Loading

சபதம் – 22

 

விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

(குறள் – 775) 

 

பொருள் :

பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

 

பதினாறாம் நூற்றாண்டு,

 

அராவள்ளி மலைத்தொடர், பல யுகங்களின் இரகசியங்களைத் தாங்கிய ஒரு மாபெரும் வரலாற்றின் முதுகெலும்பைப் போல் அகன்று வான்வெளி முழுவதும் பரந்து கிடந்தது.

அதன் அடர்ந்த காடுகள் இராஜ்யங்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் சான்றாக, பல மௌனக் கதைகளைக் காற்றில் கிசுகிசுத்துக் கொண்டிருந்தன.

 

பனிக்கவசம் போர்த்திய சிகரமும் காற்றில் பைன் மரத்தின் மணமும், எஃகின் குளிர்ந்த வாசனையும், பல மர்மங்களைத் தாங்கிய நிழலாக நின்றிருந்தது.

 

வடக்கில் மலைக்கருவறையில் செதுக்கப்பட்ட காவலரின் உருவம் போல அதிவார் உயர்ந்து நின்றது. தெற்கில் சிவப்பு மணற்கல்லால் எழுந்த பெருமையின் ராஜ்ஜியமாக ராணா பரந்து விரிந்திருந்தது.

 

இரண்டு இராஜ்யங்கள். ஒரு மலை. ஒரு விதி.

 

நூற்றாண்டுகளாக மக்களின் ஒரே நம்பிக்கை, “அராவள்ளி நிலைத்திருக்கும் வரை, ராஜ்புதானா நிலைத்து நிற்கும். அராவள்ளி வீழ்ந்தால், பாரதம் வீழும்.”

 

அந்தக் காலை வேளை, ராணாவின் பயிற்சி மைதானம் எஃகின் ஒலியால் நிரம்பியிருந்தது.

இளவரசர் வீர் விக்ரம அதிவார், ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக புயலைப் போல் சுழன்று, கடலைப் போல் கொந்தளித்து, அதற்கு ஏற்றாற்போல் மனக் கட்டுப்பாட்டுடன் வாளைச் சுழற்றியவனின் வேகம் காற்றைக் கிழித்துக்கொண்டு சென்றது. அவனது ஒவ்வொரு அசைவும் பிறப்பிலேயே நான் போர்வீரன் எனச் சொல்லாமல் சொல்லிக் காட்டியது.

 

அவனுக்கு எதிரே சிரித்தபடி வீரின் தாக்குதலைத் தவிர்த்த இளவரசர் ரணசூர் ருத்ரப்ரதாப் ராணா, ஆறடி உயரம் ஆனால் மெல்லிய உடல் வாகு கொண்டவன். நரியின் கூர்மையும்
காற்றின் சுறுசுறுப்பையும் தன்னகத்தில் கொண்டவன். வில்லின் நாணல் போல வளைந்து கொடுக்கும் திறமைசாலி. மின்னலைப் போல் மறைந்து தாக்கும் கொரில்லா தாக்குதலில் தேர்ந்தவன். காலடி சத்தமே கேளாமல் காற்றைப் போல் சுழன்றடிக்கும் வித்தைக்காரன்.

 

வீர் இடியெனத் தாக்கினால், ரணசூர் காற்றென விலகுவான். வீரன் வலிமையால் வெல்ல முயன்றால், ரணசூர் புத்தியால் வெல்ல முயல்வான்.

 

வீர் எப்போதும் விறைப்புடன் போரிடுவான். போர்க்களத்தில் அவன் கவனம் முழுதும் எதிரியைச் சுற்றியே இருக்கும். ரணசூர் முகத்தில் நிரந்தர சிரிப்பு தேங்கியிருக்கும் ஆனால் அந்த சிரிப்புக்குள் ஒரு கணக்கு மறைந்திருக்கும்.

 

வீர் விக்ரமனின் வாள் அவனைப் போல நீண்டு தடித்திருக்கும். அவன் வாளின் குறி நிதானமாகவும், இலக்கில் இருந்து பிசகாமல் சரியாகத் தாக்கும்.

