Loading

சமுத்திரா – 20

கண்ணுக்கு தெரியாத ஒரு பெரிய உருவம் கப்பலை இடித்ததால் ஆட்டம் கண்ட கப்பல் அந்த கடல் நீரில் சில வினாடிகள் தத்தளித்து பின் நின்றது.

“ராட்சசன்னு க்ளுல வந்தது. நம்மள தேடி அது வந்துடுச்சு போலயே? நம்ம கப்பலுக்கடியில கடல்ல தான் ஏதோ இருக்கு..” என ரங்கா சொல்லியபடியே கப்பலின் கைப்பிடியை பிடித்தவாறு கீழே குனிந்து பார்க்க முனைந்தான். அவனின் அருகில் சென்று அனைவரும் கடலை எட்டி எட்டி பார்த்தனர்.

ஆனால், கடலில் நுரைப்பொங்க மேலெழும்பி அதே வேகத்தில் கீழிறங்கிய அலைகள் மட்டுமே தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தன. “ஏதோ நம்ம கப்பலை இடிச்ச மாதிரி இருந்துச்சு தான?” என ரங்கா சந்தேகமாக அனைவரையும் பார்த்தான்.

“அப்படி எதுவும் எனக்கு எதுவும் தெரியலையே டா..” என்ற ப்ரதீப்பின் குரல் முதலாவதாக வேகமாக வந்தது.

“டேய் ப்ரதீப். நீதான் கப்பல்ல நிற்க கூட முடியாம அந்தரத்துல தான சுத்திட்டு இருக்க. அப்போ உனக்கு எப்படி தெரியும்?” என்ற அமரன், “ஆமா ரங்கா கப்பலை எதுவோ மோதின மாதிரி தான் இருந்துச்சு.” என்று அமரனும் ரங்காவை போல் கப்பலின் கீழே எட்டி பார்த்தான்.

விலோ, “இவ்வளவு பெரிய கப்பலையே ஆட்டம் காண வைக்குதுனா.. என்ன வந்திருக்கும்? ஆனா அந்த கடற்கன்னி மட்டும் கொஞ்சம் கூட அசையாம இருக்கா பாருங்க..” என்றிட.

கடற்கன்னி அமைதியாக கப்பலின் முன்னே பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவளின் பார்வையை தொடர்ந்து அனைவரும் அங்கே பார்த்தனர். சரியாக அந்நேரம் டால்பின்கள், கப்பலின் முன்னே துள்ளி குதித்து விளையாடியபடியே கடலில் நீந்தியப்படி சென்றுக் கொண்டிருந்தன.

அதனை பிரமிப்பாக அனைவரும் பார்த்தனர். “அமர், நீங்க இதையெல்லாம் நம்ம உலகத்துலயே பார்திருப்பீங்க தான?” என ஷிவன்யா கேட்டிட,

“ஹ்ம்ம் ஆமா ஷிவ். மீன் பிடிக்க போறப்ப பார்த்திருக்கேன். டால்பின் போனா அது பின்னாடியே பலவகை மீன் கூட்டமா போகும். இப்படி டால்பின் விளையாடுறதை குறி வெச்சி கூட மற்ற மீன்களை பிடிப்போம்.” என டால்பினை பார்த்தபடியே சொல்லிய அமரனின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது. ஆறேழு டால்பின்கள் தொடர்ந்து கடலில் துள்ளி குதித்து விளையாடியதை பார்த்தவர்களுக்கு, பதட்டத்துடனும் பயத்துடனும் அவ்வளவு நேரம் இருந்தவர்களுக்கு அந்நேரம் அனைத்தும் அவர்களை விட்டு விலகுவதாக இருந்தது.

“இது தான் நீங்க சொன்னதா..” என குளரியபடியே மது குடுவையுடன் அங்கு வந்தான் டேனியல்.

“ஏன் மாஸ்டர் நாம எத்தனை முறை நடுகடல்ல இதை மாதிரி டால்பின்களை பார்த்திருக்கோம்? என்னமோ இது எங்கேயுமே நடக்காத மாதிரி ஓவரா பில்டப் கொடுக்குறீங்க?” என கையில் இருந்த மது குடுவையை மேலும் வாயில் சரித்தப்படியே கேட்டான். அவனை பார்த்த மற்ற மாலுமிகள் தலையிலேயே அடித்துக் கொண்டனர். டேனியலின் செயலில் பெண்கள் இருவரும் மறுப்பக்கம் ஒதுங்கிவிட்டனர்.

“ஹே! அப்படினா இதுதான் நம்ம கப்பலை இடிச்சதா? இவ்வளவு அமைதியா இருக்கிறதுக்கா அப்படி ஒரு பயங்கரமான க்ளு வந்தது?” சக்தி குழப்பமாக கேட்டான். டேனியலை விட்டுவிட்டு இப்பொழுது விளையாட்டில் வந்த குறிப்பை பற்றி நண்பர்கள் குழு யோசித்தனர்.

