Loading

நினைவுகள் -27

அன்று…

விஸ்வரூபனும், ராதிகாவும் தங்களை மறந்து காதல் அலையில் கால் நனைக்க,

 இங்கு அனன்யாவோ, கண்ணீர் மழையில் நனைந்தாள்.

காரில் செல்லும் போதே எவ்வளவோ கட்டுபடுத்தியும் கண்ணீர் மட்டும் நிற்காமல் பொழிந்தது.

 இது ஒரு விதமான பொஸஸுவ்னஸாக இருக்கலாம். தோழி மேல் வைத்த அதீத பாசம்‌‌. அவளை விட்டு விலகணும் என்று நினைக்கும் போது இதயத்தில் ஒரு வலி உண்டானது.

பின்னே கிட்டத்தட்ட ஐந்தரை வருடமா குடும்பத்தை விட்டு பிரிந்து, அன்னிய மண்ணில் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாக இருந்தது, அவர்களை இந்த அளவிற்கு நெருங்கிய உறவாக மாற்றியிருந்தது.

இதில் தங்களது நட்புக்கு இடையே நுழைந்த தன்னுடைய பிரியமான மாமாவாக இருந்தாலும், அவளுக்கு வேதனையாகத் தான் இருந்தது.

தங்களது வீடு இருக்கும் பகுதியில் கார் நுழையவும், வேகமாக ஹேண்ட் பேகிலிருந்து, டிஷ்யூ பேப்பரை எடுத்து முகத்தைத் துடைத்தாள்.

பிறகு லைட்டாக மேக்கப் செய்து கொண்டாள்.

 வீட்டிற்குச் செல்லும் போது, தன்னை உற்சாகமாக காட்டிக் கொள்வதற்காக இவ்வளவு முஸ்தீபுகளை செய்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள்.

ஆனால் அவளது பாட்டியின் அன்புக்கு முன்பு அவளது முயற்சிகள் தோற்றுப் போயின…

 அவளைக் கூர்ந்து பார்த்த ருக்குமணி,” என்னாச்சு அனு… எக்ஸாம் ஒழுங்கா பண்ணலையா? ” என்று வினவ.

” நல்லா பண்ணிருக்கேன் பாட்டி.”

அப்போதுதான் ஹாஸ்பிடலில் இருந்து வந்திருந்தார் கௌரி. இனி அவருக்கு ஈவினிங் தான் அப்பாயின்மென்ட்.

 அவரும் ஆராய்ச்சியாக அனன்யாவை பார்த்தபடியே, ” சரி வா அனு. சாப்பிடலாம்… ” என்று அழைத்தார்.

 ருக்குமணி நேரத்திற்கு உணவு அருந்திவிடுவார். இல்லையென்றால் மகனும், பேரனும் உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள்.

 இன்றும் மதிய உணவை முடித்தவர், ஓய்வெடுக்க செல்லாமல், எக்ஸாம் எழுத சென்ற பேத்திக்காக காத்திருந்தார்.

 அவள் வந்ததும், அவளது வாடிய முகத்தைப் பார்த்தவர், அவளின் அருகிலேயே இருந்து உணவு உண்ண வைத்து கவனித்துக் கொண்டிருந்தார்.

தன்னை இருவர் ஆராய்ச்சியாக பார்த்துக்கொண்டு இருப்பதை அறியாதவள், தனக்குள்ளே மனதைக் குழப்பிக் கொண்டிருந்தவள், உணவை உண்ணாமல் கைகளால் அளந்துக் கொண்டிருந்தாள்.

” ரஞ்சிதம்! அம்மு ஒழுங்கா சாப்பிட மாட்டேங்குறா… ஏன் இன்னைக்கு அவளுக்கு பிடிச்சது எதுவும் செய்யலையா?” என்று தன் மருமகளை அழைத்து வினவினார்.

 ” அத்தை! அவ சொன்ன மெனு தான் இன்னைக்கு செய்ய சொன்னேன்.” என்றவர் அனுவைப் பார்க்க…

அவளோ ஏதோ யோசனையில் இருந்தாள்.

” ஆமாம் நீ தானே இன்னைக்கு உன் ஃப்ரெண்டை வீட்டுக்குக் கூட்டிட்டு வரேன். அதைச் செய்யுங்க, இதைச் செய்யுங்க என்று அலப்பறை செய்தீயே. ஏன் அவ வரலையா?” என்றார் ருக்குமணி.

