
என்னுள் நீ காதலாய்💞
அத்தியாயம் 48
இன்று ரேவதிக்கு சிங்கண்ணனுடன் திருமணம். அந்த வீட்டு ஹாலில் ஹோமம் வளர்க்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட, அறையில் இருந்தவளுக்கு பட்டுப் புடவையும், நகைகளும் கொடுத்து அணிய சொல்ல, ‘அவ்வளவுதான் இன்றுடன் என் வாழ்க்கை முடிந்துவிட்டது’ என நினைத்து கண்ணீரோடு அவள் புடவையை மட்டும் அணிந்து கொண்டு தயாரானாள். எழுந்து அமர்ந்திருந்த அவளுடைய அம்மாவை அணைத்துக் கொண்டு அழுதாள்.
கண் முன்னாடியே தன்னுடைய மகளின் வாழ்க்கை பறிபோவதை நினைத்து, அதற்காக எதுவும் செய்ய முடியாமல் இன்னும் எதற்காக உயிருடன் இருக்கிறேன் என கண்ணீரில் கரைந்தார் ஈஸ்வரி.
மணவறையில் அவளை இழுத்து வந்து அமர வைக்க, சிங்கண்ணனுக்கு அருகில் அமர்ந்தாள். செய்யும் கேடுகெட்ட திருமணத்திற்கு ஆயிரம் மந்திரங்கள் வேறு. ஐயர் சொல்லித்தர மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தனர் இருவரும்.
ஐயர் தாலியை எடுத்து சிங்கண்ணன் கையில் தர, ரேவதி கண்ணீரோடு கண்களை மூடிக் கொண்டாள். திடீரென்று துப்பாக்கி சுடும் சத்தமும், அடிதடி சத்தமும் கேட்க, இனியன் வந்து “குட்டிமா..” என்று வாசலின் முன்பு வந்து நிற்க, கண் திறந்து பார்த்தவள் அந்த தாலியை தள்ளி விட்டு, எழுந்து மாலையை கழற்றி எறிந்து, வேகமாக ஓடி வந்து, “இனி..” என்றவாறு அவனை அணைத்துக் கொண்டாள்.
அவளை இறுக்கமாக அணைத்தவன், விலகி நின்று அவன் பாக்கெட்டில் இருந்த தாலியை எடுத்து அவள் கழுத்தில் கட்டினான். “உன்னை இழந்திடுவேனோனு பயந்துட்டேன், ஐ லவ் யூ டி குட்டிமா” என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு அணைத்துக் கொள்ள, அவள் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போயிருந்தாள்.
“மச்சான்.. இங்க ஆக்ஷன் பிளாட் போயிட்டு இருக்கு, நீ ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க. வந்து ஹெல்ப் பண்ணு டா” அங்கிருந்தவர்களை அடித்துக் கொண்டிருந்த இளமாறன் சமாளிக்க முடியாமல் இனியனை அழைக்க, அவனும் சரவணன் இளமாறனுடன் சேர்ந்து அங்கிருந்த அடியாட்களுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தான்.
இரண்டு நாட்களுக்கு முன்பு… ரேவதிக்கு பாதுகாப்பாக இருந்தவர்கள் குடி, பெண் என இரவில் உல்லாசமாக இருக்க, அங்கு சார்ஜரில் இருந்த ஒரு போனை எடுத்தவள், சரவணனின் செல்போன் எண்ணிற்கு, “அண்ணா.. நான் எங்க இருக்கேன்னு தெரியல. எனக்கு கல்யாணம் பண்ண பார்க்கிறாங்க. என்னை வந்து காப்பாத்துங்க” ஒரு வாய்ஸ் மெசேஜ் மட்டும் அனுப்பிவிட்டு அதை அழித்தும் விட்டாள். யாரோ வரும் சத்தம் கேட்டு போனை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டாள்.
‘அவர்களுக்கு மெசேஜ் சென்றதா? பார்த்திருப்பார்களா? சரவணன் அவளைக் காப்பாற்ற வருவானா?’ மனதில் கேள்விகளோடு காத்திருந்தாள். ஆனால் திருமணத்தன்று வரை யாரும் வராததால் மனம் நொந்து போனாள்.
