
ருத்ரன் தமிழின் காதில் சமரசம் பேச அவனைப் பார்த்துச் சிரித்து விட்டுக் காதலாக அவனது கண்களை உற்று நோக்க,
“விழி மா, நமக்கான ரூம் பார்த்து முதல்ல போவோம். அப்புறமா நாம பேசுவோம்” என்றான் அவனும் காதலில் கசிந்துருகி.
அதன் பிறகு இருவரும் தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ரூமுக்குச் சென்று தங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு கட்டிலில் வந்து உட்கார,
“என்ன மாமா, இங்கயே இருக்கலாம் என்று முடிவு பண்ணிட்டியா? எங்கேயும் சுத்திப் பார்க்கப் போற ஐடியா இல்லையா?” என்றாள்.
அவளை இழுத்துத் தன் மேல் போட்டுக் கொண்டவன், இங்கே இருக்கிறதுனாலும் எனக்கு ஓகே தான், என் விழிக்கு ஓகேனா” என்று சிரித்தான்.
அவனது கண்ணை உற்றுப் பார்த்துவிட்டு “வெளியே போலாமா மாமா” என்றாள்.
“சரிடி டிரஸ் மாத்திட்டு வா” என்றான்.
“ஏன், இந்தப் புடவைக்கு என்ன?” என்றாள்.
“இங்கு வந்து புடவையையே சுத்திட்டு இருக்க, வேற டிரஸ் போடு விழி மா” என்றான்.
“நான் புடவை தான் எடுத்துட்டு வந்து இருக்கேன்.”
“வேற எதுவும் எடுத்து வைக்கலயா?” என்று கேட்டான்.
“சுடி எடுத்து வச்சிருக்கேன், இருந்தாலும்…”
“ஏன், அதை போட்டா என்ன?” என்றான்.
“சரி” என்று அவள் தன்னுடைய பேகை எடுத்துச் சுடிதார் எடுக்கப் போக,
“இரு விழி” என்று விட்டு வேறொரு பேகில் இருந்து அவளுக்காக அனார்கலி எடுத்து அவளது கையில் வைக்க,
“என்ன இது?” என்று கேட்டாள்.
“ஏன், எப்படித் தெரியுது?” என்றான்.
“இல்ல, எனக்கு வேணாம்.”
“போடு விழி மா, எப்பவாச்சும் வெளிய வந்தா தானே… உனக்கும் இந்த டிரஸ் ரொம்பப் புடிக்கும் தானே… நீ போட்டு ரொம்ப நாள் ஆகுதுடி.
அதுவும் உன் கழுத்தில் நான் தாலி கட்டினதுக்குப் பிறகு இந்தப் புடவையை மட்டும் தான் சுத்திட்டு இருக்க. வேற எதுவும் போட மாட்ற. வீட்ல யாரும் உன்னை எதுவும் போட வேணாம்னு சொல்லி இருக்க மாட்டாங்க. நீயாவே எதுக்கு விழிமா, உன்னை ஒரு கூண்டுக்குள்ள அடைச்சிக்கிற மாதிரி, இதை மட்டுமே சுத்திட்டு இருக்க?” என்று கேட்டான்.
“நான் எப்போ அப்படிச் சொன்னேன்?” என்று முறைத்துக் கொண்டு அவனிடம் சண்டைக்கு வர,
“அம்மா தாயே, இதைப் போட்டுட்டு வா, போலாம்.”
“சரி நீங்க கொஞ்சம் வெளியே இருங்க” என்றாள்.
“எதுக்கு?” என்று அவன் கேட்க,
“நான் டிரஸ் மாத்த வேண்டாமா?” என்றாள்.
“முழுசா நனைஞ்சதுக்கு அப்புறம் முக்காடு எதுக்கு விழி மா?”
“எது?” என்று அவனையே பார்க்க,
“சும்மா…” என்று அவளது தாடையில் லேசாகத் தட்டி விட்டு வெளியில் சென்று விட்டான்.
