Loading

தனாவைப் பார்த்துச் சிரித்த ருத்ரன், “அவன்கிட்ட அவ்வளவு சத்தமா பேச தானே செய்ற? ஏன் தனா, என்கிட்டப் பேசுற உரிமை உனக்கு இல்லையா? அப்போ அவனுக்குக் கொடுக்கிற உரிமை கூட நான் உனக்குத் தரலையா?” என்று கேட்க,

மேலும் தனது அண்ணனை ஒட்டிய தனா, “நான் எப்போ அப்படிச் சொன்னேன்?” என்று அழுதாள்.

“பின்ன அவன் கேட்கிறான், அப்பக்கூட உங்களுக்காகப் பேசிக்குவீங்க, என்று நான் ரூமுக்குள்ள போனேன். அப்போ கூட, அந்த நாய் என்னப் பத்திப் பேசுது.

நீ அவன்கிட்டச் சீறிக்கிட்டு சண்டைக் கோழி மாதிரி எனக்காக சண்டைக்குப் போற. ஆனா, அதே உரிமையோடு என்கிட்டப் பேச முடியாதா?” என்று கேட்டான்.

தனது அண்ணனின் நெஞ்சில் அடித்த தனா, “நீ தான பேச மாட்ற. நானா உன்கிட்டப் பேசமாட்டேன் என்று சொன்னேன். நான் ஏஜ் அட்டன்ட் பண்ற வரைக்கும், என்கிட்ட நல்லா தானே பேசிட்டு இருந்த. அதுக்கப்புறம் நீயா தான் என்கிட்ட இருந்து கொஞ்சம் கொஞ்சமா ஒதுங்கிப் போன.

நான் பொம்பளப் புள்ள, வளர வேண்டிய புள்ளன்னு நெனச்சு என்கிட்ட இருந்து ஒதுங்குறேன்னு நெனச்சேன். ஆனா, நீ அகி அண்ணி கிட்டயும், காயத்ரி கிட்டயும், நல்லா தானே பேசுற. அப்போ ஏன் என்கிட்ட மட்டும் பேச மாட்ற. மாமன் மகள் கிட்ட ஜாலியா பேச முடியுது. தங்கச்சியா என்கிட்டப் பேச முடியலையா?”

“நான் பேசலனா என்ன? நீ பேச வேண்டியதுதானே. அவங்க ரெண்டு பேரும் என்கிட்டப் பேசச் செய்றாங்க இல்ல” என்று ருத்ரன் கேட்க,

தமிழ் அமைதியாகவே நின்று கொண்டு இருந்தாள்.

இருவருக்கும் இடையில் அவள் வரவில்லை. பாக்கியம் கூட வீட்டிற்குள் நுழைந்தவர், தனது இரண்டு பிள்ளைகளும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டவர் அமைதியாகவே நின்று கொண்டு இருந்தார்.

அவருக்கும் தெரியுமே, தனது இரண்டு பிள்ளைகளும் மற்றவர்களிடம் பேசுவது போல் அவர்களுக்குள் இப்படிப் பேசிக் கொள்வதில்லையே என்று அவருமே எண்ணி இருக்கிறார்.

“நீ ஏன் அண்ணா, என்கிட்ட இருந்து ஒதுங்கிப் போற?” என்று கேட்க,

அவளது தலையில் கொட்டிய ருத்ரன், “நான் எப்போ உன்கிட்ட இருந்து ஒதுங்கிப் போனேன். நீயா லூசு மாதிரி எதையாவது யோசிக்காத சரியா?” என்று சிரித்து விட்டு, “வா சாப்பிடலாம்” என்றான்.

தனாவும் வேறு எதுவும் பேசாமல் தனது அண்ணனின் அருகில் உட்கார,

தமிழ் ஆளுக்கு ஒரு தட்டு எடுத்து வைக்கத் தனாவிற்கு வைத்த தட்டை எடுத்து வைத்த ருத்ரன், “இதிலேயே போடு” என்றான்.

தமிழ் அமைதியாகச் சாதத்தைப் போட, பிசைந்து தனது தங்கைக்கு ஊட்டி விட்டுக் கொண்டு அவனுமே சாப்பிட்டான்.

கண்கள் கலங்க பாக்கியம் இருவருக்கும் அருகில் வந்து பார்த்துக் கொண்டு நிற்க, தனது தாயை உட்காரச் சொன்னவன் அவருக்கும் ஊட்டி விட, அங்கு ஒரு பாசப் போராட்டமே நடந்தது. தமிழ் மூவரையும் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“என்னடி எங்களையே பார்த்துகிட்டு இருக்க, கண்ணு வச்சிடாத” என்று சொல்ல, முதலில் சிரித்துவிட்டுப் பிறகு அவனை முறைத்த தமிழ், “ஆமா, கண்ணு வைக்கிறாங்க இவங்கள” என்று முறைத்தாள்.

