Loading

தேடல் – 7

 

“மகிழினி யாரு இனியா..?” என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு, ஆழ்ந்து அவனை பார்த்தபடியே எவ்வித சலனமுமின்றி கையில் இருந்த காபியை மிடறு மிடறாய் பருகிக் கொண்டிருந்தாள் அவள்.

அவளின் கேள்வியை கேட்டவனுக்கு தான் மனதில் ஒரு பதற்றமும் பயமும் ஒருங்கே தோன்ற, அந்த பயம் அவன் உடலிலும் மெல்லிய நடுக்கமாக வெளிப்பட்டது. அவனின் மாற்றத்தை தான் உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருந்தாள் அவள். அவனின் பதற்றமும் நொடியில் கலவரமாகி வெளிறிப் போன முகமும், நொடிக்கும் குறைவாக எதிர் வீட்டில் பதிந்த பார்வையும் சொன்னது விஷயம் பெரிதென்று.

நொடிகள் நிமிடங்களாய் கடந்து போன பின்பும், அவன் பதில் சொல்லாது இருப்பதைக் கண்டவள், “உன்னதான்..! இனியா..! மகிழினி யாருனு கேட்டேன்..?” என்றாள் மீண்டும் அழுத்தமாக அவனைக் கூர்ந்துப் பார்த்தபடி.

அவளின் இனியா என்ற அழுத்தமான அழைப்பே இவனுள் பயத்தைக் கூட்டியது. அவனை அவள் பெயர் சொல்லி அழைப்பதே அரிது தான். பெரும்பாலும் அந்த நேரத்தில் அவளுக்கு என்ன தோன்றுகிறதோ அப்படி அழைப்பாள். ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்றால் தம்பி என்று குழைவாள். ஆனால் அவளின் இனியா என்ற அழுத்தமான அழைப்பில் கண்டிப்பாக எனக்கு நீ சொல்லியே ஆகவேண்டும் என்ற மறைமுக கட்டளை இருப்பதைப் போன்றேத் தோன்றியது.

கொஞ்சம் தடுமாற்றத்துடன், “மகி அக்கா பத்தி உனக்கு எப்படி தெரியும்..?” என்றான் அவன். அவளுக்கு பழைய நினைவுகள் வந்திருக்குமோ திரும்பி இருக்குமோ என்ற எண்ணத்தில்.

அவனையே கவனித்துக் கொண்டிருந்தவளுக்கு, ‘மகி அக்கா’ என்ற அவனின் இயல்பான அழைப்பும் புரிந்த அதே சமயம் அவன் முகத்தில் ஒரு நொடி வந்துப் போன சோகத்தின் சுவடையும் அவள் கவனிக்கத் தவறவில்லை.

“எனக்கு தெரிஞ்சா யாருனு நான் ஏன் உன்கிட்ட கேக்கறேன்..?” என்றவள் குடித்து முடித்த டம்ளரை பிடி சுவரின் மீது வைத்துவிட்டு, அதில் சாய்ந்து நின்று கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியப்படி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

“அப்படினா இந்த பேரு உனக்கு எப்படி தெரியும்..?” என்றான் இனியன் அவளுக்கு எதுவும் நினைவு வரவில்லை என்ற நிம்மதியோடு. ஆனால், அந்த நிம்மதி ஆண்டவனுக்கே பொறுக்க முடியவில்லை போலும்!

“இன்னைக்கு வீட்டுக்கு வர வழியில ஒரு பொண்ண பாத்தேன்… என் ஏஜ்தான் இருக்கும்… ஸ்கூல் என்கூட படிச்ச பொண்ணாம். அவதான் மகிழினி எப்படி இருக்கானு கேட்டா..?” என்றாள் மிளிர்.

