Loading

அத்தியாயம் 1

 

கிபி 2004,

 

ஒரு திங்கள் காலை, வாரத்தின் முதல் நாள் பள்ளி, 9 மணிக்கு பிரேயர், மொத்த ஸ்கூலும் கிரவுண்டில் அட்டென்ஷனில் நிற்க. அந்த வருடம் ஸ்கூல் ப்ரெசிடெண்ட்டாக இருக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவன், பிரின்சிபல் ஃப்ளாக்(flag) ஏற்ற உதவி செய்து, மொத்த ஸ்டூடன்ட்ஸையும் ஸ்டாண்டர்டிஸ், அட்டேன்ஷன் செய்ய சொல்லி வழி நடத்தி கொண்டிருந்தான்.

 

அது மதர் தெரஸா கான்வெண்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியின் வழக்கம், முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை வெள்ளியன்றும், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை திங்களன்றும் ப்ரையர் நடக்கும்.

 

காலை பிரேயரில், முதலில் பள்ளி முதல்வர் கொடியேற்ற, அதன்பின் தமிழ் தாய் வாழ்த்து, 3 திருக்குறள் அதற்கு விளக்கம், 3 பழமொழி அதற்கு விளக்கம், பின் உறுதிமொழி, இறுதியாக நேஷனல் ஆன்தமோடு பிரேயர் முடியும்.

 

ஆனால் பிரேயர் முடியும் நேரத்தை கணக்கிட்டு பங்சுவலாக வரும் சில பிரகஸ்பதிகள் ஒவ்வொரு பள்ளியிலும் உண்டு. அப்படி தினமும் லேட்டாக வருபவர்களின் பட்டியலில், நம் ‘ஆறெழில்’ ஏழாம் வகுப்பு பெயரும் கட்டாயம் இடம் பெற்றிருக்கும்.

 

பள்ளியின் இரண்டாம் கேட், அதாவது பெரிய கேட் வழியாகத் தான் ஸ்டுடென்ட்ஸ் பள்ளிக்குள் காலை வேலையில் வரவேண்டும் என்பது விதி. ஆனால் இந்த பள்ளியில் சேர்ந்த ஒரு வருடத்திலேயே, கேட்டில் செக்யூரிட்டியாக நிற்கும் தாத்தாவை பேசியே கவுத்துவிட்டு, முதல் கேட் ஆன சின்ன கேட்டில் நுழைந்து, அதையொட்டி உள்ள படியில் ஏறி செகண்ட் ப்ளோரிலிருக்கும் அவளது வகுப்பை அடைந்துவிடுவாள் ஆறெழில்.

 

இவள் மட்டும் வந்தாள் பரவாயில்லை, போற போக்கில் சமூக அக்கறை அதிகமாகி மற்றவர்க்கும் உதவி செய்ய முயலும் போது மாட்டிக் கொண்டு முழிப்பாள். அப்படி ஓரிருமுறை ப்ரின்சிபாலிடம் மாட்டியதும் உண்டு. ஆனாலும் பயம் கிடையாது, மறுபடியும் அதையே தான் செய்வேன் என செய்வாள்.

 

அவள் வீட்டிலிருந்து பள்ளிக்கு கிட்டத்தட்ட இரண்டு ஷேராட்டோ மாற வேண்டும். ஆனாலும் அசராமல், 7.30 மணிக்கு அவள் அம்மாவின் சுப்ரபாதத்தின் பின்னேயும், ஸ்கூல் வேனின் ஹார்ன் ஒலியிலுமே 1/2 கண்ணைத் திறக்க முடியாமல் திறந்து பார்ப்பாள். பின் எங்கிருந்து 9 மணி பிரேயரெல்லாம் அட்டென்ட் செய்வது.

