Loading

லந்தங்காட்டிற்கு வெளியே ரங்கராஜ பூபதியின் படைகள், ரத்தினபுரியில் இருந்த பிரதீபனுடைய படைகளுடன் தீவிரமாக போரிட்டுக் கொண்டிருந்தது. ராஜகுரு மந்திரங்களை உச்சரித்து தீய சக்திகளை, மகிழபுரியை சேர்ந்த படை வீரர்களின் மீது ஏவினார். ஆனால் அவைகளால் அவர்களை நெருங்க கூட முடியவில்லை.

இதற்கு மேல் இங்கு இருந்தால் ஆபத்து என்பதை உணர்ந்தவர், ரங்கராஜ பூபதியை படைவீரர்களின் உதவியுடன், கை தாங்கலாக கூட்டிக்கொண்டு, மீண்டும் லந்தங்காட்டில் இருந்த குகையை நோக்கிச் சென்றார்.

ரஞ்சனியின் உடலில் இருந்த மோகனா, அப்போதுதான் பௌர்ணமி பூஜையை நிறைவு செய்திருந்தாள்.

ராஜகுருவும், ரங்கராஜ பூபதியும் அடிபட்ட காயங்களுடன், படைவீரர்களின் துணையோடு குகையை நோக்கி வருவதை கண்டு, அவர்களிடம் சென்றாள்.

“நான்தான் உங்களை இங்கிருந்து செல்லும் படி கூறினேனே? என்ன ஆனது? இந்த காயங்கள் எப்படி தங்களுக்கு ஏற்பட்டது? ரகுநந்தனும் தந்தையாரும் எங்கே?

ரங்கராஜ பூபதி கோபமாக மறுமொழி கூற வருவதற்கு முன்பே, அவரை தடுத்து விட்டு, ராஜகுரு அவளிடம் பேச தொடங்கினார்.

“மோகனா நீ கூறியபடி தான் நாங்கள் இங்கிருந்து செல்ல தொடங்கினோம், ஆனால் லந்தாங்காட்டை தாண்டிய சிறிது நேரத்திலேயே, பிரதீபனுடைய படைகள் எங்களை சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்கி விட்டன. ஒரு கட்டத்திற்கு மேல் எங்களால் போராட முடியாமல் ரங்கராஜ பூபதியை அழைத்துக் கொண்டு, வீரர்கள் துணையுடன் நான் இங்கு வந்து விட்டேன்.”

“என்ன? ராஜகுரு என்ன கூறுகிறீர்கள் தீயசக்திகளை அவர்களின் மீது ஏவிவிட வேண்டியது தானே?”

“மோகனா நான் அதை செயல்படுத்தி இருக்க மாட்டேன் என்று நினைக்கின்றாயா? நான் ஏவி விட்ட ஏவல்கள் அவர்களை நெருங்கும் முன்பே அலறி அடித்துக் கொண்டு விலகி ஓடிவிட்டன. ஏதோ ஒரு மாய சக்தி அவர்களை காத்து நிற்பது போல் எனக்குத் தோன்றுகிறது. உன் தந்தையும் வீரர்களுடன் சண்டையிட்டுக் கொண்டே, எங்களை விட்டு வெகு தூரம் தள்ளிச் சென்று விட்டார். ரகுநந்தன் எங்கு சென்றான் என்றே தெரியவில்லை, ஒரு கட்டத்திற்கு மேல் அங்கு இருப்பது ஆபத்து என்று உணர்ந்துதான், ரங்கராஜனை அழைத்துக் கொண்டு இங்கு வந்து விட்டேன்.”

  “என்ன?… ரகுநந்தன் எங்கு சென்றான் என்று தெரியவில்லையா? அவனை வைத்துத்தான் ரஞ்சனியை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றேன், அவனுக்கு நமது திட்டங்கள் அனைத்துமே தெரியும், ஒருவேளை மகிழபுரிக்கு சென்று யாரிடமாவது என்னைப் பற்றிய உண்மைகளை, அவன் உளறிவிட்டால் என்ன செய்வது? உங்களை நம்பி ஒரு வேலையை ஒப்படைத்தேன் பாருங்கள் என்னை கூற வேண்டும்.”

