Loading

அத்தியாயம் – 29

 

பெட்டியை தூக்கிக்கொண்டு தன் காரை நோக்கி வந்து கொண்டிருந்த ஸ்ரீயை வெட்டவா குத்தவா என பார்த்துக் கொண்டிருந்தான் ஹரி.

 

உள்ளுக்குள்ளே ஆத்திரம் நீர் பூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருந்தாலும் எதுவும் சொல்லாமல் அவளுக்காக முன் பக்க கதவை திறந்து விட்டு சுற்றி வந்து டிரைவர் இருக்கையில் அமர்ந்தவன் காரை பட்டென்று அரைந்து சாத்தினான்.

 

அந்த சப்தமே அவனின் கோபத்தின் அளவை சொல்லாமல் சொல்ல, ஸ்ரீக்கு உள்ளே உதறல் எடுத்தது, பயந்து கொண்டே காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

 

அவள் அமர்ந்தும் கார் எடுக்காமல் இருக்க ,என்னவாயிற்று என அவனைத் திரும்பிப் பார்க்க, அவன் பார்வை சென்ற இடத்தைப் பார்த்தவளுக்கு அப்போது தான் இன்னும் சீட் பெல்ட் அணியவில்லை என்ற நினைவு வர, வேகமாக சீட் பெல்ட்டை அணிந்து கொண்டே மனதிற்குள் ,”டிராபிக் ராமசாமி கூட இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருந்துருக்க மாட்டாரு போல, பேசாம இவன் ஸாப்ட்வேர் கம்பெனியை விட்டுட்டு டிராபிக் போலீஸா போகலாம்..சரியான ரூல்ஸ் ராட்சஷன்” என முனுமுனுத்துக் கொண்டாள்.

 

அவன் இப்போது காரை ஸ்டார்ட் செய்து மிதமான வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தான்.

 

அதற்கும் அவள் மனதில் ,” எல்லா படத்துலயும் சரி கதையிலயும் சரி ஹீரோ கோவமா இருந்தா அப்படியே வண்டி அவர் கையில சீறிப்பாயும்னு தான கேள்விப்பட்டோம், இந்த எருமை எவ்ளோ கோபமா இருந்தாலும் எழுபதை கூட தாண்ட மாட்டேங்குது இதுக்கெல்லாம் ஹீரோ போஸ்ட் கொடுத்த அந்த ஆத்தரை மிதிக்கனும்” என இப்போது சற்று சப்தமாகவே அவள் உளறிவிட,அமைதியாக இருந்த காரில் அவள் முனுமுனுப்பு அவனுக்கு தெள்ளத் தெளிவாக கேட்டது.

 

“கார் கையில சீறிப்பாஞ்சா அடுத்த நிமிஷம் நீயும் நானும் சீரியசா ஐ.சி.யூல தான் போய் படுத்து கிடக்கனும்.. அதெல்லாம் கதைக்கு கேட்க தான் நல்லா இருக்கும் கனவு காணாம நிஜ உலகத்துக்கும் கொஞ்சம் வா” என அவளிற்கு பதிலளித்தாலும் அவனின் பார்வையோ சாலையில் கவனமாக இருந்தது.

 

“ஆஊன்னா லெக்சர் கொடுக்க ஆரம்பிச்சிருவான்” என மனதிற்குள் அவனை திட்டியவள் , அங்கிருந்த எஃப் எம்மை ஆன் செய்தாள்.

 

அவள் நேரம் அவள் போட்டதும்,

 

“அழகே உன்னை பிரிய மாட்டேன்

உன்னை பிரிஞ்சு வாழ மாட்டேன்

அது சொர்க்கம் என்றாலும்

நரகம் என்றாலும் கூடவே வருவேன்

உன்னோடு சேர கூட வாழ

உயிரை கூட தருவேன்”

 

எனப் பாட, அவளுக்கு பக்கென்று இருந்தது.

 

அவனும் அப்போது அவளைத் தான் திரும்பி பார்த்து ஒரு இகழ்ச்சியான புன்னகையை சிந்திவிட்டு மீண்டும் திரும்பி விட்டான்.

 

“அய்யோ ஸ்ரீ கேவலம் ஒரு எஃப் எம் கூட உனக்கு எதிரா சதி பண்ணுதே ..இவன் வேற கன்றாவியா கருணாஸ் மாதிரி ஒரு சிரிப்பு சிரிக்கிறான்.. ஏண்டா உங்களுக்கு வேற பாட்டே கிடைக்கலையா” என சலித்துக் கொண்டவள் (மனதிற்குள் தான்) ,

 

அடுத்த அலைவரிசைக்கு மாற்றினாள். அதிலோ,

 

“போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்..

போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்”

 

என்ற பாடல் ஒலித்து அவளை பார்த்து கேலி செய்தது.