“ஓஓஓஓஓ…” என்றதோடு அவன் என்ன சொல்லாம் என யோசனையில் ஆழ்ந்துவிட,

“இங்க யாரும் உன்ன ஓஓஓனு ஒப்பாரி வைக்க சொல்லல… கேட்ட கேள்விக்கு ஒழுங்கா உண்மை சொல்லு… அத விட்டுட்டு நிலாவுக்கு ராக்கேட் விடற நாசா சைன்டிஸ்ட் ரேஞ்சுக்கு யோசிச்சாலும் இப்ப உனக்கு எந்த பொய்யும் சிக்காது…” என்றாள் அவனை பார்த்து கேலியாய்.

‘பொய் தான டக்குனு வரது…’ என எண்ணியவனாய்,  “அவங்க உன் கூட படிச்சவங்க… உன்னோட பெஸ்ட் ப்ரண்ட்… அதனால உன்கிட்ட கேட்டு இருப்பாங்க… அவ்வளவு தான் விடு…” என்றான்.

கைப்பிடி சுவற்றை பிடித்தபடி திரும்பி எதிர் வீட்டை பார்த்தவள், “அந்த ப்ரண்டுக்கு வீடு இது தானா..?” என்றாள் குரலில் எவ்வித மாற்றமும் கொண்டு வரமால்.

“உனக்கு எப்படி தெரியும்..?” என்றான் அவன் ஆச்சரியமும் ஒரு வித பயமும் கலந்த குரலில்.

“சாக்க குற..! சாக்க குற..! நான் கேக்கும் போது நீ லைட்டா அந்த வீட்ட திரும்பி பாத்த… அதான் ஒரு கெஸ்சிங்…” என்றவள் இன்னும் அந்த வீட்டை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இல்ல நான் சாதரணமா அங்க பாத்தேன்… அவ்வளவு தான்…” என்றவனுக்கு தன் தமைக்கை அதை நம்ப வேண்டுமே என்ற எண்ணமும் சேர்ந்தே எழுந்தது.

“அப்படியா நம்பிட்டேன்… அது சரி அந்த மகிழினி என் பெஸ்ட் ப்ரண்டுனு தானே சொன்ன… அப்புறம் ஏன் எனக்கு இப்படி ஆனத்துக்கு அப்புறம் ஒரு தடவ கூட என்ன பாக்க அவ வரல… ஒரு போன் கூட பண்ணால…” என்றாள் சதாரணம் போல் அவள். ஆனால் என்னிடம் ‘நீ மறைப்பதை நான் கண்டுக் கொண்டேன்’ என்பதைப் போல குரலில் அப்படி ஒரு இறுக்கம்.

என்ன சொல்லி சமாளிப்பது என்று சத்தியமாய் அவனுக்கு தெரியவில்லை. தன்னுடைய சிறு சிறு அசைவுகளைக் கூட கண்டுபிடிக்கும் அளவிருக்கு தமக்கை இத்தனை புத்திசாலியாய் இருந்திருக்க வேண்டும் என்றுக் கூட எண்ணத் தோன்றியது. சிறு வயதில் அவனின் தமைக்கை தாயையும் தந்தையும் கேள்விகளால் திணறடிக்கும் போது அத்தனை ஆனந்தமாய் வியப்பாய் தமக்கையைக் கண்டு பெருமிதமாய் இருக்கும். இன்று அதே அவனுக்கு நடக்கும் போது ஆயாசமாக இருந்தது.

‘என்ன பதில் சொல்லி எப்படி சமாளிப்பது..?’ என அவன் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே, “இரண்டு பேரும் இங்க இருக்கீங்களா… நான் வீடெல்லாம் தேடிட்டு வரேன்…” என்றபடியே அங்கே வந்தார் வசு. வந்தவர் கோவில் பிரசாதமாக கொடுத்த விபூதியை இருவரின் நெற்றியிலும் வைத்துவிட்டார்.

“தெய்வம்மா நீ..!” என்ற விதத்தில் தான் இருந்தது இனியனின் பார்வை.

