
அத்தியாயம் 2
குடியிருக்கும் பன்மாடிக் குடியிருப்பின் வாயிலை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள் மௌனிகா. வெளியில் சற்று தள்ளி ஆட்டோ நிறுத்தம். அதனால் அங்கு சென்று ஏறுவது தான் வழக்கம்.
“நம்பர் வாங்கி வச்சிக்கோ படி. ஒரு கால் போட்டா, பில்டிங்க்கு உள்ளேயே வந்த உன்னை பிக்கப் பண்ணிக்குவாங்க இல்ல? எதுக்கு, அவ்வளவு தூரம் நடக்குற?” என ரஞ்சனி பலமுறை தோழியிடம் உரைத்துப் பார்த்து விட்டாள்.
ஏனோ பாவைக்குத்தான் அதில் உடன்பாடு இல்லை.
‘நடந்து செல்லும் தொலைவு தான் எனும் பொழுது, நடப்பதில் என்ன தவறு?’ என்பது அவனின் எண்ணம். அது, சிறுவயதில் அன்னையிடம் பழகியது.
நல்ல வசதி படைத்த குடும்பம் தான் என்ற பொழுதும், அதிமுக்கிய காரணத்தைந் தவிர்த்து தங்களின் வாகனத்தைப் பயன்படுத்த மாட்டார், மௌனியை ஈன்ற காவேரி. எப்பொழுதுமே பொது போக்குவரத்து தான்.
பெண்களிற்கு என்று இவ்வுலகம் வரையறுத்து வைத்திருந்த கொள்கைகளுடன் வளர்ந்து, அதன்படியே வாழ்ந்தவர். வாய்த்த கணவரான சங்கரனும் அப்படியே!
மாத மாதம் வாங்கும் மளிகைப் பொருள் முதல் விழாக் காலங்களில் சொந்த ஊருக்குச் சென்று வருவது வரை அனைத்தையும் கணக்கிட்டு, செலவு செய்து வருமானத்தில் சேமிப்பையும் தவறாது ஒதுக்கிக் கொள்பவர்கள். பத்து ஆண்டுகள் அவர்களின் திட்டமிடுதலைக் கண்டு வளர்ந்ததாலோ என்னவோ, மௌனியிடமும் இயல்பாக அப்பழக்கம் உண்டு.
அவள் வருவதைக் கண்டு வெளிக் காவலாளி நீண்ட இரும்புக் கதவைத் தள்ளி வாயிலைத் திறக்க, சரியாய் கைப்பேசி ஒலித்தது.
அதன் திரையில் கணியனின் பெயரைக் கண்டு, செவியோடு இணைத்தாள்.
“ஹலோ அக்கா..”
“சொல்லு கணி. என்ன இந்த டைம்ல கால் பண்ணி இருக்க?”
“நீங்க ஊருக்குக் கிளம்புறதா ரஞ்சி சொன்னா, அதான்.”
“இதோ கிளம்பிட்டேன்.”
“எங்க இருக்கீங்க?”
“அப்பார்ட்மெண்ட் கேட்ல.”
“அங்கேயே இருங்க, அஞ்சு நிமிசத்துல வந்துடுறேன்.”
“ஏண்டா?”
“ரஞ்சி தான், உங்களை எக்மோர்ல டிராப் பண்ண சொன்னா.”
“ஒகே.. வா..” என்று பேச்சை முடித்த மௌனி, தோழிக்கு அழைப்பு விடுத்தாள்.
“சொல்லு படி.”
“கணிக்கு எதுக்குக் கால் பண்ண?”
“ஹேய்.. ஃப்ரீ பாடிகார்ட் அவன். தேவைப்படுறப்ப எல்லாம் யூஸ் பண்ணிக்கலாம்.”
“பாவம் படி.”
“ஒரு பாவமும் இல்ல. குப்புற படுத்து கொரியன் சீரிஸ் பார்த்துட்டு இருந்தான். அந்த டைம்ல உன்னோட மேசேஜ் வந்துச்சா. அதான் துரத்தி விட்டேன்.”
மெலிதாய்ச் சிரித்தவள், “கணி வீட்டுக்கா போயிருக்க?”
“ஆமா.. எங்க அத்தைதான் வா வானு ஒரு வாரமா காதைக் கடிச்சிட்டு இருந்துச்சு. அதான் தலையைக் காட்டலாம்னு வந்தேன்.”
“ஓகே படி. டேக் கேர்.”
