Loading

அத்தியாயம் – 25

 

சந்து கடைசியாக கூறிச் சென்ற வார்த்தைகள் அனைவரின் மனதையும் குத்தீட்டியாய் குத்திக் கிழிக்க, இப்படியா குழந்தையின் மனதில் இருந்த வேதனையை அறியாமல் இவ்வளவு வருடங்களாக இருந்திருக்கிறோம் என தங்களை பற்றி நினைத்து அவர்களுக்கே கேவலமாக இருந்தது.

 

இனிமேல் அவள் மனதை அறிந்து செயல்பட வேண்டும் என அந்த நொடி தீர்மாணித்தவர்கள் ஆபரேஷன் முடிவதற்கு காத்துக் கொண்டிருந்தனர்.

 

மற்றவர்களைப் போல் ஹரியால் அதை அவ்வளவு சுலபமாக மறந்து வேறெதிலும் கவனம் செலுத்த முடியாமல் தவித்தவன் , தன் அஜாக்கிரதையால் தான் அவள் இவ்வளவு வருடங்களும் துன்பத்தை தனக்குள் போட்டு மருகிக் கொண்டிருந்தாள் என தன் மீதே பலி போட்டுக் கொண்டு குற்றவுணர்வில் தவித்தான்.

 

அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீக்கு அந்த வயதில் என்னவென்று சரியாக புரியாவிட்டாலும் , ஹரி சந்துவை நினைத்து மிகவும் வருந்துகிறான் என புரிந்தது.

 

மற்ற நேரமாக இருந்தால் அவள் இதற்கும் கோபம் கொண்டிருந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை, ஆனால் இன்று சந்து கடைசியாக சொன்னது அவள் வயதிற்கு அவ்வளவாக புரியாவிடினும் அவள் கண்களில் இருந்த வலி அவளையும் கவலையுறச் செய்திருந்தது.

 

ஸ்ரீ ஒன்னும் பிறப்பிலே கோபக்காரி இல்லையே, ஹரியிடம் யாரும் உரிமை பாராட்டாதவரை அவர்களை அவள் தலைக்கு மேல் தூக்கி வைத்து ஆடுவாள் , உதாரணத்திற்கு ஹரியின் இன்னொரு தங்கையான ஆதிரா தான் ஸ்ரீயின் உயிர்த்தோழி, அவளுக்கு சின்னதாக காயம் பட்டு அழுதாள் கூட இவள் துடிதுடித்துப் போவாள்.

 

 

ஆனால் இதே ஆதிராவே சந்துவைப் போல் ஹரியிடம் ஒன்றிப் பழகினால் அவள் மீதும் கோபம் கொள்வாள் என்பது உறுதி.

 

மொத்தத்தில் சொல்லப்போனால் அவள் ஒரு ஹரி பைத்தியம்.

 

அதனால் அவன் வருந்துவது தாளாமல் அவன் கைகளைப் பற்றியவள் ,”ஹரி சந்து நல்லா நடப்பா இப்படி ஃபீல் பண்ணாத ப்ளீஸ் எனக்கும் அழுகையா வருது” என அழும் குரலில் கூற,

 

“ச்சு என்ன லட்டு இது அதெல்லாம் ஒன்னும் இல்லை..நான் நல்லா தான் இருக்கேன்” என அவளுக்காக முகத்தை சிரித்தது போல் மாற்றிக் கொண்டான் ஹரி.

 

அவன் தனக்காக செய்கிறான் என அப்போதே அவளுக்கு புரிந்ததோ என்னமோ பிடித்த அவன் கையை விடவே இல்லை அவள்.

 

சரியாக இரண்டு மணிநேரம் கழித்து வெளியே வந்த மருத்துவர் ,”சக்சஸ் ஷி இஸ் ஆல்ரைட் …இப்போ மயக்கத்துல இருக்கா கொஞ்ச நேரத்துல முழிச்சுருவா இப்போ ஒவ்வொருத்தரா போய் பாருங்க” என்று கூற,

 

ஹரி சந்தோஷத்தில் கண்கள் மின்ன, பிடித்திருந்த ஸ்ரீயின் கையிலிருந்து தன் கையை உருவிக் கொண்டவன் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் முதலாக அறைக்குள் சென்று மறைந்தான்.

 

அவன் தங்கையைக் காணும் மகிழ்ச்சியில் ஸ்ரீயின் கையை விட்டது அவனுக்கு பெரிய விஷயமாகத் தெரியவில்லை ஆனால் ஸ்ரீக்கு அது எவ்வளவு வலியைத் தந்தது என அவளுக்கு மட்டும் தான் தெரியும்.

 

 

அவன் தன்னை விட்டு அவளிடம் சென்று விட்டான் என்ற நினைப்பே அவளை மிகவும் வருத்தத்திற்குள்ளாக்க, அந்த வருத்தமனைத்தும் சந்துவின் மேல் கோவமாக திரும்பியது.

 

அவளால் தான் தன் ஹரி தனக்கு மட்டுமே சொந்தமான ஹரி தன்னை உதறிவிட்டு சென்றுவிட்டான் என உறுதியாக நம்பியவள், சந்துவின் மீது கோவத்தை வளர்த்துக் கொண்டாள் அதன் பின்விளைவைப் பற்றி அறியாமல்.