அவளும் உடை மாற்றிக் கொண்டு வெளியில் வர,
இருவரும் தங்களுக்கான உலகத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
இதுவரை சுற்றி இருந்த அனைவருக்காகவும் யோசித்தவர்கள் இன்று தங்களுக்கே தங்களுக்காக என்று யோசிக்க ஆரம்பித்தார்கள்.
தமிழ் டிரஸ் மாத்திக் கொண்டு வெளியில் வரும் வேளையில், ருத்ரன் சரவணனுக்குப் போன் செய்து தாங்கள் வந்துவிட்டதாகவும், தங்களுக்கு யாரும் போன் செய்யாமல் பார்த்துக் கொள்ளுமாறும் சொன்னான்.
தனது மச்சானை எண்ணி மனதுக்குள் சிரித்துக் கொண்டான் சரோ.
‘அன்னைக்கு அப்படிப் பேசினான்’ என்று யோசித்து விட்டு, ‘நல்லா இருந்தா சரி’ என்று விட்டு அகிலாவிற்கு ஃபோன் செய்து சொல்லிவிட்டு,
காயத்திரிக்கும் போன் செய்து சொல்ல,
இருவருமே வீட்டில் உள்ள பெரியவர்கள் சிறியவர்கள் அனைவருக்கும், அவர்களாக போன் செய்யும் வரை யாரும் அவர்களுக்கு போன் செய்து தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட, பெரியவர்களும் அவர்களுக்கான வாழ்க்கையை வாழட்டும் என்று விட்டு அமைதியாக விட்டுவிட்டார்கள்.
அவர்கள் நல்லபடியாக சிம்லா போய் சேர்ந்து, வாழ்ந்தால் அதுவே போதும் என்று அமைதியாகி விட்டார்கள்.
“பசிக்குது…” என்று தமிழ் சொன்னவுடன் முதலில் அவளை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அவளுக்குத் தேவையான உணவை வாங்கிக் கொடுத்துவிட்டு,
“எங்குச் செல்லலாம்?” என்று கேட்க,
“நீங்க எங்க கூப்பிட்டுப் போனாலும் எனக்கு ஓகே தான் மாமா. உங்க கூட இருந்தா சரி” என்று அவனது விரலோடு விரல் சேர்த்து அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.
அவளது கையோடு கையைப் பிடித்துக் கொண்ட ருத்ரனும் அவளைப் பார்த்துச் சிரித்துவிட்டு,
அவளது தலையோடு தன் தலையை வைத்து முட்டி விட்டு அவளை அழைத்துக் கொண்டு அவளுக்குப் பிடித்தமான ஒவ்வொரு இடமாகச் சுற்றிக் காண்பித்தான்.
அவளுக்குச் சிம்லா பிடிக்கும். அங்கு அவளுக்கு என்னென்ன இடம் பிடிக்கும் என்று அனைத்தும் ருத்ரனுக்குத் தெரியும்.
ஆனால், அவள் ஹனிமூன் செல்லத் தேர்ந்தெடுத்த இடம் சிம்லா என்று மட்டும் தான் அவனுக்குத் தெரியாமல் இருந்த விஷயம். ஆகையால் அன்று முழுவதும் அவளுக்குப் பிடித்தமான ஒவ்வொரு இடமாக அழைத்துக் கொண்டு சென்று அவளைச் சுற்றிக் காண்பித்து விட்டு,
அவளுக்குச் சாப்பிடவோ இல்லை, வேறு என்ன பொருட்கள் வேண்டுமோ வாங்கிக் கொடுத்துவிட்டு மாலை 6 மணி போல் ரூமுக்கு அழைத்துக் கொண்டு வந்தான்.
ரூமுக்குள் வந்தவுடன் விழி அவனை ஒட்டிக் கொண்டே இருக்க,
“விழி மா, நீ என்ன ரொம்பப் பண்றடி” என்றான்.
