
தழல் 15:
ஆரா அன்றைய வேலைகளை முடித்து மணியைப் பார்க்க, ஒன்பதை நோக்கி வேகமாய் நகர்ந்துக் கொண்டிருந்தது முள். அனுராதா இன்றைய தினம் அறக்கட்டளைக்கு வராது இருக்க அவரின் வேலையும் அவளை ஆக்கிரமித்திருந்தது. இறுதியாய் விடுதியைச் சென்று ஒருபார்வை பார்த்துவிட்டால் கிளம்பிவிடலாம் என்ற எண்ணத்தில் வேகமாய் நடைப் போட்டாள் அவள். செல்லும் அவளை விழிகளால் மட்டுமே தொடர்ந்தான் வேந்தன். ஏனோ அவள் செல்லாமல் இங்கிருத்து அவனாலும் கிளம்பிவிட முடியவில்லை. அதே நேரம் இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு நெருங்கிச் சென்று அவளை சீண்டவும் பிரியப்படவில்லை. அது அவளுக்கு எத்தனை இடையூராய் இருக்கும் என்பதை உணர்ந்தவனால் அதை எப்பொழுதும் செய்யவே முடியாது.
பிள்ளைகள் அனைவரும் உண்டு முடித்து கூடடையும் பறவைகளாய் அறைகளில் ஒன்றிப் போயிருந்தனர். அறைக்கு இருவரென ஒதுக்கப் பட்டிருத்தது. அதில் யுவாவுக்கு மட்டும் தனியறை. அவனின் அறையில் மட்டும் எரிந்துக் கொண்டிருந்த விளக்கு அவன் உறங்காமல் இருப்பதை சொல்ல, சற்றே தேங்கி நின்றது அவள் கால்கள். வெறுமனை சாற்றியிருந்த கதவை, கொஞ்சமாய் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தாள். வெகு தீவிரமாய் சுற்றம் மறந்து ஓவியத்தில் லயித்திருந்தான் அவன். அதற்காக தான் அவனுக்கு தனியறையும் வழங்கப்பட்டிருத்தது. கதவை முழுவதுமாய் திறந்து அவன் பின்னால் போய் நின்றவள் ஒவியத்தை பாராத்தாள்.
ஓவியம் இன்னும் முழுதாய் முடிந்திருக்கவில்லை. தாய் ஒருத்தி மார்ப்போடு பிள்ளையை அரவணைத்திருப்பதைப் போன்றதான ஓவியம். ஓவியத்தில் இருந்த இரு முகங்களுமே வெற்றிடத்தை தாங்கி இருந்தது. பொதுவாகவே ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்கள் நுண்ணிய உணர்வுகளை புரிந்துக் கொள்வதில் வெளிபடுத்துவதில் மந்தபுத்தி உள்ளவர்களாக இருப்பார்கள். யுவாவும் அதற்கு விதிவிலக்கல்ல. ஓவியத்தில் அபார திறமை இருந்தாலும் நுண்ணர்வுகள் பிடிபடுவதில்லை அவனுக்கு. உணர்வுகளை காட்டாத ஓவியம் உயிர்ப்பதில்லையே. அதனாலே அவன் முகங்களை இறுதியாய் வரைவான். ஆதுரமான ஒரு புன்னகையுடன் ஓவியத்தையேப் பார்த்திருந்தாள்.
சில நிமிடங்கள் அவனின் விரல்கள் தூரிகையுடன் விளையாடுவதையே விழி எடுக்காது கண்டாள். அத்தனை நேர்த்தி அந்த விரல்களின் விளையாட்டில். ஒரு பெருமித புன்னகை அவளின் உதட்டுல் உறைந்துப் போனது.
“போதும் யுவா… லேட் ஆகுது பாரு… வந்து படு வா…” என்றாள் கண்டிப்புடன் அதட்டும் குரலில். பின்னே விட்டால் உறங்காது விடிய விடிய அல்லவா வரைந்துக் கொண்டு அமர்ந்திருப்பான்.
அவளின் குரலில் வேகமாய் ஓவியத்தை எடுத்து மறைக்க முயன்றான் அவன். “பாக்கல… பாக்கல… வந்து படு வா நீ… லேட் ஆகுது பாரு…” அவனின் தலைமுடியை கோதியபடியே உரைத்தவளின் குரலில் தாய்மை வழிந்தது.
“ம்ம்… ம்ம்… ம்ம்ம்…” என்றவன் அத்தனையும் எடுத்து வைத்துவிட்டு தான் அவளை நிமிர்ந்துப் பார்த்தான்.
