Loading

உயிர் – 14

அகிலனும், அனுராதாவும் மகிழ்ச்சியான மனநிலையோடு ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டே வீட்டிற்குள் நுழையவும்.

ஏற்கனவே, பத்ரகாளியாய் ஹாலில் அமர்ந்திருந்த கீதாவின் கோபத்திற்கு தூபம் போடுவது போல் ஆகிப் போனது இக்காட்சி.

கோபத்தில் முகமே ஜிவ்ஜிவ்வென்று சிவந்து போக எழுந்து நின்றவர், “இந்த நேரத்துல எங்க போயிட்டு வரீங்க இரண்டு பேரும்?”.

“அம்மா நீங்க இன்னும் தூங்க போகலையா.. ஹாப்பி நியூ இயர் மா” என்றவாறு அவரை அணைக்க சென்ற அகிலனை பிடித்து தள்ளி விட்டார்.

“முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. இந்த நேரத்துல இவள கூப்பிட்டுகிட்டு எங்கடா போயிட்டு வர?” என்று எரிந்து விழுந்தார்.

“அம்மா நியூ இயர் செலப்ரேட் பண்ணிட்டு வரோம். நாங்க மட்டும் இல்ல.. கூட ஆதவ் அண்ணாவும், ருக்மணியும் கூட வந்திருந்தாங்க”.

“ஓ! அவங்க ஜோடியா சுத்துறதுக்கு நீங்க ரெண்டு பேரும் துணையா” என்றவர் அனுராதாவை முறைத்து பார்த்து, “வயசு பொண்ணா லட்சணமா வீட்ல இருக்கணும்ன்ற அறிவில்ல. இப்படித்தான் கண்ட நேரத்துல ஆம்பளைங்களோட சேர்ந்து ஊர் சுத்திட்டு வருவியா.. நாளை பின்ன உன் அம்மா மாதிரி வயித்த தள்ளிக்கிட்டு வந்து நின்னா என்ன பண்றது?” என்று வரம்பு மீறி வார்த்தைகளை தீப்பிழம்பாக்கி அவள் மேல் கொட்டி விட்டார்.

அவரின் வார்த்தையில் துடி துடித்து போன அனுவிற்கு நொடியில் கண்ணீர் நிரம்பி விட. அகிலனின் முன்பு நிற்கவே உடல் கூசியது.

“அம்மா என்ன பேசுறீங்க நீங்க?” என்று அகிலன் அதட்டவும்.

கீதாவிற்கு கோபம் இரட்டிப்பாக, “என்னடா அவளை ஒரு வார்த்தை சொன்னதும் நீ எதுக்கு இப்ப கத்துற.. என்ன உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதாவது இருக்கா?” என்று உறுத்து விழித்தார் தன் மகனை.

“என்னம்மா பைத்தியம் மாதிரி பேசுறீங்க.. உங்களுக்கு என்ன பைத்தியம் ஏதாவது பிடிச்சிடுச்சா”.

“ஆமா டா. இப்போ உன் கண்ணுக்கு நான் பைத்தியக்காரி மாதிரி தான் தெரிவேன். இதோ நிக்கிறாளே இவ தான் தேவதையா தெரிவா.. ஏன்னா, உன் வயசு அப்படி.. இந்த வயசுல மனசு அலைபாயத்தான் செய்யும். அவசரப்பட்டு நீயும் என் அண்ணன் மாதிரி இவ மேல கைய வச்சு தொலைச்சுட்டேனா, இவ அம்மா இந்த வீட்டுக்கு மருமகளா வந்து உட்கார்ந்துகிட்ட மாதிரி இவ என் வீட்டுக்கு மருமகளா வந்து உட்கார்ந்திடுவாளோனு ஒவ்வொரு நிமிஷமும் வயித்துள்ள நெருப்பை கட்டிக்கிட்டு பக்கு பக்குன்னு உட்கார்ந்து இருக்கேன் டா. உன் கண்ணுக்கு என்னை பாத்தா பைத்தியக்காரி மாதிரி தெரியுதா”.

