Loading

தழல் 20:

அவளின் உடலில் இன்னும் நடுக்கம் இழையோடிக் கொண்டிருந்தது. வழியும் கண்ணீரோடு ஊஞ்சலையே வெறித்தபடி அமர்ந்திருந்தவளை கண்ட நொடி திடுக்கிட்டு தான் போனான் வேந்தனும். முதன் முறை அவளின் கண்ணீரை காண்கிறான் அவன். ‘இதழ்கள் தழுவிக் கொண்ட போதுக்கூட கண்ணீர் இமைகள் தண்டவில்லையே! அப்படியென்றால் அமுதனுக்கு பெரிதாக எதுவுமோ?’ என்ற எண்ணத்தில் லேசான பயமும் கூட உண்டானது அவனுக்கு.

 

“ஆரா…” மெல்ல அவளின் தோளைத் தொட்டு அழைத்தவனின் குரலிலும் பயம் ஒட்டிக் கிடந்தது. அவளின் அழைப்புக்கு அவளிடம் எவ்விதமான எதிர்வினையும் இல்லை.

 

“ஆரா… உன்ன தான்… யார் போன்ல…” இம்முறை கொஞ்சம் உயர்ந்திருந்த குரலில், வார்த்தைகளின் அழுத்தம் கூடியிருந்தது. அவனின் வார்த்தைகள் அவளை அடைந்ததற்கு அடையாளமாய் கண்களிலிருந்து சரசரவென கண்ணீர் துளிகள் அவளின் கன்னத்தில் இறங்கி கோடு கிழித்தது.

 

“ஆரும்மா… என்னடா… யாரு போன்ல… அமுதன பத்தி எதுவும் சொன்னாங்களா..? கடத்தி வச்சுருக்காங்களா..? பிளாக்மெயில் எதுவும் பண்ணாங்களா..? என்னனு சொன்னா தானேம்மா தெரியும்…” வார்த்தைகளுக்கும் வலியெடுக்குமோ என்னும் விதமாய், இதம் தாங்கி ஒலித்தது அவன் குரல். அவளின் கண்ணீர் அவனிடம் இளக்கத்தையும் ஒருவித பயத்தையும் ஒருங்கேக் கொண்டு வந்திருந்தது.

 

அவன் கேட்டவற்றை எல்லாம் ஒதுக்கி தள்ளி, “வானவில்லுக்கு போகணும்…” மிக மெல்லிய குரலில் அழுத்தமாய் சொன்னாள் அவள்.

 

ஒரே ஒரு நொடி கண்களை சுருக்கி அவளை ஆராய்ச்சியாய் பார்த்தவன், “சரி… வா… போகலாம்…” என்றான் அவளை கைப்பற்றி தூக்கி விட்டபடி.

 

எழ முடியாத தள்ளாட்டம் அவளிடம். மனமும் உடலும் பலகீனப்பட்ட உணர்வு. கொம்பை படரும் கொடியாய் இறுக அவனின் கரத்தைப் பற்றிக் கொண்டே எழுந்து நின்றாள் அவள். கண்கள் இருட்டிக் கொண்டு மயக்கம் வரும் போலிருந்தது. அவளின் பிடியில் இன்னமேமே இறுக்கம் கூடியது. சட்டென்று அவளின் தோளை அணைத்து தாங்கிப் பிடித்துக் கொண்டான் அவன்.

 

“என்ன பண்ணுது ஆரா…” என்றவனின் குரலில் அக்கறையும் வருத்தமும் சம அளவிருந்தது.

 

நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தவள், “வானவில் போகலாம்…” என்றாள் பலகீனமான குரலில் மீண்டும். மறுப்பேதும் சொல்லாமல், அவளை வெளியே அழைத்து வந்திருந்தான் அவன்.

 

“ஆட்டோனா பிடிக்கட்டுமா ஆரா…” என்றவனுக்கு மறுப்பாய் தலையசைத்தாள் அவள்.

 

“சரி… சாவிய குடு… நான் ஓட்டறேன்…” என்றபடியே சாவிக்காக அவளிடம் கை நீட்டினான் அவன். நொடிக்கும் குறைவான நேரம் காயமிருந்த கையை தழுவியது அவள் விழிகள். அதை நேரம், அவளிருக்கும் மனநிலையில் வாகனத்தை ஓட்ட முடியாது என்பதை உணர்ந்தவளாய் அவனிடம் சாவியைக் கொடுத்தாள்.

