Loading

அத்தியாயம்-29

 

அவனைக் கண்டதும் உள்ளத்தால் குதூகலித்த ஜான், “புடிங்க சார் இவன. கையப் போட்டு என்னமா முறுக்குறான்” என்க, 

 

இரண்டு தடியர்களுக்கும் கதி கலங்கி போனது.

 

இரண்டு மூட்டைகள் கொண்ட ஸ்டிரெச்சரைத் தள்ளிக் கொண்டு வந்த பிரபா, கையில் விலங்குடன் தன் தோழனின் துப்பாக்கி முனையில் அமர்ந்திருக்கும் இரண்டு தடியர்களைக் கண்டான். 

 

அருகே இருக்கும் பெண்ணவளைக் கண்டு அவன் புருவம் சுருக்க, “உனக்கு இன்பர்மேஷன் கொடுத்த பொண்ணு” என்று சிபி கூறினான். 

 

“ஓ.. நீங்கத் தானா.. ரொம்ப தேங்ஸ்மா” என்று அவன் கூற, 

 

“எ.. என் மகி” என்றாள். 

 

இரண்டு மூட்டைகளையும் அவன் அவிழ்க்க, ஜான்விகாவின் அருகே நின்றிருந்த மதியின் ஆத்மா ஏதோ சுழலில் சிக்கி இழுபடுவதுப் போல் உணர்ந்தது.

 

“ஜானு..” என்று அவன் அலறும் குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பியவளுக்கு தங்க நிற துகள்கள் மட்டுமே தென்பட, சட்டென விழிகள் விரிய பிரபா புறம் திரும்பினாள். 

 

தனது தமையன் உள்ள மூட்டையை கீழே வைத்தவன் மதியை வெளியே எடுக்க, 

 

“மகீ..” என்ற கூவலோடு சென்று அதனை அணைத்துக் கொண்டாள்.

 

அவள் கண்களில் நீர் நில்லாது பொழிய, “மகி என்னைப் பாருடா.. மகி.. மகி” என்று அவன் கன்னம் தட்டினாள். 

 

அவளது செயல் கண்ட யாவரும் அதிர்ந்துபோக, பிரபாவுக்கு அவளது கண்ணீரைக் காண வருத்தமாக இருந்தது.

 

“மகி.. பாருடா.. ப்ளீஸ் மகி என்னைவிட்டு போயிடாத. நி..நிஜமா.. சூசைட் பண்ணிடுவேன்டா.. பாருடா” என்று அவள் அழுதுகொண்டே மிரட்ட, 

 

“ம்மா.. ஹீ இஸ் நோ மோர்..” என்று பிரபா கூறினான்.

 

அவனைக் கண்ணீரோடு நிமிர்ந்து பார்த்தவள், ‘இல்லை’ எனும்விதமாய் தலையசைத்து, “மகி.. ப்ளீஸ் பாரு மகி. நீ இல்லாம என்னால நிஜமா.. கஷ்டம்டா. பாரு மகி” என்று அழுதாள். 

 

“உங்க கூட வேற யாரும் இல்லையா?” என்று சிபி வினவ, 

 

அழுதபடி, “மகி..” என்றாள். 

 

அவளுள் அப்படியொரு பதற்றம். அவன் ஆத்மா இங்கு இல்லை எனில் மகி ஏன் கண் விழிக்கவில்லை என்று புரியாது கலங்கினாள்.

 

‘ஏன் மகி முழிக்க மாட்டேங்குற?’ என்று கண்ணீர் சிந்தியபடி அவள் அவன் மார்பில் சாய, 

 

“சாரிமா.. எங்க தனிப்பட்ட பிரச்சினைல யாரோ உங்களுக்குச் சம்மந்தமானவரையும் எடுத்துட்டு வந்திருக்காங்க” என்று பிரபா கூறினான்.

 

சட்டென ஏதோ மின்னல் வெட்டியதைப் போல் உணர்ந்தவள், நிமிர்ந்து, “யா..யார் பண்ணது?” என்று வினவ, 

 

“தெரியலை” என்றான். 

 

அந்தத் தடியர்கள் புறம் திரும்பியவள், “இ..இவங்களுக்கு தெரியும்ல?” என்று வினவ, 

 

பிரபாவின் பார்வை அவர்கள் புறம் சென்றது. 