“நான் என்ன மாமா பண்ணேன்?” என்று அவனது கைகளோடு கையைப் பின்னிக் கொண்டு அவனது தோளில் சாய்ந்து கொண்டே கேட்க,
“வர வர உன் பேச்சும், ஆளும் சரியில்லை” என்றான்.
தமிழ் சிரித்துக் கொண்டே, “எது? நான் ஆளும், பேச்சும் சரி இல்லையா? அது சரி” என்று சிரித்தாள்.
அவளது உதட்டையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவளது உதட்டைப் பிடித்து இழுத்து, ஒரு சில நொடி அவளது கண்களை உற்றுப் பார்த்துவிட்டு, அவளது உதட்டோடு உதடு வைத்துத் தேன் பருக ஆரம்பித்தான்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அவளிடம் இருந்து விலகி காதில் சமரசம் பேசி விட்டு, “இப்படியே போயிட்டு இருந்தா, நடக்கிறதுக்கு நான் பொறுப்பு இல்ல” என்று சிரித்தான்.
“என்ன நடக்கும் அப்படி?” என்றாள் சிரித்துக் கொண்டே அவளும்.
“கேடி” என்று அவள் தலையில் கொட்டி விட்டு, “நீ போய் பிரஷ் ஆகிட்டு வா விழி” என்றான்.
“நீயும் வாயேன் மாமா, சேர்ந்தே ஃப்ரெஷ் ஆகலாம்” என்று சிரித்துக் கொண்டே கேட்க,
“உன் தங்கச்சி கூடச் சேர்ந்து அவளோட குறும்புத்தனம் உனக்கும் ஒட்டிக்கிச்சு, நினைக்கிறேன்” என்று சிரித்தான்.
“என் கூட சேர்ந்து என் தங்கச்சிக்கு குறும்புத்தனம் வரல, அவ கூட சேர்ந்து எனக்கு தான் வந்து இருக்கோ? என்று இடுப்பில் கையை வைத்து முறைத்துக் கொண்டு அவனைக் கேட்க,
“அம்மா தாய்களா, ஆள விடுங்க. உன் தங்கச்சி கூட சேர்ந்து உனக்குக் குறும்புத்தனம் வந்துச்சோ, இல்ல, உன் கூடச் சேர்ந்து உன் தங்கச்சிக்குக் குறும்புத்தனம் வந்துச்சோ, அது ரொம்ப முக்கியம் பாரு” என்றான்.
“அது தான் நானும் கேட்கிறேன். இப்போ அவளோட பேச்ச நீ எதுக்கு இங்க எடுத்த?” என்று கேட்டாள்.
“நீ ஒரு முடிவோட இருக்கடி” என்றான்.
“ஏன், உங்களுக்கு வேணாமா?” என்றாள். கண்களைச் சுழல விட்டுக் கொண்டு அவனை மயக்கம் பார்வையோடு.
அவளைப் பார்த்தவன், சிறிது கிறங்கித்தான் போனான்.
“உண்மையா என்ன ரொம்ப டார்ச்சர் பண்றடி”
“டார்ச்சர் தான, பண்ணிட்டுப் போறேன்” என்று சிரித்து விட்டு அவனது தாடையில் கிள்ளி முத்தம் வைத்துவிட்டு, “நான் குளிச்சிட்டு வந்துடறேன் என்று வேகமாகக் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
அவள் சென்றவுடன் சிரித்து விட்டுத் தனது தலையைக் கோதியவன், ‘எப்பா சாமி முடியல. இவளைக் கிட்டத்தட்ட இது போலப் பார்த்து ஒரு வருஷம் ஆகுது. இப்போ ஒரு வருஷமா ரொம்பக் குடும்பப் பொண்ணா மட்டும் நடந்துக்கிறா. என்னோட விழிமாவை இப்பதான் பார்க்கிறேன்’ என்று தலையைக் கோதினான்.
‘உன்னோட விழி மா வா?’ என்று அவனது மனசாட்சி கேள்வி கேட்டது.
