Loading

அத்தியாயம் 5

முகத்தில் தெளிவில்லாது அமர்ந்திருந்த அன்னையை அவ்வப்போது திரும்பிப் பார்த்தபடியே வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்தான் விமல்.

பத்து நிமிடங்கள் கடந்து இருக்கும்.

என்னவென்று தெரிந்து கொள்ளவில்லை எனில் தலை வெடித்துவிடும் என்பது போல் இருக்க, “அம்மா..”

மகனின் அழைப்பிற்கு பாகீரதி எந்த எதிர்வினையும் செய்யவில்லை. செவியில் விழவில்லை போலும். கவனம் நிகழ்வில் இருந்தால் தானே? சிந்தை முழுவதையும், ரெங்கநாயகி உரைத்ததே ஆக்கிரமித்து இருந்தது.

“அம்மா..” என மீண்டும் ஒருமுறை அழுத்தமாய் அழைத்து, அவரின் கையைப் பற்றினான்.

தூக்கத்தில் இருந்து விழிப்பது போல் மகனைப் பார்த்தவர், “என்னடா?”

“அதை நான் கேட்கணும். என்னாச்சு உங்களுக்கு? காலையில சித்தி வரும் போது கூட நல்லாதான இருந்தீங்க? ஃபங்ஷனுக்கு என்ன கலர்ல சேரி கட்டுறதுனு எல்லாம் டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தீங்க? கொஞ்ச நேரத்துல, அண்ணன் வந்து ஏதோ சொன்னான். அப்ப இருந்து உங்க முகமே சரியில்ல. திடீர்னு அண்ணி வீட்டுக்குப் போகணும்னு சொன்னீங்க. கூட்டிட்டு வந்தா, என்னை உள்ள வராதனு ஆர்டர் போட்டுட்டுப் போறீங்க. இப்ப என்னனா, நான் கூப்பிடுறது கூட கேட்காம, எதையோ யோசிச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கீங்க? என்னம்மா.?”

“ம்ம்..” என மெலிதான பெருமூச்சு ஒன்றை வெளி விட்டவர், “சரண், கல்யாணத்தை நிறுத்திட்டான்.”

“என்ன?” என்று அதிர்ந்த விமல், இயக்கிக் கொண்டிருந்த வாகனத்தை நிறுத்தி இருந்தான்.

ஒன்றும் புரியாமல் இரண்டு நொடிகள் குழம்பிப் போனவன், “கல்யாணம் நின்னுடுச்சா?”

‘ஆம்’ என்பதாய் தலை அசைத்தார் பாகீரதி.

“என்ன நடந்துச்சு ம்மா.?”

“நேத்து நம்ம ரோகிணிக்கு கொலுசு வாங்குனோம்ல? நிறைய முத்து இருக்கிறதா வேணும்னு கேட்டா.”

“நானும்தான் கூட இருந்தேனே?”

“லாவண்யா, காது கேட்காதவளுக்கு எதுக்குக் கொலுசு? அப்படியே ஆசைப்பட்டாலும், முத்து இருந்தாலும் இல்லனாலும் ஒன்னு தான? அந்த சத்தம் அவளுக்குக் கேட்கவா போகுதுனு.. ஏதோ பேசி இருக்கா.”

அதிர்ந்த விமல், “அண்ணியா இப்படிப் பேசுனாங்க?”

“அதான் சரண் வேணாம்னு சொல்லிட்டானே? இன்னும் என்ன அண்ணி?”

“ஆமா இல்ல. தப்பு தப்பு..” என தனது வாயில் அடித்துக் கொண்டவன், “அதான் வேணாம்னு முடிவு பண்ணியாச்சே? அப்புறம் என்ன யோசனை? அண்ணனுக்கு வேற நல்ல பொண்ணா பார்க்கலாம்.”

“அதைத் தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன்?”

“இதுல யோசிக்க என்ன இருக்கு? எத்தனை மேட்ரிமோனியல் இருக்கு? தேடுவோம். பொண்ணு கிடைக்காமலா போயிடும்?’

“நாம பார்க்கிற பொண்ணுக்கு அவன் ஒத்துக்கணுமே? வீடு, வேலைனு குடும்பத்துக்காக ஓடிக்கிட்டு இருக்கிறவனுக்கு, கல்யாணம் செஞ்சுக்கணும்கிற நினைப்பே இல்ல. லாவண்யாவையே.. ஏதோ நான் பார்த்துப் பேசி கட்டாயப்படுத்தப் போயி தான், சரினு ஒத்துக்கிட்டான். இப்ப நடந்த விஷயத்தால, கல்யாணம் வேணாம்னு எதுவும் சொல்லிடுவானோனு யோசனையா இருக்கு.”

