
தேஜாவும் யுகாவும் பெங்களூர் வந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகி விட்டது. ஆனால் யுகாவிடம் இருந்து இயல்பான பேச்சு வார்த்தை கூட இல்லை. தேஜா ஏன் பேசவில்லை என்ற குழப்பத்துடன் தன் வேலையை பார்க்க அவனோ இன்னும் இன்னும் விலகிப் போனான்.
ஏதாவது கேட்டால் மட்டுமே பதில் வந்தது. ஆனால் அவளை கம்பெனியில் ட்ராப் செய்வதில் இருந்து இரவு உணவை செய்வது வரை அனைத்தும் சரியாக செய்தான். ஆனால் அளவான பேச்சு மட்டுமே. இப்படியே சென்று கொண்டிருக்க தேஜாவிற்கு தனிமையில் இருப்பது போல தான் இருந்தது. தனித்து இருப்பது அவளுக்கு பழக்கம் என்றாலும் இந்த கணம் அது மனச் சோர்வை தந்தது.
இன்று அவனை விடக் கூடாது என்று முடிவு செய்தவள் அவனுக்காக காத்திருந்தாள்.
சற்று நேரம் தாமதித்து வந்தவன் அவள் உறங்காமல் அமர்ந்திருப்பது கண்டு “இன்னும் தூங்கலை டைம் லெவன் தேர்ட்டி தேஜா”என்று சொல்லிக் கொண்டே தனது ஷூக்களை கழற்றி ஸ்டாண்டில் வைத்து விட்டு சிங்க்கில் கையை கழுவி விட்டு வந்தான்.
“என்ன பிரச்சினை உங்களுக்கு”என்றாள் நேரடியாக.
“எனக்கா… எனக்கு எதுவும் பிரச்சினை இல்லையே”என்றவன் அங்கே நிற்காமல் அறைக்குள் நுழைந்தான்.
“ப்ப்ச்”என்று சலித்தவள் அவனுக்கான உணவை எடுத்து வைக்கப் போக “நான் டின்னர் முடிச்சுட்டு வந்துட்டேன் தேஜா. குட் நைட்”என்று கதவருகில் நின்று சொல்லி விட்டு கதவை சாத்தப் போக அதில் இன்னும் எரிச்சல் ஆகிப் போனாள்.
“இவருக்கு மட்டும் தான் இக்னோர் பண்ணத் தெரியுமா நானும் பண்றேன். நானும் இனி தள்ளியே இருந்துக்கிறேன்”என்று முணுமுணுத்துக் கொண்டே விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டு தன்னறை புகுந்தாள்.
அழுகை வரும் போல இருந்தது அவளுக்கு.
தன்னை உதாசீனம் செய்பவனிடம் ஏன் சென்று நிற்க வேண்டும் இனி நிற்க மாட்டேன் என தீர்மானித்துக் கொண்டவள் அழுகையோடு உறங்கிப் போனாள்.
.
யுகாதித்தன் உறங்காமல் அந்த டைரியை மீண்டும் மீண்டும் எடுத்துப் படித்துக் கொண்டிருந்தான்.
மும்பை ஐஐடி.
எத்தனையோ இளம் பட்டாம்பூச்சிகள் தங்கள் கனவோடு அங்கே சிறகடித்து அங்கும் இங்கும் பறந்து கொண்டிருக்க அதில் ஒருத்தியாய் காசியாபாத்தில் இருந்து படிக்க வந்திருந்தாள் கவிலயா. அவர்கள் தமிழ் குடும்பம் தான் எனினும் காசியாபாத்தில் மூன்று தலைமுறைகளாக வசிக்கிறார்கள். தமிழ் ஹிந்தி ஆங்கிலம் என்று கலந்து கட்டி பேசுவார்கள் மொத்த குடும்பமும். அவளின் தந்தை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பொறுப்பில் இருக்க தாய் ராகசுதா நரம்பியல் மருத்துவராக இருந்தார். தாத்தா பாட்டி என்று ஒரே வீட்டில் வசிக்க அண்ணன் ஒருவன் மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றிருந்தான். இவள் கணினி துறையில் இஞ்சினியரிங் படிக்கிறேன் என்று ஐஐடியில் அப்ளை செய்து இருக்க மும்பையிலேயே கிடைத்து விட்டது.
