Loading

அத்தியாயம் – 26

 

தன் காதலை ஸ்ரீ உணர்ந்து கொண்ட நொடி அவள் வாழ்விலே மறக்க முடியாத நிமிடங்கள் ஆகும். அவனை உடனே பார்க்க வேண்டும் என கை கால்களனைத்தும் பரபரக்க, தோழிகளிடம் சொல்லிக் கொண்டு வேகமாக தனக்காக காத்துக் கொண்டிருந்த காருக்குச் சென்றவள் டிரைவரிடம் கோயம்புத்தூருக்கு போகச் சொல்ல அவர் தான் அவளின் செய்கைகளில் குழம்பிப் போனார்.

 

“அய்யாகிட்ட சொல்லிட்டு போலாமே பாப்பா” என அவர் தயக்கமாக கூற,

 

“உங்க போனை கொடுங்க” என வாங்கியவள் தன் தந்தைக்கு அழைத்து தான் வீட்டிற்கு வருவதாகக் கூறியவள் தாத்தாவிடம் கூறிவிடும்படி சொல்லிவிட்டு , ஹரிக்கு அழைத்து அவனை உடனே வீட்டிற்கு வர சொன்னவள் அவன் பதிலைக் கூடக் கேட்காமல் வைத்து விட்டாள்.

 

அவளுக்கு அப்படியே உடலெல்லாம் காற்றில் மிதப்பதைப் போல் இருந்தது.

 

மெதுவாக கண்மூடி அந்த சுகத்தை அனுபவித்தவளின் செவியில் அந்த பாடலின் வரிகள் வந்து இனிமையாக நிறைக்க, அது தனக்காகவே எழுதியதைப் போல் உணர்ந்தாள்.

 

“பாவாடை அவிழும் வயதில்

கயிறு கட்டி விட்டவன் எவனோ

தாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன்

கொலுசு இடும் ஓசை கேட்டே

மனதில் உள்ள பாஷை சொல்வான்

மழை நின்ற மலரைப் பதமானவன்

உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்”

 

என்ற வரிகள் செவியில் நுழைந்து இதயத்தை நிறைத்தது. அதைக் கேட்டு உதட்டோரத்தில் ஒரு மந்தகாசப் புன்னகை தோன்ற தன் மன்னவனை காண காத்துக் கொண்டிருந்தாள்.

 

 

கார் காம்பவுன்ட்க்குள் நுழைந்ததுமே அவள் மனம் வெளியே வந்து விழுந்துவிடுமளவிற்கு வேகமாக துடித்தது.கார் நின்றதும் வேகமாக அதிலிருந்து இறங்கியவள், அங்கே தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஹரியைக் கண்டு அங்கேயே தேங்கினாள்.

 

அவள் கால்கள் அதற்கு மேல் நகரமாட்டேன் என சண்டித்தனம் செய்ய, கண்களோ அவனை மொய்த்துக் கொண்டிருந்தது.

 

அவளின் பார்வையில் இருந்த மாற்றத்தை கண்டுகொண்டவன் , “குட்டச்சிக்கு இன்னைக்கு என்னாச்சு” என யோசித்துக் கொண்டே அவள் அருகில் வந்து அவளைத் தொட்டு உலுக்கியவன் ,”எதுக்கு டி அவ்ளோ அவசரமா வீட்டுக்கு வரசொன்ன, இங்க வந்து பேயரைஞ்ச மாதிரி நின்னுகிட்டு இருக்க” என அவன் கேட்க,

 

‘பாவி பாவி ரொமாண்டிக்கா பார்த்தா பேயரைஞ்ச மாதிரி நிக்கிறேன்னு சொல்றான்…இன்னும் பயிற்சி வேண்டுமோ’ என தனக்குள் பேசிக் கொண்டவள், “மாடிக்கு வா” என அவனிடம் கூறிவிட்டு மேலே சென்று விட்டாள்.

 

“இவ என்ன தான் நினைச்சுட்டு இருக்கா” என புலம்பிக் கொண்டே அவளை பின் தொடர்ந்தான் ஹரி.

 

மேலே வந்து பத்து நிமிடம் ஆகியும் அவள் தன்னிடம் பேசாமல் கைகளைக் கட்டிக்கொண்டு வானத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டு கடுப்பானவன் ,”ஹேய் குட்ட..” என அவன் தொடங்க,

 

 

“ஐ லவ் யூ ஹரி!!!” என்று வந்து விழுந்த அவள் குரலில் அவன் வாய் தானாக மூடிக் கொண்டது.