“ம்மா… எனக்கு அரியரிக்கு நிறைய படிக்கனும்… நான் போய் படிக்கறேன்…” என அவசரமாக இவன் சொல்லி முடிக்கும் முன்,

“யாரு நீ..? படிக்க போற… இத நான நம்பனும்..?” என இடுப்பில் கை வைத்து அவனை கேலியாக பார்த்து நின்றதுஅதே தெய்வம் தான்.

அதைக்கேட்டு இவன் அப்பாவியாக முகத்தை வைக்க, “நடிக்காதடா… இந்த நடிப்பெல்லாம் நீ அஞ்சாங் கிளாஸ்ல ரேங்கார்ட்ல அப்பா சையன போட்டுட்டு குடுத்த பாரு ஒரு லுக்கு… அப்பவே பாத்துட்டோம்…” என்றார் வசு. பின்னே தில்லைநாதரை தொல்லைநதர்னு எழுதினால் யார்தான் கண்டுபிடிக்க மாட்டார்கள். நாதர் தமிழிலேயே கையெப்பமிடும் பழக்கமுடையவர். அவர் எழுத்துக்களை சேர்த்து எழுதி இருக்க, அப்போது அது அவனுக்கு அப்படிதான் தெரிந்தது, பாவம்.

“அம்மாடி மிளிர்… உனக்கு புடிச்ச பால் கொழுக்கட்டை செஞ்சுருக்கேன்… கீழப் போய் எடுத்து வைக்கறேன்… இரண்டு பேரும் சீக்கரம் சாப்பிட வாங்க…” என்றவர் முன்னே நடப்பதற்குள், அவரைத் தாண்டிக் கொண்டு ஓடியவள் குரல், “அம்மா நான் கீழயே போய்ட்டேன்… நீங்க பால்கொழுக்கட்டைய எடுத்துக் குடுக்காம இன்னும் அங்க நின்னு யார்ட பேசிட்டு இருக்கீங்க …” என படிகட்டுகளில் இருந்து கேட்டது.

அவளுக்கும் புரிந்து தான் இருத்தது. இனி இனியானிடம் எப்படி வற்புறுத்திக் கேட்டாலும், அவன் பதில் சொல்ல போவதில்லை என. ஏதோ ஒன்று அவனை சொல்ல விடாமல் தடுக்கிறது. நிச்சயம் அது தனது நலனின் பொருட்டே இருக்கும் என்ற எண்ணம் வலுக்க, இனி மகிழினியைப் பற்றி தன்னால் நினைவு வந்தால் வரட்டும் இல்லை என்றால் யாரையும் அவள் பற்றிக் கேட்டு கஷ்டப்படுத்த வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருந்தாள் மிளிர்.

சிரித்துக் கொண்டே வசு அவளைப்  பின்தொடர, “இத நாம முன்னாடியே செஞ்சிருக்கனுமோ..?” என்ற எண்ணத்தோடு இவனும் அங்கே விரைந்தான். இல்லையென்றால், இவன் பங்கும் அல்லவா காலியாகிப் போகும். ஆனால், இந்த நிமிட அவர்களின் சந்தோஷம் நீண்ட நாட்கள் நிலைக்க போவதில்லை என்பதை யார் அறிவார்?

💕 💗💗💗 💕

வழக்கமாக அணியும் காக்கிப் பேண்டையும், கருப்பு நிற முழுக்கை டிசர்டையும் அணிந்தவன் கண்ணாடியில் தன் உருவம் பார்த்துக் கொண்டு நீண்ட நேரமாக நின்றிருந்தான். அவனை அறியாமலேயே தன்னியல்பாய் வலதுக்கை கேசத்தை அழுந்தக் கோதிக் கொண்டது. எல்லாரையும் போல் போலீஸ் கட் செய்ததில்லை அவன். அலை அலையாய் நெற்றியில் புரளும் கேசத்தின் மீது அப்படி ஒரு அலாதிப் பிரியம் அவனுக்கு. அவன் அப்படி பார்த்தபடி நின்றிருக்க, “அக்னி..!” என்றபடியே உள்ளே நுழைந்திருந்தார் தெய்வானை.

