
முதல் நாள் வேலையில் மித்ரனுக்கு பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியவில்லை. பழைய நிறுவனத்தில் என்ன வேலை செய்தானோ? அதே வேலையை தான் இங்கும் செய்தான். ஆனால் வேறு நிறுவனம் என்பதால் அந்த நிறுவனத்தின் சூழலுக்கு பொருந்த நேரமெடுத்தது.
வேலை நேரம் முடியும் வரையிலும் சம்பூர்ணா அவன் கண்ணில் படவில்லை. அவள் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவள் அல்ல என்பதால் அவனும் அதை எதிர்பார்க்கவில்லை. அதனாலேயே நாள் நல்ல முறையில் முடிந்தது.
வேலை நேரம் முடிந்து வீட்டுக்கு கிளம்பினான். சிக்னலில் நிற்கும் போது, “டேய் மித்ரா” என்று குரல் கேட்டது. உடனே திரும்பிப் பார்த்தான்.
ஹரீஷ் நின்றிருந்தான். அவனது பைக்கை மெல்ல தள்ளிக் கொண்டு வந்து மித்ரன் அருகே நிறுத்தினான்.
“என்னடா? வேலை கிடைச்சதா? எங்க போயிட்டு வர்ர?” என்று ஆர்வமாக விசாரித்தான்.
“கிடைச்சடுச்சு மச்சி.. இன்னைக்கு தான் போயிட்டு வர்ரேன். அதே வேலை தான்.”
“சூப்பர்டா.. ட்ரீட் எங்க?”
“கல்யாண மாப்பிள்ளை உன் கிட்ட தான் நான் ட்ரீட் கேட்கனும்” என்று பதிலுக்கு சொன்னான்.
ஹரீஷ் உடனே சந்தோசமாக சிரித்தான். அவன் முகத்திலிருந்த கல்யாண கலை மித்ரனுக்கும் புன்னகையை வரவழைத்தது.
“வச்சுடுவோம்.. ஆனா நீ வர மாட்ட.. அத விடு.. இன்னும் பத்திரிக்கை அடிக்கலடா.. அடிச்சதும் வீட்டுக்கு வந்து வைக்கிறேன். என்கேஜ்மண்ட்க்கு தான் வரல.. கல்யாணத்துக்கு கண்டிப்பா வரனும். நீயே மாப்பிள்ளை தோழனா நிக்கனும். புரியுதா?”
“சரி சரி.. நான் இல்லாமலா?” என்று கேட்டவனுக்கு தன்னுடைய திருமண விசயத்தை சொல்வதா? வேண்டாமா? என்று குழப்பமாக இருந்தது.
அதை யோசிக்கும் போதே விளக்கு பச்சையாக மாறி விட, அங்கிருந்து கிளம்ப வேண்டியிருந்தது.
“வீட்டுக்கு போயிட்டு கால் பண்ணுறேன்டா” என்று விட்டு ஹரீஷ் பைக்கை உயிர்ப்பிக்க, மித்ரன் தலையாட்டி வைத்தான்.
இருவரும் ஒன்றாக கிளம்பி சில தூரம் ஒன்றாக வந்து, பிறகு பிரிந்து ஆளுக்கொரு பாதையில் சென்றனர்.
மித்ரன் தன் திருமண விசயத்தை ஹரீஷிடம் சொல்லியே ஆக வேண்டுமா? அவன் சம்பூர்ணாவை திட்டியதை அவன் பார்த்திருக்கிறான். திட்டியது மட்டுமா? வெறுப்பை கொட்டியதையும் தான் பார்த்திருக்கிறான். இப்போது அவளோடு திருமணம் என்று சொன்னால் என்ன நினைப்பான்?
அதே யோசனையோடு பைக்க நிறுத்தி விட்டு வீட்டுக்குள் காலெடுத்து வைத்தவன், தட்டி விழப்போக, அவனுக்கு முன்பே வந்து கைபேசியை பார்த்துக் கொண்டு வாசலில் நின்றிருந்த புவனன் அவசரமாக தாங்கி பிடித்தான்.
“பார்த்துடா..” என்று அவசரமாக சொன்னவன், மித்ரன் நிமிர்ந்ததும் அவன் தலையில் ஒன்று வைத்தான்.