 

தான் கேட்டது நிஜம் தானா என அவன் தன் காதைத் தேய்த்துக் கொண்டே ,”எ..என்ன சொன்ன” என அதிர்ச்சியில் மீண்டும் வினவ,

 

“நான் உன்னை லவ் பண்றேன்னு சொன்னேன்…இப்போவாச்சும் புரிஞ்சுதா” என அவள் அவனின் காதிற்கு அருகில் வந்து கத்த,

 

அவனின் உள்மனம் அதைக் கேட்டு குத்தாட்டம் போட்டாலும், இப்போதும் தங்களுக்கான வயது வரவில்லை என அவன் நியாய மனம் எடுத்துரைக்க, தன் மகிழ்ச்சியை குரலில் காட்டாமல் சாதரணமான குரலிலே,” என்ன திடீர்னு என்ன ஆச்சு லட்டு உனக்கு” எனக் கேட்க,

 

“ஒன்னும் ஆகலை…நீ என்னை லவ் பண்றியா?அதை மட்டும் சொல்லு” என அவள் ஆவலாக கேட்க,

 

அவனுக்கும் இப்போதே தன் காதலை சொல்லி அவளை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிக்க ஆசை தோன்றினாலும், நிதர்சனத்தை புரிந்து கொண்டு அவளிடம் தன்மையாகவே ,”லட்டு இப்போ லவ் பண்ற வயசெல்லாம் இல்லை..ஒழுங்கா படிச்சோமோ டோரா புஜ்ஜி பார்த்தோமான்னு மட்டும் இரு.. இதெல்லாம் பின்னாடி பார்த்துக்கலாம்..மனசுல எதையும் போட்டு குழப்பிக்காம போய் அஷ்வின் கூட சண்டை போடு ஓடு” என செல்லமாக அவள் தலையை கலைத்து விட்டுக் கூற,

 

அவளுக்கும் அது சரியென்று பட்டாலும் அவன் ஆமாம் என்று மட்டும் சொல்லி விட்டால் போதும் பின்பு அதைப் பற்றியே பேசாமல் விட்டு விடலாம் என நினைத்தவள் மீண்டும் மீண்டும் அதையே கேட்க, அவனும் பொறுமையாக அவளுக்கு அனைத்தையும் புரிய வைத்தான், தன் காதலை மட்டும் கூறாமலே.

 

 

அவளும் கடுப்போடே ,” நீ பண்ணாலும் பண்ணலைனாலும் நான் தான் உன் பொண்டாட்டி அதை உன் மனசுல நல்லா ஏத்தி வச்சுக்கோ ..என்னை தவிர வேற எவளையாச்சும் லவ் பண்றேன்னு கூட்டிட்டு வந்த அவளை கொன்னு புதைச்சிருவேன்” என மிரட்டியவள் அவன் அதிர்ந்து நிற்பதைப் பார்த்து சிரித்துக் கொண்டே கீழே சென்று விட்டாள்.

 

அவள் சென்றதும் அவள் சொல்லிவிட்டுச் சென்ற காதலை எண்ணி அவன் தான் அவள் மேல் மேலும் பைத்தியமாகி மகிழ்ச்சியில் என்ன செய்வது எனத் தெரியாமல் அங்கும் இங்கும் ஓடி துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தான்.

 

அவன் அவள் வயதைக் கருத்தில் கொண்டு இன்று சொல்லாமல் விட்ட காதலால் பல இன்னல்களை இவர்கள் மட்டுமல்லாது இவர்கள் குடும்பமே அனுபவிக்க வேண்டி வரும் என முன்பே தெரிந்திருந்தால் ஹரியும் தன் காதலை சொல்லியிருப்பானோ??

 

 

அவனிடம் காதலை சொல்லிவிட்டு வந்தவளுக்கு அவன் தனக்கு தான் என மனதில் அசைக்க முடியாத அளவிற்கு உறுதி இருந்ததால் அவன் காதலைச் சொல்லாதது பெரிதாக தெரியவில்லை, அந்த உறுதி சிந்தியாவை மறுபடியும் பள்ளி திறக்கும் போது காணும்வரை மட்டுமே நிலைத்தது.