“ம்ம்.. அண்ணன் அப்படிச் சொல்லவும் வாய்ப்பு இருக்கு.?”

“ஏண்டா, சமாதானமா ஏதாவது சொல்லுவனு பார்த்தா, இப்படிப் பேசுற.?”

“நீங்க மனசு கஷ்டப்படக் கூடாதுனு பொய்யா சொல்ல முடியும்.?”

“ப்ச்ச்..” என அவர் பார்வையை வெளிப்பக்கம் திருப்ப, “டோண்ட் ஃபீல் ம்மா. அண்ணி என்ன, இனி புதுசாவா பிறந்து வரப் போறாங்க? ஆல்ரெடி பிறந்து, வளர்ந்து, கல்யாணத்துக்கு ரெடியா இருப்பாங்க. நம்ம கண்ணுல படுறது மட்டும் தான் பாக்கி.”

மகனின் பேச்சில் மெலிதான புன்னகை மலர, “அதுவும் சரிதான். என் மகனுக்கு வரப் போற பொண்டாட்டி கல்யாணதுக்கு ரெடியா இருப்பா இல்ல.?”

“அவ்வளவு தான். ஈஸி ம்மா..” என அன்னையிடம் சமாதானமாய் பேசிவிட்டு வண்டியை இயக்க, பாகீரதிக்கு மின்னல் வெட்டியது போல் மௌனிகாவின் நினைவு ஒரு நொடி வந்து போனது.

“விமல், ரெங்கநாயகி அம்மா ஒரு விஷயம் சொன்னாங்கடா.”

“என்ன.?”

“லாவண்யாவோட பெரியப்பா பொண்ணை, சரணுக்கு கட்டிக்கிறியானு கேட்டாங்க?”

“ஏது..” என்றவனின் கால்கள் அணிச்சியாய் விசையை அழுத்தி மீண்டும் வண்டியை நிறுத்தி இருந்தன.

“லூசுப் பயலே! எதுக்குடா, இப்படி டப்பு டப்புனு பிரேக் போடுற.?”

“ம்மா.. நீங்க சொல்லுற ஒவ்வொரு விஷயமும் அப்படி இருக்கு. வரிசையா ஷாக்கா கொடுக்குறீங்க? பிரேக்கை போடாட்டினா, காரைக் கொண்டு போயி எதுலயும் விட்டுடுவேன். பரவாயில்லயா? குட்டி மனசும்மா எனக்கு. தாங்காது.”

“பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.”

“என்னை கேலி செய்யிற நேரமா இது? அண்ணன்கிட்ட இது விஷயமா எதுவும் பேசிடாதீங்க. கல்யாணம் வேணாம்னு சொல்லி, முழுசா நாலு மணி நேரம் கூட ஆகல. அதுக்குள்ள அதே வீட்டுல இருந்து, இன்னொரு பொண்ணைப் பத்தி பேசுனா, அவ்வளவு தான்.”

“ம்ம்..” என பாகீரதியும் மகனின் சொல்லை ஒப்புக் கொள்ள, “என்ன பதில் சொன்னீங்க?”

“எதுவும் சொல்லல. பேசாம வந்துட்டேன்.”

“வேணாம்னு சொல்லீட்டு வர வேண்டியது தான?’

“பெரியவங்க விமல். முகத்துல அடிச்ச மாதிரி எப்படி சட்டுனு சொல்லுறது? அதுவும் இல்லாம நான் அந்தப் பொண்ணைப் பார்த்தேன். நல்ல இலட்சணமா. அமைதியா இருக்கு.”

“முதல்ல பொண்ணு பார்த்தப்ப, அண்ணியையும்.. ச்ச் சச்ச்.. அதான் கல்யாணம் நடக்கலயே? லாவண்யாவைப் பத்தியும் இதையே தான் சொன்னீங்க ம்மா நீங்க.”

“அப்படிச் சொல்லலேனா, சரண் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டானே?”

“அப்ப.. அந்தப் பொண்ணைப் பத்தி தெரிஞ்சிருந்தும் அண்ணனோட வாழ்க்கையில விளையாட பார்த்திருக்கீங்க?”

“கல்யாணம் ஆனா, அவன் எல்லாத்தையும் சமாளிச்சுக்குவான்னு நினைச்சேன்டா.”

