Loading

காலம் தாண்டிய பயணம் -06

 

 

அங்கே தேவ் மித்ரனின் கார், அவனது வீட்டு வளாக்கத்தினுள் நுழைந்தது.

 

இருள் விலகி இருக்க, புலர்ந்த புதிய நாளானது இனியாவிற்கு புது விடியலையும், யோசிக்க முடியாத அதிரடிகளையும் ஒரு சேர அள்ளித் தரக் காத்திருந்தது.

 

ஆனால் இது எதையும் அறியா பேதையவள் இன்னும் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.

 

என்றும் அவளைத் தழுவ யோசிக்கும் தூக்கம் இன்று ஆதூரமாய் அவளைத் தழுவியிருந்தது.

 

முதலில் இறங்கிகொண்ட மித்ரன்,  அவள் புறம் வந்து மெல்ல “இனியா” என்று அவளை இரு முறை அழைத்தான்.

 

அந்தக் குரலுக்கு உணர்வு பெற்று தன் சிப்பி விழிகளை மெல்லத் திறந்தவளுக்கு, முன்னே நின்றிருந்த தேவ் மித்ரன் தெளிவில்லாத விம்பமாய் அவள் கண்களுக்குக் காட்சியளித்தான்.

 

பதறிச் சட்டென எழுந்து கொள்ளப்பார்க்க, போடப்பட்டிருந்த சீட் பெல்ட் அவளை அசைய விடவில்லை.

 

பயத்தில் யாரோ தன்னை தடுப்பது போல் பிரம்மை தோன்ற, இரவின் நினைவில் பயந்து அழத்தொடங்கினாள்.

 

“இனியா.. ஹேய்.. டோல் நான் தான் மித்ரன் அங்கிள்.. இங்க பாருமா” என்று அவனை அவளுக்கு உணர்த்த போராடியவனின் போராட்டம் சரியாக இலக்கை அடைய,

 

அவள் மூளை அவனை இனம் காட்டிய நொடி அவளது அழுகைச் சத்தம் விசும்பலாய் மாறத் தொடங்கியது.

 

“ஓகே ஓகே ரிலாக்ஸ், நாம வீட்டுக்கு வந்துட்டோம் இனிமேல் எந்தப் பிரச்சனையும் இல்ல சரியா, என்ன பண்ணலாம்னு ஆறுதலா யோசிக்கலாம் இப்போ உள்ள போகலாம் வா” என்றவன் அவளது கையைப் பிடித்து மெல்ல இறங்க உதவி செய்தவன், காரின் பின்னே இருந்த அவனது உடைப்பெட்டியை எடுக்கச் சென்றான்.

 

நகரத்து வீடு என்பதால் அருகருகே தான் அடுத்தடுத்த வீடுகள் அமையப் பெற்றிருந்தது.

 

அவளோ சுற்றும் முற்றும் பார்த்து, புடவை முந்தானையை திருகியபடி அப்படியே நின்றிருக்க, பக்கத்து வீட்டிலிருந்த நாய் ஓன்று, புதியவளான இவளைப் பார்த்துக் குறைக்கத் தொடங்கியது.

 

சாதாரணமாகவே பயந்தவள் நாய் என்றால் சொல்லவும் வேண்டுமா? அதிலும் நாய் என்றால் கூடுதல் பயம் அவளுக்கு.

 

அந்தப் பெரிய உருவம் கொண்ட நாயின் கதறலில் கால்கள் தன்னால் அங்கிருந்து நகர்ந்து வீட்டின் முன் கதவினருகே வந்து நின்றது.

 

சத்தம் கேட்ட மித்ரன்,  காரின் பின்னிருந்து எட்டிபார்த்தவன், நாயைப் பார்த்துப் பயத்தில் நிற்பவளை பார்த்துப் பாவமாய் தோன்றவும்,

 

“காலிங் பெல் அங்க இருக்கு டோல், அத ப்ரஸ் பண்ணு உள்ள என் பையன் இருக்கான் வருவான்” என்றவன் மீண்டும் பெட்டிகளை இறக்கத்தொடங்கினான்.

