
‘புகழேய்’ என்ற வார்த்தைக்கான உயிரை இனி யாரும் அவன் வாழ்க்கையில் கொடுக்கப் போவதில்லை என்பதை உணர்ந்தவன், உண்ணாமலையின் கட்டாயத்தில் நீலவேணியை திருமணம் செய்துகொண்டான்.
“நா உன்ன இந்த கண்ணோட்டத்தில பார்க்கல. ஆராதனாவ மறக்க முடிஞ்சா, நாம சேர்ந்து வாழலாம்” என்று திருமணம் முடிந்த கையுடன், இருபத்தி ஓர் வயது கூட நிரம்பாத பாவையிடம் சொன்னவன், இப்போதும் ஷக்தியை நினைத்துக்கொண்டு தான் இருக்கிறான்.
ஷக்தி சிவாவின் திருமணம் முடிவடைந்த உடன், அவர்களை வீட்டிற்கு அழைத்திருக்க, அவர்கள் வரவில்லை.
நம்மாழ்வார் எதிர்பார்த்த ஒன்று தான்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காதது, புகழின் அடுத்த அடி. சிவாவின் சஸ்பென்ஷன்.
என்ன மேலதிகாரியைத் தெரிந்தும் ப்ரமோத்தால் அவனின் சஸ்பென்ஷனை மீட்டெடுக்க முடியவில்லை!
இதோ அதையெல்லாம் நினைத்தபடி அவன் மேல் விழுந்த அழுக்கை நீக்கமுடியாது, கடந்ததை நினைத்து தோட்டத்தில் அமர்ந்திருக்கிறான், புகழேந்திரன்.
“சேரி சேரி.. எல்லாம் போய் வேலைய பாருங்கத்தா. ஆராதனா போய் ஆத்தாவ பார்த்துட்டு வா. அப்புறம் நின்னு பேசிக்கலாம்” என்று கருணா சொல்லவும் தேனாட்ச்சியின் அறைக்குச் சென்றாள் அவள்.
அழுது சிவந்திருந்த முகத்துடன் இருந்த உண்ணாமலையை மார்புக்கு குறுக்கே கையைக் கட்டியபடி பார்த்த சிவாவோ,
“பார்த்துக்க மாமு. ஷக்தி இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா சரியாகறா. திரும்பவும் இதே மாதிரி பேசினா..” என்று நிறுத்தி உண்ணாமலையிடம்,
“அவ என் பொஞ்சாதி ம்மா.. அத்துவிடுறதுக்கு ஒன்னும் நான் அவள கட்டிகிடல, வெச்சு உசுறா வாழறதுக்கு. உம்மப் பெரிய மகென் பண்ண வேலைய பார்த்த பின்னும் அவள ஏசுதீங்கனா, கோளாறு உம்ம கண்ணுல தான்” என்றான்.
கணவனின் தாண்டவத்தைப் பார்த்திருந்தவரால் ஏதும் பேச முடியவில்லை. தொண்டையை அடைத்தது எதுவோ.
அழுகைக் கட்டுக்குள் வந்திருந்தாலும் அவரால் சட்டென்று இயல்பிற்குத் திரும்ப முடியவில்லை.
ஷக்தி, அவளைப் பிடிக்காது என்று ஆழமாய் நம்பிவிட்டார். அதை மாற்ற அவர் நினைத்தால் மட்டுமே முடியும்.
அவரின் நினைப்பில் உழன்றவரை திடீரென கலைத்தது அந்த குரல்.
“மொதோ மொதோ புகுந்த வூட்டுக்குள்ள வாரவ கருப்பையாடி கட்டிக்கிட்டு வருவ” என்று வெங்கல குரலால் அந்த வீடே அதிர்ந்தது.
“அட, பெட்ல இருந்தாலும் சவுண்ட் அப்படியே தான் இருக்கு பாட்டி உங்களுக்கு” என்றபடி தேனாட்ச்சியின் அருகே ஷக்தி அமர,
“ஏலே சிவா, இவள உடுப்ப மாத்த சொல்ல மொத. வூட்டுக்குக் கூட்டி வாரவன் இத பார்க்கமாட்டியால” என்று ஷக்தியை விடுத்து அவனை அவர் கடிய,
சிவா, “நல்லா இருக்கா தான ஆச்சி” என்று கண்களில் ரசனை மின்ன சொன்ன பேரனை கடிந்துகொள்ளவா முடியும்?
