Loading

 

 

காலம் தாண்டியும் காதலைத் தேடி 01

 

 

அன்று அமாவாசை, சுற்றிலும் கும்மிருட்டு ஆனால் அங்கே அந்தக் காட்டின் மத்தியில் நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்து, தன் முன்னே அமர்ந்திருந்தவனின் உருவத்தை உலகுக்கு வெளிக்காட்டிக் கொண்டிருந்தது. 

 

கோர பெண் உருவ சிலை ஒன்றின் முன்னே அமர்ந்து யாகம் நிகழ்த்திக்கொண்டிருந்தான் அவன். 

 

அந்த இடத்துக்கும் அவனுக்கும் துளியும் பொருத்தம் இல்லை என்பது போலவே அவன் தோற்றம் அமைந்திருந்தது.

 

இளமையான, யாரையும் பார்த்ததும் மயங்க வைக்கும் அழகிய கம்பீரமான உடல்வாகு. முருக்கேறிய புயங்களில் கறுப்பு மணிகளால் செய்யப்பட்ட ஆபரணம் அணிந்திருக்க, அதுவோ அவன் ஆளுமையில் வெடித்து சிதறக் காத்திருந்தது. 

 

அவன் வயதோ பின் இருபதுகளில் தான் இருக்கும் என்று கணிக்க கூடிய அளவில் தான் இருந்தான். ஆனால் அவனது உண்மையான வயதை அவன் மட்டுமே அறிவான். 

 

அத்தனை திடகாத்திரமான ஆணவனை சூழ பல மண்டையோடுகள். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் எண்ணிக்கை நூறினைத் தொட ஒன்று குறைவு அவ்வளவே.

 

அவன் முன்னே எரியும் யாக குண்டலத்தின் தீ, அவன் முகத்திலும் பிரதிபலித்தது. 

 

அவனது நா எதையோ உச்சரித்து கொண்டிருக்க, அவனது கரங்கள் அதற்கேட்ப ஒரு சந்தத்தில் அசையத் தொடங்கியது.

 

திடீரென இமைகளைத் திறந்தவன், தன் முன்னே மயக்க நிலையில் இருக்கும் அவனது நூறாவது பலியா அந்தப் பெண்ணின் பின் கழுத்திலிருக்கும் சிறிய நாக மச்சத்தில் பார்வையை நிலைக்க விட்டான்.

 

இத்தனைக்கும் அவன் நா, மந்திரங்களை உச்சரிப்பதை நிறுத்தவில்லை. 

 

தன் கரத்தை அந்த மச்சத்தை நோக்கிச் சற்று மேலே நீட்டியவன், அருகிலிருந்த குருவாளால் தன் கரத்தைக் கிழித்து உத்திரத்தை அந்த மச்சத்தில் ஒரு துளி விட, 

 

ஆக்ரோஷமான சத்தத்துடன் அந்த இடமே அதிர்ந்து, வீசும் காற்றில் மரங்களே விழுந்து விடும் என்னும் அளவுக்கு வேகமாகக் காற்று வீசத்தொடங்கியது.

 

அந்த இடமே பயங்கரமாகக் காட்சியளிக்க, அதற்கு நேர் மாறாக அவன் இதழ்களில் புன்னகை விரிந்தது. 

 

புன்னகை இருக்காமல் போய்விடுமா என்ன??? அவன் ஒவ்வொரு வருடமும் எதிர்பார்க்கும் நொடியல்லவா அது!

 

அடுத்த சில நாளிகைக்குள், இடிமின்னலுடன் மழை நீர் மெல்ல வானிலிருந்து கீழே இறங்க, ஆகாயத்தை நிமிர்ந்து அவன் பார்த்த ஒற்றைப் பார்வையில், அவற்றுக்கு என்ன புரிந்ததோ, அவன் அமர்ந்திருந்த இடத்தைத் தவிர மற்றவைகளில் மழை அதன் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கியது.

 

இப்படி பஞ்ச பூதங்களும் அவன் கட்டுப்பாட்டில் நிற்க, சரியாக அந்த நேரம் தன் முன்னே மயக்கத்திலிருக்கும் உருவத்தின் கழுத்தில் உள்ள மச்சத்தில் வாளால் ஓங்கி வெட்ட, தலை தனியாக அந்த நெருப்புக் குண்டலத்தில் விழுந்தது.