 

“க்கும் இவன் இறப்பானாக்கும்.. இவன்லாம் போன ஒரு மணி நேரத்துலயே கண்டுபிடிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு போய் கும்ம போறான்… சே ஸ்ரீ இவன் அதுக்குள்ள வந்து கூப்பிடுவான்னு தெரியாம நிஷா கொடுத்த நாலு வடையில ஒரு வடையை வேற மிச்சம் வச்சிட்டு வந்துட்டியே ..அடி வாங்க தெம்பிருக்குமா” என தனக்குள் பேசிக்கொள்ள,

 

உள்ளிருந்து எட்டிப்பார்த்த மனசாட்சி ,”ஹாய் டி குட்டச்சி!!” என குரல் கொடுத்தது ,

 

“வந்துட்டாயா வந்துட்டா..என்ன டா ரொம்ப நாளா ஆளை காணோமேன்னு பார்த்தேன்” என அவள் புலம்ப,

 

“அடடே என்னை ரொம்ப மிஸ் பண்ண போலயே..கல்யாணம் தான் ஆய்ருச்சே இனிமேலாச்சும் கழுதைக்கு புத்தி வந்திருக்கும் நம்ம ஃப்ரீயா அப்படியே கலிபோர்னியாக்கு போய் காத்து வாங்கிட்டு வரலாம்னு போய்ட்டு வந்தா அதுக்குள்ள பிரச்சனையை இழுத்து வச்சிருக்க” என மனசாட்சி அவளை சாட,

 

“கழுதையா நீ ரொம்ப ஓவரா தான் போற..நான் ஒன்னும் பண்ணலையே ” என அவள் சிலிர்த்துக் கொள்ள,

 

 

‘யாரு நீயா’ என்பது போல் அவளை மேலிருந்து கீழாய் ஒரு லுக் விட்டது மனசாட்சி,

 

அதில் அவளுக்கு வெட்கம் வர ,”ச்சி இப்படியெல்லாம் பார்க்காத எனக்கு வெட்க வெட்கமா வருது..இதெல்லாம் ஹரி மட்டும் தான் பண்ணனும்” என அவள் கால்களால் காரை ஓட்டை போட்டுக்கொண்டு கூற,

 

“ச்சை என்ன பீலிங்க்ஸா ..த்தூ சகிக்கலை தயவு செஞ்சு அதை நிப்பாட்டு பாவம் ஹரி இதையெல்லாம் பார்த்து அவன் எப்படி இன்னும் உயிரோட இருக்கானோ” என மனசாட்சி அவனுக்காக பரிதாபப்பட்டது..

 

“உனக்கு பொறாமை என்னை மாதிரி உன்னால வெட்கப்பட முடியலைன்னு” என அவள் சண்டைக்கு வர,

 

“வேணாம் என் வாயைக் கிளராம இப்போ என்ன பிரச்சனைன்னு சொல்லித் தொலையும் என்னைத் பிடித்த தொந்தரவே” என மனசாட்சி அவளைத் திட்ட,

 

“ஹூம்ம்ம் எல்லாம் என் நேரம் நீயெல்லாம் என்னை திட்ற பார்த்தியா” என நினைத்தவள் நேற்று இரவிலிருந்து நடந்ததை நினைத்து பார்க்க ஆரம்பித்தாள்.

 

நேற்று இரவு வரை கார்த்திக் , வர்ஷூ சண்டையிட்டுக் கொண்டே சந்துவை சிரிக்க வைத்துக் கொண்டிருக்க, நடுவில் சித்துவும் அவர்களுடன் ஐக்கியமாகி விட்டான்.

 

 

இவளுக்கு மட்டும் அங்கு ஏனோ தான் வேண்டாதவளாகிப் போன உணர்வு தோன்ற, மெதுவாக அவ்விடம் விட்டு எழுந்து தங்கள் அறைக்குச் சென்று படுத்துக் கொண்டாள்.

 

ஹரிக்கு பெரியவர்களிடம் கத்தி விட்டு வந்தது ஒரு மாதிரியிருக்க, அவர்களிடம் மன்னிப்பை வேண்ட நினைத்தவன் ஸ்ரீ சென்று படுத்ததும் அவனும் வெளியே வந்தான்.

 

அழுது அழுது ஓய்ந்து போய் அமர்ந்திருந்த தன் அன்னையின் அருகில் வந்தவன் எதுவும் பேசாமல் அவர் மடியில் படுத்துக் கொள்ள,

 

அவனை வலி நிறைந்த கண்களோடு பார்த்தவரின் கரம் தானாக தன் மகனின் சிகைக்குள் சென்று அதை வருடிக் கொடுத்தது.

