Loading

தேடல் – 12

வீடெங்கிலும் பரபரவென சுற்றிக் கொண்டிருந்தார் ஜெயவேலன். என்றும் இல்லாத ஆதித சந்தோஷம், பூரிப்பு அவரின் முகத்தில் புது தேஜஸை உருவாக்கி இருந்தது. என்ன இருந்தாலும் தங்கையின் மகளை மகனுக்கு மணமுடிக்க போகிறாரே! அந்த சந்தோஷம் இருக்க தானே செய்யும்!

 

“ஏன்டி பெரியவளே… உன் புருஷங்காரன் என்னமோ ஊர் உலகத்துல நடக்காத அதிசயமாட்டம் இப்படி வானத்துக்கும் பூமிக்கும் குதியா குதிச்சுட்டு இருக்கானே… இந்த கல்யாணத்த நிறுத்துவானு நினைக்க…” கற்பகம் பாட்டிதான் மகனின் அளப்பறையை பார்த்து, தெய்வாவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

 

“ம்ம்ம்… உங்க புள்ள தானே… இந்த அளவுக்கு கூட குதிக்கலைனா எப்படி… என்னமோ சொன்னீங்க… இந்த கல்யாணத்த நான் நிறுத்தறன்டா பேரான்டினு… இப்போ என்ன வந்து கேட்டா என்ன அர்த்தம்…” என்றார் கழுத்தை ஒரு வெட்டு வெட்டி.

 

“அடி போடி போக்கதவளே… நான் என்னமோ இவள்ட ஐடியா கேட்ட மாதிரி இந்த சிலுப்பு சிலுப்பிக்கறா… என் புள்ளைய எப்படி சம்மதிக்க வைக்கனுமுனு எனக்கு தெரியும்டி…”

 

“அப்படிங்களா அத்தை… அப்போ இசை கல்யாணம் நடக்கும் போது எங்க போயிருந்தீங்க… வோல்டு டூருக்கா… ஒரு போனாவது பண்ணி உங்க பையன்ட ஒரு வார்த்தை சொல்லி சம்மதம் வாங்கி இருக்கலாம் இல்ல… கல்யாணம் இரண்டு வருஷம் இழுத்தடிச்சு இருக்காது…” என தெய்வா பவ்வயமாய் கூறி, கேலியாய் மாமியாரின் முகம் பார்த்தார்.

 

“என்னடி நக்கலா பண்ணிட்டி திரியற… அப்படியே இடிச்சேனா தெரியும்…” என கற்பகம் பாட்டி தெய்வாவின் கன்னத்தில் ஒரு இடி இடிக்க, “ஐய்யோ… தனா…” என்ற அலறல் சத்தம் ஜெயவேலனிடமிருந்து.

 

சொல்லியபடியே அவர் மயங்கி சரிந்திருக்க, இசையும் அக்னியும் தான் இருபுறமும் தாங்கி பிடித்திருந்தனர். மயங்கி சரிந்தவர் முக்ததில் தண்ணீர் தெளித்து எழுப்ப, அதற்குள் கற்பகம், “ஐய்யையோ… என் புள்ளைக்கு என்னாச்சு… பெரியவனே…” என்று பதறியபடி அவரை நெருங்கி இருந்தார்.

 

மெல்ல கண்விழித்துப் பார்த்தவருக்கு சுற்றி நடக்கும் ஒன்றும் புரியவில்லை. இருக்கும் சூழல் பிடிபடவில்லை. இறுதியாக கேட்ட வார்த்தைகளை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. மீண்டும் ஒருமுறை கேட்டு உறுதி செய்துக் கொள்ளலாம் என கைப்பேசியை தேட, அதுவோ சிதறு தேய்காயாய் சில்லு சில்லாய் உடைந்திருந்தது.