அவன் நின்றிருந்த கோலம் பார்த்து, “என்னடா… இன்னைக்கும் ஸ்டேஷன் கிளம்பற…” என்றவரின் குரலில் அளவுக்கு அதிகமான ஏமாற்றம்.

“முக்கியமான வேலை இருக்குமா… போய் தான் ஆகனும்…”

“என்னம்மோ போ… இன்னைக்கு தான் உன் அண்ணனுக்கு கல்யாணம் முடிஞ்சு இருக்கு… ராத்திரியே நீ வேலைக்கு போகனும்னு  கிளம்பி நிக்கற… எனக்கு என்னமோ சரியாப்படல…”

“இன்னைக்கு ராத்திரி நான் வேலைக்கு போனா தப்பில்லை… என் கல்யாணம் நடந்த அன்னைக்கு ராத்திரி போனா தான் தப்பு…” என்று அவர் கன்னம் கிள்ளி சொல்லியவன், தனது பெல்டை எடுத்து மாட்டிக் கொண்டிருந்தான்.

“என்ன பேச்சு பேசற நீ… அண்ணன் இன்னைக்கு அங்க தான் தங்கப் போறான்… மூனான் நாள் தான் நம்ம வீட்டுக்கு அழைக்கறோம்… இப்போ நீயும் கிளிம்பி போனா… கேக்கறவங்களுக்கு நான் என்னடா சொல்லறது..?”

“ம்ம்ம்… உன் ரெண்டாவது புள்ளையும் ப்ர்ஸ்ட் நைட்டுக்கு பொண்ணு தேட போயிருக்கானு சொல்லு…”

“அடி ஆத்தி… பேச்ச பாரு…” என்றபடியே முதுகில் ஒன்று வைத்திருந்தார் தெய்வானை. எதையாவது பேசி இரண்டு அடிகளை தெய்வானை இடமிருந்து வாங்கவில்லை என்றால் அன்றைய பொழுதே நிறைவாய் இருக்காது அவனுக்கு.

“இந்த வயசுல பேசாம உன்ற புருஷர் வயசுலையா பேச முடியும்… போ ம்மா அங்குட்டு…”

“நீ இப்படியே பேச்ச மாத்தலானு பாக்கத… இன்னைக்கு நீ எங்கயும் போகக் கூடாது… அவ்ளோதான்…”

“ஏனாம்..?”

“ஊருக்கு கிளம்பி போன உன் பெரியத்தை திரும்பி வந்து நடுவீட்டுல உக்காந்து இருக்கது ஏன் தெரியுமோ..?”

“அப்பா வந்து இரண்டு நாளைக்கு இருக்கு சொன்னதால திரும்பி வந்துட்டாங்க…”

“அப்படியா..!” என வியந்து ஆச்சரியமாய் தெய்வா கேட்க,

“இல்லையா பின்ன..?” என கேள்வியாய் அவரைப் பார்த்தான் அக்னி.

“அதை உங்க அப்பாவே சொல்லுவாரு… வந்து கேளு…” என்னபடியே தெய்வானை வெளியே சென்றுவிட்டார்.

தனது கருமை நிற சூவையும் அணிந்துக் கொண்டவன், தூப்பாக்கியை எடுத்து பின்புறம் மறைத்து வைத்தான். மீண்டும் ஒரு முறை கண்ணாடியில் தனது உருவத்தை பார்க்க, திருப்தியாய் இருந்தது. தனது கூலர்சை எடுத்து கையில் சுழற்றியபடியே இவன் இறங்கி வர, மொத்த குடும்பமுமே இவனுக்காக தான் காத்துக் கொண்டிருந்தது.

