Loading

திமிர் 28

 

அவளிடம் பேசிவிட்டு வந்தவன் அதன்பின் சந்திக்கவே இல்லை. அவனுக்காகக் காத்திருந்து சோர்ந்து போனவள் வெளியே எட்டிப் பார்த்தாள். பிரியா வீட்டு ஆள்களுடன் பேசிக் கொண்டிருந்தான். மீண்டும் தன்னறைக்கு வந்தவள் காத்திருக்க, அறை இருட்டானது.

 

இரவு உணவை அவளுக்கு அனுப்பி வைத்தவன், தரிசனத்தை மட்டும் கொடுக்க மறுத்து விட்டான். எப்போதும் அவனோடு உறங்குபவள் இன்று அவன் பிள்ளையோடு உறங்கப் படுக்க, அவன் கொடுத்த தனிமை உறக்கத்தைத் தழுவ விடவில்லை. நேரத்தைப் பார்த்தாள். இரவு பத்தைக் கடந்திருந்தது. அவன் அறைக்குச் சென்று பார்வையிட்டாள். அங்கு இல்லை அகம்பன் திவஜ்.

 

ஃபோன் செய்தாள். எடுக்கவில்லை.‌ முட்டிக்கொண்டு வரும் கண்ணீரை வெளியேற்றாமல் தன்னைக் கட்டுப்படுத்தியவள், தன்னறைக்குச் சென்று விட்டாள். அவளைப் பார்க்கக் கூடாது என்பதற்காகக் காரிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறான். நினைவு அவளை வட்டமிட்டது. அவள் உணர்வுகள் புரிந்தாலும், சரி என்று கடக்க முடியவில்லை. ஒரு பக்கம், அவள் எண்ணுவதும் உனக்காகத் தானே என்று மனம் மன்றாடியது.

 

நள்ளிரவைத் தாண்டி வீட்டிற்கு வந்தவன் கால்கள் அவள் அறையை நோக்கி நகர்ந்தது. கதவு வரை வந்தவன், உள்ளே நுழைய மனம் இல்லாமல் தன் அறைக்குச் சென்று விட்டான். அரை மணி நேரத்திற்கு ஒருமுறை அவன் அறைக்கும், அவள் அறைக்கும் என்று நடையாக நடந்து கொண்டிருந்தவள் மீண்டும் வந்தாள். இந்த முறை அவள் எதிர்பார்ப்பு நிறைவடைந்தது. அதன் ஆனந்தம் சிறிதும் இல்லாமல், உறங்கிக் கொண்டிருப்பவனைக் கண்டு கண்ணீர் சிந்தினாள்.

 

அவன் பக்கத்தில் முதுகு காட்டிப் படுத்தாள். அகம்பன் கைகளை வயிற்றின் மீது வைத்தாள். மனம் தாங்காது உதடு விம்மியது. கோபமும், ஏக்கமும் அவளிடம். வெடுக்கென்று எழ முயன்றவளை அவன் கைகள் இறுக்கியது. முழித்துக் கொண்டிருப்பதை அறிந்தவள் திரும்பி அடிக்க ஆரம்பித்தாள். அனைத்தையும் பொறுமையாக வாங்கிக் கொண்டான்.

 

“நான் என்ன சொல்ல வரன்னு கூடப் புரிஞ்சுக்காம உன் இஷ்டத்துக்குப் பண்ற. இவ்ளோ நேரம் ஆகியும் என்னைப் பார்க்கணும்னு தோணல உனக்கு. இப்படியே இரு. நானும் உன்னைப் பார்க்க வரமாட்டேன்.”

 

“சாரி!”

 

“நான் தான் சாரி சொல்லணும். நான் யாரு உனக்கு? என்னை எதுக்காக நீ பார்க்க வரணும்.”

 

“சாரி!”

 

“தேவையில்லை.”

 

“சாரிடி!” கட்டி அணைத்தான்.