 

“ப்ளீஸ்.. கேளுங்க.. இப்பவே கேளுங்க” என்று அவள் கூற, 

 

அந்தத் தடியனின் அலைபேசி ஒலித்தது. 

 

சிபியை முந்திக் கொண்டு ஓடியவள் அதை எடுத்து ஸ்பீகரில் போட, “டேய்.. இந்தப் பிரபா பயல ரொம்ப நேரமா காணும். அவன் எதையோ ஸ்மெல் பண்ணிட்டான்னு நினைக்குறேன்.. பொணத்தை என்னமாது பண்ணிட்டு எங்கேயாவது போயிடுங்க” என்று மாரிமுத்து கூறினான்.

 

‘மாமா..’ என்று பிரபா முணுமுணுக்க, 

 

அலைப்பேசியில் ‘மியூட்’ என்ற பொத்தானை அழுத்தியவள், “யாருனு தெரியுமா உங்களுக்கு? கால் ரெகார்ட் போட்டுட்டேன்..” என்றாள்.

 

பிரபாவால் இன்னமும் அந்த அதிர்வைத் தாங்க முடியாது இருக்க, வாய் வழியாகப் பெரும் மூச்சை இழுத்துக் கொண்டு கண் விழித்தான், அம்மாயோளின் அல(ழ)கனவன். (அலகன்- ஆத்மா/பேய்)

 

ஆடவர்கள் அனைவரும் அதை எட்டாவது அதிசயமாய் பார்க்க அலைபேசியை சிபி கையில் திணித்து விட்டு, “மகி..” என்றபடி அவனிடம் வந்தாள்.

 

இறுகிய அணைப்பு.. தன் அணைப்பு ஒன்று மட்டுமே அவனுக்குத் தன் வேதனை, வலி, ஏக்கம், பயம் என அனைத்தையும் கடத்திவிட வேண்டும் என்ற முனைப்பில் அத்தனை அத்தனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

 

“அ..ஹவ் இட் இஸ் பாஸிபில்? (இது எப்படி சாத்தியம்?)” என்று பிரபா அதிர, 

 

அதற்கெல்லாம் பதில் கூறும் நிலையில் அவர்கள் இல்லை. 

 

“பயந்துட்டேன்டா.. ” என்று அவள் அழுகையோடு கூற, 

 

“வேலையைச் சிறப்பா முடிக்க வேணாமா? அதான் அந்த யோக்கியன காட்டி கொடுக்க மறுபடியும் பேப்பர படபடனு அடிச்சுவிட்டு, ஃபோன எடுத்துக் கால் போட்டேன்..” என்று கிசுகிசுப்பாக மதி கூறினான்.

 

அதற்குமேல் அவளிடம் வார்த்தைகள் இல்லை, அவனை மேலும் இறுக அணைத்தவள், “இனி என் பேச்சைக் கேட்காதடா” என்க, 

 

அட்டகாசமாய் சிரித்துக் கொண்டான்.

 

பின்பே அவனை விட்டு நீங்கியவள், புரியாது பார்க்கும் பிரபா மற்றும் சிபியைப் பார்த்து, “இ..இவன் சாகலை. அன்கான்ஷியஸா தான் இருந்தான்” என்க, 

 

அவர்களுக்கு அது இன்னும் அதிர்வாக இருந்தது. 

 

இந்த இடத்தைப் பற்றிய தகவல் கிடைக்காமல் போயிருந்தால் அநியாயமாகத் தங்கள் குடும்பத்துப் பகைக்கு ஒரு உயிர் பலியாகி இருக்குமே என்று யோசிக்கவே பிரபாவின் உள்ளம் பதறியது.

 

நிலையைக் கையில் எடுத்த சிபி, “உன் மாமானு எதும் பாசத்துல காப்பாத்தணும்னு நினைக்காத பிரபா. ஒரு உயிரைக் கொன்னுருக்காரு. இன்னொன்னு அட்டெம்ட் மர்டர். கண்டிப்பா தண்டனை வாங்கி தருவேன்” என்று கூற, 

 

அவனிடம் சின்னத் தலையசைப்பு.

 

தோழர்கள் இருவரும் ஜான் மற்றும் மதியை நோக்க, “ரொம்ப தேங்ஸ் அண்ணா” என்று ஜான் கூறினாள். 

 

“அதை நான் சொல்லணும் ம்மா” என்றவன் ‘எப்படி உனக்கு இந்த இடம் தெரிய வந்தது?’ எனக் கேட்க வந்து பிறகு வேண்டாமென விட்டுவிட்டான்.