“அத்த என்ன பேசுறீங்க நீங்க” என்றவளுக்கு ஆத்திரத்தில் உடல் முழுவதும் ஒரு வித நடுக்கம் பரவியது.

அனுவிற்கு ஆதங்கம் தாங்க முடியவில்லை. கொட்ட கொட்ட குனிந்தால் இவர் வாட்டமாக கொட்டிக் கொண்டே இருக்கிறாரே..

அவளின் தாய்க்காக தான் இத்தனை நாள் அவள் வாயை மூடிக்கொண்டு இருந்தாள். ஆனால், இவரின் வரம்பு மீறிய வார்த்தைகள் இன்று அவளின் வாயின் பூட்டை தகர்த்தெறிந்து இருந்தது.

அவரின் பேச்சு அகிலனுக்குமே அருவருப்பாக தான் இருந்தது. தன் தாயைப் பார்த்து முகத்தை சுழித்தவன், “என்னம்மா இப்படி எல்லாம் பேசுறீங்க நீங்க?”.

“ரெண்டு பேருக்கும் முறைன்னு ஒன்னு இருக்குல்ல.. மாமன் மக தானேன்ற ஆசையில ரெண்டு பேரும் மனசுல எந்த ஆசையையும் தேவையில்லாம வளத்துக்காதீங்க. உன்னை தான் டி சொல்றேன்” என்று அனுராதாவை உறுத்து விழித்தவர், “என் மகனை கைக்குள்ள போட்டுக்கிட்டு இந்த வீட்டுக்கு மருமகள் ஆகிடனும்னு கனவு காணாத. எப்படியும் உன் லட்சணத்துக்கு எவனும் உன்னை கட்ட மாட்டான். அதனால, என் பையன வளச்சு போடலாம்னு நெனச்ச சாவடிச்சிடுவேன் உன்னை.. ஒருநாளும் உன்னை நான் என்னுடைய மருமகளா ஏத்துக்கவே மாட்டேன்”.

அவரின் தேவையற்ற வார்த்தைகளும், அபாண்டமான பழியும் அனுராதாவிற்கு கண்களில் நிற்காமல் கண்ணீரை சுரக்கச் செய்தது.

இது நாள் வரையிலும் அவள் அகிலனை தப்பான ஒரு பார்வை பார்த்ததும் கிடையாது. மனதளவில் கூட அவன் மேல் எந்த ஒரு ஆசையும் கொண்டது கிடையாது.

தன் தகுதி என்ன என்பதை அறிந்து சற்று தள்ளியே இருந்து கொள்வாள். அவளை பார்த்து எப்படிப்பட்ட விஷம் தடவிய வார்த்தைகளை எல்லாம் வீசுகிறார்.

அதிலும், அவளின் ஒழுக்கத்தையும், மானத்தையும் பற்றி அவதூறாக பேசுவதை அவளால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“போதும் அத்த! தேவையில்லாம பேசாதீங்க.. என்னைக்கும் என் அம்மா மாதிரி நான் யாரையும் நம்பி எந்த தப்பும் பண்ணிட மாட்டேன். அதோட உங்க குடும்பத்துக்கு மருமகளா வரணும்னு எனக்கு எந்த ஆசையும் இல்லை. என் படிப்பு முடிஞ்சதும் வேற வேலை தேடிக்கிட்டு என் அம்மாவோட நான் இந்த வீட்டை விட்டு போயிடுவேன். அதுக்கப்புறம் எனக்கு உங்க யாருடைய தயவும் தேவையில்ல. இந்த குடும்பத்தோட எந்த ஒரு உறவும் தேவையில்ல”.

அவள் பாதி பேசி முடித்ததும் தான் அவ்விடம் வந்து சேர்ந்த கோமதி, அவளின் வார்த்தைகளை கேட்டு சரியாக புரிந்து கொள்ளாமல் அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார்.

தன் தாயின் எதிர்பாராத அடியில் அதிர்ந்து விழித்தவள். தன் கன்னத்தை கரம் கொண்டு பொத்தியவாறு அழுகையோடு அவரை பார்த்தாள்.