” அது… அவளுக்கு திடீர்னு ஒரு வேலை வந்துடுச்சு. நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா வீட்டுக்கு வரேன்னு சொன்னா பாட்டி.” என்று மெல்லிய குரலில் கூறினாள் அனன்யா.

ருக்குமணி ஒரே நொடியில் கண்டுக் கொண்டார். ” ஓ… அந்த மகாராணி வரலையா. அதான் கவலையா இருக்கியா அனுமா. விட்டுத் தள்ளு. நம்ம ஸ்டேட்டஸ்க்கு உன்னோட ஃப்ரண்ட்ஷிப் வெச்சுக்கவே அவளுக்கு தகுதித் கிடையாது. இதுல நீ கூப்பிட, கூப்பிட…

ஒவ்வொரு முறையும் ஏதாவது சாக்குப்போக்கு தான் சொல்லிட்டு இருக்கா. சரியான திமிரு பிடிச்ச பொண்ணா இருப்பா போல. இதுக்கு போய் சாப்பிடாமல் உடம்பைக் கெடுத்துட்டு இருக்க.

ஒரு வேளை அந்தப் பொண்ணை நம்ம குடும்பமே கால்ல விழுந்து, ஆரத்தி எடுத்து வீட்டுக்கு கூப்பிட்டா தான் வருவாளா. சரி உன்னோட ஃப்ரெண்டாச்சே நினைச்சா… எவ்வளவு கொழுப்பு… இனி அவளா இந்த வீட்டுக்கு வந்தாலும், என் முகத்துல அவ முழிக்கக் கூடாது.” என்றுக் கூற…

இன்று…

ஒரு காரில் பொண்ணு, மாப்பிளையுடன் பொண்ணு வீட்டு ஆட்களை வர சொல்லி விட்டு, மற்றொரு காரில் அவர்கள் மூவரும் சென்றனர்.

 ரஞ்சிதமும், கௌரியும் பொண்ணு, மாப்பிள்ளையை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து, சாமியறையில் விளக்கேற்ற சொல்லி விட்டு, பால் பழம் கொடுத்தனர்.

  கிருஷ்ணனும், சண்முகமும் பேசிக் கொண்டிருக்க… அவர்களுக்கு விக்ரம், ஸ்வேதாவுடன் மெல்லிய குரலில் ராதிகா பேசிக் கொண்டிருந்தாள்.

விஸ்வரூபன் மாடிக்கு சென்றிருந்தான்.

“வாங்க சம்பந்தி வீட்டைச் சுற்றி பார்க்கலாம்.” என்று அழைத்த ரஞ்சிதம் சுந்தரிக்கு வீட்டை சுற்றிக் காண்பித்தாள். பூஜையறையில் மாலைப் போட்டிருந்த அனன்யாவின் போட்டாவைப் பார்த்த சுந்தரி, ” இது…” என்று தடுமாறியப்படியே வினவ.

” இவ தான் என் பையனோட முதல் மனைவி. பிரசவத்துல இறந்துட்டா…” என்று நா தழுதழுக்கக் கூறினார் ரஞ்சிதம்.

” அப்போ அனு மா… ” என்ற சுந்தரி மீதியைக் கூறாமல் கண் கலங்கிக் தவிர்த்தார்.

அவரது தடுமாற்றத்தை கவனியாமல் ஹாலுக்கு அழைத்து வந்தார்.

சுந்தரியின் கண்களோ, குழந்தையை ஆர்வமாக பார்வையிட்டது.

குழந்தை அவந்திகாவோ, தட்டுத்தடுமாறி ராதிகாவிடம் வர…

 ஆசையாக தூக்கினாள் ராதிகா.

அப்போது தான் பட்டு வேஷ்டியை மாற்றி விட்டு கேஷுவல் ட்ரெஸ்ஸில் கீழே வந்த விஸ்வரூபன், வேகமாக குழந்தையை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டான்.

அதிர்ந்து அவனைப் பார்த்தாள் ராதிகா.

” யாரும் என் பொண்ணுக்கு ஆயா வேலைப் பார்க்க வேண்டாம். அதற்காக ஏற்கனவே இரண்டு வேலையாட்கள் இருக்கிறார்கள்.” என்று கடுமையான குரலில் கூறியவன்,

சுந்தரியிடம் திரும்பி,” அனு… பெத்த அம்மாவாட்டம் தானே உங்களையும் நினைச்சா. அவக் குழந்தையை போய் தொந்தரவா நினைக்கிறீங்களே.” என்றுக் கூறியவன், குழந்தையைஅழைத்துக் கொண்டு அவனது அறைக்குச் சென்று விட்டான்.