தலையை கொஞ்சமாய் சாய்த்து, வாஞ்சையாய் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவள் இதழ்களில் இன்னும் அந்த பெருமித புன்னகை ஒட்டிக் கொண்டிருந்தது. இமைக்காது அந்த முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தான் யுவா.
“வந்து படு யுவா… டைம் ஆச்சு பாரு…” அவனின் படுக்கை விரிப்பை தட்டி சரி செய்தபடியே அவனை அழைத்தாள் ஆரா.
“இன்னும் வீட்டுக்கு போகல…” என்றான் விழிகளை தாழ்த்திக் கொண்டு.
“போகனும் யுவா… முதல நீ வந்து படு…” என்றாள் கட்டிலை தட்டிக் காட்டி.
“ஆரும்மா இன்னும் வீட்டுக்கு போகல…” மீண்டும் அதையே சொன்னவன் குரலில் இருந்த சிறு மகிழ்ச்சியை கண்டுக் கொண்டாள் அவள். வீட்டிற்கு செல்லவில்லையா என்ற கேள்வி அல்ல அது. அவள் இத்தனை நேரம் இங்கே இருப்பதற்கான மகிழ்ச்சி அறிவிப்பு.
“யுவாவுக்கு நான் வீட்டுக்கு போக வேண்டாமா..?” என்றாள் சிறு புன்னகையுடன் ஆரா.
“வேண்டாம்…” பட்டென்று வந்தது பதில்.
“அம்மா என்ன தேடுவாங்களே யுவா… என்ன பண்ணலாம்…” என்றாள் கேள்விமாய் அவனைப் பார்த்து.
“ஓஓஓ… என்ன பண்ணலாம்…” என்றவன் விழிகளில் சிறு ஏமாற்றம்.
“யுவா இப்ப சமத்து பிள்ளையா தூங்குவீங்களாம்… காலையில நான் சீக்கரமே வந்து யுவாவ பாப்பேனாம்… டீல்…”
“ம்ம்ம்… வந்திடனும்…” என்றான் கட்டிலில் படுத்தபடியே, “கண்டிப்பா… இப்ப தூங்கு… குட் நைட்…” என்றபடியே போர்வையை எடுத்துப் போர்த்தி விட்டவள், விளக்கை அணைத்து கதவு நோக்கி நடக்க, “குட் நைட் ஆரும்மா…” என்ற யுவாவின் சத்தமான குரல் அவளை சரணடைந்தது.
மீண்டும் “குட் நைட் யுவா… ஸ்வீட் ட்ரீம்ஸ்…” என்றவள் பழையபடி கதவை சாற்றிட முகத்தில் புன்னகை உறைந்திருந்தது.
பார்வையால் அவளை தொடர்ந்துக் கொண்டிருந்தவனும் “குட் நைட் ஆரா…” மெல்லமாய் தன்னுள்ளே முனங்கிக் கொண்டான். இதழ்களிலும் ரசனையான புன்னகை ஒன்று வந்து ஒட்டிக் கொண்டது.
அறக்கட்டளையில் இருந்து வெளியில் வந்து பிரதான சாலையில் அவளின் வாகனம் தொடும் முன் சத்தமாய் அவளின் பெயர் சொல்லி ஒரு அழைப்பு. மிதமான வேகத்தில் சென்றதால் வாகனத்தை நிறுத்திவிட்டு கண்ணாடி வழியே பின்னால் பார்த்தாள். வெற்றிதான் அவளை நோக்கி ஓடி வந்துக் கொண்டிருந்தான்.
‘படுத்துறான்களே…’ என நினைத்தவளுக்கு அத்தனை கடுப்பு. சோர்ந்து, முகம் கருத்து தலை களைந்து அவளின் முன்னால் வந்து நின்றவனைப் பார்க்க கொஞ்சம் பாவமாய் கூட இருந்தது. வேகமாய் வந்தவன் அவளின் வாகனத்தை மறைக்கும்படி முன்னே நின்றுக் கொண்டான்.
“கூப்பிட்டே இருக்கேன்… நீங்க பாட்டுக்கு காதுல வாங்காம வந்துட்டே இருக்கீங்களே ஆரா…” என்றவனுக்கு மூச்சு வாங்கியது.
அவனின் வார்த்தைகளை காதில் வாங்காதவள் போல், “எப்ப இருந்து இங்க வெயிட் பண்ணறீங்க வெற்றி…” என்றாள் அவனை தலைமுதல் கால்வரை அளந்தபடி.