 

“என்னை மன்னிச்சிருங்க மா ஏதோ ஒரு கோபத்துல அப்படி பேசிட்டேன்” என தவறு செய்துவிட்டு முழிக்கும் சிறுபிள்ளையாய் அவரின் மன்னிப்பை யாசிப்பது போல் அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவனின் மன்னிப்பை அவருக்கு மேலும் வலியைத் தர இன்னொரு கரம் கொண்டு அவன் வாயை பொத்தியவர் ,”நீ பேசியது எல்லாம் சரி தான் கண்ணா ..எல்லாத் தப்பும் எங்க மேல தான்னு ரொம்ப தாமதமா எங்களுக்கு புரிய வச்சிருக்க, இதை நாங்க முன்னாடியே புரிஞ்சிட்டு இருந்த உங்க எல்லாரோட வாழ்க்கையும் இந்நேரம் எவ்வளவு சந்தோஷமா போய்ருக்கும் ” என அவர் வருந்த,

 

“ப்ளீஸ் அம்மா இது எல்லாம் நடக்கனும்னு விதி நடந்திருச்சு..இனிமேல் அதைப் பத்தியே பேசாம எப்படி நம்ம சந்துவை குணப்படுத்தி எப்பயும் போல சந்தோஷமா இருக்கலாம்னு மட்டும் யோசிக்கலாம் மா..ப்ளீஸ்..இப்போ நீங்க எல்லாரும் அழுகுறது எனக்கு தான் ரொம்ப கஷ்டமா இருக்கு ” என மூக்கைச் சுருக்கிக் கொண்டு அவன் கெஞ்ச, பெற்ற மனம் அவன் செயலில் பாகாய் உருகி விட்டது.

 

“சரிங்க பெரிய மனுஷா இனிமேல் நீங்க என்ன சொல்றீங்களோ அதையே நாங்க செய்றோம்” என அவன் மூக்கைப் பிடித்து செல்லமாக ஆட்டி சிரித்தார் கலை.

 

“இதான் என் அம்மாவுக்கு அழகு மை ஸ்வீட் டார்லிங்” என எழுந்து அவர் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சியவன் அவருக்கு ஒரு முத்தத்தை பரிசளித்துவிட்டு அடுத்து தன் கால் மாட்டில் அமர்ந்திருந்த அத்தைக்கு முன் சென்று மண்டியிட்டு அமர்ந்தவன் தன் தோப்புக்கரணம் போடுவது போல் தன் கையால் காதை பிடித்துக் கொண்டு “சாரி அத்தை” என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க,

 

அவனின் அந்த குழந்தைத் தனமான செயலில் மனம் மயங்கியவர் அவன் காதைப் பிடித்துத் திருகி ,”படவா என்னமா பேசுன?? என்னை விட என் பொண்ணு சார்க்கு முக்கியமா போய்ட்டாளோ ..இந்த அத்தைகிட்ட இருந்து தான் அத்தை பொண்ணு வந்துச்சு அதை மறந்துறாத மருமகனே” என கிண்டல் செய்ய,

 

“அது என்னமோ உண்மை தான் அத்தை எனக்கு இந்த மாதிரி ஒரு ராட்சஷ குட்டை கத்திரிக்காயை பெத்து வளர்த்து என் தலையில கட்டுனதுக்கு உங்களுக்கு பெரிய உம்மா” என தன் அத்தையின் கன்னத்தை ஈரம் செய்தவன் அவர் அடிப்பதற்குள் எழுந்து தன் தந்தையிடம் ஓடி விட்டான்.

 

அவரைக் கண்டதும் அவன் தலை தானாக குனிய ஏதோ சொல்லப்போனவனின் வாயை மூடியவர், ‘நீ எதுவும் சொல்லத் தேவையில்லை கண்ணா உன்னை நானறிவேன்’ என்பது போல் அவனைக் கட்டிக் கொண்டார்.

 

அதன் பின் ஒவ்வொருவரிடமும் பேசி சமாதானப்படுத்தி செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தான் ஹரி.

 

தாயின் மடியில் தலையை வைத்து, அத்தையின் மடியில் காலை வைத்து நிம்மதியாக படுத்துக் கொண்டே அங்கிருந்த மிக்சரை அவன் காலி செய்து கொண்டிருக்க, சரியாக கார்த்திக்கிற்கு மூக்கு வேர்த்து அங்கு வந்து சேர்ந்தான்.

 

சந்துவிற்கு இரவில் மாத்திரை உண்டு என்பதால் அவள் அதை சாப்பிட்டதும் உறங்கி விட, சித்து அவள் அருகிலே அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு அவளுக்கு தட்டிக் கொடுத்துக் கொண்டு அமர்ந்திருந்தான் வர்ஷூவும் அங்கேயே அமர்ந்து அண்ணனனுடன் பேசிக்கொண்டிருக்க, கார்த்திக் அவர்களுக்கு தனிமை கொடுத்து வெளியே வந்தான்.

