
நினைவுகள் -22
அன்று…
விஸ்வரூபனின் ஆளை விழுங்கும் பார்வையை, கூலிங் கிளாஸ் போட்டு இருந்ததால் ராதிகாவும், அனன்யாவும் அறியவில்லை.
ஆனால் அவனது மௌனத்தை உணர்ந்த அனன்யாவோ,
” ஹாய் மாம்ஸ். என்ன யோசனை?” என்று தோளைத் தட்ட…
” நத்திங் அந்துருண்டை. வாங்க முதல்ல சாப்பிடலாம்” என்றவன் அனன்யா கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தான். ராதிகாவிற்கு பிடித்த உணவை கேளாமலே ஆர்டர் செய்து இருந்தான்.
ஆனால் ராதிகாவிற்கோ உணவு உள்ளே செல்லவில்லை.
வழக்கம் போல விஸ்வரூபன் ராதிகாவை கேலி செய்ய ஆரம்பித்தான்.
” என்ன அனு… உன் ஃப்ரெண்டுக்கு ஊட்டி விடணுமா? ” என்று கேட்க.
இருவரும் சேர்ந்து அவனை முறைக்க, ” இல்லை ஆர்டர் பண்ணியது அப்படியே இருக்கே…” என்று அப்பாவியாக சொல்ல…
அப்போது தான், தன் தோழியை கவனித்த அனு, ” ஏன் டி சாப்பிடாமல் இருக்க. சீக்கிரம் சாப்பிடு.” என்று மிரட்டினாள்.
ஒருவழியாக சாப்பிட்டு முடித்தவர்கள், தங்களது பர்சேஸை ஆரம்பித்தனர்.
மாலை வரைக்கும் ஒவ்வொரு ப்ளோராக ஏறி இறங்கி, வீட்டிலுள்ளவர்கள் அனைவருக்கும் வாங்கிக் குவித்தாள்.
சற்று நேரம் பொறுமையாக இருந்த விஸ்வரூபன், ” அனு… நீ பார்த்துட்டு இரு எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு முடிச்சிட்டு வந்துடுறேன்.” என…
” மாம்ஸ்… நீங்கதான் பில் பே பண்ணனும். சீக்கிரம் வந்துடுங்க.”
” நீ செலக்ட் பண்ணிட்டே இரு. நான் வந்து விடுவேன்.” என்ற விஸ்வரூபன், சொன்ன மாதிரியே சீக்கிரம் திரும்பி வந்துவிட்டான்.
ராதிகாவும் தன்னுடைய அப்பா, அம்மாவிற்கும், அவளுடைய ஸ்வீட்டிக்கும், விக்ரம், ஸ்வேதாவிற்கும் வாங்கி முடித்து விட்டு அமர்ந்திருந்தாள்.
விஸ்வரூபனோ, அனு வாங்குவதற்கு பில் பே பண்ணி விட்டு, அதைத் தூக்கிக் கொண்டு, அவள் பின்னே அலைவதற்கே அவனுக்கு சரியாக இருந்தது.
அப்போதைக்கு அவனால் முடிந்தது, அவ்வப்போது ராதிகாவை சைட் அடிப்பது மட்டுமே.
ஒரு வழியாக ஷாப்பிங் முடிந்து, பீச்சுக்கு செல்லும் போது, மாலை மயங்கி, இரவு கவிழத் தொடங்கியது.
பே வாக் பீச்… நிலவு வெளிச்சத்தில் அந்த இடமே ரம்மியமாக இருந்தது.
சற்று நேரம் நின்று வேடிக்கை பார்த்தனர். ராதிகா சோர்ந்து தெரிய, அவளது முகத்தைப் பார்த்த விஸ்வரூபன், ” அந்துருண்டை… வர்றீயா, அங்கே இருக்கிற ஹட்டில் உட்கார்ந்து பேசலாம்.” என்றுக் கூற…
” மாமா எனக்கு ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் வேணும். நான் வாங்கி சாப்பிட போறேன். உங்களுக்கு வேணுமா?” என்று விஸ்வரூபனிடம் வினவியவள், அவன் வேண்டாம் என்று கூறவும், ராதிகாவை பார்க்க.
” ஐயோ! ஆளை விடு. எனக்கு எதுவும் வேண்டாம்.” என்று விட…
” சரி… அப்போ நீங்க போய் அங்க உட்கார்ந்து பேசிட்டு இருங்க, நான் வந்து விடுகிறேன்.” என்றுசொன்னாள்.