 

பல நாள் டிராபிக்கில் சிக்கி மாட்டிக் கொண்டு பத்து மணிக்கு வந்து சேர்ந்து, பிரின்சிபலிடம் 2 கொட்டும் வாங்கிக் கொண்டு, “நாளைக்கு வரும் போது பேரெண்ட்ஸ்ட்ட, இனி இப்டி லேட்டா வரமாட்டேன்னு 100 டைம்ஸ் எழுதி சைன் வாங்கிட்டு வரணும்” என்ற பனிஷ்மென்ட்டையும் பெற்றுக்கொண்டு வந்து ஹாயாக அமர்வாள்.

 

வாத்தியார் கிளாஸ் எடுக்கும் நேரத்தில், இவள் அருகில் அமர்ந்திருக்கும் லக்ஷ்மி என்ற பாவப்பட்ட பெண்ணிடம், “இங்கப் பாரு,  நா ஒரு தடவ, நீ ஒரு தடவ சரியா, அப்பதான் ஈவினிங்குள்ள முடிச்சிடலாம்” என சீக்கிரம் வந்ததற்காக அந்தப் பிள்ளையையும் ‘இனி அப்படி செய்ய மாட்டேன்னு’ ௭ன எழுத வைக்கும் மேதாவி.

 

“ஏன்தா ஓ பக்கத்தில வந்து உக்காந்தேனோன்னு நா ஃபீல் பண்ணாத நாளே இல்லடி, அடுத்த வருஷம்னாலும் பி செக்ஷனுக்கு ௭ன்ன மாத்திவிட்ரு ஆஞ்சநேயா” ௭ன தன் இஷ்ட தெய்வத்தை சத்தமாகவே அழைத்து கேட்டு வைப்பாள் லக்ஷ்மி, அப்படியாவது தனக்கு ஒரு விடியல் பிறந்து விடாதா ௭ன்றெண்ணி.

 

ம்கூம், அவள் புலம்புவது யாருக்கோ ௭ன்பதுபோல் கிளம்பி விடுவாள் ஆறு. வீட்டுக்கு போனதும் அம்மாவயும் ஒரு பாடு படுத்தி அவங்கட்டயும் நாலு வசவு வாங்கிக்கொண்டு, “இப்ப நீ சைன் போடுறியா? இல்ல நானே அதயும் போட்டுக்கவா?” என போர்க்கொடித் தூக்கிவிட.

 

‘எங்கு அப்படி செய்து கெட்டப் பழக்கத்திற்கு வித்திட்டு விடுவாளோ?’ என பயந்து, ஆறெழிலின் அம்மா ஜெயந்தியும், கையெழுத்திட்டிடுவார். இது எதுவும் அப்பா காதிற்கு போகாமல் பார்த்துக் கொள்வர் தாயும், மகளும்.

 

அப்படி அவருக்கு தெரிந்தாலும், அவர் ஒன்னும் முருங்கை குச்சியை ஒடித்து வெளுத்து விட போவதில்லை. யாருக்கோ! எதுக்கோ! என இருக்கும் மனிதர் அவர். பேயிங் கெஸ்ட் போல், மாசம் பிறந்ததும் ஒரு குறிப்பிட்ட ரூபாயை ஜெயந்தியிடம் கொடுத்து விட்டு ஒதுங்கி விடுவார். வீட்டுக்கு வருவது சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் மட்டுமே என்பதாயிருக்கும் ஆறெழிலின் தகப்பனார் குணசீலன். இது அவர்கள் வாழ்க்கையின் ரொட்டீன் ௭ன்றே சொல்லலாம்.

 

சரி நாம ௭ங்க விட்டோம், ஹான், இன்றைய திங்கள் காலையும் அது போன்றது தான்.

 

ஆறெழில் சின்ன கேட்டில் நுழைந்து, பதுங்கி பதுங்கி மேலேறி வகுப்பில் சென்று அமர்ந்துகொண்டு, “ஹப்பா யார் கண்ணுலயும் படாம தப்பிச்சிட்டோம். நீ கிரேட் டி ஆறெழில்” என தன்னைத்தானே சிலாகித்துக் கொண்டாள். அவள் உள் நுழைந்ததிலிருந்து பதுங்கிப் பதுங்கி மாடியேறியது வரை இரு பூனைக் கண்கள் கவனித்ததை அவள் கவனிக்கவில்லை.