“கண்ண பின்னாடியா வச்சுருக்க..” என்று திட்ட, “ப்ச்ச்.. போடா..” என்று விட்டு செருப்பை கலட்டி விட்டு உள்ளே சென்றான் மித்ரன்.
“இவனுக்கு பைத்தியம் முத்திடுச்சு” என்று விட்டு புவனனும் பின்னால் வந்தான்.
“வேலை எப்படி போச்சு தம்பி? உங்க ஆள பார்த்தீங்களா?” என்று சாதனா மித்ரனை பார்த்ததும் ஆர்வமாக கேட்டாள்.
மித்ரன் உதட்டை பிதுக்க, “ஓ.. அதான் வருத்தத்துல நேரா வந்து படியில விழுந்தியா?” என்று புவனன் பின்னால் நின்று கலாய்த்தான்.
“அம்புட்டு வருத்தமா மித்ரா? ச்சு.. ச்சு.. ச்சு.. அத்த உங்க மகன் காதல்ல தடுக்கி விழுந்துட்டான்னு நினைக்கிறேன். இனி காப்பாத்த முடியாது”
சாதனா கிண்டலடிக்க, மித்ரனுக்கு சிரிப்பு தான் வந்தது.
“நீங்க வேற ஏன் அண்ணி? நானே முதல் நாள் வேலையில பல குழப்பத்துல இருக்கேன். நீங்க உங்க அருமை கணவன் பக்கம் கவனத்த திருப்புங்க. நான் போய் ஃப்ரஸ்ஸாகிட்டு வந்து வேடிக்கை பார்க்குறேன்” என்று விட்டு அறைக்குள் சென்று விட்டான்.
உடை மாற்றி விட்டு பார்க்க, ஹரீஷின் செய்தி வந்தது. அதை எடுத்த போதே நர்மதா காபியோடு வந்தார்.
“வந்ததும் ஃபோனா? இத குடிச்சுட்டு அப்புறமா பாரு அந்த ஃபோன” என்று நொடித்தார்.
“ம்மா.. ஹரீஸ் மெஸேஜ் பண்ணிருக்கான்.. அவனுக்கும் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிடுச்சாம். டேட் பார்த்துருக்காங்களாம். அத சொல்லிருக்கான்”
“அப்படியா? எப்பவாம்?”
“வர்ர பதினாறு தான்.. போகனும்”
“நீ போறதா? சொல்ல மறந்துட்டேன்.. காலையில தான் அபர்ணா வந்தாங்க. ஜாதகம் பார்த்து ரெண்டு நாள் குறிச்சாங்களாம். அதுல பதினேழு நிறைஞ்ச முகூர்த்தம்னு சொன்னாங்க. அதையே சரினு சொல்லிட்டோம். பதினாறு கூட முகூர்த்தம்.. அப்ப சின்னதா ரிசப்ஷன் வச்சுக்கலாம்னு சொல்லிட்டு போனாங்க”
மித்ரன் அதிர்ந்து பார்த்தான். உண்மையில் அவன் அந்த சம்பூர்ணாவை திருமணம் செய்து விடுவானா?
பணத்திமிரில் விஷாலை அடித்து உதைத்து ஓட விட்டவள்.. தலைக்கனத்தில் செந்திலின் வாழ்வுக்கு குறி பறித்தவள்.. அது இரண்டையுமே வைத்து இப்போது மித்ரனை விலைக்கு வாங்கி திருமணம் செய்து கொள்ளப்போகிறாள். எவ்வளவு பெரிய கேவலம்?
“அதையே சரினு சொல்லிட்டோம். நாளைக்கு பத்திரிக்கை எழுத போகனும். மண்டபமும் சாப்பாடும் அவங்களே பொறுப்பெடுத்துக்கிறதா சொல்லிட்டாங்க. நாங்க தான் பண்ணனும்னு சொல்லியும் கேட்கல. சாஸ்திரமான விசயத்த மாத்த வேணாம். இது சாதாரண விசயம் தான.. நாங்க பார்த்துக்கிறோம்னு சொல்லவும் அத்தையும் சரினுட்டாங்க. நீ எதுக்கும் உன் வேலையில லீவ் போட்டுக்க..” என்று சொல்லிக் கொண்டே திரும்பியவர் உடனே நின்று, “அடச்சே.. நீயும் அதே ஆஃபிஸ்ல தான வேலை பார்க்குற? அத மறந்துட்டேன் பாரு” என்று விட்டு வெளியேறி விட்டார்.
