
மெல்லினம் 36:
அன்று அத்விக்கு விடுமுறை தினம். துவைத்த துணிகளை மடித்து கொண்டிருந்த முல்லையின் செவிகளில் அத்விதனின் “அங்கி….பெரிய காரு பாத்தோம். அப்பறம் நிறைய பட்டஃர்பிளை வந்துச்சு” என அவன் நேற்று பார்த்த திரைப்படத்தை, வீடியோ கால் மூலமாக கதிருக்கு ஒலிப்பரப்பி கொண்டிருந்தவனின் குரல் விழ, அதனை கேட்டவளின் இதழ்கள் அழகிய புன்னகையில் மலர்ந்தது.
ஒரு வாரத்திற்கு மேல் ஆயிற்று முல்லை அவளின் அம்மா வீட்டிற்கு வந்து. கதிர் சொன்னது போல் இதுவரை அவளிடம் பேசுவதில்லை. ஆனால் தினமும் அவனின் மகனிடம் மட்டும் தவறாது பேசி விடுகிறான்.
திரையில் இவள் முகம் தெரிந்தால் கூட முகத்தை திருப்பி கொள்கிறான். இவள் வம்படியாய் போனை வாங்கி கையில் வைத்து கொண்டால், அடுத்த நொடி அவன் முகத்தை காட்டாது அறையில் இருக்கும் அனைத்து பொருட்களையும் காட்டியபடி இருப்பான்.
“அத்வி கண்ணா, உங்கப்பாக்கு என்ன பாத்து பயமா என்ன??” என அவனை சீண்டி அவள் பேச வைக்க முயன்றால், பல்லை கடித்து கொண்டு “டேய் அத்வி ரொம்ப பேச வேண்டாம்னு சொல்லு. அங்க வர எனக்கு ஒரு நிமிசம் கூட ஆகாது. வந்தேன், ரொம்ப பேசுற அந்த வாயை கடிச்சு வசசிடுவேன்” என அத்வியை வைத்து பதில் கூறுவானே தவிர, அவளிடம் முகத்தை மட்டும் காட்ட மாட்டான்.
“பார்ரா அவ்வளவு தைரியம் இருந்தா கிளம்பி வர வேண்டியது தான.” என் மேலும் அவள் சீண்டினாள்,
“வந்தா கையோட உன்னையும், அவளையும் ,தூக்கிட்டு வந்துடுவேன் பரவாயில்லையா” என கூறி அவள் வாயினை அடைத்து விடுவான்.
மீண்டும் அத்வி திரையில் வரும் வரை, முல்லைக்கு தன் முகத்தை காட்டாது அலிச்சாட்டியம் பண்ணி கொண்டிருப்பான்.
“அதி பேபி இன்னும் உன் அம்மாக்கு வனம் வாசம் முடியலையா மா? நீங்க போய் ஒரு வாரத்துக்கு மேல ஆகிடுச்சு. எப்ப தான் வருவாளாம்?? இன்னும் ரெண்டு நாள் தான் பொறுத்துக்குவேன். அப்பறமும் வரலையின்னா, நானே வந்து உன்னை தூக்கிட்டு வந்துடுவேன். உங்கம்மா வேணும்னா அங்கேயே இருக்கட்டும்” என முல்லைக்கு கேட்க வேண்டும் என, அவன் சற்றே கத்தி கூற கேட்டவளிற்கு அவனின் தவிப்பு நன்றாக புரிந்தது.
இந்த ஒரு வாரத்தில் முல்லை முற்று முழுதாக தெளிந்து விட்டாளா, என கேட்டால் அவளிடம் பதிலில்லை. ஆனால் முன்பிருந்த கோபம் இப்போது கதிரின் மேல் இல்லை.
அவனின் பிழை, என்று இதில் எதுவும் இல்லை, எல்லாம் விதிப்படி நடந்திருக்கிறது என மனதிற்கு புரிய வைத்து அதை மூளையினிலும் ஏற்றியிருந்தாள்.
