Loading

இளமாறனும் செந்தமிழும் காலையில் எழுந்து ரெடியாகி, சாப்பிட்டுக் கிளம்பி, அவளுக்கு மாதந்திர செக்கப்பிற்காக ஹாஸ்பிடலுக்குச் சென்றார்கள். கூடவே சரவணனின் சின்ன மகள் இதழினியையும் தூக்கிச் சென்றனர். அவர்கள் செக்கப் முடித்து வெளியே வந்து ஹாஸ்பிடலுக்கு முன்புறம் இருந்த புல்வெளி போன்ற இடத்தில் நின்றிருந்தனர்.

“பைக்கை எடுத்து வருகிறேன்” என்று சென்றவன், குழந்தையை தூக்கியிருந்தவளுக்குப் பின்னால் வந்து அவளது கண்களைக் கையால் மூடினான். அவள் திரும்பிப் பார்க்க, சட்டென இளமாறன் கையிலிருந்த சிவப்பு ரோஜாக்கள் நிறைந்த பூங்கொத்தை அவளிடம் தந்தான்.

ஆச்சரியத்தில் விழிகள் விரித்து அதை வாங்கியவள், சிரித்தவாறு நின்றிருக்க, ஒரு காலை தரையில் ஊன்றி இன்னொரு காலை முட்டி போட்டவன், ஷர்ட் பாக்கெட்டில் இருந்த மோதிர பாக்ஸை எடுத்து, அதைத் திறந்தான்.

அழகாக இளா ❤️ தமிழ் என எழுதியிருந்த, இருவருக்கும் ஒரே மாதிரியான கப்புள் ரிங்குகள் அதில் இருந்தன. அவளுக்கான மோதிரத்தை எடுத்தவன், ஆனந்தத்தில் உறைந்து நின்றிருந்தவளின் கையை எடுத்து, அவளது மோதிர விரலில் அதை மாட்டினான்.

வழக்கம்போல் அவளது தோகை இமைகளை படபடவென அசைத்தவள், அவன் மோதிரத்தை நீட்ட அவனுக்கு அணிவித்தாள். சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போயிருந்தவள், “ஐ லவ் யூ டா இளா..” என்று அவனை அணைத்துக் கொண்டாள்.

சொல்லிவிட்டாள்.. சொல்லியே விட்டாள். இளமாறன் சிறகில்லாமல் பறந்தான். செந்தமிழ் கேட்டது இதைத் தான். அதென்ன காதலிக்கு மட்டும்தான் பரிசெல்லாம் கொடுத்து காதலைச் சொல்வார்களா? மனைவியென்றால்.. காதலி மனைவியான பின் பரிசெல்லாம் தந்து காதலை வெளிப்படுத்தக் கூடாதா என்ன? இங்கு என்ன பொருள் என்பது முக்கியமில்லை. காதலுக்காக அவர்களின் மெனக்கெடல் தான் முக்கியம்.

அதைப் புரிந்துகொள்ள அவனுக்கு இத்தனை நாள் ஆகிவிட்டது. “இளா ஐ லவ் யூ டா!” என்று சிரித்திருந்தவனின் கன்னக்குழியில் முத்தமும் வைத்தாள். வெளியில் இருக்கிறோம் என நினைத்து அவனுக்குத் தான் வெட்கம் வந்தது.

“சரி இங்கேயே இருங்க, நான் போய் பைக் எடுத்துட்டு வர்றேன்” என்று அவன் சிறிது தூரம் சென்றிருக்க, செந்தமிழ் குழந்தையை இறக்கிவிட்டு விளையாடியவாறு இருந்திட, குழந்தை நடந்து சென்று விழுந்ததும் வேகமாகத் தூக்கியவள், குழந்தையின் கை கால்களை தேய்த்துக் கொண்டிருக்க, அவளை நோக்கி ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது.

*********************************************

இனியன் எழுந்து ஃப்ரெஷ்அப் ஆகி வந்தவன், வீடு முழுக்க ரேவதியைத் தேடினான். அவளுடைய செல்போன் அங்குதான் இருந்தது. ‘எங்கு சென்றிருப்பாள்?’ என்ற யோசனையோடு அவனுடைய செல்போனை எடுத்தவன், அந்த வீடியோக்களை பார்த்து, கால் ரெக்கார்டரில் அவர்கள் பேசியதையும் கேட்டு ஒருகணம் அவனுக்கு உயிர் உறைந்து போனது.