   ரஞ்சனி தன் கண்களை மூடி தனது மந்திர சக்தியால் ரகுநந்தன் எங்கே இருக்கின்றான் என்று தேட முயற்சி செய்தாள், ஆனால் அவளால் அவன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கவே முடியவில்லை, எவ்வளவு முறை முயன்றும் அவளுக்கு தோல்வியே மிஞ்சியது.

  ஒருபுறம் படைவீரர்களை நெருங்க அஞ்சும் தீய சக்திகள், மறுபுறம்  ரகுநந்தன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கவே முடியவில்லை, தனக்குத் தெரியாமல் தன்னை சுற்றி ஏதோ சூழ்ச்சி நடப்பது போன்று மோகனாவிற்கு தோன்றியது.

   “ராஜகுரு என் அண்ணன் பிரதீபனை அங்கு கண்டீர்களா? அவன் இருந்துமா என் தந்தையை எதிர்த்து, வீரர்கள் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர்?”

“பிரதீபனா? அவனை நான் அங்கு பார்க்கவே இல்லை,அவனது படை வீரர்கள் மட்டுமே எங்களை சூழ்ந்து இருந்தனர்.”

  மோகனா மறுபடியும் கண்களை மூடி இப்போது பிரதீபன் இருப்பிடத்தை அறிய முயன்றாள். இப்போதும் அவள் கேள்விக்கான விடை தான் இன்னும் அவளுக்கு கிடைக்கவே இல்லை.

ஒரு முடிவுடன் கண்களை மூடி மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கினால், அடுத்த நிமிடம் இரண்டு யட்சிணிகள் அவள் முன்பு தோன்றி, அவளை வணங்கி நின்றனர்.

“நீங்கள் இருவரும் இப்போதே சென்று ரகுநந்தன் மற்றும் பிரதீபன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வாருங்கள். ரகுநந்தனை உயிரோடோ அல்லது பிணமாகவோ என்னிடம் இழுத்துக் கொண்டு வருவது உங்கள் பொறுப்பு, அவர்களை கண்ட அடுத்த நிமிடமே எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். புரிகிறதா? ம்ம்ம்… செல்லுங்கள்.”

அவைகள் அவளை வணங்கி விட்டு, உடனே ரகுநந்தனையும் பிரதீபனையும் தேடி பறந்து சென்றது.

“மோகனா இன்னும் ஏன் அமைதியாக இருக்கின்றாய்? உடனே லந்தங்காட்டிற்கு வெளியே சென்று, அங்கு நமது படைகளை தாக்கிக் கொண்டிருக்கும் மகிழபுரியை சேர்ந்த படைவீரர்களை அழித்துவிடு, எவ்வளவு தைரியம் இருந்தால் நம் மீது தாக்குதல் நடத்தி இருப்பார்கள்.”

    “இல்லை சித்தப்பா, இப்போது நான் அங்கு செல்வது உசிதமல்ல, ஏற்கனவே ரகுநந்தனும் பிரதீபனும் எங்கு இருக்கிறார்கள் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் படைகளின் மீது நாம் கை வைப்பது, என்னை மகிழபுரியை சேர்ந்தவர்களிடம் காட்டிக் கொடுப்பது போலாகும். நம்மைச் சுற்றி வேறு ஏதோ மாய சக்தி விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கின்றது, முதலில் அது என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும். அத்தோடு இன்னும் ஒரு பூஜை நமக்கு மீதம் உள்ளது, அதற்கு முன்பே நமது சக்திகளை வெளிக் காட்டினாள், அவர்கள் சுதாரித்து விடுவார்கள். இப்போதைக்கு பதுங்கி இருப்பது தான் நமக்கு நல்லது. நீங்கள் அனைவரும் சிறிது நேரம் பதுங்கு குழியில் பதுங்கியிருங்கள், எப்படியும் உங்களை தேடி மகிழபுரியை சேர்ந்த படைவீரர்கள் இங்கு வருவார்கள், நான் அவர்களை எப்படியாவது இங்கிருந்து அழைத்துச் சென்று விடுகிறேன், பிறகு தாங்கள் அனைவரும் லந்தக்காட்டை ஒட்டிய மலை மீது பயணித்து, மேக காட்டிற்குள் சென்று, அங்கு வாழும் மக்களுடன் சிறிது நாட்கள் அங்கேயே தங்கியிருங்கள். மேற்கொண்டு செய்ய வேண்டியவற்றை நான் மடல் மூலம், தங்களுக்கு தகவல் அனுப்புகிறேன்.”

