Loading

அத்தியாயம் 12

 

பாதுகாப்புக் கருதி அனைவரும் அன்றைய இரவு மென்மொழியின் வீட்டிலேயே கழிப்பதாக முடிவெடுக்கப்பட்டது.

 

அதன்படி, மற்றவர்களை இறக்கி விட்ட யுகேந்திரன், வேலை இருப்பதால் காவல் நிலையம் செல்ல ஆயத்தமானான்.

 

அப்போது, வீட்டிற்குள் செல்லப் போன மென்மொழியை மட்டும் தனியே அழைத்த யுகேந்திரன், “ஆர் யூ ஆல்ரைட்?” என்று வினவ, அதுவரை குழப்பத்திலிருந்த மென்மொழியோ அவனின் கேள்வியில் முதலில் புரியாமல் விழித்துப் பின், “அது… வீட்டை விக்கப் போறாங்கன்னு சொன்னதும் கொஞ்சம் டென்ஷனாகிடுச்சு. இப்போ ஓகேதான்.” என்றாள்.

 

“எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். ரிலாக்ஸ் அண்ட் டேக் கேர்.” என்ற யுகேந்திரன், கண்களால் அவளிடமிருந்து விடைபெற, மென்மொழியும் அவன் வழியிலேயே விடை கொடுத்தாள்.

 

அதை வீட்டிற்குள்ளிருந்து கண்ட சுடரொளியோ, “க்கும், இப்போ எதுக்காம் இந்த ஃபீலிங்கு?” என்று யுகேந்திரனின் மீதிருந்த கடுப்பு குறையாமல் வினவ, “இந்த ஒரே நாள்ல உனக்குப் பொறாமை ரொம்ப அதிகமாகிடுச்சு போல சுடர். பார்த்துப் பார்த்து, எங்கேயாவது கருகிடப் போகுது.” என்று கேலி செய்தான் இன்பசேகரன்.

 

அவனருகே அமைதியாக நின்ருந்த யாழ்மொழியோ, அவனையே ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருக்க, அது அவனிற்குத் தெரிந்தாலும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.

 

ஆனால், அதை அப்படியே விடுபவளா சுடரொளி!

 

“ஹலோ பாஸ், கருகுற வாடை என்கிட்ட இருந்து வரல. உனக்கு லெஃப்ட் சைட்ல இருந்துதான் வருது. அந்த நெருப்பை  அணைப்பியோ இல்ல இன்னும் கொஞ்சம் எண்ணெய்யை ஊத்துவியோ… அது உன் இஷ்டம்!” என்றவள் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

 

அப்போதும் இன்பசேகரன் யாழ்மொழியைத் திரும்பிப் பார்க்காமல் செல்ல முற்பட, அவனின் வழியை இடைமறித்துத் தடுத்த யாழ்மொழியோ, “இன்னும் எவ்ளோ நாளைக்கு இப்படி இருக்கப் போற இன்பா. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அதுவும், இந்த ரெண்டு நாள் கத்துக் குடுத்த பாடத்தால, நான் தப்புன்னு உணர்ந்ததுக்கு அப்புறமும் நீ இப்படி அவாயிட் பண்றது, என்னை இன்னும் கில்ட்டா ஃபீல் பண்ண வைக்குது. எஸ், இதுவரைக்கும் நான் ரொம்ப செல்ஃபிஷா, மெச்சூரிட்டி இல்லாம, நீ சொன்ன மாதிரி பொறுப்பில்லாம இருந்துருக்கேன்தான். இப்போ கூட அதை ரியலைஸ் பண்ணியிருக்கேனே தவிர, அதுலயிருந்து எப்படி வெளிய வரது, ரியாலிட்டியை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு இன்னும் எனக்குத் தெரியல இன்பா. இதை என்னால மத்தவங்க கிட்ட சொல்லக் கூட முடியல. இருக்குற பிரச்சனைல, உன் பிரச்சனை ரொம்ப பெருசான்னு நினைச்சுடுவாங்களோன்னு இருக்கு. உனக்கு என்னைப் புரியுதான்னு தெரியல… ரொம்ப இன்செக்யூர்ட்டா ஃபீல் பண்றேன்.” என்று விரக்தியுடன் கூறினாள்.

