
தமிழ், சிம்லாவில் இருந்து வரும் போது அனைவருக்கும் வாங்கிக் கொண்டு வந்த பொருளை அனைவரிடமும் ஒப்படைத்துவிட்டு, அசதியாக இருப்பதால் தன்னுடைய ரூமுக்குச் சென்று குளித்துவிட்டு வெளியில் வந்தவள் சமையல் கட்டிற்குச் செல்ல,
அவளது கையில் டீயைத் திணித்த பாக்கியம், “டீ குடிச்சிட்டுப் போய் ரெஸ்ட் எடு தமிழு, நான் எல்லா வேலையும் பாத்துக்குறேன்” என்றார்.
“அஞ்சு நாளா என்ன அத்தை வேலை செஞ்சேன்?” என்று சிரிக்க, அவளது நெற்றியில் முத்தமிட்ட பாக்கியம், “என் மருமகள் சந்தோஷமா இருந்தாலே எனக்குப் பெருசு தான்டா” என்றார்.
தனது அத்தையைப் பார்த்துச் சிரித்த தமிழ், “சரி அத்தை” என்று விட்டு ரூமுக்குள் செல்ல,
ருத்ரன் உண்மையாகவே அசதியில் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று எண்ணி, ‘ரொம்ப தான் வெட்டி முறிச்சாரு பாரு, அசதியில தூங்குறாரு’ என்று லேசாக முனகி விட்டுத் தமிழ் அவனது அருகில் வர,
அவளை வேகமாகப் பிடித்து இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டவன், “எதுவுமே வெட்டி முறிக்கலையோ?” என்று அவளது காதில் சொல்ல,
“மாமா அமைதியா இரு, வீட்டில் இருக்கோம்” என்றாள்.
“நம்ம வீட்ல நம்ம ரூம்ல இருக்கோம்டி. யார் என்ன கேள்வி கேட்பா?” என்று சிரித்தான்.
“அது சரி” என்று அவனது நெற்றியில் முட்டிவிட்டு, “நான் இப்பதான் குளிச்சிட்டு வரேன், அமைதியா படு” என்றாள்.
“லூசுப் பொண்டாட்டி, உண்மையாவே டயர்டா இருக்கு, படுடி” என்று அவளைத் தன் மேல் போட்டுக் கொண்டு தூங்கி விட்டான்.
தமிழுமே வந்த அலைச்சலில் தூங்கி இருந்தாள்.
மாலை போல் இருவரும் தங்களது ரூமில் இருந்து வர,
அப்போதுதான் காலேஜ் முடிந்து வந்த தனா, “என்னன்னா ரொம்பத் தூக்கம் போல” என்று கேட்க,
தனது தங்கை கேட்டதைத் தப்பான அர்த்தத்தில் புரிந்து கொண்ட ருத்ரன், தனது தங்கையே பார்த்துக் கொண்டிருக்க,
தனது அண்ணன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த தனா, தனது அண்ணனின் கண்ணை உற்றுப் பார்த்துவிட்டு, வேறு எதுவும் பேசாமல் சமையலறைக்குள் போக,
சமையல் அறையில் இருந்த தமிழ் அவளுக்கு டீ கொடுக்க,
“இல்ல வேணாம் அண்ணி” என்று முக வாட்டத்துடன் சொல்ல,
“என்னாச்சு தனா?” என்று தமிழ் கேட்டாள்.
அவளது கையைத் தன் கைக்குள் பிடித்துக் கொண்ட தனா, “நான் எதுவும் அண்ணாகிட்டத் தப்பா பேசல அண்ணி. ஆனா, நான் கேட்ட வார்த்தையை அண்ணன் தப்பா புரிஞ்சுகிச்சுன்னு நினைக்கிறேன்” என்று சொல்ல,
“சரி, அதை ஏன் என்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்க? உன் அண்ணன் கிட்டயே சொல்ல வேண்டியது தானே… ஏன்? உனக்கு அந்த உரிமை இல்லையா?” என்று கேட்க,
“அண்ணன் அகி அண்ணி கிட்டயும், காயத்ரி கிட்டயும் பேசுற அளவுக்கு என்கிட்ட இதுவரைக்கும் பேசினது இல்லையே அண்ணி” என்று சொல்ல, வெளியே நின்று தனா பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ருத்ரனுக்கு அடிபட்ட உணர்வு. அவள் சொல்வதும் உண்மை தானே. தனது மாமன் மகள்கள் அவர்களாகத் தன்னிடம் வந்து வாயாடத் தானும் அவர்களிடம் வாயாடச் செய்கிறோம்.
ஆனால், தனது தங்கை தன்னிடமிருந்து ஒதுங்கியே வளர, தானும் அவளிடம் இருந்து ஒதுங்கியே தானே வளர்ந்திருக்கிறோம். இதில் அவளையும் குற்றம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அப்படியே வளர்ந்து விட்டாள் என்பதை விட வளர்த்து விட்டோம் என்பதுதான் உண்மை.