“சரி சரி ஓவரா முறைக்காம, சாப்பாடு போடு. எங்க மூணு பேத்துக்கும் செரிமானம் ஆகாமப் போயிடப் போது” என்று சிரித்தான்.

அவனைப் பார்த்துச் சிரித்து விட்டுச் சாதத்தைப் போட அடுத்த வாய் பிசைந்து அவளுக்கும் ஊட்டி விட்டான்.

தமிழ் கண்கள் கலங்க வாங்கிக் கொண்டு அமைதியாகி விட்டாள்.

அன்று இரவுப்பொழுது நால்வரும் ஹாலிலேயே படுத்துக் கொள்ள, பாக்கியமும், தானாவும் “இல்ல நீங்க ரெண்டு பேரும் ரூமுக்குப் போங்க” என்றார்கள்.

தனா, “அண்ணா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை” என்று சொல்ல,

“நான் வாழ்க்கை முழுக்க என் பொண்டாட்டி கூட தான் படுக்கப் போறேன். என் தங்கச்சி என்னோட தங்கச்சியா இருக்கப் போறது இன்னும் கொஞ்ச நாள் தானே” என்றவுடன் தனாவிற்குக் கண்கள் கலங்க,

தமிழ் தான், “மாமா அமைதியா இருக்க மாட்டியா?”

“உண்மையைத் தாண்டி சொல்றேன். இந்த லூசு இன்னைக்குக் கேட்ட வார்த்தையை முன்னாடியே கேட்டா என்னவாம்? இப்ப தானே இவளுக்குக் கேக்கணும் தோணி இருக்கு” என்று சொல்ல,

“அது கூட உனக்குத் தோணவில்லையே” என்றாள் தனா.

“அதான, காயத்ரி அந்த சில்லுவண்டு கூட இத்தனை வருஷமா சுத்திட்டு இருக்க, அவளோட துடுக்குத் தனம் உனக்குக் கொஞ்சமாச்சும் ஒட்டிக்காமல் இருக்குமா என்ன?” தனது தங்கையைப் பார்த்துச் சிரித்தவன்,

அவளது தோளில் கையை போட்டு அணைத்துக் கொண்டு, “தூங்கலாம் தனா ஒண்ணா… எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல” என்றான்.

தமிழ் சிரித்துக் கொண்டே தனது அத்தையின் பக்கம் படுத்துக் கொள்ள,

தனது தங்கை ஒரு பக்கமும், தனது தாய் ஒரு பக்கமும் படுத்துக் கொள்ள நடுவில் ருத்ரன் படுத்துக் கொண்டான்.

தனது மனைவியைப் பார்த்துக் கண்ணடித்துவிட்டு, தனது தங்கையின் தலையைக் கோதினான். அடுத்த பத்து நிமிடத்தில் சந்தோஷத்தில் தூங்கி இருந்தாள் தனா.

ஒரு அரை மணி நேரம் கழித்துத் தனாவின் போன் அடிக்க, தனா தூக்கத்தில் இருப்பதால் ‘இந்த நேரத்துல யாரு’ என்று நேரத்தைப் பார்த்த ருத்ரன்,

‘ஒருவேளை சில்லு வண்டா (காயு) இருக்குமோ?’ என்று எண்ணி விட்டு போனை எடுக்க,

அதில் மாமா என்று மட்டும் வந்திருக்க,

ஒரு சில நொடி யோசித்த ருத்ரன் நம்பரைப் பார்த்தான்.

அது தனது நண்பனின் நம்பர் என்பதை யூகித்தான்.

‘இப்பொழுது என்ன செய்வது? தினமும் பேசிக்கொள்வது போல் தெரியவில்லை’ என்பதை உணர்ந்தவன்,

தனாவின் அருகில் போனை நகர்த்தி வைத்துவிட்டு அமைதியாகக் கண் மூடிப் படுத்துக் கொள்ள, இவ்வளவு நேரம் ருத்ரன் செய்கையைப் பார்த்துக் கொண்டிருந்த தமிழ் தனது மாமாவைப் பார்க்க,

ஒற்றைக் கண்ணை லேசாகத் திறந்து ருத்ரன் தூங்குவது போல் நடிக்கச் சொல்லி சைகை செய்ய,

தமிழ் சிரித்துவிட்டுத் தூங்குவது போல் நடிக்கச் செய்தாள்.