 

அவன் கைகளைத் தட்டி விட்டவள் எழ முயன்றாள். இடம் கொடுக்காது தன் மீது சாய்த்துக் கொண்டவன், “உன்னைக் கஷ்டப்படுத்திட்டோம்னு வருத்தமாயிடுச்சு.” என்றவன் கன்னத்தில் ஓங்கி அடித்தவள்,

 

“உன் பிள்ளையைச் சுமக்கிறது கஷ்டம்னு சொன்னனாடா? அது இருக்குறது தெரிஞ்ச நிமிஷம் எவ்ளோ சந்தோஷப்பட்டேன் தெரியுமா. இது என் குடும்பம்னு இது நாள் வரைக்கும் உரிமையா சொன்னது கிடையாது. இப்ப எனக்குன்னு ஒரு குடும்பம் வந்திருக்கு. அதை எப்படி வேண்டாம்னு சொல்லுவேன். வெளிப்படையா யார்கிட்டயும் சொல்லிக்க முடியலன்ற குற்ற உணர்ச்சி. என் வாழ்க்கைல ரொம்பச் சந்தோசமான தருணத்தைக் கூட இப்படி ஒரு அறைக்குள்ள முடங்க வச்சுட்டமேன்னு வருத்தம்.” என்ற மதுணியை இடைவெளி இல்லாது அணைத்தான்.

 

வெடித்துச் சிதறியது அவள் அழுகை. முதுகோடு கை நுழைத்து, விசும்பியவள் நிலை புரிந்து சமாதானம் செய்தவன், “இனி இப்படி நடந்துக்க மாட்டேன்.” என்றான்.

 

“எத்தனைத் தடவை இந்த ரூமுக்கு வந்து பார்த்தேன்னு தெரியுமா? உனக்கு ஏன்டா என்னை மாதிரித் தோனல. அப்ப நான் உனக்கு யாரு?”

 

“ப்ச்! நீதான்டி எல்லாமே எனக்கு.”

 

“பொய்!”

 

“சத்தியமா…”

 

“உன் பொய்யை நம்ப வேற ஆள பாரு.”

 

“கன்னி கழிஞ்சுட்டேன். இதுக்கு மேல எவளும் என்னை ஏத்துக்க மாட்டா.”

 

“ஏத்துக்கிட்டா போவீங்க.”

 

“ச்சீ ச்சீ! என் தங்கத்தை விட்டுப் போவனா?”

 

“தொடாத!”

 

“சத்தியமா எனக்கு எல்லாமே நீ தான்டி. வேணும்னா சொல்லு ப்ரூஃப் பண்றேன்.”

 

“பண்ணு!”

 

“ஆல்ரெடி பண்ணிட்டேன்!”

 

“ஹான்!” என்றவள் வயிற்றில் கை வைத்தவன், “அப்பாவுக்காகச் சாட்சி சொல்லுடா செல்லம். அப்பவாது உங்க அம்மா மரமண்டைக்கு நான் எவ்ளோ லவ் பண்றன்னு புரியுதான்னு பார்ப்போம்.” என முத்தமிட்டவன் உச்சி முடியைக் கொத்தாகப் பிடித்துத் தள்ளி விட்டாள்.

 

“உங்க அப்பாவை மட்டும் நம்பாத. உலகத்துலயே பெரிய ஃபிராடு. இவ்ளோ நேரம் நம்ம ரெண்டு பேரைப் பத்திக் கவலைப்படாம எப்படி நடிக்கிறான் பாரு.”

 

“என் குழந்தைகிட்ட என்னைப் பத்தித் தப்பா சொல்லாதடி!”

 

“இருக்கறது தான சொல்றேன்.”

 

“அதெல்லாம் நம்பாது!”

 

“வெளிய வந்த கையோட மூஞ்சில காரித் துப்பப் போகுது பாரு.”

 

“முதல்ல உன் பேட் வைப்ரேஷன் என் பிள்ளைக்கு வராமல் பார்த்துக்கணும்.” என்றவன் காதைப் பிடித்துத் திருகியவள், “என்னடா, ரொம்ப ஓவரா புள்ள புள்ளன்னு குதிக்கிற. நான்தான் முதல்ல!” என முகத்தைத் தூக்கி வைத்தவளைக் கட்டிப் பிடித்தான்.

 

“எப்பவும் நீ மட்டும் தான்!”

 

“நாளைக்குக் காலைல ஹாஸ்பிடல் போயிட்டு வருவோமா?”

 

“ஈவினிங் போலாமா?”

 

“ஏன்?”

 

“காலையில கோச் பார்க்க வரதா சொல்லி இருக்காரு. இன்னும் நாலு மாசம் தான் இருக்கு. தொடர்ந்து நடந்த பிரச்சினையில அதைக் கவனிக்காமல் விட்டுட்டேன். இனி ஒழுங்கா ப்ராக்டிஸ் பண்ணாதான் ஜெயிக்க முடியும்.”

