Loading

சகுந்தலாவின் வார்த்தைகள் துஷ்யந்தின் இதயத்தை சுக்குநூறாக உடைத்து விட்டன.

துஷ்யந்த் சகுந்தலாவையே திறந்த கண் மூடாமல் வெறிக்க, அவளோ அவனின் சுட்டெரிக்கும் பார்வையைத் தாங்க இயலாமல் தலை குனிந்தாள்.

“எக்ஸ்கியூஸ் மீ… மே ஐ கம் இன்?” என்ற குரலில் சகுந்தலாவிடம் இருந்து பார்வையை அகற்றிய துஷ்யந்த், “யெஸ். கம் இன்…” என்றான் அறை வாயிலைப் பார்த்து.

சகுந்தலா அவசரமாக அழுது சிவந்திருந்த தன் முகத்தைத் துடைத்துக்கொண்ட போதும் அவள் அழுத தடம் அப்படியே தெரிந்தது.

“சர்ப்ரைஸ்…” என்றவாறு உள்ளே வந்த நிரஞ்சனா முகம் இறுகிப் போய் நின்றிருந்த துஷ்யந்தையும் கண்ணீர் மல்க அமர்ந்திருந்த சகுந்தலாவையும் குழப்பமாக நோக்கினாள்.

“சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” எனக் கேட்டாள் நிரஞ்சனா எங்கே துஷ்யந்தின் வேலை நேரம் வந்து தொந்தரவு செய்து விட்டோமோ என்ற எண்ணத்தில்.

“ச்சே ச்சே… இப்போ ஃப்ரீ தான். வா…” என நிரஞ்சனாவை உள்ளே அழைத்தான் துஷ்யந்த் தன்னை ஓரளவு சமன் செய்து கொண்டு.

“என் ஃப்ரெண்ட் ஒருத்தியோட அப்பா இங்கே தான் அட்மிட் ஆகி இருக்கார். அதான் அவர பார்த்துட்டு போறதோட உங்களுக்கும் ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாமேன்னு.” எனப் புன்னகையுடன் கூறிய நிரஞ்சனாவின் குரலிலேயே அவ்வளவு மென்மை.

இவ்வளவு நேரமும் தலை குனிந்து அமர்ந்து இருந்த சகுந்தலா அதன் பின் தான் தலையை நிமிர்த்தி நிரஞ்சனாவை அவதானித்தாள்.

துஷ்யந்திற்கு அருகில் நின்றிருந்தவளைக் கண்டதும் தான் பரிமளம் துஷ்யந்திற்கு பார்த்திருக்கும் பெண் என்று நிரஞ்சனாவின் புகைப்படத்தை காட்டியது சகுந்தலாவிற்கு நினைவில் வந்தது.

இவ்வளவு நேரமும் கோபம் தலைக்தேறி முகத்தைக் கடுமையாக வைத்திருந்த துஷ்யந்த் நிரஞ்சனாவுடன் பேசும் போது அனைத்தையும் விடுத்து முகத்தை இளக்கமாக வைத்திருந்தான்.

நிரஞ்சனா துஷ்யந்தைப் பார்த்த பார்வையிலும் கூட காதல் கொட்டிக் கிடந்தது.

சகுந்தலாவுக்கோ முள் மீது அமர்ந்து இருக்கும் உணர்வு.

தன் இயலாமையை எண்ணி அவ்வளவு வெறுப்பாக இருந்தது அவளுக்கு.

அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் சகுந்தலா எழுந்து கிளம்புவதற்தாக அறை வாயிலை நோக்கி மெல்ல அடி எடுத்து வைத்தாள்.

“யார் இவங்க? ஏன் அழுதுட்டு இருக்காங்க?” எனக் கேட்ட நிரஞ்சனாவுக்கு சகுந்தலாவின் வாடி வதங்கிய தோற்றம் மனதுக்கு கஷ்டமாக இருந்தது.

“நாட் தட் மச் இம்பார்ட்டன்ட். என் கிட்ட ட்ரீட்மென்ட் பார்க்குற ஒரு அஞ்சு வயசு சின்ன பையனோட அம்மா. அவங்க பையனோட ட்ரீட்மென்ட் விஷயமா பேசிட்டு இருந்தோம். எல்லாமே பேசி முடிச்சிட்டோம். இதுக்கு மேல பேச எதுவுமே இல்ல. சொல்ல வேண்டியது எல்லாப் சொல்லி ஆச்சு. ஆஃப்டர் ஆல் ஐம் ஜஸ்ட் அ டாக்டர்.” என்ற துஷ்யந்தின் குரலில் அவ்வளவு கடுமை.