விஸ்வரூபன், “சரி .” என தலையாட்டி விட்டு வேகமாக எட்டு எடுத்து வைத்து அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
ராதிகாவிடம் கண்களாலே, அவளது காதலைச் சொல்லுமாறு மிரட்டி விட்டுச் சென்றாள் அனன்யா.
அவர்களுக்கு தனிமை கொடுப்பதற்காக அங்கிருந்த இரு கடைகளில் உள்ளவற்றை காலி பண்ணிக் கொண்டிருந்தாள்.
சற்று நேரம் நிமிர்வதும் பிறகு தலைகுனிவதுமாக இருந்தாள் ராதிகா.
தன் செல்ஃபோனில் கவனத்தை வைத்து இருப்பதுப் போல், அவளையே புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் விஸ்வரூபன்.
அவளது அவஸ்தையைப் பார்த்தவன் சிரித்துக் கொண்டே, ” ம்… இது சரி வராது.” என்று அலுத்தவாறே, அவளதுக் கையைப் பற்றி, சற்றுமுன்பு அவளுக்காக வாங்கி வந்திருந்த மோதிரத்தை, தனது பாக்கெட்டில் இருந்து எடுத்தவன், அவளது கை விரலில் மாட்டி விட்டு, “ஐ லவ் யூ ராதா… என்னை உன் கண்ணனாக ஏற்றுக் கொள்வாயா?” என்றுக் கேட்க…
ராதிகாவின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியென பெருகியது.
” ஹேய் ராதா… ஏன் என்னைப் பிடிக்கலையா? எதுக்கு இப்படி அழற?” என அவன் பதறித்துடிக்க.
அவளோ, அவசர, அவசரமாக கண்களைத் துடைத்து விட்டு, ” இல்லை.” என தலையசைத்தாள்.
” ஓ… அப்போ உனக்கும் என்னைப் பிடிக்குமா? பிடிக்கும்னா இந்தா இதை எனக்குப் போட்டு விடு.” என்றவாறே இன்னொரு மோதிரத்தை அவள் கையில் கொடுத்தான்.
ராதிகாவோ, அதிர்ச்சியில் இருக்க.” ம்… சீக்கிரம் போடு. இது நமக்கு நிச்சயதார்த்தம். சீக்கிரமா நம்ம கல்யாணம் பண்ணிக்கணும் என்று கடவுள் கிட்ட மனுக் கொடுத்துக் கொண்டே போட்டு விடு. இதோ இந்த நிலவு தான் நமக்கு சாட்சி.” என்றுக் கூற
ராதிகாவும், வெட்கத்துடன் மோதிரத்தை போட்டுவிட்டாள்.
பிறகு தனது தயக்கத்தை யெல்லாம் தூக்கி போட்டு விட்டு,தனது ஹேண்ட் பேகிலிருந்து, அழகிய இளஞ்சிவப்பு நிற ரோஜாவை எடுத்து நீட்டினாள். அதை பத்திரமாக வாங்கியவன், ” அடிப்பாவி… அப்போ நீதான் நாலு வருஷமா சீக்ரெட்டா ரோஸ் கொடுத்ததா…” என்று அதிர்ந்துக் கூறினான்.
இன்று…
காலையில் அபிஷேகம் முடியவும், காஞ்சிபுரம் ஹாஸ்பிடல் வரை சென்று இருந்தவன், திரும்பி வரும் போது பேருந்து நிலையத்தில் அந்த ஆதவனோடு அவளைப் பார்த்தான்.
பஸ்ஸில் ஏறிச் சென்று கொண்டிருந்தனர். இங்கு வருவதை விட அவளுக்கு, அந்த ஆதவனுடன் செல்லுவது முக்கியமாக போய்விட்டதா?’ என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டிருந்தான்.
ஒரு வேளை அவளுக்கு, என்னுடைய தந்தை தான் அவளுடைய கிருஷ்ணன் டாக்டர் என்பது தெரியாதோ… ‘ ஆமாம் இன்விடேஷனில் கூட என் பெயர் கிடையாதே. நம்ம அம்முக்குட்டி பேரும், அப்பா, அம்மா, அத்தை இன்வைட் பண்ணுற மாதிரி தானே அடித்திருந்தோம். ‘ என்று எண்ணியவன், அமைதியாக அவனது அறைக்குச் சென்று விட்டான்.