‘மற்ற எல்லோருடன் நன்றாக தானே பழகச் செய்கிறாள்’ என்று யோசித்தவன், ‘இதைப் பற்றி இப்பொழுது தனது தங்கையிடம் பேசுவதா, இல்லை எப்பொழுது பேசலாம்?’ என்று யோசித்துக் கொண்டிருக்க,
அப்போது அவனது போன் அடித்தது, எடுத்துப் பார்க்கச் சரவணனாக இருக்க, தனது மனைவியை எட்டிப் பார்த்தான். அவள் கண் மூடித் திறக்க,
“நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் தனா” என்றான். தன் அண்ணன் தன்னிடம் சொல்வதை ஒரு நிமிடம் யோசித்த தனா எதுவும் சொல்லாமல் அமைதியாகி இருக்க,
“உன்கிட்ட தாண்டி சொல்றாரு” என்று தமிழ் அவளது தோளில் தட்ட, தனா தனது கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டு, “சரி அண்ணா” என்றாள்.
“தனா கொஞ்சம் வெளியே வா” என்றான் ருத்ரன்.
அடுத்த நொடி தனது நண்பனின் போனை எடுத்த ருத்ரன், “சொல்லுடா” என்று கேட்க,
“மச்சான், கொஞ்சம் வெளியே வா…” என்றான். சரி என்று விட்டு ருத்ரன் வெளியில் வர சரவணன் வெளியே நின்று கொண்டிருந்தான்.
“ஏன் மச்சான், வெளியே இருந்துட்டு போன் பண்ற? வீட்டுக்குள்ள வர வேண்டியது தானடா” என்று ருத்ரன் கேட்டான்.
அப்போது வெளியில் வந்த தனா, சரவணனைப் பார்த்துவிட்டு அமைதியாக “வாங்க மாமா…” என்று அழைத்துவிட்டுத் தனது அண்ணனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.
தனாவை சரவணன் ஓர விழியால் பார்க்க, தனா என்னவோ அமைதியாகத் தனது அண்ணனை தான் பார்த்துக் கொண்டு நின்றாள்.
தான் வந்து நின்றும் கூட அவளது பார்வை தன் மீது இல்லை, என்பதை உணர்ந்த சரவணன், “தனா…” என்று கூப்பிட,
ஏதோ யோசனையில் இருந்து மீண்டவள் போல, “என்ன மாமா?” என்று கேட்டாள்.
“கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா…” என்று சொன்னான்.
அடுத்த நொடி தனா வீட்டிற்குள் நுழைய, ருத்ரனைப் பார்த்து, “என்னடா ஆச்சு, உன் தங்கச்சிக்கு. ஏன் ஒரு மாதிரி இருக்கா?” என்று கேட்டான்.
அவள் தண்ணீர் எடுத்துக் கொண்டு வரப் போன கேப்பில் தங்களுக்கு இடையில் 10 நிமிடத்திற்கு முன்பு நடந்ததைச் சொன்னான் ருத்ரன்.
சரவணன் தனது நண்பனைப் பார்த்துவிட்டு அமைதியாகி விட,
“என்ன மச்சான், வாய் திறக்கவே மாட்ற” என்று ருத்ரன் கேட்டான்.
அதற்கு சரோ, “நீயாச்சு, உன் தங்கச்சி ஆச்சு. இதுல நான் என் தலையிடுவேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே வந்த தனா,
சரவணன் இறுதியாகப் பேசியதைக் காதில் வாங்கிய தனா,
சரவணன் கையில் தண்ணீர் சொம்பை வைத்து விட்டு, “உங்களை யாரும் அண்ணன், தங்கச்சி பஞ்சாயத்துல வந்து நாட்டாமை பண்ணச் சொல்லிக் கேட்கல மாமா… எங்களுக்குள்ள எது இருந்தாலும் நாங்களே பேசித் தீர்த்துக் கொள்வோம்” என்று சொல்ல,
சரவணன் தன் மச்சானைப் பார்த்துச் சிரித்தான்.
‘உன் தங்கச்சிக்கா வாய் பேச வராது என்பது போல் நினைச்சு வருத்தப்பட்ட’என்பது போல் இருந்தது அவனது பார்வையும், அவனது சிரிப்பும். ருத்ரனும் தனது நண்பனைப் பார்த்துச் சிரித்துவிட்டு,
“சரி தனா, நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன். நான் வரதுக்கு லேட் ஆகும்” என்று விட்டுத் தனது மச்சானுடன் கிளம்பினான்.
தனது மச்சானின் தோளில் கையைப் போட்ட சரவணன், “எப்படிப் போகுது வாழ்க்கை?” என்றான்.