“இதுங்க குழந்தை மாதிரி சக்தி. க்ளுல ராட்சசன்னு போட்டிருந்ததே? இதுங்க கிளுக்காக வந்துருக்க வாய்ப்பில்லை.” என டால்பினை பார்த்தபடியே அமரன் கொல்லிக் கொண்டிருக்க, கப்பலின் முன்னே பெரிய கொடூரமான சுறா ஒன்று அவர்களை தாக்குவதற்கு பாய்ந்து வந்தது.

அவர்கள் இருந்த கப்பலுக்கும் டால்பின்களுக்கும் இடையில்

கடலின் உள்ளிருந்து பாய்ந்து வந்த சுறாவை பார்த்த கப்பலில் இருந்த மனிதர்கள் மட்டுமில்லாமல் கடலில் விளையாடி கொண்டிருந்த டால்பின்களும் பயந்து கடலிற்குள் சென்று மறைந்துக்கொண்டது.

ஆர்வத்துடனும் ஆச்சர்யத்துடனும் அந்த டால்பின்களை பார்த்துக் கொண்டிருந்த விழிகள் இப்பொழுது அச்சத்தில் உடல் நடுங்க ராட்சச சுறாவை விழித்தன. கோர பற்களும், தடித்த தடையும், பெருத்த உடலுமாக தோன்றிய சுறா கடலில் இருந்தபடியே கப்பலை மேலும் தாக்க தொடங்கியது. அதன் விளைவால் கப்பல் நடுக்கடலில் தத்தளிக்க தொடங்கியது.

சுறாவின் அச்சுறுத்தலில் பயந்த அனைவரும், “வேற வழியே இல்லை நாம கப்பலுக்குள்ள போய் தான் ஆகணும்.” என முடிவெடுத்தப்படி கப்பலுக்குள் செல்ல திரும்பினர். ஆனால் இம்முறை ராட்சசன் போன்று இருந்த சுறா கப்பலை கவிழ்க்கும் வண்ணம் ஒரே பக்கமாக இடித்தப்படி நகர்ந்தது. அதனால் கப்பல் ஒரு பக்கம் மொத்தமாக சாயத்தொடங்க, அனைவரும் திடமாக கப்பலை பற்றியபடி நின்றனர்.

ஒருபக்கமாக சாய்ந்துக் கொண்டிருந்த கப்பலில் இருந்த மது குடுவைகள் நிறைந்த அட்டைப்பெட்டிகளில் சில கடலில் சரிந்து விழத்தொடங்கின.

அதனோடு, மது போதையில் மது குடிவையுடன் சுற்றிக் கொண்டிருந்த டேனியலும் பிடிமானம் ஏதுமில்லாமல் கடலில் பொத்தென்று விழுந்தான்.

“ஐயோ! இந்த குடிகாரன் எதுக்கு இப்ப மேல வந்தான். தேவையே இல்லாம அவனும் மாட்டிக்கிட்டு இப்ப நமலையும் மாட்ட வைக்குறானே..” என ப்ரதீப்பின் குரல் காற்றில் வந்தது. ஒருப்பக்கமாக சாய்ந்துக் கொண்டிருந்த கப்பல் இப்பொழுது மறுப்புறமும் சாய்ந்துவிட்டு சமமாக கடலில் நின்றது.

“டேனியை எப்படியாவது காப்பாத்தனும். அந்த கயிறை எடுங்க..” என பரபரப்பாக குரல் கொடுத்த மார்ட்டின் வேகமாக அதனை கடலில் வீசினார். அதனுடன் சேர்த்து கடலில் நீந்துவதற்கு உதவும் காற்று நிறைந்த வளையத்தையும் தூக்கி வீசினர்.

டேனியல் ஒருபக்கம் விழுந்திருக்க அந்த சுறா மீண்டும் மறுபக்கத்தில் இருந்து கப்பலை தாக்க தொடங்கியது. ஆடவர்கள் அனைவரும் முயன்று டேனியலை மேலே இழுக்க முயற்சித்தனர். ஒருவழியாக அடித்து கொண்டிருந்த காற்றிலும், கடலலையிலும் முயன்று கயிறை பற்றினான் டேனியல்.

மீண்டும் கப்பல் சுறாவின் தாக்குதலுக்கு இரையாகி ஒரே பக்கமாக சாய, இம்முறை ஷிவன்யா கடலில் விழுந்துவிட்டாள். அந்நேரம், டேனியல் பிடித்து வைத்திருந்த கயிற்றையும் நழுவவிட்டான். யாருமே எதிர்பாராமல் நடந்த இந்த நிகழ்வில் அனைவரும் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றனர்.