 

தடியர்களை இழுத்துக் கொண்டு சிபி, “நீங்களும் எங்களோடவே வரீங்களா?” என்று வினவ, 

 

“இல்ல நாங்க போய்க்குறோம்” என்று மதி கூறினான். 

 

அவர்கள் தனிமையை எதிர்ப்பார்ப்பது புரிந்து சிபி மற்றும் பிரபா அடியாட்களுடன் புறப்பட்டிட, மீண்டும் அவனை அணைத்துக் கொண்டாள்.

 

“என்ன ஜானு பேபி.. ஹக்ஸ்லாம் பலம்மா இருக்கு. இப்படியே இறுக்கி புடிச்சு நான் திரும்ப அன்கான்ஷி..” என்று அவன் முடிப்பதற்குள் அவன் இதழைப் பூட்டியிருந்தாள், தன் இதழால்.

 

அவளது அணைப்பே இன்ப அவஸ்தையாய் அவனுக்குத் தித்தித்த தருணத்தில், இந்தத் திடீர் முத்தம் அதிர்வின் விளிம்பிற்கே அவனைக் கொண்டு சென்றது! இதழில் உவர்நீரின் சுவையேற, அவள் நிலை புரிந்தவனாக அரவணைத்துக் கொண்டான்.

 

சிலநிமிட முத்த யுத்தம் முடிவடைய, “பார்ட் டைம் சாவுக்கு நல்ல பலன் தான் கிடைச்சிருக்கு” என்று மதி கிரக்கமாய் கூறிக் கொண்டான். 

 

அதில் லேசாகச் சிரித்துக் கொண்டவள் அவன் மார்பில் குத்தி, “அவன எப்டி ஃபோன் போட வச்ச?” என்று வினவ, 

 

“அவன் ஃபோன்லருந்து வெறும் மிஸ்ட் கால் மட்டும் கொடுத்துடலாம்னு தான் போனேன். நான் ஃபோன் போடும்போது அவனே திரும்பிட்டான். டக்குனு என்ன பண்ணனு புரியாம நகர்ந்தப்போ டேபில்ல இருந்த அவன் ஃபேமிலி போட்டோவ தட்டி விட்டுட்டேன். அதுல உள்ள பிரபா படத்தையே பார்த்தவன் கால நீ அடென்ட் பண்ணதும் யோசிக்காம பேசிட்டான். அது இன்னும் எனக்கு வசதியா போச்சு. அவன் பேசி முடிக்குறதுக்குள்ள சட்டுனு நான் ஏதோ காத்துல இழுபட்ட ஃபீல்” என்று கூறி முடித்தான்.

 

ஒரு பெருமூச்சு விட்டவள், “நிஜமா நம்பவே முடியலை மகி..” என்க, 

 

“ஏற்கனவே ஒரு மாய வலையில் சிக்கி மீண்ட உனக்கே இப்படினா நான் என்ன சொல்ல?” என்றான். 

 

அதற்குமேல் அங்கு நிற்காது புறப்பட்டவள், “மகி.. அத்தை மாமாவ எங்க வீட்டுக்கு வரசொல்லி சர்பிரைஸ் பண்ணுவோமா?” என்று வினவ, 

 

“உங்கப்பா ஹார்ட் பேஷன்டுடி” என்றான்.

 

“அதுலாம் பார்த்துக்கலாம்டா. கூட ரெண்டு மாத்திரை குடுத்து க்யூர் பண்ணிப்போம்” என்றவள் மதியின் அண்ணனுக்கு அழைத்து மூவரையும் தன்வீட்டிற்கு வரும்படி கூறினாள்.

 

அங்கு அழுது ஓய்ந்து முடிந்த அகாவின் அருகே அமர்ந்திருந்த துரு மற்றும் விஷ், “அகா..” என்று அழைக்க, 

 

அவளது அலைபேசி ஒலித்தது. 

 

எடுத்து ஸ்பீகரில் போட்ட துரு, “அழுதுட்டே இருக்கா அகர். நீங்க வர்றீங்களா?” என்று கேட்க, 

 

“இப்ப தான் வேலை முடிஞ்சு வீட்டுக்கே வந்தேன் துரு. அம்மாக்கு வேற உடம்பு முடியலை. அப்பா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு வந்திருக்காங்க” என்றான்.

