
“படி (Buddy)..” என உணவு தட்டை நீட்டிய தோழி ரஞ்சனியின் அழைப்பில் கைப்பேசியில் இருந்து பார்வையை விலக்கி நிமிர்ந்தாள் மௌனிகா.
“தேங்க்ஸ் ப்பா..” என்று வாங்கி ஓரம் வைத்திட, “டைமைப் பார்த்தியா? சாப்பிடாம, இன்னும் என்ன மொபைல பார்த்துட்டு இருக்க? எப்ப தூங்குறதா ஐடியா?”
“தூங்கலாம்.. இப்ப என்ன அவசரம்?”
“என்ன அவசரமா? மணி பன்னெண்டாகப் போகுது. பேய், பிசாசு, ஆவி எல்லாம் வாக்கிங் கிளம்புற நேரம் படி.”
புன்னகைத்த மௌனி, “இன்னுமா இந்த பேய் கதை எல்லாம் நம்பிக்கிட்டு இருக்க நீ?”
“நான் நம்புறது நம்பாதது எல்லாம் இரண்டாவது விஷயம். பட், என் லைஃப்ல இருந்து அதைப் பிரிக்கவே முடியாது.”
“குழந்தை மாதிரி திங்க் பண்ணாத ரஞ்சு.”
“அடப்போப்பா. பத்து வயசு வரைக்கும், சாப்பிடலேனா பேய் வந்து நைட் தூக்கிட்டுப் போயிடும்னு சொல்லிச் சொல்லி பயமுறுத்தியே எங்க அப்பாயி எனக்குச் சாப்பாடு ஊட்டி விட்டுக்கிட்டு இருந்துச்சு. அது அப்படியே பழகிப் போச்சு.”
“என்ன, நயன்டீஸ் கிட் கதை எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்க?”
“நயன்டீஸ் கிட்டுக்கும் எனக்கும் நாலு வருஷம் தான்பா டிஃபரன்ஸ். அதுக்குனு அவங்க ஃபீல் எல்லாம், எனக்கு இல்லாம போயிடுமா? என் கூட பிறந்தவன் அவனோட எக்ஸ்பீரியன்ஸை எல்லாம் கதைக் கதையா சொல்லி வளர்த்திருக்கான்.” என மறுமொழி தந்திட, இருவரும் சிரித்தனர்.
கைப்பேசியை ஓரம் வைத்த மௌனி, தட்டில் இருந்த சேமியா உப்புமாவை உண்ணத் துவங்க, “ஏன் இன்னைக்கு இவ்வளவு லேட்.?”
“வியாழன் வெள்ளி ரெண்டு நாள் லீவ் போட்டிருக்கேன். சோ, ஒர்க் லோட் கொஞ்சம் அதிகம் ஆகிடுச்சு.”
“லீவா? என்ன திடீர்னு?”
“ஊருக்குப் போறேன்.”
“என்ன ஒரு அதிசயம்?”
மௌனி புன்னகைக்க, “எதுவும் பிரச்சனையா படி? வருஷத்துக்கு ஒரு தடவை உன்னோட அம்மா அப்பா நினைவு நாளை தவிர்த்து, நீ வேற எதுக்காகவும் போக மாட்டியே.?’
“ம்ம்.. ஆச்சி வரச் சொன்னாங்க. என் சித்தப்பா பொண்ணுக்கு எங்கேஜ்மெண்ட்.”
“ஓ.. உன்னோட சித்தப்பா கூப்பிட்டாரா?”
அவள் புன்னகைக்க, “ஏய், என்ன சிரிக்கிற?”
“ஆச்சி ஆசைப்படுறாங்க, வந்துட்டு போனு சொன்னாரு.”
“வந்துட்டுப் போயிடணுமா?’
மௌனி உணவில் கவனமாய் இருக்க, “வானு சொல்ல மனசு இல்ல. வந்துட்டு போ ன்னு சொல்லுறாங்க. இதுக்கு எதுக்குக் கூப்பிடணும்?”
“ஆச்சி விட மாட்டாங்க இல்ல, அதுக்காகத்தான்.”
“சரியா போச்சு. இவங்க எல்லாம் சொந்தக்காரங்க. இந்த சொந்தக்காரங்க விசேஷத்துக்கு நீ போற. அப்படித்தான?”
