Loading

அத்தியாயம் – 5

ஆதிராவும் துருவினியும் கிளம்புவதாக இருக்க, காய்கறிகள் மட்டுமின்றி ஊறுகாய், எலுமிச்சை என்று இருக்கும் அனைத்தையும் பையில் அடக்கி கொண்டிருந்தார் கஸ்தூரி.

“அத்தை இதெல்லாம் எங்களால தூக்கிட்டு போக முடியாது..” – ஆதிரா

“இங்க இருந்து சிவா கூட்டிட்டு போவான்.. அங்க உன் அப்பன் வந்துருவான்ல.?” – கஸ்தூரி

“ம்ம்ம்க்க்க்கும் என்ன சொன்னாலும் ஒரு பதிலை வெச்சிட்டு சுத்துங்க..” – ஆதிரா

“உனக்கு ஏன்டி இந்த வேலை.?” – துருவினி

“ம்ம்ம் வேண்டுதல்” என்றவள் “அக்கா மாமாக்கு போன் பண்ணி வர சொல்லுங்க நேரமாகுது..” என்று அவசரப்படுத்த, “வந்துருவாங்க.. முதல்ல நீங்க கிளம்புங்கடி” என்றாள் நிவேதா.

சிவாவும் வந்து விட, “அம்மா என்னது இது.? இத்தனை பையையும் இவங்களால தூக்கிட்டு போக முடியுமா என்ன.?” என்று பதறிட, “நல்லா கேளுங்க மாம்ஸ்.. நான் கொண்டு வந்தது ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு.. இப்ப என்னடானா ஆளுக்கு ரெண்டு பையை தூக்கிட்டு போகணும் போல..” என்றாள் பாவமாக.

அந்நேரம் எதற்கோ ரூபனும் அங்கு வர, அவனை கண்டதும் “வாயா ராசா.. இப்பதான் இந்த வீடு கண்ணுக்கு தெரிஞ்சுதா.?” என்று கஸ்தூரி குறைப்பட்டு கொள்ள, பதிலின்றி சிரித்தே சமாளித்து வைத்தான்.

“நீயும் டவுனுக்கு வர்றீயாடா.?” – சிவா

“ஆமா அண்ணே இல்லனா சித்தப்பா சாமி ஆடுவாரே..” – ரூபன்

“முதல்ல இவங்களைய பஸ் ஏத்தி விட்டுட்டு அப்பறம் தேவையானதை வாங்கிட்டு வந்தரலாம்டா..” – சிவா

அப்போது தான் ரூபன் கவனித்தான் பெண்கள் இருவரும் கிளம்பி நின்றிருப்பதையே.!! ஏன் இப்போதே கிளம்பி விட்டார்கள்.? என்ற யோசனையில் “சரி அண்ணே” என்றான்.

‘ஐ நம்ம ஆளும் வர்றான்.. பட் அவன் கூட இந்த துருவினி எருமையை இவங்க போக சொல்லிட்டா..’ என்று ஆதிராவின் மனது படபடத்து கொள்ள, அவளின் எண்ணத்திற்கு எதிர்மறையாக துருவினியோ “நான் சிவா மாமா கூட வர்றேன்” என்றிட, மனத்திற்குள் குத்தாட்டம் போட்ட ஆதிரா வெளியில் சாதாரணமாக நின்றாள்.

“ரூபன் நம்ம புள்ள தான்யா.. அவன் பத்ரமா உன்னைய கூட்டிட்டு போய்ருவான்.. பயப்படாம போ” என்று வீரச்சாமியே கூறிட, ‘ஆஹான் மாமாவே சொல்லிட்டாங்க.. ஜாலி ஜாலி’ என்று உள்ளுக்குள் மகிழ்ந்து நல்ல பிள்ளையாக அவரிடம் “ம்ம்ம் சரி மாமா.. நான் கிளம்பறேன்..” என்று விடை பெற்றாள்.

அனைவரிடமும் விடைப்பெற்று கிளம்பிட, ஆடவனுக்கும் சரி பெண்ணவளுக்கும் சரி இனம் புரியாத பேரின்பம்.. ரூபனுக்கு எப்படியோ ஆதிராவின் மனதில் பலவகையான உணர்வுகளின் சாரல் துளிகள்..

