
அத்தியாயம் -39
நெஞ்சமெல்லாம் பதட்டம் நிறைய, கண்களில் இருந்து தெறித்து விழத் தயாராக இருக்கும் கண்ணீரை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு மருத்துவமனை வரவேற்பரையில் இருந்த பெண்ணிடம் விசாரித்தாள் மீனா.
“சி.. சிஸ்டர்.. மிஸ்டர் நவீன்?”
“ஆக்சிடென்ட் கேசா? கொஞ்ச நேரம் முன்னாடி வந்தவங்க தானே?”
“எஸ்.. எஸ் சிஸ்டர்”
“அவர் ஐசியூ வில இருக்காரு. நேரா போயி லெஃப்ட் திரும்புங்க. ஐசியூ வார்ட் வரும். அங்கே போயி முன்னாலேயே நில்லுங்க மேடம். உள்ளே போகக்கூடாது. வெளியே வெயிட் பண்ணுங்க”
ஐசியூ என்றவுடன் இன்னும் பதட்டம் சேர்ந்தது அவளுக்கு. உடனே அங்கு ஓடினாள்.
இடது பக்கம் திரும்பியவுடன் நேராகத் தெரிந்தது அந்த அறை. ஐசியூ என்று மேலே எழுதப்பட்டிருந்தது.
அதன் முன்னே சென்று நின்றாள். அவளால் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் அவளுடைய அனுமதி இன்றி வெளியேறிக் கொண்டிருந்தது.
‘என்ன ஏதுன்னு எதுவும் தெரியலையே! சபரி எங்கே போனாரு? காணோமே அவர! வேற எங்கேயாவது வெயிட் பண்றாரா?’
யோசனையுடன் அங்கும் இங்கும் நடந்து சென்று பார்த்தாள். சபரியை எங்கும் காணவில்லை. அலைபேசியை எடுத்து அவனுடைய எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள். எதிர்முனையில் அழைப்புச் சத்தம் கேட்டுக் கொண்டே தான் இருந்தது. அழைப்பை ஏற்கவில்லை சபரி.
‘எனக்குப் ஃபோன் பண்ணி வரச் சொல்லிட்டு அவர் எங்கே போனாரு?’
பொறுமையின்றி குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள். கதவில் இருந்த கண்ணாடி வழியே உள்ளே பார்த்தாள். அவளுடைய கண்களுக்கு எதுவும் தெரியவில்லை.
நிலைகொள்ளாமல் தவித்தபடி ஓரிடத்தில் நிற்கவும் முடியாமல் உட்காரவும் முடியாமல் பரிதவித்துக் கொண்டிருந்த நேரத்தில் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
அவசரமாகப் பார்த்தாள். ஒரு செவிலியர் பெண் வேகமாக வெளியே வந்தாள். நடப்பவளை நிறுத்தினாள் மீனா.
“சிஸ்டர்.. சிஸ்டர்.. ப்ளீஸ்! மிஸ்டர் நவீன், ஆக்சிடென்ட் ஆனவர், இப்ப எப்படி இருக்கார்? பயம் எதுவும் இல்லையே?” பரிதவிப்புடன் கேட்டாள்.
“கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க மேடம்! டாக்டர் வருவார். அவர் கிட்ட கேளுங்க”
அந்தப் பெண் நிற்காமல் நடந்தவாறே பதிலளித்து விட்டு மறைந்தாள் அங்கிருந்து.
சிறிது நேரத்தில் கையில் ஏதோ மருந்துகள் அடங்கிய ட்ரேயைக் கையில் எடுத்து வந்தவள், மீண்டும் உள்ளே சென்று விட்டாள்.
அடுத்த அரைமணி நேரம் நகர்ந்த பிறகு மருத்துவர் ஒருவர் வெளியே வந்தார். உடனே மீனா, அவரிடம் அவசரமாக ஓடினாள்.
“டாக்டர், என் அண்ணன் ந.. நவீன் எப்படி இருக்கார்?”
இப்போது அவளிடம் இருந்து அழுகையுடன் கூடிய வார்த்தைகளாய் வெளி வந்தன.
ஒரு விநாடி அவளை உற்றுப் பார்த்த மருத்துவர், “மிசஸ் சபரி?” என்று கேட்டார்.
“எஸ்.. எஸ் டாக்டர்!” கண்ணீருடன் பதில் கூறிய மீனா, அப்போது தான் அவரைச் சரியாகப் பார்த்தாள்.