ஈவினிங் பார்ட்டியும் கோலாகலமாக முடிந்து விட…
இரவு எல்லோரும் அமர்ந்து இருக்க, கௌரி தான் பேச்சை ஆரம்பித்தார். ” ரூபன் எவ்வளவு நாள் இப்படியே இருக்கப் போற? உனக்கு பொண்ணு பார்க்க சொல்லுறேன்.” என்றுக் கூற…
” நான் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியால இல்லை. எனக்கு அம்முக் குட்டி மட்டும் போதும். அதனால் இந்தப் பேச்சை இத்தோட நிறுத்துங்க.” என்றான் விஸ்வரூபன்.
அவனது இறுக்கமான முகத்தை பார்த்து, ஒரு நிமிடம் அமைதியாக இருந்த கிருஷ்ணன், ” என்னவோ அனுவை மறக்க முடியாத மாதிரி பேசாத… இந்த கல்யாணம் ஏன் நடந்தது? எப்படிப்பட்ட சூழ்நிலையில் நடந்தது என்று எங்க எல்லாருக்கும் தெரியும்.” என்றுக் கூற…
ஏங்க… அப்பா… என்ற குரல்கள் ஒலித்தது.
கௌரியோ ஒரு நிமிடம் அதிர்ந்து தன் அண்ணனைப் பார்த்தவள், கண்கலங்க அந்த இடத்தை விட்டு நகர்ந்துச் சென்றார்.
தன் கணவரை முறைத்தப்படியே, கௌரியின் பின்னால் சென்றார் ரஞ்சிதம்.
” டாட்… நீங்க எதையோ நினைச்சு இப்படி எல்லாம் பேசுறீங்க. உங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்னு எனக்கு தெரியலை. பட் என் வாழ்க்கையில ராதிகாவிற்கு மீண்டும் இடமில்லை. அது சரி வராது.” என்று தன் தந்தையைப் பார்த்து பேச…
” எனக்கு உன் வாழ்க்கை முக்கியம். அப்போ நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ…” என்றார் கிருஷ்ணன்.
” சாரி டாடி… இன்னைக்கு எதுவும் பேச வேண்டாம். நீங்களும் டயர்டா இருப்பீங்க. இன்னொரு நாள் இதைப் பற்றி பேசலாம்.” என்று அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
ஆனால், ஒரு வாரத்திலே மீண்டும் அந்தப் பேச்சை ஆரம்பித்தார். பேச்சு சுமூகமாக முடியாமல் வாக்குவாதம் வளர்ந்தது.
விஸ்வரூபன், ” என் வாழ்க்கையை என் இஷ்டப்படி நடக்க விடுங்க.” என்று கோபத்தில் கத்தி விட்டு வெளியே சென்று விட…
கிருஷ்ணனும் அதற்குக் குறையாத கோபத்தோடு கிளம்பி காஞ்சிபுரம் ஹாஸ்பிடலுக்கு சென்றார். மதிய உணவின் போது தான் இருவரும் சண்டை போட்டுக் கொண்டு சென்றனர்.
ஹாஸ்பிடலில் ஓய்வு அறையில், அதை நினைத்து மனதை உளப்பிக் கொண்டிருக்க, சற்று நேரத்திலேயே நெஞ்சை பிடித்துக்கொண்டு மயங்கி விழுந்து விட்டார். அவருக்கு மைல்ட் ஹார்ட் அட்டாக்.
சரியாக அந்த நேரத்தில், அவர் வந்ததை அறிந்து பார்ப்பதற்காக வந்த ராதிகா, அவர் கிடந்த கோலத்தைப் பார்த்து அதிர்ந்தாள், பிறகு அந்த சூழ்நிலையை தன் கையில் எடுத்துக் கொண்டாள்.
உடனடியாக டூட்டி டாக்டருக்கு இன்டர்காமில் அழைத்து தகவல் சொன்னவள், முதலுதவியையும் ஆரம்பித்து இருந்தாள்.
விரைவாக ஐசியூவில் சேர்க்கப்பட்டார். இவ்வளவு நாள் அவரிடம் கற்றவற்றை, அவருக்கே செய்து அவரது உயிரைக் காப்பாற்றினாள் ராதிகா.
அங்கிருந்தவர்கள் விஸ்வரூபனுக்கு தகவல் சொல்லிவிட, அவனும் ஓடி வந்தான்.