“ஆத்தே.. இப்போம்னு பார்த்தா நா மொடங்கி கெடக்கோனும். ராசா அம்புட்டு கலையா இருக்கைய்யா” என்று சிவாவிடம் சென்றது அவரின் பார்வை.
“அதெல்லாம் இருக்கட்டும்.. மருமகளா வீட்டுக்கு வந்துருக்கேன் உங்க ஸ்பெஷல் உளுந்தங்களி செஞ்சு வெச்சு வரவேற்பிங்கனு பார்த்தா?”
“படுத்திருக்கேனுட்டு குத்தி காட்டுரியோ?”
“பின்ன, நல்லா தான இருக்கீங்க? எழுந்து உட்கார என்னவாம்?” என்றவள் சிவாவிடம்,
“ஏங்க, தூக்கி உட்கார வைங்க. பார்த்துட்டே நிக்க வேண்டியது” என்க, தேனாட்ச்சிக்கு உள்ளூர குளிர்ந்துவிட்டது.
சாய்வாக அவரை அமர வைக்கவும், “ம்ம்.. இந்த கட்டிலுக்கே இப்போதான் மரியாதையா இருக்கு” என்றவள் முகத்தைச் சன்ன புன்னகை ஒன்று அலங்கரித்தது.
ஷக்தியின் முகத்தை தன் கைகளால் பற்றியவர், “ஆத்தா, என் காமாட்சி தான? போய் புடவைய மாத்தீட்டு வெளக்கேத்திட்டு வா ராசாத்தி. இந்த கெழவிதென் பார்க்க முடியாது. நீ வந்த நேரோம் நம்ம வூடு இதுக்கு பொறோம் வெளிச்சமாகட்டும் சாமி” என்று அவர் கண்ணில் நீர் துளிக்க, மறுபுறம் அமர்ந்திருந்த சிவா அவர் தோளை அணைவாகப் பிடித்துக்கொண்டான்.
மறுப்பாகத் தலையசைத்தாள் ஷக்தி. அதில் பெரியவர் முகம் வருந்த, “ஷக்தி” என்று கடிந்தான் சிவா.
“இங்க நா வந்தது யாருக்கும் பிடிக்கல பாட்டி, அத நான் கண்டுக்கவும் இல்ல. ஆனா ஒரு மாதிரியா இருக்கு” என்றவள் அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு,
“என்னதான் இது என்னோட ஷிவ் வீடா இருந்தாலும், எனக்கு ஒட்டல. மொதல்ல நான் வந்தபோது இருந்த மனுஷங்களுக்கும் இப்போ இருக்கறவங்களுக்கும் அத்தனை வேற்றும. என்னால தானே? நான் விளக்கேத்த மாட்டேன்னு சொல்லலை, இப்போ மாட்டேன். என்னைய முழுமனசா ஏத்துக்கிட்ட நீங்க சரியான பின்ன உங்க முன்னுக்க ஏத்தறேன். சரியா தேனு டார்லிங்” என்க,
“சேரித்தா.. சேரித்தா..” என்றார் அத்தனை மகிழ்வோடு.
“சிவா அந்த மரபொட்டிய தெறய்யா” என்றார் பீரோவைச் சுட்டிக்காட்டி.
“அதுல ராமர் பச்ச கலர்ல பட்டுப்புடவ இருக்கும் பாரு.. அத்த எடு” என்றார்.
அவனும் எடுத்துவர, “வேணி.. ஏய் வேணி” என்றவர் திரும்பவும் கத்த,
“ஸ்ஸ்.. பாட்டி என்ன இந்த கத்து கத்துறீங்க? இருங்க நானே கூப்பிடுறேன்” என்றவள் எழ,
“இரு இரு.. அவளே வருவா. அவ ஆத்தாகாரி மாதிரி இல்ல இந்த புள்ள, நல்லவத்தென்” என்று அதற்குள் குசுகுசுப்பாக ஒரு ரகசியத்தைப் பேசியவரை அத்தனை பிடித்தது ஷக்திக்கு.