 

அவனே வண்டியை எடுக்க, பின்னால் அமர்ந்தவள் இறுக்கமாய் அவனின் இடையை பிடித்துக் கொண்டாள். அதில், அப்பட்டமாய் அவளின் நடுக்கத்தையும் பயத்தையும் அவனால் உணர முடிந்தது. எப்படியாவது அந்த பயத்தை போக்கி அவளை தன்னுள் பாதுகாப்பாய் சுருட்டிக் கொள்ள தோன்றியது. ஆனால், அதற்கு அவள் வாய்ப்பளிக்க வேண்டுமே?

 

அவள் மூளையின் ஒவ்வொரு செல்லும் ‘இந்த குரலை இதற்கு முன் எங்காவது கேட்டிருக்கிறோமா..?’ என்று தான் ஆராய்ந்துக் கொண்டிருந்தது. எங்கும் எப்போதும் கேட்டதாய் நினைவே இல்லை. அப்படியென்றால் அந்த அழைப்பு எப்படி சாத்தியம்? என்று எண்ணியவளின் பயம் கூடியதே தவிர குறையவேயில்லை. எதை மறந்து விட்டதாய் நினைத்தாளோ… எதை இன்றளவும் மறக்க முயன்றுக் கொண்டிருக்கிறாளோ… அந்த கடந்த கால கசந்த நினைவுகள் எல்லாம் அலை அலையாய் மேலெழுந்து ஆர்பரித்துக் கொண்டிருந்தது.

 

அவளைப் பற்றி, அவளின் கடந்த காலம் பற்றி நன்கறிந்த யாரோ அவளுடன் விளையாடுகிறார்களோ..? அப்படியும் இருக்க கூடுமா..? ஆம்… அப்படிதான் இருக்க வேண்டும் என்றது அவளின் ஆசைக் கொண்ட மனம். ஒரேவேளை அப்படியில்லை என்றால், என்ற எண்ணமே அச்சத்தை கூட்டியது மூச்சடைக்க செய்தது. அதே நேரம் அவளின் இந்த அனுமானம் எத்தனை சதவீதம் உண்மையென்றும் தெரியவில்லை. அது உண்மையாய் இருந்துவிட கூடாதே என்ற பெரும் வேண்டுதல் தான் இப்பொழுது அவளுக்கு. அவளின் அனுமானத்தை மட்டுமே அடிப்படையாய் வைத்துக்கொண்டு யாரிடமும் எதையும் உடைத்து உரைக்கும் மனநிலையில் அவள் இல்லை.

 

அவர்கள் அறக்கட்டளையை அடைய எடுத்துக் கொண்ட இருபது நிமிடமும் அவளின் மரணத்தை தொட்டுவிட்ட நொடிகள். அந்த எதிர்காற்றிலும் கூட அவளின் உடல் தெப்பலாய் நனைந்திருந்தது. அழுகை குறைந்து மனம் ஒரு வெறுமை நிலையைத் தொட்டிருந்தது.

 

அந்த அதிகாலை நேரத்தில் அவர்களை அங்கே எதிர்பாராத காவலாளி, சில நொடிகள் அவர்களை காத்திருக்க வைத்தப்பின் அவர்களை நோக்கி அவசரமாய் ஓடி வந்தார். அதற்கு கூட பொறுமை அற்றவளாய் வேந்தனையும் பொருட்படுத்தாது வண்டியைவிட்டு இறங்கியிருந்தவள், தன் கைப்பயிவிருந்த கேட்டின் சாவியினைக் கொண்டு கதவைத் திறக்க தொடங்கியிருந்தாள்.

 

இரவு நேரங்களிலும், காவலாளி அவசரமாய் எங்காவது சென்றாலும் அந்த கேட் பெரிய பூட்டால் பூட்டபட்டிருக்கும். அதற்கு மூன்று சாவிகள் உண்டு. ஒன்று அனுராதாவிடமும், இன்னொன்று இவளிடமும், மூன்றாவது காவலாளிகளின் ஓய்வுக்கென அங்கேயே இருந்த சின்ன அறையிலும் இருக்கும். இப்போது தன்னிடமிருந்த சாவியினைக் கொண்டு தான் கேட்டை திறந்துக் கொண்டிருந்தாள் ஆரா.