“அவங்களுக்காக யாரு போறா? நான் ஆச்சிக்காக போறேன். லாஸ்ட் ஃபைவ் மந்த்ஸாவே அவங்களுக்கு உடம்பு சரியில்ல படி. வயசாகிடுச்சு இல்ல? இப்ப எனக்குனு இருக்கிறது, ஆச்சி மட்டும் தான். பக்கத்துல இருந்து பார்த்துக்கணும்னு ஆசை. என்னால அங்க போயி இருக்க முடியாது. இங்க என்கூட வந்துடுங்கனு கூப்பிட்டா, வர மாட்டிறாங்க.”
“இந்த பெருசுங்களே இப்படித்தான் படி. மதிக்காத பிள்ளையைப் பிடிச்சுத் தொங்கிக்கிட்டு இருப்பாங்க. நல்லா பார்த்துக்கிற பிள்ளைய கண்டுக்கக்கூட மாட்டாங்க. எங்க தாத்தா செய்யல.?”
மௌனி புன்னகைக்க, “சரி, எப்ப கிளம்புற?”
“நாளைக்கு நைட் டிரைனுக்கு. ஆச்சி அவங்கக்கூட இருக்கச் சொல்லி கேட்டிருக்காங்க. சோ, அவங்க ஆசைக்கு மூனு நாள் இருந்துட்டு, சண்டே ஃபங்ஷன் முடிஞ்சதும் அப்படியே சென்னைக்குக் கிளம்பலாம்னு பிளான்.”
“உன்னால அங்க இருக்க முடியுமா?”
“தெரியல. பத்து வயசு மௌனியால, அப்ப இருக்க முடியல. இப்ப தான் டுவன்டி ஃபைவ் ஆகுதே? கொஞ்சம் மெச்சூர்ட் ஆகிட்டேன்னு நினைக்கிறேன், ஹேண்டில் பண்ணிடலாம்.”
சின்னதாய் சிரித்த ரஞ்சனி, “எனக்கொரு டவுட்.”
“என்ன?”
“உன்னோட தங்கச்சிக்கு எங்கேஜ்மெண்ட். உனக்குக் கல்யாணம் செய்யிறதைப் பத்திப் பேச்சே வரல. இந்த டைம்ல நீ அங்க போயி நின்னா, புகையாது? ஆச்சி, அதுக்குத்தான் பிளான் பண்ணுறாங்களா?”
மௌனி வார்த்தையாய் எதுவும் உரைக்காது, புன்னகையை மட்டும் பதிலாய் தந்தாள்.
இரண்டு வருடங்களிற்கு முன்பே அவளின் தந்தையை ஈன்ற அன்னையான ரெங்கநாயகி, பெயர்த்தியின் திருமணத்தைப் பற்றி பேசி இருந்தார்.
அவரிற்குத் தெரிந்த வரையில் நான்கைந்து வரன்களைப் பார்த்து, விபரங்களையும் இளையவளிற்கு அனுப்பினார். ஆனால் பாவைக்குத்தான் அப்பொழுது திருமணத்தில் ஈடுபாடு இல்லை.
“கொஞ்ச நாள் போகட்டுமே ஆச்சி.?” என அவகாசம் கேட்டு மாதங்களைத் தள்ளிப் போட்ட வண்ணமே இருக்க, மூத்தவரிற்குக் கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு பார்வைக் குறைபாடு உண்டானது. அதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம்.
தற்காலிகமாய் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை நிறுத்தி வைத்தார். வயது முதிர்வும் மேற்கொண்ட மருத்துவமும் ரெங்கநாயகியின் உடலை சோதனை செய்து, மெல்ல மெல்ல படுக்கைக்குத் தள்ளிவிட்டது. தற்போது அவர் வீட்டை விட்டு வெளியேறி, ஐந்து மாதங்களிற்கும் மேல் கடந்துவிட்டது.
அதனால் இளைய மகனான சேகரனிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தார். அவரின் மனைவி அர்ச்சனாவும் தன் பங்கிற்கு துணை சேர, வரிசையாய் மாப்பிள்ளையின் ஜாதகங்கள் வீடு தேடி வரத் தொடங்கின.
அதில் ஒன்று கூட ரெங்கநாயகிக்குத் திருப்தித் தரும் படி இல்லை.
‘தனக்கே இந்நிலை எனில், பெயர்த்தி மனம் எப்படி ஏற்கும்?’ என மௌனியிடம் எதுவும் உரைக்கவில்லை.