“மதியத்துல இருந்து… நீங்க என்ன வெளிய போக சொன்னதுல இருந்து… அதோ அந்த மரத்துக்கு கீழ தான் வெயிட் பண்ணறேன்…” என சற்றே தள்ளி இருந்த சரக்கொன்றை மரத்தை காட்டியவனிடம் அத்தனை சோர்வு.
“பச்…” என அழுந்த நெற்றியை நீவி விட்டுக் கொண்டவளுக்கு ‘என்ன இப்படி செய்கிறான்…’ என கோபமான கோபம்.
அதை வார்த்தைகளாக்கி, “ஏன் இப்படி பண்ணறீங்க வெற்றி…” என்றாள் குரலில் எரிச்சலை அப்பட்டமாய் வெளிக்காட்டி.
“பேசணும் ஆரா… உங்ககிட்ட…” என்றவனை என்ன செய்வதென்றே தெரியவில்லை அவளுக்கு.
“எத்தனை தடவ இத பத்தி பேசனாலும் என் முடிவு மாறாது வெற்றி… அத ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க…” என்றவளிடம் ஒரு சலிப்பு.
ஒரு சில நொடிகள் அவளை ஆழ்ந்துப் பார்த்தவன், எதையுமே கவனியாதவன் போல, “பசிக்குது ஆரா… சாப்பிட்டுட்டே பேசுவோமா..?” என்றானே பார்க்கலாம்.
அவனின் வார்த்தைகளில் பொய்யில்லை. அந்த கண்கள் அப்பட்டமாய் பசியைக் காட்டியது. ஒரு வேளை கூட உணவை தவிர்த்து பழக்கம் இல்லாதவன் போல அத்தனை சோர்ந்திருந்தது அவனின் முகம்.
‘பக்கத்துல இருக்க கடையில போய் சாப்பிட்டிருக்கலாமே…’ என்ற எண்ணம் தோன்றினாலும் கேட்க பிரியபடவில்லை அவள்.
ஆழ்ந்த மூச்சொன்றை வெளியிட்டவள், “அம்மா எனக்காக சாப்பிடாம வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க வெற்றி… அதுவும் இல்லாம இது நாம பேசறதுக்கான நேரமும் இல்லை…” என்றாள் திட்டமாய்.
“உங்கிட்ட பேசற வரைக்கும் என்னால நிம்மதியா சாப்பிடவே முடியாது ஆரா… நானும் ட்ரை பண்ணிட்டேன்… ஒருவாய் சாப்பாடு கூட உள்ள இறங்க மாட்டேங்குது… ப்ளீஸ்… இந்த ஒரு தடவ… எனக்காக வரக்கூடாதா..?” என்றவனின் குரலில் அப்பட்டமான மன்றாடல்.
மீண்டும் நெற்றியை அழுந்த நீவிக் கொண்டவளுக்கு அத்தனை ஆத்திரம். “என்ன பண்ணிட்டு இருக்கீங்கனு தெரியுதா வெற்றி…” என்றாள் அவனை ஆழ்ந்து பார்த்தபடி.
“சாரி…” என்றான் தலையை குனிந்தபடி மெல்லிய குரலில் முணுமுணுப்பாய்.
“இப்போ நம்ம பேச முடியாது வெற்றி… வழிய விடுங்க… நான் கிளம்பணும்…” என்றவள் சலிப்பும் எரிச்சலும் நொடிக்கு நொடி உச்சத்தை தொட்டுக் கொண்டிருப்பதை அவளின் முகமே காட்டிக் கொடுத்தது.
“உங்கள தேடி அறக்கட்டளைக்கு தானே வர கூடாது… ஆனா நீங்க பேசற வரைக்கும் தினமும் இங்க வந்து வெயிட் பண்ணுவேன்…” என்றவன் நகர்ந்து வழிவிட, ஒரு சில நொடிகள் அவனைப் பார்த்திருந்தவள் பதிலெதுவும் சொல்லாது கிளம்பிவிட்டாள். தூரத்தில் இருந்து இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த வேந்தனும் சின்னதொரு தோள் குலுக்கலுடன் கிளம்பி விட்டான்.
❀❀❀❀❀
இலகுவாய் இரவு உடைக்கு மாறி கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவள் மனமெங்கும் இன்றைய நினைவுகளே ஆக்கிரமித்திருந்து.