 

படபடக்கும் இதயத்தை கையில் இறுக பிடித்தபடி கண்கள் கலங்க, “அது… அது… வரிசை சாமன் வாங்க போன இடத்துல… தனாவுக்கு… தனாவுக்கு… ஆக்ஸிடண்ட் ஆகிட்டாம்…” என அவர் திக்கி திணறி சொல்லி முடிப்பதற்குள் கண்களில் கண்ணீர் ரேகைகள். அவரின் நிலைக் கண்டதும் தான் செய்தது அதிகபடி தானோ என்று தோன்றியது அக்னிக்கு. ஆனால் வேறு வழியில்லையே. சாமானியத்தில் இறங்கி வரும் மனிதரா அவர்.

 

அவர் சொன்னதைக் கேட்டதும் மூன்று லட்சுமிகளும் ஒன்றாய் கட்டிக் கொண்டு பெருங்குரலெடுத்து அழுகையை ஆரம்பிக்க, தெய்வாவோ சித்ராவை சுரண்டிக் கொண்டிருந்தார். அதையெல்லாம் அவர் கண்டுக் கொண்டால் தானே! சுவாரஸ்யாமாய் மூன்று நாத்தனார்களையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.

 

மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டு, அவரின் தொடையில் தெய்வா நறுக்கென கிள்ளி வைக்க, “ஸ்ஸ்ஸ்ஸ்…” என்ற சத்தத்துடன் திரும்பி பார்த்து சிணுங்கினார் சித்ரா.

 

“அடியே கூறுக்கெட்டவளே அடிபட்டது உன் புருஷனுக்கு… என் புருஷனே மயங்கி விழறாரு… நீ என்னனா வாய பொழந்துட்டு பாத்துட்டு இருக்க…” என தெய்வா கிசுகிசுக்க,

 

“அப்போ  நானும் மயங்கி விழவாக்கா…” என அப்பாவியாய் சித்ரா கேட்டு வைக்க,

 

“கேட்டுட்டு இருக்கா பாரு கேனகிறுக்கி… சீக்கரம் விழுடி…” என தெய்வா சொல்லவும், கத்த வாயை திறந்த சித்ராவின் வாயை இறுக்கி பொத்தினார் அவர்.

 

“என்ன லேட் ரியாஷனா… மூடிட்டு அப்படியே என் மேல சாஞ்சுக்க… மீதிய நான் பாத்துக்கறேன்… இடையில கண்ண தொறந்த… கண்ண நோண்டி கையில குடுத்துடுவேன்…” என சன்ன குரலில் மிரட்ட, அப்படியே அவர் மேல் சாய்ந்துக் கண்ணை மூடிக் கொண்டார் சித்ரா.

 

“சித்ரா… சித்து… என்ன பாரும்மா… என்னாச்சு உனக்கு…” என இப்போது பெருங்குரலெடுத்து தெய்வா சத்தம் கொடுக்க, அனைவரின் கவனமும் ஜெயாவிடமிருந்து மீண்டு சித்ராவின் பக்கம் திரும்பியது.

 

“ஐய்யையோ… சித்ராவுக்கு என்ன..?” என்றபடியே கற்பகம் ஓடிவர, “தெரியலத்தை… இப்போ தான் கவனிக்கறேன்… தம்பிக்கு இப்படினு கேட்டதும் என்மேல சாஞ்சிபடியே மயங்கிட்டா போல… எழுப்புனா எழும்ப மாட்டற…” என்றபடியே சித்ராவை மடியில் கிடத்திக் கொண்டு, கன்னத்தை தட்டி எழுப்ப முயல, அதற்குள் தண்ணீரை எடுத்து வேக வேகமாக அவரின் முகத்தில் அடித்தான் கதிரவன். சாத்சாத் தனா- சித்ராவின் தவபுதல்வனே தான்.