 

ரணசூரின் வாள் நீண்டதோ, கனமானதோ அல்ல. மெல்லிய, நெகிழ்வான, அவனின் உடலைப் போலவே வேகத்திற்காகப் பிறந்த ஆயுதம். போர்க்களத்தில் அவன் வாளுடன் நடனம் புரிவான். அவன் அசைவுகள் கவிதையாகவும், தாக்குதல்கள் இசையாகவும், வாள் வீச்சை கலையாகவும் நினைத்துப் போரிடுபவனை எதிரிகள் லேசாக எடைபோடுவர். அதுவே அவர்களின் தோல்வியாக முடியும்.

 

மொத்தத்தில் வீர் ஒரு கோட்டை என்றால் ரணசூர் ஒரு காற்று.

 

அப்படிப்பட்ட இருவரின் வாள் வீச்சு, போட்டியாக மட்டுமல்ல, அதில் சகோதரத்துவம், விளையாட்டும் கலந்து இருந்தது.

 

“இன்று உனது வாளின் வேகம் குறைந்திருக்கிறதே, வீர்” என்று ரணசூர் சிரித்தான்.

“ஒருவேளை நீ வாள் வீசக் கற்றுக்கொண்டாயோ என்னவோ?” என்று வீர் பதிலளித்தான்.

 

இருவரின் வாள்கள் இணைந்தன, பின்பு ஆக்ரோஷமாய் மோதிக்கொண்டன. இளவரசர்களின் கண்கள் சந்தித்துக்கொள்ள, அதில் இலகுத்தன்மை இருக்க மெல்ல இருவரும் புன்னகைத்துக் கொண்டனர்.

 

இவர்களின் வாள்வீச்சைப் பார்த்துக் கொண்டிருந்த வீரர்கள், “இவர்கள் இருவரும் ஒன்றாக நின்றால், எந்த சாம்ராஜ்யமும் அராவள்ளியைத் தொட முடியாது” என்று தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.

 

ராணா அரண்மனைத் தோட்டம் அந்த விடியற்காலையில் பனித்துளிகளால் ஒளிர்ந்தது. இளவரசி யசோதரா பனித்துளி படர்ந்த புல்வெளியில் காலணியின்றி நடந்து கொண்டிருந்தாள்.

 

அவளின் நீண்ட கருநாகக் கூந்தல், நதிபோல அவளின் வளைவுகளில் பாய்ந்து சென்று பின்னெழிலை மறைத்து நின்றது. அவளின் மையிட்ட கண்கள் மையலுடன் தோட்டத்து மலர்களை வருடிச் சென்றாலும், யசோதராவின் செவிகளில் ‘கிணீங் கிணீங்’ என்று கேட்ட வாளின் சத்தத்தில் சிறு புன்னகை உதடுகளில் மலர்ந்தது.

 

அவளது சகோதரனும், அதிவார் இளவரசன் வீர் விக்ரமனும் இப்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ளதை யசோதரா முன்பே அறிந்திருந்தால். அதிலும் அவளவனின் வாளின் ஒலி கூட அவளால் பிரித்தறிய முடியும். அந்தளவுக்கு யசோதராவின் மனதில் கலந்திருந்தான் இளவரசன் வீர் விக்ரம அதிவார்.

 

“இளவரசியின் இந்த புன்னகைக்கு என்ன காரணமோ?” என்று தாசி கேட்க, அதைக்கேட்ட யசோதரா மெதுவாகச் சிரித்தாள். “சில சிகரங்களின் அழகு இதயத்தை அதிகம் ஈர்க்கின்றது” என்றவளின் பார்வை அரவள்ளி மலைத்தொடரை தொட்டு மீண்டது.

 

“அது என்ன சோட்டி, சில சிகரங்கள் என்று சுருக்கிவிட்டாய், இந்த பாரத கண்டத்தின் பல சிகரங்கள் இதயத்தை மட்டும் அல்ல இறையருளும் தரவல்லது” என்றபடி தோட்டத்தின் நுழைவாயிலில் ரணசூர் என்றும் நீங்கா புன்னகையுடன் நின்றிருந்தான்.

 

தமையனின் குரல் கேட்டதும் சிரிப்புடன் திரும்பிய யசோதராவின் விழிகள் அவன் அருகில் தோள்களில் வியர்வை மின்ன நின்றிருந்த வீரை பார்த்ததும் நாணம் கொண்டது. இருவரும் பயிற்சியை முடித்து அரண்மனையை நோக்கி செல்லும் சமயம் தோட்டத்தில் நின்றிருந்த யசோதராவின் பேச்சு காதில் கேட்டதும், வழக்கம் போல் பதில் சொல்லியபடி அங்கு வந்தனர்.