“ஷிவ், ஷீ இஸ் ஆவ்ஸ்ஸம் (awesome) மேன்” என்றுவிட்டாள் அவனிடம்.
அவனிடம் ஒரு புன்னகை மட்டும். இந்த ஷக்தியைத் தானே அவன் இத்தனை நாட்கள் தேடியது!
அவள் முகத்தை நிறைத்த இந்த புன்னகையைத் தானே அவன் அவளிடம் கொண்டுவர முனைந்தது!
நண்பனாய் என்பது போய் இப்போது கணவனாய் அவன் மனைவியின் முகத்தில் வழிந்த வாத்ஸல்யத்தை மெய் மறந்து ரசித்தான் ஆணவன்.
“என்ன? பார்வையே சரியில்ல” என்று அவன் முகத்தைக் குறுகுறுக்கப் பார்த்தவண்ணம் ஷக்தி கேட்க,
“என் பொண்டாட்டி இன்னிக்கு இத்தன அழகா இருக்காளே. அதான், என் கண்ணே விழுந்துடுமோனுட்டு நினைச்சிட்டு இருந்தேன்” என்றான் கண்கள் ஒளிர.
“ஃப்ளர்ட் பண்ணாத ஷிவ்” என்று சொன்னவள் முகத்தில் லேசான சிவப்பு.
மாற்றம் அவளை மாற்றிக்கொண்டிருந்தது!
இருவரின் நிலையையும் பார்த்த தேனாட்ச்சிக்கு உள்ளம் உருகிற்று. எந்த சூழலில் அவர்களின் திருமணம் நடைபெற்றது என்பதை அறிந்தவரின் அனுபவம் சொல்லியது அவர்களின் இப்போதை நிலையை.
நீலா, “சொல்லுங்க ஆச்சி” என்று வந்தவளின் குரல் பிசிறியது.
முகம் சற்று வீங்கி, அழுதத் தடத்தைச் சரியாக துடைக்காது வந்தவளைப் பார்க்க, ஷக்திக்குப் பாவமாய் போய்விட்டது.
“ரொம்ப அதட்டிட்டேன் போலடா. அழுகுது பாரு” என்க,
“அவ கொஞ்சம் சென்ஸ்ஸிடிவ் தான் ஷக்தி. போய் நீயா பேசினா இன்னும் அழுவா, விட்டுரு. பார்த்துக்கலாம்” என்றுவிட்டான்.
“போய் பின்னாடி சாமந்தியும் ரோஜாவையும் பறிச்சிட்டு, ஒரு தாம்பாளத்துல சந்தன குங்குமம், ஒரு வெரலு மஞ்சளு, இனிப்பு வூட்டுல இருந்தா அத்தையும் கொண்டா. போ”
“ம்ம்” என்றபடி கண்ணைத் துடைத்துக்கொண்டு அவள் நகர,
“நீலவேணி, இருங்க. நானும் வரேன்” என்ற ஷக்தியைக் கண்கள் தெரித்து விழும் அளவிற்குப் பார்த்து நின்றாள் பெண்ணவள்.
நீலவேணி, சிறு பெண் என்றாலும் அத்தனை நிறமாய் இருப்பாள். ஆகர்ஷிக்கும் வெண்நிறத்தவள் முகம் அத்தனை கலையாய் இருக்கும். அதில் அவள் மூக்கில் ஜொலிக்கும் ஒற்றை வைரக்கல் மூக்குத்தி அவளைப் பேரழகி ஆக்கிவிடும்.
கன்னத்தில் சிவப்பாய் மின்னும் பருக்கள் அத்தனை அழகைக் கூட்டிக் காட்டிடும். இடைவரை பின்னியிருந்த கூந்தலும், திருத்தமான சேலை கட்டும், கண்களை உருத்தாக தாலிக்கொடியும், காதை ஒட்டிய கம்மலும் கையில் தங்க வளையலும் எப்போதும் தலையில் அமர்ந்திருக்கும் மலர்களும் வகிட்டுக் குங்குமமும் நம் தினமும் பார்க்கத் தோன்றும் முகமாய் இருப்பாள்!