“அது, என்னமோ சரிதான். ஆனா, அண்ணனுக்கு இஷ்டம் இல்லாததை செய்ய சொல்றது நியாயம் இல்லம்மா.”

“புரியிது. ஆனா ரெங்கநாயகி அம்மா கேட்டுட்டாங்களே? பெரிய மனுசிடா. நல்ல மனசு. நான் இதுதான் காரணம்னு சொன்னதும், லாவண்யாவைக் கண்டிச்சிட்டு மன்னிப்பும் கேட்டாங்க. அவங்களுக்கு நம்மளை விட மனசு இல்ல போல, அதான் பெரிய பேத்திக்குக் கேட்டிருக்காங்க.”

“இதெல்லாம் பேசுறதுக்கு நல்லாதான் இருக்கும். ஆனா நடக்கும் போது பெரிய சிக்கலை இழுத்து விட்டுடும். இந்தப் பேச்சை இதோட விட்டுடுங்கம்மா.” என்றிட, எதுவும் பேசாது அமைதியானார்.

“என்ன வேலை செஞ்சிருக்கீங்க அத்தை?” எனக் குரல் உயர்த்தி வினவினார் அர்ச்சனா.

“சித்தி கொஞ்சம் மெதுவா பேசுங்க. ஆச்சி எல்லாருக்கும் மூத்தவங்க.” என்று மௌனி தந்தையை ஈன்ற அன்னைக்கு ஆதரவாய் உரைக்க, ‘நான், உன்கிட்ட எதுவும் பேசல. வருசத்துக்கு ஒருநாள் வந்து போற உனக்கு, இங்க நடக்குறது தெரியுமா? ஆமா.. விசேஷத்துல கலந்துக்கலாம்னு வந்தியா? இல்ல, என் பொண்ணுக்கு பார்த்த மாப்பிள்ளைய நீ கட்டிக்கலாம்னு வந்தியா?”

“அர்ச்சனா, என்ன பேச்சுப் பேசுற? அது நாக்கா, இல்ல தேள் கொடுக்கா.?” என்று ரெங்கநாயகி மருமகளிடம் குரலை உயர்த்த, மௌனி எதுவும் பேச முற்படவில்லை.

மறுமொழி உரைக்க அரை நொடி ஆகாது. ஆனால் பேசினால், சூழல் கைமீறி செல்லக் கூடும். இந்த வாதம் தொடர்ந்தால், அதிகமாய் பாதிக்கப்பட போவது ரெங்கநாயகி தான்.

மூத்தவரின் மீதான அன்பிற்காக, அமைதியாய் இருந்தாள் பாவை.

“ஏன் கேட்டது வலிக்கிதா? அது, நிஜமா இருக்க போயி தான வலிக்கிது? உங்க பெரிய பேத்திக்குக் கல்யாணம் செய்யாம, என் மகளுக்கு முதல்ல நடக்கப் போகுதுனு, மனசுல வன்மத்தை வச்சுக்கிட்டு இருந்தீங்களா அத்தை? அதான் இன்னைக்கு சந்தர்ப்பம் கிடைக்கவும் மொத்தமா கொட்டிட்டிங்க போல?” என அர்ச்சனா விடாமல் கேட்க,

“நான் அப்படி நினைக்கிற ஆளா இருந்திருந்தா, ஆரம்பத்துலயே இந்த கல்யாணத்தைத் தட்டி விட்டிருப்பேன்.” என்று உரைத்து குடும்பத்தாரை அசர வைத்தார் இல்லத்தின் பெரியவர்.

“ரெண்டு பேருமே உங்க பேத்தி தான? எதுக்கு இந்த பாகுபாடு?”

“பாகுபாடா? ஏன் கல்யாணத்தை நிறுத்துனாங்கனு, நம்ம லாவண்யாக்காக தான கூப்பிட்டு வச்சு பேசுனேன்? குறை இருக்கிற பிள்ளைக்கிட்ட கரிசனம் காட்ட வேணாம். குறைஞ்ச பட்சம் மரியாதையோட நடந்து இருக்கலாம்ல? அதைச் செய்யல உன் பொண்ணு. பெத்தவ, நீ எதுவும் கேட்க மாட்ட. நாங்க கேட்டாலும் இப்படி வரிஞ்சுக் கட்டிக்கிட்டு வந்துடுவ. நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்தா, அதுக்கு பேரு பாகுபாடு காட்டுறதா.?”