கேர் ஃப்ரீ கேர்ள். யார் எது கேட்டாலும் இன்முகத்துடன் பதில் அளிக்கும் பருவச் சிட்டு. கண்ணுக்கு குளிர்ச்சியான பேரழகி. அவள் யுகாவை ஈர்த்ததில் அதிசயம் ஒன்றும் இல்லை.
ஆரம்பத்தில் ஹிந்தி தெரிந்தாலும் மும்பைக்கர்களின் சரளமான ஹிந்தியில் தடுமாறி தான் பதில் அளித்தான். ஆங்கிலமும் அத்தனை சரளத்துடன் வரவில்லை யுகாதித்தனுக்கு. தடுமாறி முகம் சிவக்க நின்று பதில் சொல்பவனை சிலர் கேலியாக பார்க்க அவனுக்கோ அது அவமானமாக இருந்தது.
“ஒழுங்கா சென்னையிலேயே படிச்சு இருக்கலாம் இந்த கிருஷ்ணர் சகுனி வேலை பார்த்து என்னை இங்க கொண்டு வந்து தள்ளிட்டாரு”என்று தந்தையை வழக்கம் போல திட்டிக் கொண்டே செல்ல ஒருவனின் மீது இடித்து விட்டான்.
“ஐம் சாரி ப்ரோ”என்றவனின் மன்னிப்பில் தமிழ் வாசனை தெரிய இடி வாங்கியவனோ “மதராசி இத்னி ஹிம்மத்”என்று சட்டையை கோர்த்து பிடிக்க இவனுக்கு கோபம் உச்சத்திற்கு சென்றது.
“லீவ் மை ஷர்ட்”என்று அடிக்குரலில் சீற அவனோ நக்கலாக சிரித்தபடி இன்னும் இறுக்கிப் பிடித்தான்.
“ச்சோட் தோ வர்ணா ( விட்டுடு இல்லை)”என்று பல்லைக் கடிக்க அவனோ இறுமாப்புடன் பிடித்த பிடி விலக்காமல் நின்றான். அதற்குள் அங்கே கூட்டம் கூட துவங்க அங்கே கவிலயா வந்து விட்டாள்.
“ஹே சல்மான் கான். ச்சோட் உஸ்ஸே”என்று விலக்கி விட்டதில் கவிலயாவைக் கண்ட அந்த மும்பை வாசி அப்பட்டமாக ஜொள் வடித்தான்.
அவளிடம் வழிந்து பேச வர அவளோ ஈஈஈ என்று பல்லைக் காட்டியபடி “ஹே மேன். கம் வித் மீ”என்று அழைத்துச் சென்று விட்டாள்.
“ஸ்ஸ்ப்பா இவனுகளை எல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது. படிச்சாலும் படிக்காட்டியும் அந்த திமிரை காட்டிடுவானுக. நீங்க சாரி சொல்லிட்டு அந்த இடத்தில் இருந்து வேகமா வர வேண்டியது தானே”என்று அவள் படபடக்க யுகன் மற்றதை விட்டு விட்டு “நீங்க தமிழா தேங்க் காட். ஆமாம் நான் தமிழ் னு உங்களுக்கு எப்படி தெரியும்”என்றான் ஆவலுடன்.
“எல்லாம் தெரியும் ஒரு க்ளாஸ் தானே ஆனா சார் தான் எதையும் கவனிக்க மாட்டீங்களே”என்று துவங்கி இருவருக்குமான அறிமுகம் அன்றிலிருந்து ஆரம்பித்தது.
அதன் பிறகான நாட்கள் இருவருக்கும் அத்தனை அழகானவை. இளங்கலை பட்டம் பெறும் வரை நீடித்தது அவர்கள் நட்பு. அதன் பிறகு கவிலயா மேற்படிப்பிற்காக தன் அண்ணனுடன் அமெரிக்கா செல்வதாக கூறி இருக்க அப்போது புரிந்தது யுகாவிற்கு கவிலயா மீது நட்பை தாண்டி ஒரு உணர்வு இருக்கிறது என்று.