அக்னியின் தந்தை ஜெயவேலன். அளவுக்கு அதிகமாகவே தம் மக்களை கண்டிக்கும் பழக்கம் கொண்டவர். ஆனால், அவருக்கு நேர்எதிர் தெய்வானை. அவர்களுக்கு இரண்டு மகன்கள். முத்தவன் இசைவேந்தன், விரும்பி தனது தாய்மாமனின் மகளை இன்று தான் திருமணம் முடித்திருந்தான். அடுத்தது தான் அக்னிமித்திரன். பிள்ளைகள் இருவருக்குமே தாயிடத்தில் தான் அதிக ஓட்டுதல். ஜெயபாலன் வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் வீடு தலைமை ஆசிரியர் நுழைந்த வகுப்பறைப் போன்றே இருக்கும். இப்படி அவர் தலை மறைந்ததோ இல்லையோ அடுத்த நொடியே வீடு விளையாட்டு மைதானம் போலாகிப் போகும்.

ஜெயபாலனுடன் பிறந்தவர்கள் நால்வர். இவரே அனைவருக்கும் மூத்தவர். இவருக்கு அடுத்து மூன்று தங்கைகள். ஆதிலட்சுமி; விஜயலட்சுமி; பாக்கியலட்சுமி.  அதற்கு அடுத்து தனபாலன் என்றொரு தமையன். கடைக்குட்டி என்பதால் தனாவின் மேல் அனைவருக்குமே கொஞ்சம் செல்லமும் பாசமும் அதிகம் தான். அதே சமயம் இசை, அக்னி இருவரிடமும் ஜெயவேலனை விட இவரே அதிகம் நெருக்கம் காட்டுவார். இசைக்கும் இவருக்கும் பத்து வயதே வித்தியாசமிருக்க, அதற்கு அதுவும் ஒரு காரணம். இயல்பிலேயே மகன்களுடன் ஒன்ற முடிந்தது அவரால். அதேப் போல்தான் அவர்களுக்கும். தந்தையிடம் எந்த காரியம் ஆக வேண்டுமென்றாலும் தனாவின் மூலமே காய் நகர்த்துவார்கள் இருவரும். ஏனென்றால் தனா வந்து கேட்டால் எதையும் மறுக்க மாட்டார் ஜெயபாலன். அவரைப் பொறுத்தவரை தனாவே அவரின் மூத்த புதல்வன். தனாவும் கேட்டு இரண்டு வருடமாக அவர் ஒப்புக் கொள்ளாத ஒரே விசயம் இருந்தது என்றால் அது இசை – திவ்யா திருமணமே!

ஆதிலட்சுமிக்கு இரண்டு மகள்கள்.அ டுத்ததாய் விஜயலெட்சுமிக்கு ஒரே ஒரு மகன் மட்டும். பாக்கியலெட்சுமிக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள். தனவேலனுக்கு மூத்தது மகன். அதற்கு அடுத்து கடைக்குட்டியாய் ஒரு பெண். ஆதிலட்சுமியின் மூத்த மகளையே இசைக்கு மணமுடிக்க விரும்பினார் ஜெயவேலன். ஆனால், இசைதான் தெய்வானையின் தம்பி மகளை விரும்பி விட்டானே! மறுப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்றாலும், அதை ஏற்கவும் முடியவில்லை. அதனாலேயே அவர் இழுத்தடிக்க,  “இது நம் மகனின் வாழ்வு மட்டுமல்ல… நம் மகளின் வாழ்வும் கூட..  விருப்பபட்டவரை மணமுடித்தால் தான் இருவருமே சந்தோஷமாய் இருக்க முடியும்…” என அவரை பேசி பேசியே கரைத்தது தனா தான். ஆனாலும் இப்போதும் கூட சகோதரிகள் மூவருக்கும் இந்த திருமணத்தில் விருப்பமில்லை. அண்ணனுக்காகவே வந்திருந்தனர். இத்தனைக்கும் ஆதியின் மூத்த மகளுக்கு வேறு இடத்தில் பார்த்து திருமணத்தை முடித்த பிறகு தான் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருந்தார் ஜெயா. எங்கே வேறு ஒருத்தியை இந்த வீட்டிற்கு மருமகளாய் கொண்டு வந்து அண்ணன் குடும்பத்திற்கும் தங்களுக்குமான உறவு கொஞ்சம் கொஞ்சமாய் இல்லாமலேயே போய்விடுமோ என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கிறது.