“லாவி ஏதோ தெரியாம பேசிட்டா. அதுக்காக இப்படியா?”

“தெரியாமலா? இருபத்து நாலு வயசாகுது. இன்னும் எப்படிப் பேசுறதுனு தெரியலேனா, தப்பு யார் மேல?”

“சரி, நாங்க தப்பாவே இருந்துட்டுப் போறோம். அதுக்காக என் பொண்ணுக்குப் பார்த்த மாப்பிள்ளையை, உங்க பெரிய பேத்திக்கு கட்டணும்னு நினைப்பீங்களா.?”

“மனமேடையில தாலி கட்ட போறவனோட கையை பிடிச்சுக்கிட்டு ஒன்னும், நான் பொண்ணை மாத்தி உட்கார வைக்கல. வேணாம்னு உறுதியா சொன்ன பின்னாடிதான,  பெரியவ கல்யாணத்தைப் பேசுனேன்?”

” நீங்க நடந்துக்கிற முறை சரினு நினைக்கிறீர்களா.?”

“என்ன சரியில்ல. அந்தப் பையன் நல்லா குணமா தான இருக்கான்.?”

“யாரு, அவன் குணமானவனா? நாலஞ்சு தடவை பார்த்ததை வச்சு தப்புக் கணக்குப் போட்டுட்டீங்க ஆச்சி..” என்று இம்முறை அன்னையை முந்திக்கொண்டு லாவண்யா உரைத்தாள்.

பெயர்த்தியின் பக்கம் திரும்பியவர், “அப்படி என்ன குறையைக் கண்டுட்ட? சொல்லு, நானும் தெரிஞ்சிக்கிறேன்.”

“திமிரு பிடிச்சவன் ஆச்சி அவன். சிரிக்கக் கூட மாட்டான். பேச்சு சுத்தம். நாமளா வழிய போய் பேசுனா, ம்ம் ஆமா இல்லனு தான் பதில் வரும். ஃபோன் போட்டா எடுக்கவே மாட்டான். அதுவே அவனோட அம்மாவோ தங்கச்சியோ, பேசுனாலோ மெசேஜ் அனுப்புனாலோ உடனே பதில் வரும்.”

“இவ்வளவு குறை சொல்லுறவ, எதுக்குக் கல்யாணத்துக்கு சம்மதிச்ச.?”

“பார்க்க, ஆள் நல்லா இருக்கான். வீடு, காரு, சொத்துனு இருக்கு. இப்ப இப்படி இருந்தா என்ன? கல்யாணம் முடியவும் மாத்திடலாம்னு நினைச்சேன்.”

“வீடு காருக்காக அந்த பையனைக் கட்டிக்க நினைச்சியா.?”

“அதான் கல்யாணம் நின்னிடுச்சே.? அப்புறம் என்ன?”

“ஒன்னும் இல்லம்மா. பார்த்தியா அர்ச்சனா, உன்னோட மகளே இப்படிச் சொல்லுறா. அவளுக்கு இஷ்டம் இல்லாதப்ப, அந்தப் பையனா நான் பாப்பாக்குக் கல்யாணம் செய்ய நினைச்சதுல என்ன தப்பு?”

“என் பொண்ணு முன்னாடி அவங்க ரெண்டு பேரும் ஜோடியா வந்து போனா, நல்லா இருக்கும்னு நினைக்கிறீங்களா.?”

மெலிதாய் சிரித்தவர், “இன்னும் எதுவும் முடிவாகலயே? அதுக்குள்ள எதுக்கு இவ்வளவு பேச்சு?”

“நடக்குறதுக்கு முன்னாடி தான பேச முடியும்.? “

“நடந்தா பேசலாம். சரியா? வா பாப்பா, சாப்பிடுவோம்..” என ரெங்கநாயகி மௌனியை அழைக்க, அவரின் கரம் பற்றி உடன் சென்றாள் பாவை.

“உங்க அம்மாவை ஏதாவது சொல்லுறீங்களா? எனக்கு என்னனு உட்கார்ந்து வேடிக்கை பார்க்குறீங்க? இது நம்ம பொண்ணோட வாழ்க்கை!” என்று அர்ச்சனா கணவரை அர்ச்சிக்க தொடங்க, “அதான் நீ பேசுறியே? அம்மா நான் சொன்னா கேட்க மாட்டாங்கமா.!” என மாமியார் மருமகளிற்கு இடையே சிக்க விரும்பாது நழுவிக் கொண்டார் சேகரன்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்