இனியன் உடனே சரவணனுக்கு போன் செய்திட, அவன் அங்கு வந்தான். அவனிடம் மொபைலில் இருந்தவற்றை காட்டிக் கொண்டிருக்கையில் சரவணனின் போன் ரிங் ஆனது. புது எண்ணில் இருந்து அழைப்பு வர, அவன் அட்டென்ட் செய்ததும்,

“சரோ.. நான் தீபா. அம்முவும் நானும் ஸ்கூலுக்கு போகும் போது எங்களுக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. பாப்பாவை வித்யா ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்கேன். அவளுக்கு தலையில அடிபட்டிருக்கு, ஆபரேஷன் பண்ணனும்னு சொல்றாங்க. கொஞ்சம் சீக்கிரம் வாயேன்” அழுகையோடு அவள் சொல்லிட, அதிர்ச்சியில் அவனும் உறைந்து போய் நின்றான்.

“பயப்படாத தீபு வர்றேன்..” என்றவன் இனியனோடு வேகமாக அவள் சொன்ன மருத்துவமனைக்குச் சென்றான். செல்லும் வழியில் நடந்தவற்றை அவனிடம் சொல்லிவிட்டான்.

வித்யா மருத்துவமனை.. “டாக்டர் குழந்தைக்கு எப்படியிருக்கு?” எத்தனையோ விபத்துகளை பார்த்திருந்தாலும் தன்னுடைய குழந்தைக்கு என்ற போது தளர்ந்திருந்த காவலன் கேட்க,

“சார்.. கொஞ்சம் கிரிட்டிக்கல் தான். தலையில நல்லா அடிபட்டிருக்கு. உடனே ஆபரேஷன் பண்ணனும். அதுக்கப்புறம் தான் எதுவும் சொல்ல முடியும். ஆபரேஷனுக்கு நிறைய ரத்தம் தேவைப்படுது. அதுக்கு அரேஞ்ச் பண்ணுங்க” என்றவாறு டாக்டர் சென்றுவிட,

“சரோ.. அம்முவுக்கு ஒண்ணும் ஆகாதுல. எனக்கு பயமா இருக்கு” கதறி அழுத மனைவியை அணைத்துக் கொண்டான். அவளைத் தேற்றி அங்கு அமர வைத்து, மகளுக்கு ரத்தம் கொடுத்து, தேவையான ரத்தமும் ஏற்பாடு செய்து, ஆபரேஷன் ஃபார்மில் கையெழுத்து போட்டபின் ஆசுவாசமடைந்தான். இதற்கிடையில் இனியனுக்கு போன் வந்த எண்ணின் இருப்பிடத்தைக் கண்டறிய சொல்லியிருந்தான்.

போன் நம்பர் லொக்கேஷன் மாறி மாறிக் காட்டியது. சில சமயம் வெளிநாட்டு லொக்கேஷனைக் காட்டியது. சரவணன், இனியனுடைய போனிலிருந்தே அந்த எண்ணிற்கு அழைத்தான். முதலில் எடுக்கப்படவில்லை. அடுத்து அட்டென்ட் ஆனதும், சரவணன் “ஹலோ..” என்க,

“என்ன போலீஸ்.. எப்படி என்னோட ஆபரேஷன். நீ மட்டும் திட்டம் போட்டு என்னை உள்ள அனுப்புவியா? நீங்களாம் சேர்ந்து என்னோட பதவியை பறிச்சு, என்னை ஒண்ணுமில்லாம ஆக்கி, ஜெயில்ல உட்கார வச்சீங்கள.

“இப்போ நான் உங்க எல்லாரையும் ஒண்ணுமில்லாம ஆக்கி, ஒட்டுமொத்தமா மேல அனுப்பி வைக்கிறேன். நீ உன் பொண்ணை எவ்வளவு செலவு பண்ணிக் காப்பாத்தினாலும் அவ உயிரோட வர மாட்டா. அப்புறம் உன் பக்கத்துல இருக்கிற புதுமாப்பிள்ளை கிட்ட, அவன் பொண்டாட்டி அவனுக்கு கிடைக்க மாட்டான்னு சொல்லிடு” ஆக்ரோஷமாக பேசிய சிங்கண்ணன் அழைப்பைத் துண்டித்தான்.

சரவணனுக்கு அவனை ஒன்றும் செய்ய முடியலையே என்ற ஆத்திரம் தாளாமல் கத்தினான்.

*********************************************

குழந்தை விழுந்த பதற்றத்தில் தன்னை நோக்கி வந்த காரை செந்தமிழ் கவனிக்கவில்லை. ஆனால் கொஞ்ச தூரம் சென்றிருந்த இளமாறன் அதைப் பார்த்து விட்டான். வேகமாக அவளுக்கு அருகில் வந்தவன், அவளை புல்வெளி பக்கம் தள்ளிவிட, அதிவேகமாக வந்த கார் மோதி தூக்கி எறியப்பட்டான்.