“ம்ம்.. சேஃப் ஜர்னி மை கேர்ள். ஊருக்குப் போனதும் கால் பண்ணு.” என ரஞ்சனி பேச்சை முடித்திட அடுத்த நான்காம் நிமிடம், மௌனியின் எதிரே வந்து வாகனத்தை நிறுத்தினான் கணியன்.
“வாங்க அக்கா போகலாம்.”
“என்ன? உன்னோட மாமா பொண்ணு, வீட்டுல உட்கார விடாம துரத்தி விட்டுட்டாளா.?”
“அதெல்லாம் இல்ல. நானே போர் அடிக்கிது என்ன செய்றதுனு தெரியாம யோசிச்சுக்கிட்டு இருந்தேன். அவ வந்து, எனக்கு டைம் பாஸ் பண்ண வழி சொன்னா. அதான் கிளம்பிட்டேன்.” என்றவன் அவளின் பெட்டியை முன்பக்கம் வைத்து பிடித்துக் கொள்ள, பின்னால் அமர்ந்தாள்.
அவர்களின் பயணம் தொடங்கியது.
“அம்மா, அக்கா எல்லாம் எப்படி இருக்காங்க கணி?”
“ஆல் ஆர் ஃபைன் அக்கா.”
“அக்கா ஹஸ்பண்ட்.?”
“ஓகே தான். நேத்து வீடியோ கால் போட்டு ரொம்ப நேரமா பேசிட்டு இருந்தாங்க. சர்வீஸ் பிளேஸ் மாத்துறாங்க போல.”
“இந்த டைம்ல அங்க ஸ்நோ அதிகமா இருக்கும்ல?”
“ஆமா அக்கா. யூனிஃபார்ம் போட்டு பார்டர்ல நின்னுட்டா, எல்லாத்தையும் சமாளிச்சு தான ஆகணும்?”
“ம்ம்..” என்றவள் பார்வையை தங்களைச் சுற்றி படரவிட, வேகத்திடம் சரணடைந்தது போல் இயங்கிக் கொண்டிருந்தது, சென்னையின் இரவு நேரம்.
கணியன், ரஞ்சனியின் அத்தை மகன். அவனது பெற்றோர்கள் பதினான்கு ஆண்டுகளிற்கு முன்பே விவாகரத்து பெற்று விட்டனர். இவனிற்கு ஒரு தமக்கை இருக்கிறாள், யாமினி.
ஈன்றவர்களின் பிரிவிற்குப் பின்னர், தந்தையோடு சில காலம் இருந்தவன், அவர் மறுமணம் செய்து கொண்டதும் தனிமையின் வசமாகிப் போனான். பதினெட்டு வயது வரை அப்படியே காலத்தை நகர்த்திவிட்டு, அதன்பின்னர் அன்னை மற்றும் தமக்கையுடன் வந்து விட்டான்.
யாமினியின் கணவர், இந்திய இராணுவத்தில் எல்லைப் பாதுகாப்பு பிரிவில் பணி செய்கிறார். தனியாய் இருக்கும் மகளிற்கு துணையாய் இருந்திட மகனையும் அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்துவிட்டார் அவனின் அன்னை, ராணி.
ரஞ்சனி வேலையில் சேர்வதற்காக வந்த பொழுது, முதலில் அவர்களுடன் தான் தங்கி இருந்தாள். அத்தை வீடாக இருந்தால், அப்படியே இருந்திருப்பாள். அவரின் மருமகனிற்கு உரிமையான இடத்தில் வசிக்க மனம் ஒப்பாததால், தரகரின் மூலமாக தேடி கிட்டியது தான், தற்போது தங்கி இருப்பது.
சென்னையில் சொந்தமாய் இரண்டு வீடுகள் இருக்க.. அங்கு தனி ஒருவளாய் வாழ விருப்பம் இன்றி, அவற்றை வாடகைக்கு விட்டுவிட்டு, வேலைக்குச் செல்வதற்கு வசதியாய், தரகரின் வழியாகத்தான் மௌனிகாவும் தற்போது இருக்கும் குடியிருப்பிற்கு வந்து சேர்ந்தாள்.
துவக்கத்தில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவு என ஆளிற்கு ஒரு படுக்கை அறையைப் பகிர்ந்து கொண்ட பெண்கள், சில மாதங்களிலேயே தோழிகளாய் மாறிப் போயினர்.