 

மேலும், “மொழிக்கு எல்லாரும் இருக்கீங்க. ஆனா, எனக்கு யாருமே இல்லாத ஃபீல் வருது.” என்றவளின் விழியோரம் கண்ணீரால் பளபளக்க, அதைத் தாங்க முடியவில்லை அந்த ஒருதலைக் காதலனால்!

 

“இதுவரை நீயா ஏதாவது கற்பனை பன்ணிக்கிட்டு ஒதுங்கி இருந்துட்டு, இப்போ யாரும் இல்லன்னு குத்தம் சொல்லாத. மொழிக்கு எப்படி எல்லாரும் இருக்குமோ… அதே மாதிரிதான் உனக்கும் இருப்போம்.” என்று ஆறுதலைக் கூட கண்டிப்புடனே கூறினான் இன்பசேகரன்.

 

அவனின் இறுதி வரியில் விலுக்கென்று நிமிர்ந்து ஆடவனைக் கண்டாள் பாவை.

 

அதில் இருந்தது என்ன?

 

‘மொழியைப் போலத்தான் நான் உனக்கா?’ என்ற உரிமையுணர்வோ!

 

வாய் வார்த்தையாக சொல்லாவிடினும் யாழ்மொழியின் விழிமொழி அதையே உணர்த்த, அதைக் கண்டு கொண்டாலும், சூடுபட்ட பூனையாக இன்பசேகரனின் மனம் இளக மறுத்தது.

 

முன்பு, யாழ்மொழியை இன்பசேகரன் சுற்றி வந்ததைப் போல, இப்போது இன்பசேகரனை யாழ்மொழி சுற்றி வர வேண்டும் என்று விதி முடிவு செய்து விட்டால், அந்தக் கடினப் பாதையை மாற்றி விட முடியுமா என்ன? யாழ்மொழி அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்!

 

அப்போது உள்ளே வந்த மென்மொழி இருவரின் முகத்தை வைத்தே ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து, சூழலை மாற்ற வேண்டி, “என்ன ரெண்டு பேரும் இங்கேயே நின்னுட்டீங்க?” என்று வினவ, “நான் வீட்டுக்குப் போயிட்டு வந்துடுறேன் மொழி.” என்ற இன்பசேகரன் விருட்டென்று அங்கிருந்து விலகிச் சென்று விட்டான்.

 

செல்பவனையே சோகம் சுமந்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த யாழ்மொழி, “நான் இன்பாவை ரொம்ப  ஹர்ட் பண்ணியிருக்கேன்ல மொழி…” என்றாள்.

 

ஏற்கனவே, பலவித குழப்பங்களுடன் உழல்பவளிடம் என்ன சொல்வதென்று தெரியாமல், “பழசை எதுக்குப் பேசிக்கிட்டு இருக்க யாழ்? விடு, இன்பா புரிஞ்சுப்பான். உன்னை அவன் புரிஞ்சுக்காம இருப்பானா என்ன? ஆனா, அதுக்கு டைம் எடுக்கலாம். அவனுக்காக நீயும் கொஞ்சம் வெயிட் பண்ணு யாழ்.” என்று சமாதானமாகவே பேசிய மென்மொழி, சகோதரியை உள்ளே அழைத்துச் சென்றாள்.

 

*****

 

உள்ளே சென்றிருந்த சுடரொளியோ, அங்கிருந்த மதுசூதனனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

 

“ஹாய் மது… மதுன்னு கூப்பிடலாம்ல?” என்று அவள் கேட்க, ஒரு சிரிப்புடன், “வேண்டாம்னா கூப்பிடாம இருக்கப் போறீங்களா சுடர்?” என்று அவன் வினவ, “ஹிஹி, அதுக்குள்ள என்னை இவ்ளோ சரியா புரிஞ்சுக்கிட்டீங்களே!” என்று இளித்து வைத்தாள்.

 

“ஆமா, நீங்க என்ன வேலை பார்க்குறீங்க மது?” என்று அவள் நேர்காணலைத் துவங்கி விட்டாள்.