 

உள்ளே சென்ற ஹரி அங்கே மயக்கத்தில் கண்ணை மூடி குட்டி தேவதை போல் படுத்திருந்த சந்துவை வாஞ்சையாக பார்த்தவன், அவள் அருகில் சென்று அவள் தலையை மெதுவக வருடிக் கொடுத்தான்.

 

“ஐ அம் சாரி சந்துமா” என உதடுகள் முனுமுனுக்க கண்கள் அவன் அனுமதி இன்றியே கண்ணீர் துளிகளை சிந்த அது அவள் கைகளில் பட்டுத் தெரித்தது.

 

“இனிமேல் உன்னை பத்திரமா முக்கியமா சந்தோஷமா பார்த்துக்குறது என் பொறுப்பு” என தனக்குள் உறுதி பூண்டவன் அவளை பார்த்துக் கொண்டே அறையை விட்டு வெளியேறினான்.

 

அவனைத் தொடர்ந்து அனைவரும் அவளைப் பார்க்க செல்ல, ஸ்ரீ மட்டும் செல்லாமல் வரந்தாவிலே தேங்கினாள்.

 

அப்போதிருந்த மனநிலையில் அவளை யாரும் கண்டுகொள்ளாததால் அவளின் இந்த மாற்றம் யாருக்கும் தெரியாமலே போனது.

 

ஒரு வாரத்தில் சந்து வீட்டிற்கு வந்துவிட, அவளுக்கு கிடைத்தது ராஜ உபச்சாரம் தான்.

 

 

சந்துவின் மனநலத்தை கருத்தில் கொண்டு அவளுக்கு இடமாற்றம் தேவை என நினைத்து, அனைவரும் மொத்தமாய் தாமரைக் குளத்திற்கே வந்துவிட்டனர்.

 

பல சமயம் இங்கிருந்தே நல்லசிவமும் மதிவாணனும் தங்கள் தொழிலை கவனிக்க அலைந்து கொண்டிருந்ததால், இருவரின் மனைவிமார்களும் குழந்தைகளை இங்கேயே விட்டுவிட்டு கோயம்புத்தூருக்கு கணவனுடன் சென்று விட்டனர்.

 

வாரத்தில் மூன்று நான்கு நாட்கள் மட்டும் வந்து தங்கியிருந்து குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்துவிட்டு செல்வர், இது அனைத்தும் சந்துவிற்காக என்பதால் சந்தோஷமாகவே இதை ஏற்றுக் கொண்டனர்.

 

கார்த்திக்கும் ஹரியும் ஏதாவது கோமாளித்தனம் செய்து சந்துவை எப்போதும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தனர்.. ஹரிக்கு தெரியவில்லை தன்னுடைய செயல் இன்னொருத்தியை வலிக்க வலிக்க அழுக வைத்துக் கொண்டிருப்பதை.

 

அவள் இப்போதெல்லாம் அவனிடம் சென்று பேசுவதே இல்லை, அவனிடம் என்று இல்லை அவள் அந்த வீட்டில் யாருடனும் பேசாமல் தனிமையிலே தன்னுடைய பொழுதைக் கழித்தாள்.

 

இதைக் கண்டுகொண்ட ஆதிரா அவளிடம் சென்று என்னவென்று விசாரிக்க, தாய் மடி சேர்ந்த சேயாய் அவள் மடியில் படுத்துக் கொண்டு அழுது தீர்த்து விட்டாள் ஸ்ரீ.

 

ஆதிரா என்ன முயன்றும் அவள் அழுகையை கட்டுப்படுத்த முடியாததால் ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் ,” இரு நான் போய் அம்மாவை(பத்மினி) கூட்டிட்டு வரேன்” என எழப்போக, அவள் கையைப்பிடித்து தடுத்த ஸ்ரீ வேண்டாம் என மறுத்தாள்.

 

“அப்போ எதுக்கு அழுகுற என்னாச்சுன்னு சொல்லு ” என அரட்டு போட, அதற்குள் ஓரளவு அழுகை மட்டுப்பட்டிருக்க மெல்லிய தேம்பலுடன் ,” எ..னக்கு என..க்கு என் ஹ..ரி வே..ணும் ஆது” என கூறினாள்.

 

அவள் கூற வருவது புரியாமல்,”ஹரி அண்ணா இப்போ எங்க போனாங்க இங்க தான இருக்காங்க” என அவள் பதிலுக்கு கேட்க,

 

தலையை இடமும் வலமும் ஆட்டிய ஸ்ரீ,”இல்லை அவன் என்னை விட்டுட்டு போய்ட்டான்…சந்து தான் வேணும்னு போய்ட்டான்” என புலம்பியவள் அவள் மனதில் ஹரியின் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறாள் என தனக்கு தெரிந்த முறையில் சொன்னவள் அது தொடங்கி அன்று ஹரி தன் கையை உதறிவிட்டு சென்றது வரை அழுகையுடனே சொல்லி முடிக்க, ஆதிராவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

 

அவளுக்கு ஸ்ரீயும் முக்கியம் அதே சமயம் தன் உடன் பிறந்தவளும் முக்கியம் என்பதால் அவளுக்கு தெரிந்த வரையில் ஏதோ சொல்லி அவளை சமாதானம் செய்தாள்.