 

பின் பிரேயர் முடித்து எல்லோரும் லைனில் தங்கள் வகுப்பிற்கு செல்ல, “இந்த ஸ்கூல்ல சேர்ந்து ஒன்றை வருஷம் ஆகப்போகுது, ஒரு நாள் நாளும் இந்த பிரேயர் அட்டென்ட் பண்ணிருப்பியாடி? நீ மட்டும் ஒரே ஒரு நாள் அட்டென்ட் பண்ணு அன்னைக்கு ஃபுல் டே நீ என்ன சொன்னாலும் செய்றேன்” என்றவாறு வந்து அருகில் அமர்ந்தாள் லக்ஷ்மி.

 

“ஏன் இப்பயும் நாள் முழுக்க நா சொல்றதெல்லாம் செஞ்சுட்டு தான இருக்க”. “அது நீ வற்புறுத்தி செய்ய வைக்கிறது, அந்த ஒருநாள் நானா முழு மனசோட உனக்கு எல்லாம் செய்வேன்னு சொல்றேன். கேண்டீன்ல ஆப்பிள் ஜூஸ் கூட வாங்கி தரேன்” என்றாள் லக்ஷ்மி.

 

“நா செய்ய மாட்டேன்ற தைரியத்துல பேசற, நாளைக்கு வாரேன்டி, ஆப்பிள் ஜூஸ் வாங்கித்தர துட்டோட வார நீ” என்றாள் சவாலாய் ஆறு.

 

“கடன் வாங்கினாலும் வாங்கி தாரேன்டி. நீ வந்துரு பாத்துக்கலாம்” என்றாள் லக்ஷ்மி. அதன்பின் அன்றைய வகுப்பு கவனித்து, அரட்டையடித்து, தூங்கி வழிந்து கழித்துவிட்டு 5 மணி பெல் அடிக்கவும், பேக்கைத் தூக்கி கொண்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டாள். ஈவினிங் ஸ்கூல் வேனில் போய்விடுவாள்.

 

வாசலில் நின்ற ஜெயந்தி “காலைலயும் இதமாறி வேன்ல போனா என்னடி? ரெண்டு நேரத்துக்கும் சேத்துதான பீஸ் கட்டுறேன். ஷேர் ஆட்டோக்கு வேற தண்டமா துட்ட குடுக்க வைக்குற” ௭ன புலம்ப.

 

“காலைல, 7:30க்கு நம்ம வீட்டுக்கு வேன் வந்துடுது, பின்ன எல்லா பக்கமும் பிள்ளைகள ஏத்திட்டு போய்சேர 9 மணி ஆயிடுது. அதான் 9 மணிக்கு ஸ்ட்ரெயிட்டா ஸ்கூலுக்கே நேரா போயிட்டா ௭ன்னனு போறேன். சாயந்திரம் ஃபஸ்ட் வந்து இறக்கி விட்டுறாங்க, அதான் சாயந்திரம் வேன்லயே வந்துடுறேன். எவ்வளவு பிளஸ் பாயிண்ட் இருக்கு. என் தூக்கமும் கெடாம, அனாவசியமா உன் பொண்ணு ஊரையும் சுத்தாம, டைம்க்கு போயிட்டு டைம்க்கு வந்துடுறா. இதுக்கு நீ பெருமை படணும்”.

 

“பொம்பள புள்ள காலைல சீக்கிரமா எழுந்தா தான்டி வீடு விளங்கும்”.

 

“அதான் இங்க நீ எந்திக்கிறியே அதுவே போதும்மா”. 

 

“சரி கை கால கழுவிட்டு, அப்றமா ஸ்னாக்ஸ்ல கைய வை. நா மேல காய போட்டுருக்க துணிய எடுத்துட்டு வாரேன்” என அவர் மேலேற. ஷூ, சாக்ஸை கழட்டிவிட்டு அரையும், குறையுமாக கை, கால் அலம்பிவிட்டு வந்து கிச்சனில் பார்த்தாள். டீயும், உளுந்த வடையுடன், சட்டினியும் ரெடியாக இருந்தது.