இரும்பு கம்பிகள் வேயப்பட்ட முற்றத்தின் நடுவில் மரநாற்காலியில் ஒன்றில் ஜெயா அமர்ந்திருக்க, அந்த முற்றத்தை சுற்றி அவரின் மூன்று தங்கைகளும் அவர்களின் கணவருர்களும் அவர்களின் மக்களும் என குழுமி அமர்ந்திருந்தனர். அடுத்தததாய் தனாவின் மனைவியும் மக்களும் என பின்னல் அமர்ந்திருந்தனர். பார்த்ததும் பக்கென்று இருந்தது அக்னிக்கு. தெய்வானைக்கு ஒரே ஒரு தமையன் மட்டுமே. ஆக அவர் சொந்தங்கள் மொத்தமும் மணமகள் வீட்டில் இருக்க இங்கு யாரும் இல்லை.

ஒரு ஓரத்தில் கைகட்டி நின்ற தனாவை இழுத்து தோளில் கைப்போட்டு அணைத்தபடி பிடித்துக் கொண்டவன், “என்ன சித்தப்பு… மொத்த குடும்பமும் கூடி முத்தத்துல குத்தவச்சு உக்காந்து இருக்காரு உங்க அண்ணன்… என்ன மேட்டர்..?” என்றான் கிசுகிசுப்பாய்.

“அது யாருக்கு தெரியும்… உன் அப்பாரு தான் மொத்த கூட்டத்தையும் கூட்டி வச்சுட்டு அர மணி நேரமா  மோட்டு வளைய வெறிச்சு வெறிச்சு பாத்துட்டு இருக்காரு… நானும்  மனுஷன் ஏதாவது பேசுவாருனு பாக்கறேன்… ம்ம்கூம் வாயவே தொறக்க காணும்…”

“அப்படியா சித்தப்பு சொல்லற… ஆனா எட்டப்பாரு…” என அக்னி ஏதோ சொல்ல வர,

“என்னடா சொன்ன எங்க அண்ணன..?” என கோபமாய் அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தார் தனா.

“ஏன் எங்காப்பாருனு சொன்னேன்… உனக்கு வேற எதும் கேட்டுச்சா..?”

“இல்லையே..! எட்டப்பனு சொன்ன மாதிரி இல்ல எனக்கு கேட்டுச்சு…”

“வயசானலே இப்படி தான்… காதும் அவுட்டா… சரி அதவிட்டு விஷயத்துக்கு வா சித்தப்பு…” என்ற அக்னிக்கு, “ஜெய்ஸ்ட் மிஸ்டா அக்னி… இல்ல சித்தப்பே உன்ன கும்மிருக்கும்… இவிங்க பாசத்துக்கு ஒரு பாடர போடுடா ஆண்டாவா..!” என அவசரமாய் மனதிற்குள் ஒரு வேண்டுதல் வைத்தான்.

“என்ன கேட்டா எனக்கு என்ன தெரியும்…” என்றார் கருப்பை அவர்.

“உனக்கு தெரியமா இங்க எதுவும் நடக்காதே..! எங்க அப்பாரு உக்காந்து இருக்க தோரனையே சரியில்லை… இதுல உன் அக்காளுங்க மூனு பேரும் ஆளுக்கு ஒரு தூண கட்டிபுடிச்சு உக்காந்து இருக்கத பாத்தா… ஸம் திங் ராங்… மொத்தமா சேந்து எவன் குடும்பத்துலையாவது கும்பி அடிக்க முடிவு பண்ணிட்டீங்களா..?” என்றான் இன்னும் கிசுகிசுப்பாக.

