Loading

 

அடுத்த நாள் காலையில் சம்பூர்ணா மௌனமாக கிளம்பிக் கொண்டிருக்க, மித்ரன் அருகே வந்து நின்றான்.

“போலீஸ் ஸ்டேஷன் போறியா?”

தலையாட்டி வைத்தாள். முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. நேற்றே அழுது முடித்து விட்டாள். இனி மிச்சமிருப்பது அனைத்தும் வருத்தமே.

“நானும் வரவா?”

“வேணாம். உன் வேலைய பாரு”

அதோடு முடித்து விட்டு தன் பர்ஸை எடுக்க, மித்ரன் அவள் கையைப்பிடித்தான்.

நின்று சலிப்பாக பார்த்தாள்.

“என்ன?” என்று கேட்டவளுக்கு பதில் சொல்லாமல் அருகே சென்று அணைத்துக் கொண்டான்.

“இதுல உன் தப்பு எதுவும் இல்ல.. ஓகே?” என்றதும் ஒரு நொடிக்குப்பிறகு சம்பூர்ணா துவண்டு அவன் மீது சாய்ந்து கொண்டாள்.

இது தான் அவள் தலைக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. அவள் முன்பே கண்டு பிடித்திருக்கலாமோ? அவள் மீதும் தவறு இருக்கிறதோ? என்று யோசித்து நொந்து விட்டாள்.

“எல்லா தப்பும் அவன் மேல தான். நீ எதுவும் பண்ணல.. வருத்தப்படாத” என்று அவள் மனதை உணர்ந்தது போல் ஆறுதல் சொன்னான்.

“ம்ம்”

“எங்க புதைச்சான்னு விசாரிக்கச் சொல்லிட்டு வா” என்று முதுகில் தட்ணிக் கொடுத்தான்.

ஒரு நொடிக்குப் பிறகு, சம்பூர்ணா விலகி நின்று தலையாட்டி விட்டு கிளம்பி விட்டாள்.

மித்ரனும் வேலைக்குச் சென்று விட்டான்.

சம்பூர்ணா காவல்துறை சொன்ன வேலையை முடித்து விட்டு, அபர்ணாவை அழைத்து விசயத்தை சொன்னாள்.

“அவன் இன்னுமா சாகல? எங்கயோ விழுந்து செத்துருப்பான்னு நினைச்சேன்” என்று வெறுப்பை கொட்டினார் அபர்ணா.

சுதாராணிக்கோ பெரிய வருத்தம். இவன் போன்ற பிள்ளையை பெற்றெடுக்காமல் இருந்திருக்கலாம் என்று பல முறை நொந்து விட்டார். இப்போதாவது அவன் செத்து ஒழிந்தால் சரி என்று விட்டார்.

மித்ரன் எதாவது சொன்னானா? என்று விசாரித்து விட்டு வைத்து விட்டனர்.

அபர்ணா அப்போதே கடவுளுக்கு வேண்டுதல் வைத்தார்.

‘அவன் செத்துட்டான்னா சந்தோசமா வந்து மொட்டை போட்டுக்குறேன் ஆண்டவா’ என்று வேண்டிக் கொண்டார்.

•••

விசாரனை நடந்தது. அடித்து உதைத்து எப்படியோ சம்பூர்ணாவின் தோழியை புதைத்த இடத்தை கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

விசயத்தை அவளது பெற்றோருக்கும் சம்பூர்ணாவுக்கும் சொல்ல, அவளும் மித்ரனும் கிளம்பிச் சென்றனர்.

அந்த இடத்தை கண்டு பிடித்து தோண்டி எடுத்த போது, வெறும் எலும்புகள் தான் மிஞ்சியிருந்தது.

அதை பார்த்ததும் அந்த பெண்ணின் தாய் கதற, சம்பூர்ணா இறுகிப்போய் நின்றிருந்தாள்.

எப்போதும் மனதில் நிற்கும் தோழியின் முகம் அவளை மிகவும் வருத்தியது. கடைசியில் இப்படியா பார்க்க வேண்டும்?