 

இரத்தம் மொத்தமும் அவன் முன்னே இருக்கும் சிலையில் பட்டுத் தெரிக்க, அடுத்த நொடி அவன் எதிர்பார்த்தது போல அவன் முன்னே எரியும் நெருப்பிலிருந்து ஒரு உயிர் வெளியாகி  அவன் முன்னே அருபமாய் காட்சியளிக்கத் தொடங்கியது.

 

அவள் மோகினி, தீயசக்தியின் உறைவிடம் அவள். ஆனால் அவனுக்கோ அவள் உயிர்.

 

“வளவா” என்று அவனை அழைத்தது அந்த அருவம்.

 

அந்த அரூபத்தைக் கண்டவனும் ஆசையுடன் “மோகினி, வந்துவிட்டயா என் உயிரே? உன்னைக் காணும் இந்த நொடிகளுக்காகவே யான் காத்திருக்கிறேன் கண்மணி” என்றபடி எழுந்து நின்றான் அவன்.

 

“யான் கூட, இந்த நொடிகளுக்காகத்தான் காத்திருக்கின்றேன் வளவா” என்றவள் அவனை அணைக்க வர, அந்தோ பரிதாபம் அவளால் அவனைத் தொடமுடியவில்லை. 

 

அதில் கோபம் கொண்டவளோ, “வளவா, இன்னும் எத்தனை ஆண்டுகள்  யான் இப்படியே கழிக்க வேண்டும். என்னவன் உமை, யான் தொட முடியாமல் தவிப்பது புரியவில்லையா உமக்கு? எம் தேகம் பற்றி எரிகிறது.  உம் ஸ்பரிசம் கிடைக்காமல் அல்லாடும் என் நிலை புரியவில்லையா??? ” என்று சீற்றதுடன் வினவினாள்.

 

அவனோ, “கவலை வேண்டாம் கண்மணி, இனி நாம் இணைவதை யாராலும் தடுக்க முடியாது, உனை மீட்கும் வரம் இனி நம் கையில். இனிமேல் உனக்கு உயிரும் உடலும் கொடுக்கும் காலம் வெகுவிரைவில் நம்மைக் கிட்டும்” என்றான்.

 

அவள் குழப்பமாய் அவனைப் பார்க்க, அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன் “இன்று நமது நூறாவது சந்திப்பு” என்க, அவளுக்கோ, அவன் சொன்ன விடயம் புரிந்ததில் கண்கள் ஜொலிக்கத் தொடங்கியது.

 

ஆம் அது அவர்களின் நூறாவது சந்திப்பு, அதுக்காகத் தானே காலம் கடந்தும் காத்திருக்கின்றனர். 

 

நூறு இளம் பெண்களின் பலிகள், நூறு சந்திப்புகள், நூறு மண்டையோடுகள். 

 

இவை தான் அவர்களை, அவர்களது காதலை, அவர்களது நோக்கத்தை நிறைவேற்ற காத்திருக்கிறது. 

 

 

 

சில மணி நேரங்களின் பின், அந்த யாக குண்டலத்தின் முன்னே மார்த்தாண்ட வளவனும், அருபமாய் மோகினியும் அமர்ந்து நூறு மண்டையோடுகளையும் வைத்து அவர்களது பூஜையை ஆரம்பிக்க, அவர்களது தீய சக்தியின் கடவுளான அரத்தமோகினி அவர்கள் முன்னே கோர உருவமாய் தோன்றினாள்.

 

அவளைக் கண்டதும் இருவர் முகமும் ஜொலிக்க, “வணங்குகிறோம் தாயே!” என்று இருவரும் எழுந்து நின்றனர்.

 

“மார்த்தாண்டா! நினைத்ததை முடித்துவிட்டாய் போல் தெரிகிறது. யான் என்றும் என்னை நம்பி வந்தவர்களைக் கைவிட்டதில்லை. ஏமாற்றுபவளும் இல்லை” என்று ஒரு கரத்தை நீட்ட, 

 

அங்கேயிருந்த நூறு மண்டையோடுகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து குறுகிய ஒரு பாம்பினை போல் உருமாறி அந்தக் கரத்தினுள் அடக்கமாகியிருந்தது.