மித்ரனுக்கு பிடிக்கவில்லை. எதுவுமே பிடிக்கவில்லை ஆனால் தடுக்க முடியாது. அவனாக இந்த திருமணத்தை நிறுத்த முடியாது. அவளுக்கு அவ்வளவு தைரியம் என்றால் அவனுக்கும் இருக்காதா?
அவளை மிரட்டியது போல் நிர்பந்தம் செய்யும் அளவு நீசன் அல்ல அவன். ஆனால் திருமணம் வெறும் பொம்மை விளையாட்டு அல்லவே? பிடித்தால் சேர்த்து வைப்பதும் பிடிக்கா விட்டால் தூக்கி எறிவதும் இதில் முடியாது.
அவனது வாழ்வை நரகமாக்குவேன் என்று சொல்லி இருக்கிறாள். அதையே அவனும் திருப்பி செய்ய முடியாதா என்ன?
ஆனால் இப்போது விசயத்தை ஹரீஷிடம் சொல்ல வேண்டும். ஒரு நொடி யோசித்தவன், வேகமாக காபியை குடித்து விட்டு கைபேசியை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான்.
அப்போதே ஹரீஷை அழைத்தான்.
“சொல்லுடா”
“ஒரு முக்கியமான விசயம் பேசனும் மச்சி”
“என்னது? என் கல்யாணத்துக்கு எந்த சட்டை போட்டுட்டு வர்ரதுனா? நானே உனக்கு சட்டை வாங்கித் தர்ரேன்டா.. போட்டுட்டு ஜம்முனு வா”
“என்னை பேச விடுடா.. உன் கல்யாணத்துக்கு வர முடியாது”
“தேடி வந்து வெட்டுவேன்”
“ஏன்னு காரணம் கேளு.. பதினேழாம் தேதி எனக்கு கல்யாணம்”
“காமெடியா? ஹா ஹா சிரிச்சுட்டேன்.. மூடிட்டு வந்து சேரு”
“லூசு மாதிரி பேசாத.. காலையில தான் வந்து டேட் ஃபிக்ஸ் பண்ணிருக்காங்க. நான் வீட்டுக்கு வரவும் தான் சொல்லுறாங்க”
“டேய் நிஜம்மாவா சொல்லுற?”
“ஆமா.”
“என்னடா ஒரு வார்த்தை சொல்லல? வேலைய விட்டு போனதும் மறந்துட்டியா?”
“அப்படி இல்லடா.. ப்ச்ச்.. எப்படி சொல்லுறதுனு தெரியல” என்று சலித்தான்.
“வாயால தான்.. சொல்லித்தொலை..”
“ப்ச்ச்..”
“என்ன நடந்துச்சுனு சொல்லுடா.. என்னைய இப்படி கலட்டி விடுவனு நினைக்கவே இல்லடா”
“நானே கடுப்புல இருக்கேன்டா.. நீ வேற எரிச்சல கிளப்பாத”
“கல்யாணத்துல எதுவும் பிர்சசனையா?”
“இல்ல.. கல்யாண பொண்ணு தான் பிரச்சனை”
“யாரு அது?”
“சம்பூர்ணா”
“நல்ல பேரு.. என்ன பிரச்சனை?”
“டேய்.. சம்பூர்ணாடா.. மறந்துட்டியா?”
“எவ அவ?” என்று யோசித்தவன் சில நொடிகளுக்கு பிறகு புரிந்து, “டேய்.. அந்த பொண்ணா? செந்திலோட எக்ஸ்?” என்று அதிர்ச்சியோடு கேட்டு வைத்தான்.
“ஆமா”
“அவள எதுக்குடா உனக்கு கட்டி வைக்கிறாங்க? பிடிக்காதுனு சொல்லலயா நீ?”
“சொல்ல கூடிய நிலைமையில நான் இல்லடா” என்றவனுக்கு தன்னை நினைத்து கேவலமாக இருந்தது.