அவனின் காதலை அறிந்தவளுக்கு, எப்போது அவனை காதலிக்க ஆரம்பித்தால் என்று தெரியவில்லை. அவனை விட்டு பிரிவது, என்பதை அவளால் எண்ணத்தால் கூட நினைக்க முடியவில்லை.
அவளிற்கு கதிர் வேண்டும், அவனின் காதலில், முற்றுமுழுதாக கரைந்து தனது காதலினை வெளிப்படுத்த வேண்டும், என்று இரண்டு நாட்களாக அவளது உள்ளம் துடித்து கொண்டிருக்கிறது.
இருந்தும் சொல்ல தெரியாத சிறிய தடை, எதுவோ ஒன்று அவளை அவனிடம் நெருங்க விடாது நெருஞ்சி முள்ளாய், நெருடி கொண்டிருப்பது உண்மை.
இதோ அவனின் தவிப்பை உணர்ந்து கொண்டவளிற்கு, இப்போது அவனிடம் செல்லும் வேகம் எழ, அந்த நெருடலை முழுதாக களைந்த பின்னே அவனிடம் செல்ல வேண்டும், என தன்னை முயன்று அடக்கி கொண்டாள்.
முல்லைக்கு முகத்தை காட்டாது அவளை ஆட்டி படைத்து கொண்டிருந்தான் கதிர். அவளிடம் பேசாது, முகத்தை காட்டாது இருப்பவனை, இன்னும் இன்னும் நெருங்கும் வேகம் அதிகரித்தது முல்லைக்கு.
அவனே அறியாது அவளை முழுவதுமாக அவனை தேட வைத்தான் கதிர். அவனின் இரண்டு நாள் கெடு அவளை மேலும் அவனை தேட வைத்தது.
இருந்தும் அமைதியாகி கொண்டாள். அவனே வந்து தன்னை அழைத்து செல்ல வேண்டும், என்ற ஆசை உள்ளுக்குள் இருக்க, அவனை அலைய விட அவள் எண்ண, அதற்கு மாறாக நொடிக்கு நொடி கதிரை அதிகமாக தேடி அலைந்தாள் அவள்.
முன்பிருந்த குழப்பங்கள் எதுவும் அவளிடம் இப்போது இல்லை. ஹரிஷ் மற்றும் சுரபியை பற்றிய எண்ணங்களை முழுவதுமாக தனது மனதில் இருந்து அகற்றியிருந்தாள்.
அவளின் நினைவு எல்லாம் இப்போது கதிர்! கதிர்! கதிர் மட்டுமே.! அவனின் காதலுக்கு தான் நியாயம் செய்யவில்லையோ என்ற எண்ணம் மட்டும் மனதின் அடி ஆழத்தில் இருந்தது.
அவ்விதன் வீடியோ காலை முடித்து கொண்டு வரவும், இவள் நினைவுகளில் இருந்து மீளவும் சரியாக இருந்தது.
“ம்மா அங்கி பாக்க எப்ப போவோம். போலாம் ம்மா அங்க” என அவன் சிணுங்க ஆரம்பிக்க, தன்னை நினைத்து குழந்தையை ஏங்க வைத்து விட்டேனோ, என எண்ணம் அவளுள் தோன்றிட முகம் வேதனையை காட்டியது.
பின் அத்விக்கு மதிய உணவினை கொடுத்து விட்டு சத்யமூர்த்திக்கும் உணவினை கடைக்கு கொடுத்து விட்டிருந்தாள்.
மங்கை இன்று கோவிலில் ஏதோ விஷேஷம் என்று காலையிலேயே சென்றவர் இன்னும் வீடுவந்து சேரவில்லை.
அவ்விதன் தூக்கத்திற்கு சிணுங்க அவசர அவசரமாக உணவினை அள்ளி வாயில் போட்டவள் அவனை தூங்க வைக்க சென்றாள்.
