொலைச்ச வண்டிய… சாவிய எடுக்கும் போதே அந்த கத்து கத்தினேன் இல்ல… பாத்து ஓட்டுடானு… இப்படி அப்பளம் மாதிரி நொறுக்கி வச்சுருக்க…”

“அது வந்துங்க அண்ணா… நானு பாத்து பதிவிசா தானுங்க போனேன்… எவனோ ஒரு எடுபட்ட கண்ணு தெரியாத பய… ஓரமா போய்ட்டு இருந்த உங்க வண்டி மேல கொண்டுவந்து ஏத்திட்டானுங்க… ஏதோ அதிர்ஷ்ட வசமா நானு உயிர் பொழைச்சுட்டேனுங்க அண்ணா… தம்பி பொழைச்சதே ஏழுமலையான் புண்ணியம்… தலைக்கு வந்தது தலைப் பாகையோட போச்சுன்னு நினைச்சுக்கோங்க அண்ணா…”

“எது எது நீ முழுசா இருக்க… என் வண்டி மட்டும் நஞ்சு போச்சா… நம்பற மாதிரியா இருக்கு இதெல்லாம்… என்னடா அடுத்த ட்ராமாவா… உண்மைய சொல்லு…” இசை கேட்டுக் கொண்டே இருக்க,

மற்றவர்கள் எல்லாம் அவன் விபத்து என்றதும் ஒரு நிலையில் நிற்க முடியாமல் துணை பிடித்தபடி நின்றிருந்த அவனை தான் கவனித்தனர். நீண்ட நேரம் நின்றிருந்ததாலோ என்னவோ, போட்டிருந்த தையலையும் கட்டையும் மீறி, சொட்டு சொட்டாக ரத்தம் தரையில் சிந்தி இருந்தது.

“ஐய்யையோ… என் புள்ள ரத்தத்தோட நிக்கறான்… நீங்க எல்லாம் நின்னு சவகாசமா பேசிட்டு இருக்கீங்களே…” என தெய்வா அலறியதில், ஒட்டு மொத்த குடும்பமுமே பரபரப்பனாது. அடுத்தென்ன ஜெயாவின் ஆஸ்தான நாற்காலி அக்னிக்காக போடப்பட்டது. ஒருவர் வெந்நீர் வைக்க, ஒருவர் மருத்துவரை அழைக்க என அத்தனை பேரும் பரபரபாக, அந்த கலோபரத்தில் நடந்த பிரச்சனையே மறந்துப் போயினர் அனைவரும்.

                     தேடல் தொடரும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்