“ம்ம்ம்… உன்ற வாழ்க்கையில தான்டா மகனே கும்மி அடிக்க போறோம்… என்ற பேமிலிய பாத்தா எப்படி தெரியுது உனக்கு… வீ ஆர் வெல் எஜுகேட்டட் அண்ட் சீசண்ட்… யூ நோ…” என தனா சொல்லி முடிப்பதற்குள், “அங்க என்ன வெட்டி பேச்சு தனா… இங்க வர சொல்லு அவன…” என அக்கினியை கைநீட்டி அருகில் அழைத்த ஜெயவின் குரலே மிரட்டும் தோனியில் கட்டளையிடும் குரலாக தான் இருந்தது.

அனைவரையும் விலக்கிக் கொண்டு அக்னி முன்செல்ல, அவனின் பின்னால் வருவார் என நினைத்திருந்த தனாவோ அங்கையேடீ தான் நின்றிருந்தார். “யோவ் சித்தப்பா… கூட வருவனு பாத்தா… என்னையா கோத்துட்டு வேடிக்கையா பாக்கற… இந்த மனுஷன் வேற பொசுக்கு பொசுக்குனு கைய நீட்டுவாறே..! மொத்த குடும்பத்து முன்னாடியும் மானம் மல்லாந்துடுமோ..?” என இவன் யோசித்துக் கொண்டிருக்கையிலேயே அவர் தொண்டையை செறுமி பேச தயாரானார்.

“இன்னைக்கு கூட சார் உத்தியோகத்து போயே ஆகனுமோ..? இல்லைனா நாட்டுல சட்டம் ஒழுங்கு சீர்குலைஞ்சுடுமோ..?” அவர் முறைத்துக் கொண்டே கேட்க,

“இல்லைங்கப்பா… கொஞ்சம் அவர வேலை… அதான்…” பம்மிக் கொண்டு பதில் சொன்னான் அவன்.

“ம்ம்ம்… அக்னி உனக்கே தெரியும் இந்த குடும்பத்துக்கு நான்தான் மூத்தவனு… எனக்குனு சில பொறுப்பும் கடமையும் இருக்கு…” என அவர் ஆரம்பிக்கவும், இவன் தலையில் கை வைக்காத குறைதான்.

‘ஆரம்மிச்சுட்டாருயா… இவரு குடும்ப தரித்தத்த… ச்ச்ச்சே… சரித்தரத்த… நல்ல வேளை எங்க கொள்ளு தாத்தா கூட பொறந்தவங்க பன்னெண்டு பேருனு ஆரம்பிக்கேயே… அதுவரைக்கும் சந்தோஷம்…’ என இவன் மனதுக்குள்ளையே கவுண்டர் கொடுக்க அங்கே ஜெயா தொடர்ந்தார்.

“என் கூட பொறந்த மூனு தங்கச்சிங்களுமே எனக்கு என் பொண்ணுங்க மாதிரிதான்… அவங்க கண்ண கசக்கிட்டு நின்னா என்னால தாங்க முடியாது… எனக்கு அவங்களுக்கு அடுத்தது தான் எல்லாமே… நீங்களும் தான்… அது உங்களுக்கே தெரிஞ்சி இருக்கும்…”

‘அப்பாருனு கூட பாக்க மாட்டேன்… புடிச்சு உள்ள போட்டுடுவேன், ஆமான்..! சீக்கரம் சொல்லுயா… டூயூட்டிக்கு டைம் ஆகுது…’ என அவன் மனதுக்குள் புலம்ப,

“என்னடா நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்… நீ பாட்டுக்கு நிக்கற…”

“இல்லைங்கப்பா… நீங்க சொன்னத கவனமா கேட்டுட்டு இருக்கேன்…”

“ம்ம்ம்… எனக்கு என் தங்கச்சிங்க தான் ரொம்ப முக்கியம்…”

“அப்போ சித்தப்பு…” என்ற அக்னியை முறைத்து பார்த்தவர் தொடர்ந்தார்.