“அப்படி என்ன நிலைமை? அந்த பொண்ண உனக்கு பிடிக்காது தான?”
“ஆமா”
“அப்புறம் என்ன?”
“அதான் பிரச்சனையே.. யாரு கிட்டயும் சொல்லவும் முடியல.. கல்யாண தேதி வரை போயிட்டாங்க”
“ஏன் சொல்ல முடியல? உனக்கென்ன வாயில்லையா?”
“வாயிருக்க எல்லாரும் எல்லாத்தையும் பேசிட முடியாது மச்சி.. அதுவும் அவள பத்தி நல்லா தெரிஞ்ச என்னால எதுவும் பேச முடியல”
ஹரீஷ் அந்த பக்கம் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.
“அப்போ உனக்கும் சம்பூர்ணாவுக்கும் கல்யாணம்?”
“ம்ம்”
“வாழ்த்துக்கள் மச்சி” என்றவன் குரலில் எந்த வித உணர்ச்சியும் இல்லை. ஆனால் அதுவே மித்ரனை உடைக்க போதுமானதாக இருந்தது.
“டேய்..”
“இல்லடா.. கலாய்க்கல.. நீயும் கல்யாணம் பண்ணுறதுல எனக்கு சந்தோசம் தான்..”
“ஏன்டா?” என்றவனுக்கு வருத்தம் மட்டுமே மிஞ்சியது.
“அந்த பொண்ண எங்க எல்லாரையும் விட நீ தான் அதிகமா திட்டுவ.. ஆனா நீயே கல்யாணம் பண்ணிக்க போற.. எப்படியோ நல்லா இருந்தா சரி”
“ஏன்டா கடுப்பா பேசுற?”
“ச்சே ச்சே எனக்கென்ன கடுப்பு? நீ நல்லா இருந்தா சரி.. ஆனா இத செந்தில் கிட்ட சொல்லிடாத.. தாங்க மாட்டான்”
“நான் யாரு கிட்டயுமே சொல்லல.. உன் கிட்ட தான் முதல்ல சொல்லுறேன்..”
“ஓ.. சரி மச்சி.. எனக்கு வேலை இருக்கு.. உனக்கும் கல்யாண வேலை இருக்கும் பாரு.. பை”
“டேய்.. எதுக்குடா இப்படி கோபமா பேசுற?”
“சாமி உன் மேல எனக்கென்ன கோபம்? ஒரு கோபமும் இல்ல. ரெண்டு பேருக்குமே கல்யாணம். ரெண்டு பேருமே வேலைய பார்க்க போறோம். அவ்வளவு தான்.. கூப்பிடுறாங்க.. நாம அப்புறமா பேசலாம்.. ஹான்.. சொல்ல மறந்துட்டேன். பத்திரிக்கை வைக்க கண்டிப்பா வருவேன். நீ என் கல்யாணத்துக்கு கண்டிப்பா வரனும். பை”
ஹரீஷ் அழைப்பை துண்டித்து விட, மித்ரனின் மனம் நொந்து விட்டது. ஹரீஷின் மாற்றம் அவனது குரலிலேயே தெரிந்தது.
அவ்வளவு தான். அவன் மீது ஹரீஷ் கொண்டிருந்த மரியாதை காற்றோடு பறந்து விட்டது. பிடிக்காது என்று திட்டியவன் அவன். அவளையும் செந்திலையும் பிரித்து விட மித்ரன் எவ்வளவு போராடினான் என்பது ஹரீஷுக்கு நன்றாக தெரியும்.
அப்படி பிரித்து விட்டதே அவள் மேல் கொண்ட ஆசையால் தான் என்று இனி நினைப்பான். அவளை அவன் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்து தான் செந்திலை பிரித்து விட்டான் என்று நினைப்பான். அந்த நினைப்பே மித்ரனின் மனதில் சம்பூர்ணாவின் மீதிருந்த வெறுப்பு அதிகமாக காரணமானது.
வாய் பேச முடியாத மிருகங்களை விட வாயிருந்தும் சொல்லிருந்தும் பேச முடியாமல் தவிக்கும் மனிதனின் நிலைமை கொடுமை தான்.
வாசம் வீசும்.