அங்கிருந்து எலும்புகளை எடுத்துச் சென்று பரிசோதனை செய்தனர். சம்பூர்ணாவின் தோழி தான் என்று உறுதியான பின்பு, அதை பெற்றோர்களிடம் ஒப்படைத்து விட்டனர்.

அவர்கள் வழக்கப்படி எரித்து விட்டு சாம்பலை வைத்து காரியம் செய்யும் போது சம்பூர்ணாவையும் அழைக்க, மித்ரன் அடம்பிடித்து அவளோடு சென்று நின்றான்.

சம்பூர்ணா கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டு ஓரமாக நின்றாள். அவள் மனதில் பல வருடங்களாக எரிந்து கொண்டிருந்த தீ இன்று ஒரு முடிவுக்கு வந்து விட்டது. இது நல்ல முடிவா? இல்லையா? என்பதில் தான் அவளுக்கு குழப்பமே.

எல்லா சடங்கையும் முடித்து சாம்பலை கடலில் கலந்தனர். இதோடு அவளது ஆன்மா சாந்தி பெருமாம். உண்மை தானா?

அவளின் தாய் சம்பூர்ணாவிடம் வந்தார்.

“என்னால எதுவும் பண்ண முடியாம போயிடுச்சு ஆண்ட்டி”

“நீ பண்ணதே பெரிய விசயம் தான்மா.. வருத்தப்படாத..” என்றவருக்கு தன் மகளும் இப்படி வளர்ந்து நிற்க வேண்டியவள் என்ற வேதனை இருக்கவே செய்தது.

அருகே இருந்த மித்ரனை பார்த்து விட்டு, “கல்யாணம் ஆகிடுச்சுல? இனி இத விட்டுட்டு சந்தோசமா வாழு.. தீர்க்க சுமங்கலியா நூறு வருசம் வாழனும்” என்று தலையில் கை வைத்து ஆசி கூறி வைத்தார்.

சம்பூர்ணாவுக்கு கண்கள் கலங்கினாலும் அமைதியாக தலையாட்டினாள்.

மித்ரன் அவள் கையைப்பிடித்துக் கொண்டு, தலையசைப்பில் விடை பெற்றுக் கிளம்பினான்.

சற்று தூரம் நடந்த பிறகு, சம்பூர்ணா கடலை திரும்பிப் பார்த்தாள்.

“இதுல அவ ஆன்மா சாந்தி அடைஞ்சுருக்குமா?” என்று அவளுக்கு அவளே கேட்டுக் கொண்டாள்.

“கண்டிப்பா.. கடைசி வரைக்கும் தனக்காக போராடி நியாயம் வாங்கிக் கொடுத்து, அவள அவ அம்மா அப்பா கிட்ட சேர்த்த உன்னை மாதிரி ஃப்ரண்ட் கிடைச்சத நினைச்சு, கண்டிப்பா சாந்தி அடைச்சுருக்கும் அந்த ஆன்மா” என்று மித்ரன் பதில் சொல்ல, அவன் முகத்தை பார்த்தவள் ஒன்றும் சொல்லவில்லை.

உண்மையில் அவளது போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது தான் போலும். மனதில் நிம்மதி பரவ நடந்தாள்.

மித்ரன் அவள் கையை விடவில்லை. அவளும் பிரித்துக் கொள்ளவில்லை. ஒன்றாகவே கிளம்பி விட்டனர்.

•••

“பல பெண்களை கடத்தி விற்று தப்பியோடிய குற்றவாளி பல வருடங்களுக்கு பிறகு பிடி பட்டான். அவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது நீதி மன்றம்.”

செய்தி தாளின் எதோ ஒரு பக்கத்தில் மூலையில் சிறு விசயமாக வந்த செய்தியை படித்து சலித்து விட்டு, தன் வழக்கமான உடற்பயிற்சியை தொடர்ந்தாள் சம்பூர்ணா.

இன்று அலுவலகம் இல்லை. ஆனால் அவளுக்கு வேலை இருக்கிறது. அதற்காக கிளம்பி கீழே வர, மித்ரன் சமையல் செய்பவரிடம் அதிகாரம் செய்து கொண்டிருந்தான்.