 

“இந்தக் கல் கிடைக்குறதுக்கு முன்னாடி ப்ரொஃபெசரா இருந்தேன். இது வந்ததுக்கு அப்புறம் ஊர் ஊரா சுத்துறதுதான் என் முழுநேர வேலையே!” என்று உதட்டைப் பிதுக்கினான் மதுசூதனன்.

 

“அட வாத்தியாரா நீங்க?” என்று வியந்தவள், “உங்க நேட்டிவ் இங்கதானா?” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே உள்ளே வந்த மென்மொழி, “சுடர், வெளிய உங்க அம்மாவை மாதிரி யாரோ ஒருத்தரைப் பார்த்தேன்.” என்று கூற, அவள் கூறியதை முழுதாக உள்வாங்காத சுடரொளியோ உடனே எழுந்து நின்று, “அம்மாவா? அவங்க எதுக்கு இந்த நேரத்துல இங்க வராங்க?” என்று சலித்துக் கொண்டே வெளியே ஓடினாள்.

 

அவள் சென்றவுடன் சிரித்துக் கொண்டே திரும்பிய மென்மொழி, “அவ கொஞ்சம் இப்படித்தான்… தப்பா எடுத்துக்காதீங்க மது.” என்று கூற, “அட, இதுல என்ன இருக்கு. சொல்லப் போனா இந்த மொமெண்ட்ஸை எல்லாம் நான் ரொம்ப என்ஜாய் பண்ணிட்டுதான் இருக்கேன்.” என்று கூறிச் சிரித்தான் மதுசூதனன்.

 

அப்போது மூக்குக்கு மேல் கோபத்துடன் வந்த சுடரொளி, “எங்கடி என் அம்மா?” என்று மென்மொழியிடம் வினவ, “அம்மான்னா சொன்னேன்? அம்மா மாதிரி யாரோ ஒருத்தர்னுதான சொன்னேன்…” என்று தோளைக் குலுக்கினாள் மென்மொழி.

 

அடுத்து அங்கு ஒரு குட்டிச் சண்டை வெடிக்க, எப்போதும் இல்லாத பார்வையுடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் யாழ்மொழி.

 

*****

 

காவல் நிலையத்திற்கு வந்த யுகேந்திரனிற்கு, யாழ்மொழியின் விபத்தில் முக்கியத் துப்பு ஒன்று கிடைத்திருந்தது.

 

“சார், ஆக்சிடெண்ட் நடந்ததுல இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துல இருக்க ஒரு கடையோட சிசிடிவி ஃபூட்டேஜ்ல நீங்க சொன்ன டார்க் க்ரீன் கலர் மஹிந்திரா தார் கார் சிக்கியிருக்கு. கார் நம்பர் வச்சு அதோட ஓனர் யாருன்னு கண்டுபிடிச்சுட்டோம்.” என்று செல்வா கூற, அவன் நீட்டிய கோப்பை வாங்கிப் பார்த்தான் யுகேந்திரன்.

 

அதில், அந்த மகிழுந்திற்குச் சொந்தக்காரன் வருண் என்றிருந்தது. அத்துடன் புகைப்படமும் இருக்க, அதைப் படம்பிடித்து மென்மொழிக்கு அனுப்பியவன், உடனே அவளிற்கு அழைத்திருந்தான்.

 

ஓடியாடி களைத்துப் போன மென்மொழி அழைப்பை ஏற்க, “மொழி, நான் இப்போ ஒரு ஃபோட்டோ அனுப்பியிருக்கேன். அதுல இருக்குறது உங்களுக்குத் தெரிஞ்ச வருணான்னு பார்த்து சொல்லு.” என்று கூற, மனதோரம் மணியடிக்க, புலனத்தில் வந்திருந்த புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, மீண்டும் அழைப்பில் இணைந்தவள், “இது வருண்தான். ஆனா, இவனோட ஃபோட்டோ உங்க கிட்ட எப்படி? ஏதாவது கேஸா?” என்று உள்ளுணர்வு உணர்த்துவதை நேரடியாகக் கேட்காமல், மறைமுகமாக வினவினாள்.