 

சுல்லென்ற தண்ணீர் முகத்தில் பட அப்போதும் விழிப்பேனா என இறுக கண்களை மூடி படுத்திருந்தார் சித்ரா. “என்ன பெரியம்மா பண்ணறீங்க… கன்னத்துல சந்தனம் தடவற கணக்கா தொட்டு தொட்டு பாத்துட்டு இருக்கீங்க… ஏன் கன்னத்த கிள்ளி முத்தம் குடுங்களேன்… இப்படி தட்டி எப்போ மயக்கம் தெளிய… நான் இப்போ தெளிய வைக்கறேன் பாருங்க மயக்கத்தை…” என்றபடியே தாயை தன்மடியில் கிடத்திக் கொண்டவன், பட்பட் என்று கன்னத்தில் தட்டி எழுப்ப, ‘என்ன தாய் பாசம்டா  மகனே உனக்கு…’ என்று உள்ளுக்குள் புகைந்தது சித்ராவிற்கு. இதற்கு மேல் தாங்காது என நினைத்தவராய் மெல்ல அவர் கண் திறந்து தள்ளாடியபடி எழுந்து அமர்ந்தார்.

 

“வாங்க சீக்கரம்… கார் ரெடியா இருக்கு… சித்தப்புவ போய் முதல பாப்பும்…” என்றபடி அனைவரையும் கிளப்பி இருந்தான் அக்னி. பின்னே இங்கேயே நின்று இவர்களின் ஓவர் ஆக்ஷனில் யாராவது கண்டுபிடித்து தொலைக்கவா? இதில் இசை வேறு இவனை ஒரு மார்கமாய் பார்த்து வைத்தான்.

 

எட்டு பேர் அமர கூடிய அந்த டாட்டா சுமோவில் அக்னி ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து வாகனத்தை உயிர்பிக்க, அவனின் அருகிலேயே ஜெயவேலன் அமர்ந்துக் கொண்டார். தனாவின் மகளை மடியில் இருத்தியபடி, மூவர் அமரகூடிய இருக்கையில் நடுவில் சித்ராவை அமர வைத்து ஒரு பக்கம் தெய்வாவும் மறுபக்கம் கற்பகமும் அமர்ந்துக்கொள்ள… இன்னும் மயக்கத்தில் இருப்பவரைப் போல பாதிக் கண்கள் சொறுகி இருந்தது சித்ராவுக்கு. சின்ன முனகல் வேறு. பின்னாலோ மூன்று லெட்சுமிகளும் கண்கள் கலங்கியபடி அமர்ந்திருக்க… நிவி அவர்களின் கையை ஆறுதலாக பற்றியபடி அமர்ந்திருந்தாள்.

 

பின்னாலேயே இசையும் கதிரவனுடன் இருசக்கர வாகனத்தில் கிளம்பி இருக்க, அவனின் மூன்று மாமாக்களும், திவ்யாவின் அப்பா அம்மாமுமே பின்னோடு அவரவரது இருசக்கர வாகனத்தில் கிளம்பி இருந்தனர்.

 

ஒரு வழியாக அடித்து பிடித்து மருத்துவமனைக்கு விரைந்து வர, எந்த வித விசாரணையும் இன்றி வேகமாக உள்ளே ஓடினான் அக்னி. அவன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மற்றவர்கள் கொஞ்சம் பின்தங்கி அவனை தொடர்ந்தனர்.

 

வேகமாக சென்று ஒரு அறையின் கதவை திறக்க, அவன் எண்ணியதைப் போலவே தனாவின் வலதுக்காலில் முட்டிக்கும் மேலே கட்டிப் போட்டு ஊஞ்சலாடிக் கொண்டிருக்க, இடதுக் கையும் அதேப் போல ஊஞ்சலாடிக் கொண்டிருக்க, தலையில் பெரிய கட்டோடு ஆனந்தமாய் ஆப்பிளை கடித்துக் கொண்டிருந்தார் அவர்.

 

“யோவ்… சித்தப்பு…” என்று வேகமாக கதவை சாற்றிவிட்டு வந்தவன், “வாடா மகனே…” என்ற அவரின் வரவேற்பில் கடுப்பாகிப் போனான்.

 

“என்னய்யா பண்ணிட்டு இருக்க… எல்லாரும் வந்துட்டு இருக்காங்க… இப்போ ஆப்பிள் ஒரு கேடா உனக்கு…” என்றவன் நறுக்கென்று தலையில் கொட்டி வைத்தான்.