அவனை தூங்க செய்த கையோடு முல்லையும் உறங்கி விட தீடிரென
“முல்லை, முல்லை! இங்க பாரு யாரு வந்திருக்காங்கன்னு” என்ற மங்கையின் குரல் ஆர்ப்பாட்டமாக வெளியே கேட்க, சட்டென எழுந்தவள்,
‘ஒரு வேளை கதிரோ ‘என நினைத்து உள்ளம் துள்ளியவளுக்கு கதவினை திறந்து உள்ளே வந்தவரை பார்த்தது சப்பென்றானது.
“என்ன முல்லை வேற யாரையும் எதிர்பார்த்தியோ??” என சீதா குறும்பாக கேட்க அதில் வெட்கியவள்,
“ச்சே..ச்சே அப்பிடி எல்லாம் இல்லை கா எங்க ரேஷ்மிய காணோம்” என அவள் கேட்கும் போது,
ரேஷ்மியை தூக்கி கொண்டு மங்கை உள்ளே நுழைந்தார். ரேஷ்மியின் கைகளில் நேற்று முல்லை வாங்கி வைத்திருந்த ஐஸ்க்ரீம் இருந்தது.
“சித்தி!!!” என் தாவியவளை அணைத்து கொண்டாள் முல்லை.
“கோவிலுக்கு சீதாவும் வந்திருந்தா இப்போ தான் பூஜை முடிஞ்சுச்சு இந்த வெயில்ல அலைய வேண்டாம்னு தான் இங்க கூட்டிட்டு வந்துட்டேன்” என முல்லையிடம் கூறியவர்
“பேசிட்டு இருங்க குடிக்க ஏதாச்சும் கொண்டு வரேன்” என்றவர் வெளியேறிட, அதற்குள் ரேஷ்மி அத்வியை எழுப்பி விட்டிருக்க அவளை கண்டதும் உற்சாகத்தில் குதித்தவன் தனது விளையாட்டு பொருட்களுடன் ஐக்கியமாகி விட்டிருந்தான்.
குழந்தைகள் இருவரின் உற்சாகத்தையும் கண்டு சிரித்த முல்லை “ரேஷ்மிய ரொம்பவே மிஸ் பண்ணிட்டான் போல கா” என்க,
“அவன் மட்டும் இல்லை முல்லை நாங்க எல்லாருமே அத்வியை ரொம்ப மிஸ் பண்ணுறோம். நீ எப்போ முல்லை வீட்டுக்கு வர போற ” என நேரடியாக கேட்டு விட,
சட்டென பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள் முல்லை.
அவளின் தடுமாற்றத்தை கண்டு கொண்ட சீதா “எதனால முல்லை உனக்கு இந்த தடுமாற்றம். ஏற்கனவே நாங்க யோசிக்காம பண்ண ஒரு விஷயத்தால கதிர் மொத்தமா அவனை தொலைச்சிருந்தான். இப்போ தான் நீ அவன் வாழ்க்கையில வந்த அப்பறம் தான், எங்களுக்கு பழையபடி அவன் திரும்ப கெடச்சிருக்கான்.”
“நீ இல்லையின்னா அவன் மொத்தமா சிதைச்சிடுவான்டா.!உன்னை காதலிச்சது அவ்வளவு பெரிய தப்பா முல்லை??” என்றிட,
“அக்கா…உங்களுக்கு???” என அவள் திகைக்க,
“எனக்கு எல்லாம் தெரியும் முல்லை. இப்போ உங்க இரண்டு பேத்துக்குள்ள எதோ பிரச்சனையின்னு மட்டும் புரியுது. என்ன பிரச்சனை இருந்தாலும் அங்கு இருந்து அவன்கூட சண்டை போடு. இப்புடி அவனை விட்டு பிரிச்சு அவனுக்கு தண்டனை கொடுக்காத அவன் தாங்கமாட்டான்” என கலங்கிட,
“அய்யோ அக்கா, எதுக்கு இப்புடி கலங்குறீங்க அப்புடி எல்லாம் உங்க கொழுந்தினை விட்டு பிரியிற தைரியம் எல்லாம் எனக்கு இல்லை.ஏதோ ஒரு சொல்ல தெரியாத ஒரு குழப்பம் அதை யோசிச்சு தீர்க்க, கொஞ்சம் தனிமை தேவைப்பட்டுச்சு அவ்வளவு தான்.”