 

மனதில் உள்ளதை வெளியில் கொட்டி விட்டதாலோ என்னவோ ஸ்ரீக்கு இப்போது மனதின் பாரம் குறைந்திருக்க அமைதியாகவே எழுந்து வீட்டிற்குள் சென்றாள்.

 

ஆனால் இவை அனைத்தையும் அங்கு நின்று கேட்டுக் கொண்டிருந்த ஹரிக்கு தான் தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது.

 

தங்கையை கவனிக்காமல் விட்டதால் ஏற்கனவே குற்றவுணர்சியில் தத்தளித்தவன், இப்போது தங்கைக்காக என இவ்வளவு நாளாய் தன் மனம் கவர்ந்த அவனின் லட்டுக் குட்டியை வதைத்துக் கொண்டிருந்ததை அவள் வாய்மொழியாகவே கேட்க அவனுக்கு அவன் மீதே வெறுப்பு வந்தது.

 

 

தங்கையின் கண்ணீரைக் கண்ட போது கூட இவ்வளவு உடைந்து போகதவன், இப்போது ஸ்ரீயின் கண்ணீர் தன்னை இந்த அளவு பாதிப்பதைக் கண்டு அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.

 

அன்று தான் அவள் தன் வாழ்வில் எவ்வளவு இன்றியமையாதவள் என கண்டுகொண்டவனுக்கு ஒரு புறம் மகிழ்ச்சி அடைந்தவன் இன்னொரு புறம் இந்த பிரச்சனையை எப்படி தீர்க்க என சிந்திக்கலானான்.

 

இரவு நெடுநேரம் வரை சிந்தித்தவன் கடைசியில் தெளிவாக ஒரு முடிவெடுத்துவிட்டே நிம்மதியாக உறங்கலானான்.

 

மறுநாள் காலையில் தன் தாத்தாவை அழைத்தவன் தான் இரவு எடுத்த முடிவின் படி , சந்து, கார்த்திக், ஆதிரா ,ஸ்ரீ என நால்வரும் ஒரு பள்ளியிலும், தானும் அஷ்வினும் கோயம்புத்தூரில் முன்பு படித்த பள்ளியிலும் படிப்பதாகக் கூறி அவர் சம்மதத்திற்காக காத்திருந்தான்.

 

அந்த வயதிலே அவனின் பொறுப்பான செயலகளைக் கண்டு அவருக்கு என்றுமே ஹரியின் மீது தனி பிரியம் தான், எனவே அவன் எது செய்தாலும் அதன் பின் ஒரு காரணம் இருக்கும் என முழுமனதாக நம்பியவர் சம்மதம் கூறிவிட, அவனுக்கு அப்போது தான் நிம்மதியானது.

 

அவர் முடிவின்படி ஆதி,ஸ்ரீ,சந்து, கார்த்திக் இங்கு தங்கி பொள்ளாச்சியில் படிக்க, ஹரியும் அஷ்வினும் தங்கள் வீடுகளுக்கு சென்று அங்கிருந்து படிக்கட்டும் என முடிவு செய்யப்பட்டது.அதில் ஹரியைத் தவிர மற்ற யாருக்கும் உடன்பாடு இல்லையென்றாலும் தாத்தாவை எதிர்த்துப் பேச தைரியமில்லாததால் மௌனமாகவே அதற்கு உடன்பட்டனர்.

 

ஹரி போகும் முன் கார்த்திக்கை அழைத்து சந்துவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியவன், ஆதிராவை அழைத்து ஸ்ரீயை பார்த்துக் கொள்ளச் சொல்லவும் தவரவில்லை.

ஸ்ரீ இன்னும் அவனுடன் முகம் கொடுத்து பேசாவிடினும் அவன் அவளுடன் தானாக சென்று எதையாவது பேசிக் கொண்டு தான் இருந்தான்.

 

ஸ்ரீக்கு அவன் மேல் ரொம்ப நாள் கோவத்தை பிடித்து வைத்து பழக்கமில்லாததால் அவனுடன் மீண்டும் எப்போதும் போல் பழகத் தொடங்கியிருந்தாள்.

 

நாட்களும் வேகமாக நகர, விடுமுறையும் முடிந்து ஹரி கோயம்புத்தூருக்கு கிளம்பும் நாளும் வந்தது.

 

அன்று ஸ்ரீ வைத்த ஒப்பாரியில் தாமரைக்குளத்தில் வெள்ளம் வாராதது பெரிய அதிசயம் தான்.ஒருவழியாக அவளை தேத்தி அமைதிப்படுத்தி தூங்க வைத்த பின்பே அங்கிருந்து கிளம்பினான் ஹரி.

 

ஸ்ரீயை முன்பிருந்தே நோட்டம் விட்டுக் கொண்டிருந்த தாத்தா அவர்களுக்கு இந்த பிரிவு அவசியம் தான் என நினைத்து, விடுமுறைக்குக் கூட இவளையும் அங்கு செல்ல அனுமதிக்கவில்லை அவனையும் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே இங்கு வர அனுமதித்தார்.

 

ஆனால் தினமும் அனைவரிடமும் போனில் உரையாடுபவன் சந்துவிடமும், ஸ்ரீயிடமும் மட்டும் அதிக நேரம் பேசி அந்நாளில் நடந்த கதைகள் மொத்தத்தையும் அவர்களிருவரிடமும் கேட்டு அவர்களை சிரிக்க வைத்த பின்பே உறங்க போவான்.