அவள் மெசேஜ் அனுப்பிய போதே, சரவணன் பார்த்துவிட்டு அந்த எண்ணிற்கு அழைத்தான். ஆண் குரல் கேட்கவும் “ராங்க் நம்பர் டயல் செஞ்சுட்டேன்” என போனை கட் செய்தவன், அந்த போன் இருக்கும் லோகேஷனை கண்டுபிடித்து, அவன் அங்கு செல்லாமல் இனியனையும் இளமாறனையும் சாதாரண ஆட்கள் போல அந்த இடத்தை பார்த்து வரச் செய்தான்.
இருவரும் அந்த வீட்டை வெளியில் இருந்தே நோட்டமிட்டு, எத்தனை பேர் காவலுக்கு இருக்கிறார்கள் என பார்த்து தெரிந்துக்கொண்டனர். போன் வைத்திருந்த அந்த ரவுடி தனியே வெளியே செல்ல, இவர்கள் மூவரிடமும் சிக்கினான். அவனை அடித்து மொத்த தகவலையும் வாங்கி விட்டனர்.
அவ்வளவு எளிதாக சிங்கண்ணனை கைது செய்யவோ, அந்த வீட்டிற்குள் நுழையவோ முடியாது. அது மட்டுமில்லாமல் லீகலாக இதைக் கொண்டு சென்றாலும் பிரச்சனை தான். ஒருவேளை அவனுக்கு தெரிய வந்து பிளானை மாற்றிவிட்டால் என்ன செய்வது என்று யோசித்து தான் இன்று வரை காத்திருந்து உள்ளே நுழைந்தனர்.
சிங்கண்ணன் நடந்ததை பார்த்து திகைத்துப் போயிருக்க, கடுங்கோபத்தில் எழுந்து வந்தவன், வேகமாக அவளை இழுத்துச் செல்ல, செந்தமிழும் புனிதாவும் அங்கு வந்து அவனை தள்ளி விட்டனர். அவன் சுதாரித்து எழுந்து நிற்பதற்குள், ஃப்ளாஷ் ஒளிர.. சுற்றி நியூஸ் சேனல்களின் கேமராக்கள் இவர்களைச் சூழ்ந்து கொண்டன.
“ரேவதி எதுக்கு இங்க உன்னை கடத்தி வச்சிருக்காங்க சொல்லு” செந்தமிழ் ரேவதியின் கையை பிடித்து முன்னே நிறுத்த, பயந்து போயிருந்த ரேவதி கொஞ்சம் மூச்செடுத்து நடந்த அத்தனையும் சொல்லி முடித்திட, லைவ் போய் கொண்டிருந்தது. நடப்பது புரியாமல் சிங்கண்ணன் விழித்து நிற்க, சரவணன் அவரைக் கைது செய்து இழுத்துச் சென்றான். ஆதாரத்தோடு கையும் களவுமாக அவனைப் பிடிக்க திட்டமிட்டு பொறுமையாக காத்திருந்து நினைத்ததை நடத்தி முடித்தனர்.
ரேவதி செந்தமிழை அணைத்துக் கொண்டு அழுதாள். அவளது அம்மாவையும் அழைத்துக் கொண்டு எல்லோரும் இளமாறன் வீட்டிற்குத் திரும்பினர். கேஸ் முடியும் வரை யாரும் எங்கும் செல்ல வேண்டாம் என்று சரவணன் சொல்லியிருந்தான்.
குளித்து உடை மாற்றிய ரேவதி செந்தமிழ் மடியில் படுத்து அழுதவண்ணம் இருந்தாள். “விடுடி அதான் எதுவும் தப்பா நடக்கலையே. பயப்படாத” தோழியின் தலைவருடி ஆறுதல் சொன்னாள்.
இனியன் அங்கு வர, செந்தமிழ் எழுந்து வெளியே சென்றாள். ரேவதி தலை குனிந்தே அமர்ந்திருக்க, அவளை மடியில் சாய்த்துக் கொண்டவன், அவள் மேல் அவனும் சாய்ந்து கொண்டான்.
“குட்டிமா.. நீ இல்லாம நான் சரியாவே சாப்பிடல. எனக்குப் பசிக்குது. சாப்பிட போகலாமா?” என்று அவன் கேட்க, “ஹ்ம்ம்..” என்றவள் அவனுடன் சாப்பிட சென்றாள்.