 

“எனக்கு தெரிந்த சிகரத்தை பற்றி மட்டுமே என்னால் பேசமுடியும் பய்யா” என்றவளின் பேச்சை ரசித்து கேட்ட வீர், “பாரத கண்டத்தின் சக்தி வாய்ந்த ராஜ்யத்தின் இளவரசி இவ்வாறு பேசுவது நியாயமா?” என்றான்.

 

“ஏன் கரஹ் அதிவாரின் இளவரசருக்கு, அதிவார் சிகரத்தை போற்றவில்லை என்று வருத்தமோ?” என்று கேலிப்பேச ரணசூரனும் சேர்ந்து சிரித்தான்.

 

“ஆஹா அந்த வருத்தமும் உண்டு தான், ஆனால் அசகாய சூரன் ராணா குல இளவல் ரணசூர் ருத்ரப்ரதாபின் உடன் பிறப்பு, அரவள்ளியின் முடிசூடா ராணி, இளவரசி யசோதரா ஷ்யாமளிக்க ராணா அவர்கள் வேண்டினால் சிகரங்களை கைப்பற்ற ராணா ராஜ்யத்தையே தங்களது தந்தை போருக்கு உடன்படுத்துவாரே” என்றான் வீர்.

 

அதைக்கேட்டு நகைத்த ராணா, “சபாஷ் சரியான கேள்வி நண்பா” என்றவனை முறைத்த யசோதரா, “இளவரசர் ராஜபுத்திர இளவரசிகள் ஆண்களை நம்பி இருப்பவர்கள் என்று கேலிப்பேசுகிறார், அதற்கு நீயும் சிரிக்கிறாயா பய்யா?” என்றதும் ஆண்கள் இருவரும் அதிர்ந்து பார்க்க, யசோதரா தனது சிரிப்பை இதழுக்குள் அடக்கி கொண்டாள்.

 

“ஐயயோ இளவரசி தவறாக நினைத்து விடீர்கள், ராஜபுத்திர இளவரசிகள் வீரம் இந்த பாரத நாடே அறிந்த ஒன்று. அதை நாங்கள் கேலி பேசுவோமா? தாங்கள் இட்ட கட்டளையை தலைமேற்கொண்டு செய்து முடிக்க நாங்கள் அனைவரும் இருக்கும் போது, வீர ராஜபுத்ரிகளை போருக்கு அனுப்புவது உசிதமாகுமா?” என்று சமாளித்தவனுக்கு ‘ஆமாம்’ சாமி போட்ட தமையனையும் கண்ட யசோதரா குலுங்கி சிரித்தாள்.

 

அதுவரை பதட்டத்தில் நின்றிருந்த இளவரசர்கள், யசோதராவின் சிரிப்பில் உண்மை புரிய, அவளை பார்த்து அசடு வழிந்தபடி நின்றனர்.

 

பேச்சை மாற்ற விரும்பிய ரணசூர், “இவ்வளவு காலையில் தோட்டத்தில் என்ன செய்கிறாய்?” என்றவனை தலை சாய்த்து பார்த்தவள், “நான் தினம் தோட்டத்தில் உலா வருவது வழக்கம், தங்கள் பயிற்சி நேரம் இன்று சுருக்கமாக முடிந்தது தான் அபூர்வம்” என்றாள்.

அதனை கேட்ட வீர், ஒற்றை புருவத்தை தூக்கி கிண்டலாக பார்த்தவன், “ஓஹ் அப்போ நமது பயிற்சி நேரம் உன் தங்கைக்கு பரிச்சயம் போலும்” என்றதும் தான் யசோதராவுக்கு வீரின் கண்ணசைவு புரிந்து அண்ணனை கலவரத்துடன் பார்த்து நின்றாள்.

 

சிறு வயதில் இருந்து வாய் போர் செய்யும் யசோதர மற்றும் வீரின் பேச்சு எந்த சந்தேகத்தையும் கொடுக்கவில்லை, அதனை நிம்மதியுடன் பார்த்த யசோதரா, “யசோதரா அறியாமல் ராணா குண்ட் அரண்மனையில் காற்று கூட நகராது நண்பா!” என்றவன் யசோதராவிடம், ” அதை விடு யசோ, இன்று நான் வீரை வாள் பயிற்சியில் தோற்கடித்துவிட்டேன். அவன் ஒத்துக்கொள்ள மாட்டான், ஆனால் உண்மை அதுதான்.”