அதுவும் மேடு பள்ளம் வரும் போதெல்லாம் அவனை உரசும் அந்நொடிகள் மழை நேரங்களில் எப்போதாவது வானில் மின்னும் மின்னலை போல் அவளின் மேனியை பதம் பார்த்தது மின்சாரமாக.!!

கண்ணாடி வழியாக அவனின் முகத்தை ஆதிரா காண, அவள் பார்ப்பது ரூபனும் அறிந்தாலும் சாலையில் மட்டுமே விழிகளை பதித்திருக்க, ‘இவங்க பேச மாட்டாங்களா.? இல்லயே இவங்க நல்லா தானே மாமாகிட்ட எல்லாம் பேசிட்டு இருந்தாங்க.. அவங்க பேசலனா என்ன.? நம்மளே பேசுவோம்.. அய்யய்யோ என்ன பேசறது.?’ என்று இவள் தீவிரமாக யோசித்திருந்த நிமிடங்களில் பேருந்து நிலையத்திற்கே வந்து விட்டிருந்தான் ரூபன்.

‘அதுக்குள்ள வந்துட்டோமா.?’ என்று நம்ப முடியாமல் சுற்றியும் பே வென்ற ரீதியிலே ஆதிரா காண, அவளின் செய்கையில் புன்னகை பூவாய் அவன் மலர்ந்து “என்னமா.? இதுதான் பஸ் ஸ்டேண்டு.. முன்னபின்ன பார்த்தது இல்லயா.?” என்று கேட்டான்.

ஙே வென விழித்த ஆதிரா “பார்த்துருக்கேன்..” என்றாள் ஒற்றை வரியில். அதற்கு மேல் எதுவும் பேசாத ரூபன் அமைதியாக இருக்க, ‘ஐஐஐஐஐ என் ஆளு என்கூட பேசிட்டான்.. பேசிட்டான்.. அவனே பேசிட்டான்..’ என்று குதூகலித்தாள் மனதினுள்.!!

அவனிடம் பேச்சை வளர்க்கவே “இன்னும் மாமாவை காணோம்.?” என்ற ஆதிரா சாலையை பார்க்க, சாலையில் இருந்து கவனத்தை மீட்டு “நானும் உன்கூட தான்மா இருக்கேன்.. வருவாங்க வராம எங்க போக போறாங்க.?” என்றான் கனிவாக.

“ம்ம்ம்ம்” என்று தலையசைத்தவள் ‘யோவ் மாமா நீ மெதுவாவே வாயா.. எப்படியும் மாட்டு வண்டியை ஓட்டறதை போல வண்டியை உருட்டிட்டு வருவேனு எனக்கும் தெரியும்’ என்று நினைத்தாள் மைண்ட் வாய்ஸில்.!!

நினைவு வந்தவளாக “ஆமா உங்க பேரு என்ன.?” என்று கேட்டவளின் மனதே அவளை காறி துப்பியது. “தெரியாதா.?” என்று சாதாரணமாக அவன் கேட்க முயன்றாலும் சற்று ஏமாற்றத்துடனே வெளி வந்தது அவனின் குரல்.

“நீங்க சொன்னா தான் என்னவாமா.?” – ஆதிரா

“எனக்கு சின்ன வயசுல வெச்ச பேரு தான்மா இன்னும் இருக்கு.. புதுசா மாத்திக்கலாம்னு பார்த்தா விட மாட்டிங்கறாங்க..” – ரூபன்

“ஸ்ஸ்ஸ்ப்ப்பா என்னால முடில.. சரி என் பேரு தெரியுமா.?” – ஆதிரா

“ஓஓஓஓ தெரியுமே..” – ரூபன்

அவனை நம்பாத பார்வை பார்த்து “என்னனு சொல்லுங்க பார்க்கலாம்..” என்று இடுப்பில் கை வைத்து ஆதிரா கேட்க, உள்ளுக்குள் சிரித்து “திரா.. ஆதிரா..” என்றான் பாட்ஷா ஸ்டைலில்.

‘ஆத்தி’ என்று வாயில் கை வைத்து கொண்டாள் ஆதிரா அதிர்ச்சியில்.!!! “எப்படிங்க.? எப்படி.?” என்று திகைப்புடனே வினாவை அவனிடம் எழுப்ப, சின்ன சிரிப்புடன் “காலைல உங்க பேரை தான் உங்க மாமா ஏலம் விட்டுட்டு இருந்தாரே” என்று கண்சிமிட்டினான்.