“அத நான் கேட்க வேண்டும் மாப்பிள்ளை. கல்யாணத்தை வச்சிக்கிட்டு என் வீட்டுப் பக்கம் வந்து நிக்கிற. என் தங்கச்சியை சைட் அடிக்கறியா?” என்று சிரிப்புடனே ருத்ரன் கேட்க,
ருத்ரனின் முகத்தில் ஒரு குத்து விட்ட சரோ, “அதனால தானே வெளியே நின்னு போன் பண்னேன்” என்றான்.
“அதுக்கு எதுக்கு மச்சான் எங்க வீட்டுக்கு வெளியே என்னை போன் செய்யனும். அதை, நீ உன் வீட்டில் இருந்து போன் பண்ணி இருந்தாலே நான் வந்து இருப்பேனே” என்றான்.
“ஆமா உன் தங்கச்சி வெளியே வருவா, அவகிட்ப்ட பேசிட்டுப் போலாம்னு வந்தேன் பாரு” என்று சரோ முறுக்கிக் கொள்ள,
“ஏன் மச்சான், வெளியே நிக்க வச்சுப் பேசணும், போன்ல பேச வேண்டியதுதானே?” என்றான்.
“இல்லடா, பேசல. தோணவில்லை” என்று விட்டு சரோ அமைதியாகி விட,
அவனது தோளில் கையைப் போட்ட ருத்ரன், “என் தங்கச்சியா அவளைப் பார்க்குறத நிறுத்திட்டு, உன்னோட வருங்காலப் பொண்டாட்டியாகவும், நீ நேசிக்கிற பொண்ணாவும் பாரு, பேசத் தோணும்.
இதுக்கு மேல என் மச்சானுக்கு நான் பேசிப் புரிய வைக்க வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது” என்றான்.
சரவணன் சிரிக்க,
“என்ன டா?” என்று ருத்ரன் முறைப்புடன் கேட்க, “ஒன்னும் இல்ல மச்சான், விடு பாத்துக்கலாம்” என்று சரோ இப்பொழுது ருத்ரனின் தோளில் தட்டினான்.
தன் தோளில் போட்ட கையை எடுத்து விட்டவன், சரோவைப் பார்த்து முறைத்துவிட்டு, “லூசு மாதிரிப் பண்ணாத, அவளுக்கும் நிறைய ஆசை இருக்கும். உனக்கும் இருக்கும். இன்னும் பத்து நாள்தான் இருக்கு கல்யாணத்துக்கு” என்றான்.
“சரி, அதுக்கு என்ன பண்ணனும்?” என்று சரவணன் கேட்க,
தனது நண்பனை அடிக்கக் கை ஓங்கிக் கொண்டு வந்த ருத்ரன், “இது உன்னோட தனிப்பட்ட வாழ்க்கை, உன்னோட விருப்பம். இதுல நான் தலையிட விரும்பல” என்று விட்டு வேறு பக்கம் திரும்பிக் கொள்ள,
சரவணன் தனது நண்பனைப் பார்த்துச் சிரித்துவிட்டு, “சரி வா மச்சான், பாத்துக்கலாம்” என்று அவனது தோளில் கையைப் போட்டுச் சிரித்துப் பேசிக் கொண்டே கொஞ்ச தூரம் நடந்தான்.
சரவணன், கீர்த்தனா இருவரது திருமண வேலைகளும் எவ்வளவு தூரம் சென்று கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு, ஒரு சில இடத்திற்கும் சரவணன் உடன் சென்று பார்த்துவிட்டு இரவு போல் வீட்டிற்கு வந்தான் ருத்ரன்.
சரவணனை “வீட்டிற்கு வாடா” என்று ருத்ரன் அழைக்க,
“இல்ல மச்சான், நீ போ…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பாக்கியம் “நம்ம வீடு தானே, இதுல என்ன இருக்கு. வா டா” என்றார்.
“இல்ல அத்தை, தேதி வச்சாச்சு. பத்திரிகையும் நமக்கு நெருங்கின சொந்தத்துக்குக் கொடுத்துட்டோம். இப்ப நான் வரது நல்லா இருக்காது” என்றான்.
“டேய் வாடா, யார் இப்போ அதெல்லாம் பாத்துட்டு இருக்கோம்” என்றார்.
சரோ தமிழைப் பார்க்க, அவள் கண்ணை மூடித் திறந்து, “வா அண்ணா” என்று கூப்பிட சரி என்று வீட்டிற்குள் வர,
தனா வாய் வைத்துக் கொண்டு அமைதியாக இல்லாமல், “எங்க அண்ணனும், அம்மாவும் கூப்பிட்டா வீட்டுக்குள்ள வர முடியாதோ?” என்று சொல்ல,
சரவணன் தனாவை அமைதியாகப் பார்த்து லேசாகச் சிரித்துவிட்டு வீட்டிற்குள் வந்தான்.