“வேணி, என் வைஃப் பத்தரம்” என்ற சிவாவிற்கு ஒரு தலையசைப்பே பதில்.
திரும்பி வந்தவர்கள் கையில் தேனாட்ச்சி கேட்டது இருக்க, “வேணி அந்த புடவய எடுத்து தட்டுல வை. அந்த மரபொட்டில உள்ளாற இருக்கு பாரு, அத தெற.” என்றவர் ஷக்தியிடம்,
“சக்தி இங்கன வா, சிவா கூட சேர்ந்தாப்படி நில்லு” என்று பக்கத்தில் நிற்க வைத்துக்கொண்டார்.
“ம்ம்.. அந்த மரப்பெட்டில நவரத்தின வளவி இருக்கும்டி. அத எடுத்துவா” என்றவர்,
“இந்தூட்டு மருமகளா வந்துருக்க ஆத்தா, ஆச்சி கொடுத்தா வேணாமுனு சொல்லக்கூடாது. இது என்னோட மாமியா எனக்குக் கொடுத்தது, அந்த காலத்து உருப்படி. பத்தரமா வெச்சிக்கோ. என் கொள்ளு பேரன் பொறக்கும் போது என் கையில கொடுக்கற சமயம் இத போட்டுத்தேன் நீ கொடுக்கோனும்” என்க ஷக்தியின் உடலில் மெல்லிய அதிர்வுகள்.
“பாட்டி” என்றாள் உள்ளே சென்ற குரலில்.
ஏதோ உடம்பே குறுகுறுத்தது போன்று தோன்றியது. அதைவிட அவள் பக்கத்தில் நின்றவனின் பார்வை?
அய்யோ, சட்டென்று உடலில் உஷ்ணம் ஏறுவது போன்ற பிரம்மை.
வழமையாய் செய்யும் பெருவிரலை ஆட்காட்டி விரலோடு சேர்த்து அழுத்தினாள். ‘ஓ காட்’ என்று உள்ளூர சொல்லியவளின் கையை அழுத்தமாய் பிடித்துக்கொண்டான், சிவா.
“இப்படி பண்ணாதேன்னு எத்தன தடவை செல்லுறது ஷக்தி” என்று மெல்லக் கடிந்தவன், அவள் கையை விட்டானில்லை.
“வேணி, புடவ மேல வளவிய வெச்சு நீயே கொடுத்தா” என்றார்.
அவள் தயங்கவோ, பிகு செய்யவோ இல்லை.
“சின்ன புள்ளதென் நானு. இருந்தும் உங்களுக்கு கொடுக்கறேன். ஆசி எல்லாம் இல்ல கட்டளையா சொல்லுதென், அடுத்த வருஷம் எங்க சிவாத்தானை மாதிரி குட்டி வீரபத்திரனையோ இல்ல உங்கள மாதிரி ஒரு ஆராதனாவ ரிலீஸ் பண்ணிடுங்க” என்று சிரித்த முகமாய் சொன்னவளைக் கண் எடுக்காதுப் பார்த்து நின்றாள், ஷக்தி ஆராதனா.
“அடுத்த வருஷம் வரைக்கும் எதுக்கு வெயிட் பண்ணனும்?” என்ற சிவாவின் பேச்சில் களைந்த ஷக்தி, “டேய்ய்” என்றுவிட்டாள்.
அவள் முகத்தில் வழிந்த மஞ்சிமத்தில், தேனாட்ச்சியும் நீலவேணியும் அட்டகாசமாய் சிரித்துவிட்டனர்..
★
நம்மாழ்வாரின் தோட்ட வீடு.
உர மூட்டைகளும், இதர தோட்ட சாமான்களும் முன்புற அறையில் அடுக்கி வைத்திருக்க, பக்கவாட்டாக நெல் மூட்டைகள் அறை உயரத்திற்கு இருந்தன.
அதன் அருகே ஒரு சிறு மடங்கு கட்டில். அதில் ஷக்தியை நினைத்தபடி, அவளின் பேச்சையும் சிவாவுடனான அவளின் நெருக்கத்தையும் எண்ணியபடி படுத்திருந்தான், புகழேந்திரன்.