 

தலையை தேய்த்தபடியே… “இல்லடா மகனே… காலையில சாப்பிடல… லைட்டா பசிச்சு.. அதான் நீங்க வரதுக்குள்ள சாப்பிடலாமேனு…” என இழுத்தவர் ஆப்பிளை இன்னொரு கடி கடிக்க, அதை வாங்கி தூர எறிந்தான் அவன்.

 

அதற்குள் வெளியில் அவன் அத்தைமார்களின் சத்தம் கேட்க, “பேசாம கண்ண மூடிட்டு கம்முனு படுத்துடு… யாராவது வந்து ஏதாவது கேள்வி கேட்டா… நானே பாத்துக்கறேன்…” என்றவன் வலுக்கட்டாயமாக அவரின் நெஞ்சில் கைவைத்து அழுத்தி படுக்க வைக்க, அதே சமயம் “தனா…” என்றபடியே உள்ளே வந்துவிட்டிருந்தார் ஜெயபாலன்.

 

“அப்பா சத்தம் போடாதீங்க… சித்தப்பா மயக்கத்துல இருக்காங்க…” என்றபடியே அவரின் அருகே செல்ல… அதற்குள் தனாவின் நிலையைக் கண்டு பதறி அருகில் நெருங்க, மற்றவர்களும் வந்துவிட்டிருந்தனர். தமைக்கைமார்கள் மூவரும் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிக்க, வேகமாக அங்கே வந்தார் அந்த செவிலியர்.

 

“சார் பேசண்ட டிஸ்டர்ப் பண்ணாதீங்க… பாக்கறதுனா பாத்துட்டு சீக்கரம் கிளம்புங்க… டாக்டர் வந்தா திட்டுவாங்க…” என சொல்லி சென்றுவிட, அனைவரையும் அமைதிபடுத்தியவன், சிறிது நேரம் பார்க்க வைத்து வெளியே அழைத்து வந்துவிட்டான்.

 

“தலப்படா அடிச்சுக்கிட்டேன்… வரிசை சாமான் வாங்க தனியா போவாதடா போவாதடானு… கேட்டானா… இப்போ இப்படி வந்து படுத்து கிடக்கானே பாவிப்பய…” என ஜெயவேலன் வாய்விட்டு புலம்ப அவரை ஆதரவாய் தாங்கிக் கொண்டார் தெய்வா.

 

“யாரு கண்ணு பட்டுச்சோ… கலகலனு இருந்த வீடு இப்போ இப்படி இருக்கே…” என கற்பகம் லேசாக தூபம் போட,

 

அவ்வளவு தான் நிவியின் அன்னை ஆரம்பித்துவிட்டார். எல்லாம் தன் பெண்ணை இசைக்கு மணம் முடிக்காமல் திவ்யாவைக் கொண்டு வந்த நேரம் தானென்று. மற்ற இருவரும் அதையே ஆமோதிக்க, ஜெயவேலனுக்குமே அப்படி தானோ என்று தோன்றிவிட்டது. எதை ஆரம்பிக்க போய் எங்கே வந்து நிற்கிறது இந்த பேச்சு. விக்கித்துப் போய்தான் நின்றான் அக்னி. அவன் கல்யாணத்தை நிறுத்த போய் இசைக்கு விவாகரத்து வாங்கிக் கொடுத்து விடுவான் போலவே! அவன் கண்களாலேயே அன்னையையும் பாட்டியையும் இறைஞ்ச, கண்களால் சமாதானம் சொல்லினர் அவனுக்கு.

 

நிவியின் அன்னையின் கன்னத்தில் ஒரு இடியை இறக்கியவர்,  “ஏன்டி கூறுகெட்டவளே… நம்ம வீட்டுக்கு வாழ வந்த பொண்ண இப்படிதான் பேசுவீயா… நீயும் ரெண்டு பொண்ண பெத்தவ தானே… அறிவில்ல உனக்கு…” என மீண்டும் ஒரு இடியை இறக்கி.