 

அவளும் பயத்தில் அதனை ஒலிக்க விட்டு  நாயின் புறம் ஒரு கண்ணை வைத்தபடி காத்திருக்க, கதவு திறக்கும் ஓசையில் கண்களைக் கதவின் புறம் திருப்பவும் கதவு திறந்து கொள்ளவும் சரியாக இருந்தது.

 

உள்ளே இளைஞன் ஒருவன் நின்றிருந்தான். அப்போதுதான் எழுந்திருப்பான் போலும் முடி கலைந்திருக்க, தூக்கம் கலைந்தும் கலையாத நிலையில் கதவைத் திறந்தவனையே இவள் பார்த்திருந்தாள்.

 

அவனோ “எஸ், ஹூ ஆர் யூ?” என்றபடி மங்களாய் தெரிந்த பெண் உருவத்தைத் தெளிவுபடுத்த கண்களைக் கசக்கியபடி வினவ, இவளோ விழித்துக்கொண்டிருந்தாள்.

 

கண்களை நன்கு திறந்து அவளைப் பார்வைக்குப் புலப்படுத்தியவனது கண்கள் விரிந்து கொள்ள, அவன் கண்ணையே அவனால் நம்ப முடியவில்லை..

 

சட்டென சலித்துக்கொண்டவன் “ரொம்ப முத்தி போயிடிச்சு ஸ்பைசி, கனவுலதான் வந்து இம்ச பண்றனு பார்த்தா, இப்போ ஹாழுசினேஷன் கூட வந்துடிச்சு போல, என்ன பைத்தியமா சுத்த விட்டுட்டு எங்கயோ ஜாலியா இருக்கல்ல நீ, உன்ன வெச்சிக்கிறேன் இரு” என்றவன் மீண்டும் கதவை அடைக்கப் போக,

 

“உள்ள போகாம இங்க என்ன பண்ற டோல்” என்றபடி தேவ் மித்ரன் அவ்விடம் வர, கதவை மூட விளைந்தவனின் கரம் தன்னால் நின்றது.

 

அவன் கண்களோ மீண்டும் அதிர்ந்து விரிய, அதில் தான் எத்தனை பளபளப்பு??

 

“டா..ட்” என்றவனின் குரல் உடைந்து நளிந்து ஒழித்தது.

 

“குட் மார்னிங் யாழ், இவங்க இனியா என்னோட கெஸ்ட் கொஞ்ச நாளைக்கு நம்ம கூடத்தான் இருக்கப் போறாங்க” என்று மகனுக்கு அறிமுகப்படுத்தியவன் இனியாவிடன் திரும்பி,

 

“டோல் நான் சொன்னேன்ல என் பையன் இவன் தான், மகிழ் யாழன்” என்று அவளுக்கும் அறிமுகப்படுத்தியவன் உள்ளே நுழைய, வழிவிட்டு நின்ற மகிழோ விக்கித்துப் போய் தான் நின்றிருந்தான்.

 

மகனின் முக மாற்றத்தை உணராத தேவ் மித்ரன் இனியாவுடன் உள்ளே நுழைய, அவளும் நடப்பவை புரியாமல் அவன் பின்னே சென்றாள்.

 

இத்தனை நாளை நடந்தவை நேற்றிலிருந்து நடப்பவையென அனைத்தும் அவளைப் புரட்டிப் போட்டிருக்க, இப்போது கண்முன் நடப்பவை எதனையும் அவள் மூளை உள்வாங்கிக்கொள்ள தயராக இல்லை என்பதே உண்மை..

 

கண்ணில் படும் எதுவும் அவளது கருத்தில் பதியவில்லை…

 

நடப்பவை அனைத்தும் எங்கோ எதிலோ முடிச்சு போடப்பட்டு அதன் வழியே இயங்குகிறதோ? இல்லை இயக்குவிக்கப் படுகிறதோ???  பதில் கூடிய விரைவில்…

 

________________________

 

அங்கே அந்தக் காலபைரவன் கோட்டையில் தனியே, ஓடும் அருவியை வெறித்தபடி, மரநிழலின் கீழே அமர்ந்திருந்தாள் யாழினி.

 

சற்று முன்னர் அவள் தெரிந்து கொண்ட விடயம் அவளை அப்படியே நிலைகுழைய வைத்திருந்தது.

 

அவள் கனவிலும் நினைத்துக் கூடப் பார்த்திராத விசித்திரம் அல்லவா இங்கே நிகழ்ந்திருக்கிறது.