 

அடுத்த கரத்தினால் அந்தப் பாம்பின் தலையைத் தடவ அதுவோ நூறு சிறிய மண்டையோட்டால் செய்யப்பட்ட மாலைபோல் சடுதியில் மாற்றம் பெற்றது. 

 

அதனை மார்த்தாண்டனின் கையில் கொடுத்து “செல் மார்த்தாண்டா, எங்கு செல்ல வேண்டுமோ உன் விருப்பம்போல் செல்லலாம். உன் மனைவியான என் மகளின் உயிர் காக்க, விரைந்து அந்தப் பொக்கிஷத்தைக் கொண்டு வா” என்று சொல்ல, கேட்டுக் கொண்டிருந்த இருவர் முகத்திலும் வெளிச்சம்.

 

அவர்களோ அவளை வணங்கி நிற்க, கண்களை மூடித் திறந்தவள், 

 

“மார்த்தாண்டா நினைவிலிருக்கட்டும், உன் உதிரம் கொண்டவன் அங்கிருக்கையில் அவன் கண்களைச் சந்திக்க எண்ண வேண்டாம். அது ஆபத்தில் போய் முடியலாம், அத்தோடு எண்ணிக்கை நூறு நூறாகவே இருக்க வேண்டும். எங்கு சென்றாலும் கவனம் அதில் வேண்டும். இல்லையேல் காலம் உன் கட்டுப்பாட்டில் இல்லை ” என்று கண்டிப்புடன் சொன்னவளோ மீண்டும் சிலையாக உருமாறிக்கொண்டாள்.

 

___________________

 

அங்கே காலபைரவன் கோட்டை என்னும் கிராமத்தில் ஊர்த்தலைவரின் வீட்டில், சர்வ அலங்காரத்தோடு கண்ணாடி முன்னே அமர்ந்திருந்தாள் இனியாள் காசிநாதன். 

 

அவளது பதினெட்டு வயதை நேற்று தான் அடைந்திருந்தாள்.  இதோ இன்று நிச்சயம், நாளை மறுநாள் திருமணம் என்கிற நிலையில் நிற்கிறது.

 

இன்று இனியாள் காசிநாதனாய் இருப்பவள் நாளை மறுநாள், இனியாள் முரட்டுக்காளையாக மாறப்போகிறாள். அதில் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இல்லை.

 

அவளைப் பொறுத்தவரை சிறைக்கைதியான அவள், இந்த வீட்டிலிருந்து அந்த வீட்டுக்கு மாற்றப்பட போகிறாள் அவ்வளவே!

 

அதற்காகவே நேர்ந்து விடப்பட்டு வளர்க்கப்பட்டவள் அவள்.

 

யோசனைகளில் அமர்ந்திருந்தவளை கலைத்தது ஒரு குரல்.

 

“இனியா, இன்னும் புடவைய மாத்தலயா நீ?  எவ்வளவு நேரம், சீக்கிரம் மாத்திட்டு வா உங்கிட்ட பேசணும்” என்றபடி கதவைத் தட்டினாள் விஜயா.

 

விஜயா இனியாவின் அண்ணி, அவளது மூத்த அண்ணன் ரத்னவேலுவின் மனைவி.

 

அந்தச் சத்தத்தில் சுயத்துக்கு வந்தவள் “இதோ இரண்டு நிமிசத்துல வரேன் அண்ணி” என்றவளது குரல் வெளியே இருப்பவளுக்கு கேட்டால் தானே!

 

அத்தனை மெல்லிய குரலில் தான் இருக்கும் இனியாவின் பேச்சு, அப்படியே அவளுக்குப் பழகி விட்டிருந்தது.

 

அடுத்த இரண்டு நிமிடத்தில் சட்டென உடையை மாற்றிக் கொண்டு கதவைத் திறக்க, 

 

விஜயாவோ “என்னடி பண்ணுற இவ்வளவு நேரம், வரேன்னு குரல் கொடுக்குறதுக்கு என்ன?” என்றபடி உள்ளே நுழைந்தாள்.