 

இதிலும் அவளுக்கு சந்துவின் மேல் கோபம் தான், தன்னிடமும் அவளிடமும் ஒரே அளவு தான் பேசுகிறான் என்றால் அவனுக்கு நானும் அவளும் ஒன்றா?? என்று ஏதேதோ நினைத்து குழம்பியவள் மீண்டும் சந்துவிடம் கோபத்தை வளர்த்துக் கொண்டு அவளிடம் பேசுவதையே குறைத்துக்  கொண்டாள்.

 

முதலில் அவள் தன்னைத் தவிர்ப்பதை புரிந்து கொள்ளாத சந்து ,தானாகவே வலிய சென்று பேசி அவளிடம் முறைப்பை வாங்கிக் கொள்வாள்.

 

அப்போது ஸ்ரீக்கு பதிமூன்று வயது ஹரிக்கு பதினெட்டு வயது கல்லூரியில் இப்போது தான் அவனும் கார்த்திக்கும் சேர்ந்திருப்பதால் அதில் பிசியாக இருந்தவனால் இவளிடம் பேசும் நேரம் மிகவும் குறைவாகிப் போனது .

 

ஒரு நாள் ஹரி இன்னும் தன்னிடம் பேசவில்லையே என கடுப்பில் இருந்த ஸ்ரீயிடம் சந்து வந்து ,”அண்ணா கால் பண்ணாங்களா ஸ்ரீ அக்கா” என ஆதிராவை கூப்பிடுவது போலே அவளையும் கூப்பிட,

 

இவ்வளவு நாள் அவள் அவ்வாறு தான் அழைத்தாலும் இன்று அது ஏனோ அவளுக்கு கசப்பு மருந்தை குடிப்பது போல் உமட்டிக் கொண்டு வந்தது.

 

இந்தப் பிரிவு அவர்களுக்குள் பல மாற்றத்தைக் கொண்டு வந்ததை அவர்களிருவருமே அறியவில்லை.

 

அவன் பேசவில்லை என்ற கடுப்போடு இவளின் அக்கா என்ற அழைப்பும் ஸ்ரீயின் புத்தியை மழுங்கச் செய்ய,” ஹேய் உனக்கு அறிவில்லையா?? எனக்கு தான் உன்னை பிடிக்கலைன்னு ஒதுங்கி ஒதுங்கி போறேன்ல பின்ன என்ன என் பின்னாடியே சுத்தி சுத்தி வர உனக்கு வெக்கமா இல்லை..இன்னொரு முறை என் கிட்ட வந்து பேச ட்ரை பண்ணா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கலை தயவு செஞ்சு உன் மூஞ்சியை எனக்கு முன்னாடி காமிக்காத..அப்பறம் முக்கியமா என்னை அக்கா நொக்கான்னு கூப்பிட்ட பல்லை உடைச்சிருவேன்” என அவள் வெறி கொண்டவள் போல் கத்த துவங்க சந்துவிற்கு பயத்தில் உடல் தூக்கி வாரிப் போட்டது.

 

 

அவளிடம் கத்தியவள் பின்பே தான் பேசியது உணர்ந்து ,”ச்சே” என கடுப்பாகி அங்கு நிற்கப் பிடிக்காமல் கிளம்பிச் சென்று விட்டாள்.

 

ஆனால் சந்து தான் அங்கேயே பேஸ்தடித்தது போல் அப்படியே பயத்தில் நின்றிருந்தாள். இயல்பிலேயே மிகவும் பயந்த சுபாவமுள்ள சந்துவிற்கு இவளின் கோபம் பயத்தோடு கண்ணீரையும் வரவழைத்தது. இப்போதுதான் கார்த்திக் ஹரியின் உபயத்தில் தன் கூட்டை விட்டுக் கொஞ்சம் வெளியில் வந்தவள் மீண்டும் ஸ்ரீ தன்னை பிடிக்கவில்லை என்றதும் அதே கூட்டுக்குள் புகுந்து விட்டாள்.

 

மறக்க நினைத்த விஷயங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நியாபகத்திற்கு வர, தன் காலைப் பார்த்தவள் இப்போது அது நேராக அழகாக இருந்தாலும் அவளுக்கு சிறுவயதில் தோன்றிய அதே எண்ணம் தான் தோன்றியது. தான் நொண்டி என்பதால் தான் சிறுவயதில் தன் உடன் பயின்றவர்களுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என நினைத்து வைத்திருந்தவள் இப்போது ஸ்ரீ கூறியதையும் இதோடு சேர்த்து முடிச்சுப் போட்டு குழம்பித் தவித்து அவளுக்கும் தான் நொண்டியாகப் பிறந்ததுதான் பிடிக்கவில்லை போலும் என நினைத்து மனம் வெதும்பியவள் அன்றிலிருந்து ஸ்ரீயின் முன்பு செல்வதைக் கூட மொத்தமாக தவிர்த்தாள்.

 

அன்று சந்துவிடம் கத்திவிட்டு வந்தது அவளுக்கே ஒரு மாதிரியாக இருக்க, அவளிடம் மன்னிப்பு கேட்க நினைத்த ஸ்ரீ வெளியில் வர எழுந்த பொழுது அவளுக்கு வயிறு மிகவும் வலித்து அதை தடை செய்தது.