“அந்த தங்கச்சிங்க கண்ணுல தண்ணீ வந்தா என்னால தாங்க முடியாது…”

‘அது என்ன குடிதண்ணீ குழாயா..? ஓயாம தண்ணீ வர… அடுத்த டையலாக்கு வாரும்… இதையே சொல்லி உயிர வாங்கிட்டு..!’ என இவன் மனதில் கவுண்டர் குடுக்க,

“ஆனா, இன்னைக்கு அந்த தங்கச்சி என் கண்ணு முன்னாலையே கண் கலங்கி யாரோ மாதிரி ஒரு முலையில நிக்கறா…”

‘இது எப்போ..?’ என தனது மூன்று அத்தைமார்களையும் தான் பார்த்துக் கொண்டிருந்தான் அக்னி.

“அது ஏன்னு உனக்கு நான் சொல்லனுமுனு அவசியமில்லை… உன் பெரியத்த பொண்ண நம்ம இசைக்கு கட்டனுமுனு அவ்வளவு ஆசை ஆசையா இருந்தோம்… ஆனா முடியாம போச்சு… அதனால என் தங்கச்சி மனசு ரொம்பவே ஓடிஞ்சு போச்சு…”

‘ஒடஞ்சு போக அது என்ன வேப்பங்குச்சியா… அதுவே ஆலமரம் சைசுவ இருக்கு… படக்குனு விசயத்துக்கு வாயா… எனக்கு வேற நெஞ்சு பக்குபக்குனு இருக்கு…’

“என் தங்கச்சி மனசு கஷ்டபட கூடாதுனு தான் இசை கல்யாணத்துக்கு முன்ன அது பொண்ணு கல்யாணத்த முடிச்சோம்… ஆனாலும், இன்னைக்கு இசை கல்யாணத்துல என் தங்கச்சிங்க யாரோ மாதிரி நிக்கும் போது.. எனக்கு பக்குனு ஆகிப் போச்சு…”

“யோவ்… இதுங்க அடிச்ச கூத்துக்கு என்ற மாமாதான்யா பக்குனு நெஞ்ச புடிச்சுட்டு சாஞ்சுட்டாரு…”

“மூனாவது வீட்டு பொண்ண கட்டுனா என் உறவெல்லாம் தூரமாகிடும்… உனக்கு அப்புறம் இந்த வீட்டுல யாரு இருக்கானு ஆதி மனசு கலங்கி சொல்லும் எனக்கு உசுரே இல்ல… எனக்கும் அப்படி தானோனு தோனுது… அதனால…”

‘அதனால… யோவ்… ஒரு ப்ளோல போய்ட்டு இருக்கும் போது பிரேக் போட்டு பி.பிய ஏத்தரிங்க…’

துக்கத்தில் அடைத்த தொண்டையை செறுமி சரிசெய்துக் கொண்டு, “அதனால… ஆதியோட சின்ன மவ… நிவிக்கும் உனக்கும் கல்யாணம் முடிக்கலானு நாங்க முடிவு பண்ணி இருக்கோம்…” என்றார் ஜெயா.

‘எது… முடிவே பண்ணிட்டீங்களா..?’ மனதுக்குள் தான் கேட்டுக் கொண்டான் அக்னி.

“அடுத்த வெள்ளிக்கிழமை நல்ல நாளா இருக்கு… நம்ம வீட்டுல இருந்து போய் தட்ட மாத்திட்டு… அடுத்த முகூர்த்துலையே கல்யாணத்த முடிச்சுடுவோம்…” என்றவர் அவ்வளவு தான் பேச்சு முடிந்தது என எழுந்துக் கொள்ள, இவன் அப்படியே சிலையென சமைந்து போனான்…

“அதான் பேசியாச்சுல… நேரமாகுது… போய் எல்லாரும் சாப்பிட்டு படுங்க… போங்க… நாளைக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு… சீக்கரமே ஏந்திரிக்கனும்…” என்று அவர் ஒரு அதட்டல் போட, சட்டென கலைந்துப் போனது கூட்டம்.

    – தேடல் தொடரும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்