 

இனியாவோ “சொன்னேனே அண்ணி” என்று தயக்கத்துடன் சொல்ல, அதற்கு விஜயாவோ “அதுசரி நீ பேசுறது பக்கத்துல இருந்தாலே கேக்காது, இதுல கதவு மூடி இருந்தப்ப கேட்டுட்டாலும்” என்று அலுத்துக் கொண்டாள்.

 

அதில் இனியா அவளைப் பார்த்துப் புன்னகைக்க, இனியாவின் கன்னம் பற்றிய விஜயாவோ,

 

“என்னைக்கும் நீ சந்தோசமா இருக்கனும் இனியா” என்று சொல்ல, அந்த வார்த்தைக்கே அவளது கண்ணில் நீர் நிறைந்தது. 

 

தன் பெண்ணை போல் பார்க்கும் இவளை சந்தோசமாக வைத்துக்கொள்ள முடியவில்லையே என்ற அண்ணியானவளின் ஏக்கம். 

 

கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி 

 

“இங்கப்பாரு இனியா, அண்ணி உன் நல்லதுக்கு தான் சொல்லுவேன். இங்க இருக்க வேணா கிளம்பு, எது நடந்தாலும் அப்பறம் பார்த்துக்கலாம். இப்படி பயந்து இங்க இருந்தினா அந்தக் கிழட்டு நாய்க்குக் கழுத்த நீட்ட வேண்டியது தான்” என்று கோபமாய் உரைத்தாள்.

 

இனியாவோ “அண்ணி” என்று இழுக்க, கோபத்தில் இருந்த விஜயாவும் விடாமல் “பின்ன என்ன இனியா நாப்பது வயசு கடந்த அந்த நாய்க்குப் பதினெட்டு வயசு பொண்ணு கேக்குதா? எல்லாம் உன்ன பெத்தவங்கள சொல்லணும், அதுக்கு என் புருசனும் கூட்டு, ஒன்னுக்கு ரெண்டு அண்ணன் இருந்தும் என்ன செய்ய, எல்லாம் மாட்டுமூளையா இருக்கானுங்க” என்றதில் இனியா சிரித்துவிட,

 

“என்ன சிரிப்பு, இதவிட கேவலமா தான் திட்டத் தோணுது, ஆனா நீ சின்னப் பொண்ணுல அதான் கொஞ்சம் டீசென்டா திட்டுறேன்” என்றவளும் சிரித்து விட்டாள்.

 

இனியாவோ அண்ணியின் மேடிட்ட வயிற்றில் கை வைத்து “பாருடா கிருஷ் பையா, உன் அம்மாக்கு ரொம்பத்தான் கோபம் வருது” என்று தன் மருமகனிடம் பேசியவள் விஜயாவிடம் “பெரியண்ணா கூடச் சேர்ந்து உங்களுக்கும் மூக்குக்கு மேல கோபம் வருது பாருங்கண்ணி” என்று புன்னகைக்க, விஜயாவிற்கு பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிந்தது.

 

எத்தனை அழகான பெண் இவள், இந்த வீட்டில் ராஜகுமரியாக வளம் வர வேண்டிய இவளுக்கு, ஏன் இப்படியொரு நிலை என்று விஜயா எண்ணாத நாளே இல்லை. இன்னொருத்தர் செய்த பிழை, இவளை வாழ்க்கை முழுக்க துரத்துகிறது. அந்த முகம் தெரியாத நபர்மீது இன்றும் விஜயாவிக்கு பயங்கர கோபம் தான். 

 

விஜயா திருமணமாகி இந்த வீட்டுக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. இந்த மூன்று ஆண்டு பழக்கத்திலேயே இனியாவின் வாழ்க்கை மீதான கருணை அவளுக்கிருக்கையில், இரத்த உறவுகளுகிடையே இல்லாமல் போனது தான் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

 

“கோபம் தான உன் அண்ணனுக்கு ஏக்கர் கணக்குல வருமே, அதெல்லாம் விடு, நீ என்ன முடிவு பண்ணி இருக்க?”

 

“என்ன அண்ணி?”