கண்ணிமைக்கும் நொடியில் அத்தனையும் நடந்திருக்க, குழந்தையோடு புல் தரையில் எழுந்தவள், எழுந்து ஓட்டமும் நடையுமாக அவனை நோக்கிச் சென்றாள்.

கீழே விழுந்திருந்தவனின் தலையை தூக்கி மடியில் வைத்தவள், “இளா.. எழுந்திருங்க.. என்னைப் பாருங்க” என்று கத்தினாள். தலையில் அடிபட்டு அவனது முகத்தில் ரத்தம் வழிந்திருக்க, கண்களை மெல்ல திறந்தவன், “ஐ லவ் யூ டி தமிழ்.. ஐ லவ் யூ சோ மச்” என்று சொல்லி சிரித்தவாறு மயங்கினான்.

திடுக்கிட்டு அவனையே வெறிக்கப் பார்த்திருந்தவள், “அய்யோ இளா.. ஐ லவ் யூ.. என்னைப் பாருங்க..” என்று பெருங்குரலில் கத்தினாள்.

*********************************************

இனியனுக்கும் சரவணனுக்கும் பதற்றத்தில் அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவர்கள் இளமாறனுக்கு போன் செய்து பார்த்தால், அவனுடைய போன் சுவிட்ச் ஆஃப் என வந்தது. அவனது போன் தான் விபத்தில் சிக்கி நொறுங்கிப் போனதே. ஸ்டேஷனில் இருந்து போலீஸை வர சொல்லி அங்கே காவலுக்கு வைத்தபின் இருவரும் இனியனின் வீட்டிற்குச் சென்றனர்.

புனிதா வெளியே கடைக்குச் சென்று எதையோ வாங்கித் திரும்பியிருக்க, “இளமாறன் எங்கே?” எனக் கேட்டுக் கொண்டே அவருடன் அவர்களும் வீட்டிற்குள் நுழைய, வீட்டிலிருந்து மாஸ்க் போட்ட ஒருவன் வெளியில் ஓட, சரவணன் அவனைத் துரத்தினான்.

இனியனும் புனிதாவும் அறைக்குள் சென்று பார்க்க, ஈஸ்வரியை கத்தியால் குத்தி கொலை செய்திருந்தார்கள். “அய்யோ ஈஸ்வரி..” என சேலைத் தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டு அவருக்கு அருகில் செல்லவிருந்த புனிதாவை இனியன் தடுத்துவிட்டான். ரேவதியை நினைத்து மொத்தமாய் உடைந்து போனவன், கண்களில் அவனையும் மீறி நீர் வழிய ஆரம்பித்தது.

*********************************************

“இந்திரா.. அங்க பாரு யாருக்கோ ஆக்சிடென்ட் ஆகிடுச்சு போல” அபி வெளியில் சுட்டிக் காட்ட, இந்தர் சட்டென காரை நிறுத்தினான்.

காரிலிருந்து இந்திரஜித் வேகமாக இறங்கி செந்தமிழுக்கு அருகில் செல்ல, கர்ப்பவதியான அவனது மனைவி அபிநயா அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு மெல்ல இறங்கி அவனுக்குப் பின்னே சென்றாள்.

அவர்கள் இருப்பது மகப்பேறு மருத்துவமனைக்கு அருகில். அங்கே இளமாறனுக்கு சிகிச்சை அளிக்க முடியாது. ரத்த வெள்ளத்தில் கிடந்த இளமாறனைத் தூக்கிய இந்தர், காரின் பின்சீட்டில் அவனைக் கிடத்தினான்.

அதிர்ச்சியில் இறுகிப் போய் அமர்ந்திருந்த செந்தமிழுக்கு அருகில் சென்ற அபி, “எழுந்து வாங்க..” என்று அவளைத் தூக்கிவிட்டு, இதழினியையும் தூக்கிக் கொண்டாள்.

கார் சென்னையின் பிரபல மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான காவேரி மருத்துவமனைக்கு விரைந்தது. காரில்.. “இளா.. என்னைப் பாருங்க” சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி அழுதபடி இருந்தாள் செந்தமிழ்.

“அழாதடா தங்கம்.. ஒண்ணுமில்ல” தன் மடியில் அமர்ந்து அழுது கொண்டிருந்த இதழினியை சமாதானம் செய்த அபி, “சீக்கிரமா போ இந்திரா..” பின்னால் திரும்பி செந்தமிழை பார்த்தவாறு கணவனிடம் சொன்னாள்.