 

அதைக்கேட்ட வீர், “ஓஹ் ஹோ அப்படியா? தேவி தாங்கள் சொல்லுங்கள், உங்கள் தமையன் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்களா?” என்றதும் யசோதரா சிரித்தாள்.

“நான் யார் சொல்வதையும் நம்புவதாக இல்லை. ஆனால்…” என்று இடைவெளியிட்டவளை ஆண்கள் இருவரும் ஆர்வமாக பார்க்க, “உங்கள் இருவரில் யார் உண்மையைச் சொல்கிறார்கள் என்று என்னால் எளிதாக கண்டுகொள்ள முடியும்.”

 

அதைக்கேட்ட வீர் மீண்டும் ஒரு ரகசிய கண் சைகை செய்ய, அதனை ஓரப்பார்வையில் கடந்தவளின் ரகசிய புன்னகை வீரின் இதயத்தை படபடக்க செய்தது. அவனின் பார்வை மாற்றத்தை புரிந்து கொண்ட யசோதரா நாணத்தில் தலைகுனிந்து நின்றாள்.

தோட்டத்தில் மூவரும் நின்ற அந்த நிமிடம் அராவள்ளி மீது வரும் புயலுக்கு முன் தோன்றும் அழகான அமைதி என்பது அவர்களுக்குத் தெரியவாய்ப்பில்லை.

 

அரவள்ளி மலைத்தொடரின் அடிவாரத்தில் இருக்கும் ஹூன் வம்சத்தின் பழமையான அரண்மனையில், குலத்தின் மூத்தவர் ஷம்ஷத் கான் கல்பலகையில் பண்டைய குறிகளைத் தடவிக் கொண்டிருந்தார்.

 

அவர் சத்தியங்களின் காப்பாளர், வம்சங்களின் காவலர்,நூற்றாண்டுகளின் சுமையைத் தாங்கியவர். மெஹ்ருண்ணிஷாவின் தந்தையை பெற்றவர்.

 

அந்தநேரம் அரண்மனைக்குள் ஓடிவந்த ஒற்றன், “ஹுசூர்” என்று கிசுகிசுத்தவன், “ரன்த்தம்போர் கோட்டை முகலாயர்களிடம் அடிபணிந்து விட்டது. மகாராஜா சுர்ஜன் ஹாடா பற்றி இன்னும் தகவல் இல்லை” என்றதும் ஷம்ஷத்தின் கைகள் அசையாமல் நின்றது.

 

“அடுத்து முகலாயர்களின் கண் அரவள்ளி நோக்கி திரும்பும். மகாராஜா அதிவார் மற்றும் ராணாவை சந்திக்க நேரத்தை குறித்துக்கொள்” என்றவர் ஒருநிமிடம் நிதானித்து, “இரண்டு வம்சத்தின் இளவல்களை பாதுகாக்க வேண்டும். அதுவே நமது இறுதி குறிக்கோள்” என்றதும் ஒற்றன் நடுங்கினான்.

 

“ஹுசூர் ரண்தம்போர் வீழ்ந்ததால், ஆரவள்ளி வீழும் என்று நினைக்கிறீர்களா? அரவள்ளி மனிதன் உருவாக்கிய கோட்டை போல் அல்லவே, இது இறைவன் இயற்கையாய் உருவாக்கிய கோட்டை அல்லவா?” என்றவனுக்குப் பதிலாய், “அரவள்ளி இயற்கைக் கோட்டை மட்டுமல்ல, தெற்கை வடக்கோடு இணைக்கும் வணிக பெரு வழி. அக்பர் இதனை கைப்பற்றாமல் விடமாட்டான்” என்ற ஷம்ஷத் கான் மலைகளை நோக்கிப் பார்த்தார்.

 

அவர் உதடுகள் மெல்ல, “அராவள்ளி நிலைத்திருக்கும் வரை, ராஜ்புதானா நிலைத்து நிற்கும். அராவள்ளி வீழ்ந்தால், பாரதம் வீழும்” என்று முணுமுணுக்க, அவரின் வாக்கு பலித்துவிடுமோ என்று அஞ்சி அரவள்ளி மலைத்தொடருக்கும் அதனை காத்து நிற்கும் இரண்டு மாபெரும் ராஜ்யத்திற்காகவும் வருணபகவான் கண்ணீர் வடித்தான்.

 

ரணசூரன் வந்துவிட்டான்….

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்