
அத்தியாயம் 13
வெளியிலிருந்த கூட்டத்தைப் பார்த்து குழந்தைகள் இருவருமே மிரண்டு தான் போயிருந்தனர். ஒரு புறம் தாய் உறக்கத்திலிருக்க, மற்றொரு புறம் அவரை சுற்றி பலரும் அமர்ந்திருந்தனர். வயிறு வேறு பசியில் கத்தியது.தாயின் காலடியில் அமர்ந்திருந்த தந்தையை பார்த்தான் சோழன்.
அவரோ குனிந்த தலை நிமிராமல் இருக்க,வேறு வழியில்லாமல் உறங்கி கொண்டிருந்த தாயின் அருகில் சென்ற இளையவனோ “ம்மா… ம்மா…பசிக்கு.” என அவளின் கையை பிடித்து எழுப்பி விட முயன்றான். அவனின் செய்கையில் இதுவரை அமைதியாக இருந்த சாரதாவின் துக்கம் பீறிட்டு கிளம்பியது.
“இப்ப சந்தோசமா உனக்கு. இப்ப சந்தோசமாஅஆ… படிச்சு படிச்சு சொன்னேனே என் புள்ளை இப்ப தான் பள்ளிக்கூடம் முடிச்சிருக்கா. அவளைப் படிக்க விடு. உனக்கே அவளைக் கட்டித் தரேன்னு சொன்னேனே கேட்டியா டா நீ” அபியின் சட்டையைக் கொத்தாக பற்றி கேட்டார் சாரதா.
“காதல், கத்திரிக்கா அது இதுன்னு புள்ளை மனசைக் கெடுத்து கல்யாணம் பண்ணிட்டு வந்து கொன்னுட்டியே டா பாவி, நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட, மண்ணோட மண்ணா போயிடுவ…” வாசலிலிருந்த மண்ணை அள்ளி அபியின் மேல் போட்டவரை மற்றவர்கள் பிடித்து கொள்ள, அவர்களையும் மீறி வெளியில் வந்தவர் மண் தரையில் மடங்கி அமர்ந்தவாறே நெஞ்சு நெஞ்சாக அடித்தப்படி
“ஐயோ அப்பவே சொன்னேனே பாவிமக கேட்கலயே… அய்யோ கடவுளே இப்படி அறுத்துட்டு வந்து போட்டுட்டானே. ஆஸ்பத்திரி செலவுக்கு கூட காசு இல்லாதவனுக்கு எதுக்கு டா கல்யாணம்… பொண்டாட்டி புள்ளைங்களை நல்ல படியா பாத்துக்கக் கூட துப்பில்லாத உனக்கு எதுக்கு கல்யாணம்”
“படிக்க வேண்டிய வயசுல படிக்காம புள்ளைய பெத்து இரண்டு பேரும் என்ன சுகத்தை கண்டுட்டீங்க? நான் பெத்த மாணிக்கத்தை தொலைச்சிட்டியே டா. இனி நினைச்சா கூட வர முடியாத தூரத்துக்கு போயிட்டாளே. படுபாவி மக, ஒத்தையா போயி இரண்டு உசுரை அனாதையாக்கிட்டு போயிட்டாளே…” என்று கதறினார் சாரதா…
அவரின் சாபத்திற்கும், பேச்சிற்கும் ஒரு வார்த்தை கூட அபியால் பேச முடியவில்லை. அவர் கூறுவது அனைத்தும் உண்மை தானே…
அப்போதைய வயசு கோளாறு, அந்த வயதின் காதலும், அந்த காதல் கொடுத்த தாபமும், தைரியமும் எதையும் கடந்து விடலாம் என்ற நம்பிக்கையும், கல்லூரி நண்பர்களின் அசட்டு தனமான பக்க பலமும், இவனின் புத்தியை மழுங்க செய்து விட, பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக் படிப்பை தொடரும் நிலையிலிருந்த அனிதாவை கரம் பிடித்தான் வெறும் இருபத்தொரு வயதிலிருந்த அபிநயன்…
அப்போதைய சூழ்நிலையில் அவளின் படிப்பு மட்டுமல்ல, கணவனை இழந்து வீடு வீடாக வேலைக்கு சென்று அவனை படிக்க வைத்த அவனது தாயை கூட மறந்து விட்டான் என்பது தான் உண்மை…
கல்யாணம் முடிந்த அடுத்த வருடமே இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி விட்டாள் பெண். முட்டி மோதி மூன்று வருடங்கள் பிள்ளைகளை வளர்த்து விட்டவர்கள் அதற்கு பின் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து விட்டனர்.