 

ஜெயந்தி, ஒரு கவர்மெண்ட் ஸ்கூல் மேக்ஸ் டீச்சர். பக்கத்திலிருக்கும் பள்ளி தான் என்பதால் நடந்தே சென்று வந்து விடுவார். நாலு மணிக்கு வரும் போதே இப்படி ஏதாவது வாங்கி வருவார், இல்லையேல் வந்து ஏதேனும் செய்து வைத்துவிடுவார். ஆறெழிலின் அப்பா இரவு 9 மணிக்குத்தான் வீடு திரும்புவார். அவர் சொந்தமாக பிளாஸ்டிக் பாத்திரம் பொருட்கள் விற்கும் கடை வைத்துள்ளார். குடும்பத்தோடு ஐக்கியமாக இருக்கவே மாட்டார். யாருக்காக காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை உழைக்கிறார் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம். இவர்களும் அவரை அப்படியே பழகிக் கொண்டனர்.

 

இரவு சாப்பாட்டை முடித்து அம்மாவும், மகளும்  ஒரு சைடு அறையில் படுத்துக் கொள்ள.

 

“அம்மா காலையில சீக்கிரம் எழுப்புமா. நாளைக்கு பிரேயர் அட்டென்ட் பண்ணியே ஆகணும். லட்சுட்ட பெட் கட்டிருக்கேன்.  ஆப்பிள் ஜூஸ் வாங்கி குடிச்சே ஆகணும்”.

 

“நா எழுப்புவேன், நீ எந்திரிப்பியான்னு மட்டும் யோசிச்சுக்க” ௭ன்றவர்., “அந்த புள்ளைக்கு செலவுயிழுத்து வைக்காத” என்றார் சேர்த்து. அதற்கு அவளிடம் ௭ந்த பதிலும் இல்லை. “சொல் பேச்சு கேக்காத கழுத” ௭ன திட்டிவிட்டு தூங்கிவிட்டார்.

 

அதன் பின் ஆறெழிலின் அப்பா வந்து, தன்னிடமிருக்கும் சாவி கொண்டு கதவை திறந்து, அவரே எடுத்து வைத்து சாப்பிட்டு, இன்னொரு தனியறையில் சென்று படுத்துக் கொண்டார்.

 

மறுநாள் காலையில் அதிசயமாய் அவள் அம்மா எழுப்பியதும் எழுந்துவிட்டாள் ஆறெழில். ஜெயந்தியே ஒரு மார்க்கமாய் தான் பார்த்தார்.

 

“இது தெரிஞ்சிருந்தா ஆப்பிள் ஜூஸ நானே வாங்கிக் கொடுத்திருப்பேனடி” என்க.

 

“ரொம்ப ஆசப்படாத, இன்னிக்கு ஒரு நாள்தான். அதுகூட அவ ரொம்ப பேசுனா அதனால மட்டும் தான்” என்று விட்டு யூனிபார்முடன் குளிக்கச் சென்றாள்.

 

“இதெல்லாம் எங்கிருந்து உருப்பட” என தன் தலையில் அடித்துக்கொண்டு சமையலைத் தொடர்ந்தார் ஜெயந்தி.

 

ஒரு வழியாய் கிளம்பி, 8 மணிக்கு ஷேர் ஆட்டோ ஏறி விட்டாள், ஸ்கூல் பஸ்ஸில் ஊரெல்லாம் சுற்றி வர முடியாது என்பதை சபதமாய் மேற்கொள்பவளாயிற்றே. 8:45 மணிக்கு இவள் ஸ்கூலினுள் நுழைய பாதி பிள்ளைகள் வந்து விட்டிருந்தனர்.

