
காயத்ரி திடீரென நிரஞ்சனாவிற்கு அழைப்பை ஏற்படுத்தி அவள் அதனை ஏற்கவும் துஷ்யந்தின் கரத்தில் கைப்பேசியை திணித்து விட்டுச் செல்ல, இதனை எதிர்ப்பார்க்காத இருவருமே பேச்சற்றுப் போயினர்.
வெகுநேரம் இருவருக்கும் இடையில் மௌனம் நிலவ, தன்னை சமன்படுத்திக் கொண்டு, “ஹலோ…” என்றான் துஷ்யந்த்.
மறுமுனையில் இருந்தவளுக்கோ துஷ்யந்தின் குரலைக் கேட்டதும் இதயம் இரு மடங்கு வேகத்தில் துடித்தது.
நிரஞ்சனாவிடம் இருந்து பதில் வராது போகவும், “ஹலோ… கேட்குதா?” எனக் கேட்டான் துஷ்யந்த் மீண்டும்.
“ஹ…ஹலோ… ஆமா…” என்றாள் நிரஞ்சனா அவசரமாக.
“ம்ம்ம்…” என்ற துஷ்யந்த் சில நொடிகள் இடைவெளி விட்டு, “ஐம் சாரி…” என்றான்.
“எதுக்கு இந்த சாரி?” எனக் கேட்டாள் நிரஞ்சனா குழப்பமாக.
“உங்க கூட சரியா பேசல இத்தறை நாளும். மெசேஜ்ல கூட.” என்ற துஷ்யந்திற்கு பேச்சை வளர்ப்பது வெகு சிரமமாக இருந்தது.
“இவ்வளவு மரியாதை எல்லாம் வேணாம். அன்ட் சாரி எல்லாம் கேட்க வேணாம். வேணும்னு பண்ணலயே நீங்க. ஃப்ரீயா இருந்து இருந்தா பேசி இருப்பீங்க.” என்ற நிரஞ்சனாவின் பேச்சில் துஷ்யந்திற்கு உண்மையாகவே அவளை நினைத்து வியப்பாக இருந்தது.
எவ்வளவு முதிர்ச்சியான அணுகுமுறை.
துஷ்யந்திற்கு தன்னை நினைத்தே வெட்கமாக இருந்தது.
துஷ்யந்திடமிருந்து எந்த சத்தமும் வராமல் போகவும், “என்ன பண்ணுறீங்க?” எனத் தானே கேட்டாள் நிரஞ்சனா.
“சும்மா தான். மாடில நிற்கிறேன்.” என்றவன், “உன் கூட பேசிட்டு…” என்றான் துஷ்யந்த் சில நொடிகள் கழித்து.
துஷ்யந்தின் அழைப்பில் அங்கு நிரஞ்சனாவோ ரெக்கைகள் இன்றி வானில் பறந்தாள்.
“நிரஞ்சனா…” என துஷ்யந்த் அழைத்தும் அவளிடம் இருந்து பதில் வராமல் போக, “நிரஞ்சனா…” என்றான் துஷ்யந்த் சத்தமாக.
மறுமுனையில் இருந்தவளோ எப்போதோ கனவுலகில் மிதந்து கொண்டு இருந்தாள்.
திடீரெற துஷ்யந்தின் குரல் கேட்கவும் பதறி அடித்துக்கொண்டு கொண்டு எழுந்தவள், “,ஹான்… இருக்கேன் இருக்கேன். சொல்லுங்க. என்னாச்சு?” எனக் கேட்டாள் நிரஞ்சனா.
துஷ்யந்த் ஏதோ கூற வாய் எடுக்க, அதற்குள் அவனைத் தேடி பரிமளம் வந்து விட்டார்.
“இங்கயா கண்ணா நிற்கற? கீழே ஐயர் வந்துட்டார். எல்லாரும் உனக்காக தான் வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க.” என்றார் பரிமளம்.
“வரேன் மா. நீங்க போங்க. நான் வரேன் கீழே.” என்ற துஷ்யந்த் பரிமளம் சென்றதும், “நிரஞ்சனா…” என அழைத்தான்.
அவளோ ஒரு மோன நிலையில், “ம்ம்ம்…” என்றாள்.
“உன் கூட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு. நேர்ல… நாளைக்கு உனக்கு டைம் இருக்கா?” எனக் கேட்டான் துஷ்யந்த்.
மறுமுனையில் இருந்தவள் அதனைக் கேட்டு சிறு பிள்ளை போல் துள்ளிக் குதித்தாள்.