 

பள்ளி திறந்ததும் முதல் நாளே அவள் வந்து தான் கொடுத்த லெட்டரைப் பற்றி வினவி ஸ்ரீயை கடுப்பேத்த, ஸ்ரீயோ அவளை திட்டியது மட்டுமல்லாமல் தானும் ஹரியும் தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறோம் என கூடுதல் தகவல் வேறு கொடுத்துவிட,

 

அதில் சிந்தியாவிற்கு ஹரியின் மேல் இருந்த ஈர்ப்பு இப்போது வெறியாக உருமாறியது. அவனை எப்படியாவது அடைந்து காட்டுவேன் என ஸ்ரீயிடம் சபதமிட்டவள் அதற்கு என்ன செய்யலாம் என திட்டம் தீட்ட ஆரம்பித்தாள்.

 

அவள் திட்டத்தில் எலியாய் வந்து சிக்கியது சந்துவே. ஆம் அவள் ஹரியைப் பற்றி அறிந்து கொண்டதன் படி அவனுக்கு சந்துவின் மேல் இருக்கும் அளவு கடந்த அன்பும், சந்துவிற்கும் ஸ்ரீக்கும் இருக்கும் இந்த மௌன போராட்டமும் சிந்தியாவிற்கு உள்ளங்கையை நெல்லிக்கனியாய் அமைந்துவிட, அவள் தன் திட்டத்தை அழகாக தீட்ட ஆரம்பித்து அதை கவனமாக செயல்படுத்த ஆரம்பித்தாள்.

 

திட்டத்தின் முதல் படியாக அவள் சந்துவிடம் சென்று தானாக பழக ஆரம்பித்தாள்.

 

முதலில் சந்து அவளிடம் தள்ளி நின்றே பழகினாள் அவள் கேட்டதற்கு மட்டும் பதில் கூறுபவள் மறந்தும் வேறெதைப் பற்றியும் தானாக அவளிடம் சென்று பேசியதில்லை.

 

எறும்பு ஊர ஊர கல்லும் தேயும் என்பது போல் சந்துவின் மனமும் அவளின் அன்பான வார்த்தைகளில் மயங்கியது அது நடிப்பு எனத் தெரியாமல்.

 

வெளி உலகைப் பற்றி ஒன்றும் தெரியாமல் கைக்குள்ளே வளர்ந்த குழந்தையான சந்துவிற்கு உண்மையான அன்பிற்கும் பொய்யான நடிப்பிற்கும் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியாமல் போனது துரதிர்ஷ்ட்டமே.

 

முதலில் அவளிடம் அன்பொழுக பேசிய சிந்தியா அடுத்த கட்டமாக தனக்கு ஹரி மீதுள்ள விருப்பத்தை மறைமுகமாக நாளும் அவளுக்கு வெளிப்படுத்தினாள்.

 

 

சந்துவிற்கும் , இவளுக்கு தன் அண்ணனை பிடித்திருக்கிறது எனும் அளவிற்கு புரிந்தது.

 

சந்துவிடம் பேசாவிடினும் அவள் நலனில் அக்கறை கொண்ட ஸ்ரீ , சிந்தியாவுடனான பழக்கத்தைக் கண்டு அவளிடம் சேராதிருக்கும் படி எச்சரித்தாள்.

 

ஸ்ரீக்கும் இவர்களின் பழக்கம் பற்றி தெரிந்தவுடனேயே மனதிற்கு ஏதோ நெருடலாகவே இருந்தது, இருந்தும் அவள் ஹரியின் மீதுள்ள நம்பிக்கையால் இந்த சிந்தியாவால் ஒன்றும் செய்ய முடியாது என அதை பெரிதாய் கண்டுகொள்ளவில்லை.

 

இப்போது கூட அவள் சந்துவை எச்சரித்ததர்கு காரணம் சிந்தியாவால் இவளுக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்ற பயத்தில் தான், ஆனால் இதை உபயோகப்படுத்திக் கொண்ட சிந்தியா சந்துவின் மனதில் மெதுவாக ஸ்ரீயைப் பற்றி தவறான எண்ணங்களை விதைக்க ஆரம்பித்தாள்.