இதுவரை நீச்சல் குளத்தில் மட்டுமே நீந்தியவளுக்கு இப்படி ஒரு பெரிய நடு கடலில் அதுவும் இருட்டில் விழுந்தது அச்சத்தையும் நடுக்கத்தையும் கொடுத்தது. கடல் நீர் வேறு உறையவைக்கும் குளிரில் இருக்க, கடலின் ஆழமும் அதிகமாக இருந்தது. தொடர்ந்து வந்த அலையில் அவளால் எதிர்நீச்சல் போடமுடியாமல் மூழ்கி மூழ்கி எழுந்தாள்.

“ஷிவ்..” என்று கத்திய நண்பர்களின் குரல் அடித்துக்கொண்டிருந்த காற்றில் மெதுவாக அவளின் செவியை தீண்ட தலையை உயர்த்தி அண்ணார்ந்து அவர்களின் கப்பலை பார்த்தவளிற்கு அங்கு சிறியதாக தெரிந்தனர் நண்பர்களின் கூட்டம். அதனை பார்த்தவளிற்கு மீண்டும் கப்பலில் ஏறுபோம் என்ற நம்பிக்கை சிறியதும் இல்லை.

சக்தி – ரங்கா; அமரன் – மார்ட்டின் மற்றும் ரிச்சார்ட் – விக்டர் என மூன்று குழுவாக பிரிந்த ஆடவர்கள் மூன்று கயிறை கடலுக்குள் போட்டனர்.

அந்த பக்கம் இருந்த சுறாவை காணவில்லை என்று பார்த்த விலோ, “அதை காணோம். அது போயிடுச்சு போல..” என அனைவரிடமும் அதனை தெரியப்படுத்தினாள்.

“அதுக்கு வாய்ப்பே இல்லை விலோ. அது இங்க தான் எங்கேயாவது இருக்கும் அது மறுபடி தாக்க வரதுக்குள்ள அவங்க ரெண்டு பேரையும் மேல தூக்கிட்டு நாம கப்பலுக்குள்ள போய்டனும்.” என்ற அமரன் பலம்கொண்டு கயிறை ஷிவன்யாவை நோக்கி வீசினான்.

அங்கு நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்தபடி அமர்ந்திருந்த கடற்கன்னியிடம் சென்ற விலோ, “உன்னால அவங்களை காப்பாற்ற முடியும் தான? நீ போய் அவங்கள காப்பாற்றேன் ப்ளீஸ்..” என கடற்கன்னியிடம் கைகூப்பி கெஞ்சிக்கேட்டாள் விலோ. ஆனால் அந்த மாயக்காரியோ சிறிதும் அசையாமல் அவ்விடத்தை விட்டு அகலாமல் இருந்துக்கொண்டாள்.

“ஷிவ் மூணு கயிறு போட்டிருக்கோம். எப்படியாவது ஒன்றையாவது பிடிக்க முயற்சி பண்ணு. நாங்க உன்னை மேல இழுக்குறோம்.” என கடலில் இருந்த அனைவரும் கத்தினர்.

“ஷிவ் கொஞ்சம் கயிறு கிட்டவரைக்கும் நீந்தி வா..” என்ற நண்பர்களின் கூக்குரல் தத்தளித்து கொண்டிருந்த பேதையவளை சென்றடையவில்லை.

இதில் முழுதாக மது போதையின் பிடியில் இருந்த டேனியல் வேறு ஷிவன்யாவின் பக்கம் வந்து அவளின் கையை பற்றிக்கொண்டான். “என்..என்னையும் மேல கூட்டிட்டு போ..” என உயிர் பயத்தில் அவளிடம் பிதற்ற வேறு செய்தான். மதுவின் உபயத்தால் அவனால் சரியாக நீந்த முடியாமல் தவித்தவன், கடலில் தத்தளித்து நீந்திக் கொண்டிருந்த ஷிவன்யாவையும் நீந்த முடியாவண்ணம் தொல்லை செய்துக் கொண்டிருந்தான்.

கப்பலுக்கும் அவர்களுக்கும் சிறிதளவு தொலைவு இருக்க, அதனை நீந்தி கடந்து தான் ஆக வேண்டும் என்ற நிலையில், அந்த இடைவெளியை மறைக்கும் வண்ணம் செங்குத்தாக கடலில் இருந்து  வெளிவந்தது அசுர சுறா.

“ஆ…அம்மா”

“மை காட்!”

என்ற ஷிவன்யா மற்றும் டேனியலின் அலறல் கடலையின் ஓசையையும் கிழித்துக்கொண்டு அவ்விடத்தை நிறைத்தது. அதனிடம் சிக்காமல் டேனியலும் ஷிவன்யாவும் நீந்தியபடியே மறுபுறம் தப்பிக்க பார்க்க அதற்குள் அசுர தாண்டவம் ஆட தொடங்கியது சுறா.

