Loading

காலம் தாண்டிய பயணம் 03

 

 

நள்ளிரவு அனைவரும் நல்ல உறக்கத்தில் இருக்க, விஜயாவும் இனியாவும் மட்டும் வீட்டை விட்டு மெல்ல வெளியே வந்தனர்.

வீட்டின் பின்புறம் விஜயாவின் கரங்களைப் பிடித்த வண்ணம் நின்றிருந்தாள் இனியாள்.

“இனிக்குட்டி, என்னோட ரொம்ப நெருக்கமான தோழி தான் சரண்யா. இங்க ஒன்னா படிக்கும்போது பழக்கம். அவ  கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போன இந்த ரெண்டு வருசமா பேசவே இல்ல, ஆனா நீ இந்த லெட்டர கொடுத்து நான் கொடுக்கச் சொன்னதா சொல்லு அவ புரிஞ்சிப்பா” என்று ஒரு கடிதத்தையும் தன் தோழியின் விலாசத்தையும் அவளது கையில் வைத்தாள்.

கூடவே சில பண நோட்டுக்களையும் அவள் கரத்தில் வைத்து “உனக்கு நிறைய தரணும்னு எனக்கு ஆசைதான்.  ஆனா அண்ணிகிட்ட இவ்வளவு தான்டா பணம் இருக்கு, உனக்குத் தான் தெரியுமே நம்ம நிலைமை” என்ற விஜயாவிற்கு அடுத்த வார்த்தை வரவில்லை, அழுகை தான் வெடிக்கப் பார்த்தது.

இனியாவிற்கா புரியாது அவள் நிலை?? விஜயாவை அணைத்துக் கொண்டவளது உள்ளம் நடுங்குவதைப் போல் உடலும் நடுங்கியது.

அவள் இந்த ஊரை விட்டுச்செல்லும் இரண்டாவது பயணம் இது. முதல் முறையே பதட்டத்துடன் தான் சென்றாள். இன்று சொல்லவே வேண்டாம் அத்தனை நடுக்கம் அவளுக்கு…

“இனிக்குட்டி பயப்படாதடா, இங்க இருந்து போனாலே உனக்கு நல்ல காலம் தான். எதுக்கும் கவலைப்படாத, ஏற்கனவே பள்ளிக்கூடத்துல சென்னைக்கு டூர் கூட்டிட்டு போயிருக்காங்கல்ல, நீ போன இடம் தான அப்பறம் எதுக்கு பயம், போற பஸ் ஒன்னுல ஏறிக்கோ கடவுள் உன்ன சேர்க்க வேண்டிய இடத்துல சேர்ப்பாரு” என்றவள் தாமதமாகுவதை உணர்ந்து யாரேனும் வந்துவிடக்கூடும் என்ற பயத்தில் சுற்றும் முற்றும் பார்த்தபடி ஏதோ யோசனை வந்தவளாக, கழுத்தில் போட்டிருந்த இரண்டடுக்கு தங்க மாலையைக் கழட்டியவள் இனியாவின் கரங்களில் வைத்தாள்.

இனியாவோ அதிர்ச்சியுடன் தன் அண்ணியைப் பார்த்தவள் “அண்ணி என்னண்ணி இது? போட்டுக்கோங்க” என்றாள்.

அது விஜயாவின் தாய் வீட்டு சீதனம். அந்த மாலை ஒன்றைத் தான் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்தாள். அதுவும் அவள் கழுத்தில் ஏறுவது விசேஷ நாட்களில் மட்டும் தான். மீதி சமயங்களில் அதன் உறைவிடம் அவள் மாமியார் வள்ளியின் வசம் தான். ஒருநாள் தான் அதன் மீது உரிமை கொண்டாடுவது. ஆனால் அதற்கும் விழாத பேச்சுகள் இல்லை.

நாளை இனியாவின் திருமணம் என்பதாலேயே இன்று அவள் கை சேர்ந்திருந்தது.

இதோ இப்போது அதையே அவளுக்குக் கொடுக்க அண்ணி முன்வந்திருக்கையில் தாயினை பற்றி அறியாதவளா?? இதற்கு அண்ணியின் வம்சமே பேச்சு வாங்க வேண்டி வரும் என்பது அவளறிந்ததே..

மீண்டும் அந்த மாலையை அண்ணியின் கையிலேயே வைத்தவள் “வேணாண்ணி இதுக்காக நீங்க வாங்கவேண்டிய திட்டு எப்படிப்பட்டதுனு தெரிஞ்சும் இதக் கொண்டு போனா என்னை நானே மன்னிக்கமாட்டேன்” என்றாள்.