 

ஸ்ரீக்கு சந்துவை பிடிக்கவில்லை, அதனால் அவளை ஹரி திருமணம் செய்து கொண்டாள் உன் அண்ணனிடமிருந்து உன்னை பிரித்து விடுவாள் என்று ஒரு பக்கம் துர்போதனைகளை வழங்குபவள், இன்னொரு புறம் அவளுக்கு சந்து மேல் அளவு கடந்த பாசம் உள்ளது என அவளை மயக்கினாள்.

 

மெல்ல மெல்ல அவள் சொன்னதை சந்துவும் நம்ப ஆரம்பிக்க, அவளுக்கு ஸ்ரீயைக் கண்டாலே பயமாக இருந்தது. தன் அண்ணனை தன்னிடம் இருந்து பிரிக்கப் போகிறாள் என்பதே அவள் மனதில் பதிந்து விட, இது நடக்காமல் இருக்க என்ன செய்ய என குழம்பிப்போனாள்.

 

 

இரண்டு வருடமாக தான் பாடுபட்டது இன்று நிகழப்போகிறது என நினைத்த சிந்தியா பன்னிரெண்டாம் வகுப்பு கடைசி தேர்வு முடிந்ததும் சந்துவை சந்தித்து தன் திட்டத்தின் இறுதி கட்டத்தை செயல்படுத்தினாள்.

 

சந்துவிடம் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு வந்தவள், தான் ஹரியைக் காதலிப்பதாகவும், தான் அண்ணியாக வந்தால் அவளையும் ஹரியையும் பிரிக்க மாட்டேன் உன்னை கண்ணுக்குள் வைத்து தாங்கிக் கொள்வேன் என்றும், நீ தான் உன் அண்ணனிடம் இதை சொல்லி இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என சத்தியம் வாங்க, முதலில் மறுத்த சந்துவை தன் பேச்சால் வசியம் செய்து ஒரு வழியாக சத்தியம் வாங்கி அனுப்பி வைத்தாள்.

 

சந்து தன் அண்ணனிடம் இது குறித்து எப்படி பேசுவது எனத் தெரியாமல் அவள் நாட்களை கடத்த, தினமும் போன் செய்து அவள் சொன்னாளா இல்லையா என விசாரித்த சிந்தியா இனி இது காரியத்திற்கு ஆகாது என நினைத்து , இப்போது நீ சொல்லி எங்களை சேர்த்து வைக்கவில்லை என்றால் ஹரி இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம் இன்றே நான் செத்து போகிறேன் என மிரட்ட, அதில் பயந்து போன சந்து கண்டிப்பாக இன்றே பேசி விடுகிறேன் என அவளை சமாதானப்படுத்தினாள்.

 

அன்று வார விடுமுறை ஆதலால் மொத்த குடும்பமும் தாமரைக் குளத்தில் தான் இருந்தது.

 

மெதுவாக ஹரியிடம் சென்ற சந்து பயத்தோடே ,”அண்ணா உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்” எனக் கூற,

 

புருவம் சுருக்கி யோசித்த ஹரி,”சரி வா தோட்டத்துக்கு போலாம்” என அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

 

ஹரியைத் தேடி அங்கு வந்த ஸ்ரீ அவன் வெளியே செல்வதைக் கண்டு அவளும் அவனை பின் தொடர்ந்தாள்.

 

இது தெரியாமல் தோப்பிற்கு வந்த சந்து அவனிடம்,” உன் கிட்ட சிந்தியா ஒன்னு சொல்ல சொன்னாங்க” என பயத்தில் எப்படி பேச என தெரியாமல் முதலிலே சிந்தியா பேரை தவறவிட, அதைக் கேட்ட ஸ்ரீ, என்னவாக இருக்கும் என அங்கிருந்த மரத்திற்குப் பின் ஒளிந்து அவர்கள் சம்பாஷனைகளை கேட்கலானாள்.

 

“யாரு சிந்தியா என்ன சொன்னாங்க சந்து தெளிவா சொல்லு” என ஹரி வினவ,

 

பேந்த பேந்த முழித்த சந்து, சிந்தியா மிரட்டியது நினைவிற்கு வர, பயத்தினூடே,” அது வந்து அவங்க உன்னை லவ் பண்றாங்களாம் ..நீ அவங்களையே கல்யாணம் பண்ணிக்கோ அண்ணா நீ ஸ்ரீ அக்கா..இல்லை இல்லை ஸ்ரீயை பண்ணிக்கிட்டா அவங்க என்னை உன் கிட்ட இருந்து பிரிச்சிருவாங்க. ஆனா சிந்தியா அப்படி இல்லை ..ப்ளீஸ் அண்ணா எனக்காக அவங்களை கல்யாணம் பண்ணிக்கோ அவங்க உன் மேல உயிரையே வச்சிருக்காங்க” என கடகடவென ஒப்பித்து முடித்தாள்.