 

“இல்லத்தை கல்யாணம் ஆகி இரண்டே நாள்ல இப்படி ஆகுதுனா… எனக்கும்…” என சொன்ன தெய்வாவை இடைவெட்டினார் அவர்.

 

“அப்படி பாத்தா… இவ மொவளுக்கும் என் பேரனுக்கும் தான் இன்னைக்கு நிச்சயதார்த்தம்… நிச்சயமே ஆகறதுக்குள்ள இப்படி ஆகிட்டே வாழ வந்தா என்ன ஆகுனு சொல்லுவீயா நீ…” என்றார் கற்பகம் தெய்வாவை முறைத்துக் கொண்டே.

 

“ஐய்யையோ அத்தை நான் அப்படி சொல்லலை…”

 

“யாரும் எப்படியும் சொல்ல வேண்டாம்… வீட்டுல இருக்க பெரியவங்கள கேக்காம ஆடுனா இப்படிதான்… அடுத்தடுத்து நல்லா காரியம் பண்ணா கண்ணுக்கு  ஆவுமா… யாரு நான் சொன்னதா கேக்கறா… இப்பதைக்கு யாரும் எதுவும் பேசாதீங்க… என் புள்ள பொழைச்சதே அந்த முனீஸ்வரன் புண்ணியம்…”

 

“அப்போ நிச்சயம்த்தை…” என தெய்வா சன்ன குரலில் கேட்க,

 

“ஏன்டி… கேனகிறுக்கி… உனக்கு அறிவுங்கறது மருந்துக்காவது இருக்கா… இல்லையா… பெரிய மனுஷி ஒருத்தி சொல்லிட்டு இருக்கேன்… அடுத்த மாசம் நம்ம குலதெய்வத்துக்கு கிடாவெட்டு பொங்க வச்சு குறி கேட்போம்… அதுக்கப்புறம் இந்த கல்யாண பேச்சை எடுக்கலாம்… தெய்வத்தையும் கேக்கறதில்லை… வீட்டு பெரியவங்களலயும் கேக்கறதில்ல… நாளு கிழமையும் பாக்கறதில்லை… தாதோன்றி தனமா செஞ்சா இப்படி தான்…” அவர் பாட்டுக்கு தன் போக்கில் புலம்ப தொடங்கி விட மற்ற யாருமே வாயையே திறக்கவில்லை. இல்லையே அப்படி இருக்க வாய்ப்பில்லையே! தெய்வாவும் கற்பகம் பாட்டியும் தான் யார் பேசவும் வாய்ப்பளிக்கவில்லை.

 

அவர் சொல்வதுதான் சரியோ, நாம்தான் அவசரபட்டு விட்டோமோ என ஜெயவேலன் இடிந்துப் போய் ஒரு பக்கத்தில் அமர்ந்துவிட, அவரின் கையைப் பற்றியபடியே மூன்று தங்கைகளும் அமர்ந்துவிட, அவர்களின் கண்ணீர் நின்றபாடில்லை. அக்னிக்கே இதை பார்க்க உள்ளம் கணத்துதான் போனது.

 

இவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் பாசம் அறியாதவனா அவன். எங்கே வெளியில் இருந்து பெண் வந்தால் தன் தங்கைகளை நாளடைவில் ஒதுக்கி விடுவார்களோ என்ற எண்ணம் ஜெயவேலனுக்கு. அதே எண்ணம்தான் அவரின் தங்கைகளுக்கும். தங்கள் உறவு நிலைத்திருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள் தம் மக்களின் மனதை மறந்தேப் போயினர். ஆனால், அவர்களில் கடைகுட்டியான தனாவிற்கு ஒன்று என்றால் மட்டும் நால்வருமே தாங்கிக் கொள்ள மாட்டார்கள். நிச்சயம் தனாவின் மேல் கொண்டிருக்கும் பாசத்திற்காக அவர்கள் என்னவும் செய்வார்கள் என்பது அவன் அறிந்தது தானே! இதை வைத்தே இந்த நிச்சயத்தையும் நிறுத்தி கல்யாணத்தையும் நிறுத்தி விடலாம் என்று நினைத்தான் அக்னி. அந்த முடிவுக்கூட இசையின் திருமணத்தில் அவர்களின் பிடிவாதம் உணர்ந்ததாலேயே! இல்லையென்றால் எப்படியும் பொறுமையாக அவர்களுக்கு சொல்லி புரிய வைக்கவே முயன்றிருப்பான். அதே காரணத்திற்காக தான் தெய்வாவும் கற்பகம் பாட்டியும்கூட இதற்கு ஒப்புக் கொண்டது.