நிரஞ்சானவிடமிருந்து பதில் வராமல் போகவும், “எ…என்னாச்சு? உனக்கு கஷ்டமா இருந்தா வேணாம். இட்ஸ் ஓக்கே.” என துஷ்யந்த் கூறவும், “ஐயோ இல்ல இல்ல… எனக்கு ஓக்கே. நான் வரேன். எங்கன்னு சொல்லுங்க. நான் வரேன்.” என்றாள் நிரஞ்சனா கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு.
“இல்ல நான் வந்து பிக்கப் பண்ணிக்குறேன்.” என துஷ்யந்த் கூறவும், “ம்ம்ம்…” என்ற நிரஞ்சாவின் முகம் வெட்கத்தில் செவ்வானமாய் சிவந்து விட்டது.
“ஓக்கே பாய்… அப்புறம் பேசுறேன்.” என்ற துஷ்யந்த் அழைப்பைத் துண்டித்து விட்டு எதிரே தெரிந்த வானத்தை வெறித்தான்.
எவ்வளவு முயன்றும் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை.
தன் பக்கத்தில் இருந்து ஒரு முயற்சி எடுத்துப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் தான் இவ்வளவும் செய்து கொண்டிருந்தான் அவன்.
துஷ்யந்த் கீழே சென்று அனைவருடனும் அமர, காயத்ரியின் பார்வை அவனிடமே இருந்தது அவனை ஆராய்ச்சி செய்யும் நோக்கில்.
அதனைப் புரிந்து கொண்ட துஷ்யந்த் உடனே முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு காயத்ரியைப் பார்த்து பெரிதாகப் புன்னகைத்தான்.
அதன் பின் தான் காயத்ரியின் முகமும் மலர்ந்தது.
பின் அடுத்த இரண்டு மாதத்தில் ஒரு நல்ல நாள் இருக்கவும் அதனையே திருமணத்துக்கு குறித்து விட்டு, அதற்கு முந்தைய நாள் நிச்சயத்தை நடத்தலாம் என முடிவு செய்தனர்.
துஷ்யந்த் அனைத்தையுமே ஒரு இயலாமையுடன் வேடிக்கை பார்த்தான்.
______________________________________________________
அடுத்து வந்த சில நாட்களில் துஷ்யந்த் ஒரு நண்பனாக நிரஞ்சனாவுடன் பேசும் அளவுக்கு நெருக்கம் ஆகி இருந்தான்.
சகுந்தலாவும் பரத்தும் ஊருக்குச் சென்று ஒரு வாரம் ஆகி இருந்த நிலையில் அன்று தான் அவர்கள் திரும்பி வர இருந்தார்கள்.
இடைப்பட்ட நாட்களில் பரத் மட்டும் இடைக்கிடையே அழைத்துப் பேசி இருந்தான்.
சகுந்தலா தேவைக்குக் கூட துஷ்யந்துடன் பேச முயற்சிக்கவில்லை.
ஒரு பக்கம் சகுந்தலாவின் விலகல் கஷ்டமாக இருந்தாலும் தான் எடுத்த முடிவில் துஷ்யந்த் உறுதியாக இருந்தமையால் அதனையும் ஏற்றுக்கொள்ளப் பழகினான்.
இருந்தும் இன்று அவர்கள் திரும்பி வருகிறார்கள் என அறிந்ததும் தன் ஆர்வத்தை அடக்க முடியவில்லை அவனால்.
சரியாக அவன் எதிர்ப்பார்த்த நேரமும் வந்தது.
“சாக்லேட் அங்கிள்…” எனக் கத்திக் கொண்டு ஓடி வந்த சிறுவனை ஆசையுடன் அள்ளித் தூக்கிக் கொண்ட துஷ்யந்த், “சேம்ப்… ஐ மிஸ்ட் யூ…” என்றவாறு பரத்தின் முகம் எங்கும் முத்தமிட்டான்.
சிறுவனோ துஷ்யந்தின் அன்பின் வெளிப்பாட்டில் குலுங்கிச் சிரிக்க, “அம்மா எங்க சேம்ப்? தனியா வந்திருக்க?” என துஷ்யந்த் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே துஷ்யந்தின் அறைக் கதவு திறந்தது.
சகுந்தலா மெதுவாக உள்ளே வர, அவளைப் புன்னகையுடன் ஏறிட்டுப் பார்த்த துஷ்யந்தின் முகம் மறு நொடியே கோபத்தில் சிவந்தது.
சகுந்தலாவின் பின்னால் வந்தவனைக் கண்டு பரத் இருப்பதையும் மறந்து துஷ்யந்த் ஆவேசமாக அவ் ஆடவனை நெருங்க, துஷ்யந்தின் கரத்தில் இருந்த பரத்தோ துஷ்யந்த் தன்னை அணைத்திருந்த கரங்களை வேகமாக விலக்கி விட்டு இறங்கி, “டேடி…” என்றவாறு அவ் ஆடவனை நோக்கி ஓடினான்.