அதனைக் கேட்ட சகுந்தலாவுக்கு துஷ்யந்த் தன்னைத் தான் குத்திக் காட்டுகிறான் எனத் தெளிவாகவே புரிந்தது.

வேகமாக அங்கிருந்து கிளம்பிச் சென்றவளுக்கு அழுகை அழுகையாக வந்தது.

ஆனால் இருக்கும் இடம் கருதி தன்னை முயன்று கட்டுப்படுத்தினாள்.

சகுந்தலா சென்றதும் பெருமூச்சை அறை வாயிலைப் பார்த்த துஷ்யந்தின் கண்களில் அவ்வளவு வலி.

தன் மனம் கவர்ந்தவனின் கண்களில் தெரிந்த வலியை நிரஞ்சனாவுமே கண்டு கொண்டாள்.

வெகு தயக்கத்துடன் துஷ்யந்தின் தோளில் கரம் பதித்தவள், “என்னாச்சுங்க? ஏதாவது பிரச்சினையா? ஏன் முகம் எல்லாம் இவ்வளவு டல்லா இருக்கு?” எனக் கேட்டாள் பரிவு.

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல நிரு. டாக்டர்ஸோட முக்கிய ரூல் பேஷன்ட் கூட எந்த எமோஷனல் பான்டிங்கும் வெச்சிருக்க கூடாதுங்குறது. ஆனாலும் கூட சில பேர் கூட காரணமே இல்லாம நெருக்கம் ஆகிடுறோம். அதுக்கு அப்புறம் அவங்க பிரிவு நம்மளால ஏத்துக்க முடியாத ஒன்னா மாறிப் போயிடும்.” என்றான் துஷ்யந்த் வரவழைக்கப்பட்ட புன்னகையுடன்.

“இதுக்குப் போய் வருத்தப்படலாமாங்க? உங்களுக்கு என்ன இதெல்லாம் புதுசா? டெய்லி எத்தனை பேஷ்ன்ட்ட பார்க்குறீங்க. எல்லாரோட பிரச்சினையும் உங்க தலைல எடுத்து போட்டுக்கிட்டா அப்புறம் உங்க நிம்மதி தான் போய்டும்.” என்று கூறிய நிரஞ்சனாவிடம் பதில் அளிக்க முடியாமல், ‘உன் கிட்ட எப்படி சொல்லுவேன் நிரு பரத்த என்னால அப்படி பார்க்க முடியலன்னு.’ என்றான் துஷ்யந்த் மனதுக்குள்.

“அச்சோ மறந்தே போய்ட்டேன் பாருங்க. இன்னைக்கு காயு ஆசைப்பட்டு கேட்டான்னு இறால் தொக்கு செஞ்சிருந்தேன். அதான் உங்களுக்கும் ரொம்ப பிடிக்குமேன்னு கொண்டு வந்தேன்.” என்ற நிரஞ்சனாவின் குரலில் தன்னிலை அடைந்த துஷ்யந்த், “அப்போ உன் ஃப்ரெண்டோட அப்பாவ பார்க்க வந்தது எல்லாம் சாக்கு தான். இதை எனக்கு தரணும்னு தான் நீ வந்திருக்க. கரெக்ட்டா?” எனக் கேட்டான் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு.

நிரஞ்சனாவோ மாட்டிக் கொண்டு விட்டோமே எனத் திருட்டு முழி முழிக்க, துஷ்யந்திற்கே அவளைப் பார்க்க பாவமாக இருந்தது.

“சரி கொண்டு வா. நீ இவ்வளவு ஆசையா எனக்காக சமைச்சு கொண்டு வந்திருக்க. அதை டேஸ்ட் பண்ணி பார்க்கலன்னா எப்படி?” என துஷ்யந்த் கூறவும் உற்சாகம் அடைந்த நிரஞ்சனா, “நிஜமா தான் சொல்றீங்களா? இதோ இப்போவே சர்வ் பண்ணுறேன்.” என்றவள் கையோடு கொண்டு வந்திருந்த தட்டில் துஷ்யந்திற்கு உணவைப் பறிமாறினாள்.

“எல்லாம் ப்ளானோட தான் வந்திருக்க.” என்றவாறு துஷ்யந்த் சாப்பிட அமர்ந்தவன் ஒரு வாய் சாப்பிட்டு ருசி பார்த்வன் அசந்து போய் விட்டான்.