 

இங்கே இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் சலசலத்தபடி இருக்க அக்னியை தனியே இழுத்துக் கொண்டு வந்திருந்தான் இசை. இடுப்பில் கைவைத்து அவனை முறைத்துக் கொண்டே, “என்னடா நடக்குது இங்க…” என்றான் அதட்டும் குரலில்.

 

“என்ன… என்ன… என்ன நடக்குது இங்கே… ஒன்னுமில்லையே…” என்றான் அக்னி அவசர பதைபதைப்புடன்.

 

“ஓஓஓ… அப்பா ஆக்ஸிடண்ட் ஆகிட்டுனு மட்டும் தானே சொன்னாரு… இந்த ஹாஸ்பிட்டல இந்த ரூம்ல தான் சித்தப்பா இருக்காருனு உனக்கு எப்படி தெரியும்..?”

 

“அப்பா போன் உடைஞ்சதும் எனக்கு போன் பண்ணி இன்ஃபார்ம் பண்ணாங்கடா இசை…”

 

“ஓஓஓ… அப்போ சரிதான்… ஆனா நான் வரேனு சொல்லியும் எதுக்கு சித்தப்பா வரிசை சாமான் வாங்க தனியா போனாங்க…”

 

“அது அது எனக்கு எப்படி தெரியும்…”

 

“சரிதான் அதெப்படி உனக்கு தெரியும்… சரி சித்தப்பா வரிசை சாமான் வாங்க போனது தெக்கால… ஆனா சேத்த ஆஸ்பத்திரி இருக்கதோ கிழக்கால… இது எப்படி தம்பி…”

 

“அது… அது… சேத்தவங்கள தான் கேக்கனும்…”

 

“ஆமான்… ஆமான் சேத்தவங்கள தான் கேக்கனும்… சரி ஆக்ஸூடென்ட் கேஸ்தானே… கேஸ் பைல் பண்ணியாச்சா… வீட்டுலையிருந்து யாரும் வராம ட்ரிட்மெண்டுக்கு யார் பணம் கட்டுனா…”

 

“யார் பணம் கட்டுனா..? இனிமே தான் கட்டனும்…” என்றவனை இடுப்பில் கை வைத்து முறைத்துக் கொண்டிருந்தான் இசை.

 

“நம்பிட்டேன்டா… நீ சொன்ன அத்தனையும் சத்தியமா நம்பிட்டேன்டா… நீ பொறந்ததுல இருந்து எதுக்கு எப்படி முழிப்பனு எனக்கு தெரியாதா..? சித்தப்பாவுக்கு இப்படினதும் அப்பாவ விட நீ தான் அதிகம் ஷாக் ஆகணும்… ஏன்னா உனக்கும் சித்தப்பாவுக்கும் உள்ள பாண்டிங் அப்படி… ஆனா நீ அப்பா சொல்லறதுக்கு முன்னாடி இருந்தே ஏதோ பதட்டத்துல தான் சுத்திட்டு இருந்த… அப்பா சொல்லும் போதும் கூட ஒரு ஷாக் ரியாக்ஷன் கூட இல்ல உன் முகத்துல…”

 

“இல்லடா இசை… அப்படியெல்லாம் எதுவுமில்லை…”

 

“சரி நகரு… நான் போய் சித்தப்பாவ பாக்கறேன்…” என்றவன் அவனை தள்ளிக் கொண்டு அறையின் உள்ளே செல்ல, அக்னியும் அவனை பின் தொடர்ந்தான்.