 

“ஒன்னும் பிரச்சினை இல்ல அகா. நீ உன் வேலையப் பாரு. உடனே போகணும்னு அவசியம் இல்ல.”

 

“ஒருவேளை, ட்ரைனிங்காக வெளியூர் போனா மேனேஜ் பண்ணிப்பல்ல. குழந்தை மட்டும் இல்லாம இருந்தா உன்னையும் கூட்டிப் போயிருப்பேன்.”

 

“அதைப் பத்தி எல்லாம் யோசிக்காத. நீ உன்னோட விளையாட்டுல மட்டும் கான்சன்ட்ரேட் பண்ணு. இந்தத் தடவை கண்டிப்பா நீதான் வின் பண்ணுவ.”

 

***

 

மறுநாள் விடிந்ததுமே கிளம்பி விட்டான். ஆதி சொன்னதன் பெயரில் அவனைச் சந்திக்க வந்தவர், இன்னும் பயிற்சியில் ஈடுபடாமல் இருக்கும் அகம்பனைத் திட்டித் தீர்த்தார். நான்கு மாதத்தில் தன்னைத் தேற்றிக் கொள்வதாக உறுதி அளித்தவனிடம்,

 

“நமக்கு டைம் ரொம்பக் கம்மியா இருக்கு. உடனே ட்ரெய்னிங்க ஸ்டார்ட் பண்ணனும். உங்க கவனம் ஸ்போர்ட்ஸ்ல திரும்பனும். கோயம்புத்தூர்ல ஒரு பெரிய இவன்ட் நடக்குது. உங்கக் கவனம் திரும்பனும்னா, நீங்க அங்க போகணும். முழுக்க முழுக்க எதைப் பத்தியும் யோசிக்காமல் ஸ்போர்ட்ஸ் பர்சனோட இருந்தால் மட்டும்தான் விட்டதைப் பிடிக்க முடியும். நாளைக்கே கிளம்பிடுங்க மிஸ்டர் அகம்பன்.” என்றார்.

 

பெருத்த யோசனையில் இருந்தவனிடம், “இவ்ளோ யோசிக்கிறது உங்க ஆம்பிசனுக்குச் சரிவராது. ஒன்னு, இதுல இருந்து நீங்க ஸ்கிப் ஆகணும். இல்லன்னா, போன தடவை விட்டதுக்கும் சேர்த்துப் பெரிய வெற்றியைக் கொடுக்கணும். எதுன்னு நீங்கதான் சூஸ் பண்ணனும். பட், ஒரு கோட்சா நீங்க கோயம்புத்தூர் போறதுதான் பெஸ்ட்னு சொல்லுவேன். உங்க மேல இப்ப நிறைய பிரஷர் இருக்கு. இந்த பிரஷரோட ட்ரைனிங் ஸ்டார்ட் பண்ணீங்கன்னா ஹேண்டில் பண்ண முடியாது. சோ, ப்ளீஸ் எல்லாத்தையும் மறந்துட்டு ஒரு ரெண்டு நாள் ஈவென்ட்க்குப் போயிட்டு வாங்க.” மனத்தை மாற்றினார்.

 

‘சரி’ என்று சம்மதித்தவன் சென்றதுமே, ஆதியிடம் விஷயத்தைத் தெரிவித்தார். அவன் நேரடியாக அனுவிடம் கூறினான். தனக்கான தக்க சமயம் வந்துவிட்டதை அறிந்தவள் நேற்றைய தினத்தை யோசித்தாள். சாப்பிடும் இடத்தில் நடந்த அனைத்துக் கூத்தையும், கவனித்துக் கொண்டிருந்தவள் குரோதத்திற்குச் சரியான தீனி அமைந்துவிட்டது.

 

“எப்படியும் உங்க தம்பி, கமலை இங்க விட்டுட்டுத் தான் போவாரு. அவன் அந்த மதுகிட்ட நெருங்கவே கூடாது. அதையும் தாண்டி அங்க காட்ஸ் யாரும் இருக்கக்கூடாது. மது வீட்டை விட்டுப் போனதுக்கான எந்தத் தடயமும் உங்க தம்பிக்குக் கிடைக்கக் கூடாது. இதுதான், முதலும் கடைசியுமா நான் அடிக்கிற அடி. இந்த அடியில இருந்து அவள் எந்திரிக்கவே கூடாது. உங்க தம்பி, ஜென்மத்துக்கும் அவ பக்கம் தலை வச்சுப் படுக்கக் கூடாது. எதையும் சொதப்பிடாமல் எல்லாத்தையும் சரியா பண்ணுங்க.”