 

விஜயாவோ “தெரியாத போல நடிக்காத இனியா, நீயும் பேசமாட்ட. நான் பேசுறேன்னு சொன்னாலும் விட மாட்டேங்குற, இங்க இருந்து போடின்னாலும் கேட்க மாட்டேங்கிற, என்ன தான் செய்றது? உன்ன விட எனக்குத் தான் டென்ஷன் ஆகுது. இனிக்குட்டி உனக்கு இந்த வாழ்க்கை வேணாம்டா” என்றாள். 

 

விஜயாவின் கன்னத்தில் கை வைத்த இனியாவோ, “என் வாழ்க்கை இது தான் அண்ணி, இன்னைக்கு நேத்து தெரிஞ்ச விஷயமா? எதுவுமே தெரியாத பிள்ளையா இந்தப்பவே ஆரம்பிச்சது, இந்தப் பதிமூனு வருசமா அத தான கேட்டு வளர்ந்துட்டு இருக்கேன். நான் அவருக்குத் தான்னு பேசி வெச்சு பதிமூனு வருஷமாகுது. சின்னப்புள்ளையா இருக்கும் போது முடிவு செஞ்சிருக்காங்க, அந்த அஞ்சு வயசுலயே தப்புனு  தெரியல. இப்போவா தெரியப்போகுது” என்றவளிடம் ஒரு விரக்திப் புன்னகை. 

 

“அதுக்குன்னு பேசாமலே விடுறதா இனி, பேசித்தான் பார்ப்போமே” என்று கேட்ட விஜயாவுக்கு தெரியும் அந்த ஜென்மகள் எல்லாம் அவ்வளவு இலகுவில் மாறாது என்பது. 

 

“இத்தனை நாள் மாறாத இவங்க மனசு நீங்க போய்ப் பேசுனா மாறிடுமா அண்ணி? அம்மாக்கு அவங்க தம்பி நல்லா இருக்கனும், அப்பாக்கு அவங்க தலைகுனிஞ்சி நிற்கக் கூடாது, அண்ணன்களுக்கு நான் ஒருத்தி இருந்தாலும் இல்லைனாலும் ஒன்னுதான். எங்க நம்ம பேச்சு எடுபடுமோ அங்க தான் பேசணும் அண்ணி விடுங்க, நீங்க டென்ஷனாகி என் கிருஷ் குட்டிய டென்ஷன் பண்ணி விட்டுடாதீங்க” என்றாள் பெரிய விளக்கமாய்.

 

அவள் பேசியதில் விஜயாவிற்கு ஆச்சரியமேயில்லை அந்த வீட்டில் இனியாவின் பேச்சு வெளியே வருவது விஜயாவிடம் மட்டும் தான்.

 

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்த நேரம், அந்த வீட்டின் இளைய மருமகள் சுபாஷினி உள்ளே வர, தன்னால் அவர்களது உரையாடல் நின்றிருந்தது.

 

“என்ன ரெண்டு பேரும் எதையோ குசுகுசுக்குறீங்க?” என்ற கேள்வியுடன் தான் உள்ளே வந்தாள் சுபாஷினி.

 

“வாங்க சின்னண்ணி” என்றதோடு இனியா நிறுத்திக்கொள்ள,

 

அவளோ “ஏன் நீ சொல்லித்தான் நான் உள்ள வரணுமா என்ன? இருக்கையை யாரு போடுறது? உன் தலைமேல தான் உக்காந்துக்கணுமா? மரியாதை தெரியுதா, என்ன ஜென்மமோ? சித்தப்பா எப்படி தான் உன்ன கட்டிக்க சம்மதிச்சிச்சோ தெரியல, கொஞ்சம் தோல் வெள்ளையா இருந்தா போதுமே! எல்லாரையும் மயக்க வேண்டியது” என்று இஷ்டத்துக்கு பேசியவள் இனியா எடுத்துப்போட்ட இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

 

விஜயாவிற்கு பயங்கர கோபம் தான், ஆனால் வெளியே காட்டிக்கொள்ள முடியாதே.