அதே நேரம் ஆரம்பத்தில் வெறும் எட்டாயிரம் சம்பளத்திற்கு வேலைக்கு சென்றவன் நான்கே வருடத்தில் முப்பதாயிரம் சம்பளம் வாங்கும் அளவிற்கு மட்டுமே உயர்ந்து நின்றான்.
இதுநாள் வரையிலும் பண பிரச்சனைகள் வந்ததில்லை… அப்படியே எவருக்கேனும் உடம்பு முடியவில்லை என்றாலும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று வருவார்கள்.
சுருக்கமாக சொல்லப் போனால் இருப்பதை வைத்து வாழ்ந்து வந்தார்கள் என்பதை விட இருப்பதை வைத்து வாழப் பழகிக் கொண்டார்கள் என்பது தான் சரி.
****
இன்று
“அனு எப்ப விட்டு போனாளோ அப்பவே அவனோட மொத்த சந்தோசமும் போயிடுச்சு மா… இருபத்தொரு வயசுல கல்யாணம் பண்ணி இருபத்தாறு வயசுல எல்லாத்தையும் இழந்துட்டு நின்னா…” என்ற சீதாவின் பேச்சில் ‘எல்லாத்தையுமா…’ என்பது போல் பார்த்தாள் ஆனந்தி.
“ஆமா மா சாரதா அண்ணி குழந்தைகளை கையோட கூட்டிட்டு போயிட்டாங்க.படிக்கற பொண்ணை கல்யாணம் பண்ணிட்டான்னு ஆரம்பத்துலிருந்தே இவன் மேல அவங்களுக்கு நம்பிக்கையில்லை. அனிதா இறக்கவும் இவன் மேல அவங்க வைச்சிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் இல்லாம போயிடுச்சு. குழந்தைகளை அபிகிட்ட தரவே இல்லை.ரொம்ப பிரச்சனை பண்ணிட்டாங்க…” பெருமூச்சுடன் கூறினார் சீதா.
“அவங்க மேல தப்பில்லை மேம். அவங்க கல்யாணம் பண்ணி தர மாட்டேன்னு சொல்லியிருந்தா கூட பரவாயில்லை… அவங்க அப்படி சொல்லவே இல்லையே. படிங்க கல்யாணம் பண்ணி தரேன்னு தானே சொன்னாங்க… அதைப் பத்தி இவங்க இரண்டு பேரும் கொஞ்சம் கூடவா யோசிக்கல…” என்றவள் பெருமூச்சுடன்
“இவங்கன்னு மட்டும் இல்லை மேம். இப்ப இருக்கற பாதி பேர் இப்படி தான் இருக்காங்க. ஒரு ஏஜ்ல எல்லாருக்குமே டிஸ்ட்ராக்ஷன் வரத்தான் செய்யும். இந்த விஷயத்துல மட்டுமில்லை எல்லா விஷயத்துலையும் வரும். ஆனா அதை கன்ட்ரோல் பண்றவங்க சரியான வழியில போவாங்க. இல்லைன்னா இப்படி தான் ஆகும்…” என்றவள் சிறு மெளனத்திற்கு பிறகு
“எப்படி மேம் உங்களை பத்தி அவரு யோசிக்கவேயில்லை? ஒரு சிங்கிள் பேரண்டா அவரை நீங்க வளர்க்க எத்தனை கஷ்டப்பட்டு இருப்பீங்க? உங்களை பத்தி கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லையா?…” என கோபமாகவே கேட்டாள் ஆனந்தி. அவளின் கோபத்தில் மென்மையாக சிரித்தார் சீதா.