‘அவளை நீ கல்யாணத்துக்கு அப்புறம் தாண்டா விரும்ப ஆரம்பிச்ச? அப்புறம் எப்படி டா உன்னோட விழிமா வா ஆக முடியுமா?’ என்று கேட்டது மனசாட்சி
அவனுக்கே அதற்கான பதில் இன்னும் புரியாமல் இருக்க, தன் தலையை உலுக்கி விட்டு, ‘இப்போ ரொம்ப முக்கியம் எனக்கு?’ என்று யோசித்தான்.
‘இவளை நான் எப்போ இருந்து விரும்ப ஆரம்பிச்சிருப்பேன்? அண்ணனும், தங்கச்சியும் வாயைக் கூடத் திறக்க மாட்டாங்க. இவளாச்சும் சொல்வாளா? கேட்கலாமா? இப்போ இருக்கிற சந்தோஷத்தையும் ஏன் அதைக் கேட்டுக் கெடுத்துக்கணும்?’ என்று யோசித்தான்.
ஆனால், கேட்காமல் எதையும் தெரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல், தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பிக்கவும் அவனுக்கு விருப்பமில்லை.
ஆனால், கேட்டு இப்பொழுது இருக்கும் சந்தோசத்தைக் கெடுத்துக் கொள்ளவும் விருப்பமில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் இரு தலைக் கொள்ளியாகத் தவித்துக் கொண்டு இருந்தான்.
தமிழ் குளித்துவிட்டு வந்திருந்தாள்.
“என்ன மாமா பலத்த யோசனையா இருக்கு? நீ போய் குளிக்கலையா? உனக்குப் பசிக்கலையா? மணி இப்போ 7 மணிக்கு மேல ஆகுது” என்றாள்.
“குளிக்கணும் தமிழ்” என்றான்.
தாங்கள் மட்டும் தனிமையில் இருக்கும் போது தன்னுடைய மாமா தன்னைத் தமிழ் என்று அழைக்கிறார் என்பதை உணர்ந்தவள்,
அவனது அருகில் உட்கார்ந்து அவனது கையைத் தன் கைக்குள் வைத்துக் கொண்டவள், “அப்படி என்ன மாமா யோசனை?” என்று கேட்டாள்.
“நான் ஒன்னு கேட்பேன்டி என்னைத் தப்பா எடுத்துக்க மாட்டியே” என்றான்.
அவனது கண்ணை உற்றுப் பார்த்தவள், “நீ கேட்கலாம். இப்போ நம்ம சாப்பிட்டு வரலாம். அதுக்கப்புறம் இதைப் பத்திப் பேசலாம்.”
“இல்ல தமிழ், எனக்கு இப்பவே தெரியணும் இல்லனா…” அவனது வாயில் கையை வைத்தவள்,
“நீ கேட்காமல் உனக்கான பதிலை நான் சொல்லுவேன். சரியா? எனக்குமே உன்கிட்ட எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. எதையும் சொல்லாமல் நம்முடைய வாழ்க்கையும் ஆரம்பிக்க மாட்டேன். சரியா? உன் மனசுக்குள்ள, உன் மண்டையில என்ன போட்டுக் குழப்பிக் கொண்டு இருக்கிற, என்று புரியாத அளவுக்கு உன்னோட விழிமா இருக்க மாட்டேன் மாமா. சாப்பிட்டு வரலாம், அதுக்கப்புறம் நம்ம உட்க்கார்ந்து நிதானமா பேசலாம்.”
அவள் குடுத்த தைரியத்தில் சரி என்று அவளது கையில் அழுத்தம் கொடுத்துவிட்டு அடுத்த கால் மணி நேரம் கழித்துத் தமிழை அழைத்துக் கொண்டு வெளியில் வர, இருவரும் ஹோட்டலில் கீழே இருக்கும் ரெஸ்டாரண்டில் சாப்பிட்டு விட்டுச் சிறிது நேரம் அங்கே உட்கார்ந்து வேடிக்கை பார்த்துவிட்டு இரவு எட்டரை போல் அவர்களது ரூமுக்கு வந்தார்கள்.