புனிதாவின் அறையில் ஈஸ்வரி இருந்தார். அவருக்கு சாப்பாடு கொடுத்தபின் புனிதாவும் சாப்பிட்டிருக்க, சரவணனுடன் மற்ற அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.
சாப்பிட்டு முடித்து கேஸ் விஷயமாக ஆண்கள் மூவரும் வெளியே சென்றுவிட, செந்தமிழும் ரேவதியும் தூங்கினர்.
இரவு உணவு உண்டபின், சரவணன் இனியனையும், ரேவதியையும் அழைத்துச் சென்று இனியன் வீட்டில் இறக்கி விட்டான்.
“வேற யார் வந்து கதவை தட்டினாலும் திறக்காதீங்க. காலைல நானே வந்து உங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டுக்கிறேன்” என்றவன் மெல்லிய குரலில், “ஹேப்பி ஃபர்ஸ்ட் நைட் மச்சான்” இனியனுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிக் கிளம்பினான்.
வீட்டைத் திறந்து இருவரும் அறைக்குள் சென்றால் முதலிரவுக்காக அறையைத் தயார் செய்து வைத்திருந்தார்கள் அவனது நண்பர்கள். இது இனியனுக்கும் தெரியாது, ‘எப்படி என்னுடைய வீட்டின் சாவியை எடுத்து அலங்கரித்திருப்பார்கள்’ என்ற யோசனையுடன் சிரித்தவாறு அவன் நின்றிருக்க,
ரேவதி இனியனின் முகத்தைப் பார்த்தவாறு நின்றிருந்தாள். அவளைத் தூக்கிக் கொண்டே மெத்தையில் விழுந்தவன், “என்ன குட்டிமா.. ஷாக் ஆகிட்டியா? நானும் தான் ஷாக் ஆகிட்டேன். என்கூடவே தான் இருந்தானுங்க ரெண்டு பேரும். இதெல்லாம் எப்படி ஏற்பாடு பண்ணினாங்கன்னு தெரியல” அவன் பேசிக் கொண்டேயிருக்க, ரேவதி பதிலேதும் பேசாமல் இருந்தாள்.
அவள் மேல் இருந்து மெத்தையில் படுத்து, அவளை மார்போடு அணைத்துக் கொண்டவன், “குட்டிமா.. உன்கிட்ட சம்மதம் கேட்காமலே உனக்கு தாலி கட்டிட்டேன். என் மேல கோபம் எதும் இல்லையே. எதுக்கு ஒருமாதிரியே இருக்க?” அவள் தலையை வருடியவாறு கேட்டான்.
கேட்டாலும் நான் வேணாம்னு சொல்லப் போறேனா? எனக்கு என்னோட இனி தான் வேணும். என்னால இதை எதையும் நம்பவே முடியல. இப்படி நடக்கும்னு நான் நினைக்கவே இல்ல. நீங்க என்னை வந்து காப்பாத்துவீங்கன்னு நான் கனவுல கூட நினைக்கல, அதான்” அவள் கண்களில் நீர் திரண்டது.
“எனக்கும் என்னோட குட்டிமா தான் வேணும்”
“ஒருவேளை எனக்கு கல்யாணமோ இல்ல அதைத்தாண்டி வேற ஏதாவது ஆகியிருந்தா அப்பவும் நீ என்னை கல்யாணம் பண்ணிருப்பியா இனி?”
நான் காதலிச்சது என்னை யாருன்னு தெரியாமலே எனக்காக கஷ்டப்பட்ட, என்னைப் பத்தி யோசிச்ச என் குட்டிமா வோட மனசைத் தான். எனக்கு அதுபோதும். உன்னைப் பார்த்ததும், அடுத்து உன்னை மறுபடியும் நான் இழந்திடக் கூடாதுன்னு, நீ காணாம போன மறுநாளே நான் தாலியை வாங்கி வச்சுட்டேன். என்ன நம்ம கல்யாணமாச்சும் கிராண்டா பண்ணனும்னு புனிதாம்மா தான் ஆசைப்பட்டாங்க” பேசிக் கொண்டே இருந்தவனின் முகத்தை ஆச்சரியத்தோடு பார்த்தாள் ரேவதி.
“குட்டிமா நம்ம குழந்தைங்க கல்யாணத்தை நாம கிராண்டா வச்சுக்கலாம்” என்று குறும்பாய் சொன்னவன், அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அவள் முகம் செவ்வானாமாய் சிவந்திருக்க, அவளுடைய இதழை முற்றுகையிட்டான்.