உண்மையை சொல்லப்போனால் அந்த நேரத்தில் மகன் மீதும் மருமகள் மீதும் அத்தனை கோபத்தில் இருந்தார். மகன் படிப்பை முடித்து விட்டான். இனி நம்மை பார்த்துக் கொள்வான் என்று நம்பிக் கொண்டிருந்தவருக்கு பேரிடியாய் வந்தது மகனின் திருமண செய்தி.
அதுவும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு செல்ல இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொண்டான் என்று கேள்விப் பட்டதும் உடைந்து போனார். தன் வளர்ப்பு சரியில்லையோ, தான் நல்லவையை சொல்லி வளர்க்கவில்லையோ என்றெண்ணி அத்தனை தவித்துப் போனார்.
அந்த தவிப்பும், ஆதங்கமும், மகன் மீதும், மகன் கூட்டி வந்தவள் மீதும் கோபத்தை கொடுக்க, இருவரையும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.
தந்தை இல்லா பிள்ளைக்கு தலையெல்லாம் புத்தி என்பார்கள் அது பொய் என்று இருவருமே நிரூபிக்க, மொத்தமாகவே விலகி நின்று விட்டார்.
அந்த விலகல் கூட கூட பேரன், பேத்தியின் வரவால் விலகிப் போனது.
“என்ன மேம் சிரிக்கிறீங்க” ஆனந்தியின் குரலில் தன்னிலைக்கு வந்தவர்
“அந்த வயசுல வர காதல் அம்மா, அப்பாவை பத்தியெல்லாம் யோசிக்காது மா…”என்றார்.
“இந்த காதல் எல்லாம் ஒன்னுமில்லை மேம். உண்மையா சொல்லபோனால் அவரோட அந்த எமோஷன்க்கு இம்பார்டன்ஸ் கொடுத்திருக்கவே கூடாது. உங்களை பத்தி யோசிச்சிருந்தா அந்த எமோஷனல அவரு கண்ட்ரோல் பண்ணியிருப்பாரு. அதுக்கு இம்பார்டன்ஸ் கொடுத்திருக்க மாட்டாரு. அப்படி குடுத்ததுனால தான் இப்படி தப்பான பாதையில போயிருக்காரு..” என்றாள் கோபமாக. ஆனந்தியின் பேச்சில் வெளியில் நின்றிருந்தவனுக்கு மனதின் ஓரத்தில் சுறுக்கெனத் தெய்த்தது.
“அப்ப அவனுக்கு யோசிக்குற வயசும் பக்குவமுமில்லை மா. அந்த பக்குவம் வரப்போ எதுவும் அவங்ககிட்ட இல்லை. மே பி எதுவும் இல்லாதபோ தான் பக்குவமுங்கறது வரும்னு சொல்லுவாங்க… அது அவனுக்கு வந்துச்சு…” என்றவர் அவரின் நினைவில் மூழ்க, வெளியில் நின்ற அபியின் மனதும் அந்த நாளை தேடி ஓடியது.
***
அனிதாவிற்கு பதினாறு நாள் காரியம் முடிந்து ஒரு வாரமாகியிருந்தது. குழந்தைகளும் அவனிடத்தில் இல்லை, அவனின் அம்முவும் அவனிடத்தில் இல்லை ஏதோ பித்து பேய் பிடித்தவன் போல் தான் இருந்தான்.
சொல்லபோனால் நிஜம் எது, நிழல் எது என பிரித்தெடுக்க முடிய உணர்வில் தான் இருந்தான் அபி. கண்களை சூழ்ந்த கண்ணீருடன் எழுந்தவன் அலமாரியை திறந்தான். அவளின் புடவையை மெல்ல வருடிக் கொண்டிருந்தவனின் கண்களில் அவள் புடவையினுள் புதைத்து வைத்திருந்த டைரி விழுந்தது.