“என்ன பேசுற நீ.. பெரியவங்க கிட்ட இப்படி தான் மட்டு மரியாதை இல்லாம பேசுறதா.. முதல்ல அத்தை கிட்ட மன்னிப்பு கேளு” என்ற அதட்டில் வேறு.

அது இன்னமும் அனுராதாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது.

“நாலு வார்த்தை படிச்சதும் திமிரு வந்துடுச்சா.. வீட்டை விட்டு போறேன். யாரோட தயவும் தேவை இல்லைனு திமிரா பேசுற.. அத்தை கிட்ட மன்னிப்பு கேளு டி” என்று மேலும் அதட்டவும்.

“என்ன டி ஆத்தாளும், மகளும் சேர்ந்துகிட்டு நாடகமா போடுறீங்க. உங்க நாடகத்துக்கு எங்க அம்மா வேணும்னா மயங்குவாங்க. இந்த கீதா ஒரு நாளும் மயங்கமாட்டா. இவ என்னை பார்த்து என்ன பேச்சு எல்லாம் பேசுறா.. படிப்பு முடிஞ்சதும் வீட்டை விட்டு போயிடுவாங்கலாமே.. எங்க போடி பாப்போம். போய் காட்டு அப்போ ஒத்துக்குறேன் நீ சொன்னதெல்லாம் உண்மைன்னு.. எங்க தயவு வேண்டாம்னு தான சொல்ற.. எங்க தயவு இல்லாம உன்ன எவன் கல்யாணம் பண்ணி வாழுறான்னு நாங்களும் பார்க்கிறோமே.. உன்னையெல்லாம் எவன் கல்யாணம் பண்ணிப்பான். அப்படியே கட்டிக்கிட்டு போனாலும், உன்னை மாதிரி வாயாடியோட சந்தோஷமா வாழ முடியுமா.. நிச்சயமா உன் புருஷனோட வாழாம நீ பிரிஞ்சு தான் டி போவ” என்று சாபம் விடுவது போல் தூற்றவும் பதறிய கோமதி, “ஐயோ அண்ணி! இப்படி எல்லாம் பேசாதீங்க. ஏதோ சின்ன பொண்ணு தெரியாம பேசிட்டா. அவளுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்று அவரின் முன்பு கரம் கூப்பவும்.

அவரின் கையை தட்டி விட்டவள், “என்னமா பண்றீங்க?” என்றாள் ஆற்றாமையோடு கண்களில் கண்ணீர் வடிய.

“அத்தை அம்மா ஏதோ கோபத்துல இப்படி எல்லாம் பேசுறாங்க. நீங்க இதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க. அனு அம்மாவை கூப்பிட்டு உள்ள போ”.

“இங்க பாரு, இப்போவே நான் என்னுடைய முடிவை உங்க ரெண்டு பேர் கிட்டயும் சொல்லிடறேன். என் அக்கா பையனுக்கு ருக்மணியை பேசி முடிச்சிட்டாங்க. அதுக்காக உன் பொண்ண என் வீட்டுக்கு நான் மருமகளா ஏத்துப்பேன்னு கனவு காணாத”.

அவரின் சம்பந்தம் இல்லாத பேச்சில் விக்கித்து நின்றனர் தாயும், மகளும்.

“படிப்ப முடிச்சதும் எவனையாவது பார்த்து கட்டிக் கொடுக்குற வழியை பாரு” என்று இருவரையும் உறுத்து விழித்து விட்டு கோபமாக தன் அறைக்கு சென்று விட்டார்.

அனுராதாவிற்கு கண்களில் கண்ணீர் பொங்கிக்கொண்டு வந்தது. செய்யாத தவறுக்கு பழியையும், பாவத்தையும் சுமக்க முடியுமா என்ன..

அது எத்தனை பெரிய பாவம். எந்த ஒரு தவறும் மனதளவில் கூட செய்யாதவளுக்கு இத்தனை தூற்றல்கள் தேவை தானா..