 

உள்ளே சித்ராவோ ஆப்பிளை வெட்டி தனாவிடம் கொடுக்க, அவரோ தான் ஒரு கடி கடித்துவிட்டு,  மனைவி ஒரு கடி என ஆப்பிளை ம மனைவிக்கு ஊட்டிக் கொண்டிருக்க, உள்ளே சென்ற இசையோ இதைக் கண்டு அதிர்ந்து அப்படியே நிற்க, பின்னே சென்ற அக்னிக்கும் திக்கென்றிருந்தது.

 

“யோவ் சித்தப்பு…” என்று இசை பல்லைக் கடிக்க,  அவனை அங்கே கண்டவரோ, திருதிருத்து விழிக்க, வாயில் ஆப்பிளோடு தான். அதே நிலைதான் சித்ராவுக்கும்.

 

“இப்போ என்னடா சொல்லற…” என இசை அக்னியை கேட்க, பதிலே இல்லை. சுற்றும் முற்றும் அவனை தேட, அந்த அறையில் இருப்பதற்கான தடமே இல்லை.

 

“அண்ணாங்க… நான் இங்க இருக்கேன்ங்க…” என்ற சத்தம் அவன் காலடியில் இருந்து வர, குனிந்துப் பார்த்தால் சாஸ்டாங்கமாக அவன் காலில் விழுந்திருந்தான் அக்னி.

 

“அண்ணாங்க… அண்ணாங்க… ப்ளீஸ் அண்ணாங்க… யார்கிட்டையும் சொல்லிடாதீங்க… எனக்கும் நிவிக்கும் இந்த கல்யாணத்துல இஷ்டமில்லைங்க… கஷ்டம் மட்டுதாங்க… அண்ணாங்க… அதானுங்க அண்ணாங்க… இப்படி சின்ன பிள்ளை தனமா பண்ணிடோங்க… ப்ளீஸ்ங்க… ப்ளீஸ்ங்க… என் செல்ல அண்ணாங்க இல்ல… அப்பாகிட்டையும் அத்தைங்ககிட்டையும் மட்டும் சொல்லிடாதீங்க…” என அக்னி காலைக் கட்டிக் கொண்டு கெஞ்சிக் கொண்டிருக்க, தாடையில் கை வைத்து தீவிரமாக யோசிப்பதைப் போல பாவனை செய்தான் இசை.

 

அந்த பாவனையோடே சென்று தனாவிற்கு பக்கத்தில் அமர்ந்தவன் வெட்டி வைத்திருந்த ஆப்பிளில் ஒன்றை எடுத்துக் கடித்தபடியே, “ம்ம்ம்… அந்த ஆரஞ்ச எடுத்து ஜூஸ் போடு… அப்பாட்ட சொல்லலாமா வேண்டாமானு நான் யோசிக்கறேன்…” என கால் மேல் கால் போட்டுக் கொண்டு இசை சொல்ல, கடுப்புடனே அவன் சொன்னதை செய்ய சென்றான் அக்னி.

 

அதே சமயம் கதவை திறந்து உள்ளே வந்த ஜெயவேலன் தனா எழுந்து உட்காந்து இருப்பதை கண்டு ஓடிச் சென்று அவரை கண்களால் தழுவிக் கொண்டவர் மற்றவர்களையும் அழைக்க, அவர்கள் கேட்ட கேள்விக்கு மையமாகவே தலையை அசைத்து வைத்தார். இனி ஆப்பிள் சாப்பிட கூட வாயை திறப்பாறா என்ன? இடையில் ஜெயவேலன் மருத்துவமனை செலவென்று அக்னியிடம் ஒரு லட்சத்து சொத்தைக் கட்டச் சொல்லி ஒரு பில்லை தர, அதை பார்த்தவனுக்கு நெஞ்சை அடைத்தது. அதை வாங்கிக் கொண்டு விறுவிறுவென டாக்டர்.இப்ராஹீமை காண விரைந்தான். பின்னே அவரின் உதவிக் கொண்டு தானே இந்த திட்டத்தையே தீட்டியது. தொழில் முறையில் இருவருக்கும் நல்ல பழக்கம். அதில் கொஞ்சம் நட்பும் கூட இழைந்தோடியது எனலாம்.