“இங்க பாரு அனிதா, நான் நைட் வரதுக்குள்ள இந்த டைரியை எழுதி முடி. இல்லையா காலையில நான் வேலைக்கு போனதுக்கப்பறம் எழுதிக்கோ. நான் இருக்கும் போது அதை எடுக்காத…” என்றான் கோபமாக. அவனை பக்கவட்டாக பார்த்தவள் ஒற்றை புருவத்தை உயர்த்தி ஏன் என்பதை போல் பார்த்தாள்.
” நைட் படுக்கும் போது எழுதற. தூக்கம் வந்தா அப்படியே அதை உன் நெஞ்சுல வைச்சிட்டு தூங்கிடற. அது நான் இருக்க வேண்டிய இடம்…” என்றான் இன்னும் கோபமாக.
” ஹான் ஹான்.. அப்பறம்…” நக்கலாக கேட்டவளை முறைத்தவன் அந்த டைரியை வாங்கி அருகிலிருந்த மேசையில் வைத்தான்.
” என் செல்லத்தை அங்கயெல்லாம் வைக்காதா டா…” என்றவள் அவசரமாக டைரியை எடுத்து கப்போர்ட்டிலிருந்த புடவைக்கு அடியில் வைத்தாள். அவளின் செய்கையில் கடுப்பானவன் அவளை முறைத்தான்.
“என்ன பாக்குற, உன்னை லவ் பண்றதுக்கு முன்னாடி இருந்தே அது என்கூட இருக்கு…அதுக்கு அப்பறம் தான் நீ கூட…” எனக் கூறி முடிக்கவில்லை அவளை அப்படியே தூக்கியவன்
“போயும் போயும் அந்த டைரி கூடயெல்லாம் என்னை கம்பேர் பண்றல்ல…” என்றவன் அதற்கு மேல் அவளை பேசவும் விடவில்லை டைரி மஞ்சம் கொண்டிருந்த இடத்தையும் விடவில்லை…
அனிதா இருக்கும் வரையிலும் அவனுக்கு எந்த ஏக்கத்தையும் கொடுத்ததில்லை. அதே போல் இவனும் இத்தனை ஏங்கியதில்லை. ஆனால் இப்போது ஒவ்வொரு நிமிடமும் அவளுக்காக ஏங்கி நின்றான். கண்ணிலிருந்து வழிந்த நீரைத் துடைத்தவன் அவளின் டைரியை கையில் எடுத்தான்.
திருமணமானதிலிருந்து இதுநாள் வரையிலும் அவளின் டைரியை எடுத்து படித்ததில்லை. அது
அவளின் டைரியை விட என்னவளை எனக்கு தெரியும் என்ற நம்பிக்கையோ என்னவோ…
அந்த பழைய டைரியின் முதல் பக்கத்தை திறந்தான்
“என்றும் என்னவனின் ரசிகையாய் நான்..” என்ற வரிகளை பார்த்ததும் மீண்டும் கண்களில் நீர் கோர்த்து கொண்டது.
அடுத்த பக்கத்தை திருப்பினான்
“ஷ்.. அபி இதே எடுக்க உனக்கு இவ்வளவு நாள் ஆச்சா”என்ற வரிகள் இருந்தது.. நிமிடம் ஒரு நிமிடமேனும் நின்று துடித்தது அவனின் இதயம்…
“ஹேய் ஒன் செக்.. மெல்ல மெல்லாம ஓபன் பண்ணு நம்ம லவ்வ போலவே இதுவும் பழைய டைரி… அப்பறம் ரொம்ப எல்லாம் எக்ஸ்பெக்ட் பண்ணாத இரண்டு வரி கவிதை தான் எல்லாமே, அம்மாகிட்ட மாட்டிக்க கூடாது பாரு அதுக்கு தான் இந்த ஐடியா… ” என எழுதியிருந்த வார்த்தையில் கண்களில் கண்ணீருடன் சிரித்தான் அபி. அந்த வரிகள் கூட சமீபத்தில் எழுதி இருக்கக் கூடும் என நினைத்தவன் அடுத்தடுத்த பக்கங்களை புரட்டினான்.