 

“அப்படி என்ன பண்ணப் போற அனு?”

 

சொல்ல வேண்டியதை மட்டும் அவனிடம் சொல்லியவள், பெரும் ரகசியத்தை மறைத்தாள். அவை ஆதிக்குத் தெரிந்திருந்தால், நிச்சயம் இதில் இறங்கி இருக்க மாட்டான். அனுவின் குள்ளநரிக் குணத்தை அறியாது தம்பியின் வாழ்க்கைக்குப் பள்ளம் தோன்றினான்.

 

“அவள் பிரிஞ்ச கையோட ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை முடிச்சிடனும்.”

 

“கண்டிப்பா முடிச்சிடலாம்.”

 

“அகம்பன் கிளம்புற வரைக்கும் சந்தேகம் வராமல் நடந்துக்கோங்க.” என்று விட்டுச் சங்கரன் செல்ல, தன் மகிழ்வைக் கொண்டாட அறைக்கு ஓடினாள் அனு.

 

மூவர் மட்டுமே அங்கு. பலத்த சிந்தனையில் வெகு நேரம் அமர்ந்திருந்தார்கள். ஒன்றுபோல் மூவர் மனத்திலும் ஓடியது மதுணிகா மட்டுமே. அவளை முதல் முறை பார்த்த பொழுது இருந்த கோபம், இப்பொழுது இருக்கிறதா என்று ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். இல்லை என்று மனம் சொன்ன செய்தியை மூளை குழப்பிவிட்டது. இரண்டுக்கும் நடுவில், தங்கள் வீட்டுப் பிள்ளையின் பேரானந்தம் கெடப்போவது அறியாமல் அனுவின் பக்கம் நிற்கின்றார்கள்.

 

***

 

விஷயம் அறிந்தவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவனுடைய இலட்சியத்தைக் கெடுக்க விரும்பாது, “ரெண்டு நாள் தான. இதுல என்ன ஆகிடப் போகுது. அதான் என் கூட கமல் இருக்கானே. கோட்ச் சொன்ன மாதிரி இப்போ உன்னோட கான்சன்ட்ரேட் அதுல திரும்பனும். அதுக்காகவாவது அங்கப் போய்தான் ஆகணும். இங்க நானும், உன் குழந்தையும் பத்திரமா இருப்போம்.” நம்பிக்கை கொடுத்தாள்.‌

 

“டாக்டரைப் பார்த்துட்டு வந்துருவோமா?”

 

“நீ வந்ததுக்கப்புறம் போயிக்கலாம்.”

 

“எதுவா இருந்தாலும் தைரியமா இரு. கமல் உன் கூடத்தான் இருப்பான். கமல் மட்டும் இல்ல, என்னோட ஆள் நிறையப் பேர் உனக்குப் பாதுகாப்புக்கு இருப்பாங்க. எல்லாத்தையும் மீறி உன்ன நம்பி இப்ப நம்ம குழந்தை இருக்கு. யாரைப் பத்தியும் யோசிக்காம ரிலாக்ஸா இரு. முக்கியமா என்னோட பர்மிஷன் இல்லாம இந்த வீட்டை விட்டுப் போகக்கூடாது. யார் என்ன பேசினாலும், ரியாக்ட் பண்ணாத. எதுவா இருந்தாலும் நான் வந்து பார்த்துக்கிறேன்.”

 

“நான் என்ன குழந்தையா?”

 

“உனக்குள் ஒரு குழந்தை இருக்கே!”

 

“இவ்ளோ பாதுகாப்பு உன் குழந்தைக்கா?”

 

“என் காதலிக்கு!”

 

சட்டென்று சிரித்தவள் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு, “லவ் யூ அகா…” என்றிட, “உன்ன விட்டுட்டுப் போக மனசே இல்லடி.” சிறுபிள்ளை போல் அடம் பிடித்தான்

 

“இப்ப என்கூடக் குட்டி அகம்பன் இருக்கான். ரொம்ப யோசிக்காமல் ஜாலியா போயிட்டு வா.”