 

கண்ணீரை துடைத்துக் கொண்ட அகா, “என்னாச்சு?” என்க, 

 

“நார்மல் ஃபீவர்தான்மா. நீ தேவையில்லாம அழாத. இப்ப தான மாப்பிள்ளை பார்த்துருக்காங்க. எப்படியும் ஜானை மனசுல வச்சாவது கொஞ்சம் தள்ளிப் போடுவாங்க” என்று அகர் கூறினான்.

 

ஆம்! தமிழ்வேந்தன் (அகாவின் தந்தை) நல்ல வரன், அதுவும் தூரத்து சொந்தத்திலேயே கிடைத்திருப்பதாக மனைவியிடம் பேசி, நல்ல நாள் ஒன்றில் பெண் பார்க்க வரக்கூறும் யோசனையில் இருக்க, அதைக் கேட்ட அகாதான் ஆடிப் போய்விட்டாள்.

 

“அத்தைய பார்த்துக்கோங்க. நா..நான் ஓகே ஆயிடுவேன்” என்று அவள் கூற, 

 

“அவி..” என்றான். 

 

அவன் குரலில் இருந்த பேதம் உணர்ந்தவள் அலைபேசியை வாங்கிக் கொண்டு நகர, 

 

“உன்னை அவ்வளவு சீக்கிரம் விட்டுட மாட்டேன்டா..” என்றான். 

 

“பயமா இருக்கு அகர்.. உங்கள ம.. மறுபடியும் இழந்து என்னால தவிக்க முடியாது” என்று அவள் கலங்க, 

 

“டேய்.. அழாதடா. உங்கப்பா மேல பேசுறதுக்குள்ள நான் வந்து பேசிடுவேன். நீ எதும் பயப்படாம இரு” என்றான். 

 

“ம்ம்..” என்று அவள் கூற, 

 

“முகத்தைத் துடை” என்றான்.

 

சிறுபிள்ளை போல் அலைபேசியில் அவனுக்குத் தலையாட்டியபடி அவள் முகத்தைத் துடைத்துக் கொள்வதைப் பார்த்த துரு மற்றும் விஷ் சிரித்துக் கொள்ள, 

 

“குட்.. இப்ப போ” என்று அகர் கூறினான்.

 

அலைபேசியை வைக்கும் நொடி, “லவ் யூ அகர்..” என்றவள் அழைப்பைத் துண்டிக்க அங்கு அவளவன் தான் அவஸ்தைக்கு உள்ளாகிப் போனான்.

 

பேசிமுடித்து வந்த தோழியைப் பார்த்து, “அகா.. வாட்டர் டேங்க க்ளோஸ் பண்ணு. அதான் இன்னும் பொண்ணு பார்க்க வரலைல? ஒன்னும் ஆகாது. அகர் பார்த்துப்பார்” என்று விஷ் கூற, 

 

“ம்ம்” என்றாள். 

 

அப்போதே ஜானிடமிருந்து அனைவரையும் பெற்றோரோடு தன் வீட்டில் கூடச் சொல்லிச் செய்தி வர, ஏன் எதற்கென்ற கேள்வியின்றி யாவரையும் கூட்டிக் கொண்டு ஜான் வீட்டை நிறைத்தனர்.

 

“எதுக்குப்பா வரசொன்னா?” என்று ஒருவர் மாற்றி ஒருவர் துரு, விஷ் மற்றும் அகாவை கேள்வியால் துளைக்க, 

 

‘தெரியாது தெரியாது’ என்று கூறியே ஓய்ந்து போயினர்.

 

சில நிமிடங்களில் வீடு வந்தவள் முகமே தோழர்களுக்குச் செய்தி கூற, ‘மதி எங்க?’ என்று கண்களால் வினவினர். 

 

மதியின் தாய் தந்தையைப் பார்த்தவள் அவர்கள் முன் வந்து அமர, அவளைப் பார்த்தவுடன் மாதவிக்கு (மதியின் தாய்) கண்கள் கலங்கி விட்டன.

 

“உங்களுக்கு ஒரு பரிசு வச்சிருக்கேன்” என்று அவள் கூற, 

 

விரக்தியான சிரிப்போடு “என்னதுமா?” என்றார். 

 

வாயிலைப் பார்த்தவள், “மகி” என்க, 

 

“வந்துட்டேன்” என்று விளக்கிலிருந்து வெளிவந்த அலாவுதின் பூதம்போல் உள்ளே குதித்தான் மதிமகிழன்.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்