 

அங்கிருந்தவர்களை பார்த்துக் கொண்டே ஆதிராவிற்கும் விஜய்க்கும் நடுவில் சென்று அமர்ந்த கார்த்திக் ,” என்ன மாப்பிள்ளை இங்க ஒரே பாச ஆறா ஓடுது போல, பார்த்துடா உங்களுக்கு எதுவும் ஜலதோஷம் பிடிச்சுக்கலையே” என் கிண்டல் செய்ய,

 

“அதை எங்களை பிரிச்சு விட்டுட்டு தான் கேட்பியா டா வெளங்காதவனே” என விஜய் மனைவியை விட்டு தள்ளி அமர்ந்த கடுப்பில் கூற,ஆதிரா அவனின் முகம் போன போக்கைப் பார்த்து கலுக்கெனச் சிரித்தாள்.

 

“சிரிப்பா டி சிரிக்குற..இரு நம்ம வீட்டுக்கு போனதும் உன்னை வச்சுக்கிறேன்” என மனதில் கறுவிக் கொண்டான் விஜய்

 

“ஹிஹி எல்லாம் ஒரு நல்ல எண்ணம் தான் மச்சான்… நானும் ஹரியும் மட்டும் எங்க பொண்டாட்டிங்களை விட்டு பிரிஞ்சு இருக்கோம் நீ மட்டும் ஒன்னா இருந்தா சாமி குத்தம் ஆய்ரும்ல அதான் ” என சிரித்துக் கொண்டே கார்த்திக் பதிலளிக்க,

 

“நல்லா வருவீங்க டா..உங்க குடும்பத்துல போய் பொண்ணெடுத்தேன் பாரு என்னையை சொல்லனும்” என விஜய் சலித்துக் கொள்ள,

 

 

“என்ன சொன்னீங்க” என ஆதிராவின் குரலில் , கப்சிப் என வாயை மூடிக் கொண்டவன் ,”உங்க குடும்பத்துல பொண்ணெடுத்தது நான் பூர்வ ஜென்மத்துல பண்ண புண்ணியம்னு சொன்னேன் மா” என அசடு வழிந்தான்.

 

“அந்த பயம் இருக்கட்டும்” என ஆதிரா கெத்தாக கூற, அவளுக்கு திருஷ்டி கழித்த கார்த்திக் “அப்படி சொல்லுடா என் செல்லக்குட்டி” என கூறிக்கொண்டே அவள் மடியில் ஹரி படுத்ததைப் போல் படுத்துக் கொண்டு காலை தூக்கி விஜயின் காலில் மேல் வைத்து ஒய்யாரமாக படுத்துக் கொண்டான்.

 

“அடேய் வெளக்கெண்ணெய் என்ன டா பண்ற” என விஜய் கடுப்புடன் கத்த,

 

“சும்மா எங்க அண்ணனை திட்டாதீங்க..பாவம் அவர் தூங்கட்டும்” என விஜயை அதட்டியவள்,”நீ தூங்கு கார்த்திக்” என அவனை தட்டிக் கொடுத்தாள்.

 

“ஆமா இப்போ தான் உங்க அண்ணன் பொறந்துருக்க கைப்பிள்ளை பாரு வேணும்னா தொட்டில்ல போட்டு ஆட்டேன்.. நல்லா தின்னு தின்னு வீங்கிப் போன வெங்காயம் மாதிரி இருக்கான்..கருமம் காலை மூஞ்சிகிட்ட கொண்டு வராத டா பரதேசி” என இருவரையும் திட்டிக் கொண்டே அந்தப்பக்கம் திரும்பிப் பார்க்க, அங்கு ஹரி ஒய்யாரமாக படுத்துக் கொண்டிருக்க, பத்மினி அவனுக்கு பாதுஷாவை ஊட்டிக் கொண்டிருந்தார்.

 

“நல்ல குடும்பத்துல வந்து மாட்டுனடா விஜய், மாப்பிள்ளைன்னு மரியாதை இங்க இருக்க எவனுக்காச்சும் இருக்கா மரியாதை கொடுக்க வேண்டிய மச்சினன் ஒருத்தன் நீலாம்பரி மாதிரி காலால என் கன்னத்துல கோலம் போட்டுட்டு இருக்கான் இன்னொருத்தான் பக்கம் பக்கமா டயலாக் பேசிட்டு பத்மினி அத்தை கையால பாதுஷா தின்னுகிட்டு இருக்கான். ஹூம்ம் பொறந்த வீடே பரவாயில்லை போல, அங்கயாச்சும் மரியாதை கொடுக்கலைனா கூட மனுஷனா மதிச்சாய்ங்க ஆனா புகுந்த வீட்டுல உன் மானம் கப்பல் ஏறுது டா” என தனியாக அவன் பாட்டில் புலம்ப,

 

அங்கு வந்த பாட்டி ,”என்ன மாப்பிள்ளை தனியா பேசிக்கிட்டு இருக்கீங்க..அடியே ஆதிரா இதெல்லாம் வளர விடுறது நல்லதுக்கு இல்லை..வெரசா ஒரு டாக்டர் கிட்ட காட்டிப்புடனும் நாளைக்கு மாதவனை வரச் சொல்றேன்” என அவனை வாரியதும் இல்லாமல் இலவச அறிவுரை வேறு வழங்க ,

 

“வேணாம் வலிக்கிது அழுதுருவேன்” என்ற நிலமையில் விஜய் இருந்தான்.