 

கன்னம் கிள்ளி முத்தமிட்டு, வழி அனுப்பி வைத்தவளுக்குத் தன்னந்தனியாக வழி இன்றி நிற்கப்போகும் அவல நிலை.

 

***

 

பிள்ளையோடு நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருந்தவளுக்கு ஒரு அழைப்பு வந்தது. புதிய எண்ணைக் கண்டவள் யோசனையோடு அழைப்பை ஏற்க, “ஹலோ மேடம்! நான் உங்க வீட்டு வாட்ச்மேன் பேசுறேன்.” என ஒரு நடுத்தர வயதில் இருக்கும் ஆண் குரல் கேட்டது.

 

“சொல்லுங்க சண்முகம். அங்க எல்லாரும் எப்படி இருக்காங்க. அம்மா நல்லா இருக்காங்களா?”

 

“அதைப்பத்தி தான் மேடம் உங்ககிட்ட பேச போன் பண்ணேன்.” என்றவர் கத்திக் கூப்பாடு போட, பயத்தில் உள்ளங்கை வேர்த்தது மதுணிக்கு.

 

“ரெண்டு நாளுக்கு முன்னாடி வீட்ல ஒரே சண்டை. என்ன நடந்துச்சுன்னு சரியா தெரியலங்க மேடம். பெரிய மேடத்தை ரத்த வெள்ளத்துல தூக்கிட்டுப் போனாங்க. இப்ப அவங்க கோமால இருக்கிறதா சொல்றாங்க.”

 

“என்ன சொல்றீங்க?”

 

“அவங்க உங்க பேரைச் சொல்லித்தான் சண்டை போட்டாங்க. என் பொண்ண ஒரே ஒரு தடவைப் பார்க்கணும்னு சார் காலைப் பிடித்து அழுதாங்க.”

 

அவர் அழைப்பைத் துண்டித்தவள், முரளிக்கு அழைத்தாள். அழைப்பை எடுக்கவில்லை அவர். கிஷோரைத் தொடர்பு கொண்டாள்.

 

“எதுக்குடி எங்களுக்கு போன் பண்ற? எங்க அம்மா இருக்காங்களா, செத்துட்டாங்களான்னு பார்க்கவா? பெத்த என்னை விட வளர்த்த உன் மேல தான அவ்ளோ பாசமா இருந்தாங்க. அவங்களை இப்படிப் பிணமா படுக்க வச்சுட்டியே. நீ நல்லா இருப்பியா? உன்னால தான் அம்மாக்கு இந்த நிலைமை. உன்கிட்டப் பேசணும்னு கெஞ்சி இப்பப் பேச முடியாமல் இருக்காங்க. இப்பக் கூட டாக்டர், ஒரே ஒரு தடவை உங்கப் பொண்ணு வந்து பேசினா நினைவு வந்துடும்னு சொல்றாங்க. ஆனா, நீ இங்க வரக்கூடாது. என்னோட அம்மா செத்தாலும் பரவால்ல, நீ மட்டும் இங்க வரவே கூடாது. என் குடும்பத்தோட சாபம் உன்னைச் சும்மா விடாது.”

 

“என்னடா சொல்ற. அம்மாக்கு என்னதான் ஆச்சு?”

 

“இவ்ளோ சொல்லியும் நல்லவள் மாதிரிக் கேட்கற. இப்ப நாங்க எவ்ளோ கஷ்டத்துல இருக்கோம்னு கண் கூடாப் பார்த்துச் சந்தோஷப்படணும், அவ்ளோ தான. இரு, இப்பவே எங்க அம்மாவப் பார்த்துச் சந்தோஷப்படு.”

 

அவள் அழைப்பைத் துண்டித்தவன், பாதி உயிரோடு இருக்கும் அஞ்சலையின் புகைப்படத்தை அனுப்பி வைத்தான். இயந்திரத்தின் உதவியோடு சுவாசித்துக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி ஒயர்கள். அன்னையை அந்த நிலையில் பார்த்ததும் மயக்கம் வந்துவிட்டது மதுணிக்கு. அங்கிருந்த இருக்கையை இறுக்கமாகப் பிடித்துத் தன்னை நிலைப்படுத்தியவள் தந்தைக்கு அழைத்தாள்.

 

“ஹலோ!” என்றார் உடைந்த குரலில்.