 

“இந்நேரமே இத்தன பேர் வந்துருக்காங்கன்னா, இந்த பிள்ளைக ௭ல்லா எந்நேரம் எந்திருச்சிருக்குங்க” என தனக்குத்தானே பேசிக்கொண்டு வேடிக்கை பார்த்தவாறு மேல்படி ஏறப் போனவள், ஏதோ உந்துதலில் ஃப்ளாக் ஏற்றும் கம்பம் பக்கம் திரும்பினாள். ஒருவன் மும்முரமாய் ஃப்ளாக்கில் பூவை வைத்து கட்டிக் கொண்டிருந்தான்.

 

“அட நம்ம ப்ரெசிடெண்ட், இந்த பையன் தான முன்னாடி நின்னு லீட் பண்ணுவான்” என அத்தோடு அதை மறந்து படியேறி விட்டாள். அவள் அந்த பக்கம் திரும்பவும், நிமிர்ந்த பூனைக்கண் கொண்ட பையன் லேசாக சிரித்துக் கொண்டு, விட்ட வேலையை தொடர்ந்தான்.

 

அவனும் அவளை மேக்சிமம் பார்க்கும் நேரம் காலை பிரேயர் நேரமே, அதில் அவள் பதுங்கி பதுங்கி செல்வதை பலநாள் கவனித்திருக்கிறான். அவ்வளவுபேரும் பீ.டி சாரிடம் மாட்டிக்கொண்டு முழிக்கையில் இவள் மட்டும் எப்படியேனும் தப்பித்து விடுவாள். அதனால் வந்த ஒரு வகை ஆர்வம், அவன் கவனிப்பு.

 

இன்று அவள் சீக்கிரம் வந்ததை கவனித்து ‘பார்றா, ஆனா ஏன்?’ என்ற கேள்வியுடன் பார்த்து நிற்க அவள் திரும்பப் போவதை எண்ணி சுதாரித்து குனிந்து கொண்டான். பின் பிரேயர் பெல் அடிக்க, இவன் ஸ்கூல் பிரசிடெண்ட்டாக சென்று முன் நின்று கொள்ள ஒவ்வொரு வகுப்பாக வந்து நிற்க தொடங்க, அப்போது தான் பள்ளிக்கு வந்த லக்ஷ்மி வேகமாய் வகுப்பிற்குள் நுழைய, நம் ஆறெழிலோ அவளுக்காகவே காத்திருந்தது போல், கால்மேல் காலிட்டு ஸ்டைலாக அமர்ந்து போஸ் கொடுத்தாள்.

 

லட்சு வாயைப் பிளக்க, “க்ளோஸ் த டோர், வா பிரேயர் அட்டென்ட் பண்ணி முடிச்சா தான டாஸ்க் கம்ப்ளீட்டாகும்” என லட்சு பேக் வைக்க வழி விட்டு வெளியேறினாள் ஆறு.

 

“தேவையில்லாம பெட் கட்டிட்டமோ, சும்மாவே உசுர வாங்குவா. இதுல நா வான்டெட்டா போய் வேற வாய குடுத்துருக்கேன், ௭னக்கு நல்லா வேணும். உனக்கு நேரமே சரியில்லடி லட்சு” எனப் புலம்பி விட்டு அவளைப் பின்தொடர்ந்தாள்.

 

க்ரௌண்டில் லைனில் வந்து நின்றுகொண்டு, மொன மொனவென இருவரும் பேசிக்கொண்டிருக்க, பீ.டி மேடம் வந்தே இருவரையும் முதுகில் அடித்து பேச்சை நிறுத்தினார். பின்பே நிமிர்ந்து முன் நடப்பதை கவனித்தனர்.

 

அப்போதுதான் முன் நின்ற ப்ரஸிடண்ட் கண்ணைப் பார்த்தாள். அவனது விழி வெள்ளையும், பிரவுனும் கலந்தது போன்ற கலரில் இருப்பதாகத் தோன்றியது அவளுக்கு. இதுவரை அவள் அவனை கவனித்து பார்த்ததில்லை.