“உனக்கு தெரியாது முல்லை, கதிர் உனக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சு எவ்வளவு உடைஞ்சு போயிட்டான்னு. அப்போதைக்கு அவன் எங்க பக்கத்துல கூட இல்லை. அதை விட உங்க ரெண்டு பேருக்கும் விவாகரத்து ஆன அன்னிக்கு அப்புடி கலங்கி போய் இருந்தான்.
“என் முல்லைய அவன் அழுக வச்சிட்டானே அண்ணி. அவளுக்காகவது ஹரிஷ் நல்லவனா இருந்துருக்க கூடாதான்னு ” சொல்லி சொல்லி துடிச்சுப் போனான்.
“அவனுக்கு சுரபியோட விவாகரத்து நடந்தது கூட அவனை இவ்வளவு பாதிக்கல. உன்னோட அழுகை, கோர்ட்டுல நீ சிந்துன கண்ணீர், மொத்தம் அவனை உடைச்சிடுச்சு. அதுக்கப்பறம் தான் நானும் பிரகாஷீம் முடிவு பண்ணோம் என்ன ஆனாலும் பரவாயில்லை உன்னை கதிரோட சேக்கணும்னு.
இதேது உனக்கு டைவர்ஸ் ஆகாம இருந்து, ஹரிஷ் நல்லவனா இருந்துருந்தாலோ உன் திசை பக்கமே கதிர் வந்திருக்க மாட்டான். அப்படி இல்லாத பட்சத்துல தான் துணிச்சு முடிவு எடுத்தோம். நீ வேலை தேடுறேன்னு கதிர் சொல்லி தான் எங்கப்பாவ விட்டு உன்னை ஸ்கூல்ல டான்ஸ் டீச்சருக்கு எடுக்க சொன்னேன்.
அவருக்கு மேலோட்டமா தெரியும். கதிர் வாழ்க்கை நல்லா இருக்கனும்னு அவரும் எங்களுக்கு ஒத்துழைச்சாரு. அப்பறம் நடந்தது எல்லாம் தான் உனக்கே தெரியுமே.
எங்க எல்லாருக்கும் கதிர் அவ்வளவு முக்கியம், அவனோட காதல் நீன்றப்போ உன்னை எப்புடி நாங்க விடுவோம். போதும் முல்லை, ஏற்கனவே அவன் சொல்லாம விட்ட காதலால் ரொம்பவே அனுபவிச்சுட்டான். இனியும் அவனை நீ சோதிக்காத, எது முல்லை உன்னை தடுக்குது? கதிரோட சேர்ந்து வாழ முடியாம எது உன்னை தடுக்குது??”
“தெரியலை கா சத்தியமா எனக்கு தெரியலை. கதிர் என்னை விரும்புன விஷயம் தெரிஞ்சதுல இருந்து சந்தோஷத்தை விட பயம் தான் அதிகமா இருக்கு. கதிரோட காதலுக்கு நான் நியாயம் செய்யலையோன்னு என் மனசு கிடந்து தவிக்குது.
என்னை விரும்புன பாவத்துக்காக அவரு நிறையவே பட்டுட்டாரு கல்யாணமாகியும் சுரபிய மனசால கூட அவரு தீண்டாம இருந்திருக்காரு. ஆனா நான் ஹரிஷோட வாழ்ந்து ஒரு புள்ளையும் பெத்துருக்கேன்னு நெனைக்கும் போது, ரெம்பவே குற்றவுணர்வா இருக்கு அவர் காதலுக்கு நான் தகுதியானவாளான்னு என் மனசே என்னை கேள்வி கேட்குது.