“லுக் மிஸ்டர் புகழ், நீ பண்ணது லாக் அப் டெத். அதுவுமில்லாம இதுக்கு முன்ன இருந்த எஸ்.பியே வேற இத திரிச்சு தான் சொல்லியிருக்கார். அவர் பேச்சு அப்படியே இருந்தாலும், டிப்பார்ட்மெண்டல் ஆக்ஷன் உங்க மேல எடுக்காம இருக்க முடியாது! மீனியல் வார்னிங் கொடுத்தா, மத்தவங்களுக்கு அஜாக்கிரதையா போயிடும். சோ, உங்களோட பவர்ஸ்ஸ ஆறு மாசம் நாங்க ஹோல்ட் பண்ணறோம்.” என்றிருந்தார் அவனின் உயரதிகாரி.
வேலைக்கு வருவாய் ஆனால் எந்த அதிகாரமும் உனக்கு அதில் கிடையாது என்றால் அவன் எப்படி உணர்வான்?
உள்ளூர வெந்தது அவனிற்கு. மூன்று மாதமாய் எந்தவித அதிகாரமும் இன்றி அவன் அலுவலகத்திற்குச் செல்வதே நரகமாய் இருந்தது.
இதில் நீலவேணி வேறு!
சிவாவை சஸ்பென்ட் செய்தது அவனின் ஈகோவிற்கான தீனி. இருந்தும் ஷக்திக்கு அவன் செய்ததை நினைத்து கோடி முறைக்கு மேல் மனதில் வருந்திக்கொண்டிருக்கிறான்.
அதற்குக் கூலியாய் அவன் இழந்தது அவன் காதலைத் தானே!
‘ஆராதனா’ என்று மனதில் மெல்லக் கண்மூடி முணுமுணுத்தவன் முன்பு சற்று முன்னர் சிவாவும் ஷக்தியும் அணைத்து நின்றிருந்ததே வந்து நின்றது.
அந்த அவன் எண்ணத்தைக் கீறவே, “புகழூ” என்று வந்தான், கருணா.
“என்ன, ஆராதனா நெனப்போ” என்க, பட்டென்று எழுந்தமர்ந்துவிட்டான் புகழ்.
“என்னாத்துக்கு இம்புட்டு பதட்டோம்? நெசத்த சொன்னதுக்கா?”
“ம்ம்ப்ச்.. தப்பு மாமா. அவ என்னோட ஆராதனாவா இப்போ இல்ல. சிவனேஷோட வைஃப்” என்றவனை மெச்சுதலாய் பார்த்தான் கருணா.
எதிரே இருந்த உர மூட்டையின் மீது அமர்ந்தவன், “சரிதென். நாங்கூட இன்னுமுட்டு அந்த புள்ளய நினைப்பியோன்னு..” என்றவன் முடிக்கும் முன்,
“என்னோட ஆராதனாவா இருக்கறவரை அவளோட நெனப்பிருந்துச்சு. ஏன் இப்பவும் இருக்கு” என்றவன் கருணாவை அழுத்தமாய் பார்த்தபடி,
“சிவாவோட வைஃப்பா அவங்கள நினப்பிருக்கு” என்றான்.
புருவத்தைத் தூக்கி, “நம்மாழ்வார் வளர்ப்பு சோட போகலை” என்றவனை ஒரு கசந்த சிரிப்புடன் பார்த்தான் புகழ்.
“நான் பண்ணது தப்பா சரியான்னு ஜட்ஜ் பண்ணுற நிலையில நான் இல்ல. ஆனா என்னோட ஒரு செயல், அவள என்கிட்ட இருந்து பிரிச்சிடுச்சு. உண்மையா ஒன்னு சொல்லவா மாமா” என்றவன் கண்களில் கண்ணீர் திரண்டுவிட்டது.
“அவள நேசிச்சுட்டேன் மாமா. என்னோட எல்லாமா அவ இருப்பான்னு அத்தன நேசிச்சேன். தப்பு பண்ணியிருக்கேன் தான், அதுக்குன்னு இத்தன பெரிய தண்டனை எனக்குத் தந்திருக்கக் கூடாது உங்க கடவுள்”
அவன் மனவலியைப் பகிருகிறான் என்று அமைதி காத்தான் கருணா. ஒருவகையில் ஷக்தியை அவன் சிவாவின் மனைவியாய் மட்டுமே பார்க்கிறான் என்பது வரை நிம்மதி.