தமிழ் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க, ஒரு வாய் குடித்துவிட்டுத் தனாவின் கையில் கொடுக்க, அமைதியாக வாங்கிக்கொண்டு நின்றாள்.
“தமிழ், கொஞ்சம் உள்ள வா…” என்று விட்டு ருத்ரன் தனது ரூமுக்குள் நுழைந்து கொள்ள,
பாக்கியம் பின் கட்டிற்குச் சென்றார்.
இப்பொழுது தனா திருதிருவென முழித்துக் கொண்டு இருக்க,
அவளது அருகில் சிறிது இடைவெளி விட்டு வந்து நின்ற சரவணன் தனாவை ஒரு சில நொடி பார்த்துக் கொண்டு இருக்க,
“என்ன மாமா, ஏன் அப்படிப் பாக்குறீங்க?” என்று கேட்டாள்.
“என்கிட்ட மட்டும் தான் உனக்குப் பேச வாய் வருமா? உன் அண்ணன்கிட்டப் பேச வராதா?” என்று கேட்டான்.
அவனை முறைப்புடன் பார்த்தவள், “என்னப் பத்தி மட்டும் என்கிட்டப் பேசுங்க, என் அண்ணனைப் பத்திப் பேசுற வேலை வேணாம்” என்று சொல்ல,
“இதுக்கு மட்டும் ஒன்னும் குறைச்சல் இல்ல, என்கிட்ட மட்டும் ரோஷம், கோபம் எல்லாம் வரும். ஏன் அவன் சட்டையைப் புடிச்சுக் கேட்க வேண்டியது தானே… எல்லார் கிட்டயும் சிரிச்சுப் பேசுற. என் கிட்டயும் சிரிச்சு உரிமை எடுத்துப் பேச வேண்டியது தானே, அதுக்கு மட்டும் உனக்கு வாய் வராது” என்றான்.
விரல் நீட்டி அவனை எச்சரிக்கை செய்த தனா, “என் அண்ணன் கிட்ட என்ன பேசணும்னு எனக்குத் தெரியும். அதுல நீங்க தலையிட வேணாம்னு நினைக்கிறேன்” என்றாள் லேசாகக் குரலை உயர்த்தி.
அவள் குரல் உயர்த்திய சத்தத்தில் வெளியில் வந்த ருத்ரன், தங்கையைப் பார்க்க, கையைக் கீழே இறக்கி இருந்தாள் தனா. சரவணன் சிறிது தள்ளி நின்று கொள்ள,
“அண்ணா, வா சாப்பிடலாம்” என்று தமிழ் கூப்பிட,
“இல்ல தமிழ், அம்மா செஞ்சு இருக்காங்க. நான் வரேன், நேரம் ஆகுது” என்று விட்டு தனாவை ஒரு நிமிடம் நின்று பார்க்க,
“சரிடா, கிளம்பு” என்றான் ருத்ரன்.
வேறு எதுவும் பேசாத சரவணன் பாக்கியத்தைக் கூப்பிட்டுத் தான் வீட்டிற்குச் செல்வதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டான்.
ருத்ரன் தனது தங்கையை நின்று பார்த்துவிட்டு, ஹாலில் உட்கார தமிழ் சமையலறைக்குள் புகுந்து சாப்பாடு அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்து வைத்தாள்.
இங்கு தனா தான், சரவணன் மாமாவிடம் பேசியது அதிகப்படியோ என்று கையைப் பிசைந்து கொண்டு நின்றாள்.
சரவணன் மாமாவோ, இல்லை தனது அண்ணனோ தன்னைத் திட்டி இருந்தால் கூடப் பரவாயில்லை. இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் தன்னை ஒரு நொடி நின்று பார்த்துவிட்டுச் சென்றது உறுத்தலாக இருக்க,
‘நாம் அவரிடம் அப்படிப் பேசி இருக்கக் கூடாது. என்னிடம் அப்படிப் பேச வேண்டிய உரிமை இல்லை என்பது போல் பேசி விட்டோமோ?’ என்று யோசிக்க யோசிக்க அவளது கண்கள் தன்னை மீறிக் கலங்கச் செய்தது.
அவளுக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது. எங்கே கத்தி அழுது விடுவோமோ? என்று பயந்தாள். அப்பொழுது அவளது தோளில் ஒரு கரம் படிய, திரும்பிப் பார்த்த தனா தன்னையும் மீறித் தனது அண்ணனைக் கட்டிக் கொண்டு அழுதாள்.
“மாமாகிட்ட அப்படிப் பேசி இருக்கக் கூடாது இல்ல, அது அது…” என்று திக்கச் செய்தாள்.