சட்டென்று நாக்கை கடித்து தலையை குனிந்தவளுக்கு வெக்கம் பிடுங்கி தின்றது. அவளின் பாவனைகளில் அவளிடமே கட்டுண்ட ரூபனுக்கு புசுபுசுவென உப்பி இருந்த பெண்ணவளின் கன்னத்தை கிள்ளி கொஞ்ச வேண்டும் போல் இருந்தது.

அதற்கெல்லாம் சாத்தியக்கூறுகள் இல்லை என்பதை நன்றாகவே அறிந்த அவன் “என்னமா இன்னும் உங்க மாமாவை காணோம்.? வண்டியை ஓட்டிட்டு வர சொன்னா உருட்டிட்டு வர்றாங்க போல..” என்றான் அவளை மீட்டெடுக்கும் பொருட்டில்.!!

“வருவாங்க.. நீங்க பேசாம நில்லுங்க..” – ஆதிரா

“நான் நிற்கலமா.. வண்டில உட்காந்துருக்கேன்..” – ரூபன்

“ப்ச் சரி அப்படியே உட்காருங்க..” – ஆதிரா

“நான்…” – ரூபன்

“நீங்க உட்காரல.. படுத்துருக்கீங்களா.?” – ஆதிரா

“ரொம்ப அசதியா தான் இருக்கு.. நானும் படுக்கலாம்னு பார்க்கறேன் விட மாட்டிங்கறாங்களே..” – ரூபன்

“அப்ப ரெண்டு பெட்சீட் வாங்கி தர்றேன்.. படுத்து தூங்குங்க..” என்றவள் நாக்கை துருத்தி பலிப்பு காட்ட, “ம்ம்ம்ம் ப்ரீ பெட்சீட்டை யாராவது வேணாம்னு சொல்லுவாங்களா.? வாங்கி குடுங்க” என்றான் புன்னகைக்கீற்றுடன்.

இதில் விழுந்த கன்னங்குழியை வெகுவாக ரசித்த ஆதிரா ஒரு வேகத்தில் “காலைல உங்க முகம் ஒரு மாதிரி இருந்துச்சு.. ஏதாவது பிரச்சனையா.?” என்று கேட்டு விட்டாள் உரிமையுடன்.

என்னது.? என்ற ரீதியில் நெற்றியை சுருக்கிய ஆடவன் அவளை காண, அதன் பின்பு தான் என்ன கேட்டோம் என்பதை உணர்ந்தவள் அவன் தன்னை தவறாக நினைத்து விடுவானோ.? என்ற பயத்தில் பார்வையை தளர்த்தி கொண்டாள்.

ஆனால் ரூபனோ சாதாரணமாக முகவாயில் கை வைத்து “எப்படி இருந்தேன்மா.. ஒரு வேளை என் முகமே அப்படி தானோ.?” என்று யோசிப்பது போல் பாவ்லா செய்து கேட்டான் உன் வினாவிற்கு நான் கோவப் படவில்லை என்பதை போல்.!!

இதில் தான் போன உயிரே திரும்பி வந்ததை போல் பெருமூச்சு விட்ட ஆதிரா “நேத்து பார்த்ததுக்கும் இன்னைக்கு பார்க்கறதுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு” என்று விழிகளை உருட்ட, எதிர்வினையின்றி பெரும் அமைதி காத்த ரூபன் பின்பு “ஓஹோ நீங்க எப்ப என்னைய பார்த்தீங்க.?” என்று பேச்சை மாற்றினான்.

அவன் பேச்சை மாற்றுவதை நன்றாக உணர்ந்த ஆதிரா இதற்கு மேல் வற்புறுத்தி கேட்க என்ன உரிமை இருக்கு.? என்று நினைத்து “தெரியலயே..” என்றதோடு முடித்து கொள்ள, தாடையை தடவியபடி “சரிமா சரிமா” என்றவனின் குரலில் சிறிது கேலி நிறைந்து இருந்தது.

தன்னை கண்டு கொண்டான் போலும்.. அரும்பும் புன்னகையை தடுக்க வழியின்றி திரும்பி நின்ற ஆதிராவின் விழிகளில் தூரத்தில் சிவா வருவது தெரிந்தது.