“வாவ் நிரு… செம்மயா இருக்கு இறால் தொக்கு. எங்க அம்மாவுக்கு அப்புறம் நான் சாப்பிட்ட பெஸ்ட் இறால் தொக்கு இது தான். நான் கொடுத்து வெச்சவன் தான்.” என்றான் துஷ்யந்த் தன்னை மறந்து சிலாகித்தவாறு.

அதனைக் கேட்டு நிரஞ்சனாவின் முகமோ வெட்கத்தில் சிவந்தது.

நிரஞ்சனாவிடம் இருந்து பதில் ஏதும் வராமல் போகவும் துஷ்யந்த் நிமிர்ந்து அவளின் முகம் நோக்க, நிரஞ்சனாவோ வெட்கத்தில் சிவந்த முகத்துடன் கனவுலகிற்குச் சென்றிருந்தாள்.

அதன் பின்னர் தான் துஷ்யந்திற்கு தான் கூறிய வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.

தன் ஒரு வார்த்தையே நிரஞ்சனாவிற்கு பெரிதாகத் தோன்ற, துஷ்யந்திற்குத் தான் தன் மீது இத்தனை அன்பை வைத்திருப்பவளின் அன்புக்கு தான் தகுதியானவனா என்ற சந்தேகம் தோன்றியது.

கூடவே சகுந்தலாவின் வார்த்தைகளும் நினைவுக்கு வர, அவனின் முகம் இறுகியது.

சகுந்தலாவின் நடவடிக்கைகளுக்குப் பின்னால் ஏதாவது பெரிய காரணம் இருக்கும் என்று துஷ்யந்திற்குப் புரிந்தாலும் அவனின் காயம் பட்ட இதயம் அதனைத் தவறாகவே எண்ணச் செய்தது.

தான் பரத் மீது வைத்த சுயநலமற்ற அன்பைப் புரிந்து இருந்தும் தன்னை விலக்கி நிறுத்திப் பேசியவளைப் பற்றி எண்ணுவதை விட, தன் மீது இத்தனை அன்பைக் கொட்டுபவளுக்கு தன்னால் முடிந்தளவாவது அன்பைத் திருப்பிக் கொடுக்கலாம் என உறுதி எடுத்தான் துஷ்யந்த்.

இங்கோ துஷ்யந்தின் அறையை விட்டு வெளியே வந்த சகுந்தலா ஒரு ஓரமாக அமர்ந்து கண்ணீர் சிந்திக் கொண்டு இருந்தாள்.

சற்று நேரத்திலேயே ரிஷிகேஷ் பரத்துடன் அங்கு வர, முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்து நின்ற சகுந்தலா, “ரிப்போர்ட்?” என்றாள் கேள்வியாய்.

சகுந்தலாவின் அழுது சிவந்த முகத்தை சந்தேகமாக நோக்கிய ரிஷிகேஷ், “நாளைக்கு காலைல தான் எடுக்கலாம்னு சொன்னாங்க.” என்றான்.

சரி எனத் தலையசைத்த சகுந்தலாவிடம் தாவிய பரத், “மம்மி சாக்லேட் அங்கிள் கிட்ட என் ஃப்ரெண்ட்ஸ் பத்தி சொல்லலயே. வாங்க போகலாம்.” என்கவும், “அவர் பிஸியா இருக்கார். நாம நாளைக்கு வரலாம்.” என்ற சகுந்தலா பரத்தைத் தூக்கிக் கொண்டு வெளியேறினாள்.

ரிஷிகேஷோ தன்னை முந்திக் கொண்டு சென்ற சகுந்தலாவைப் பார்த்து விட்டுத் திரும்பி துஷ்யந்தின் அறையை சில நொடிகள் வெறித்தான்.

அதற்குள் ரிஷிகேஷிற்கு ஒரு அழைப்பு வர, அவனின் கவனம் அங்கு திரும்பியது.

தன் வீட்டை அடைந்த சகுந்தலா பரத்தை அவனது அறையில் உறங்க வைத்து விட்டு ஜன்னல் அருகே வந்து நின்று அந்தி வானத்தை வெறித்துப் பார்த்தாள்.

அவளின் நினைவுகள் எல்லாம் சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை நோக்கிச் சென்றன.

சகுந்தலாவும் பரத்தும் ஊருக்குச் சென்று இரு நாட்கள் கழித்து தாயும் மகனும் சேர்ந்து ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் சென்றிருந்தனர்.