 

அந்த வீட்டில் மூத்த மருமகள் அவள் என்றாலும், இனியாவின் தாய் வள்ளியம்மையின் மூத்த தம்பியின் மகளான சுபாஷினிக்கு உரிமை அதிகமாகத் தான் இருந்தது. அதிலும் சீர் அதிகமாகச் செய்து வாக்கப்பட்டவள் என்றால் சொல்லவும் வேண்டுமா?? 

 

ஆனால் விஜயா அப்படி இல்லையே. அவளது கணவன் ரத்னவேலு ஆசைப்பட்டதால் நடந்த திருமணம் அவர்களுடையது. சீர் செய்யும் நிலையிலும் அவளது குடும்பம் இருக்கவில்லை.

 

ரத்னவேலின் முனைப்பில் அவருக்குப் பிடித்ததால் மட்டுமே இந்த வீட்டுக்குள் மருமகளாய் வந்தவள் விஜயா. 

 

இப்படி ஆசைப்பட்டு திருமணம் செய்திருந்தாலும் கட்டிலைத் தாண்டி வேறு நெருக்கம் இருந்தில்லை இருவருக்கும். ஏதேனும் தேவை என்றால் மட்டுமே அவளிடம் பேச்சு வைத்துக்கொள்வான். 

 

விஜயாவோ “சும்மா தான் பேசிட்டு இருந்தோம் சுபா, நாளைக்கு எந்த ஜூவல்ஸ் போடலாம்னு” என்று எதையாவது சொல்லவேண்டுமே என்று சொல்லி வைக்க, 

 

அவளோ இடக்காய் சிரித்தவள் “அதுசரி இல்லாத நகைக்குச் செலெக்ஷன் வேறயா? இருக்குறதே அந்த ரெண்டு நகை, இதுக்கு அத்தனை பகுமானம் தேவையா விஜயா?” என்றாள்.

 

அவள் பேச்சு உள்ளே தைத்தாலும் வெளியே புன்னகைத்தவள் “எனக்கில்ல சுபா நம்ம இனியாக்கு தான் எத போடலானு பேசிட்டு இருந்தோம்” என்றாள்.

 

அதன் பின் என்ன வழமை போல் சுபாஷினி அவர்களது வீட்டின் பெருமை பேசியே அடுத்து வந்த நேரத்தைக் கடத்தி இருந்தாள்.

 

கேட்டுகொண்டிருந்த இருவருக்கும் இவள் எப்போதடா முடிப்பாள் என்றே இருந்தது. 

 

அவர்களது எண்ணம் கடவுளுக்குக் கேட்டதோ என்னவோ, சுபாஷினியின் தொலைபேசி அதன் இருப்பை உறுதிப்படுத்த, அதற்கும் ஒரு பந்தா போட்ட பின்னரே, உயிர்ப்பித்து பேசியவள் அங்கிருந்து அகன்றிருந்தாள்.

 

அவள் சென்றதும் தான், அவர்கள் இருவருக்கும் மூச்சு விடவே முடிந்தது. ஒருவரைப் பார்த்து ஒருவர் புன்னகைக்க, இனியாவோ “சின்னண்ணா எப்படித் தான் இவங்கள சமாளிக்கிறாங்களோ?” என்றாள்.

 

விஜயா சிரிப்புடன் “பின்ன கிரி மட்டும் என்ன வேற ஆளா, உங்க உம்மன்னாமூச்சி குடும்ப அங்கத்தவர் தான? ஜாடிக்கேத்த மூடிதான்” என்றாள்.

 

இனியா, “அண்ணி நாமளும் அதே குடும்பம் தானே?” என்று சிரிப்புடன் சந்தேமாக வினவ,

 

“நம்ம ரெண்டு பேரும் விதிவிலக்கு சரியா” என்ற விஜயாவிடம், “அப்போ நம்ம கிருஷ்குட்டி?” என்று இனியா இழுக்க, விஜயாவோ “நான்னா எனக்குள்ள இருக்க அவனும் தாண்டி” என்க, இருவரும் சிரித்தே விட்டனர்.

 

அந்த வீட்டில் அவர்கள் இருவருமே ஒருவருக்கு ஒருவர் ஆதரவு. 

 

 

 

காதலைத் தேடும்..

 

 

ஆஷா சாரா… 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment