Loading

சபதம் – 33

 

விருந்து புறத்ததூஉம் விலங்கு உடன் கொல்லும்
அருந்திறல் அரசன் அல்லன்;
பெருந்தகை உலகம் அவன் புறத்தது.

 

-புறநானூறு பாடல் எண் 45

 

 

பொருள் :

 

விருந்தினராக வந்தவரையும், நம்பிக்கையுடன் அருகில் வந்தவரையும் வஞ்சகமாகக் கொன்று விடும் ஒருவன், எவ்வளவு வலிமை கொண்டவனாக இருந்தாலும் உண்மையான வீர அரசன் அல்ல. அப்படிப்பட்ட துரோகி அரசனை இந்த உலகமே மதிக்காது, அவனை ஒதுக்கும்.

 

சூரிய ஒளி தங்கமாய்ப் பொழியும் அந்த பள்ளத்தாக்கின் நடுவே, இரு இராஜ்யங்களின் படைவீரர்கள் காக்கும் ஒரு பெரும் வெள்ளை கூடாரம் எழுந்திருந்தது. மூன்று நாட்களாகக் கத்தி, அம்பு, குண்டு எனக் கிழிந்துகொண்டிருந்த போர்க்களம் , அந்த மாலை அமைதியாக இருந்தது. அந்த அமைதி கூட பயமூட்டும் வகையில் கனமாக இருந்தது. கூடாரத்தின் உள்ளே, நீண்ட மேசை ஒன்று இரு தரப்பினரையும் பிரித்திருந்தது.

 

ஒரு புறம் ராணா மன்னன், அதிவார் மன்னன், இளவரசர் வீர், இளவரசர் ரணசூரன் மற்றும் இரு ராஜ்ஜியங்களின் முக்கிய மந்திரிகளும், ஹூன் வம்சத்தின் தற்போதைய தலைவர் முகத்தில் கடுமையுடன் அமர்ந்திருந்தனர்.

 

மற்றொரு புறம் முகலாய ஆளுநர் மிர்சா குத்புத்தீன், அவரது தளபதிகள் அமர்ந்திருந்தனர். காற்று கூட அங்கிருந்த இறுக்கத்தில் திணறியது.

 

மிர்சா குத்புத்தீன் நாற்காலியில் சாய்ந்து, தனது விரல்களால் மேசையை மெல்லத் தட்டியபடி, “இந்த சமாதான பேச்சுவார்த்தைக்குக் காரணம், வீணாக ராஜபுத்திர இரத்தம் மண்ணில் சிந்துவது எனக்கு உகந்ததாகப் படவில்லை என்பதால்தான். அதனால் எங்கள் உடன்பாட்டின் கீழ் உள்ள நிபந்தனைகள், அராவள்ளி இனி முகலாய ஆட்சிக்குள் வரும். மன்னர்கள் தங்கள் அரியணையைத் தக்கவைத்துக் கொள்ளலாம்… ஆனால் உங்கள் இளவரசர்களான வீரும் ரணசூரனும் முகலாயப் பேரரசுக்குக் கீழ் சேவை செய்ய வேண்டும்” என்றதைக் கேட்ட வீரின் தாடை இறுக, ரணசூரனின் கண்கள் கூர்மையடைந்தன.

 

மேலும் தொடர்ந்த மிர்சா குத்புத்தீன், “முகலாய அரசுடனான கூட்டணி, அது திருமணம், நட்பு, படை என்று எந்த வகையானதாக இருந்தாலும், எந்தக் கேள்வியும் இல்லாமல் ஏற்க வேண்டும்” என்று கட்டளையைப்போல சொன்னதும் இரு மன்னர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அந்தப் பார்வையில் கோபமும் அச்சமும் கலந்திருந்தது.

 

முதலில் அதிவார் மன்னன் பேசினார். “அராவள்ளி ராஜபுத்திரர்களின் உயிர். நாங்கள் சுதந்திர இராச்சியம்.”

 

அதைத் தொடர்ந்து ராணா மன்னன், “ஆனால் ஸ்வர்ணக் கதி வழியாக முகலாய வணிகத்திற்கு செல்ல அனுமதி அளிக்கிறோம்.” அதைக் கேட்ட குத்புத்தீனின் புருவம் சற்றே உயர்ந்தது.

 

அதிவார் மன்னன், “எங்கள் இளவரசர்கள் உங்கள் பேரரசுக்குச் சேவை செய்ய மாட்டார்கள்.
அவர்கள் தங்கள் மக்களுக்குச் சேவை செய்யக் கடமைப்பட்டவர்கள்.”

 

ராணா மன்னன், “மேலும்…எங்கள் திருமணக் கூட்டணிகளில்,முகலாயர்கள் தலையிட முடியாது. அது எங்கள் இரு ராஜ்யம் சம்பந்தப்பட்ட விஷயம்” என்று இரு அரசர்களும் மாறி மாறி தங்களது நிலைப்பாட்டை உறுதியாகக் கூறுவதை கேட்ட ஆளுநர் மிர்சாவின் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது.

 

மிர்சா குத்புத்தீன், “உங்கள் நிலையறிந்து பேசுவது புத்திசாலித்தனம் அரசே! இரு ராஜ்யங்களும் தனித்து செயல்பட வேண்டும், உங்கள் இளவரசர்களும் முகலாய ராஜ்யத்தின் கீழ் சேவை செய்ய ஏற்றுக் கொள்ளமாட்டீர்கள். உங்கள் ராஜ்யங்களுக்கிடையில் திருமண ஒப்பந்தம் நடந்தால் நாளை எங்களை எதிர்க்க மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்? அந்த திருமணம் நடந்தால் அராவள்ளி மிக வலுவாகிவிடும்.”

 

அதைக்கேட்ட வீர் முன் வந்து, “எங்கள் திருமணம் உங்கள் விஷயம் அல்ல.”

 

குத்புத்தீனின் கண்கள் மின்ன, “அராவள்ளியில் நடப்பது அனைத்தும் என் விஷயம் தான்.”

 

ரணசூரன் மேசையை பலத்து ஒருமுறை அடித்தவன், “போதும். நாங்கள் சமாதான உடன்படிக்கை பற்றி பேசவே இங்கு வந்தோம். எங்கள் ராஜ்யத்தை அடிமை சாசனமாக எழுதித் தருவதற்கு அல்ல” என்று ஆத்திரமாகக் கத்தியவனின் வார்த்தையில் கூடாரம் முழுவதும் அமைதியாகிவிட்டது.

 

மேலும் பல மணிநேரம் மாற்றி மாற்றி பேசியவர்கள் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் உடன்படிக்கை கைவிடப்படும் நிலையில் தள்ளாடிக் கொண்டிருந்தது.

 

இறுதியில் ஒரு முடிவுக்கு வந்த ரணசூரன் எழுந்து நின்றான். அவனது குரல் அமைதியாக இருந்தாலும், அதன் பின்னால் ஒரு பெரும் தியாகத்தின் சுமை இருந்தது.

 

ரணசூரன், “அரவள்ளி சுதந்திரமாகவே இருக்கும். ஆனால் ஸ்வர்ணக் கதி வழியாக
முகலாய வணிகம் செல்லலாம். அதை நாங்கள் எதிர்க்கப் போவதில்லை” என்றவனின் வார்த்தையில் குத்புத்தீன் அவனை ஆராய்ந்தார்.

 

மேலும் தொடர்ந்த ரணசூரன், “இளவரசர் வீர் மற்றும் இளவரசி யசோதராவின் திருமணம் ஒப்பந்தத்தின் படி நடக்கும்” என்றவனைத் தடுக்க வந்த முகலாய தளபதியை கை நீட்டி தடுத்தவன், “அதற்குப் பதிலாக…நான் ஒரு முகலாய அரச குமாரியைத் திருமணம் செய்கிறேன். அல்லது உங்கள் அரச குடும்பத்தில் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்ய சம்மதிக்கிறேன்” என்றதும் கூடாரம் உறைந்தது.

வீர் அதிர்ந்து எழுந்தவன், “சூரா….என்ன செய்து கொண்டிருக்கிறாய். நீ இப்படிச் செய்ய வேண்டிய காரணம்தான் என்ன?” என்றவனை ரணசூரன் பார்க்கவே இல்லை.

 

அவர்களை பார்த்த குத்புத்தீன் முன் சாய்ந்து, ஆர்வத்துடன், “நீ முகலாயர்களுடன் உன்னை இணைக்கத் தயாரா?” என்றதும் ரணசூரன், “அராவள்ளியை காப்பாற்ற வேண்டுமானால்…
ஆம் நான் எதை செய்யவும் தயார்.”

 

வீர் கோபத்தில் கொந்தளித்தவன், “தியாகம் செய்ய துணிகிறாயா சூரா! வேண்டாம் நண்பா இது எனக்கு நீ தரும் தண்டனை என்றால், இப்படிப்பட்ட தண்டனைக்கு என்னை உயிரோடு கொன்றிருக்கலாம். அரவள்ளிக்காக போராடி உயிரை விடுவோம் சூரா… இதை மட்டும் செய்து என்னை உயிரோடு கொன்றுவிடாதே. அப்படி நீ முடிவெடுத்தால் நானும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன், எனது திருமணம் ராணா ராஜ்யத்தின் இளவரசியோடு நடப்பதை நான் தியாகம் செய்கிறேன்”

 

நண்பர்களின் இந்த நட்பை அனைவரும் வியந்து பார்க்க, மாதங்கள் கடந்து முதன்முறை நண்பன் அருகில் வந்த ரணசூரன், “மீண்டும் மீண்டும் என்னை காயப்படுத்துகிறாய் வீர். நீ யசோதா மேல் கொண்ட காதலுக்காகவா நான் இதை செய்கிறேன் என்று நினைத்தாய். அவ்வளவு தான் நீ என் மேல் கொண்ட நம்பிக்கையா?” என்றவனை தடுக்க வந்த வீரை, ஒரே பார்வையில் நிறுத்திய ரணசூர், “என்னுடைய கோபம், வேறு யார் மூலமாகவோ உன் காதல் எனக்கு தெரியவந்ததே என்பது தான். உன்னை விட சிறந்த துணை யசோதராவுக்கு கிடைக்காது நண்பா. நண்பனாக நான் தோற்றுவிட்டேன். ஆனால் ஒரு அண்ணனாக என் தங்கையின் துணை நீ என்பதில் பெருமை கொள்கிறேன்” என்றபடி நண்பனை இறுக தழுவிக்கொண்டான்.

 

இரு நண்பர்களின் மாதங்கள் கடந்த இந்த இணைவில் இருவரின் கண்களிலும் கண்ணீர் ததும்பியது.

 

அவர்களின் இணைவை பார்த்திருந்த மிர்சா குத்புத்தீன் ஒருவித ஏளன புன்னகையுடன், “மிக உயர்ந்த தியாகம், இளவரசே. ஆனால்… போதாது” என்றபடி எழுந்தவன், “அரவள்ளி மண்டியிட வேண்டும் அல்லது… அராவள்ளி பற்றி எரிய வேண்டும்.”

 

அதைக்கேட்ட இரு மன்னர்களும் எழுந்தனர். ரணசூர் புருவங்களை சுருக்கியபடி, “அப்படியானால்….?” என்றவனின் காதுகளில் தூரத்தில் பீரங்கிகளின் சத்தம் கேட்க, அனைவரும் அதிர்ந்து ஆளுநரை பார்க்க, மிர்சா குத்புத்தீன் கிண்டலாக வணங்கியபடி அங்கிருந்து வெளியேறினார்.

 

குத்புத்தீன் கூடாரத்திலிருந்து வெளியேறிய அடுத்த நொடி, பூம்!

ஒரு பீரங்கி வெடித்தது. அதன் பின் இன்னொன்று.

பூமி அதிர்ந்தது. கூடாரம் கிழிந்தது. குன்றுகளிலிருந்து அம்புகள் மழைபோல் விழுந்தன.

சமாதானக் கூட்டம் முடிவதற்கும் முன் முகலாயப் படை தாக்குதல் தொடங்கிவிட்டது.

வீரும் ரணசூரனும் வாளை எடுத்துக் கொண்டு வெளியே பாய்ந்தனர்.

 

அராவள்ளி படைகள் சிதறின. படைகள் போருக்கு தயார் ஆகாமல் திடீர் தாக்குதலில், குழப்பத்தில் சிக்கினர். ஸ்வர்ணக் காடி முழுவதும் அழிவின் புயல் வெடித்தது. துரோகம் தொடங்கிவிட்டது. அராவள்ளி… தயாராக இல்லை.

 

குன்றுகளின் மேல் இருந்து அம்புகள் மழைபோல் விழுந்தன. கவசமில்லாத அமைச்சர்கள் அங்கேயே விழுந்தனர். முகலாய குதிரைப்படை சமாதானக் கொடிகளைத் தாண்டி மிதித்தபடி முன்னேறியது.

வீரர் ரணசூரனின் கையைப் பிடித்து, “இது திட்டமிட்ட துரோகம்” என்றதும் ரணசூரனின் கண்கள் தீப்பொறி பறக்க, “அப்படியானால்…….சுவாசம் இருக்கும் வரை போராடி மடிவோம்” என்றபடி முன்னேறினர்.

 

ஆயிரம் துப்பாக்கிகள் ஒரே நேரத்தில் முழங்கின. அந்த சத்தம் மலைகளைப் பிளந்தது.

ராணா யானைகள் பயத்தில் எழுந்தன. அதிவார் குதிரைப்படை சிதறியது. மன்னர்கள் கட்டளைகள் கொடுத்தாலும் போர்க்களம் ஏற்கனவே புகை, இரத்தம், குழப்பத்தில் மூழ்கியிருந்தது.

 

அழிவின் நடுவிலும், இரு இளவரசர்கள் மட்டும் உறுதியாக நின்றனர். ஒரு முகலாய ஈட்டி வீரன் வீரை நோக்கி பாய்ந்தான். வீரர் தாழ்ந்து, அவனை குதிரையிலிருந்து கீழே தள்ளி, வாளை கொண்டு அவனது கைகளை வெட்டி வீழ்த்தினான்.