 

அவனைப் பார்த்து மொத்த குடும்பமும் தங்கள் கவலையை மறந்து கொல்லென நகைக்க, அவனுக்கு இப்போது தான் மனம் நிறைந்து இருந்தது.

 

அறைக்குள் இருந்த ஸ்ரீ இரவு வெகு நேரம் வரை உறங்காமல் தான் செய்த தவறுகளை நினைத்து வருந்தியவள் , இதில் தான் இவ்வளவு செய்தும் தன்னைத் தாங்கி பேசும் கணவனைக் கண்டு அவன் மீதுள்ள காதல் பல மடங்கு பெருக அடுத்த நிமிடமே நீ அந்த காதலுக்கு தகுதியானவள் தானா என அவளின் மனமே அவளைச் சாட அவளுக்கு நரக வேதனையாய் இருந்தது.

 

சரியாக அதே சமயம் பக்கத்து அறையிலிருந்து சந்து தூக்கத்திலே அலறுவது அந்த நிசப்தத்தில் அவள் காதில் தெள்ளத் தெளிவாக விழுந்தது.

 

மற்றவர்கள் அனைவரும் இரவு வெகுநேரம் வரை உரையாடிவிட்டு ஹாலிலே படுத்துவிட, அவர்களுக்கு இவளின் சப்தம் கேட்கவில்லை ஆனால் பக்கத்து அறையில் உறங்காமல் விழித்திருந்த ஸ்ரீக்கு அது கேட்டுவிட, அவள் அலறல் இவளின் நெஞ்சைப் பிசைந்தது.

 

 

“ஸ்ரீ ..நான்..வே..ணும்னே பண்..ணலை சாரி .. அண்ணா பாவம்” என்று அவள் அலறலுக்கு நடுவில் ஆழ்மனதில் இருந்த வார்த்தைகள் பிதற்றலாக வெளியே வர,

 

அதை தினமும் கேட்கும் சித்து அவள் தலையை தடவிக் கொடுத்து, கைகளை அழுத்தி பிடித்து ,”ஒன்னும் இல்லை சது மா இங்க பாருங்க இங்க நான் தான் இருக்கேன்ல.. எதுவும் நினைக்காம தூங்குங்க டா செல்லம்” என குழந்தையை சமாதனப் படுத்துவது போல் தன் மாரில் அவளை போட்டுக் கொண்டு சமாதானப் படுத்தினான்.

 

ஆனால் சந்துவின் வாய்மொழியாக கேட்ட வார்த்தைகளை ஜீரணிக்க முடியாத ஸ்ரீ, அப்படியே பாத்ரூமிற்க்கு ஓடிச்சென்று ஷவரை திறந்து விட்டவள் அதன் அடியிலே அமர்ந்து ஓவென அழுது கரைந்தாள்.

 

“தான் எவ்வளவு பெரிய பாவத்தை செய்திருக்கிறோம் ” என அப்போது அவளுக்கு முழுதாக புரிந்தது.

 

எவ்வளவு நேரம் அதன் அடியிலே அமர்ந்து அழுது கரைந்தாளோ, ஆனால் வெளியில் வரும்போது எப்போதும் போல் தவறான ஒரு முடிவை திடமாக எடுத்துவிட்டு வெளியே வந்தாள்.

 

அப்போது மணி விடியற்காலை நான்கு இருக்கும், தான் இனிமேல் இங்கிருந்து ஹரிக்கும் சந்துவிற்கும் பாரமாக இருக்கக் கூடாது என நினைத்தவள் தன் துணிகள் அனைத்தையும் ஒரு பெட்டியில் மூட்டை கட்டிக் கொண்டு ,அவ்வீட்டை விட்டு கனத்த மனதுடன் வெளியேறினாள்.

 

வந்தவள் நேராக ஆட்டோ பிடித்து தங்கள் கல்லூரி விடுதிக்கே வந்து நந்துவின் முன் நின்றாள்.

 

 

நேற்றே வர்ஷூவின் மூலம் பஞ்ச பாண்டவிகளுக்கு விஷயம் தெரிந்து விட, இவளைப் பற்றி அறிந்த நந்து இவள் இப்படித் தான் ஏதாவது முட்டாள்தனமாக முடிவெடுப்பாள் என நினைத்தாள்.