வெளியே படைவீரர்கள் வரும் சத்தம் கேட்க, மோகனா உடனே அவர்களை காலக்கோடரின் சிலைக்குப் பின்பு இருந்த, பதுங்கு குழிக்கு அனுப்பி வைத்தாள்.

  பிரதீபனுடைய படைத்தளபதி, வீரர்களுடன் விஜயேந்திர பூபதியே இழுத்துக் கொண்டு குகையை நோக்கி முன்னேறி வந்தார். அப்போது திடீரென்று குகையில் புகைமூட்டம் உண்டானது, அந்த நேரத்தில் மோகனா தமது மந்திர சக்தியால் வீரர்களுடன் இருந்த விஜயேந்திர பூபதியை, பதுங்கு குழியை நோக்கி அனுப்பி வைத்தாள்.

   புகைமூட்டம் நீங்கியதும் வீரர்கள் அங்கு கண்டது, காலகோடரின் சிலைக்கு கீழே கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், தரையில் படுத்திருந்த ரஞ்சனியை தான்.

அவளை நோக்கி வந்த தளபதி, அவளது கை,கால் கட்டுகளை அவிழ்த்து விட்டு, தாங்கள் எவ்வாறு இங்கு வந்தீர்கள் என்று விசாரித்தார்.

அதற்கு அவள், அரசரின் கட்டளைப்படி பௌர்ணமி பூஜை செய்ய ஜோதிடருடன் கோயிலுக்கு வந்ததாகவும், அப்போது இவர்கள் தன்னை இங்கு கடத்தி வந்து விட்டதாகவும் கூறினாள்.

“தாயே ஜோதிடருடனா வந்திருந்தீர்கள்? நாங்களும் அந்த ஜோதிடரின் உதவியால் தான் இந்த காட்டை வந்தடைந்தோம். அவர்தான் அரசர் பிரதீபருக்கு முக்கியமான அலுவல் வந்து விட்டதால், அவர் தற்போது இங்கு வர முடியாது என்றும், தளபதியை முன்னிறுத்தி தாக்குதலைத் தொடங்குமாறு உத்தரவிட்டதாகவும் கூறினார். அத்தோடு,  நாங்கள் போருக்கு தயாராவதற்கு முன்பு, எங்களுக்கு அந்த ஈசனின் அருள் பெற்ற, திருநீறை வெற்றி திலகமாக எங்கள் நெற்றியில் இட்டு, அவர்தான் எங்களை இங்கு அழைத்து வந்தார்.  இல்லையென்றால் எங்களால் இந்தக் காட்டின் உள்ளே பிரவேசித்திருக்கவே முடியாது.”

அப்போதுதான் தளபதி அங்கு விஜயேந்திர பூபதி இல்லை என்பதையே உணர்ந்தார், உடனே ஒரு குழுவை காட்டினுள் அனுப்பி அவனை கைது செய்து பிடித்து வருமாறு உத்தரவிட்டுவிட்டு, ஒரு பல்லக்கில் ரஞ்சனியை அமர்த்தி, மீதம் இருந்த  வீரர்களுடன் மகிழபுரியை நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கினார்.

  மகிழபுரியில் அரண்மனையை நோக்கி சென்று கொண்டிருந்த மித்ரனுக்கு, வழியில் இறந்து கிடந்த ஒரு பச்சை கிளியினை கண்டு, ஒரு யோசனை தோன்றியது.

  “ரஞ்சனி நீ இங்கு தான் இருக்கின்றாய் என்று என்னால் உணர முடிகின்றது, நீ இவ்வாறு ஆன்மாவாக அரண்மனைக்குள் உலா வந்தால், மோகனா நிச்சயம் உன்னை கண்டுபிடித்து விடுவாள், பிறகு அவளை  அழிப்பதற்க்காக நாம் செயல்படுத்த போகும் திட்டம் எல்லாம் பாழாகிவிடும். அதனால் மனதில் கொற்றவை அன்னையை நன்கு வேண்டிக் கொண்டு, அதோ அங்கு இறந்து கிடக்கும் பச்சைக்கிளியின் உடலுக்குள் உன் ஆன்மாவை புகுத்திக் கொள்ள முயற்சி செய்.”