 

அதற்கு அவனோ ஒரு பெருமூச்சுடன், “யாழ்மொழிக்கு ஆக்சிடெண்ட்டான இடத்துல இவனும் இருந்துருக்கலாம்னு சந்தேகப்படுறோம். அதோட, இவன் பேர்ல க்ரீன் கலர் மஹிந்திரா தார் கார் இருக்கு.” என்றான்.

 

“அப்போ அந்த ஆக்சிடெண்ட்டுக்குக் காரணம் வருணா?” என்று அதிர்ச்சியுடன் மென்மொழி வினவ, “இன்னும் உறுதியா தெரியல மொழி. அதுவரை, இது யாருக்கும் தெரிய வேண்டாம்.” என்று கேட்டுக் கொண்டவன், “இப்போ வருணைத் தேடிப் போறோம். சோ, நான் வர லேட்டாகலாம். பார்த்துப் பத்திரமா இருங்க.” என்றவன் அழைப்பைத் துண்டித்தான்.

 

மென்மொழியோ, அவளருகே சோகமே உருவாக அமர்ந்திருந்த உடன் பிறந்தவளை வருத்தம் கலந்த கோபத்துடன் பார்த்தாள்.

 

*****

 

வருணைத் தேடிச் சென்ற பயணம், யுகேந்திரன் கூறியது போல அதிக நேரமெல்லாம் எடுக்கவில்லை.

 

வருண் அவனின் இல்லத்தில்தான் இருந்தான். ஆனால், சுயநினைவில் இருந்தானா என்பது சந்தேகமே!

 

யுகேந்திரன் அவனைக் கண்டுபிடித்த போது, அரைப்போதையில் தள்ளாடியபடி இருந்தவன்,  “நானா எதுவும் பண்ணல.” என்று நாக்குழற புலம்பியபடி இருந்தான்.

 

வருணைக் கூர்ப்பார்வை பார்த்த யுகேந்திரனால், அவன் மனதிலிருப்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆள் தெளிவாக இருந்தால் அல்லவா மனமும் தெளிவாக இருக்கும்!

 

“செல்வா, இவனைக் கஸ்டடில எடுத்துக்கோங்க. எப்படியும் தெளிய மார்னிங் ஆகிடும்னு நினைக்கிறேன். எனக்கு நாளைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. சோ, இதை நீங்க ஹேண்டில் பண்ணுங்க. ஆனா, இது கான்ஃபிடென்ஷியலா இருக்கட்டும்.” என்ற யுகேந்திரன் அங்கிருந்து கிளம்பி விட்டான்.

 

*****

 

நேரே மென்மொழியின் வீட்டிற்குத்தான் வந்திருந்தான் யுகேந்திரன். ஏற்கனவே, அலைபேசியில் தெரிவித்திருந்ததால், வாசலில் அவனிற்காகக் காத்திருந்தாள் மென்மொழி.

 

“நீ ஏன் இங்கேயே நிக்கிற?” என்று வந்ததும் அவன் வினவ, “உள்ள எல்லாரும் தூங்கிட்டாங்க. ஆனா, நீங்க சொன்ன விஷயத்தால, என்னாலதான் தூங்க முடியல.” என்றவள், “அந்த ராஸ்கலை… அன்னைக்கே ஏதாவது பண்ணியிருக்கணும்.” என்று பல்லைக் கடித்தாள்.

 

“எப்போ, உன்னை டேட்டிங் கூப்பிட்டப்போவா?” என்று யுகேந்திரனும் சற்று கோபத்துடனே வினவினான்.

 

அவனை ஆச்சரியமாகப் பார்க்க ஆரம்பித்தவள், பின் இது வழக்கமே என்ற மனநிலையில், “உங்ககிட்ட இருந்து எதையாவது மறைக்க முடியுமா?” என்று சலித்துக் கொண்டே அவன் செல்வதற்காக வழிவிட்டு நின்றாள்.

 

உதட்டோரச் சிரிப்பை மறைத்தவனோ, அவளை நெருங்கி, “போலீஸ் கிட்ட மறைக்க முயற்சி செஞ்சா, நீ ஏதோ தப்பு செஞ்சுருக்கன்னுதான அர்த்தம்? அப்படி என்னவெல்லாம் தப்பு பண்ணியிருக்கன்னு ஆராய்ச்சி பண்ணிப் பார்க்கலாமா?” என்று குறும்புடன் வினவியவன் அவளின் பதிலிற்காகக் காத்திருக்காமல் உள்ளே சென்று விட்டான்.