மௌனிக்கு ஆச்சி ரெங்கநாயகிக்கு அடுத்து நம்பிக்கையான உறவு என்றால், அது தோழி ரஞ்சனி தான். அப்படியே கணியனையும் சேர்த்துக் கொள்ளலாம்.
மௌனியை விட நான்கரை மாதம் இளையவன். ஒளிப்படவியலில் மூன்று ஆண்டு இளங்கலை படிப்பை முடித்துவிட்டு, அன்னை ராணி முதுகலை கல்வியைத் தொடர அனுமதிக்காததால் புகைப்படக் கருவியுடன் ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கிறான், தற்போது.
பாவை தொடர் வண்டியில் ஏற, அவளின் உடமைகளோடு பின்னால் வந்தான் கணியன்.
இருக்கை எண்ணைப் பார்த்து அமர்ந்து பைகளையும் அதற்கான இடத்தில் வைத்துவிட்டு அவள் பெருமூச்சு ஒன்றை வெளிவிட, “அக்கா எதுவும் வேணுமா? வாங்கிட்டு வரவா.?”
“நோ தேங்க்ஸ் கணி.”
“டின்னர்.?”
“ஆல்ரெடி ரெடி பண்ணி கொண்டு வந்துட்டேன்.’
“வாட்டர்.?”
பையில் இருந்த இரண்டு தண்ணீர் கேனைக் கண்களால் காட்டினான்.
“இப்படி பக்காவா ரெடியானா எப்படி?”
மெலிதாய்ச் சிரித்தவள், “ஏண்டா.?”
“நீங்க ஐடில தான் ஒர்க் பண்ணுறீங்களானு அடிக்கடி டவுட் வருது அக்கா. அதுக்கான இலட்சணம் ஒன்னு கூட உங்கக்கிட்ட இல்லையே.?”
“அம்மாவோட பேரண்ட்ஸ் பழக்கிவிட்டது. இருந்தவரை, இப்படித்தான் என்னைப் பார்த்துக்கிட்டாங்க. அப்படியே அவங்களை ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கேன்.”
“ம்ம்..” என்றவன் வண்டியின் கம்பி வழியே இரயில் மேடையை நோக்கினான்.
இங்கும் அங்குமாய் நடந்து செல்லும் மனிதர்களும் அதன் பரபரப்பும் புகைப்படக்கருவியைக் கையாள்பவனின் கண்களிற்கு விருந்தாக, தனது பையில் இருந்து கேமிராவை வெளியில் எடுத்தான்.
சில நிழல்படங்களைப் பதிவு செய்தவன், மௌனியின் பக்கம் திரும்பினான்.
“அக்கா..” என்ற அழைப்பிற்கு அவள் நிமிர்ந்து பார்க்க, நிழலாய் அவனது கருவியில் பதிந்தாள்.
“வீட்டுக்குப் போயிட்டு உங்களுக்குச் செண்ட் பண்ணி விடுறேன், ஃபோட்டோவை.”
‘சரி’ என்பதாய் தலை அசைத்தவள், “ஓகே, நீ போ. இனி நான் பார்த்துக்கிறேன்.”
“டிரைன் கிளம்ப இன்னும் டைம் இருக்கே?”
“நீ எவ்வளவு நேரம் சும்மா உட்கார்ந்து இருப்ப? இனி, வீட்டுக்குப் போக ஒன் ஹவர் ஆகும்ல?”
“அது பரவாயில்ல. என்ன ஒரு ஃபிஃப்டீன் மினிட்ஸ். உங்களுக்கு பாய் சொல்லிட்டே கிளம்புறேன்.”
அவனைக் கனிவுடன் பார்த்தவள், “டிஃபன் சாப்பிடுறியா.?”
“ஐயோ வேணாம்! இங்க உங்கக்கூட சாப்பிட்டா, வீட்டுக்குப் போயி சாப்பிட முடியாது. அப்புறம் மை மம்மி ராணி, அதையே நாளைக்குக் காலையில என் தலையில கட்டிடுவாங்க. இட்லி, சப்பாத்தினா கூட ஓகே. இந்த ஊத்தாப்பம், உப்புமா எல்லாம்.? என்னால அந்த தண்டனையை அனுபவிக்க முடியாதுக்கா. சோ ப்ளீஸ்..”
மௌனி சிரிக்க, வண்டி புறப்படும் வரை அவளிற்குத் துணையாய் இருந்துவிட்டு, விடைபெற்று சென்றான்.