 

மூன்று துப்பாக்கி வீரர்கள் ரணசூரனை குறிவைத்தனர். ரணசூரன் விழுந்த யானையின் பின்னால் பாய்ந்து, ஒரே அசைவில் மூவரையும் வீழ்த்தினான்.

 

வீரும் ரணசூரனும் ஒருவரின் முதுகில் ஒருவர் நின்றபடி போராடினர். தங்களை பல வீரர்கள் சுற்றி வளைத்திருக்க,வீர், “சூரா உன் வலப்பக்கம்!” என்றதும் தலையசைக்க ரணசூரன் மின்னல் போல பாய்ந்தான்.

 

அருகே முகலாய வீரர்களை எதிர்த்து போரிட்டு கொண்டிருந்த அதிவார் மன்னன் மார்பில் ஒரு துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததால் குதிரையிலிருந்து கீழே விழுந்தார். ராணா மன்னன் அவரை அடைய முயல, அதனைப் பார்த்த ஒரு முகலாய குதிரைப்படைத் தளபதி அவரது மார்பில் ஆழமாக வாளை இறக்கி இருந்தான்.

 

 

இரு மன்னர்களும் ஸ்வர்ணக் காடியின் மண்ணில் விழுந்து, வீரர்களை போல் உயிர் நீத்தனர். அதனை கண்ட வீர் அவர்களின் பெயர்களை சொல்லி கத்தினான். ரணசூரனின் உள்ளமும் நொறுங்கி சிதறியது.

 

அதனை மிர்சா குத்புத்தீன் திருப்தியுடன் பார்த்து, “தலை விழுந்தால்…உடலும் விழும்” என்றபடி சிரித்தான்.

 

இணைந்த அதிவார் மற்றும் ராணாவின் படைகள் முற்றிலும் தகர்ந்தன. ராணா யானைகள் ஒன்றன்பின் ஒன்றாக விழுந்தன. அதிவார் குதிரைப்படை குறுகிய பள்ளத்தாக்கில் தள்ளப்பட்டது. வில்லாளர்கள் திரளுவதற்குள் கொல்லப்பட்டனர். காலாட்படை பீரங்கிக் குண்டுகளில் நசுங்கியது. தங்கப் பள்ளத்தாக்கு சிவந்தது. வீரும் ரணசூரனும் வீரத்துடன் போராடினாலும், முகலாயப் படை மிகப் பெரியது, மிகக் கொடியது. அவர்களின் துரோகத்தால் ராஜபுத்திரர்களின் வீர ரத்தம் மண்ணில் வீழ்ந்தது.

 

ஸ்வர்ணக் காடியில் இளவரசர்கள் உயிர் பிழைக்கப் போராடிக்கொண்டிருக்க, பல மைல் தூரத்தில் மற்றொரு துயரம் வெடித்தது. சிறிய படையுடன் இருந்த ராணா கோட்டை
திடீரென இரண்டாவது முகலாயப் படையால் சூழப்பட்டது.

 

கோட்டைக் கதவுகள் பீரங்கிக் குண்டுகளில் அதிர்ந்தன. சுவர்கள் பிளந்தன. பெண்கள், குழந்தைகள் அலறினர். காயமடைந்த ஹூன் வம்ச வீரர்கள் உள் கோட்டையை காக்க முயன்றனர். ராணா கோட்டை விழுந்துகொண்டிருந்தது.

 

வீர் கிழக்கில் இருந்து வரும் முகலாய உதவி படைகளைப் பார்த்தான். ரணசூரன் தூரத்தில் எரியும் ராணா கொடியைப் பார்த்தான். அந்த நிமிடம் இருவரும் ஒரு உண்மையை உணர்ந்தனர்.

 

சமாதான கூடாரத்தில் முதலில் கேட்ட பீரங்கி வெடிப்பு, கோட்டை முற்றுகையின் போது வெடித்த குண்டு என்பதை உணர்ந்த இருவரின் உள்ளமும் துரோகத்தில் வலியில் கொதித்துக் கொண்டிருந்தது.

இணைந்த படைகள் சிதறின. மன்னர்கள் இறந்தனர். கோட்டை முற்றுகையில் விழுந்தது.
இளவரசர்கள் சூழப்பட்டனர். ஸ்வர்ணக் காடி ஒருகாலத்தில் அராவள்ளியின் பொற்கதவாக இருந்தது, இப்போது அது ராஜபுத்திரர்களின் கல்லறையாக மாறியது. அந்தநாள் முடிவடையவில்லை. துரோகத்தின் தாண்டவம் இப்போது தான் ஆரம்பமாகிறது.

 

ரணசூரன் வந்துவிட்டான்……..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்