“ஆரும்மா சாப்பிட வா…” பர்வதம் வெளியிலிருந்தே குரல் கொடுக்க, அது அவளை எட்டவேயில்லை.
“மணி பத்தரையாக போகுது… என்ன பொண்ணு நீ… நேரா நேரத்துக்கு சாப்பிடறதில்லையா..?” என்றபடியே உணவு தட்டுடன் உள்ளே வந்துவிட்டார் அவர். மகளின் குழப்பம் தாங்கிய முகமே என்னவோ சரியில்லை என்றது.
“பசிக்கலம்மா… சாப்பாடு வேண்டாமே…” கெஞ்சலாய் பார்த்தவளை, “ஆரும்மா…” என்ற அதட்டலுடன் முறைத்துப் பார்த்தார் அவர்.
வேகமாய் உணவை வாங்கிக் கொண்டவள், “எனக்கொன்னும் உங்ககிட்ட பயமில்லை…” என்றாள் சிறு குரலில்.
“அதான் எனக்கு தெரியுமே…” என்றார் அவரும் சிறு புன்னகையுடன்.
“நீங்க சாப்பிடீங்களா..?”
“ஆச்சு… ஆச்சு… வாய் பேசாம சாப்பிடு முதல…” என்றவர் அடுத்த கவளத்தை ஊட்ட, “நானே சாப்பிட்டுப்பேன்…” என்றாள் இரங்கிவிட்ட சிறு குரலில் கூச்சத்துடன்.
“அதான் எனக்கு தெரியுமே…” என்றவர் கைகள் இன்னும் அப்படியே தான் இருந்தது.
மறுக்காமல் வாங்கிக் கொண்டவள், அவரின் முகத்தை தான் பார்த்திருந்தாள்.
“என்ன ஆரும்மா…”
“நீங்க ரொம்ப மாறிட்டீங்கம்மா… உங்க பேரன் வந்ததுல இருந்து எனக்கு ஊட்டறதே இல்ல… டூ பேட்…” மூக்கை சுருக்கி சொன்னவளின் வார்த்தைகளில் கொஞ்சமே கொஞ்சம் ஏக்கம் கூட இருந்தது.
“அதுல உனக்கு ரொம்ப கோபம் போல…”
“இல்லைனு சொல்ல மாட்டேன்… எனக்கே எப்பவாவது தான் ஊட்டுவீங்க… இப்போ அதுவும் இல்ல…” அவள் முகத்தை சுருக்கிக் கொண்டு சொல்ல, சின்ன சிரிப்பை உதிர்த்தவர் பதிலொன்றும் சொல்லவில்லை.
அவரின் சிரிப்பை சில நொடிகள் ஆசையாய் பார்த்திருந்தவள், “இப்படியே சிரிச்சுட்டே இருங்கம்மா… என் கஷ்டமெல்லாம் பறந்துப் போற போல இருக்கு…” என்றாள் மென் நகையுடன் தலை சாய்த்து.
“நீ சந்தோஷமா இருந்தா நான் சிரிச்சுட்டே இருக்க போறேன்… அவ்வளவு தான்…” செல்லமாய் அவளின் தலையைப் பற்றி ஆட்ட, புன்னகைத்தாள் ஆரா.
“எது உன் மனச கஷ்ட படுத்துது ஆரும்மா…” அவரின் தீடிர் கேள்வியில் ஆராவிடம் சில நொடி மௌனம். அவளின் மௌனத்திலேயே விசயம் பெரிதென்று புரிந்தது அவருக்கு.
“வேந்தன் என்ன லவ் பண்றேனு சொல்லறாரு ம்மா…” என்றவளை சில நொடிகள் அமைதியாய் பார்த்தார் அவர்.
“நீ என்ன நினைக்கற ஆரும்மா…”
“அவர் பொய் சொல்லற மாதிரியோ விளையாட்டுக்கு சொல்லற மாதிரியோ தெரியல… பயமா இருக்கும்மா… எங்க அவரோட சேர்த்து சுத்தி உள்ள எல்லாரையும் காயப் படுத்திடுவேனோனு ரொம்ப பயமா இருக்கும்மா…” என்ற மகளை புதிதாய் பார்த்தார்.
“உனக்கு அந்த தம்பிய புடிச்சுருக்கா ஆரும்மா…” என்றவரின் குரலில் சிறு துளி ஆசையும் ஆர்வமும் ஒட்டிக் கிடந்தது.