சட்டென்று திரும்பி “நான் சொல்றேனு தப்பா நினைக்க வேண்டாம்.. வாழ்க்கைல பிரச்சனை வர்றது சகஜம் தான்.. அதற்காக தளராம அடுத்தது என்னனு தான் யோசிக்கணுமே தவிர அந்த பிரச்சினையை திருப்பி திருப்பி யோசிக்கறதுல எந்த பிரயோஜனமும் இல்லை..

எக்ஸாம்பிள்.. நம்மளைய விட்டு ஒரு பொருள் போய்ருச்சுனா அதைய ஏன் போக விட்டோம்னு யோசிக்காம அதைய விட பெஸ்ட்டா நம்மகிட்ட ஒன்னு வரும்னு பாசிட்டிவ் நிலைல யோசிங்க.. வாழ்க்கை ரொம்ப அழகாகும்..” என்றாள் மெல்லிய குரலில்.

அவளின் வார்த்தைகள் உண்மையென்றாலும் மறுபடியும் மறுபடியும் ஏமாற்றத்தை கண்டிருந்த ஆண்மகனோ “நல்லவங்களா வாழ்ந்தா நல்லவங்களா மட்டும் தான் வாழ முடியும்.. ஆனா நல்லாவே வாழ முடியாதுமா..” என்ற ரூபனின் வார்த்தையில் ஏமாற்றத்தின் சாயல்கள்.

இவன் என்ன தான் சொல்கிறான் என்ற சிந்தனையுடன் ஏறிட்டாள் ஆதிரா. பின்பு “எனக்கு ஒன்னும் புரியல.. முடிஞ்சது முடிஞ்சதாகவே இருக்கட்டும்.. உங்க ஸ்மைல்.. அண்ட் கன்னத்துல விழுகற அந்த கன்னங்குழி உங்களுக்கு ரொம்ப க்யூட்டா இருக்கும்.. அதே மாதிரி வாழ்க்கையும் அழகா இருக்கணும்னு நினைக்காதீங்க..

நீங்க சிரிக்கறப்ப விழுகற கன்னங்குழி போல வாழ்க்கைலயும் கஷ்டங்களா மேடுபள்ளம் வர தான் செய்யும்.. உங்க சிரிப்புக்கு அந்த கன்னங்குழி எவ்வளவு அழகோ உங்களுக்கு வர்ற கஷ்டங்களும் உங்க வாழ்க்கையை இன்னும் இன்னும் அழகாக்கும்..

நான் விளையாட்டா எல்லாம் சொல்லலப்பா.. எனக்கு உங்க ஸ்மைலும் கன்னங்குழியும் ரொம்ப பிடிச்சிருக்கு.. ஐ லைக் இட்.. நீங்க என்னைய பத்தி என்ன நினைச்சாலும் ஐ டோண்ட் கேர்..” என்றவள் அமைதியாக திரும்பி நின்றாள்.

சிவாவும் வந்து சேர, “மாம்ஸ் வண்டியை ஓட்டிட்டு வந்தீங்களா.? இல்ல தள்ளிட்டு வந்தீங்களா.?” என்று ஆதிரா கிண்டலடிக்க, காலந்தாழ்த்தி துருவினியோ “எனக்கு என்னமோ மாட்டு வண்டில வந்த பிலீங்கு.. பேசாம நானே இவங்க கூட வந்துருக்கலாம்..” என்றாள் நொந்து போய்.

“மிதமான வேகம் தான் மிக நன்றுனு படிச்சது இல்லயா.?” என்ற சிவாவை இருவரும் கொலைவெறியில் முறைக்க, ஒருபடி மேல் சென்று துருவினியோ “அந்த வரியை எழுதுனவன் மட்டும் என் கைல கிடைச்சான் அவ்வளவுதான்..” என்றாள் கடுப்பாகி.

ம்ம்ம்க்க்க்கும் என்று முகத்தை சுருக்கிய சிவா “சரி கிளம்புங்க” என்றிட, “என்ன நக்கலா பண்றீங்க.? ஒழுங்கா இந்த பையை தூக்கிட்டு வந்து எங்களைய பஸ் வெச்சு விட்டுட்டு போங்க” என்று கூறினாள் ஆதிரா.