“அதுக்கு தானய்யா நீலாவ கொடுத்துருக்காரு! உமக்கு நீலாதென் சரியான சோடினுட்டு அந்த ஆண்டவன் விதிச்சிருக்கான், அத பதிஞ்சுக்கோ உம் மனசுல”
புகழ், “இவ்வோ ஈசியா சொல்லுறீங்க?” என்று ஒரு விரக்தி அவனிடம்.
“கஷ்டமாதென் இருக்கும். இருந்தும் நீ பண்ணது சரியா சொல்லு? போனதப் பத்தி பேசி என்னவாகப்போகுது? ஆராதனா இப்போதென் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நெனப்புல இருந்து வெளிய வரா. சிவா வெளிய கொண்டுட்டு வந்துட்டிருக்கியான்.” என்றவனைப் புரியாதுப் பார்த்த புகழிடம் அவளின் சிகிச்சையைப் பற்றிப் பகிர்ந்தான்.
“நான்தென் சிவாவ டாக்டர் கிட்ட கூட்டிப் போக சொன்னேன். பார்த்தா ஆராதனாவும் போகனுமிட்டு கேட்டிருக்க, இப்போவரை கவுன்சிலிங் போறாங்க. சரியாகிடுவா, ஆகோனும். ஒன்னு சொல்லவா, அந்த புள்ளய கொஞ்சநா மனசுல வெச்சதுக்கே இம்புட்டு பாடுபடுறவன் அந்த புள்ளய நெனச்சியா?” என்றான் ஆதங்கமாய்.
அந்த கண்ணோட்டத்தில் புகழ் பார்க்கவில்லை. அவனை ஏதோ குடைந்தது, அந்த வலி அது அவனுக்கு மட்டுமா இருந்திருக்கும்? நிச்சயம் ஷக்தியும் அனுபவித்திருப்பால் என்பதை எப்படி மறந்திருந்தான் அவன்.
தனக்கே ரணமாய் இருக்க, அவளோ உண்மையாய் அவனை நேசித்தாளே, அணுவாய் உணர்வாய் அத்தனை ஆசையை மனதில் வைத்து பொதிந்திருந்தவளின் இருதயம் சுக்கலாய் போயிருக்குமே தன்னின் செய்கையால் என்று நினைக்க நினைக்க, மனது ஆறவில்லை அவனுக்கு.
தான், தனக்கு என்று இருப்பவன் தான். ஒரு கறை கூட தன்மீது படிந்துவிடக் கூடாது என்று நினைப்பவன் தான்.
தானே எல்லாயிடத்திலும் சிறந்திருக்க வேண்டும் என்று எண்ணுபவன் தான் ஆனால் எப்போது அவன் காதல் அவனை விட்டுச் சென்றதோ, எப்போது ஷக்தியின் கண்கள் அவனை அந்நியமாகப் பார்த்ததோ, எப்போது அவன் வேலைக்கான அதிகாரம் பறிக்கப்பட்டதோ அவன் மூளை விழித்தெழுந்து அவன் குற்றங்களைப் பூதாகாரமாய் படமெடுத்துக் காட்டியது.
அவன் ஆராதனா சென்றபின், அவனின் கண்ணோட்டங்கள் மாறுகிறது. நம்மாழ்வாரின் ஒதுக்கத்திற்கு பின் அவனின் தவறுகள் பிடிபடுகிறது.
“மாமா” என்றான் பரிதவிப்புடன்.
“ஆராதனா, தன்னையே வெறுத்துடுச்சு. எப்படிப்பட்ட ஒருத்தனிட்ட ஏமாந்து போயிட்டேன்னு மனசுலையே வெச்சு வெச்சு, அழுத்திட்டு இருந்த புள்ள பையித்தியம் ஆகிடுவோம்னுட்டு டாக்டர்கிட்ட போயிருக்கு” என்க, அதிர்ந்து போய் நின்றேன் புகழ்.