அவன் தந்த முத்தத்தில் சிவந்திருந்த அவளது இதழை வருடியவன், “குட்டிமா.. நம்ம கல்யாணம் ஏதோ ஒரு அவசரத்துல நடந்துடுச்சு. நாம ரெண்டு பேரும் ஒண்ணு சேருறதை கொஞ்ச நாள் தள்ளி வச்சுக்கலாமா? ரெண்டு பேர் மனசுலையும் இன்னும் படபடப்பு, அழுத்தம் எல்லாம் இருக்கும். அந்த மாதிரி இல்லாம நாம ரெண்டு பேரும் சந்தோஷமா நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன். உனக்கு ஓகே வா?” அவளை நெருங்கி அவஸ்தையில் வைத்தவாறு அவன் கேட்க,
“நீ ரொம்ப நல்லவன் இனி” என்றவள் அவன் இதழில் முத்தமிட்டாள்.
“உன்னை பார்க்காம நான் சரியாவே தூங்கல. இன்னைக்கு தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு” என்று அவள் மார்பில் படுத்து, அவளை அணைத்தவாறு உறங்கிப் போனான்.
காலையில் எழுந்து இருவரும் குளித்து, இளமாறன் வீட்டிற்குச் சென்றனர். “என்னடி.. நேத்து எப்படி இருந்துச்சு?” செந்தமிழ் ரேவதி காதில் கிசுகிசுக்க, அவள் இரவு நடந்ததைச் சொன்னதும், எல்லோரும் இனியனை நினைத்து வியந்து போயினர்.
சிங்கண்ணன் பதவி பறிக்கப்பட்டு அவனுக்கும், பாண்டிக்கும், ஜோசியர் உட்பட இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் அனைவருக்கும் சிறைத் தண்டனை கிடைத்தது. சரியான சமயத்தில் இதைக் கண்டுபிடித்த சரவணனுக்கு ப்ரோமோஷனும், சென்னைக்கு பணியிட மாறுதலும் கிடைத்தது.
சரவணன் இளமாறன் வீட்டிற்கு நான்கு வீடு தள்ளி வீடு பார்த்து, தன்னுடைய குடும்பத்தை சென்னைக்கு அழைத்து வந்தான். இனியன் ரேவதியையும் அவளுடைய அம்மாவையும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அறையில் அம்மா படுத்துக் கொள்ள ஏற்பாடு செய்தவர்கள், முன்னால் இருந்த சிறிய ஹாலில் அவர்கள் படுத்துக் கொள்கின்றனர்.
சொந்த வீடு வாங்கும் எண்ணத்தில் இருப்பதால் இப்போதைக்கு இருக்கும் வீட்டிலேயே இருந்து கொண்டனர். ரேவதியும் செந்தமிழும் வேலைக்கு செல்வதில்லை. நடந்த விஷயங்களை கேள்விப்பட்டு மில் முதலாளி, வேலை செய்பவர்கள் எல்லாம் இருவரையும் பார்த்து விட்டு, ரேவதிக்கு திருமண பரிசுகளும் வழங்கி சென்றனர்.
ரேவதியும் செந்தமிழும் வீட்டில் இருந்து வேலைகளைப் பார்த்துக் கொள்கின்றனர். தீபா விற்கு தையல் கலையில் ஆர்வமிருப்பதால் தினமும் புனிதாவுடன் கடைக்குச் சென்று, அவரிடம் தையல் கற்றுக் கொள்கிறாள்.
தினமும் மாலை பள்ளி முடிந்து வரும் சரவணனின் மூத்த மகள் அமுதினிக்கு பாடம் சொல்லிக் கொடுத்து, வீட்டில் இருக்கும் சின்னக் குழந்தை இதழினியையும் செந்தமிழ் தான் கவனித்துக் கொள்கிறாள். இளமாறனும் இனியனும் தங்களுடைய கம்பெனியில் ப்ராஜெக்ட் களை சரியாக செய்து தர ஆரம்பித்தனர்.
எல்லாம் சரியாகத் தான் நடந்து கொண்டிருந்தது அந்த ஒருநாள் வரும் வரை…..
காதலாய் வருவாள் 💞