அக்கறையுடன் ரூபனோ “எதுக்கு அண்ணே இத்தனை பை.? அவங்க எப்படி தூக்கிட்டு பஸ் ஏறுவாங்க.?” என்று கேட்க, அவனின் பேச்சை ஆமோதித்து துருவினியும் “நல்லா கேளுங்கபா.. நம்ம ஊரு பஸ்ல சும்மா போறதே பெருசு.. இதுல இது வேறயா.?” என்றாள் பாவமாக.

ஆதிராவை ரசித்த கண்கள் ஏனோ துருவினியை பாசத்துடன் தான் மொய்த்தது.. “வாங்கமா நானும் வர்றேன்” என்று வண்டியை விட்டு இறங்கிய ரூபன் துருவினியின் கையில் இருந்த ஒரு பையை வாங்கி கொள்ள, “அச்சோ வேணாம்ங்க” என்று பதறி விட்டாள் ஆதிரா.

“அட வாங்கமா” என்ற ரூபன் துருவினியுடன் முன்னே நடக்க, “மாம்ஸ் இந்தாங்க” என்று சிவாவின் கரங்களில் இரண்டு பையையும் திணித்த ஆதிரா கையை வீசி கொண்டு ஹாயாக நடந்தாள்.

‘கஷ்ட காலம்டா சிவா’ என்று வாய்விட்டு புலம்பியவன் வேறு வழியின்றி அவர்களுடன் சென்றான்.. அவர்களை பஸ் ஏற்றி விட்டு “பார்த்து போங்க.. போனதும் போன் பண்ணுங்க..” என்று சிவா கூறிட, “ம்ம்ம்ம் சரிங்க மாமா” என்ற துருவினி “ஆமா உங்க பேரு என்னனு சொல்லலயே.?” என்று கேட்டாள் ரூபனிடம்.

ஆதிராவை ஒரு வினாடி பார்த்து பின்பு “அபி ரூபன்” என்றவனின் விழிகள் மீண்டும் பெண்ணவளையே கண்டது. உள்ளுக்குள் சிரித்த ஆதிரா வெளியில் அவனை பார்க்காதது போல் இருந்தாலும் பெயரை அறிந்ததும் ‘அபி.. அபி ரூபன்.. அபி.. அபி..’ என்று பல தடவை ஆண்மகனின் பெயரையே பலவிதமாக உச்சரித்தாள்.

பின்பு அவனே “உங்க பேரு.?” என்று துருவினியிடம் கேட்க, “சோ சேடு.. என் பேரு என்னனு தெரியாதா.? இந்த அவமானம் உனக்கு தேவையா துருவினி..” என்று தன்னை தானே விரல் நீட்டி கேட்டு கொண்டதை கண்டு ஆடவர்கள் இருவரும் சிரிப்பை சிதற விட்டனர்.

ரூபனுடன் பேசியது சிறிது நேரம் தான் என்றாலும் துருவினிக்கும் அவனை பிடித்திருந்தது.. “பார்த்து போங்க.. நாங்களும் கிளம்பறோம்..” என்று சிவா அவர்களிடம் விடைபெற, ஆதிராவை பார்த்து விழிகளாலே ‘கிளம்பறேன்’ என்பதை போல் தலையசைத்தவன் துருவினியிடம் “பார்த்து போங்கமா” என்றாலும் அவனின் பார்வை என்னமோ ஆதிராவிடமே இருந்தது.

புன்னகைத்து கொண்டாள் ஆதிரா.. “மாமா நீங்களும் பார்த்து போங்க” என்று சிவாவிடம் கூறுவது போல் ரூபனிடம் கூறிய ஆதிரா அவனை மனக்கண்ணில் நிறைத்து கொண்டாள்.

“அடி அவங்களைய உனக்கு தெரியுமா.?” என்று ஆர்வத்துடன் துருவினி கேட்க, “எனக்கு எப்படிடி தெரியும்.?” என்று வாய்மொழியாக கூறினாலும் “தெரிஞ்சாலும் உனக்கு சொல்ல மாட்டேன் பே” என்று பலிப்பு காட்டியவள் கண்மூடி படுத்து கொண்டாள்.

வண்டியை எடுத்த ரூபனுக்கு ‘உங்க ஸ்மைலும் கன்னங்குழியும் ரொம்ப பிடிச்சிருக்கு.. ஐ லைக் இட்..’ என்று ஆதிரா கூறியது ஞாபகம் வர, கண்ணாடியில் தன் முகத்தை ஏறிட்டான். இத்தனை வருடங்களாக ரசிக்காத கன்னங்குழியை இன்று கண்டு தன்னை தானே ரசித்து கொள்கிறான். சிவாவின் சத்தம் கேட்டதும் “கிளம்பலாம் அண்ணே” என்றவனின் மனது இப்போது லேசாகி இருந்தது.