அதனைக் கேட்டு ஏகத்துக்கும் அதிர்ந்து நின்றான் துஷ்யந்த்.
தன்னை நோக்கி ஓடி வந்த பரத்தைத் தூக்கிக் கொண்ட ரிஷிகேஷோ, “உன் சாக்லேட் அங்கிள பார்த்துட்டியா? இப்போ ஹேப்பியா?” எனக் கேட்டான் பரத்திடம்.
சிறுவனும் சந்தோஷத்துடன் தலையை எல்லாப் பக்கமும் ஆட்ட, துஷ்யந்தை நெருங்கிய ரிஷிகேஷ், “ஹலோ டாக்டர்… ஐம் ரிஷிகேஷ். பரத்தோட அப்பா.” என்றவாறு துஷ்யந்தை நோக்கி தன் கரத்தை நீட்டினான் புன்னகையுடன்.
துஷ்யந்தோ இன்னுமே தன் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் சகுந்தலாவையே வெறித்துப் பார்க்க, அவளோ துஷ்யந்தின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை குனிந்து நின்று இருந்தாள்.
“அங்கிள்… டேடி எனக்கு நிறைய டாய்ஸ், புக்ஸ், ஸ்னேக்ஸ் எல்லாமே கொண்டு வந்தார். பரத் ஹேப்பியோ ஹேப்பி.” என பரத் சந்தோஷமாகக் கூற, துஷ்யந்தின் மனமோ சொல்ல முடியா உணர்வில் தவித்தது.
ரிஷிகேஷ் இன்னுமே துஷ்யந்தை நோக்கி நீட்டிய கரத்தை விலக்காமல் இருக்க, இறுகிய முகத்துடன் ரிஷிகேஷின் கரத்தைப் பற்றிக் குலுக்கிய துஷ்யந்திற்கு அதனை உடைத்து விடும் வேகம்.
ஆனால் தன் தொழிலுக்கு மரியாதை கொடுத்து அமைதி காக்க வேண்டி இருந்தது.
“இவ்வளவு காலமா என் பையன் கூட என்னால இருக்க முடியல. ஆனா என் பையனுக்கு இப்படி ஒரு பிரச்சின்னைன்னு தெரிஞ்சதும் ஒரு அப்பாவா என்னால அதுக்கு மேல விலகி இருக்க முடியல டாக்டர். நேரடியாவே உங்கள சந்திச்சு பரத்தோட ஹெல்த் பத்தி தெரிஞ்சிக்கலாம்னு தான் வந்தேன்.” என்ற ரிஷிகேஷிற்கு வெறும் தலையசைப்பையே பதிலாகக் கொடுத்தான் துஷ்யந்த்.
துஷ்யந்திற்கு சகுந்தலாவிடம் கேட்க நிறைய கேள்விகள் இருந்தன.
ஆனால் ரிஷிகேஷை வைத்துக் கொண்டு துஷ்யந்தால் அவளுடன் பேச முடியவில்லை.
துஷ்யந்த் அழைப்பு மணியை தட்டவும் பரத்தை வழமையாகக் கவனிக்கும் தலைமைத் தாதி அங்கு வர, “சிஸ்டர்… பரத்த கூட்டிட்டு போய் ரெகியுலர் செக்கப்ஸ் எல்லாம் எடுங்க.” என அவரிடம் கூறியவன், “மிஸ்டர் ரிஷிகேஷ்… நீங்க பரத்த கூட்டிட்டு போய் ரெகியுலர் செக்கப்ஸ முடிங்க. ரிப்போர்ட்டையும் கையோட கொண்டு வாங்க. அதைப் பார்த்தா தான் எதுவும் சொல்லலாம்.” என்றான்.
ரிஷிகேஷ் பரத்துடன் வெளியேற, அவர்களைப் பின் தொடர்ந்து செல்லப் போன சகுந்தலாவை துஷ்யந்தின் குரல் தடுத்து நிறுத்தியது.
“மிஸ் சகுந்தலா… நீங்க கொஞ்சம் நில்லுங்க. பரத்தோட டயட் பத்தி கொஞ்சம் பேச வேண்டி இருக்கு.” என்ற துஷ்யந்தின் குரலில் அவ்வளவு கடுமை.
சகுந்தலாவிற்கே அக் குரலில் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.
ரிஷிகேஷ் சென்றதை உறுதிப்படுத்திய துஷ்யந்த் சகுந்தலாவை அழுத்தமாக நோக்கினான்.
“எ…என்ன விஷயம்?” எனக் கேட்டாள் சகுந்தலா தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.
“ஏன்? என்ன விஷயம்னு உனக்குத் தெரியாதா?” எனக் கேட்ட துஷ்யந்திற்கு தன் கோபத்தை அடக்குவது பெரும்பாடாக இருந்தது.