“நீ ஏன் போகணும் லயா ஏன் இங்கே கன்டினீயூ பண்ண முடியாதா”என்று கேட்டவனை விநோதமாக பார்த்து விட்டு “நான் ஏன் போகக் கூடாது”என்று நமட்டுச் சிரிப்புடன் கேட்டாள்.
“பிகாஸ் பிகாஸ்”என்று சொல்ல முடியாமல் தடுமாறிரவனைக் கண்டு இன்னும் சிரித்தவள்,”பிகாஸ் யூ லவ்ஸ் மீ ரைட்” என்றாள்.
தலைகுனிந்து நின்றவனின் முகத்தை தன் ஒரு விரலால் நிமிர்த்த அவன் முகமே சிவந்து போனது.
“ப்பா செம ப்ளஸ் ஆகுதுடா உன் ஃபேஸ். அவ்வளவு லவ்வா”என்று கிண்டலாக சிரித்தபடியே “இதுக்கு நான் என்ன பதில் சொல்லணும் யுகி”என்றாள்.
“யுவர் விஷ் டால். ஆனா இதனால் நம்ம ஃப்ரெண்டஷிப் மட்டும் கட் பண்ணிடாத”என்றான் இறைஞ்சுதலாக.
“கண்டிப்பாக மாட்டேன் பட் இப்போதைக்கு எனக்கு எதுவுமே தோணவும் இல்லை. ஸோ சாரிடா.”என்றாள்.
“தட்ஸ் ஓகே.”என்றவனின் குரலில் அத்தனை கலக்கம்.
அவன் காதலை சொல்லியும் அவள் அதை ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை. முதுகலை படிப்பை அவனோடு அங்கேயேத் தொடர்ந்தவள் அவளது பிறந்தநாளில் தன் காதலைச் சொல்லித் திகைக்க வைத்தாள்.
“என்ன திடீர்னு நான் எக்ஸ்பெக்டே பண்ணலை”என்றவனுக்கு விழிகளில் நீர் திரண்டிருக்க மனம் முழுவதும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. அவனின் உணர்வுகளை அப்படியே கிரகித்தவள் அந்த தருணத்தை அத்தனை ரசித்தாள்.
“திடீர்னு எல்லாம் இல்லை. உன் மேல ரொம்ப மாசமா இந்த ஃபீல் இருந்துட்டு தான் இருந்தது. நீ எக்ஸ்பிரஸ் பண்றதுக்கு முன்னாடியே எனக்கு தோணிடுச்சு”என்றாள்.
“அப்புறம் ஏன் டி மறுத்த”என்றவனை மெல்லிய சிரிப்புடன் பார்த்தவள் “உனக்கு இருக்கிற ஃபேஷன்ஸ் தென் உன் லாயல்டி செக் பண்ண தான்”என்று உண்மையை கூறினாள்.
“அப்போ என் மேல நம்பிக்கை இல்லை உனக்கு”என்று முறைக்க
“லவ் ஏத்துக்கலைனா உன் ரியாக்ஷன் எப்படி இருக்குன்னு எனக்கு தெரியணுமே. அதுக்காக தான். இதனால் உன் மேல நம்பிக்கை இல்லைனு ஆகிடுமா.”என்றாள்.
“அப்படி இல்லை”என்று தயங்கியவன் “இப்ப ரெண்டு வருஷம் வேஸ்ட் ஆகிடுச்சு தானே”
“ஹாஹாஹா பாவம் தான் நீ”என்று கன்னத்தை கிள்ளியவள் தன் உதட்டில் பதித்துக் கொள்ள யுகாதித்தனுக்கு வெட்கமாகிப் போனது.
அதன் பிறகான நாட்கள் இருவருக்கும் காதலில் நெய்யப்பட்ட அற்புதமான நாட்கள் கவிலயாவை தன் அன்னையிடம் அறிமுகம் செய்து வைக்க அவளோ இவனை காசியாபாத் அழைத்துச் சென்று தன் வீட்டில் தங்க வைத்தாள். அவளின் பெற்றோருடன் இயல்பாய் இலகுவாய் பழக அவர்களுமே யுகன் மீது அத்தனை அன்பு செலுத்தினர்.