ஆனா இது எல்லாம் இருந்தாலும் என்னால கதிரை விட முடியாதுக்கா, அவரு இல்லாம நான் இல்லையின்னு இந்த ஒரு வாரத்துல என் மனசு என்னை தெளிவுப்படுத்திடுச்சு. எந்த காரணத்துக்காகவும் நான் கதிரை இழக்க விரும்பலை.
இப்போ என் மனசுல எந்த குழப்பமும் இல்லை ஏதோ ஒரு நெருடல் அது சுத்தமா உடையறதுக்காக தான் காத்திட்டு இருக்கேன்” என்க,
அவளின் உணர்வுகள் நன்றாகவே புரிந்தது சீதாவிற்கு. கதிரின் மேல் கொண்ட காதலுக்கும் அவளின் மனதிற்கும் இடையே போராடி கொண்டிருக்கிறாள் என்பதை.
லேசாக இதழ் பிரித்து சிரித்தவள் “தகுதின்னு எதை சொல்லுற நீ இந்த உடம்பு போதுமா நீ தகுதி இல்லையின்னு சொல்லுறதுக்கு. நம்ம வாழும் வாழ்க்கை சொல்லும் நம்ம தகுதியை, உலக அழகியே வந்தாலும் கதிர் உன்கூட இருந்தா மட்டும் தான் சந்தோஷமா நிம்மதியா இருப்பான். இந்த ஒரு தகுதி போதாதா உனக்கு? எத்தனை சுரபி வந்தாலும் அசைக்க முடியாத அவன் மனசு உன்னோட ஒரு பார்வை ஒரு கண்ணசைவுக்காக ஏங்கி நிக்குது. உடலாலும் மனசாலயும் பலமா இருக்குறவனை உன்னோட ஒரு துளி கண்ணீர் போதும் மொத்தமா அவனை சரிச்சு பலவீனப்படுத்திடும். இதுக்கு மேலயுமா நீ தகுதி வேணும்னு நெனைக்கிற???
எந்த இடத்துலயும் நீ கர்வமா சொல்லலாம் முல்லை. நீ இல்லாம கதிரோட ஒரு அணுவும் அசையாதுன்னு.
ஒரு வேளை நீ சொல்ற மாதிரி கதிர் சுரபியோட வாழ்ந்துருதான்னா உள்ளுக்குள்ள மொத்தம் மறிச்சு போய்ருப்பான். குடும்பத்துக்காக, கடமைக்காக, வாழுறேன்னு வாழ்ந்து நடைப்பிணமா மாறி போயிருப்பான். அதை தான் நீ விரும்புறியா முல்லை?
அப்புடி அவன் வாழ்ந்திருந்தான்னா, சத்தியமா உன்னை திரும்பி கூட பாத்திருக்கமாட்டான். ஏன்னா, அது அவன் உன் மேல வச்சுருந்த காதலுக்கு, செஞ்ச துரோகம்னு நினைச்சு ஒதுங்கி தான் போயிருப்பான். இப்போ நீ சொல்லுறியே எனக்கு தகுதி இல்லையின்னு, அதே மாதிரி தான் உன்னை பாக்க கூட அவனுக்கே தகுதியில்லன்னு நினைச்சு, உள்ளுக்குள்ளேயே நொந்து ஒதுங்கி போயிருப்பான்.
அப்படி மட்டும் நடந்திருந்ததுன்னா, கடைசி வரைக்கும் கதிர் எங்களுக்கு கிடைக்காமலேயே போயிருப்பான். நடந்தது எல்லாமே நல்லதுக்கு தான் முல்லை. நீ அத்வியோடதான் கதிருக்கு கிடைக்கணும்னு விதி இருந்திருக்கு!!!!” என்று,
இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே, மங்கை வந்து விட அவர்களின் பேச்சு தடைப்பட்டு விட்டது. மதிய உணவினையும் சீதா அங்கயே முடித்து விட்டு சிறிது நேரம் இருந்தவள் கிளம்பி விட்டாள்.