சகுந்தலா எதுவும் பேசாது மௌனம் காக்க, முயன்று பொறுமை காத்த துஷ்யந்த், “என்ன நடந்துச்சு இந்த ஒரு வார்த்துக்குள்ள? எதுக்காக அந்தப் பொறுக்கிய பரத்துக்கு நெருக்கமா பழக விட்டிருக்க?” எனக் கேட்டான்.
“பரத்தோட அப்பா பரத் கூட தானே இருக்கணும். அதுவும் இல்லாம நீங்க தானே சொன்னீங்க பரத் அப்பா பாசத்துக்கு ஏங்குறான்னு.” என்றாள் சகுந்தலா எங்கோ பார்த்துக்கொண்டு.
“மை ஃபூட்…” எனக் கோபமாகக் கத்திக் கொண்டு திடீரென துஷ்யந்த் எழுந்து நிற்க, துஷ்யந்தை மிரண்ட பார்வை பார்த்தாள் சகுந்தலா.
முதல் முறை துஷ்யந்தை இவ்வளவு ஆவேசமாகப் பார்க்கிறாள்.
சகுந்தலாவின் மிரட்சியான பார்வையில் தன் தவறை உணர்ந்த துஷ்யந்த், “ஐம் சாரி… ஐம் சாரி… நீ முதல்ல உட்கார்.” என்றவன் சகுந்தலா அங்கிருந்து இருக்கையில் அமரவும் அவளை நோக்கி தண்ணீர்க் குவளையை நகர்த்தி வைத்தான்.
சகுந்தலாவிற்கும் அச் சமயம் அது அவசியமாக இருக்க, அதனை எடுத்து தன் தொண்டையில் சரித்தாள்.
சகுந்தலா இன்னுமே அமைதியாக நிற்க, “என்ன தான்மா ஆச்சு?” என துஷ்யந்த் பரிவுடன் கேட்கவும் சட்டென அழுது விட்டாள் சகுந்தலா.
அவளின் உடல் வெளிப்படையாக நடுங்க, அவளை அணைத்து ஆறுதல்படுத்த முயன்ற மனதை அடக்கியவாறு தன் கைகளை ஜீன்ஸ் பாக்கெட்டினுள் நுழைத்துக் கொண்டான்.
“உன்ன அந்தளவுக்கு அபியூஸ் பண்ணின ஒருத்தன எப்படி நீ திரும்ப உன் லைஃப்ல அலோ பண்ணலாம் சகுந்தலா. அவன் பண்ணது மெரிட்டல் ரேப்ப விட மோசம். அவ்வளவு கேடு கெட்ட ஒரு பொறுக்கிய நீ எப்படி உன் பையன் கிட்ட அனுமதிக்கலாம்?” என துஷ்யந்த் கேட்கவும் சகுந்தலாவின் அழுகை அதிகரித்ததே தவிர அவள் வாயைத் திறந்தபாடில்லை.
துஷ்யந்தின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து கொண்டிருந்தது.
“நீ வாயைத் திறந்து ஏதாவது சொன்னா தான் என்னால உனக்கு ஹெல்ப் பண்ண முடியும் சகுந்தலா.” என்றான் துஷ்யந்த் கோபமாக.
உடனே வேகமாக மறுத்துத் தலையசைத்த துஷ்யந்த், “வேணாம்… வேணாம்… ப்ளீஸ் துஷ்யந்த்… அப்படி எதுவும் பண்ணிடாதீங்கா. ப்ளீஸ்… என் பையன் எனக்கு வேணும்.” எனக் கதறினாள் பெண்ணவள்.
“என்ன தான் அப்போ பண்ண சொல்ற?” எனக் கேட்டான் துஷ்யந்த் ஆவேசமாக.
“எதுவுமே பண்ண வேணாம். நீங்க எதுவுமே பண்ண வேணாம். தயவு செஞ்சு என் கிட்ட எதுவும் கேட்காதீங்க . உங்க கேள்விகளுக்கு பதில் சொல்ற நிலமைல நான் இல்ல. ப்ளீஸ்… நீங்களும் கேள்வி கேட்டு என்னை சோதிக்காதீங்க. உங்க டியூட்டிய மட்டும் நீங்க பாருங்க. அது தான் நீங்க எனக்கு பண்ணுற பெரிய உதவியா இருக்கும்.” எனப் பதிலுக்கு கோபமாகக் கத்தினாள் சகுந்தலா கண்ணீருடன்.
சகுந்தலாவின் வார்த்தைகளில் ஏகத்துக்கும் அதிர்ந்தான் துஷ்யந்த்.
சகுந்தலாவின் முகத்தையே வெறித்துப் பார்த்தான்.