யுகனை நம்பி மேற்படிப்பு முடித்ததும் கேம்பஸில் வேலை கிடைத்திடவே அவனோடு தான் வேலைக்கு அனுப்பி வைத்தனர்.
இருவரும் பெங்களூரில் ஒரு ஷேரிங் அப்பார்ட்மெண்ட்டில் தான் இருந்தனர். இருவரும் ஒரே வீட்டை ஷேர் செய்து இருக்க அக்கம் பக்கம் இருப்பவர்களோ இருவரும் லிவ் இன் ல் இருப்பதாக நினைத்து கொண்டனர்.
பெங்களூர் போன்ற பெருநகரங்களில் அது சகஜம் என்றாலும் எந்த ஊர் சென்றாலும் வதந்தி புறணி பேசுவதை தவிர்க்கவே முடியாது அல்லவா . என்ன தான் ஒரே வீட்டில் இருந்தாலும் அவரவர் அறையில் தான் தங்கிக் கொண்டனர். சாரதா வந்தால் அவருக்கு கூட இருவரும் காதலர்கள் என்ற சந்தேகம் வந்ததில்லை . எப்போதாவது இதழொற்றலும் அணைப்புமாய் இருவரின் உறவும் முன்னேறிக் கொண்டிருக்க சமீபமாக அவள் அவனைப் பிரியவே மறுத்து நிற்க அதன் பொருட்டு தான் ஊர்த் திருவிழாவிற்கு அவளையும் அழைத்துச் செல்ல முடிவு செய்து அன்று கிளம்பியிருந்தனர் இருவரும்.
அதுவும் கவிலயாவின் பிடிவாதத்தினால் தான் ஊருக்கு அழைத்துச் செல்ல சம்மதம் தெரிவித்து இருந்தான் யுகாதித்தன்.
மனதில் வீட்டினரும் உறவுகளும் என்ன சொல்வார்களோ என்ற அச்சம் இருந்தாலும் சமாளித்து தானே ஆக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க கவிலயாவை அழைத்துச் செல்ல திட்டமிட்டு தேனி செந்தாளம்பட்டிக்கு டிக்கெட் புக் செய்து இருந்தான்.
எதையும் விட்டு விடக் கூடாது எல்லாம் சரியாக இருக்க வேண்டும் உறவினர்கள் முன்பாக எந்த வித எதிர்மறை விஷயங்களையும் காட்டி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவன் கவிலயாவிற்கு யாரிடம் எப்படி பேச வேண்டும் என்ன பேச வேண்டும் எந்த மாதிரியான உடை அணிய வேண்டும். முக்கியமாக தன் தாத்தா பாட்டிக்கு எது மாதிரி இருந்தால் பிடிக்கும் என்பது வரை விளக்கம் கூறி அவளைத் தயார் செய்திருந்தான்.
கிளம்புவதற்கு முதல் நாள் மாலை கவிலயாவின் பாட்டி உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வர வேறு வழியின்றி காசியாபாத் கிளம்பி சென்றாள் கவிலயா.
கடைசி நேரத்தில் இப்படி ஆகி விட்டதே என்ற எண்ணம் யுகனுக்கு இருந்தாலும் வேறு வழியின்றி அவளை அனுப்பி வைத்தவன் பத்திரமாக செல்லுமாறு சொல்லி விட்டு தேனிக்கு கிளம்பினான். அவளோடு தானும் வருகிறேன் என்றதற்கு அவள் மறுத்ததில் சுணக்கம் கண்டு தான் பொய்யாய் கோபம் கொள்வது போல பேசியவன் அன்று அந்த குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு தேனிக்கு கிளம்பி இருக்க அதன் பிறகு கவிலயாவிடம் இருந்து எந்த செய்தியும் அழைப்பும் வரவே இல்லை.
….. தொடரும்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
10
+1
1
+1