 

நேற்று மாலை அவர்களுடன் இங்கே வந்தவள் தான். காலை வரை எதைப் பற்றியும் அவள் விசாரிக்கவில்லை. அந்த வீட்டின் பெரியவருக்கு உடல் நலம் சரியில்லை என்பதைப் புரிந்து கொண்டு அமைதி காத்தவள், சற்று முன்னர் அவளுக்கு உணவைக் கொடுத்த பூவிழியிடம் பெரியவரின் உடல்நிலையை பற்றி விசாரித்தாள்.

 

பூவிழியும், நேற்றுக் கொடுத்த மருந்தின் உதவியினால் பெரியவரின் உடல் சற்று தேறி இருப்பதாகச் சொல்லிச் சென்றிருந்தாள்.

 

துயிலனிடம் பேச வேண்டும் என எண்ணி, தங்கி இருந்த குடிசையை விட்டு வெளியே வந்த யாழினிக்கோ அதிர்ச்சி  ‘நேற்று யாருமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்த ஊரா இது?’ என அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

 

நேற்றைய நிலைமைக்கு அத்தனை எதிர்மாறாய் மக்களை அங்கே காண முடிந்தது. அதுவும் காலையில் தொழிலுக்குச் செல்லும் ஆண்கள், பெண்கள் என அந்த இடமே அந்த ஊர் மக்களால் நிறைந்திருந்தது.

 

சிலர் வீட்டு விலங்குகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல, சிலர் விவசாய வேலைக்குரிய உபகரணங்களுடன் ஆயத்தமாகிக் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

 

அதில் துயிலனும் அடக்கம், அவனுடன் பேச வேண்டி அவன் முன்னே போய் நின்றவள், அவனை எப்படி அழைப்பது என்று புரியாமல் “ம்ம்ம்கும்”  என்று குரலைச் செரும,

 

அவனோ சத்தத்தில் அவளைத் திரும்பிப் பார்த்து “பெண்ணே! தாங்கள் உறக்கம் கழைந்து எழுந்தாகி விட்டதா? எம் சகோதரி பூவிழி தங்களுக்குத் தேவையானவற்றைப் பார்த்துக் கொள்வாள். நீங்கள் சிறிது ஓய்வு எடுத்தவிட்டுச் செல்ல வேண்டிய இடத்தைச் சொன்னால், யான் தங்களை நாளை பொழுது புலர்ந்ததும் அங்கே அழைத்துச் செல்கிறேன்” என்றான்.

 

அவளோ சரி என்பதைப் போல் தலையாட்டியவள் “ஏன் உங்க தமிழ் இப்படி டிஃபரெண்ட்டா இருக்கு?” என்றாள், அவளுக்கு அது தான் இப்போது முக்கியம் என்பது போல…

 

துயிலனோ “தாங்கள் வினவிய வினா எமக்குச் சரியாகப் புரியவில்லையே பெண்ணே! தங்கள் மொழியைப் புரிந்து கொள்ளவது சற்று சிரமமாகவே உள்ளது” என்று புன்னகையுடன் சொன்னவன் மீண்டும்,

 

“தாங்கள் இங்கிருந்து தொலைதூர இராச்சியப் பிரஜையாக இருக்கக்கூடும் என எண்ணுகிறேன். தங்கள் இராச்சியம் எது பெண்ணே?” என்றான் கேள்வியாக…

 

அவளோ யோசனையுடன் “இராச்சியமா? இராச்சியம் எல்லாம் இல்ல. காலபைரவன் கோட்டை தான் என் ஊரு, அங்க இருந்து சென்னைக்குப்  போக இருந்தேன். இங்க எப்படி வந்தேன்னு தான் தெரியல, எல்லாம் மர்மமா தான் இருக்கு” என்றாள்.