அங்கு சிறுவர்களுக்கு விளையாடவென ஒரு தனி இடம் இருக்க, பரத் ஆசைப்படவும் அவனை அங்கு விளையாட விட்டு விட்டு பரத்திற்கு சாப்பிட ஏதாவது எடுத்து வரலாம் என சற்றுத் தள்ளி இருந்த கஃபேயினுள் நுழைந்தாள் சகுந்தலா.

அப்போது எதேச்சையாக அங்கு அவளின் பெற்றோரைக் கண்டவளுக்கு அனைத்தும் மறந்து போக, “அம்மா… அப்பா…” என அழைத்தவாறு அவர்களின் முன்னால் சென்று நின்றாள்.

சகுந்தலாவை அவர்கள் அங்கு எதிர்ப்பார்க்கவில்லை என அவர்களின் அதிர்ச்சியே சகுந்தலாவிற்கு காட்டிக் கொடுத்தது.

ஆனால் எல்லாம் சில நொடிகள் தான்.

“எப்படி ம்மா இருக்கீங்க?” என ஆவலாகக் கேட்ட சகுந்தலா அவளது தாய் சரசுவை அணைக்கப் போக, பட்டென அவளைத் தள்ளி விட்டு அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் அவர்.

“அம்மா…” என அழைத்தவாறு சகுந்தலா அதிர்ச்சியில் உறைய, “யாருக்கு யாரு டி அம்மா? ச்சீ… உன் வாயால அப்படி சொல்றத கேட்குறதே அசிங்கமா இருக்கு.” என்றார் சகுந்தலாவின் தந்தை மாதவன்.

“அப்பா…” என்றவாறு சகுந்தலா கண் கலங்க, “ச்சீ நடிக்காதே வாயை மூடு. உன்ன எங்க பொண்ணுன்னு சொல்லவே அசிங்கமா இருக்கு. நீ இவ்வளவு கேவலம் கெட்ட ஒருத்தியா இருப்பன்னு நான் நினைச்சி கூட பார்க்கல. தப்பெல்லாம் உன் மேல வெச்சிக்கிட்டு மாப்பிள்ளய பத்தி என் கிட்டயே தப்பா சொன்ன? நீ எல்லாம் சோத்துல உப்பு போட்டு தான் சாப்பிடுறியா? இந்தப் பிழைப்புக்கு நீ தொங்கிட்டு சாகலாம்.” என்றார் சரசு வெறுப்பாக.

எந்தவொரு பிள்ளையும் தன் பெற்றோரிடம் இருந்து கேட்கக் கூடாத வார்த்தைகள் அவை.

ஏற்கனவே மனதளவில் உடைந்து போய் இருந்த சகுந்தலாவிற்கு தாயின் வார்த்தைகளைக் கேட்டு உயிருடன் மரித்த உணர்வு.

“எவ்வளவு தங்கமான மாப்பிள்ளை. அவர் மேல அபாண்டமா பழி சுமத்தினாயே படுபாவி. அந்த மனுஷன் எப்படி உடைஞ்சி போய்ட்டார் தெரியுமா?” என வெறுப்பைக் கொட்டினார் மாதவன்.

“இல்லப்பா… அம்மா நீங்களாவது கேளுங்க. நீங்க தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க.” என்ற சகுந்தலாவை பேச விடாது இடையிட்ட சரசு, “ஏய் ச்சீ வாய மூடு. உன் வாயால எங்கள அப்படி கூப்பிடாதே. அசிங்கமா இருக்கு. உன்ன பெத்த பாவத்துக்கு எங்கள எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்திட்டியே. நீ எல்லாம் ஏன் இன்னும் உயிரோட இருக்க? இன்னும் எவன் வாழ்க்கைய சீரழிக்க போற? வயிறு எரிஞ்சு சொல்றேன் டி. உனக்கு எல்லாம் நல்ல சாவே வராது. நாசமாத் தான் போவ நீ.” எனச் சாபம் இட்டார்.

“நீ எதுக்கு இன்னும் இந்த ******* கிட்ட பேசிட்டு இருக்க. எங்களைப் பொறுத்தவரைக்கும் எங்கப் பொண்ணு செத்துட்டா. வா போகலாம். இவ முகத்துல முழிச்சதே பாவம்.” என வார்த்தைகளைக் காரி உமிழ்ந்து விட்டு மனைவியை இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார் மாதவன்.

சகுந்தலாவோ தன்னைப் பெற்றெடுத்தவர்களின் வெறுப்பான வார்த்தைகளில் திக் பிரமை பிடித்தது போல் அதே இடத்தில் வேர் ஊன்றி நின்று விட்டாள்.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
11
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்