 

அவள் குனிந்து கொண்டே பேசிக்கொண்டிருந்ததால், அவளின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஹரியின் முகம் கோபத்தில் கொழுந்து விட்டெரிந்ததை அவள் கவனிக்கவில்லை, ஸ்ரீயும் ஹரிக்கு பின்னால் ஒளிந்திருந்ததால் அவளுக்கும் அவனின் முகமாற்றங்கள் தெரியாமல் போனது விதியின் சதியே.

 

அவள் சொன்னதைக் கேட்டு ஸ்ரீக்கு கட்டுக்குள் அடங்கா ஆத்திரம் வந்தாலும், ஹரியின் பதிலுக்காக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திருந்தாள்.

 

அவளின் நேரம் அப்போது பார்த்து ஹரிக்கு, “கார்த்திக் பைக்கில் ஸ்கிட் ஆகி கீழே விழுந்து அடிபட்டிருக்கிறான்” என போன் கால் வர, சந்துவிற்கு ஸ்ரீயைப் பற்றி தெளிவாக புரிய வைக்க இது நேரமில்லை வந்து அவளின் மனதிற்கு புரியுமாறு பொறுமையாக எடுத்துச் சொல்லலாம் என நினைத்தவன் , உணர்ச்சியற்ற குரலிலே, “வீட்டுக்கு போ சந்து, ஈவ்னிங்க் இதை பத்தி பேசலாம்” என சந்துவிடம் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டான்.

 

ஆனால் அவன் செயலில் ஸ்ரீ தான் வலியில் துடித்துப் போய் அங்கேயே மண்டியிட்டு அமர்ந்துவிட்டாள்.

 

சரியாக அதே சமயம் அவள் மூளையில் சிறுவயதிலிருந்து ஹரி அடிக்கடி இவளிடம் சொல்லும் வார்த்தைகள் வேறு அவள் காதில் வந்து ஒலித்தது.

 

“ஸ்ரீ நீ ஏன் சந்து கூட போய் போட்டி போடுற அவ வேற நீ வேற ..அவ என்னோட தங்கச்சி அவ கூட நீ போட்டி போடலாமா..ஆதிரா மாதிரி தான அவளும் உனக்கு ..நீ ஆதிகிட்ட நடந்துக்கிற மாதிரி இவ கிட்டையும் அன்பா பேசிப் பழகு டா..நான் எல்லாரு கூட பேசிப் பழகுனாலும் யாரும் நீ ஆய்ர முடியாது..நீ என்னைக்குமே எனக்கு ஸ்பெஷல் தான் அதுனால இப்படி பிஹேவ் பண்ணாத டா ப்ளீஸ்” என அவன் சிறுவயதிலிருந்து பலமுறை இவளிடம் எடுத்துக் கூறினாலும்,

 

இவளின் அடுத்த வார்த்தை ,”அப்போ உனக்கு நான் முக்கியமா இல்லை சந்து முக்கியமான்னு சொல்லு?” என்பதாகத் தான் இருக்கும்.

 

அவனும் பொறுமையாக மீண்டும் அவள் செய்து கொண்டிருப்பது தவறு என பலமுறை எடுத்துக் கூறி அவளை மாற்ற முயற்சி செய்தும் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.

 

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என அதே கேள்வியை அவளும் சலிக்காமல் ஒவ்வொரு முறையும் அவனிடம் கேட்க ஒருநாள் அவன் இருந்த கடுப்பில் ,” எனக்கு சந்து தான் முக்கியம் போதுமா!!” என கத்தி விட்டான்.

 

இப்போது அந்த வார்த்தை தேவையில்லாமல் அவள் மனதில் குடைந்து கொண்டிருக்க,அவள் சிந்தனைகள் தரிகெட்டு ஓடியது.