“ரெண்டு மணி நேரத்துல எல்லாம் ரெடியா இருக்கனும்” என்று மிரட்டி விட்டு திரும்பியவன், மனைவியை மேலும் கீழும் பார்த்தான்.

“எங்க கிளம்பிட்ட?” என்று அதிகாரமாக கேட்க, ஆச்சரியமாக பார்த்தாள்.

“என்ன மிரட்டுற?”

“இனிமே இந்த வீட்டுல எல்லாம் என் அதிகாரம் தான்.”

“அப்படினு யார் சொன்னா?”

“நான் தான்.. என் பொண்டாட்டிய தான் காணோமே.. வேற என்ன பண்ணுறது?”

“காணோமா?”

“ஆமா எங்க போனானே தெரியல..”

“உன் முன்னாடி நிக்கிற நான் யாரு?”

மித்ரன் அவளை நன்றாக ஆராய்ந்து பார்த்தான்.

“பார்க்க அவ மாதிரி தான் இருக்க.. ஆனா அவ எப்பவும் அதிகாரம் பண்ணிட்டே இருப்பா.. நீ அப்படி இல்லையே.. ஒரு வேளை ஏலியனா?”

சம்பூர்ணா அவனை முறைத்து விட்டு, “போடாங்.. போய் வேற வேலை இருந்தா பாரு” என்று விட்டு திரும்பி நடந்தாள்.

“இந்தாடி.. என் பொண்டாட்டிய கண்டு பிடிச்சு கொடுத்துட்டு போ”

“அதான் எனக்கு வேலை பாரு.. போடா” என்று விட்டு கிளம்பி விட்டாள்.

அடுத்த நாள் புவனன் வீடு மாறுவதற்கு நாள் குறித்திருந்தான். சம்பூர்ணா வேலையை ஒதுக்கி விட்டு மித்ரனோடு கிளம்பினாள்.

“இப்பலாம் நீ ரொம்ப அமைதியா இருக்க எனக்கு பிடிக்கவே இல்ல” என்று காரில் அமர்ந்து கொண்டு மித்ரன் குறை பட, “இப்பலாம் நீ ரொம்ப பேசுற.. அது கூட தான் எனக்கு பிடிக்கல..” என்று பதிலுக்கு பேசினாள்.

“ரெண்டு பேருமே பேசாம இருக்க நாம என்ன எதிரிங்களா?”

“அப்ப இல்லையா?”

“ஹலோ?” என்றவன் அவளது தாலியை எடுத்துக் காட்டினான்.

“இத கழுத்துல போட்டுட்டு எதிரிங்கனு சொன்னா கேவலமா இருக்காது?”

“இருக்காது.. கலட்டி வச்சுட்டு சொல்லவா?”

“பாதி நேரம் கலட்டி தான் வைக்கிற.. ச்சே.. தாலிக்கு உண்டான மதிப்பு போச்சு”

“தாலிய கழுத்துல போட்டுட்டே புருஷன கொல்லுற கதையெல்லாம் இருக்காம்.. கேட்குறியா?”

“இது ஒன்னு தான்டி மிச்சம்.. அய்யோ எம்மா.. இப்படி என்னை மாட்டி விட்டுட்டுடியேமா.. பொண்டாட்டி கேட்டா கொலைகாரிய கட்டி வச்சுட்டியேமா..” என்று அவன் அழ, சம்பூர்ணா சிரித்து வைத்தாள்.

இருவரும் சென்று வீட்டைப் பார்த்தனர். பெரிய வீடாகத்தான் இருந்தது. ஆனால் மித்ரனுக்கு மட்டும் ஒரு வித வருத்தம். இதற்கு முன்பு இருந்த வீட்டில் வாடகை புவனன் கட்டுவான். மற்ற செலவு எல்லாம் மித்ரன் பார்த்துக் கொள்வான். சில நேரம் இருவருமே பார்த்துக் கொண்டது உண்டு.