துவக்கத்தில் ஆர்வமாய் இருந்த மௌனியின் சிற்றன்னையும் சிறிய தந்தையும், மூத்த பெண்மணி தாங்கள் பார்த்த மாப்பிள்ளைகள் அனைவரையும் நிராகரித்துக் கொண்டே வந்ததால், அப்பணியை அப்படியே நிறுத்தி விட்டனர்.
பெரியவரிற்கோ.. தனது இளைய மகனும் மருமகளும் பொறுப்புடன் மாப்பிள்ளைப் பார்க்காது, கடமைக்காக செய்கின்றனர் என்று வருத்தம். அதனால் அதற்கு மேல், அவர்களிடம் மௌனியின் திருமணத்தைப் பற்றிப் பேசாமலேயே இருந்து கொண்டார்.
“உனக்காகவாது உடம்பைத் தேத்தி எழுந்திரிச்சு வந்துடணும் பாப்பா. அப்பதான் கல்யாணத்தை முடிக்க முடியும்!” என அவளிடம் அவ்வப்போது உரைத்துக் கொண்டுதான் இருக்கிறார் ரெங்கநாயகி.
ஆச்சியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதில் இருந்து மௌனிக்குமே, அந்த எண்ணம் தான். உறவுகள் என்று ஆட்கள் இருந்தாலும், அவரைத் தவிர வேறு எவரிடமும் உரிமையாய் பேசக் கூட இயலாது.
‘ஆச்சிக்கு அப்புறம், யாரும் இல்லையே நமக்கு? என்ன செய்யிறது.?’ என்ற வினா சமீபமாய் அவளுள் எழுந்து கொண்டே இருக்கிறது. ஆனால் பதில்தான் கிடைக்கவில்லை.
தற்போது ரஞ்சனி உரைத்ததும் தான் தோன்றியது, ‘அந்த வினாவிற்கான விடையைத் தருவதற்கு தான் ஆச்சி ஊரிற்கு அழைக்கிறாரோ?’ என.
எதுவாக இருந்தால் என்ன? மூத்தவர் கேட்டுக் கொண்டதற்காக, ‘ஊரிற்குச் சென்று ஒருநாள் கூட தங்கக் கூடாது!’ என தான் எடுத்த உறுதியில் இருந்து, இம்முறை மட்டும் சற்று விலகிக் கொள்ளும் முடிவிற்கு வந்திருந்தாள்.
‘படி.. ஒன்பது மணிக்கு டிரைன். நான் கிளம்பிட்டேன். ஃபிரிட்ஜ்ல தக்காளி சட்னி இருக்கு. நைட்டுக்கு யூஸ் பண்ணிக்கோ.’ எனத் தோழிக்குக் குறுஞ்செய்தி அனுப்பியவள் கதவை பூட்டிவிட்டுத் திரும்ப, அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான் சந்துரு.
அவனைக் கண்டதுமே ஆயாசமாய் வந்தது பாவைக்கு.
“ஹேய் மௌனி..” என்றவாறே அருகே இருந்த பைகளைக் கண்டு, “வெளியூர் எங்கேயும் போறியா.?”
“மிஸ்டர், டோண்ட் கால் மீ மௌனி.”
“அதுதான உன் பேரு? பேரைச் சொல்லிக் கூப்பிடக் கூடாதுனா, வேற எப்படி கூப்பிடுறது டியர்.?”
சட்டென்று அவளிற்குச் சினம் துளிர்த்திட, “மேனர்ஸ் இல்லையா உங்களுக்கு?”
“ஹேய் ரிலாக்ஸ், சும்மா விளையாடுனேன்.”
“உங்கக்கிட்ட விளையாடுற அளவுக்கு நான் ஒன்னும் ஃப்ரீயா இல்ல. அப்புறம், அது எனக்கு அவசியமும் இல்ல.” என உரைத்து சக்கரம் பொருத்தப்பட்டு இருந்த பெட்டியை அவள் இழுத்துக் கொண்டு செல்ல, “மௌனி, ஒன் மினிட் ப்ளீஸ்..” என்று வழியைச் சென்று மறித்தான்.
அவனின் செயலால் பொங்கி வந்த கோபத்தை பிரம்ம பிரயத்தனம் செய்து கட்டுப்படுத்திக் கொண்டவள், “என்ன?”
“நான் ஒரு வருஷமா உன்னை ஃபாலோ பண்ணுறேன், தெரியும் தான?”
‘ஆம்’ என்பதாய் தலை அசைத்தாள்.
“ஏன், எனக்கு எதுவுமே சொல்ல மாட்டிற?”