 

“அப்போ அவனுக்கு என்னை பிடிக்கலையா?? நான் தான் அவன் மேல பைத்தியமா இருந்தேனா?? அதனால் தான் அன்று நான் காதலை சொன்ன போது கூட அவன் அமைதியாக இருந்தானா?? நான் தான் முட்டாள் மாதிரி அவனும் தன்னை காதலிக்கிறான் என நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறேனா??கடைசில அவனுக்கு அந்த சந்து தான் முக்கியம் அவ சொன்னதும் அந்த சிந்தியாவை இப்போ கட்டிக்க போறான்” என பலவாரு குழம்பி அழுது தீர்த்தவளின் கோபம்,விரக்தி , ஏமாற்றம் அனைத்தும் சந்துவின் மேல் கோபமாக திரும்பியது.

 

ஆவேசமாக எழுந்தவள் வீட்டிற்குள் சென்று அங்கு ஹாலில் தனியாக அமர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருந்த சந்துவின் முன் போய் காளியாக நின்றாள்.

 

தன் முன் சிவந்த கண்களுடன் கோப மூச்சுகளுடன் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீயைக் கண்டு சந்து பயத்தில் எழுந்து நிற்க, அடுத்த நிமிடம் அவள் கன்னத்தில் ஸ்ரீயின் ஐந்து விரல்களும் பதிந்திருந்தது.

 

அந்த நேரம் வீட்டில், ஆதிராவும் கலைவாணியும் மட்டுமே இருக்க, மற்றவர்கள் எல்லாம் கோவிலுக்கும் வயல்களை பார்வையிடவும் சென்றிருந்தனர்.

 

இவள் அடித்த சப்தம் கேட்டு இருவரும் ஹாலுக்கு ஓடி வர, அங்கு கன்னத்தைப் பிடித்துக் கொண்டு சந்து அழுது கொண்டிருந்தாள்.

 

“என்னாச்சு சந்துமா” என அவர் அங்கு வர,

 

“அத்தை நீங்க இதுல தள்ளியே இருங்க..உங்க பொண்ணு கிட்ட எனக்கு நிறைய கேட்க வேண்டி இருக்கு” என அதிகாரமாக ஸ்ரீ கூற, அவளின் இந்த புதிய அவதாரம் அவருக்குமே பயமாக இருந்தது.

 

அவருக்கு என்றுமே ஸ்ரீயின் மேல் தனிப்பாசம் உண்டு என்பதால் அவளின் பேச்சிற்கிணங்கி சந்துவை விட்டு தள்ளிச் சென்று சந்துவின் மனதில் முதல் ஈட்டியை இறக்கினார்.

 

தன் அன்னைக்கு தன்னை விட அவளே முக்கியமா என சந்து நினைக்க, அதைப் பற்றி யோசிக்க கூட விடாமல் ஸ்ரீயின் அடுத்த கேள்வி அவளைக் குத்திக் கிழித்தது.

 

“நீ ஹரிக்கு தங்கச்சியா இல்லை மாமாவா??” என கேட்க, கலைவாணியே அவள் பேச்சில் ஆடித்தான் போனார்.

 

ஆதிரா,”ஸ்ரீ கொஞ்சம் பார்த்து பேசு” என அவளைக் கண்டிக்க,

 

அதில் ஆத்திரம் வரப்பெற்ற ஸ்ரீ, இன்று தோட்டத்தில் தான் பார்த்த காட்சியையும் ஹரியின் மேல் தனக்குள்ள காதலையும் அழுகையுடன் கூறியவள்,”இப்போ சொல்லு நான் பேசுனது என்ன தப்பு என் ஹரியை இவ என் கிட்ட இருந்து பிரிச்சு அந்த சிந்தியா கூட சேர்க்க நினைக்கூறதுக்கு பேரு வேற என்ன சொல்லு …சொல்லு” என வெறி பிடித்தவள் போல் கத்தினாள்,

 

அவர்களுக்கும் இதைக் கேட்டு இதை எப்படி கையாள்வது எனத் தெரியாமல் முழித்துக் கொண்டு நிற்க,

 

ஸ்ரீயோ மீண்டும் சந்துவின் தோளைப் பற்றி உலுக்கி ,” உனக்கு நான் என்ன டி பாவம் பண்ணேன்.. உன்னை இதுவரைக்கும் அன்னைக்கு ஒரு நாளை தவிர வேற எதாச்சும் சொல்லிருக்கேனா.. ஆனா நீ தான் …நீ தான் என் வாழ்க்கையை என் சந்தோஷத்தை என்னைக்கும் கெடுத்துட்டு இருக்க.. என் ஹரியை எனக்கு எவ்ளோ பிடிக்கும்னு தெரியுமா உனக்கு தெரியுமா??” என ஆங்காரமாக கத்திய ஸ்ரீ,