 

அவனின் கேள்வி புரிந்தும் புரியாமலும், புரிந்தது சரிதானா என்ற குழப்பத்துடனும் அங்கேயே தேங்கி நின்றவள் மென்மொழியே.

 

அவளை நோக்கி மீண்டும் வந்தவன், “எவ்ளோ நேரம் இப்படி ஷாக் ரியாக்ஷன்ல இருப்பியாம்? நீ இப்படி நிக்கிறதால, எத்தனை பேருக்கு சிரமம் தெரியுமா?” என்றவன், அங்கு நீள்சாய்விருக்கையில் படுத்திருந்த உருவம் போர்வை இடுக்கில் இவர்களைக் கண்காணிப்பதைச் சுட்டிக் காட்டினான்.

 

“ப்ச், இவ வேற!” என்று சலித்துக் கொண்ட மென்மொழியோ, யுகேந்திரனைக் கடக்கும் சமயம், நல்ல பிள்ளையாகக் குனிந்த தலை நிமிராமல் நடந்து செல்ல, அதையும் சிரிப்புடன் பார்த்தான் அவன்.

 

உள்ளே வந்த யுகேந்திரன் கண்டது, கூடத்திலேயே ஆளுக்கொரு இடத்தில் அடைக்கலமாகி இருந்தவர்களைத்தான்.

 

ஒரு பெருமூச்சுடன், அவனும் ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டான், உறங்குவதற்கு அல்ல! வேலை செய்வதற்கு…

 

அன்றைய இரவு, அந்த அறுவருக்கும் நிம்மதியான இரவாகக் கழிந்தது.

 

அவர்களின் அடுத்தடுத்த இரவுகள் இத்தனை நிம்மதியாக இருக்குமா என்பது சந்தேகமே!

 

*****

 

மறுநாள் காலையிலேயே, அனைவரும் பரபரப்பாக இருந்தனர். ஒருவர் மற்றவரிடம் பேசக் கூட இல்லை. இதில், சுடரொளியும் அடக்கம்!

 

யுகேந்திரனோ, காலையிலிருந்தே அழைப்பில் இருந்தான்.

 

முதல் அழைப்பு செல்வாவிடம் இருந்து வந்திருந்து.

 

“சார், வருணுக்கு போதை தெளிஞ்சுடுச்சு. ஆனா, என்ன கேட்டாலும், ‘நான் எதுவும் பண்ணல’ன்னே சொல்லிட்டு இருக்கான் சார்.” என்று செல்வா கூற, “ஹ்ம்ம், ஸ்டேட்மெண்ட் வாங்கிட்டு, அவனை ரிலீஸ் பண்ணிடுங்க. ஆனா, அவன் நம்ம கண்காணிப்புலேயே இருக்கணும்.” என்று உத்தரவிட்டான் யுகேந்திரன்.

 

அப்போது அவனிற்கானக் குளம்பியுடன் அங்கு வந்த மென்மொழியோ, “நேத்து நைட் நீங்க தூங்கவே இல்லையா?” என்று வினவ, “வேலை இருந்துச்சு.” என்று நெட்டி முறித்தான் அவன்.

 

அப்போது அங்குக் கோப்பையுடன் வந்த சுடரொளி, “உன் அக்கறை எல்லாம் போதும், போய் என் காஃபில சக்கரை போட்டுட்டு வா… நான் என் பார்ட்னர் கூட பிளான் பத்தி டிஸ்கஸ் பண்ணனும்.” என்று வேண்டுமென்றே தோழியை வெறுப்பேற்ற, “மவளே, சிக்காமயா போயிடுவ…” என்று கறுவிக் கொண்டே அங்கிருந்து சென்றாள் மென்மொழி.