 

“அப்பா…”

 

“உங்க அம்மா இருக்க நிலைமையைப் பார்த்தியா? இப்படி ஒரு நிலைமையில பார்க்கவா, இத்தனை வருஷம் உன்னை வளர்த்தா. என் பொண்ணைப் பார்க்கணும்னு சண்டை போட்டு இப்படி ஆகிட்டாளே.”

 

“அம்மாக்கு என்னப்பா?”

 

“அவளுக்கு மனசுல பிரச்சினை. என்னை மாதிரிச் சுயநலமா வளர்க்காம, பாசம் காட்டி வளர்த்துட்டா. அதுவே இவளுக்கு வினையாயிடுச்சு. வளர்த்த பொண்ணு, தன்னை மறந்துட்டுக் கவலை இல்லாமல் இருக்கான்ற கவலை. ஒரு தடவை கூட போன் பண்ணலன்ற ஏக்கம். உன்னைப் பார்க்க முடியாத ஏக்கத்துல, என்ன பண்றோம்னு தெரியாமல் தன்னைத்தானே அழிச்சுகிட்டு இந்த நிலைமைக்கு வந்துட்டா.”

 

கதறி அழுதாள் மதுணிகா. அவள் குற்ற உணர்ச்சியைக் கிண்டிக் கிளறி விட்டார் முரளி. அழுத்தம் தாங்காது அழைப்பைத் துண்டித்தவள் கமலை அழைக்க, அவன் அங்கு இல்லை. போன் செய்து ஓய்ந்து போனவள் அறையை விட்டு வெளி வர, அங்கு யாருமே இல்லை. மொத்த வீடும் காலியாக இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்தவள் வீட்டை விட்டு வெளியேறினாள்.

 

***

 

“ஹலோ!”

 

“டேய் நாயே!” குரலைக் கேட்டதும் யார் என்று கண்டு கொண்ட அகம்பன், “உயிரோட விட்ட கொழுப்புல பேசுறியாடா…” பல்லைக் கடித்தான்.

 

“ஹா ஹா ஹா! பெரிய இவனாடா நீ. நாலு பேரை வச்சுக்கிட்டு அடிச்சா, நீ பெரிய ஆம்பளையா? என்னோட அனுபவத்துக்கு நீ எல்லாம் ஒரு பூச்சி. உன்னை ஆரம்பத்துலயே நசுக்காமல் விட்டது தான் நான் பண்ண ஒரே தப்பு.”

 

“பரதேசி! எதுக்குடா எனக்கு போன் பண்ண?”

 

“ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லணும்!”

 

“ஒரு ஆணியும் தேவையில்லை, வை போனு.” என வைக்கச் சென்றவன் செவியில், “உன் குழந்தை கூடவா?” என்ற வார்த்தை விழுந்தது.

 

கண்கள் கூர்மையாகி போனைக் காதில் வைத்தான். அவன் மௌனம் அறிந்து வெற்றிக் களிப்பில் சிரித்த முரளி, “உனக்குச் சம்பவம் பண்ண நாலு அடி ஆள் தேவை. எனக்கெல்லாம் என் மூளையே போதும்டா.” கொக்கரிக்கச் சிரித்தார்.

 

“உன்னால என் குழந்தைய மட்டும் இல்லடா, அந்தத் திருச்சில காலைக் கூட எடுத்து வைக்க முடியாது.”

 

“கரெக்ட்! என்னால அங்க கால் வைக்க முடியாது. நீ ஆசைக்கு வச்சிருந்தியே, அவளால சென்னையில கால் வைக்க முடியும்ல.”

 

“என்னடா சொல்ற?”

 

“அவ இப்ப இங்கடா…” என்பதைக் கேட்டவன் நம்ப முடியாமல் திணற, “அதைவிட ஒரு ஸ்பெஷலான நியூஸ் என்கிட்ட இருக்கு.” என்றதில் காதைக் கூர்மையாக்கினான்.

 

“அதைக் கேக்கறதை விடப் பார்த்தால் தான் நல்லா இருக்கும். பார்க்கறியா உனக்கான படத்தை.”

 

அழைப்பைத் துண்டித்த கையோடு, அவனுக்கு ஒரு வீடியோவை அனுப்பி வைத்திருந்தார் முரளி.‌ அதில் தெரிந்த காதலியைக் கண்டு நரம்புகள் புடைத்தது. தன் வீட்டில் இருந்தவள், அவனோடு எப்படி என்ற பெரும் யோசனைக்கு ஆளானான்.