 

 

அவள் அதிர்ந்து நிற்பதையும் பொருட்படுத்தாமல், ” என் ஹரிக்காக இப்போ கூட என் உயிரை தருவேன்..என் அம்மா அப்பா தம்பி, தாத்தா, பாட்டி இவங்க எல்லாரையும் விட எனக்கு ஹரியை மட்டும் தான் டி பிடிக்கும்.. ஆனா அவனுக்கு உன்னை பிடிக்கும்… சின்ன வயசுல இருந்தே என்னோட போட்டி போட வந்து பிறந்தவ நீ.. ஏன் டி நீ இந்த வீட்டுல பிறந்த நீ வந்ததுக்கு பின்னாடி தான் ஹரி என்னை விட்டுட்டு போனான்.. முன்னாடி என்னை மட்டும் தான் கொஞ்சுவான்..நீ வந்ததுக்கு அப்பறம் நீ தான் அவனுக்கு முக்கியமா போய்ட்ட.. உன்னால…. நீ நொண்டியா போனதுனால என் ஹரி அழுதான் தெரியுமா அது எனக்கு எப்படி வலிச்சுச்சுன்னு தெரியுமா …யாரோ கத்தியை எடுத்து நெஞ்சுல குத்துன மாதிரி இருந்துச்சு” என கூறியவள் இப்போது அது நடந்தது போல் இன்னும் அந்த வலியை உணர்ந்து அழ,

 

அவளைக் கண்டோருக்கும் எப்போதே சின்ன வயதில் நடந்ததை இன்னும் மறக்காமல் இப்படி துடிக்கிறாளே என கண்ணீர் வந்தது.

 

சந்துவின் மனம் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கித் தவித்தது ,”தன்னால் தான் அனைவருக்கும் கஷ்டம்..ஹரி அண்ணா, ஸ்ரீ இப்படி அனைவரும் தன்னால் எவ்வளவு துன்பத்தை அனுபவித்துரிக்கிறார்கள்” என நினைத்தவளின் மனம் தறிகெட்டு ஓட,

 

மீண்டும் அழுகையை நிறுத்திவிட்டு ஸ்ரீ தொடங்கினாள்.

 

“அவனுக்கு என்னைக்குமே என்னை விட உன்னை தான் பிடிச்சிருக்கு, நான் தான் முட்டாள் மாதிரி அவனுக்கு என்னை பிடிக்கும்னு நம்பிட்டு இருந்திருக்கேன்..ஏன் டி எங்க வாழ்க்கையில வந்த… உன்னால தான் எல்லாமே…உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கலை… நீ ஏன் பிறந்த என்னை இப்படி உயிரோட சாகடிக்கவா?? தயவு செஞ்சு என் கண்ணு முன்னாடி நிக்காத உன்னை கொன்னுற போறேன்..இங்க இருந்து போ… போ!!!” என உச்சாஸ்ததியில் கத்தினாள் ஸ்ரீ.

 

 

கோபத்தில் தான் பேசிய வார்த்தைகளின் வீரியம் தெரியாமல் வார்த்தைகளில் அமிலத்தை அள்ளித் தெளித்தவள் அப்படியே மயங்கிச் சரிந்தாள்.

 

அவ்வளவு நேரம் அவள் பேசியதில் அதிர்ச்சியில் நின்றிருந்த கலையும் ஆதிராவும் சந்துவை மறந்துவிட்டு இவள் மயங்கியதும் பதறி இவளிடம் ஓடி வந்தனர்.

 

ஆனால் சந்துவோ மனதில்,”தான் தான் அனைவருக்கும் பாரமாக இருக்கிறோம் இன்னும் ஒரு நிமிடம் கூட இந்த உலகத்திலே இருக்கக்கூடாது” என ஜபம் போல் கூறிக்கொண்டவளின் மனதில் ஸ்ரீ பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருக்க, அவர்களைக் கண்டு கொள்ளாமல் வீட்டிலிருந்து வெளியேறினாள் அங்கே தனக்கு காத்த்திருக்கும் ஆபத்தைப் பற்றி அறியாமல்!!!!

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்