 

நடப்பதைச் சிரிப்புடன் பார்த்திருந்த யுகேந்திரனிடம், “அப்புறம் பார்ட்னர், நம்ம பிளான் என்ன? அதிரடியா உள்ள புகுந்து நமக்குத் தேவையானதை லவட்டிகிட்டு வரணுமா?” என்று சுடரொளி வினவ, “அது ஹைலி செக்யூர்ட் இடம். துப்பாக்கி வச்ச செக்யூரிட்டி நிறைய பேர் இருப்பாங்க.” என்றான் அவன்.

 

“அப்போ ஓகே, யாருக்கும் தெரியாம சைலண்ட்டா போய் வேலையை முடிக்கணும், அதான? சிறப்பா செஞ்சுடுவோம்.” என்றவளிடம், “சுடரு, ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது.” என்றான் அங்கு வந்த இன்பசேகரன்.

 

“அட, இப்போதான் அவெஞ்சர்ஸ் பிஜிஎம் போட்டு ஃபீல் பண்ண ஆரம்பிச்சுருக்கேன். அது பொறுக்காதே!” என்று சலித்துக் கொண்டாள் சுடரொளி.

 

அங்கு வந்த மென்மொழியோ, “கொஞ்சம் அடங்குடி.” என்றவள், யுகேந்திரனிடம், “நம்ம பிளான் என்ன?” என்றாள்.

 

“யாழ்மொழியும் இன்பாவும் பூம்புகார் மியூசியம் போவாங்க. நீயும் மதுவும் சரஸ்வதி மஹால் லைப்ரரி போங்க. நானும் சுடரும் ஏஎஸ்ஐ ஆர்க்கைவ்ஸுக்கு போறோம். இதுதான் பிளான்.” என்று யுகேந்திரன் கூற, “அவ்ளோதானா? அங்கப் போய் என்ன செய்யணும்?” என்று வினவினாள் யாழ்மொழி.

 

“ஹ்ம்ம், டூருக்கு போறோம்ல… சுத்திப் பார்த்துட்டு வருவோம். கேட்குறா பாரு கேள்வி… போய் உருப்படியா ஏதாவது தகவல் சேகரிச்சுட்டு வரணும்.” என்ற சுடரொளி, யுகேந்திரனிடம் திரும்பி, “அதான பார்ட்னர்?” என்று வினவ, அவனும் ஆமோதிப்பாகத் தலையசைத்தான்.

 

அவளின் அலப்பறையில் கடுப்பான மொழி சகோதரிகள் இருவரும் கூட்டுச் சேர்ந்து அவளை முறைத்தனர். அதற்கெல்லாம் அஞ்சுபவளா சுடரொளி?

 

பெண்கள் மூவருக்குள்ளும் பார்வையிலேயே பனிப்போர் ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்க, அப்போதுதான் மதுசூதனன் முக்கியமான கேள்வியைக் கேட்டான்.

 

“ஆமா, ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு பக்கம் இருக்கு. எப்படிப் போறது? அதுவும் நானும் மென்மொழியும் தஞ்சாவூர் போகணுமே…” என்று கூற, “அதுக்குத்தான் நம்மகிட்ட ஃப்ரீ டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் இருக்கே.” என்ற சுடரொளி இன்பசேகரனைக் சுட்டிக் காட்டி நமுட்டுச் சிரிப்பு சிரிக்க, இப்போது அவளை முறைக்கும் குழுவில் அவனும் இணைந்து கொண்டான்.

 

“இன்பா, மொழியையும் மதுவையும் தஞ்சாவூர்ல டிராப் பண்ணிட்டு, நீயும் யாழ்மொழியும் பூம்புகார் போயிடுங்க. உன்னால முடியும்தான?” என்று யுகேந்திரன் வினவ, “டிரை பண்ணிப் பார்க்கிறேன். எக்குத்தப்பா எங்கயாவது இறங்கிட்டா என்னைக் குத்தம் சொல்லக் கூடாது.” என்று முன்னெச்சரிக்கையாகக் கூறி விட்டான்.

 

ஒருவழியாக, அனைவரும் அவரவரின் கூட்டாளியுடன் அவர்களிற்கான இடம் நோக்கி பயணப்பட ஆயத்தமாகினர்.

 

பயணம் வெற்றிகரமாக முடியுமா என்பதைப் பொறுத்திருந்தே காண வேண்டும்…

 

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்