அவளின் மனம் நினைத்து நினைத்து குமுறியது. அதிலும், தன் அன்னை தான் ஏதோ தவறு இழைத்து விட்டதை போல் அவரிடம் மன்னிப்பை யாசித்ததை இன்னமுமே அவளால் ஜீரணிக்க முடியவில்லை. வேகமாக தங்கள் அறைக்கு சென்றுவிட்டாள்.

தன் அன்னை சற்று நேரத்தில் நிகழ்த்திய நிகழ்வை நினைக்கையிலே அகிலனுக்கு பெரும் எரிச்சலாக வந்தது. கோபமாக தன் தலையை கோதியவன். அறைக்கு சென்றதும் முதல் வேலையாக இங்கே நடந்த சம்பவத்தை தன் அண்ணனுக்கு வாய்ஸ் ரெக்கார்ட் செய்து அனுப்பிவிட்டே படுக்கையில் விழுந்தான்.

அன்றைய இரவு முழுவதும் அனுவிற்கு தூங்கா இரவாகிப் போனது. புத்தாண்டிற்கான உற்சாகமும், குதூகலமும் அவளிடம் மொத்தமாய் வற்றி போன நீரோடையாய் வடிந்து போயிருந்தது.

கட்டிலில் குப்புற படுத்தவளிற்கு அழுதழுது கண்களில் கண்ணீர் கூட வற்றிப் போய் தான் காட்சி அளித்தது.

அழுததற்கு சான்றாய் அழுகையின் ரேகைகள் அவளின் முகத்தில் படர்ந்திருக்க. அப்படியே அழுது அழுது தூங்கிப் போனாள்.

தன் மகளின் அருகில் அமர்ந்த கோமதி அவளின் அழுது களைத்த முகத்தை பார்த்து தானும் அழுகையில் மருகியவர். அவளின் தலையை தடவி கொடுத்தார்.

அதிலும், அவர் அடித்ததன் அச்சு அவளின் கன்னத்தில் தடமாய் மாறி இருந்தது. அதை பார்க்க பார்க்க மேலும் அவருக்கு அழுகை விம்மலோடு அதிகரித்தது.

எனக்கு மகளாய் பிறந்து எத்தகைய வார்த்தைகளை எல்லாம் இவள் கேட்க வேண்டியதாய் ஆகிவிட்டது. சிறு வயது முதலே எந்த ஒரு சீராட்டும் பாராட்டும் இன்றி, ஏனோ தானோ என்று வளர்ந்தவள்.

அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைந்தால் போதும் என்று மட்டுமே அவரின் தாயுள்ளம் எண்ண. ஆனால், இன்று கீதா பேசிய வார்த்தைகள் அவருக்குள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.

எங்கே தன் மகளின் வாழ்க்கையும் தன்னை போல் பாழாய் போய்விடுமோ என்ற பயம் ஒரு வித மாயை போல் அவரை தனக்குள் உள்வாங்கி இருந்தது.

அதன் விளைவு மறுநாளே தன் கணவர் புண்ணியகோடியிடம் முதல் முறை தங்கள் மகளின் திருமண விஷயத்தைப் பற்றி பேச துவங்கினார் கோமதி.

படித்து முடித்து வேலை வாங்கி தன் தாயின் மரியாதையையும், கௌரவத்தையும் தான் சொந்த காலில் நின்று மீட்டெடுக்க அவரின் மகள் போராடிக் கொண்டிருக்க.

அதை அறியாத கோமதியோ தன் மரியாதை, கௌரவத்தை பற்றி எல்லாம் கெஞ்சமும் கவலை கொள்ளாமல், தன் மகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தால் போதும் என்று முடிவு செய்து விட்டார்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
9
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. ஆதவ் சீக்கிரம் தன் காதலை அனுவிடம் சொல்லி திருமணம் செய்து கொள்ள வேண்டும்.. பாவம் அனு..

    1. Author

      சீக்கிரம் எல்லாம் நல்லதாவே நடக்கும். உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி சிஸ் 🥰🙏