ஒரு நிமிடம் அமைதியாய் இருந்தவள், “எனக்கு எப்படிம்மா பிடிக்காம போகும்… ஆனா அந்த பிடித்தம் வேற… அது உங்களுக்கே தெரியும்… அது என்னைக்குமே காதல், கல்யாணங்கற நிலைய அடையவே அடையாது…” என்றவள் என்ன சொல்வாரோ என அவரின் முகத்தை தான் பார்த்திருந்தாள்.
“அப்படினா அத நேரடியாக அந்த தம்பிட்டையே சொல்லிடு ஆரும்மா… நிச்சயம் அவரு புரிஞ்சுப்பாரு…” என்ற தாயிடம், ‘நான் விம் பார் போட்டு விளக்கிவிட்டேன்; அப்படியும் அந்த தொம்பி புரிஞ்சுக்கல…’ என்பதை சொல்ல பிரியபடவில்லை அவள். சரி என்னும் விதமாய் தலையாட்டிக் கொண்டாள்.
பேசியபடியே அவர் உணவை ஊட்டி முடித்திருக்க, எழுந்துக் கொள்ளும் முன் வேகமாய் மடியை ஆக்கிரமித்திருந்தாள் அவள். மகள் படுத்துக் கொள்ள வசதியாய் காலை நீட்டி அமர்ந்துக் கொண்டார் அந்த தாயும்.
ஒரு நொடி தாயின் முகம் பார்ப்பதும், கேட்க எத்தனிப்பதும், சட்டென்று அதை விழுங்கிக் கொள்வதுமாய் தொடர்ந்து அதையே செய்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவளின் தலையை கோதியபடியே, “என்ன கேக்கணும் ஆரும்மா…” என்றவருக்கும் என்ன கேட்க விழைகிறாள் என்று புரிந்துதான் இருந்தது.
“அது வந்து… அவங்க வந்தாங்களா..?” என்றவளின் கண்ணில் சிறு எதிர்பார்ப்பு.
“எவங்க ஆரும்மா…”
“பச்… ரொம்ப தான்… அதான் உங்க சின்ன பொண்ணும்… பேரனும்… அவங்க ரெண்டு பேரும் தான்… வந்தாங்களானு கேட்டேன்…”
“வரல…”
“ஏன் வரலையாம்… நீங்க போன் போட்டு என்னனு கேட்டீங்களா..?”
“ம்ம்ம்… கேட்டேன்…”
“என்ன சொன்னா அவ… எப்ப வருவாளான்… ரொம்ப தான் பண்ணறா…” என்ற மகளை அமைதியாய் பார்த்திருந்தார் அவர்.
“உங்கள தான் கேக்கறேன்… என்ன சொன்னா அவ…”
“உரிமை இல்லாத வீட்டுல உறவு மட்டும் என்னத்துக்குனு கேக்கறா… என்ன பதில் சொல்லட்டும் நான்…” என்றவரின் குரலிலும் வருத்தம் இழைந்தோடியது.
“நான் சொன்னா அவ வர மாட்டாளா..? எனக்கு எல்லா உரிமையும் இருக்குனு சட்டமா நடு வீட்டுல உக்காந்து நாட்டமை பண்ண வேண்டியது தானே…” என்றவளின் கண்களில் கண்ணீர் துளிர்த்துவிட்டது.
“விடு ஆரும்மா… வராம எங்க போய்ட போறா… கோபம் தணிஞ்சதும் தன்னால வந்துடுவா…” என்றார் மகளை ஆற்றுப் படுத்தும் விதமாய்.
“பத்து நாளா அவ கோபம் தணியலையேம்மா… வந்திடுவா தானே…” என்றவளின் குரல் கரகரத்து ஒலித்தது. அழுகையை அடக்குகிறாள் என அந்த குரலே காட்டிக் கொடுத்தது.
“கண்டிப்பா வந்துடுவா ஆரும்மா… நம்மள பாக்காம அவளால மட்டும் இருக்க முடியுமா என்ன..?” என்றபடியே அவர் மகளின் தலை வருட, அவரின் வயிற்றில் முகம் புதைத்து இறுக கட்டிக் கொண்டவள் கொஞ்ச நேரத்திற்கு எல்லாம் ஆழ்ந்த நித்திரையில் அமிழ்ந்திருந்தார். உறங்கும் மகளையே பார்த்திருந்தவருக்கும் கூட, எப்படியாவது சின்ன மகள் வந்துவிட வேண்டுமென்ற வேண்டுதல் தான்.
– பற்றி எரியும்…