“நல்லா யோசி முல்லை!” என்ற வார்த்தைகளோடு விடைபெற்று சென்று விட்டாள்.
********************************
இரவில் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து கொண்டிருந்தாள் முல்லை. அத்விதனை மங்கை தன்னுடன் படுக்க வைத்து கொண்டிருந்தார்.
சீதாவுடன் நடந்த பேச்சு வார்த்தைகள் யாவும், அவளது மனதினை தட்டி எழுப்பி உறக்கத்தினை கெடுத்திருந்தனர்.
“இவ்வளவு நடந்த அப்பறமும் நீ இன்னமும் தகுதி அது இதுன்னு உளறிகிட்டு இருக்க போறியா முல்லை??
சீதா பேசுனது எல்லாமே நிதர்சனம். கதிர் எப்பவோ உன் மனசுல வந்துட்டான். ஆனா நீ அதை ஏத்துக்காம உன்னையே ஏமாத்திட்டு இருக்க,
இல்லை இன்னமும் ஹரிஷ் சுரபின்னு அவுங்கள நினைச்சிட்டு உன் வாழ்க்கையை கெடுத்துட்டு இருக்க போறீயா??” என் அவள் மனம் இடித்துரைக்க
“ச்சே ச்சே ஹரிஷ் என் வாழ்க்கையில் முடிஞ்சு போன அத்தியாயம். சுரபியும் அப்புடி தான், கதிரோட வாழ்க்கையில. அவுங்களுக்காக என்னோட வாழ்க்கைய தியாகம் பண்ண நான் ஒன்றும் முட்டாள் இல்லை. என்னால கதிர் இல்லாம வாழ முடியாது…” என அவள் மனதுடன் சண்டையிட்டிருந்த வேளை அவளது வாட்சப் சத்தம் எழுப்ப சீதா தான்.
“இந்த போட்டோவ பாத்த அப்புறமும் உனக்கு தகுதி இல்லையின்னு நினைக்கிறியா??” என்ற வார்த்தைகளோடு கதிரின் புகைப்படம் ஒன்றினை அனுப்பி இருந்தாள்.
அவளின் நினைவான அந்த வெண்கல ராதை சிலையை, கட்டி அணைத்தவாறு உறங்கி போயிருந்தான் கதிர். ஊரில் இருந்து வரும்போது எடுத்து வந்திருப்பான் போலும்.
இந்த ஒரு வாரத்தில் ஆள் உருக்குலைந்து போயிருந்தான். சரியான தூக்கமும் சாப்பாடு இல்லாமல் கண்ணிற்க்கு கீழே கருவளையமும், கன்னங்கள் இரண்டும் வற்றி, நன்றாக வளர்ந்த தாடியை டிரிம் செய்யாது, விட்டு என ஆளே மாறி போயிருந்தான். இந்த மாற்றங்கள் யாவும் சீதா அனுப்பிய இன்னொரு புகைப்படத்தில் தெளிவாக தெரிந்தது.
கதிருக்கு தெரியாமல் எடுத்திருப்பார் போல. அவனின் முகம் இறுகி போய் கண்களில் ஜீவன் இல்லாது படுத்திருந்தவனை, காண காண சத்தமில்லாமல் ஏதோ ஒன்று முல்லையினுள் உடைந்தது.
அவளின் ஒரு வார பிரிவை தாங்க முடியாது உருக்குலைந்து போயிருந்தவனை கண்டவளிற்கு கண்கள் கலங்க ஆரம்பித்தது.
அவனின் ஒட்டு மொத்த காதலும், சந்தோஷமும், அவள் என்று நினைக்கையில் மனம் லேசான கர்வத்தில் மின்னியது.
சீதா கூறியது யாவும் சத்தியமான வார்த்தைகள்! அவள் இல்லை என்றால் கதிர் இல்லை. என்பதை இந்த ஒரு புகைப்படத்தில் நன்றாக புரிந்து கொண்டவளிற்கு அப்போதே அவனிடம் செல்லும் வேகம் எழ யோசிக்காது அவனிற்கு வீடியோ கால் செய்திருந்தாள்.