 

வேகமாக சென்றுக் கொண்டிருந்தவன் எவர் மேலோ இடித்து தடிமாறி சற்று நிதானித்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, நிமிர்ந்துப் பார்க்க, அதையெல்லாம் அவள் கண்டுக் கொண்டதைப் போலவே தெரியவில்லை. அவள் முகம் முழுவதும் பதற்றம் மட்டுமே அப்பிக் கிடந்தது. ஒரு மெல்லிய பயமும் உடன் இருந்ததோ? “சாரி சார்… சாரி சார்…” என்றவள் நிமிர்ந்தும் பார்க்காமல் சென்றுவிட, ஏதோ ஒன்று அவனுக்கு உள்ளுக்குள் நெருடியது.

 

அவளைப் பார்த்தால் யாரையோ பார்க்க வந்ததைப் போலவோ, உடல்நிலை சரியில்லாதைப் போலவோ கொஞ்சமும் தெரியவில்லை. ஏதோ ஒன்று தவறாக இருக்கிறது. இதைக்கூடவா இத்தனை வருட போலீஸ்ஸஅனுபவத்தில் கண்டுபிடிக்க முடியாது அவனால். சற்றே யோசிக்க, இதுதான் அவளுக்கு அடிப்பட்ட அன்று சேர்த்த மருத்துவமனை என்பதும் பொறி தட்டியதோ, அப்போதே கிளம்பிவிட்டான் அவளின் பின்னோடு.

 

வேகமாக வெளியே வந்தவள் தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு அவசரமாக கிளம்பிவிட்டாள். இவனும் அவள் பின்னாடு கொஞ்சம் இடைவெளிவிட்டு கிளம்பி இருந்தான்.

 

அவளின் பதற்றமும் பயமும் அவள் வாகனத்தை செலுத்திய வேகத்திலேயே தெரிந்தது. என்றுமில்லா அதிசயமாக இன்று ஹெல்மெட் கூட அணியாமல் வண்டியை எடுத்திருந்தாள். நகரத்தைவிட்டு யாருமற்ற கிராம சாலைகளில் பயணிக்க தொடங்கி இருந்தது அவளின் வாகனம். பின்னோடு சென்றவனுக்கு அவளின் இல்லம் நோக்கிதான் செல்கிறாள் என்பது புரிந்தது. இதில் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்திருந்தான் என்றும் சொல்லலாம். ஆனால், அவனே எதிர்பாராத விதத்தில் தீடிரென லாரி ஒன்று வளைவிலிருந்து அவளை நோக்கி திரும்ப, இன்னும் சில மீட்டர் இடைவெளியே இருந்தது அவளின் வாகனத்தை மோதுவதற்கு. இவனின் சப்தமும் அடங்குப் போனது என்றுதான் சொல்ல வேண்டும்.

 

ஆனால் எல்லாமே ஒரே ஒரு நொடிக்கும் குறைந்த நேரம்தான். அவள் அதிர்ந்து அப்படியே வாகனத்தை செலுத்துவதை நிறுத்தி இருக்க, வேகமாக ஆக்ஸீலேட்டரை முறுக்கி அவளின் அருகே சென்றதும். அவளின் இடையை பற்றிய இழுத்தபடி அருகே இருந்த வாய்க்காலில் பாய்ந்திருந்தான். அதே சமயம் ‘டாமல்’ என்ற பலத்த சத்தத்துடன் இருவரின் வாகனத்தையும் அந்த லாரியில் மோதி சென்றிருந்தது.

 

    – தேடல் தொடரும்…

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்