ரஞ்சனியும் மித்ரன் கூறியதை புரிந்துகொண்டு, இறந்து கிடந்த அந்த கிளியின் உடலுக்கு அருகில் சென்றாள். பின்பு, மனதார கொற்றவை தேவியை வணங்கி விட்டு, தனது ஆன்மாவை அந்த கிளியின் உடலுக்குள் செலுத்தினாள். சிறிது நேரத்திலேயே சிறகடித்து பறந்து வந்து, பச்சைக்கிளி ரூபத்தில் மித்ரனின் தோள்களில் அமர்ந்து கொண்டாள்.

  மகிழபுரியின் தெருக்களில், தீய சக்திகள் மனித உயிர்களின் இரத்தத்தை குடித்து, தமது கோரத்தாண்டவத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தன. வீதிகள் தோறும் மரண ஓலம் விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது.

அவைகளுக்கு அஞ்சி, வீட்டுக்குள் பதுங்கி இருந்த ஒரு சில உயிர்களும், தம்மை காப்பாற்றும் படி கொற்றவை அன்னையின் பெயரை விடாமல் உச்சரித்துக் கொண்டிருந்தனர்.

  குருந்தங்காட்டிற்குள் கருவறையில் இருந்த கொற்றவை தேவியின் முகம் மகிழபுரி மக்கள் படும் இன்னலை கண்டு, கோபத்தால் சிவந்து கொண்டே சென்றது, அவர் கண்களில் இருந்து வந்த மின்னல் கீற்றானது, அவருக்கு எதிரே மண்டியிட்டு கண்கள் மூடி அவரை வணங்கிக் கொண்டிருந்த மதுராவின் மீது பாய்ந்தது.

அடுத்த நொடி அவள் கண்களை திறந்த போது அவள் முழுதாக அந்த கொற்றவை அன்னையாகவே மாறி இருந்தாள். கண்களில் நெருப்பு மின்ன மகிழபுரியை நோக்கி செல்லத் தொடங்கினாள்.

மோகனா லந்தாங்காட்டில் இருந்து கிளம்புவதற்கு முன்பே தனது சக்தியின் மூலம் மழையை உண்டாக்கி, வீரர்களின் நெற்றியில் இருந்த திருநீறை அழித்து விட்டாள்.

   அதனால் விஜயேந்திர பூபதியை தேடி காட்டுக்குள் சென்றவர்களும், அவளோடு பல்லக்கை சுற்றி வந்து கொண்டிருக்கும் வீரர்களும் அவளது சக்திக்கு கட்டுப்பட்டனர்.

காட்டினுள் விஜயேந்திர பூபதியை தேடிச் சென்ற வீரர்கள், குகையில் பதுங்கு குழியில் இருந்த அனைவரையும், பத்திரமாக மேகக் காட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

அவளோடு வந்தவர்கள் அவளின் கட்டளைக்கு அடிபணிந்து நடந்து கொண்டனர். ஆனால் அவள் எவ்வளவு முயற்சி செய்தும் ஜோசியர் ரகுநந்தன் மற்றும் பிரதீபன் இருக்கும் இடத்தினை அவளால் அறிந்து கொள்ளவே முடியவில்லை.

     லந்தங்காட்டில்  இருந்து வெளியேறும் போது, தன்னுடன் இருந்த போலி ஜோசியரோடும், தன் கட்டளைக்கு அடி பணியும் வீரர்களோடும் மகிழபுரியை நோக்கி தனது பயணத்தை தொடங்கினால் மோகனா.

குடிலில் படுத்திருந்த ஏந்திழை அம்மையாருக்கு செண்பாவின் பிளிறல் சத்தம் கேட்டது, அவர் எழுந்து வந்து பார்த்த போது, தனதருகே படுத்திருந்த மதுரவாணியை காணாததால், அவளை தேடி வெளியே வந்தார்.

அப்போதுதான் மதுரவாணி கொற்றவை தேவி கோயிலில் இருந்து இறங்கி, குருந்தங்காட்டிற்கு வெளியே செல்லும் வழித்தடத்தில் செம்பா பின் தொடர, அவள் நடந்து சென்று கொண்டிருப்பதை பார்த்தார்.