“இனியா உனக்குச் செலவுக்குப் பணம் வேணுமேடா, தொலைஞ்சு போயிடிச்சுனு அத்தைகிட்ட சொல்லிக்கிறேன்” என்று விஜயா சொல்ல,

இனியாவோ “அம்மா அப்படியே நம்பிட்டு தான் அடுத்த வேலையப் பார்ப்பாங்க போங்கண்ணி” என்று விரக்தியாய் சிரித்தவள்,

“என்ன இங்க இருந்து கூட்டிட்டு போற கடவுளுக்கு என் நிலைமை தெரியுமே, அவரு என்ன பார்த்துப்பாருண்ணி, நீங்க கவலைப் படாதீங்க, அந்த ஆள் பார்த்த பார்வைல, தொடுகைல இருந்த அருவெறுப்பு இல்லாம ஒரு நாள் எனக்காக வாழ்ந்தாலும் போதும். அதுக்கு இந்தப் பணம் ரொம்பவே தாராளம் அண்ணி” என்றவள் கையில் வைத்திருந்த விஜயா கொடுத்த பணத்தை உயர்த்திக் காட்டினாள்.

அதன் பின் கடந்த ஐந்து வினாடிகள் இருவரிடமும் மௌனம். நிதர்சனம் பெரிய வலியைக் கொடுத்தது இருவருக்கும்.

சிறிய பெண்ணை அதுவும் இத்தனை அழகான  பெண்ணை, வெளியில் அனுப்பியேனும் காக்க வேண்டும் என்னும் அளவுக்குத் தோன்ற வைத்த மனித மிருகங்கள் உள்ள இந்தக் குடும்பத்தைக் காரி உமிழ வேண்டும் என்று தான்  விஜயாவிற்கு தோன்றியது.

வெளியே இருக்கும் மிருகங்களுக்குக் கூடத் துளியேனும் ஈரம் இருக்க வாய்ப்பிருக்கிறதே! ஆனால் இங்கே அது என்னை விலை என்று கேட்கும் ஜந்துகள் இருக்கையில் இப்படித்தான் முடிவு எடுக்க வேண்டும்.

அப்படியே நேரம் கடக்க இனிமேலும் பேசிக்கொண்டு இருக்க முடியாது என்றுணர்ந்த விஜயாவோ தன் கையை இறுகப் பற்றியிருந்த இனியாவின் கரத்தைத் தன்னிலிருந்து பிரித்தவள்,

“போய்ட்டு வா இனிக்குட்டி, இன்னும் ரெண்டு வாரத்துல பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்குப் போய்டுவேன் அங்க போய் உங்கிட்ட பேசுறேன். சரண்யாவோட நம்பர் அங்க என் ஃபோன்ல இருக்கு” என்றாள்.

அப்படி சொன்னவளுக்கோ ‘இந்த  இருவருடத்தில் தன் தோழி அந்த விலாசத்தையும் சரி அவள் எண்ணையும் சரி இப்போதும்  மாற்றமல் இருக்க வேண்டும்’ என்ற வேண்டுதலே பலமாய் இருந்தது.

இனியாவோ அண்ணியை அணைத்துக்கொண்டு விடைபெற்றுச் செல்ல, அவள் உருவம் கண்களிலிருந்து மறையும் வரை அங்கேயே நின்றவள்,

“உன்ன நம்பித்தான் பைரவா அவள அனுப்பி இருக்கேன். அவள பாத்துக்க வேண்டியது உன் பொறுப்பு” என்று பைரவன் கோயில் இருக்கும் திசையைப் நோக்கி கையெடுத்துக்  கும்பிட்டு பெருமூச்சுடன் உள்ளே சென்றாள்.

சற்று நேரத்தில், பயத்துடன் தன் பையைக் கையில் ஏந்திய வண்ணம், கடவுள்மீது பாரத்தைப் போட்டபடி கால பைரவன் கோட்டையின் எல்லையைத் தாண்டித் தன் காலை எடுத்து வைத்திருந்தாள் இனியாள்.

அதே தருணம் அங்கே கோயிலினுள்ளே சிலையாய் வீற்றிருந்த பைரவன் கண்களைத் திறந்து கொள்ள, கூடவே இதழ்கள் புன்னகைத்தது. ஆனால் அந்தக் காட்சியைக் காணத்தான் யாரும் இருக்கவில்லை..