அவன் கூறியதை கேட்டு கௌரியும், ரஞ்சிதமமும் அதிர்ந்து நிற்க…

சுந்தரியோ, தேவையில்லாமல் அன்று வார்த்தை விட்டதை எண்ணி குற்ற உணர்ச்சியில் தவித்தாள்.

அனு இந்த உலகத்திலே இல்லை என்ற செய்தியே அவளது செவிக்கு இப்போது தான் எட்டியது.

 அவளுக்கு என்ன நடந்ததோ அது எதுவும் சுந்தரிக்கு தெரியாது. ஒரு வருடமா அவளிடம் இருந்து எந்த தகவலும் வராமல், சுந்தரி தவித்து தான் போனாள். ராதிகாவிடம் கேட்க, அவளோ எனக்கு அவளுக்கும் பிரச்சனை மா. எனக்கு ஃபோன் போட மாட்டா. உங்க கிட்ட பேசுன இந்த ஒரு வருஷம் கூட என் கிட்ட பேசலை என்று கூறியிருந்தாள்.

இப்போது தெரிய வரவும், அதிர்ச்சியில் இருந்த சுந்தரி, ” சம்பந்தி…” என ஏதோ கூற வர…

கைநீட்டி தடுத்த ரஞ்சிதம், “எதுவும் நீங்க சொல்ல வேண்டாம்.”என்று விட்டு, அவளது அறைக்கு சென்று விட்டார்.

என்ன தான் இருந்தாலும், தன் மகனை பேசியதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

விக்கித்து போய் நின்றனர். ராதிகாவின் குடும்பத்தினர்.

கிருஷ்ணன் தான் சமாதானம் செய்தார். நீங்க எதுவும் சங்கடப்படாதீங்க. அவளோட கோபமெல்லாம் கொஞ்சம் நேரம் தான். நீங்க வாங்க சாப்பிட.” என்று அழைத்தவர்,கௌரியிடம் அவர்களுக்கு பரிமாறு.” எனக் கூற…

அவரும் எல்லோரையும் உணவருந்த அழைத்தார்.

சுந்தரி, ” அனு மா… எனக்கு எதுவும் தெரியாது. என் அனுவோட குழந்தையை என்னைக்குமே தொந்தரவா நினைக்கவே மாட்டேன். ராதிகாவுக்கு எத்தனை குழந்தை பிறந்தாலும், என் மொத பேத்தி அம்முக்குட்டி தான்.” என்று கௌரியிடம் கூறியவர், பேருக்கு உணவருந்தி விட்டு கிளம்பி விட்டார்.

ரஞ்சிதமும் இருந்து நாளைக்கு செல்லலாம் என்று சொல்லாமல் தலையசைத்து அனுப்பி வைத்தார்.

அவர்கள் ஊருக்கு கிளம்புவதாக கிருஷ்ணன் கூறியும், கீழே இறங்கி வராமல் இருந்தான் விஸ்வரூபன்.

எல்லோரும் அவன் கோபத்தில் இருப்பதாக நினைத்திருக்க… அவனோ, தன்னோடு வாழ வந்த பாவத்திற்கு ராதிகா படும் துன்பத்தை எண்ணித் தனக்குள்ளே தன் தவித்துக் கொண்டிருந்தான்.

அவளது முகத்தை பார்க்கும் திராணியற்று மாடியிலே நடைபயின்றுக் கொண்டிருக்க…

அங்கு பெற்றோர், கூடப் பிறக்காத அண்ணன் குடும்பம் எல்லோரும் கிளம்ப, அவர்களை வழியனுப்ப வாசல் வரை சென்ற ராதிகாவிற்கு, ஆறுதல் கூறக் கூட யாருமில்லாமல் தனிமையில் நின்றுக் கொண்டிருந்தாள்.

தன் குடும்பத்தை வழியனுப்பி விட்டு உள்ளே வந்த ராதிகா தனியாக நின்று கொண்டிருந்தாள் . அவளது பார்வையோ, வாசல் கதவையே பார்த்துக் கொண்டிருந்தது.

திடீரென்று அவளது தோளில் ஒரு கை விழ…

 திரும்பிப் பார்த்தாள் ராதிகா.