 

“காலபைரவன் கோட்டையா? பெண்ணே தங்களை இதற்கு முன், யான் இங்கே என்றும் காண நேர்ந்ததில்லையே!” என்று அவன் குழப்பமும் அதிர்ச்சியாகவும் உரைக்க,

 

அவளோ அதனை உணர்ந்து கொள்ளமல் “நானும் இப்படிதான் ஆரம்பத்துல குழம்பினேன், அது ஒண்ணுமில்ல ரெண்டு ஊருக்கும் அதே பெயர்ல, அதான் இந்தக் குழப்பம்” என்றவள்,

 

மீண்டும் “எனக்கு உங்க ஃபோன் கொஞ்சம் கொடுக்குறீங்களா? ஒருத்தருக்குத் தகவல் சொல்லணும் சொல்லிடுத் தரேன், என்னோடது எங்கயோ தவறிடிச்சு” என்க, அவனோ அவள் பேசியவை புரிந்தும் புரியாமலும் முழித்தான்.

 

சட்டென எதையோ யோசித்தவன் “பெண்ணே எங்கோ தவறு நடந்திருகின்றது, இங்கே காலபைரவன் கோட்டை ஒன்றே ஓன்று தான் அதுவும் இது தான், தாங்கள் சொல்வது விசித்திரமாக உள்ளது. தாங்கள் அந்தக் கயவன் மார்த்தாண்டனிடம் சிக்கிக்கொண்டு அந்தக் கானகத்துக்கு வந்தீர்கள் என்று தான் யான் எண்ணியிருந்தேன். அது தவறுபோல் தெரிகிறதே! தாங்கள் என்னுடன் வாருங்கள், தந்தையாரை விரைவில் சந்திக்க வேண்டும்” என்றவன் நொடியும் தாமதிக்காது அவளை அவனது தந்தையிடம் அழைத்துச் சென்றான்.

 

 

அடுத்த பத்து நிமிடத்தில் துயிலனின் தந்தை இளவேந்தனின் முன்னே யாழினி அமர்ந்திருக்க, அவரோ இதோ மூன்றாவது தடவையாகச் சோழியை சுழற்றியிருந்தார்.

 

அதில் இந்த முறையும் அவருக்கு அதே பதில் தான். அதுவும் தன் முன்னே அமர்ந்திருந்தவளுக்கு மிகப்பெரிய ஆபத்து என்று உறுதிப்படுத்தும் பதில் அது.

 

கண்களை மூடிச் சிறிது நேரம் அமர்ந்திருந்தவரின் முகத்தில் தெரிந்த கவலை துயிலனுக்கு நிலைமையை உணர்த்தியது.

 

“தந்தையே என்னவாகிற்று? மூன்று முறை சரி பார்க்க வேண்டிய அவசியம் என்ன? தங்கள் சோழி மீது என்றும் தாங்கள் சந்தேகம் கொண்டதில்லையே!” என்றான்.

 

அவனது குரலுக்குக் கண் திறந்தவரோ “பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது துயிலா! பெரும் ஆபத்து நெருங்கி இருக்கிறது” என்று மகனிடம் சொன்னவர்,

 

பயத்தில் என்னவோ என்று மிரட்சியுடன் அமர்ந்திருத்த யாழினியை நோக்கி “கவலை வேண்டாம் மகளே, ஆபத்து என்று ஒன்று இருந்தால் நிச்சயம் தீர்வு இருக்கும், உன் பிறந்த திகதி, நேரம், இடம் மூன்றும் சொல் மகளே தீர்வை ஆராய்வோம்” என்றவர் அவள் பதிலுக்காகக் காத்திருந்தார்.

 

அடுத்து அவள் சொன்ன பதிலில் தந்தை மகன் இருவர் முகமும் அதிர்ச்சியைத் தத்தெடுக்க, நம்ப முடியாத பார்வை தான் இருவரிடமும்…

 

 

இளவேந்தனுக்கு சட்டென நடந்திருப்பது என்னவென்று புரிந்து போகக் கண்களை மூடித் திறந்தவரோ,

 

‘பைரவா, அப்படியென்றால் எல்லாம் நீ விதித்தபடியே நடக்கிறது அப்படித்தானே, நெடு நாள் இடரைத் தீர்க்க இந்தச் சிறு பெண்ணுக்கு இத்தனை பெரிய சோதனை தான் ஏனோ?’ என்று மனதினுள் பைரவனுடன் பேசியவர்,

 

யாழினியிடம் “நீ இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பிறந்தாயா மகளே” என்றார் இன்னும் உருதிப்படுத்திக்கொள்ள எண்ணி,

 