உன் முதல் பார்வையில்
முற்றிலும் என் வசம் இழந்தேன்டா
என்ற வார்த்தைகளுக்கு கீழ் கவிதை எழுதிய தேதியும் ஆண்டும் இருந்தது. முதன் முதலாக இருவரும் காதலாக பார்த்து கொண்ட நாள் கண்முன்னே விரிந்தது.
அடுத்தடுத்த கவிதைகள் அனைத்தும் இருவரின் காதலை பற்றி இரண்டு வரி கவிதைகளாக எழுதி இருந்தாள் அவனின் மனையாள்..இருவரித் திருக்குறள் போல இருந்த கவிதைகளை கண்களில் கண்ணீருடன் படித்தவன் அந்த டைரியின் முடிவில் இருந்த வரிகளை பூபோல வருடினான்…
“இதுக்கே கண்ணிரா? கொஞ்சம் மிச்சம் வை, புது டைரியை படிக்க வேண்டாமா?” என்ற வரிகளை படித்ததும் இவனது புருவங்கள் சுருங்கியது… அதற்கு அவளே அடுத்த வரிகளில் விடைகளை கொடுத்து இருந்தாள்.
“என்ன பாக்குற, நீயும் என் டைரியை அப்ப எடுப்ப இப்ப எடுப்பண்ணு எதிர்ப் பார்த்து பார்த்து நொந்துட்டேன் சோ இன்னைக்கு என் டைரில இரண்டையும் உன்னை படிக்க வைக்காம விடறதா இல்லை…” என எழுதி கோப எமோஜியை வரைந்து வைத்திருந்தாள்.
அதற்கு கிழே சின்ன ஸ்மைலி எமோஜியுடன் “உனக்கு என்னோட பர்த்டே கிஃப்ட் இது தான் மாமா…போ தேடி எடு…” என்றதும் தான் அவனின் பிறந்த நாள் நினைவு வந்தது அவனுக்கு..
‘இந்த வருஷம் நான் உனக்காக கொடுக்கற பர்த்டே கிஃப்ட்டை நீ எப்பவுமே மறக்கவே மாட்ட மாமா… பல வருசமா என்கிட்ட இருக்கற ஒன்னை உன்கிட்ட நான் தர போறேன்…’ என அன்று ஒருநாள் கூறியது நினைவிலாடியது.
இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் இருக்கிறது அபியின் பிறந்த நாள் வர… ஆனால் அதற்கு முன்னவே இந்த ஏற்பாடு செய்துகளை வைத்திருக்கிறாள் என நினைத்தவனின் கண்களில் மலுக்கென கண்ணீர் சூழ்ந்து கொண்டது…
முகத்தை தோள் பட்டையில் அழுத்தி துடைத்துக் கொண்டவன் அந்த டைரியை தேடி சென்றான். அதனை தேட பெரிதாக மெனக்கெடவில்லை. சட்டென அவன் கைகளுக்கு கிடைத்தது. அவள் கடைசியாக எழுதி இருந்த பக்கத்தில் பேனா வைத்திருக்க நேரடியாகவே அந்த பக்கத்தைத் திறந்தான்..
உள்ளுக்குள்ளே உருகுகிறேன்
உன்னை எண்ணியே மருகுகிறேன்….
உடலின் வலியால் துடித்தாலும்
உன்னுடன் வாழ எந்த வலியையையும் தாங்குவேன் …
உனை விட்டுச் செல்லும்
நொடிகளை எண்ணி
உயிர் வலியால் வெடிக்கிறேன்…
உண்மை நிலையை
எண்ணி
ஊமையாக அழுகிறேன்….
என்ற வரிகளை படித்ததும் தரையில் மடங்கி அமர்ந்து கதறியே விட்டான்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
10
+1
+1