 

அதை பொய்யாக்காமல் ஸ்ரீயும் அவள் முன் வந்து நிற்க , அடுத்த நிமிடம் அவள் கன்னத்தில் அரைந்திருந்தாள் நந்து.

 

கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அவளை ஏறிட்டுப் பார்த்த ஸ்ரீயை மேலும் முறைத்தவள் ,”உனக்கு மூளைன்னு ஒன்னு இருக்கா இல்லை அதை முனியாண்டி விலாஸ்ல ஒரு ப்ளேட் சிக்கன் பிரியானிக்கு அடகு வச்சுட்டியா டி.. இப்போ என்னா டாஷ்க்கு இங்க பெட்டியை தூக்கிட்டு டிங்கு டிங்குன்னு வந்த?? மென்டல் மென்டல், சின்ன வயசுல தான் அறிவில்லைன்னு உன்னை சும்மா விட்டாங்க இதுல இப்போயும் பைத்தியம் மாதிரி பிஹேவ் பண்ற .. ஆளு தான் வளர்ந்திருக்க மூளை கொஞ்சம் கூட வளரலை ” என அவள் பாட்டிற்கு கத்திக் கொண்டே போக,

 

நிஷா தான் அவளை அமைதி படுத்தினாள் ,”ஹேய் அவளே கஷ்டத்துல வந்துருப்பா நீயும் ஏண்டி திட்டுற விடு ” என வக்காலத்து வேறு வாங்க,

 

நந்துவிற்கு வந்த ஆத்திரத்தில் அங்கிருந்த தலையணையை எடுத்து அவள் மேலே எரிந்தவள்,”சின்ன வயசுல இருந்து இவ பாவம் பாவம்னு அவங்க வீட்டுல உள்ளவங்க செல்லம் கொடுத்து தான் இன்னைக்கு அங்க ஒருத்தி பைத்தியமா இருக்கா இவளை கட்டிக்கிட்ட மகராசன் நல்லா பாடா படுறாரு இன்னமும் இவளை கொஞ்ச சொல்றியா??” என நந்து கோபமூச்சுகளை இழுத்து விட்டுக் கொண்டே கேட்க,

 

நிஷா கப் சிப் என வாயை மூடிக் கொண்டாள்.

 

ஸ்ரீயோ பாவமாக ,”அதுனால தான் டி நான் வந்தேன்..என்னால தான எல்லா பிரச்சனையும் அவங்க நான் இல்லைனா சந்தோஷமா இருக்கட்டும் இனிமேலாச்சும்.. நான் இனி ஹரி வாழ்க்கைக்குள்ள போக மாட்டேன்” என அவள் விசும்பலுடன் கூற,

 

சுத்தியலை எடுத்து அவள் நடு மண்டையிலே போட்டுத் தள்ளி விடலாமா என்று தோன்றியது நந்துவிற்கு, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவள், “நீ நெஜமாவே ஹரி அண்ணாவை லவ் பண்றியா”என சந்தேகமாக அவளிடம் கேட்க,

 

அவளை நோக்கி ஒரு அடிபட்ட பார்வையை வீசியவள் ‘உனக்கு கூட என்னைப் புரியவில்லையே’ என கண்களாலே கேட்க, அதற்கெல்லாம் மனம் இளகாத நந்து ,”சொல்லு டி வாயைத் திறந்து” என மீண்டும் அவள் மனதில் ஈட்டியை இறக்கினாள்.

 

“ஆமாம்” என்பது போல் அவள் தலையாட்ட,

 

அவளை உற்றுப்பார்த்த நந்து ,”காதல்ன்ற வார்த்தைக்கு உனக்கு அர்த்தம் தெரியுமா?? நம்ம காதலிக்கிறவங்க நம்மளை காதலிக்கலைனா கூட அவங்களை காயப்படுத்தாம அவங்க சந்தோஷத்தை பார்த்து நாம அவங்களை விட மகிழ்வது தான்” என்று குரல் கமரக் கூறியவளின் விழியில் இருந்து வழிந்த இரு சொட்டு நீரை நிஷா கண்டு கொண்டாள்.

 

இதை தனியாக கவனித்து கொள்வோம் என மனதிற்குள் குறித்துக் கொண்ட நிஷா மௌனமாக அங்கு நடப்பதை கவனிக்கலானாள்.