அவளும் சிறு யோசனைக்குப் பின் ஆமாமெனத் தலையசைக்க,

 

அவரோ பெருமூச்சுடன் “மகளே யான் சொல்வதைக் கேட்டுப் பயம் கொள்ள வேண்டாம், இயற்கைக்கு மாற்றமான நிகழ்வு நிகழ்ந்திருகிறது, ஏற்றுக் கொள்வது நிச்சயம் கடினமான உண்மையும் கூட” என்று அவளுக்கு நிலைமையை உணர்த்த வேண்டி அவளைத் தயார்படுத்தியவர்,

 

“இது ஐந்தாம் நூற்றாண்டு மகளே, நீ காலப்பயணம் செய்து எங்கள் காலத்துக்கு வந்திருக்கிறாய்” என்றார் உண்மை அவளுக்குப் புரியும்படி,

 

அவளுக்கோ அவர் சொன்னதை புரிந்து கொள்ள நெடு நேர அவகாசமே தேவைப்பட்டது.

 

துயிலன் கேள்வியாகத் தந்தையைப் பார்க்க அவரோ அவன் விழியின் கேள்விக்குப் பதிலாகக் கண்களை ஆமோதிப்பாய் மூடித்திறந்தார்.

 

அதில் ‘ஆம் நீ எண்ணியது சரியே’ என்ற பதில் இருந்தது.

 

தந்தையும் மகனும் தான் இடருக்கான வழியை தேடி தவம் செய்யும் மனிதர்கள் ஆகிற்றே!

 

இடர் தீர யாழின் இனிமையானவளின் வருகை என்பதாய் சாஸ்திரம் அவர்களுக்குச் சொல்லி இருந்ததே!

 

அதனால் தான் யாழினியின் பெயரைக் கேட்டு அவனுள் ஒரு அதிர்வு, இருந்தும், அது இவள் தான் என  முழுமையாய் நம்பிவிட முடியவில்லை…

 

அவன் அந்த யோசனையில் இருக்க, யாழினியோ புரிந்து கொண்ட உண்மையை நம்ப முடியாமல் மனதுக்குள் ‘காலப்பயணமா? அதுவும் நானா? இது சாத்தியமா? அப்படியே சாத்தியம் என்றாலும் இதில் தான் எப்படி? ஏன்? எதற்காக?’ எனப் பல கேள்விகளை அசைபோட்டவள் குழப்பம் சூழ அப்படியே சமைந்து அமர்ந்திருந்தாள்.

 

 

 

இதோ கடந்த நான்கு மணி நேரமாக அதுவே தான் தான் தொடர்கிறது.

 

அந்த அருவி அருகே அமர்ந்திருந்தவளுக்கு இன்னும் அந்தக் கேள்விகளுக்கான பதில் கிடைக்கவில்லை…

 

இளவேந்தனும் அவள் தனிமையை கலைக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தார்.

 

அவருக்கு அவள் நிலை புரியாதா என்ன??

 

அப்படியே அமர்ந்திருந்தவளின் தோளில் ஒரு கரம் விழ, திரும்பிப் பார்த்தவளின் கண்ணில் பூவிழியின் விம்பம்.

 

“யாழினி, விடயம் அறிந்து கொண்டேன். எதற்கும் தளர்ந்து போக வேண்டாம் தோழியே! நிச்சயம் இடருக்கு வழி பிறக்கும். அந்தக் காலபைரவன் உனக்குத் துணையிருப்பான், விரைவில் திரும்பி விடலாம். இப்போது இருள் சூழ இருக்கிறது. வீட்டின்னுள் சென்று விடலாம் வா” என்றவள் யாழினியையும் கைபிடித்து அழைத்துச் சென்றாள்.

 

காலம் கடந்து விதி நடத்தும் ஆட்டத்தில் கைப்பாவையாய் இந்தத் தளிர் யாழினி… யார் இவள்?  ஏன் இந்தப் பயணம்? காலம் கடந்தும் காதலைத் தேடுமா? விடையறியா வினாக்களோ மீண்டும் மீண்டும் கோர்வையாக, பதிலோ மறைந்து கண்ணம்பூச்சி ஆடுகிறது.

 

காதலைத் தேடும்…

 

ஆஷா சாரா…

 

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்