“என்ன மாமா சொல்லுற” அவன் கண்கள் விரிந்து விதத்திலேயே அவனின் அதிர்வு புரிந்தது கருணாவிற்கு.
“ம்ம்.. அவங்க அப்பா இறந்தபோ இருந்த அழுத்தம், உன்ன பத்தி தெரிஞ்சபோ இன்னும் இழுத்தியிருக்கு. சிவாவ ஒரு நண்பனா பார்த்தே பழகீட்டு சட்டுனு புருசேன்னு ஏத்துக்க முடியலை. எல்லாம் சேர்ந்து வெச்சு புள்ளைய ரொம்ப மனசளவுல பாதிக்க, பயந்துக்கிட்டு டாக்டர்கிட்ட போய் இப்போ நல்லாவே தெறிடுச்சு. ஆராதனாவுக்கு மன தைரியம் தாஸ்தி, என்ன வந்தாலும் பார்த்துக்கலாம்னு இருந்த புள்ள நடுவுல கொஞ்சம் சருக்கிட்டா” என்றான்.
அவனிடம் பதிலில்லை. ஆளுமையாய், கம்பீரமாய் பார்த்தவளை மருத்துவரிடம் சொல்லும் அளவிற்கு அவனின் செயல் இருந்திருக்கிறது.
கருணா, “ஆராதனாவ என்னதான் நமக்குத் தெரிஞ்சாலும் அவ சிவாவோட பொஞ்சாதி. அதோட பர்ஷனல் விஷயத்தச் சொல்லக்கூடாது தான். இருந்தும் உன்கிட்ட சொல்லுததுக்கு காரணோ, இன்னும் அந்த புள்ளய நீ நெனக்காம இருக்கனும்னுட்டுதென்” என்றவன் குரலில் கடுமை தெரித்தது.
புகழ், “நான் அந்தளவுக்கு கேடு கெட்டவன் இல்ல மாமா” என்றுவிட்டான்.
நிச்சயம் அவனுக்கு அது வலித்தது. இப்படி தன்னை நினைத்துவிட்டானே என்ற ஆதங்கம் முகிழ்த்தது.
ஆனால், முன்பிருந்த புகழாய் இருந்திருந்தால் நிச்சயம் கருணாவின் உதடு அவன் அடித்த அடியில் கிழிந்திருக்கும்!
அவனுக்கு அவனின் இந்த மாற்றம் புரிந்தது. இரண்டரை மாதங்களில் பெரியதாய் எதுவும் மாறாதது தான் இருந்தும் அவனை மாற்றியிருந்தால், நீலவேணி.
தன்னின் செயலாலும் அவளின் எழுத்தாலும் புகழை மனிதனாய் நல்லெண்ணங்கள் கொண்டு சிறுக சிறுக உருமாற்றிக்கொண்டிருந்தாள், அவனுக்கேத் தெரியாத வகையில்.
அவன் அளவில் புத்தகத்தில் தெரிந்த அந்த மாய எழுத்துக்கள் எல்லாம் உயிர் பெற்றிருந்தது அவளால். அவன் அறிந்த அவளால்.
அவள், இந்திரவேணி.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
22
+1
+1
2
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Vera level ♥️ eagerly waiting for next episode 😊
அவளை பற்றிய தவறான புரிதல் அவராய் நினைத்தால் தான் மாறும்.
அனைவரும் மன நிறைவுடன் இருக்கும் நேரம் வீட்டினில் விளக்கு ஏற்றுகிறேன் என்ற முடிவு அருமை.
ஷிவ் மற்றும் சக்தியின் ரசனை பார்வைகளும் பேச்சுகளும் நிறைவை அளித்துள்ளது தேன்னாட்சிக்கு.
இதுநாள்வரை தன் வலியை மட்டுமே கருத்தில் கொண்டவன் இப்பொழுது தான் அவளது மன வலியை பற்றி எண்ணுகிறான்.
தவறிழைத்த தான் தண்டனை அனுபவிக்கிறோம் ஆனால் உள்ளார்ந்து நேசித்தவளுக்கும் வருத்தம் வந்து சேர்ந்துவிட்டதே.
எழுத்தாளரா அவங்க 😍😍