 

இரண்டு மாதம் முன்பு தான் ஆதிரா பூப்பெய்திருந்ததால் ஸ்ரீக்கு ஓரளவு விஷயம் என்னவென்று யூகிக்க முடிந்தது.

 

பெரிய மனுஷியாகி விட்டோம் என ஆதிராவிற்கு எப்படி கண்டுபிடித்தார்கள் என நினைவு கூர்ந்து தான் பூப்படைந்து விட்டதை ஊர்ஜிதம் செய்தவளுக்கு மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க வேண்டும் என்று இருந்தது.

 

அவள் மகிழ்ச்சிக்கு காரணம் ஹரி விஷயம் தெரிந்தால் ஊருக்கு வருவான் என்பதே என்று சொன்னால் மிகையாகது.

 

அந்த சந்தோஷத்தில் சந்துவிடம் கத்திவிட்டு வந்ததைக் கூட அவள் மறந்து போயிருந்தாள்.

 

எந்தவொரு பெண்ணும் தான் பெரிய மனுஷியாகிவிட்டதை முதலில் தாயிடம் சொல்லத்தான் நினைப்பர், ஆனால் ஸ்ரீக்கு தாய் தந்தை என அனைவரையும் விட ஹரி தான் முக்கியம் என்பதால் இந்த விஷயத்தை முதலில் அவனிடம் தான் சொல்ல வேண்டும் என அத்தையுனுடைய கைபேசியை வாங்கிக் கொண்டு அறைக்குள் வந்தாள்.

 

உள்ளே வந்து கட்டிலில் விழுந்தவள் அவனுக்கு அழைத்து அவன் எடுப்பதற்காக காத்திருந்தாள், மறுமுனை எடுத்ததும் ,”ஹலோ ஹரி!!!” என உற்சாகமாக அவள் அழைக்க,

 

அவளின் உற்சாகம் அவனையும் தொற்றிக் கொள்ள, “என்ன லட்டு உங்க பிசிக்ஸ் சார் மண்டையை போட்டுட்டாரா இவ்வளவு ஜாலியா ஹலோ சொல்ற” என குறும்பு கொப்பளிக்க கேட்டான் அவன்.

 

“ச்சு அதெல்லாம் இல்லை..இது வேற..உனக்கு தான் முதல்ல சொல்லனும்னு கூப்பிட்டேன்” என இன்னும் அவள் அதே உற்சாகத்தில் கூற,

 

‘அப்படி என்ன விஷயமா இருக்கும்’ என குழம்பியவன் ,”என் லட்டுகுட்டி இவ்ளோ ஹேப்பியாகுற அளவுக்கு அப்படி என்ன விஷயம் சீக்கிரம் சொல்லு” என அவன் அவசரப்படுத்த,

 

“அது..அது..” என ராகம் பாடியவள் “நான் வயசுக்கு வந்துட்டேன்” என ஒருவழியாக கூறி முடித்தாள்.

 

அவள் கூறியதும் ஹரிக்கு ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை அவள் பூப்படைந்ததை விட தன்னிடம் முதலில் அதை பகிர்ந்து கொண்டது அவனிற்கு வானத்தில் பறப்பதைப் போல் இருந்தது.

 

“ஹேய் நிஜமாத் தான் சொல்றியா?? அத்தை கிட்ட தான இதை முதல்ல சொல்லனும் எனக்கு எதுக்கு டி கால் பண்ண லூசு” என செல்லமாக கடிந்து கொள்ள,

 

“எனக்கு உனக்கு அப்பறம் தான் அவங்க எல்லாம்..எனக்கு தெரிஞ்சதும் உன் கிட்ட தான் சொல்லனும்னு தோணுச்சு” என அவள் மனதில் இருந்ததை அப்படியே கூறிவிட,

 

அவள் தன் மேல் கொண்டுள்ள நேசத்தைக் கண்டு அவன் வாயடைத்துப் போனான். இதை தாயிடம் கூறவே வெட்கப்படும் பெண்கள் இன்னும் இந்த உலகில் இருக்கையில் தன்னிடம் முதன் முதலில் அவள் கூறுகிறாள் என்றால் அவள் தன்னை அவள் அன்னையை விட நம்புகிறாள் என நினைத்தவனுக்கு மகிழ்ச்சியில் கண்கள் கலங்கியது.

 

“ரொம்ப சந்தோஷமா இருக்கு லட்டு” என நெகிழ்ச்சியான குரலில் கூறியவன், பின் “ஆமா ஆதி இப்படி ஆனப்போ எப்படி அழுது புலம்புனா நீ மட்டும் எப்படி இவ்வளவு ஜாலியா பேசுற உனக்கு வலிக்கலையா” என அவன் கேட்க,

 

“அட போ ஹரி வலி உயிர் போகுது, ஆனா நான் இப்படி பெரிய மனுஷியானா நீ என்னை பார்க்க வருவன்னு நினைக்கிறப்போ அந்த வலியும் பறந்து போகுது” என அவள் அனுபவித்துக் கூற,

 

ஹரி உண்மையில் அவள் நேசத்தில் திக்குமுக்காடிப் போனான்.அவள் தன்மீது இவ்வளவு பாசத்தை பொழியும் அளவு தான் என்ன செய்தோம் என குழம்பியவன் அவளுக்கு இதை விட இரண்டு மடங்கு பாசத்தை திருப்பி தர வேண்டும் என்று மனம் நினைக்க,

 

 

அப்போது உள்ளே இருந்து எட்டிப்பார்த்த மனசாட்சி ,”வெறும் பாசத்தை மட்டும் தானோ??” என கேலிக் குரலில் கேட்க,

 

அதில் பொதிந்திருந்த உள் அர்த்தத்தை புரிந்து கொண்டவனுக்கு உடலெல்லாம் புது இரத்தம் பாய்வது போல் இருந்தது.