“என்ன சொல்லணும்?”
“உனக்கு என்னைப் பிடிக்கும்னு..” என முழுதாய் முடிக்காமல் இழுத்து நிறுத்த, “யார் அப்படிச் சொன்னா?”
“என்ன சொல்லுற.?
“உங்களுக்குப் புரியாத லத்தீன்லயோ ஃபிரெஞ்ச்லயோ பேசலயே நான்? தமிழ்ல தான இப்ப சொன்னேன்.?”
அவளை ஏற இறங்க பார்த்தவன், “அப்புறம், ஏன் இவ்வளவு நாளும் நீ அமைதியா இருந்த?”
“ஒரு பொண்ணு நார்மலா அமைதியா இருக்கிறது தப்பா.?”
“நான் அதைச் சொல்லல.”
“வேற எதைச் சொல்லுறீங்க?”
“என்கிட்ட மறுப்பா எதுவும் சொல்லலையே நீ?”
“நீங்க முதல்ல கேட்டீங்களா மிஸ்டர்?”
“உனக்குத்தான் நான் ஃபாலோ பண்ணுறது, தெரியுமே?”
“அது நானா தெரிஞ்சிக்கிட்டது. இப்படி ஒரு விஷயம் நடக்கிறதைக் கவனிக்காம விட்டிருந்தா, நீங்க யாருனே எனக்கு தெரிஞ்சிருக்காது இல்லையா?”
“அதான், இப்ப உனக்குத் தெரிஞ்சிடுச்சு இல்ல? நீ அமைதியா இருந்தால, உனக்கும் ஓகேவா தான் இருக்கும்னு நினைச்சேன். ஆனா, இப்ப வேற மாதிரி சொல்லுற.?”
“ஒவ்வொரு தடவையும் நீங்க என்கிட்ட பேச வரும் போது எல்லாம், நான் பொலைட்டாவே உங்களை ரிஜெக்ட் பண்ணி இருக்கேன். ஆனா, அதை நீங்கதான் புரிஞ்சுக்க மாட்டேன்னு ஸ்டபர்னா இருக்கீங்க.”
புரியாமல் விழித்தவன், “ரிஜெக்டா? ஏன், எதுக்கு? உனக்கு எப்படி இருந்தா பிடிக்கும்னு சொல்லு. நான் சேஞ்ச் பண்ணிக்கிறேன்.”
“முதல் விஷயம், எனக்கு இது பிடிக்காது.”
“எது?”
“இப்ப நீங்க சொன்னீங்களே, சேஞ்ச் பண்ணிக்கிறேன்னு. எனக்கு பிடிக்கணும்னு நீங்க ஏன் மாறணும் மிஸ்டர்? நாம சரியா தான் இருக்கோம்ங்கிற கான்ஃபிடன்ஸ் இல்லையா உங்களுக்கு.?”
அவன் என்ன மறுமொழி உரைப்பது எனப் புரியாமல் நின்றிருக்க, “இனி என்னை மௌனினு கூப்பிடாதீங்க. என்னோட பேரை சுருக்கிக் கூப்பிடுற அளவுக்கு, நீங்களும் நானும் நெருக்கம் கிடையாது. அப்புறம் ஒரு விஷயம்.. அப்படிக் கூப்பிடணும்னா, ஒன்னு நானா அதுக்குப் பர்மிஷன் கொடுத்து இருக்கணும். இல்லேனா நீங்க என்கிட்ட கேட்டிருக்கணும். இது ரெண்டுமே நடக்காதப்ப, பேஸிக் சென்ஸ் அண்ட் ரெஸ்பெட்டோட முழு பேரைச் சொல்லியே கூப்பிடுங்க.
அண்ட் ஒன் மோர் திங், வா போனு ஒருமையில பேசுற அளவுக்கு, நீங்க என் லைஃப்ல முக்கியமான ஆள் கிடையாது. சோ, ப்ளீஸ் ஞாபகம் இருக்கட்டும்.
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்.. எனக்கு உங்க மேல எந்த இண்ட்ரெஸ்ட்டும் இல்ல. அதுனால தான், நீங்க அப்ரோச் பண்ணும் போது எல்லாம், எந்த ரியாக்ஷனும் காட்டாம இருந்தேன். டோண்ட் பாதர் மீ அகைன் லேட்டர்!” என்றவள் தனது உடமைகளுடன் அங்கிருந்து நகர, சிலை போல் அசையாது நின்று இருந்தான் சந்துரு.