 

தன்னை சமாளித்துக் கொண்ட நந்து ஸ்ரீயை முறைத்துக் கொண்டே,”நம்ம லவ் பண்றவங்க மனசுல என்ன இருக்குன்னு கூட புரிஞ்சுக்க முடியாம நீ என்ன டி அண்ணாவை இத்தனை வருஷமா லவ் பண்ண?? வெளிய இருந்து பார்க்குற எங்களுக்கே தெரியுது அண்ணா உன்னை எவ்வளவு லவ் பண்றாங்கன்னு உனக்கு அது புரியலையா?? சின்ன வயசுலயும் சரி இப்போவும் சரி அவங்க உனக்காக தான் எல்லாத்தையும் பொறுத்துட்டு போறாங்க..இதேது அண்ணா இடத்துல வேற யாராச்சும் இருந்தா போடி நீயும் உன் லவ்வும்னு எப்போயோ உன்னை தூக்கி போட்டுட்டு போய்ருப்பாங்க.. உனக்கும் சந்துவுக்கும் நடுவுல நடந்த பிரச்சனையில இத்தனை வருஷமா மாட்டிக்கிட்டு முழிக்கிறது அவர் தான்..இப்போ மறுபடியும் அவரை விட்டுட்டு வந்து அவரை ஏன் டி உயிரோட கொல்லுற??” என கோபத்தில் ஆரம்பித்து ஆற்றாமையோடு முடிக்க,

 

“நீ சொல்றது எல்லாம் எனக்கு புரியுது டி..அவனுக்கு நான் வேணாம் நான் இவ்ளோ வருஷம் அவங்களுக்கு பண்ணதே போதும் டி ” என ஸ்ரீ அதே பல்லவியைப் பாட,

 

நந்து கடுப்புடன் ,”எப்போ இருந்து டி இவ்ளோ செல்ஃபிஷ் ஆன ஸ்ரீ?? உன் குற்றவுணர்ச்சியில இருந்து தப்பிச்சு வந்துட்டதா நினைக்கிறயா?? நீ இப்போ பண்ணது தான் முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம்..இப்போ நீ பிரிஞ்சு வந்தா அண்ணா சந்தோஷமா இருப்பாரா இல்லை உன் குடும்பம் தான் சந்தோஷ்மா இருக்குமா?? எல்லாரையும் கஷ்டப்படுத்துனா தான் உனக்கு நிம்மதி போல..ஒரு முறையாச்சும் நாம பண்ணை தப்பை சரி பண்ணுவோம் இத்தனை வருஷமா சந்துவை வாட்டி வதைச்சதுக்கு பதிலா இப்போ அவளுக்கு பல மடங்கு அன்பை திருப்பி கொடுத்து அவளை மாத்தனும், அண்ணா காதலை விட உன் காதல் பெரிசுன்னு அவர் கூட இருந்து நிரூபிக்கனும், இனிமேலாச்சும் பொறுப்பான ஒரு பொண்ணா இருந்து செஞ்ச தப்பெல்லாம் திருத்திக்கனும்னு உனக்கு தோணவே இல்லைல… தப்பு செய்யாதவன் மனுஷனே இல்லை.. எல்லா மனுஷனும் தன்னோட வாழ்க்கையில தப்பு செய்வான்..ஆனா அந்த தப்பை புரிஞ்சிகிட்டு திருந்தி அதே தப்பை மறுபடி செய்யாதவன் தான் உண்மையான மனுஷன்… நீயும் ஒரு சாதரண மனுஷி, தப்பு செஞ்சுட்ட இப்போ அதை திருத்திக்கிட்டு உன் வாழ்க்கையை காப்பாத்திக்க பாரு அவ்ளோ தான் நான் சொல்லுவேன் இதுக்கு மேல நீயாச்சும் உன் குடும்பமாச்சும் என்னை ஆளை விடு,… ஆனா இங்க தங்க போறதா இருந்தா இன்னையோட உனக்கும் எனக்குமான நட்பு முடிஞ்சு போச்சு அதை நினைவில வச்சுக்கோ” என பெரிதாக வாழ்க்கையின் நிதர்சனத்தை தன் தோழிக்கு எடுத்துக் கூறியவள் அப்படியே பக்கத்து அறைக்குச் சென்று விட்டாள்.

 

 

நிஷாவும் ஸ்ரீ யோசிக்கட்டும் என்று அவளுக்கு தனிமை கொடுத்து வெளியேறிவிட, ஸ்ரீ மனதில் நந்து கூறிய அனைத்தையும் மீண்டும் மீண்டும் ஓட்டிப் பார்த்தாள்.

 

இன்பத்தை மட்டும் பகிர்ந்து கொள்பவன் உண்மையான நண்பன் அல்ல..தன் தோழிக்கு ஒரு துன்பம் என்றதும் அவளுக்கு தோள் கொடுப்பதோடு சேர்த்து தவறு அவள் மீதென்றால் அதை சுட்டிக்காட்டி திருத்தி அவளை நல்வழி படுத்துவதே நட்பின் இலக்கணம். அதை நந்து நன்றாக உணர்ந்து ஸ்ரீயின் வாழ்க்கையை சரி செய்ய தன்னாலான முயற்சிகளைச் செய்தாள்.இவ்வாறு ஒரு நட்பு நமக்கு கிடைப்பதற்கும் நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அந்த வகையில் ஸ்ரீ அதிர்ஷ்டசாலிதான்.