 

இவ்வளவு நாளாய் அவளை அத்தை மகளாக மட்டும் பார்த்தவனின் மனதில் இந்த பிரிவும், அவள் பெரிய மனுஷியான செய்தியும், பருவ வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் அவன் வயதும் அவனுள் ஏதேதோ சிந்தனைகளை வளர்க்க, சிறகில்லாமல் வானத்தில் பறக்க ஆரம்பித்திருந்தான்.

 

அவளை தான் காதலிப்பதை உணர்ந்த அந்த நொடி அவனுக்கு புதிதாய் பிறந்ததைப் போல் இருக்க, ரோடு என்றும் பாராமல் “ஊஊஊ!!!” என துள்ளிக் குதித்து கத்தி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.

 

ரோட்டில் போவோர் வருவோர் எல்லாம் அவனைப் பார்த்து தலையில் அடித்துக் கொள்ள, அவனுக்கு அது தெரிந்தால் தானே அவனே கனவில் மிதந்து கொண்டிருந்தான். காதல் வந்தால் கால்கள் இரண்டும் காற்றில் பறக்கும் என்ற கூற்றை அன்று தான் ஹரி உணர்ந்தான். அந்த நிமிடங்களை ஆழ்ந்து அனுபவித்தவனின் மனதில் அவனின் “ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ !!!!!” மட்டுமே!!!

 

‘காதல் வருவது தெரிவதில்லையே

அதை கடவுள் கூடத்தான் அறிவதில்லையே

பூக்கள் பூப்பது தெரிவதில்லையே

அதை யாரும் என்றுமே பார்த்ததில்லையே’

 

அவன் பேசாமளே இருக்கவும் ஸ்ரீ மறுமுனையில் கத்தி கத்தி ஓய்ந்து போனவள் பின்பே தன் அன்னையிடம் சொல்ல வேண்டும் என நினைவு வந்து அவருக்கு அழைத்து விஷயத்தைப் பகிர்ந்தாள்.

 

விஷயம் கேள்விப்பட்டதும் அனைவரும் அவளை அதை சாப்பிடு இதை சாப்பிடு என ஒரு வழியாக்கிவிட்டனர்.

 

அனைவரும் ஊரிலிருந்து வந்துவிட, ஹரியும் ஆசையாக தன்னவளைக் காண ஓடோடி வந்தான்..

 

ஆனால் அவனின் துரதிர்ஷ்டம் மாமனை மஞ்சள் தண்ணீர் ஊத்திய பின்பே பார்க்க அனுமதிப்போம் என கூறிவிட, அவன் முகம் காற்று போன பலூன் ஆகியது.அப்போதும் தன் முயற்சியைக் கைவிடாமல் பைப்பில் ஏறி சாகசம் செய்தெல்லாம் பார்த்து விட்டான், ஆனால் அவன் கெரகம் அவள் அறையில் அவன் பாட்டி படுத்து உறங்கிக் கொண்டிருக்க, தன் விதியை நொந்து கொண்டே கீழிறங்கி வந்தான்.

 

அவளும் இந்த விஷயத்தைக் கேட்டு உள்ளே பேயாட்டம் போட்டு குட்டிக்கரணம் அடித்து என்னென்னவோ செய்து பார்த்தும் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான். எனவே மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டே அந்த மஞ்சள் நீராட்டு விழாவிற்காக காத்துக் கொண்டிருந்தாள்.

 

அந்த நாளும் அழகாகவே விடிய, தாத்தா என்ன தான் கிராமத்து மனிதன் ஆகினும் இந்த ஊரையே அழைத்து இந்த விழாவை செய்ய அவருக்கு விருப்பமில்லை.

 

இது அவளுக்கு தர்மசங்கடமாக இருக்கும் எனக் கருதி தான் ஆதிராவிற்கு செய்தது போல் மிகவும் நெருங்கிய சொந்தம் பத்து பேரை மட்டுமே அழைத்திருந்தார்.மஞ்சள் நீராடியபின் அழகாக புடவை அணிவித்து சில குடும்ப நகைகளை அதற்கு தோதாக போட்டு விட்டு தலை நிறைய பூ வைத்து அவளை சபைக்கு அழைத்து வந்தனர்.

 

 

அதுவரையில் அவனை காண வேண்டும் என துடியாய் துடித்தவள் இப்போது தன் முன்னே நிற்பவனை நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் புதியாய் பூத்த வெட்க பூக்கள் வந்து அவளைத் தடுத்தது.

 

வயதிற்கு வந்ததும் அவனை அழைத்து சொன்ன போது வராத கூச்சம் , வெட்கம் இப்போது வந்து அவளை தலை நிமிரச் செய்யாமல் இருக்க, அவளின் இந்த பரிணாமத்தில் ஹரி தான் மிகவும் தவித்துப் போனான்.