   அவளது பெயரை உரக்க கூறிக்கொண்டே, அவள் செல்லும் வழித்தடத்தில், அவள் பின்னே ஓடத் தொடங்கினார் ஏந்திழை அம்மையார்.

கோபத்தோடு வேகமாக நடந்து கொண்டிருந்த மதுரா, குருந்தங்காட்டிற்கு வெளியே காலை எடுத்து வைக்க முனைந்த போது, அவளால் அந்தக் காட்டை விட்டு வெளியேற முடியவில்லை. கொற்றவை தேவியை குருந்தங்காட்டில் தனது மந்திரத்தால் மோகனா கட்டி வைத்திருப்பதால், மதுராவின் உடலில் இருக்கும் கொற்றவை அன்னையாலும் அந்த காட்டிற்கு வெளியே செல்ல முடியவில்லை.

  கண்களில் அனல் கக்கும் நெருப்போடு, கோபமாக மகிழபுரியை நோக்கி நின்று கொண்டிருந்த மதுராவின் அருகே வந்து, படுத்துக்கொண்டது செம்பா. அவர்களுக்கு பின்னே ஓடி வந்த ஏந்திழை அம்மையாரோ மூச்சிரைக்க அவள் முன்பு வந்து நின்றார்.

  வந்தவர் மதுராவின் தோற்றத்தை கண்டு திகைத்து நின்று விட்டார், அவளின் கண்களில் உள்ள நீல பந்துகள் நெருப்பாக எரிந்து கொண்டிருந்து.

  தன் மகளின் உருவத்தில் அந்த கொற்றவை தேவியை கண்டவர், கைகூப்பி அவளது கால்களில் விழுந்து விட்டார்.

“எழுந்திரு ஏந்திழை, பேசுவதற்கு நேரம் இல்லை. அங்கு என் மக்கள் தீய சக்தியினால் தாக்கப்பட்டு உயிருக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.”

மதுரா தன் கண்களை மூடி கைகளை வானை நோக்கி உயர்த்திய போது, கைகளில் பொன்னிறமாக மின்னும் அன்னையின் சூலாயுதம் தோன்றியது. அதை ஏந்திழையின் முன்பு நீட்டினார்.

“இந்த சூலாயுதத்தை வாங்கிக் கொள், இதை எடுத்துக் கொண்டு நேராக  மகிழபுரியை நோக்கி செல். அங்கு தீய சக்திகள் மனித உடல்களின் மீது நின்று ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றது . எந்த இடத்தில் சூலாயுதம் ஒளிரத் தொடங்குகின்றது, அங்கு இதை நட்டு வைத்துவிட்டு நீ திரும்ப வந்துவிடு. நீ செல்லும் வழி எங்கும், காதுகளில் அலறல் கேட்பதையும் கண்களின் முன்பு வந்து பயமுறுத்துவதையும் கண்டு அஞ்சாதே, வெற்றியோடு திரும்பி வா.”

   ஏந்திழை அம்மையார் கொற்றவை தேவியின் அறிவுரைப்படி, சூலாயுதத்தை தன் இரு கரங்களிலும் ஏந்திக் கொண்டு, மகிழபுரியை நோக்கி சென்றார். அவர் மகிழபுரியின் தெருக்களில் கால் வைத்ததுமே அவரைச் சுற்றி, ஆன்மாக்கள் ஓலமிட்டுக் கொண்டே வட்டமிட ஆரம்பித்தன. அவற்றைக் கண்டு அஞ்சாதவர் முன்னேறி சென்றார்.

சிறிது நேரத்தில் அவை அவரின் கண்களுக்கு முன்பு வந்து பயம் காட்ட, அதனைக் கண்டு அஞ்சாது நடந்து கொண்டே இருந்தார். ஒரு வேப்ப மரத்திற்கு பக்கத்தில் சென்றபோது, சூலாயுதம் ஒளிரத் தொடங்கியது, உடனே அங்கு சூலாயுதத்தை ஊன்றியவர், அதைத் தொட்டு வணங்கி விட்டு குருந்தங்காட்டிற்கு திரும்பினார்.