மேலிருந்து பார்த்த அனைவரும் பீதியில் உறைய அச்சத்துடன் விழியசைக்காமல் அவர்களையே பார்த்தனர்.

பயத்திலும், அழுகையிலும் கரைந்த படியே உயிரை கையில் பிடித்த ஷிவன்யா நீந்தியபடியே கப்பலை நோக்கி நகர அவளை பின்தொடர்ந்தான் டேனியல்.

அந்நேரம் யாரும் எதிர்பாராமல் கோரபற்கள் நிறைந்த வாயிலே டேனியலை கவ்வி பிடித்தது அந்த ராட்சச சுறா. சுறா தனது கூர் பற்களால் டேனியலை கடித்து அவனின் சதைகளை கிழிக்க அதனை கப்பலின் மேலிருந்து பார்த்தவர்களுக்கே தாளமுடியவில்லை.

ஆனால், அதனை அருகில் பார்த்த ஷிவன்யாவிற்கு உயிரின் கடைசி துளி வரை பயம் கவ்வ, “ஆ..” என்று அலறியபடியே வேறுபக்கம்  செல்ல தொடங்கினாள். அதற்கு மேல் அங்கு அந்த சுறாவல் நிகழ்ந்ததெல்லாம் கொடூரத்தின் உச்சம் தான்!

அதனை பார்த்த அதிர்ச்சியில் மேலும் நீந்துவதை நிறுத்திய ஷிவன்யா, மெல்ல மெல்ல கடலிலிற்குள் மூழ்க தொடங்கினாள்.

“ஷிவ்! தைரியமா இரு. அந்த சுறா இப்ப உன்னை கடிக்க வராது. கொஞ்சம் முயற்சி பண்ணி அந்த பக்கம் இருக்க கயிறை பிடி ஷிவ்.” என்ற ப்ரதீப்பின் குரல் காற்றில் வந்தது.

கடல் நீரில் மூழ்க தொடங்கியவள், “என்..எனக்கு பயமா இருக்கு. அ..அது என்னையும்..” என்று அழுதபடியே கடல் நீரில் முங்கி முங்கி எழுந்தவளின் கண்களுக்கு முன் அந்த கொடூர சுறாவின் அச்சுறுத்தும் செயல்கள் மின்னி மறைந்தன.

“ப்ளீஸ் ஷிவ்! நம்பிக்கையை கை விடாத. உன்கையில் தான் நம்ம மொத்த பேர் வாழ்க்கையும் இருக்கு. நம்ம ஆறு பேர்ல யார் இல்லைனாலும் நம்மால சத்தியமா கேமை முடிக்க முடியாது. அப்புறம் கடைசி வரைக்கும் இந்த உலகத்துல தான் இருக்கனும்.” என அவளுக்கு நம்பிக்கை ஊட்டினான்.

ஆனால், ப்ரதீப் சொன்னது போல் இல்லாமல் அவர்கள் அறுவரில் ஒருவர் இல்லாமல் ஐவரால் மட்டும் தான் இவ்விளையாட்டு முடிக்கப்படும்  என்று எப்பொழுதோ விதிக்கப்பட்டிருந்ததை அவர்கள் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்!

அதுவரை செய்தது போதுமென்று நினைத்த சுறா அதனின் தாண்டவத்தை நிறுத்திக்கொண்டது. அதனின் வாயில் செந்நிற குருதி வழிய அப்படியே கடலிற்குள் செல்ல தொடங்கியது.

அந்த குளிர் நீரில் மிதந்தபடியே இருந்த ஷிவன்யாவின் உடலில் இப்பொழுது நடுக்கம் அதிகரிக்க கண்கள் சொருக சோர்ந்தவளிடம், “ஷிவ். அந்த சுறா இப்ப உள்ள போயிடுச்சு. ப்ளீஸ் ஷிவ். உன்னால முடியும். கொஞ்சம் ட்ரை பண்ணு..” என்ற ப்ரதீப்பின் பேச்சில் கொஞ்சம் தைரியம் வர மெல்ல நீந்தியவள் அந்த காற்று நிறைந்த வளைவை பிடித்தபடியே அவர்கள் போட்ட கயிற்றை இடையில் இறுக்கமாய் கட்டிக்கொண்டாள்.

அடுத்து வேக வேகமாக அனைவரும் சேர்ந்து ஷிவன்யாவை கப்பலின் மேலே இழுத்தனர்.

மேலே வந்த ஷிவன்யா மூச்சு வாங்கியபடியே கீழே சரிய அவளின் கண்களும் மயக்கத்தில் சொருக தொடங்கின. அவளின் கைகால்களை சுடுபறக்க தேய்த்து அவளை சரிசெய்ய முயன்றனர் நண்பர்கள் குழு.

– சமுத்திரா வருவாள்

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்