 

புதிதாய் மலர்ந்த காதல் அவனுள் எண்ணிலடங்கா மாற்றங்களை நிகழ்த்தியிருக்க, அவள் முகம் காண ஏங்கிக் கிடந்தான்.

 

கார்த்திக் தான் ,”அம்மா யாரிந்த பொண்ணு பக்கத்து வீட்டு பார்வதி பாட்டிக்கு புடவை கட்டுன மாதிரி இருக்கு அதுவும் குனிஞ்ச தலை நிமிராம வேற இருக்கு, ஒருவேளை வயசானதுனால சுலுக்கு பிடிச்சுக்கிச்சோ ” என கிண்டல் செய்ய,

 

விலுக்கென நிமிர்ந்தவள் சபை என்றும் பாராமல் எப்போதும் போல் அவனை அடிக்க கையை ஓங்க,”ஸ்ரீ!!!! ” என்று நாலா பக்கமும் தன் அன்னை, பாட்டி ,தாத்தா, அப்பாவிடம் இருந்து வந்த குரலில் கையைக் கீழிறக்கிக் கொண்டு அவனை பார்வையாலே சுட்டெரித்தாள்.

 

அவள் நிமிர்ந்ததும் அவளைப் பார்த்து அப்படியே சிலையாகிப் போனான் ஹரி, இத்தனை நாளாய் சிறிய குழந்தையாய் அவன் கண்களுக்கு தெரிந்தவள் இப்போது ஒரே வாரத்தில் குமரியான அதிலும் மிகவும் அழகான குமரியாகிப்போன மாயம் புரியாமல் மந்திரித்து விட்ட கோழி போல் இருந்தவன் அவன் அன்னை அவனை அழைத்து அவளுக்கு மாலை போட சொன்ன பின்பே நிகழ்காலத்திற்கு வந்தான்.

 

 

தன் அன்னை சொன்னதை செய்ய மாலையை வாங்கியவனின் கண்களில் இப்போது காதலோ ஆசையோ எதுவும் இல்லை, மாறாக அளவுகடந்த அன்பே அதில் தெரிந்தது.

 

அவள் வயதையும் தன் வயதையும் கருத்தில் கொண்டவன் அவளுள் இப்போது ஆசையை விதைப்பது தவறு எனக் கருதி, தன் காதலை அவளிடம் இருந்து மறைத்தான், விதியின் விளையாட்டை அறியாமல்.

 

அவளுக்கு மாலையை அணிவித்தவன் அவள் கன்னத்தைத் தட்டி ,”பெரிய மனுஷி பெரிய மனுஷின்னு சொல்லுறாங்களே ஆனா இன்னும் குட்டை கத்திரிக்காயாவே இருக்கியே லட்டு குட்டி ” என பாவப்படுவது போல் உச்சுக் கொட்டியவன் அவள் அடிக்க துரத்துவதற்கு முன் அங்கிருந்து ஓடியிருந்தான்.

 

அந்த விழா இனிதே நிறைவடைய, அதன் பின் அவர்கள் வாழ்வில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தேரியது.

 

ஹரி கல்லூரியில் சேர்ந்த பின் ஸ்ரீயுடன் போனில் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டான், காரணம் அவன் கல்லூரியில் உள்ள அனைவரும் ஜோடி ஜோடியாக சுத்திக் கொண்டிருக்க இவனுக்கு அதைக் காணும் போது கடுப்பாக இருந்தது.

 

‘எப்போது இவள் வளர்ந்து எப்போது நான் இப்படி லவ் பண்ணி சுத்த என பெருமூச்சு விட்டவன் , எங்கே அவளிடம் பேசினால் தன்னையுமறியாமலே தன் காதல் வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் தான் கல்லூரியில் பயங்கர வேலை எனக்கூறி சமாளித்து வந்தான்.

 

ஆனால் அங்கு ஸ்ரீ தான் மிகவும் தவித்துப் போனாள். பெரிய மனுஷி ஆனதிலிருந்து அவள் உடலிலும் மனதிலும் பல மாற்றங்கள் தோன்றியதைப் போல் உணர்ந்தவள் , அதே சமயம் ஹரியும் பேசாமல் இருந்தது அவளுக்குள் பல பூகம்பங்களை நிகழ்த்தியது.

 

அவனுக்கு அவளாகவே அழைத்தாலும் ஓரிரு வார்த்தைகள் அவன் பேசிவிட்டு வைத்துவிடுவதில் அவள் மனம் கூம்பிப் போனாள் . அவனிடம் என்னவென்று கேட்டு முன்பு போல் சண்டை போடவும் அவளால் முடியவில்லை எனவே தனக்குள்ளேயே ஏதேதோ சிந்தித்துக் கொண்டு குழம்பிக் கொண்டிருந்தாள்.

 

சந்துவுடன் ஒரே வீட்டிலிருந்து ஒரே பள்ளிக்கு சென்று வந்தாலும் காரில் போய் வரும் வேளையை தவிர, அவள் சந்துவை பார்ப்பதே முடிவதில்லை.

 

தான் அன்று பேசியதன் விளைவு தான் என நினைத்து வருந்தினாலும் அவளிடம் சென்று அதைப் பற்றி பேச ஏதோவொன்று தடுத்தது.