வந்தவன், ஐசியுவிலிருந்து வெளியே வந்த ராதிகாவிடம் விரைந்து சென்றவன், ” அப்பாவுக்கு என்ன ஆச்சு?” என்று பதறி வினவினான்.
ராதிகாவோ திக்பிரமை பிடித்தாற் போல் நின்றவள், ” யாரு அப்பா? என்னாச்சு?” திக்கித் திணறி வினவினாள்.
ஒரு நிமிடம் கண்களை மூடி திறந்த விஸ்வரூபன், ” உன்னோட கிருஷ்ணன் சார் தான் என்னோட அப்பா.” என்றவன் நெற்றியைத் தேய்த்துக் கொண்டான்.
ராதிகாவின் மூளைக்குள்ளோ, தான் இங்கு வேலைக்கு வந்தப்போது சேலவர் டாக் கூறியது காதில் ஒலித்தது. ‘ அவங்க மருமகள் டெலிவரியில் இறந்துட்டாங்க….’
தலைசுற்ற… மயங்கிச் சரிந்தாள் ராதிகா.
அவளைத் தாங்கிப் பிடித்த விஸ்வரூபன், ” ராதா… ராதா…” என பதறினான்.
டூட்டியில் இருந்த நர்ஸ் ஓடி வந்து, அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்து,
தண்ணீர் எடுத்துத் தெளித்தாள்.
விஸ்வரூபன் பதறித் துடித்ததை, கோணல் சிரிப்புடன் ஒருவன் வீடியோ எடுத்து, “எப்பப் பார்த்தாலும் என் கிட்டயே மாட்டிங்கிறீங்களே சார்.” என்று முணுமுணுத்தவாறே, வழக்கம் போல காலேஜ் வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் போட்டவன், இந்த முறை ராதிகாவின் பெற்றோருக்கும் அனுப்பி வைத்தான்.
ராதிகா மெல்ல கண் விழித்தாள்.
இப்போ அவளுக்கு எல்லா புதிருக்குமான விடை தெரிந்து விட்டது.
‘ உள்ளே படுத்திருக்கும் கிருஷ்ணன் சாருடைய மகன் தான் விஸ்வரூபன்.
அப்போ, என்னுடைய அனன்யா இந்த உலகத்தில் இல்லை.’ என்று புரிந்துக் கொண்ட ராதிகாவிற்கு அதிர்ச்சியில் கண்ணீர் கூட வரவில்லை.
இவ்வளவு நேரம் கவலையாக அவளது அருகில் அமர்ந்து இருந்த விஸ்வரூபன், இப்போது தன் தந்தையைக் காண உள்ளே சென்று விட்டான்.
ராதிகாவிற்கும் அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. அவளுக்கு தனிமைத் தேவைப்பட்டது, ஆனால் இன்னும் டாக்டர் கண் விழிக்கவில்லை. அதனால் அவளால் ஹாஸ்டலுக்கு செல்ல முடியவில்லை.
அதற்குள் அந்த கயவன் அனுப்பிய வீடியோ தீயாய் வேலை செய்தது. அதுமட்டுமல்லாமல் ஹாஸ்பிடலில் இருந்தவர்கள் தான், விஸ்வரூபனின் பதற்றத்தை தான் நேரிலே பார்த்து இருந்தனரே…
எல்லோரும் ராதிகாவைப் பார்த்து முணுமுணுக்க… அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
இந்த முறை ஆதவன், அவளுக்கு ஃபோனில் அழைத்து வாட்ஸ்அப்பில் வந்த வீடியோவைப் பற்றிக் கூற…
வேகமாக அதை ஓபன் செய்துப் பார்த்தவள், அதை ரஃப்பிஷ் என ஒதுக்க முடியாமல் அழுதாள்.
ஐசியுவிலிருந்து வெளியே வந்த விஸ்வரூபன், ராதிகா அழுவதைப் பார்த்து, அவளருகே சென்றவன், ” விதி… அவப் போயிட்டா… இப்போ எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்குற?’ என்று வினவினான்.
அவளோ, எதுவும் கூறாமல் அந்த வீடியோவைக் காண்பித்தாள்.
அதிலோ, ” படிக்க வந்த இடத்தில் அப்பாவையும், மகனையும் கரெக்ட் பண்ணிய மாணவி.” என்று இருக்க.
முகம் இறுக நின்றான் விஸ்வரூபன்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
+1
+1