சரியாக அந்த நேரம் கோயிலுக்கு அருகில் உள்ள குகையில் பலவருடமாகத் தியானத்தில் இருக்கும் சித்தர் ஒருவரோ சட்டெனக் கண்களைத் திறந்தவர்

“நெருங்கி விட்டது, தவிக்கும் உயிர்களுக்கு நியாயம் செய்திடும் நாள் நெருங்கி விட்டது. விதியைச் சதியால் வெல்ல திட்டம் தீட்டினாயே, முடிந்ததா? தோல்வியை உன் உயிரின் கரத்தால் ருசிக்கக் காத்திரு மார்த்தாண்டா” என்று  விசித்திரமாய் சிரித்தார்.

மீண்டும் அவரே “என் பிறவியின் நோக்கத்துக்கான நேரம் கூடிவிட்டது.. பதிமூன்று வருட தவத்துக்கான விமோட்ஷனம் கிடைக்கும் காலமும் நெருங்கிவிட்டது” என்று புன்னகையுடன் சொல்லிக்கொண்டவரோ கண்களை மூடி நாவினால் ஏதேதோ மந்திரங்களை உச்சரிக்க, தன்னால் அவர் உடல் காற்றில் மிதந்து, சட்டென அங்கிருந்து மறைந்தது.

_______________________

அங்கே காட்டினுள் மறைந்த மார்த்தாண்டனின் உடலானது சரியாகக் கால பைரவன் கோட்டையின் எல்லைக்கு அப்பாலிருந்த ஆலமரத்தின் கீழே சட்டென்று தோன்றியது.

அவன் கண்களிலோ மின்னல், இதழ்களிலோ கர்வப் புன்னகை, சற்று நேரத்தில் அவன் எதிர் பார்த்தது போல் மங்கை ஒருத்தியோ கையில் பையுடன் அவனை நோக்கி வருவது தெரிந்தது.

இன்னும் அவளைக் கவர சொற்ப நாளிகைகளே!

“மோகினி, இதோ வருகிறதடி நான் ஆசையோடு தழுவக் காத்திருக்கும் உன் மெய்” என்று இதழ் பிரித்துச் சொல்லிக்கொண்டவனோ, எல்லையைத் தாண்டி அவள் வைக்கும் ஒரு எட்டுக்காகக் காத்திருந்தான்.

இதோ அவன் காத்திருந்த நொடியும் வந்துவிட, “வேடிக்கை பார் பைரவா” என்றவன், சொடக்கிட்ட நொடிப்பொழுதில் மறைந்து, மீண்டும் அவள் முன்னே தோன்றினான்.

திடீரெனே தன் முன்னே தோன்றியவனை அதிர்ச்சியுடன் நோக்கியவளோ பயத்தில் இரண்டெட்டு பின்னே வைக்கப் பார்க்க, அவளால் அசையவே முடியவில்லை.

இருளில் அவள் கண்களுக்குக் காட்சி தெளிவில்லாததில் பார்வை இருளில் தெரிந்த அவன் உருவத்தைப் பரீட்சயமாக்க முயன்று தோற்றது.

எதிலோ கட்டுண்டவள் போல நின்றிருந்தவள், மீண்டும் உடலை அசைக்க முயன்றும் மீண்டும் முயற்சி தோல்வியைத் தழுவ, மிரட்சியுடன் அவனை நோக்கினாள் பேதை பெண்ணவள்.

அவனோ அவளை ஒற்றைக் கரத்தால் வளைத்துப் பிடித்தவன் அந்த மாலையைக் கரத்தில் ஏந்தியபடி மந்திரங்கள் உச்சரிக்க தொடங்க எங்கிருந்தோ காற்றை கிழித்துக் கொண்டு வந்த நாயொன்று அவனை நோக்கிப் பாய்ந்து அந்த மாலையை வாயில் கௌவிக்கொண்டது.

நடந்ததை சடுதியில் உணர்ந்த மார்த்தாண்டனோ “பைரவாஆஆ” என்று எரிச்சலுடன் கத்தினான்.

நாய் பைரவனின் வாகனமல்லவா? அதில் ஏற்பட்ட கோபம் அது. இது பைரவனின் வேலை இல்லாமல் யாருடையாதாக இருக்க முடியும்?

கண்மூடித் திறந்தவன் நாவினால் ஏதோ மந்திரமொன்றை உச்சரிக்க, நாயோ தூரச்சென்று விழுந்தது.

அதன்பின் நொடியும் தாமதிக்காதவன் அடுத்த வினாடியே மங்கையுடன் சேர்ந்து அவனும் அங்கிருந்து மறைந்திருந்தான்.