கோவில்பட்டி…
அதிகாலை ஐந்தரை மணி..
வந்து இறங்கிய சில பயணிகளால், நடைமேடையின் அமைதி குலைந்து சலசலத்தது.
இடதுபக்கம் சட்டையின் கைப்பகுதியை மடித்து விட்டபடியே வேக எட்டுகளில் வந்தான் அரங்கநாதன். வலப்பக்க செவிக்கும் தோளிற்கும் இடையே கைப்பேசி.
“இறங்கிட்டீங்களா சித்தி.?”
மறுபுறம் இருந்த வசந்தி, “இல்லடா. இனிதான்.”
“சரி சரி. நீங்க சீட்லயே இருங்க. நான் வர்றேன்.” எனக் கைப்பேசியை அணைத்து கால்சராயின் பையில் போட்டுக் கொண்டு சென்றான்.
பெட்டி எண்ணை சரிபார்த்து அதனின் வாசல் பகுதிக்கு வர, தோளிலும் கையிலும் பைகளோடு இறங்கினாள் மௌனிகா.
பாவையின் உடல்மொழி அதனின் எடைக்குக் கட்டியம் சொல்ல, சட்டென்று அவளின் பெட்டியை வாங்கி நடைபாதையில் வைத்தான்.
திடீரென நடந்த நிகழ்வில் திடுக்கிட்டவள் அவனை நிமிர்ந்து பார்க்க, “கொஞ்சம் நகர்ந்து நின்னீங்கனா, மத்தவங்களும் இறங்க வசதியா இருக்கும்.” என்றான்.
“ஹோ.. ஸாரி..” என சற்று நகர்ந்தவள் பெட்டியோடு இரண்டு எட்டு எடுத்து வைத்து நிதானித்தாள்.
“தேங்க்ஸ் மிஸ்டர்..” என்று திரும்பிப் பார்த்து உரைத்தவளின் குரலில் அவனின் கவனம் குவிய, நன்றிக்கு மறுமொழியாய் புன்னகைத்துவிட்டு வண்டிக்குள் சென்றான்.
“சித்தி..”
“இதோ இருக்கேன்டா..” என்ற வசந்தி தனது பருமனான உடலை சிரமப்பட்டு நகர்த்தி எழுந்து வர, அவரின் பையை எடுத்துக் கொண்டு கைப்பற்றி அழைத்து வந்தான்.
வீட்டிற்குச் செல்வதற்காக வெளியில் தனது வாகனத்தை இயக்கித் திரும்பியவனின் கண்கள் அங்கிருந்த தேநீர் கடையில் பதிந்திட, அதற்குள் நுழைந்தாள் மௌனிகா.
“டீ எதுவும் குடிக்கிறீங்களா சித்தி.?”
“இல்லடா. டீ குடிச்சா தூக்கம் போயிடும். டிரைன்ல படுக்கிறதுக்கு வசதியே இல்ல. அதுனால சரியா தூங்க முடியல. வீட்டுக்குப் போயி முதல்ல நல்லா தூங்கணும்!” என்றிட, சிரித்துவிட்டு நான்கு சக்கர வண்டியை இயக்கினான்.
“கல்யாண வேலை எல்லாம் எப்படிடா போகுது?”
“நிச்சயதார்த்தம் தான? அதுக்குள்ள என்ன கல்யாணம்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க?”
“ஏண்டா, நிச்சயம் ஆனாலே பாதி கல்யாணம் முடிஞ்ச மாதிரி தான?”
“அதுசரி!” என்றவன் சாலையில் கவனத்தைப் பதிக்க, கைப்பேசி ஒலித்தது.
திரையில் நண்பன் அருணின் பெயரைப் பார்த்துவிட்டு, வண்டியின் வேகத்தை குறைத்து ஓரமாய் நிறுத்தினான்.
“ஹலோ மாப்ள..”
“எழுந்திரிச்சிட்டியா ரங்கா?”
“அட நீ வேற! நாலு மணிக்கே முழிச்சாச்சு. சித்தி ஊர்ல இருந்து வந்தாங்க. அவங்களை ரயில்வே ஸ்டேஷன்ல பிக்கப் பண்ணிட்டு வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்.”
“ஹோ.. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் மச்சான்.”
“சொல்லுடா..”
மறுபுறம் அருண் உரைக்க, ஆடவனின் முகம் சினத்தில் இறுகிப் போனது.