ஏற்கனவே பாக்கியம் தூங்கி இருக்க, ரொம்ப நேரமாக போன் அடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்த தனா தூக்கத்திலிருந்து விழித்தவள், ஃபோனை எடுத்துப் பார்க்க, தூக்கத்திலேயே போனை எடுத்தவள் யார் என்று கூடப் பார்க்காமல் காதில் வைக்க,

“தனு…” என்ற ஒற்றை வார்த்தையில் தனது மொத்தத் தூக்கமும் செல்ல,

தன் கண்ணைத் தேய்த்துக்கொண்டு ஒன்றுக்கு இரண்டு முறை தனது ஃபோனின் டிஸ்ப்ளேவைப் பார்க்க,

அதில் மாமா என்று இருப்பதைப் பார்த்துவிட்டு ஒரு சில நொடி நெஞ்சம் படபடக்க சுற்றி இருந்த தனது அண்ணன், அண்ணி, அம்மா மூவரையும் பார்த்தவள், ஃபோனைத் தனது நெஞ்சக் கூட்டில் வைத்து விட்டு ஒரு சில நொடிக்குப் பிறகு தனது காதில் வைக்க,

“தனு லைன்ல இருக்கியா? இல்லையா?” என்று அந்தப் பக்கம் சரவணன் கேட்க,

“ஹம்” என்ற ஒற்றை வார்த்தை மட்டும் வர,

“நேர்ல பார்க்கும்போது அவ்ளோ பேசின இல்லடி போன்ல பேச வலிக்குதோ?” என்று சரவணன் கேட்க,

அந்த ஒற்றை வார்த்தைத் தன்னை தூண்டி விட்டது போல் உணர்ந்த தனா, வேகமாக எழுந்து சுற்றி இருந்த மூவரையும் பார்த்தவள் எதுவும் பேசாமல் தனது அறைக்குள் சென்று மெதுவாகக் கதவைத் சாத்திக் கொண்டாள்.

“இப்போ உனக்கு என்ன வேணும் மாமா?” என்று கேட்டாள். மெதுவாகவே ஆனால் கொஞ்சம் வேகமாக.

சரவணன் இங்குச் சிரிக்கச் செய்தான்.

ருத்ரன் தனது தங்கை ரூமுக்குள் சென்ற உடன் தமிழைப் பார்த்துச் சிரிக்க,

‘இந்தச் சிரிப்பு மச்சானுக்காகவா, தங்கச்சிக்காகவா மாமா?” என்று கேட்க,

ஒரு சில நொடி தனது மனைவியைப் பார்த்தவன் “ரெண்டு பேருக்கும் தாண்டி. ஏன்?” என்றான்.

“எப்படியோ நல்லா இருந்தா சரி” என்று விட்டுத் தமிழ் படுத்துக் கொள்ள, ருத்ரனுமே தூங்கி இருந்தான்.

இங்கு ரூமுக்குள் வந்த தனா சரவணனிடம் சண்டைக்குப் போக, சிரித்த சரவணன் “சந்தோஷமா இருக்க போலடி” என்றான்.

“யார் உங்ககிட்ட வந்து சொன்னது? நான் இப்போ சந்தோஷமா இருக்கிறேன் என்று” என்று அவனிடமே எதிர் கேள்வி கேட்க,

“ஏன், உன் அண்ணன் தான் சொன்னான்” என்று விளையாட்டாகச் சொல்ல,

“என் அண்ணன் என்னை விட்டு நகரவே இல்ல. அப்புறம் எப்படி அவர் சொல்லியிருப்பாரு” என்று தனது அண்ணன் தன்னை விட்டு நகரவில்லை என்பதை உணர்ந்ததால் வேகமாகவே சொல்ல,

“அதான் உன் பேச்சிலேயே ஒரு குதூகலம் தெரியுதேடி” என்று சிரித்தான்.

அடுத்த நொடி இப்பொழுது சரவணனிடம் சண்டை போட ஆரம்பித்திருந்தாள்.

“இப்பதான் என்னோட நம்பர் உங்களுக்குத் தெரிஞ்சிதோ?” என்று கேட்டாள்.

“ஏன், மேடம் கிட்ட என்னோட நம்பர் இருக்கு தானே, போன் பண்ணி இருக்க வேண்டியதுதானே?” என்று சரவணன் எதிர்க்கேள்வி கேட்க,

“2 பேரும் சொல்லி வச்ச போல ஒரே மாதிரிக் கேள்வி கேட்கணும்னு இருக்கீங்களா?” என்று கேட்டாள்.

“நல்லா வாயாடுடி.”

“உங்க தங்கச்சி எல்லாம் வாயாடும் போது, நான் வாயாடினால் கசக்கத்தான் செய்யும்” என்று முறுக்கிக் கொள்ள,

“உண்மையா உனக்கு இந்த அளவுக்குப் பேசத் தெரியும் என்று எனக்கு இன்னைக்கு தாண்டி தெரியும்” என்று சிரித்தான் சரோ.