   ஏந்திழை அம்மையார் சூலத்தை ஊன்றிய அடுத்த கனமே, குருந்தங்காட்டினுள் இருந்த மதுரா, மயங்கி விழுந்திருந்தாள்.

மகிழபுரி மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த கெட்ட ஆத்மாக்கள், அந்த  சூலாயுதத்தின் சக்தியால் ஈர்க்கப்பட்டு, அதை நோக்கி வந்த போது, எரிந்து சாம்பலாயின.

      சரியாக அந்த நேரத்தில் காவலர்களுடன் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள் மோகனா.

  கண்களை மூடி நடந்ததை அறிந்து கொண்ட மோகனா, முதலில் இந்த ஏந்திழையை எப்படியாவது விரட்டி அடிக்க வேண்டும் என்று முடிவு செய்தாள். அவளால் அந்த தெருவின் உள்ளே கூட நுழைய முடியவில்லை, அந்த சூலாயுதத்தின் சக்தி அவளை உள்ளே அனுமதிக்க மறுத்தது.

அவளுடன் ஜோசியர் உருவத்தில்  நின்று கொண்டிருந்த ரத்தமாறன், சூலாயுதத்தின் சக்தியை கண்டு அஞ்சி  காற்றோடு காற்றாக அப்படியே மறைந்து போனான்.

சிறிது நேரத்திற்கு பிறகு, இரவு நேரத்தில் சூரியனைப் போன்ற ஒளி வீச, மக்கள் அனைவரும் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து பார்த்தனர். அங்கு சூலாயுதத்திற்கு சற்று தள்ளி ரஞ்சனி நின்று கொண்டிருந்தாள். அவள் பௌர்ணமி பூஜைக்காக அண்டை நாட்டிற்கு சென்று இருப்பதை அனைவரும் அறிந்திருந்தனர்.

   அவள் தான் இந்த கெட்ட சக்திகளை அழித்ததாக மக்கள் நினைத்தனர். அங்கு அன்னையின் சூலாயுதம் ஜொலித்துக் கொண்டிருந்தது, தங்களை காப்பாற்ற வந்த தேவியை நினைத்து கண்கலங்கிய மகிழபுரி மக்கள், பக்தியோடு அதனை கண்களில் ஒற்றிக்கொண்டனர்.

  ஜெயகோஷத்துடன் ரஞ்சனியின் பல்லக்கை தூக்கிக்கொண்டு, மக்கள் அனைவரும் அரண்மனையை நோக்கி சென்றனர். ரஞ்சனி எதிர்பார்த்து வந்ததும் இதுதான். இங்கு மக்களை துன்புறுத்திக் கொண்டிருந்த ஆன்மாக்களை, தான் கட்டுப்படுத்தி அரசரிடம் நல்ல பெயர் பெற்று, இளவரசரை அதன் மூலம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

அந்த தெருவை விட்டு சற்று தூரம் சென்றதுமே, மீண்டும் அந்த ராட்சசன் ஜோசியரின் உருவத்தை தரித்துக் கொண்டு, அந்தக் கூட்டத்தில் மக்களோடு மக்களாக கலந்து மோகனாவின் உத்தரவுப்படி மக்களை நோக்கி பேச ஆரம்பித்தான்.

“கெட்ட சக்திகளிடம் இருந்து நம்மையெல்லாம் காத்த இந்த தேவியே, நமக்கு வருங்கால மகாராணியாக வந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? நீங்கள் என்ன கூறுகிறீர்கள் மக்களே?”

  “ஆமாம் ஜோசியரே ஆமாம் நீங்கள் கூறுவது சரிதான், இந்த தேவி நமது மகாராணியாக வந்தால் இந்த நாட்டில் நடைபெறும் கெட்ட விஷயங்கள் எல்லாம் நின்று போய்விடும். அதுதான் நாட்டு மக்களுக்கும் நல்லது. வாழ்க ரஞ்சனி தேவி, வாழ்க வருங்கால மகாராணியார்!”

   என்ற ஜெயகோஷங்கள் அரண்மனை வரை எதிரொலித்தது.

  மக்களின் ஊர்வலம் அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருப்பதையும், அங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கேள்விப்பட்டு, மகாராஜாவும் மகாராணியாரும் இளவரசருடன், அரண்மனை வாயிலில் ரஞ்சனிக்காக காத்திருந்தனர்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்