 

“வித்தியாசமான கண்ணுல!!” என வாய்விட்டே சொல்லி கொண்டு அவனைப் பார்த்தாள். அவன் கண்ணை அவளுக்கு அவ்வளவு பிடித்தது. வித்தியாசமாக இருப்பது கூட ஒரு காரணமாயிருக்கலாம். பின்பே அவனை முழுதாய் ஆராய்ந்தாள். அவன் வயதிற்கு சற்று கூடிய உயரமே, ஒல்லியாக இருந்தான், அயன் செய்து நீட்டாக உடை அணிந்திருக்க, நெஞ்சை நிமிர்த்தி வேறு நின்றான்.

 

“கொஞ்சம் திமிரு இருக்குமோ” என யோசித்துக் கொண்டாள். மொத்தமாய் அவனை ஆராய்ந்து விட்டு மீண்டும் கண்ணிலேயே வந்து நின்றாள், அவள் அந்தக் கண்ணை சந்தித்த ஒரு நொடி, அது தன்னைக் கண்டு சென்றதோ என தோன்ற, மீண்டும் அவன் கண்ணை இமைக்காமல் பார்த்தாள்.

 

ம்கூம் அவன் இவள் இருந்த திசைப் பக்கம் புருவத்தைக் கூட நீட்டவில்லை.

 

“பாக்கலையோ? நாம தான் பாத்துட்டேயிருந்ததால,, ப்ரஸிடண்ட் நம்மல பாத்த மாறி தெரிஞ்சிருக்குமோ?” என அதையும் தனக்குத்தானே பேசிக்கொண்டு சைடில் நிழலாடுதே என வலது புறம் திரும்ப பீ.டி மிஸ் காளி அவதாரத்தில் முறைத்து நின்றார், ஆனால் சிலையாக.

 

“என்னாச்சு இப்படி நிக்காங்க?” என அவள் அவரை உத்துப் பார்த்தாள், பீ.டி மிஸ் மூஞ்சுக்கு நேராக கையை ஆட்டிப் பார்த்தாள். மிஸ்ஸின் முழி பெரிதாகிக் கொண்டே போக, “என்ன ரியாக்சன் சரியில்ல, ஆனா ஆக்ஷனுமில்ல” எனப் புலம்பி முடிக்க, எல்லோரும் சல்யூட் அடித்த சத்தத்தில் சுற்றுப்புறம் உணர்ந்து இவள் என்ன என சுதாரிக்கும் முன், அவள் கையில் நுள்ளியிருந்தார்.

 

“நேஷனல் ஆன்தம் படிக்குது, அந்த நேரம் கூட உன்னால சும்மாயிருக்க முடியாதா? சுத்தி யார்ட்டயாவது பேசுற? யாருமே கிடைக்கலன்னா தனியா பேசுற? உன்ன என்னதான் செய்யுறது?” என திட்டிக் கொண்டே போக.

 

“மிஸ் மிஸ் வலிக்குது மிஸ், யாருக்கும் தொந்தரவு தராம தனியா தான பேசிட்டுருந்தேன். நீங்களாவது நேஷனல் ஆன்தம் படிக்குறதனால தான் ஸ்டேட்யூ போஸ்ல நின்னேன்னு சொல்லியிருக்கலாம்ல” என்றாள்.

 

மேக்ஸிமம் ஸ்டுடென்ட்ஸ் க்ளாஸ் போயிருக்க, அவளை சற்று நேரம் சுவாரசியமாய் பார்த்து விட்டு தானும் தன் வகுப்பறையை நோக்கிச் சென்றான் பூனைக் கண்களை உடையவன். அவளோ ஏகப்பட்ட ‘மிஸ்’ போட்டு மிஸ்ஸை மிஸ்ஸஸ்(plural ங்க) ஆக்கிவிட்டு ஒரு வழியாய் தப்பித்து வந்து அவனைத் தேடிப் பார்த்தாள், காணும் என்றதும் ‘சரி க்ளாஸ் போய்ட்டாங்க போல’ என நினைத்துக் கொண்டு தானும் தன் வகுப்பை நோக்கிச் சென்றாள்.