பாட்டிக்கு உடல் சரியில்லாத போது கையிருப்பில் கை வைக்க வேண்டிய நிலையும் வந்தது. இனி புவனன் தனியாக இதற்கு வாடகை கட்டி குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதைப்பற்றி புவனனிடம் பேச வேண்டும் என்று அவன் நினைத்திருக்க, சம்பூர்ணா பாட்டியையும் நர்மதாவும் அவர்கள் வீட்டுக்கு அழைத்தாள்.

“அங்க வந்துடுங்க ரெண்டு பேரும். இவங்க நல்லா செட்டில் ஆனதும் வந்துக்கலாம்” என்று அழைக்க, நர்மதா யோசித்தார்.

“இங்க இருந்தா கூடமாட வேலை செய்வேன்ல? அத்தைய வேணா கூட்டிட்டு போ” என்று நர்மதா சொல்ல, “அட வாங்க அத்த.. அந்த கப்பில் அவங்களுக்கு பிடிச்ச மாதிரி வீட்ட செட் பண்ணட்டும். நீங்க ஏன் வேலைய இழுத்துப் போட்டு செய்யனும்? என்ன சாதனா சொல்லுற?” என்று கேட்டாள்.

“அத்தை வந்தா கூட்டிட்டு போமா.. இங்க இன்னும் கட்டில் பெட் எதுவுமே போடல.. எல்லாம் போட்டு செட்டிலாகுற வரை தரையில படுத்து எந்திரிச்சு கால் வலிக்குதுனு சொல்லுவாங்க”

“அதே தான்.. செட் பண்ணப்புறம் வந்து பார்த்துக்கோங்க” என்றவள் இப்போது மித்ரனை பார்த்தாள்.

‘ஒழுங்கா பேசு’ என்று மிரட்டியது அவள் பார்வை. அதை சரியாக புரிந்து கொண்டவன், “ஆமாமா.. நாம அங்க போகலாம்.. இங்க புவா செகண்ட் ஹனிமூன் கொண்டாட்டும்” என்று வம்பிழுத்தான்.

“கொண்டாடிட்டாலும்” என்று சாதனா நொடித்து விட்டு, “நீங்க எங்கயுமே போகலயா? கல்யாணம் முடிஞ்சதுல இருந்து இங்கயே தான் இருக்கீங்க” என்று கேட்டாள்.

“அதுக்கெல்லாம் எங்க அண்ணி வழி இருக்கு?” என்று மித்ரன் பெருமூச்சு விட, சம்பூர்ணா அவனை முறைத்தாள்.

“எனக்கு வேலை.. இவனும் ஆபிஸ்ல லீவ் சொல்ல அழுறான்.. இதுல வழி இல்லனு வருத்தம் வேற” என்று திட்டி அவனை பிடித்துத் தள்ளி விட்டாள்.

“எல்லாத்துக்கும் எங்க சிஇஓ தான் காரணம்.. அவ பண்ணுறது தான்..” என்று பழியை அவள் மீதே போட்டான்.

“பேசாத மேன்.. இப்ப நாம அந்த வீட்டுக்கு போறோம்.. அத பத்தி மட்டும் பேசு” என்று அதட்டினான்.

“பேசிட்டா போகுது.. என் பொண்டாட்டி ஒன்ன சொல்லி நீங்க அத மறுத்தா அவ என்னை வீட்டை விட்டு துரத்திடுவா.. அதுனால வந்துடுங்க பாட்டி” என்று கையெடுத்து கும்பிட்டு வைத்தான்.

“ஆமா அத்த.. உங்க மகன கண்கலங்காம வச்சுருக்கனானு வந்து பார்த்துட்டு போங்க” என்று நக்கலடித்தாள் சம்பூர்ணா.

புவனும் சாதனாவும் சேர்ந்து கொள்ள, பேச்சுக்கு குறைவில்லாமல் நேரம் ஓடியது.

கடந்த கால காயங்களை அழிக்க முடியாவிட்டாலும் கடந்து செல்ல கை கொடுக்கும் உறவுகள் கிடைப்பது சுகம் அல்லவா?

வாசம் வீசும்

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்