“அப்போ நீங்க என்கிட்டப் பேச வேண்டாம். உங்ககிட்ட நல்லாப் பேசுறவங்க கிட்ட போய் பேசுங்க” என்று முறுக்கிக் கொள்ள,

“அப்போ, என்கிட்ட யாரு சிரிச்சுப் பேசுறாங்களோ, அவங்ககிட்ட நான் பேசினா ஓகே வா உனக்கு” என்றான்.

“நான் எப்போ அப்படிச் சொன்னேன். சிரிச்சுப் பேசினா என்று நீங்களே ஒரு பிட்டு சேர்த்துக்குறீங்க?” என்று கேட்டாள்.

“சரி விடு, உன்னைக் கட்டிக்கிட்டாலும், சைடுல வேற ஒன்னு பாத்துக்கலாம். நல்லா சிரிச்சுப் பேசுற பொண்ணா?” என்றான்.

‘இருக்கும், இருக்கும். முதல் குத்து என் அண்ணனுடையது தான் இருக்கும். வாயில் இருக்கும் மொத்தப் பல்லும் கழண்டு கீழே விழுந்து இருக்கும்” என்று சிரித்தாள்.

“படுபாவி, அந்த காயத்ரி கூட (குட்டிச் சாத்தான்) கூட சேர்ந்து சேர்ந்து எந்த அளவுக்கு வாய் பேசுது பாரு?” என்றான்.

“மனசுக்குள்ள பேசுறதா நினைச்சு வெளிப்படையா சொல்ற மாமா. உன் தங்கச்சிக்கு மட்டும் இது தெரிஞ்சுதுன்னு வச்சுக்க, உன்னக் குனிய வச்சு கும்மி எடுத்துடுவா. சங்கு ஊதிடுவா உனக்கு” என்று சிரித்தாள்.

தனா சிரித்துவிட்டு, “இன்னைக்கு மட்டும் நல்லாப் பேசுற. ஆனா, அன்னைக்கு ஏன் மாமா என்கிட்டப் பேச அவ்வளவு யோசிச்ச? அதுவும் என்னை நடுரோட்டில் வைத்துத் திட்டிட்டுப் போன” என்று கேட்டாள்.

அன்றைய தினத்தை நினைவில் யோசித்தவன், அன்றுதான் காயத்ரியுடன் வரும்பொழுது தன்னிடம் பேச வேண்டும் என்ற ஆசையில் அதுவும் காயத்ரி போனில் இருந்து பேசி தன்னை வர வைத்ததை யோசித்தான் சரோ.

“நீ வீட்டில் வந்து பேசி இருந்தா கூட அது பெருசா தெரிஞ்சு இருக்காது. நீ ரோட்ல வச்சுப் பேசணும்னு நினைச்சது ரெண்டு வீட்டுப் பக்கமும் தப்பா போயிடுமே, அதை யோசிக்க மாட்டியாடி.”

“அப்பதான் நமக்கு நிச்சயம் ஆயிடுச்சே மாமா.”

“நிச்சயம் ஆயிடுச்சின்னா நடுரோட்டில் நின்னு பேசணுமா?” என்று கேட்டான்.

“நான் என் மாமாகிட்டப் பேசுறதுக்குக் கூட யோசித்துப் பேசணுமா? அப்போ, நடு ரோடு, வீடு இந்த மாதிரி எல்லாம் யோசிச்சு யோசிச்சுப் பேசணுமா? அப்போ கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படித்தான் இருப்ப அப்படித்தானே. சரி விடு, ஒன்னும் இல்ல” என்று விட்டு போனை பட்டென்று வைத்துவிட,

சரவணன் தான் ‘இவளுக்கு எப்படிப் புரிய வைப்பது?’ என்று யோசித்தான்.

தனா சில நொடி ‘அவனாக போன் செய்ய மாட்டானா?’ தன் மாமா தனக்கு போன் செய்ய மாட்டாரா?’ என்று ரூமுக்குள் சிறிது நேரம் நடந்தவள் அவன் போன் செய்யவில்லை என்றவுடன், ‘அப்ப நான் அவ்வளவு தான் இல்ல… இப்பவும் நான் அவர் பிரண்டோட தங்கச்சி. அதைத் தாண்டி வேற எந்த உணர்வும் என் மேல கிடையாது” என்று கண்கள் கலங்க யோசித்த தனா,

போனை பெட்டில் தூக்கி எறிந்து விட்டு தனது அண்ணனின் அருகில் வந்து அவன் மேல் கையைப் போட்டு படுத்து விட்டாள்.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்