ரூமுக்குள் வந்து பத்து நிமிடங்கள் இருக்கும். பத்து நிமிடங்களாகக் கிட்டத்தட்ட 20 தடவைக்கு மேல் திரும்பிப் பார்த்து விட்டான் தமிழை ருத்ரன்.
விழி அவளது கழுத்தில் காதில் இருக்கும் செயின், தோடு அனைத்தையும் அவிழ்த்து வைத்துக் கொண்டிருந்தாள்.
அவளையே திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘அவளாகச் சொல்ல மாட்டாளா?’ என்று எண்ணி மட்டும் தான் பார்த்தான்.
‘தானாகக் கேட்டு எங்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச சந்தோஷத்தையும் கெடுத்து விடுவோமோ?’ என்று எண்ணினானே தவிர,
‘தான் கேட்போம், அவள் சொல்வாள்’ என்று எண்ணம் அவனுக்குக் கொஞ்சமும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
கால் மணி நேரத்திற்குப் பிறகு அனைத்தையும் அவிழ்த்து வைத்து விட்டு அவனது அருகில் வந்தவள்,
“அப்போ கூட நீயே கேக்கணும் என்று உனக்குத் தோணல இல்லையா?” என்று கேட்டாள்.
“நான் எங்கடி அப்படிச் சொன்னேன்? நான் அதைக் கேட்கதான் வந்தேன். நீ தான அப்புறமா சொல்றேன்னு சொன்ன…”
அவனைப் பார்த்துச் சிரித்து விட்டு, “சரி தான்” என்று சொல்லிவிட்டு,
“நீ சொல்லு மாமா” என்றாள்.
“என்னடி என்னைச் சொல்லச் சொல்ற?” என்று கேட்டான்.
“நீ தான் சொல்லணும், அப்புறம் என்ன நானா சொல்றது?”
“விழி, நான் என்ன கேட்க வந்தேன்னு புரிஞ்சு தானே பேசுற” என்று கேட்டான்.
“நீ என்ன கேட்க வந்தனு புரிஞ்சு தான் இப்பயும் கேட்கிறேன். நீ தான் சொல்லணும்.”
“நான் எனக்குத் தெரிஞ்சா சொல்ல மாட்டேனா? அத எதுக்குடி உன்கிட்டக் கேட்கப் போறேன்” என்று கத்திவிட்டு அவளை விட்டுச் சிறிது விலகி உட்கார்ந்தான்.
வேகமாக, “உன்னை எப்போ இருந்து விரும்புறேன், என்று எனக்கே புரியாம தான் உன்கிட்ட வந்து கேட்டுட்டு இருக்கேன். இதுல என்னையே சொல்லு என்று சொன்னால் என்னடி அர்த்தம்?”
“நீங்கள் தான் யோசிக்கணும். நீ நிதானமா யோசிச்சா மட்டும் தான், உனக்கு நீ எப்போ இருந்து என்னை விரும்ப ஆரம்பிச்ச என்று தெளிவா தெரியவரும். என்னை வந்து கேட்டா…”
“சரிடி நீ எப்போ அதை உணர்ந்த, அதைச் சொல்லு.”
“இப்போ நான் உணர்ந்தது முக்கியமா? இல்ல, நீ எப்போ இருந்து என்னை விரும்ப ஆரம்பிச்ச என்பது முக்கியமா
மாமா, எது முக்கியம் உனக்கு?” என்று கேட்க,
திருதிருவென முழித்துவிட்டு அவளை முறைத்துக் கொண்டு நின்றான்.
‘இவளை நாம் ஒரு கேள்வி கேட்டா இவள் நம்மளை பதில் கேள்வி கேட்கிறாள்’ என்று முனகிக் கொண்டு நின்றான்.