 

அங்கு அதற்குள் முதல் பீரியடு மேக்ஸ் மிஸ் தனது வகுப்பைத் தொடங்கிவிட்டிருக்க. இவள் எக்ஸ்கியூஸ் கேட்டு நிற்க, “உனக்கு மட்டும் ஸ்பெஷல் பிரயேர் இருந்ததா? இந்நேரம் வார?” என அவர் கேட்க. “பீ.டி. மிஸ் ஸ்போர்ட்ஸ் டே பத்தி பேசிட்டுருந்தாங்க, அதான் கேட்டுட்டு வர லேட் ஆயிடுச்சு மிஸ்” என்றாள்.

 

“இப்பவேவா ஸ்போர்ட்ஸ் டே வருது” என மிஸ் கேட்க. “இப்ப இருந்து பிளான் பண்ணா தான முடியும்னு சொன்னாங்க” என்றாள் அதற்கும்.

 

“சரி உள்ள வா” என உள்வர அனுமதித்தார். வேகமாய் வந்து மூன்றாவது பெஞ்சில் அவளிடத்தில், லக்ஷ்மி அருகில் அமர்ந்து கொண்டாள்.

 

“பீ.டி., மிஸ் இன்னும் ஸ்போர்ட்ஸ் மீட் பத்தி பிரின்ஸ்பல்ட்டயே பேசிற்காது, அதுக்குள்ள உன்ட்ட பேசினாங்களாக்கும். அநியாயமா பொய் பேசுறடி” ௭ன லட்சு முனுமுனுக்க.

 

“சரி விடு, அது இப்போ முக்கியமில்ல. நம்ம ஸ்கூல் பிரசிடெண்ட் நேம் என்ன?” ௭ன்றாள் ஆறெழில் திடிரென.

 

“என்ன திடீர்னு?”. 

 

“சொல்லுடி உனக்கு தெரியுமா? தெரியாதா?”. 

 

“சொன்னா உன் சேலஞ்ச வாபஸ் வாங்கிறியா?” ௭ன சமயம் பார்த்தாள் லட்சு.

 

“அட அல்பம், ஒரு ஆப்பிள் ஜூஸ் வாங்கி தர மாட்டியாடி நீ”. 

 

“நீ அப்ப கூட வேணாம்னு சொல்ல மாட்டேங்கறியே”. 

 

“சரி போய் தொல, உன் ஆப்பிள் ஜூஸே வேணாம். அந்த பையன் பேரு சொல்லு”. 

 

“எதுக்கு இப்ப அந்த அண்ணன் பேர கேக்குற?”. 

 

“சொல்ல முடியுமா? முடியாதா?” டென்ஷனே ஆகிவிட்டாள் ௭ழில்.

 

“கத்தித் தொலச்சுறாத எரும, அப்றம் மேத்ஸ் க்ளாஸ வெளில நின்னு தான் கவனிக்கணும்”.

 

” சோ, உனக்கு அவங்க நேம் தெரியாது? ஜூஸ வேணாம்னு சொல்ல நினைச்சேன், பட்..” ௭ன ஆறு பென்சிலால் கோடு வரைய.

 

“அந்த அண்ணன் பேரு “ப்ரகலத்தன்” ” ௭ன ஈ ௭ன்று 32 பல்லயும் தரிசனம் குடுத்து சொல்லிவிட்டிருந்தாள் லட்சு.

 

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 60

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
61
+1
3
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ஆறெழில் அழகான பெயர் 💛✨

    விரைவாக வந்ததற்காக அவளுக்கும் சேர்த்து பனிஷ்மென்ட். பாவம் பக்கத்தில் உட்கார்ந்தது ஒரு குற்றமா ஆறு.

    லக்ஷ்மி wanted டா வந்து வாய விட்டியே மா.

    ஆமா ஆமா வீட்டுக்கு ஒருத்தர் சிக்கிரம் எழுந்தா போதும். 🤭

    ஆறு யாருக்கும் தொந்தரவு தராம தனியா தானே பேசினா அவளை போய் திட்டராங்க.

    பிரகலத்தன் 😍😍