 

“அப்பாவுக்காக இவ்ளோ பெரிய விஷயத்தைச் செஞ்சிருக்கியே, உனக்கு நான் என்னமா பண்ணப் போறேன்? நீயே உன் கையால இந்த மாத்திரையைப் போடுமா.” என இரு மாத்திரைகளைக் கொடுத்தார்.

 

அவர் கைமீது கை வைத்த மதுணி, “உங்களுக்காக இது மட்டும் இல்லப்பா, எதைச் செய்யவும் தயங்க மாட்டேன்.” என்றாள்.

 

முரளி கொடுத்த இரு மாத்திரைகளை வாயில் போட்டுத் தண்ணீர் குடித்தாள் மதுணிகா. அந்த வீடியோவைப் பார்த்தவன் போனைத் தூக்கி அடித்து விட்டு, “மதுணிகா…” மூச்சே நிற்க்கும் அளவிற்குக் கத்தினான்.

 

அவனைத் தொடர்பு கொண்ட முரளி விடாது சிரிக்க, பல்லைக் கடித்துக் கொண்டிருந்தான் அகம்பன்.

 

“இது எல்லாமே எங்களோட பக்கா பிளான்டா…” என மீண்டும் கொக்கரித்துச் சிரித்தார்.

 

“இது தெரியாமல், அவள் என்னமோ உன்னை உண்மையா உருகிக் காதலிச்ச மாதிரி, அவளுக்காக உன் குடும்பத்தை எதிர்த்து இப்படிக் கோமாளியா நிக்கிறியே. உன்னைக் கல்யாணம் வரைக்கும் கூட்டிட்டுப் போய் அசிங்கப்படுத்துறது தான் எங்க பிளான். அதுக்கு நடுவுல இந்தக் குழந்தையை நான் எதிர்பார்க்கல.‌ அந்த விஷயத்துல மது மேல எனக்குக் கொஞ்சம் கோவம் தான். இருந்தாலும், உன்னோட உயிரைக் கொன்னு உன்னைத் துடிக்க விடுறதுல கூடுதல் சந்தோஷம்!”

 

கண்மூடி, துரோகத்தின் வலியை முழுமையாக அனுபவித்தவன், அந்தக் கைபேசியைச் சுக்கு நூறாக உடைத்தான்.

 

***

 

மருத்துவமனை மெத்தையில் சாய்ந்து அமர்ந்திருந்தவள், வயிற்றில் கை வைத்துப் பயந்து கொண்டிருக்கிறாள். தன்னவனை எண்ணிப் பெரும் அச்சம் பிறந்தது. அவனை மீறி இங்கு வந்ததை அறிந்தால் என்ன செய்வானோ? இதில் குழந்தை பற்றித் தெரிந்தால், என்றதற்கு மேல் யோசிக்க முடியவில்லை.

 

அவள் நினைக்கப் பதறிய ஒன்றுக்குப் பதில் கொடுக்க, சீறிப்பாய்ந்து வந்து கொண்டிருந்தான் ஜி என் மருத்துவமனைக்கு. அவன் விடும் மூச்சுக்காற்று இந்த உலகையே பஸ்பமாக்கும் அளவிற்குச் சூடாக இருந்தது. புடைத்த நரம்புகள் இளகுவதாகத் தெரியவில்லை. கண்ணில் ரௌத்திரம் பொங்கியது. கோபத்தில் தாடைகள் விரிந்து புடைத்தது. ஆயிரம் கிலோ இரும்புக் கம்பியை அவன் மீது வீசி அடித்தால், அவை சுக்கு நூறாகும் நிலை. இரும்பை விடக் கடினமாக வந்து கொண்டிருந்தான்.

 

“அகா…”

 

அறைக்குள் நுழைந்தவனைக் கண்டவள் பயத்தில் உறைய, நோயாளி மெத்தையை ஓங்கி உதைத்தான். அவன் உதைத்த உதைக்கு நகர்ந்து தள்ளாட வைத்தது அவளை. அந்த அதிர்வில் நினைவு திரும்பியவள், பயத்தில் முகம் வெளிறிப் பார்க்கப் பாய்ந்து கழுத்தைப் பிடித்தான். அவனுடன் வந்த கமல் தடுக்க, “சாவடிச்சிடுவேன்டா உன்ன…” ஓங்கி நெஞ்சில் உதைத்தான்.