 

திறந்த நொடி ஓட்டமும் நடையுமாய் அலுவலக கட்டிடத்தை நோக்கி சென்றவளை, தானுமே வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு பின்தொடர்ந்தான் வேந்தன். அந்த கட்டிடம் வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. அது அந்த அறக்கட்டளையின் அலுவலகமும் ஆராய்ச்சி கூடமும் இணைந்த கட்டிடம். அதை வேலை நேரம் முடிந்து பூட்டி வைப்பது தான் வழக்கம். மாணவர் விடுதியும், மருத்துவமனையும் தான் 24 மணிநேரமும் இயங்கும்.

 

அவசரமாய் தன்னிடமிருந்த சாவியைக் கொண்டு அதையும். திறந்துக் கொண்டு உள்ளே ஓடினாள் ஆரா. அவளின் அறையை நெருங்கிய நொடி, மெல்ல நடை தோய்ந்து அப்படியே நின்றுவிட்டது. ஏனோ அந்த அறைக்குள் அனுகுண்டிருப்பதைப் போல அதை நெருங்கவே அத்தனை பயம் அவளுக்கு.

 

அவளின் எண்ணம் புரிந்தவனாய் வேந்தன் தான் அவளை முந்திச் சென்று கதவை திறந்தான். திறந்த கதவுகளிடையே காணக் கிடைக்கிறது அந்த பரிசுப் பொருள். இரண்டடி அளவுள்ள சதுர பெட்டி அது. அது முழுதுமாய் சிவப்பு வண்ண பளபளக்கும் தாள் சுற்றபட்டிருக்கிறது. நொடியில் நடுநடுங்கிப் போனது அவளின் உள்ளம். அவனை தாண்டிக் கொண்டு வேகமாய் உள்ளே ஓடியவளுக்கு இந்த நான்கடி தூரம் நானூறு மையில்கள் கடந்த களைப்பை தருகிறது.

 

அதைப் பார்த்த மாத்திரத்தில் நொடியில் முதலில் விழிகளில் விழுகிறது அதன் மேலே ஒட்டப்பட்டிருந்த அவள் பெயரை தாங்கிய சின்ன அட்டை. எப்பொழுதும் ஆரல்மொழி என எழுதப்பட்டிருக்கும் அது, இன்று ‘டூ மை ஸ்வீட் கிட்டி…’ (To my sweet kitty) என தொடங்குகிறது. அதற்கு கீழே, “என் அன்பர்காட்டபிள் பர்த்டே கிப்ட் பார் லைப் டைம்… மை பெஸ்ட் விஷ்சஸ் பார் யுவர் லாஸ்ட் பர்த்டே… பை யுவர் லவ்வபிள் டெவிள்…” (An unforgettable birthday gift for a lifetime… My best wishes for your lost birthday… By your lovable devil) என சிவப்பு நிறத்தால் எழுதப்பட்டிருந்தது.

 

நொடியில் அதை கிரகித்துக் கொண்டவளின் நெஞ்சுக்கூடே காலியான உணர்வு. இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டதா? அல்லது மறந்து மரித்தே விட்டதா தெரியவில்லை? உடலெல்லாம் படபடத்து வியர்வையில் நனைந்துப் போயிருந்தது. உள்ளங்கையின் தேங்கி நின்ற வியர்வையின் பிசுபிசுப்பு மனதிலும் எதிரொளிக்கும் உணர்வு.

 

அனிச்சை செயலாய் வேக வேகமாய் அந்த பரிசை பிரித்தெரிகிறது அவளின் கரங்கள். இருந்தும் பிரிக்க முடியாது நடுங்கிறது அவளின் கரங்கள். அவளின் நிலைப் புரிந்து வேந்தனும் இப்போது இணைந்துக் கொள்கிறான்.