” அம்மா… ” என்று அழைக்க.

” ராது‌… நான் என்னைக்கும், உனக்கு அம்மா தான். உனக்கு என்ன பிரச்சினைனாலும் சொல்லு. நான் பார்த்துக்கிறேன். இப்ப உள்ள வா.” என்ற கௌரி, அவரது அறைக்கு அழைத்துச் சென்றார்.

 ” உன் லக்கேஜ்லாம் மாடில இருக்கு. இது என்னோட சேரி தான். இதைக் கட்டிக்கோ. ” என்று கவர் கூட பிரிக்காத காட்டன் சாரியை எடுத்துக் கொடுத்தார்.

” மா… ” என்று தயங்கிய ராதிகாவை,

” எதுவும் சொல்லாத… நீ போய் முதல்ல ஃப்ரெஷ்ஷப் ஆகிட்டு, ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா.” என்று ரெஸ்ட் ரூம் பக்கம் அனுப்பினார்.

ஐந்து நிமிடத்தில் வெளியே வந்த ராதிகாவை அந்த அறையிலே கொஞ்ச நேரம் படுத்துக் கொள்ள சொன்னவர், ரஞ்சிதத்தை தேடிக் கொண்டு வெளியே சென்றார்.

ரஞ்சிதமோ கிச்சனில் எதையோ உருட்டிக் கொண்டிருந்தார்‌.

அங்கே சென்றவர், வேலை செய்துக் கொண்டிருந்த வேலையாட்களை ஒரு பார்வை பார்க்க…

அவர்களோ ஒரு பார்வையிலே வெளியேறினர்.

” ஏன் அண்ணி? இப்படி பண்ணீங்க? ரூபன் தான் புரியாமல் கோபத்தில் பேசுறானா, நீங்களும் இப்படி இருக்கலாமா… கடைசியா அம்மா, உங்க மருமகளை விட்டுக் கொடுத்துடுவாங்களோன்னு நினைச்சு பயந்துட்டு, இப்போ அவங்க

இல்லாத குறைக்கு நீங்களே இப்படி பண்ணிட்டீங்க. அம்மா மாதிரி நீங்களும் ஒரு சராசரி மாமியார்னு நிரூபிச்சிட்டீங்க.

 இந்த வீட்டுக்கு மருமகளாக வந்த முதல் நாளே அவள வருத்தப்பட வச்சிட்டீங்க. வீட்ல அவ மட்டும் தனியே நிற்குறதப் பார்த்தா எப்படி இருந்தது‌ தெரியுமா? நம்ம அனு அவ வாழ்க்கையை தொலைச்சிட்டு, ஹாஸ்பிடல்ல நின்னு கதறுனாளே அது தான் ஞாபகத்துக்கு வந்தது.” என்ற கௌரி கண் கலங்கக் கூற.

” எனக்கு மட்டும் கஷ்டமா இல்லையா கௌரி. என் பையனை குறையா நினைக்கிறாங்களே. அவன் பட்ட கஷ்டம் நமக்கு தானே தெரியும்.” என்ற ரஞ்சித்தின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.

” சரி அழாதீங்க அண்ணி. நடந்து முடிஞ்சதைப் பத்தி எதுவும் பேச வேண்டாம். ராதிகா அம்மா சொன்னதுக்கு அவ என்ன பண்ணுவா? அவங்களுக்கும் நம்ம அனுவோட குழந்தை என்று தெரியாதுன்னு வருத்தப்பட்டாங்க. இனிமேல் ராதிகா கிட்ட கோபத்தை காண்பீக்காதீங்க.” என்றாள் கௌரி.

” நீ சொல்றது சரிதான் கௌரி. வாழ வந்த மகாலட்சுமியை கஷ்டப்படுத்திட்டேன். சரி வா. இப்பவே போய் நான் மன்னிப்பு கேட்குறேன்.” என்றாள் ரஞ்சிதம்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் அண்ணி. அவ தூங்கறா. ரூபனுக்கும், ராதிகாவிற்கும் இடையில் என்ன பிரச்சினை என்று தெரியலை. நாம தலையிடாமல் இருந்தாலே சரியாயிடும்.” என்றாள் கௌரி.

“அதுவும் சரி தான். என்ற ரஞ்சிதம் தனது தவறை உணர்ந்து, மருமகளிடம் அனுசரணையாக நடத்துக் கொண்டாள்‌.

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்