அத்விதனோ என நினைத்து அட்டன் செய்தவன், திரையில் இவளை கண்டதும் கேமாரவினை திருப்பி விட்டிருந்தான்.
அவனின் செயலில் சிரிப்பு வர அவன் முகத்தினை காணும் ஆவல் அதிகமானது.
“கதிர், ஒரு தடவை உங்க முகத்தை காட்டுங்களேன்” என அவள் இறைஞ்ச,
அவளின் குரல் அவனை தடுமாற செய்ய, இருந்தும் முறுக்கி கொண்டான். அவனின் வீம்பு ஒரு காரணம் எனில், அவன் இருக்கும் நிலையை கண்டாள், தன்னால் தானே என நினைத்தே அவள் வருந்துவாள் என நினைத்து அவளிற்கு முகத்தினை காட்டாது அடம் பிடித்தான்.
“அத்வி எங்க???”
“அம்மா கிட்ட இருக்கான். நீங்க உங்க முகத்தை காட்ட மாட்டிங்களா??” என்க,
“என்னை விட்டு போனவளுக்கு எல்லாம் காட்ட முடியாது. வேணும்னா நீ நேர்ல வந்து பாரு” என அவன் கோபம் கொள்ள,
” என்கிட்ட வா முல்லைன்னு சொல்லுங்க, அடுத்த நிமிசம் உங்க முன்னாடி நிப்பேன்” என அவள் சீண்ட,
“முடியாது நான் சொல்ல மாட்டான். நீயா தான போன, நா எதுக்கு கூப்பிடணும்…”
“சரி கூப்பிட வேண்டாம், உங்க முகத்தை மட்டுமாவது காட்டுங்களேன். ப்ளீஷ், எனக்கு பாக்கணும் போல இருக்கு” என்றவளின் குரல் அவனின் வீராப்பை உடைக்க முயல, இன்னும் சிறிது நேரம் பேசினாலும் நிச்சயம் தான் முகத்தை காட்டி விடுவோம் என அவனிற்கு புரிய,சுதாரித்தவன்
“நான் வைக்கிறேன்” என போனை கட் செய்ய போக,
“இருங்க இருங்க கட் செஞ்சுறாதீங்க உங்க முகத்தை தான் காட்டலை அட்லீஸ்ட் நான் கொடுக்குறையாவது வாங்கிக்கோங்க” என்றவள் அவன் என்ன என யோசிக்கும் போதே “இச்” என்ற சத்தத்துடன் திரையில் அவனிற்கு தனது இதழ் முத்தத்தினை கொடுத்திருந்தாள்.
அவளின் இதழ் முத்தம் அவனை மொத்தமாக பலவீனப்படுத்தி, அவனின் வீம்பை உடைத்திருக்க, இப்படி சோதிக்கின்றாளே என்ற ஆத்திரத்தில் “போடி ராட்சசி” என்ற கத்தலுடன் அவன் இணைப்பை துண்டித்திருக்க அவனின் கோபத்தில் இதழ் பிரித்து சிரித்தவள்
இனியும் அவனை விட்டு நொடி நேரம் கூட பிரிந்திருக்க முடியாது என அவளிற்கு தெளிவாக புரிய, நாளையே அங்கு செல்ல முடிவெடுத்து விட்டு படுக்க நித்திரை அரசன் இப்போது அவனை முழுதாக அவளை ஆட்கொண்டான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
18
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


முல்லை ஏன் மா கதிர காக்க வைக் கிர
இன்னைக்கு டயலாக் எல்லாம் அருமை. உலக அழகியே வந்தாலும்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻. கதிர் மட்டுமில்ல அவனை நேசிக்கிற அவனோட அழகான குடும்பம் எனக்கு எப்பவுமே ஆச்சரியம் தான் ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