 

வெகுநேரம் சிந்தித்த ஸ்ரீ , நந்து சொன்னதில் என்ன தவறிருக்கிறது நான் செய்த பிழையை நான் தானே சீர் செய்ய வேண்டும் இப்படி கோழை போல் பிரச்சனையிலிருந்து ஓடி ஒளிந்து கொள்வது எந்த வகையில் நியாயமாகும் ? என பல வகையில் முதன் முறையாக சரியாக சிந்தித்தவள் கடைசியில் ஒரு முடிவோடு நந்துவின் முன் போய் நின்றாள்.

 

அவள் என்னவென்று கேட்காமல் இருக்க,இவளே “நான் என் புருஷன் வீட்டுக்கே போறேன்..என் தப்பெல்லாம் சரி பண்ண ..மூஞ்சியை இப்போவாச்சும் கொஞ்சம் நல்லா வைக்க சொல்லு நிஷா சத்தியமா பார்க்க முடியலை” என நிஷாவிடம் கூறுவது போல் நந்துவை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே ஸ்ரீ சொல்ல,

 

நந்து லேசாக சிரித்தவள் மறுநிமிடமே அவள் முகத்தை கடினமாக்கிக் கொண்டாள்.

 

“நீ பேசலனாலும் பரவாயில்லை இப்படி மூஞ்சியை வைக்காத..நீயா வந்து என் கிட்ட பேசுற மாதிரி என் நடவடிக்கை இருக்கும் பாய்” என கூறியவள் நந்துவின் கன்னத்தில் ஒரு இச் வைத்து விட்டு அவள் அடிப்பதற்குள் பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடி வந்துவிட்டாள்.

 

ஹாஸ்டலை விட்டு வெளியே வரும் போதே அங்கே ஹரி கடுகடுத்த முகத்துடன் காரில் ஒற்றைக்காலை மடக்கி கையைக் கட்டிக்கொண்டு இவளை கூர்மையாக பார்த்துக் கொண்டிருக்க,ஸ்ரீக்கு புரிந்து போனது இது நிச்சயம் அந்த நந்துவின் வேலை தான் என்று. மனதில் தோன்றிய உறுதியுடன் புது ஸ்ரீயாக மாறியவள் அந்த தெளிவோடே அவனோடு இப்போது பயணித்துக் கொண்டிருந்தாள்.

 

அனைத்தையும் கேட்ட மனசாட்சி அவள் மண்டையிலே பல கொட்டுக்களை பரிசளித்து ,”பக்கி பக்கி நீயெல்லாம் என்ன ஜென்மமோ குரங்கு..இனிமேலாச்சும் ஒழுங்கா நல்ல பிள்ளையா நடந்துக்கோ ..தப்பு மட்டும் பண்ண இப்போ பண்ண மாதிரி கொட்டலாம் மாட்டேன் கொன்றுவேன்” என கொலை மிரட்டல் விடுத்து எஸ்கேப்பாகவும் வீடு வரவும் சரியாக இருந்தது.

 

கார் நின்றதும் அவள் சிந்தனையிலிருந்து கலைந்து அவனைப் பார்க்க, அவன் காரை விட்டு இறங்கி அவள் பெட்டியை எடுத்துக் கொண்டிருந்தான். இவளும் இறங்க, காரைப் பூட்டிவிட்டு அவள் வருகிறாளா என பார்த்துவிட்டு முன்னேறினான்.

 

வீட்டிற்கு வந்ததும் அவளிடம் எதுவும் பேசாமல் அறையில் கொண்டு போய் பெட்டியை வைத்தவன் , அவளை கண்டுகொள்ளாமல் பெற்றோரிடம் பேச ஆரம்பித்தான்.

 

முன்கூட்டியே வீட்டில் யாரிடமும் இதைப்பற்றி யாரும் அவளிடம் பேசவேண்டாம் என்று அவன் கூறிவிட்டிருந்ததால் யாரும் அவளை கண்டுகொள்ளாமல் தங்கள் வேலையில் மூழ்கியிருந்தனர்.

 

கார்த்திக்கும் வர்ஷூவும் எப்போதும் போல் சண்டை போட்டுக் கொண்டிருக்க ,

 

அப்போது “ஓஹ் மை காட்!!!!!” என விஜயின் அதிர்ச்சியான குரலில் அங்கு திரும்பி பார்த்தவர்கள் தாங்கள் கண்ட காட்சியை நம்ப முடியாமல் அவர்களும் உறைந்து போய் நின்றனர்.

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்