கண்மூடி தூங்குவதை போல் நடித்திருந்த ஆதிராவுக்கும் ரூபனின் நினைவலைகள் தான்.. ‘நான் பேசுனதை தப்பா நினைச்சிருப்பாங்களோ.? கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டமோ.?’ என்று பலவாறான சிந்தனை சுழலில் சிக்கி தவிந்திருந்தாள்.

‘நினைச்சா நினைச்சிட்டு போறாங்க.. நான் உண்மையை தான் சொன்னேன்.. இது தான் நான்..’ என்று தன்னை சமன்படுத்தி கொண்டவள் உண்மையிலே தூக்கத்தில் ஆழ்ந்தாள்.

பூஜைக்கு வாங்க வேண்டிய அனைத்தையும் வாங்கி வண்டியில் ஏற்றி விட்டு ‘ஹப்பாடா’ என்று பெருமூச்சு விட்ட இருவரும் கிளம்பினர்.. இப்போதும் சிவாவின் வீட்டிற்கே இருவரும் செல்ல, வந்ததும் சிவா உள்ளே சென்று விட்டான்.

வீரச்சாமியுடன் பேசிய ரூபன் போன் அழைப்பு வந்ததை கண்டு தள்ளி நின்று பேசிட, அப்போது எதிர்த்த வீட்டில் இருந்து கஸ்தூரியின் வார்த்தை நன்றாகவே இவனுக்கும் கேட்டது.

“எல்லாம் சம்பாதிக்கற திமிரு.. வூட்டுல இருந்த வரைக்கும் பொட்டி பாம்பா இருந்துட்டு வேலைக்கு போனதும் யாரையும் மதிக்கறது இல்லை.. இத்தனைக்கும் அவ ஆத்தா அப்பனையே மதிக்க மாட்டிங்கறா..

இஷ்டத்துக்கு ஊரு சுத்தறா.. அந்த போனுல எனத்த பாக்கறாளோ எந்நேரமும் அதுலயே கெடக்கறா.. மெட்ராஸூல இவ வேலை தான் பாக்கறாளா இல்ல எவன் கூடயோ சுத்திட்டு கிடக்கறாளானு யாரு கண்டா.? ஆனா ஒன்னு எவனையாவது இழுத்துட்டு ஓட போறா பாரு.. அது மட்டும் நிச்சயம்..” என்று பக்கத்து வீட்டு பெண்மணியிடம் உரைத்தார்.

இதற்கு அவரும் ஏதோ கேட்க, இவரும் ஆதிராவின் அன்னை, தந்தையை பற்றியும் கஸ்தூரி குறை கூறிட, அப்பேச்சும் விடாமல் தொடர்ந்தது. இதற்கு மேல் கேட்கும் திரணியின்றி சட்டென்று வேறுபுறம் நகர்ந்து விட்டான் ரூபன்.

‘ச்சை என்ன உலகம் இது..’ என்று நினைத்தவனுக்கு கடுப்பாக இருந்தது. கள்ளங்கபடமின்றி துள்ளி திரிந்த பெண்ணவளின் சிரிப்பும் குறும்பும் அவன் மனக்கண்ணில் தோன்றிட, ‘என் ஆதி.. என் ஆதி ரொம்ப நல்லவ தான்.. மனசுல பட்டதை பேசுனா அது திமிரா.? இவங்க இப்படி பேசறாங்கனு அது உண்மையாகிராது..’ என்று உறுதியாக நினைத்து கொண்டான் மனதினுள்.!!

இத்தனை வருடங்கள் கஸ்தூரியின் மேலிருந்த மதிப்பும் சற்று குறைந்து போனது.. முன்னால் ஒன்றும் பின்னால் ஒன்றும் பேசும் உலகம் இது.. வாய் இருக்கின்றது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா.? என்று நினைத்தவன் அங்கிருக்க பிடிக்காமல் சிவாவிடம் கூறி விட்டு புறப்பட்டு விட்டான்.

அழகிய பூகம்பம் தொடரும்..

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்