மீண்டும் நேரே அவனோ அவன் காலத்துக்கு அந்தக் காட்டினுள் அவளுடன் தோன்றியிருக்க, அவன் கையில் இருந்த மங்கையோ மயங்கி இருந்தாள்.

அவளைக் கையில் லாவகமாக ஏந்தியவனோ அங்கே ஏற்கனவே பூஜைக்குத் தயாராக வைத்திருந்த பழி மேடையில் அவளைப் படுக்க வைக்க, ஏதோ ஒரு மாற்றம் நடந்திருக்கிறது என்று அவன் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது.

ஆனால் என்னவென்று தான் புரியவில்லை, இதழ் குவித்து ஊதிக் கொண்டவனுக்கு அவளைக் கவர்ந்து வந்த மகிழ்ச்சி இல்லாமல் மனமோ சாதாரணமாய் இருந்தது.

அந்த எண்ணங்களை விரட்டப் போராடியும் முடியாமல் பல்லைக் கடித்தவனோ,  “ஆஆஆஆ” என்று மேலே பார்த்துக் கத்தியபடி கூர்ந்து வானத்தைப் பார்க்க, அந்த நொடி அவனுக்கு ஏதோ புரிவதைப் போலிருந்தது.

சட்டெனக் கையில் இருந்த மாலையைப் பார்த்தவனுக்கு அனைத்தும் தெளிவாய் புரிந்து போக, நூற்றாண்டு காலமாக மேற்கொண்ட போராட்டம் நொடியில் சிதைந்ததை உணர்ந்தவனால் சத்தமிட்டு கத்த மட்டுமே முடிந்தது.

அவன் சத்தம் அந்தக் காட்டையே அலற வைத்துகொண்டிருந்தது. அதுவும் போதாமல் வெறிபிடித்தவன் போல அங்கும் இங்கும் நடந்தான்.

அவன் எதிர்பார்த்து இதுவல்லவே, மீண்டும் தோல்வி அதுவும் அதே பைரவனிடம்.

அத்தனை வருடப் போராட்டதின் தோல்வி அவனை வெறிகொள்ள வைத்திருந்தது.

சட்டெனப் பூஜை செய்யும் இடத்துக்குச் சென்று அமர்ந்து  அடுத்த அரைமணி நேரம் ஏதேதோ மந்திரங்களை உச்சரித்தவன், கரங்களில் சட்டென உருவாகிய நெருப்புப் பந்தை முன்னே  இருந்த திரவம் நிறைந்த குடுவையில் செலுத்த, அதிலோ அவனுக்குத் தேவையான காட்சி விரியத்தொடங்கியது.

அங்கே காலபைரவன் கோட்டையைத் தாண்டி இருக்கும் பிரதான வீதியில் வாலிபனொருவன் யாரோ ஒருவரின் வருகையை  நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.

அந்த ஆடவனைக் கண்ட மார்த்தாண்டனின் கண்கள் விரிந்து கொள்ள, முகத்தில் ஒரு அதிர்ச்சி. கண்களை மூடித்திறந்து அங்கே தெரியும் காட்சியை வெறிக்கத் தொடங்கினான்.

அந்த ஆடவனருகே வந்த அந்த நாயோ அவன் கவனத்தை தன் பக்கம் திருப்பப் போராடிக்கொண்டிருக்க, அதனை நோக்கிக் குனிந்து, கவலையுடன் அதன் தலையைக் கோதிக்கொடுக்க, அந்த நாயோ அதன் வாயிலிருந்த ஒற்றை மண்டையோட்டை அவன் கரத்தில் வைத்தது.

அவனோ கேள்வியாய் அந்த நாயைப் பார்த்திருக்க, அந்த நேரம் பெரிய சத்தம் ஒன்றுடன் கார் ஒன்று நிலை தடுமாறி அங்கே இருந்த மரமொன்றில் மோத, கையில் இருந்ததை சட்டைப் பையில் போட்டுக்கொண்ட ஆடவனோ, அந்தக் காரை நோக்கி விரைந்திருந்தான்.

இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மார்த்தாண்டனின் கோபமோ எல்லை கடந்தது.

சாதாரண மனிதனையே இந்தக் கோபம் ஆட்டிப்படைக்கையில் இவனோ காலம் கடந்து வாழும் அகோரி… அதுவும் அகோராதிபதி. அவன் கோபம் என்ன விளைவை கொடுக்கக் காத்திருக்கிறதோ???

காதலைத் தேடும்…

ஆஷாசாரா…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்