காவேரி மருத்துவமனை டீன் இந்தரின் குடும்ப மருத்துவர் என்பதால், அவன் காரில் செல்லும்போதே தகவலைச் சொல்லிவிட்டான். அங்கு சிகிச்சைக்கு எல்லாம் தயாராக இருக்க, இளமாறன் ஐசியூ வில் அனுமதிக்கப்பட, அவனுக்கு துரித வேகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதிர்ச்சியில் அழுது கொண்டே ஐசியூவிற்குள் எட்டிப் பார்த்தவண்ணம் இருந்த செந்தமிழுக்கு அருகில் சென்ற அபி அவள் கையைப் பிடித்து இழுத்து வந்து அமர வைத்தாள்.

“அழாதீங்க அவருக்கு சரியாகிடும்.. உங்க வீட்ல யாருக்கும் போன் பண்ணி இன்ஃபார்ம் பண்ணனுமா?” அபி கேட்டதும் நினைவு வந்தவளாய், “புனிதாம்மா கிட்ட பேசணும்” என்றாள்.

அபி போனைத் தர, புனிதாவிற்கு அழைத்தவள், “அம்மா.. இளா.. இளா.. அவருக்கு…” சொல்லத் தடுமாறினாள். “என்னாச்சு செந்தமிழ்?” மறுமுனையில் அவர் பதட்டமாக, போனை வாங்கிய அபி, அவரிடம் நடந்தவைகளையும், ஹாஸ்பிடல் பேரையும் சொல்லி போனை கட் செய்தாள்.

அங்கு சரவணன் ஓடிச் சென்றவனைப் பிடித்து, ஸ்டேஷனில் வைத்து லாடம் கட்டிக் கொண்டிருந்தான். ஈஸ்வரி உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய பின்னர், இனியனும் புனிதாவும் காவேரி மருத்துவமனைக்குச் சென்றனர்.

புனிதாவைப் பார்த்ததும் செந்தமிழ் வேகமாகச் சென்று அணைத்துக் கொண்டாள். “அம்மா.. அவரு.. அவரு..” அவனுக்கு என்னாகுமோ என்ற பயத்தில் அவளுக்கு பேச்சு வரவில்லை. ஏற்கனவே பயந்து போயிருந்தவளுக்கு மற்ற விஷயங்கள் எதையும் சொல்லாமல் அவர் மறைத்து விட்டார்.

“டாக்டரைப் பார்க்க போறேன் வாங்க” என்றழைத்த இந்தர், இனியனுடன் மருத்துவமனை டீனை பார்க்கச் சென்றான். “அங்கிள் அவருக்கு எப்படியிருக்கு?” இந்தர் பதற்றமாக கேட்க,

“உயிருக்கு இப்போ எந்த ஆபத்தும் இல்ல. தலையில அடிபட்டிருக்கு. தையல் போட்டிருக்கோம். கால்ல தான் அவருக்கு பயங்கரமான ஃபிராக்சர் ஆகியிருக்கு. உடனே ஆபரேஷன் பண்ணனும். அவருக்கு இன்னொரு காலும் உயரம் கம்மியா இருக்கதால ஆபரேஷனுக்கு அப்புறம் எழுந்து நடக்கிறது கஷ்டம் தான்” என்றார்.

“அங்கிள்.. நீங்க ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்ணுங்க. மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்” என்ற இந்தர், வெளியே வந்தபின் இனியனிடம் நடந்தவைகளை கேட்டுத் தெரிந்து கொண்டான்.

“அபிமா.. நான் அன்புவை வரச் சொல்லியிருக்கேன். நீ அவன் கூட வீட்டுக்குப் போ. அம்மா போன் பண்ணாங்க பாப்பா உன்னைக் கேட்டு அழுதுட்டே இருக்காளாம். நான் இங்க பார்த்துக்குறேன்” இந்தர் அவன் மனைவியிடம் சொல்ல, அவள் “ஒண்ணும் பயப்படாதீங்க.. உங்க வீட்டுக்காரருக்கு சரியாகிடும்” என்று செந்தமிழிடம் ஆறுதல் சொல்லியபின், செல்ல மனமின்றி வீட்டிற்குக் கிளம்பினாள்.

அங்கு வந்த சரவணன், “அவனுக்கு எப்படி இருக்குடா?” என்று கேட்க, இனியன் சொன்னதைக் கேட்டதும் செந்தமிழ், “புனிதாம்மா.. அவர் காலுக்கு ஏதாவது ஆச்சுனா ரொம்ப கஷ்டப்படுவாரே” என ஓவென்று கதறி அழ ஆரம்பித்தாள்.

காதலாய் வருவாள் 💞 

பின்குறிப்பு: கதையில் கேமியோவாக வந்திருக்கும் இந்திரஜித், அபிநயா இருவரும் என்னுடைய இந்தரின் தொலைந்த காதலி நாவலில் வரும் கதாநாயகன், கதாநாயகி ஆவர்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்