 

அந்த நிமிட நேரத்திற்குள்  வேகமாய் கடந்த காலம் நோக்கி ஓடுகிறது அவளின் எண்ணங்கள். ‘இன்று அவளுக்கு பிறந்த நாளா? அப்படியென்றால் இதில் எதுவும் எதிர்பாராத விதமாகவோ, தற்செயலாகவோ, விளையாட்டாகவோ நடந்தது அல்ல… ஒவ்வொன்றையும் கணக் கச்சிதமாய் திட்டமிட்டு காத்திருந்து காய் நகர்த்தி இருக்கிறார்கள்? இது இத்தோடு நின்றுவிட போவதில்லை… நாளையே அவளுக்கு பிரியமான வேறொருவர் அந்த நபரின் பிடிக்குள் சிக்கலாம். இப்படி இவள் உயிர் துறக்கும் கடைசி நொடி வரை இவளுக்கு வேண்டியவர்களை பணையமாய் வைத்து அணு அணுவாய் இவளை வதைக்கலாம்… அல்லது இவளே மரணத்தை அவனிடம் மன்றாடும் நிலைக்கு தள்ளலாம்… ஏன் எதற்கு என்ற கேள்விகளெல்லாம் இங்கே அநாவசியம். அதற்கு அவளுக்கே விடை  தெரிந்ததிருத்தது. யார் என்பது தான் இப்பொழுது பிரதானம்.

 

இதோ அந்த பரிசைப் பிரித்தாயிற்று. அவளின் அனுமானத்தை அரங்கேற்றியதுப் போல், ரோஜா மலர் குவியலாய் அசைவின்றி உள்ளே சுருண்டு கிடக்கிறான் அமுதன். முதல் வேளையாய் கழுத்தின் ஓரம் கரம் பதித்து நாடித் துடிப்பை அறிய முயல்கிறாள் அவள். மிகவும் நலிந்து ஒலிக்கிறது அது.

 

அவரமாய் மேசையில் இருந்த அத்தனைப் பொருட்களையும் கீழே தள்ளியவள், அழுதனை ஒழுங்காய் அதில் படுக்க வைத்திருந்தாள். குளிர்ந்துப் போயிருந்த அவனின் உடல் இவளுள் பயத்தையுய் பரிதவிப்பையும் உண்டு பண்ணியிருந்தது.

 

வழியும் கண்ணீரை பொருட்படுத்தாது, மெல்லமாய் அவளின் கன்னம் பற்றி சூடு தட்டி எழுப்ப முயல்கிறாள் இவள். ம்ம்கூம்… ஒரு பலனும் இல்லை. அதற்குள் அங்கிருந்த நீரை கொஞ்சமாய் அவனின் முகத்தில் தெளிக்க துவங்கியிருந்தான் வேந்தன். எதற்கும் எதிர்வினை இல்லை பிள்ளையிடம்.

 

முட்டிக் கொண்டு வந்த அழுகையை அடக்கியபடியே, சூடு பறக்க பிள்ளையின் கால்களை தேய்த்து விட்டவள், மூடிக் கிடந்த உள்ளங்கையை பிரிக்க, சின்னதாய் ஒரு துண்டு சீட்டு. அவள் அதை எடுக்கும் முன்னமே, வேகமாய் எடுத்துப் பார்த்திருந்தான் வேந்தன்.

 

“வெல்கம் பேக் டூ டெவிள்ஸ் வோர்ல்ட்…” (Welcome back to devil’s world) என்ற அந்த வார்த்தைகளில் இவனுக்கு கண்மண் தெரியாத அளவிற்கு கோபம் வந்திருந்தது. “பரதேசி நாயே… நீ மட்டும் கையில கிடை… அப்பறம் இருக்கு உனக்கு…” இன்னும் என்னவோ முணுமுணுவென திட்டியவனின் மேல் பாரம் அழுத்த, என்னவென்று பார்த்தான் அவன். அழுத்தம் தாளாது மயங்கி அவன் மீது சாய்ந்திருந்தாள் மங்கை. முதன் நாள் அவளைப் பார்த்தப் போது வந்த மயக்கத்திற்கான காரணமென்ன என்பது சொல்லாமலே அவனுக்கு புரிந்தது. சுயநினைவின்றி இருந்த இருவரையும் பார்த்தபடி செய்வதறியாது திகைத்து நின்றுவிட்டிருந்தான் வேந்தன்.

 

                          – பற்றி எரியும்…

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்