 

இப்படியே நாட்களும் நகர்ந்து நகர்ந்து வருடங்களும் கடந்தது.

 

அப்போது ஸ்ரீ பத்தாம் வகுப்பு இறுதியில் இருந்தாள்.

 

அன்று தான் அவளின் கடைசி தேர்வு, அதை முடித்து விட்டு தன் தோழிகளான நந்துவுடனும், வர்ஷூவுடனும் கதைகளை பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தவளை அவளின் வகுப்புத் தோழியான சிந்தியா அழைத்தாள்.

 

சிந்தியா அவர்கள் வகுப்பிலே மிகவும் அழகான பெண், அதில் அவளுக்கு மிகவும் கர்வம் என்பதால் அவளிடம் இவர்கள் அனைவரும் ஒதுங்கியே இருப்பர். இப்போது அவளே தானாக வந்து பேசவும் என்னவென்று புரியாமல் ஸ்ரீ நந்துவின் காதைக் கடித்தாள்.

 

“ஹேய் இந்த மேனாமினுக்கி எதுக்கு டி நம்மளை கூப்பிடுறா” என மெதுவாக கேட்க,

 

 

அங்கு ஓடி வந்து கொண்டிருந்த சிந்தியாவைப் பார்த்து இழித்துக் கொண்டே,”நம்மளை இல்லை உன்னை ” என நந்து பதில் கூறி முடித்ததும் அவர்கள் அருகில் வந்து நின்றாள் சிந்தியா.

 

“ஹேய் ஸ்ரீ இந்தா” என எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் அவள் கையில் ஒரு காகிதத்தை திணித்தாள்.

 

“இது என்ன” என புரியாமல் ஸ்ரீ கேட்க,

 

“லவ் லெட்டர்” என அங்கிருந்து பட்டென பதில் வந்தது.

 

“என்னாஆஆஆது லவ் லெட்டரா ” என வர்ஷூ ஷாக் ஆக,

 

“கொஞ்சம் வாயை மூடு வர்ஷூ வாய்க்குள்ள கொசு போய்றப்போது..அப்பறம் ஸ்ரீ அன்னைக்கு உன் மாமா பையன் ஹரி இங்க உன்னை கூட்டிட்டு போக வந்திருந்தானே அவனை எனக்கு பார்த்ததும் பிடிச்சிருச்சு..சோ நீ என்ன பண்ற இந்த லெட்டரை அவன் கிட்ட கொடுத்துரு..இதுலையே என்னோட போன் நம்பரும் இருக்கு அவனை நைட் கால் பண்ண சொல்லு ஓகே வா” என கடகடவென பேசியவள் தன் வேலை முடிந்தது போல் அங்கிருந்து கிளம்பினாள்.

 

ஆனால் அவள் சொல்லிச் சென்றதை கேட்டு நந்துவும் வர்ஷூவும் அதிர்ச்சியில் இருந்து வெளிவராமல் அப்படியே நிற்க, முதலில் தெளிந்த நந்து ஸ்ரீயை உலுக்கினாள்.

 

சுயநினைவை அடைந்த ஸ்ரீயின் முகமெல்லாம் குபுகுபுவென கோபத்தீ பற்றி எரிந்தது.

 

“எவ்வளவு தைரியம் இருந்தா என் கிட்டையே அவ இப்படி சொல்லிட்டு போவா அவளை நான் சும்மா விட மாட்டேன் ..எனக்கு டி சி யே கொடுத்தாலும் பரவாயில்லை இருக்கு அவளுக்கு..சரியான திமிரு பிடிச்சவ கொரங்கு ராட்சஷி” என தன் பாட்டிற்கு இன்னும் திட்டிக் கொண்டே போக,

 

“நீ ஹரி அண்ணாவை லவ் பண்றியா” என்ற நந்துவின் கேள்வியில் அப்படியே ஸ்தம்பித்து நின்றாள்.

 

சிறுவயதிலிருந்து அவளை பார்த்து ஒன்றாக படித்து வளர்ந்த நந்து சரியாக அவள் மனதை கண்டுபிடித்து கேட்க, வர்ஷூவோ இப்போது தான் பத்தாம் வகுப்பில் இங்கு வந்து சேர்ந்து அவர்களுடன் நட்பு கொண்டாள் என்பதால் அவளுக்கு ஸ்ரீயைப் பற்றி பெரிதாக தெரியவில்லை எனவே அவள் அமைதியாக வேடிக்கை பார்த்தாள்.

 

நந்து கேட்டதும் ஸ்ரீ ஒரு நொடி அப்படி அதிர்ந்து நின்றாலும் அடுத்த நொடியே தெளிவாக வந்து விழுந்தது வார்த்தைகள்,

 

” அம்மா தன்னோட குழந்தை மேல பிறக்குறதுக்கு முன்னாடி இருந்து இறக்குறது வரைக்கும் வைக்கிற அந்த மாறாத பாசத்துக்கு பேரு காதல்னா…யெஸ் நானும் என் ஹரியை லவ் பண்றேன்” என தெள்ளத் தெளிவாக தன் காதில் வந்து விழுந்த வார்த்தையில் , ஸ்ரீயின் காதலின் ஆழத்தை உணர்ந்து கொண்ட நந்துவிற்கும் வர்ஷூவிற்கும் உடல் சிலிர்த்து அடங்கியது!!!!!!

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்