 

நான்கடி பறந்து சென்று விழுந்தவன் மனம் நோகப் பார்க்க, “எங்கடி என் குழந்தை?” காட்டுக் கத்தல் கத்தினான்.

 

“குழந்தை…”

 

வார்த்தை வரவில்லை அவளிடம். கண்கள் சிவக்க மீண்டும் கழுத்தைப் பிடித்தவன், “பிடிக்காமல் என் கூட இருந்தியா?” கேட்க, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“பதில் சொல்லுடி!”

 

மறுத்துத் தலையசைத்தவள் கழுத்தை இன்னும் நசுக்கி, “அப்புறம் ஏன்டி?” கத்தினான்.

 

“சாரி!”

 

“ஏய்!” எனக் கன்னத்தில் ஒன்று விட்டவன், “பேசாத. ஒரு வார்த்தை பேசாத. பச்சத்துரோகிடி நீ. இதுவரைக்கும், நீ எனக்குத் துரோகத்தை மட்டும் தான் செஞ்சிருக்க. எங்க இருந்துடி என் வாழ்க்கைகுள்ள வந்த.” மீண்டும் அடித்தான்.

 

“உன் மேல கொலவெறி. எல்லாத்தையும் காதலுக்காக மறந்தேன். அந்தக் காதல் தான், இன்னைக்கு அநியாயமா ஒரு உயிரைக் கொன்னு இருக்கு. நீ ஒரு கொலைகாரப் பாவி.”

 

“என்ன நடந்துச்சுன்னு தெரியல அகா…”

 

ஓங்கிக் கன்னத்தில் அடித்து, “என் கையால செத்துடாத. இனி உனக்கும், எனக்கும் எதுவும் இல்ல. ஜென்மத்துக்கும் என் பக்கம் வந்துடாத.” எனத் திரும்பியவன் கைப் பிடித்தவளை உதறி விட்டுச் சென்றான்.

 

தன் உயிர் தன்னை விட்டுப் பிரிந்து, உதிரம் கொட்டிச் சோர்வடைந்த உடலை மறந்து ஓடி அவன் காலைப் பிடித்தாள். உதறித் தள்ளினான். மீண்டும் பிடித்தவள் அவன் காலில் முகத்தை அழுத்தி அழத் தொடங்கினாள். குனிந்து அவள் முகம் பார்த்தான். அவனை நிமிர்ந்து பார்த்தவள் விழியால் மன்றாட, “ச்சீ!” என எட்டி உதைத்து விட்டுச் சென்றான்.

 

அந்த இடத்திலேயே அமர்ந்து தரையில் ஓங்கி அடித்துக் கதறினாள். ஈவு இரக்கமின்றி, அவள் அழுகையைக் கேட்டுக் கொண்டு வெளியே வந்தான்.‌ யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல், இதற்குத் தானும் ஒரு காரணம் என்ற குற்ற உணர்வில் அங்கிருந்து கிளம்பினான் கமல்.

 

காருக்குள் அமர்ந்தவன், ஏற முயன்ற கமலைக் கண்டுகொள்ளாது காரை எடுத்தான். அதிவேகத்தையும் தாண்டிப் பறந்தது அந்தக் கார். கொதிக்கும் அவன் மனநிலைக்கு, அந்த வேகம் போதவில்லை. உடல் ஆட்டம் கண்டது. மனம் பதைப்பதைத்தது. தார் சாலையைத் தாண்டி மணல் பக்கம் காரைச் சுழற்றி நிறுத்தியவன், “ஆஆஆ…” ஆங்காரமாகக் கத்தினான்.

 

அதுவும் அவனுக்குப் போதவில்லை. ஸ்டியரிங்கை அடித்துக் குறைக்க முயன்றவன், தன்னைத்தானே அடித்துச் சேதப்படுத்தினான். எதுவும் அவன் மனவலிக்கு மருந்தாகவில்லை. அடங்காதவன், அசுரன், திமிர் பிடித்தவன் என்று பெயரெடுத்தவன் முதல்முறையாகத் தோல்வி நிலைக்குச் சென்றான். அதன் அழுத்தம் தாங்காது, குமுறி அழ ஆரம்பித்தான். யாருக்கும் அஞ்சாத அந்த ஆறடி ஆலமரம், தொலைந்து போன தன் உயிரை நினைத்து உக்கிரமாகக் கத்தி அழுதது.

 

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்