‘இவர், அன்னைக்கு கோயில்ல நாம பாத்த டாக்டர் இல்லையா?’ என்று யோசித்தாள்.
ஆம்.. அன்று, திருமணம் முடிந்த மறுநாள் சபரியும் மீனாவும் சேர்ந்து கோயிலுக்குச் சென்றிருந்த போது சந்தித்த, சபரியைப் பற்றி பெருமையாகப் பேசிய அதே மருத்துவர் தான்.
“ஓ! ஆக்சிடென்ட் ஆன மிஸ்டர் நவீன், உங்க அண்ணன் தானா?”
“ஆமா டாக்டர், என் அண்ணன் தான். இப்ப எப்படி இருக்கு டாக்டர், அண்ணனுக்கு? எந்தப் பிரச்சினையும் இல்லையே அவருக்கு?”
அதற்குள் பேச முடியாமல் நா தழுதழுத்தது மீனாவுக்கு. அவளுடைய தவிப்பைப் பார்த்த மருத்துவர்,
“பதறாதீங்க மிசஸ் சபரி! மிஸ்டர் நவீன் இஸ் அவுட் ஆஃப் டேஞ்சர் நவ்! அவருக்கு இப்ப எந்தப் பிரச்சினையும் இல்ல. பயப்பட வேண்டாம்”
நிம்மதியில், பெருக்கெடுத்து வந்த அழுகையை பெரும்பாடு பட்டுத் தடுத்து நிறுத்தினாள் மீனா.
“ரொ.. ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்!”
“தேங்க்ஸ் சொல்லணும்னா நீங்க உங்க ஹஸ்பண்டுக்குத் தான் மொதோ சொல்லணும். அவர் தான் மிஸ்டர் நவீன சரியான நேரத்தில கூட்டிட்டு வந்தாரு. அது மட்டும் இல்ல, ஆக்சிடென்ட்ல நிறைய பிளட் லாஸ் ஆயிருந்தது அவருக்கு.
நல்லவேளையா, உங்க பிரதரோட பிளட் குரூப்பும் சபரியோட பிளட் குரூப்பும் ஒத்துப் போச்சு. உடனே கொஞ்சம் கூட டைம் வேஸ்ட் பண்ணாம சபரியோட பிளட் ஏத்தினதால தான் அவருக்கு நினைவு திரும்பிச்சு. அப்படி இல்லாம, பிளட் ஏத்த நேரமாயிருந்தா கூட அவர் உயிர் பிழைக்கிறது ரொம்ப ரிஸ்க் ஆகியிருக்கும். தேங்க் காட்! நாம கடவுளுக்குத் தான் நன்றி சொல்லணும்மா”
“எ.. என் ஹஸ்பண்ட் எங்கே இருக்காரு டாக்டர் இப்ப?”
“அவரும் உள்ளே தாம்மா இருக்காரு. பிளட் இன்னும் ஏறிட்ருக்கு உங்க அண்ணனுக்கு”
“உள்ளே போயி பாக்கலாமா டாக்டர்?”
“இல்லேம்மா, இங்கேயே வெயிட் பண்ணுங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில மிஸ்டர் சபரி வந்துருவாரு. நான் சொன்னதுக்கு அப்புறமா நீங்க உங்க அண்ணன உள்ளே போயி பாக்கலாம். பட், ஒரு நேரத்தில ஒருத்தர் மட்டும் தான் உள்ளே போகணும்”
விவரங்களைக் கூறி விட்டு நகர்ந்தார் மருத்துவர்.
நிம்மதிப் பெருமூச்சுடன் அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தாள் மீனா. அதற்கு மேலும், தன் தாய் தந்தையிடமும் அண்ணியிடமும் சொல்லாமல் இருப்பது சரியில்லை என்கிற எண்ணத்தில் தன் அலைபேசியை எடுத்துத் தன் தந்தையின் எண்ணிற்கு அழைத்தாள்.
விஷயத்தைக் கேட்டதும் பதறினார் மாணிக்கம். அவரிடம், மருத்துவர் பயப்படத் தேவையில்லை என்று கூறியதைச் சொல்லி சமாதானம் செய்தாள்.
“அம்மாவும் அண்ணியும் விஷயத்தைக் கேட்டுப் பதறிப் போயிடுவாங்கப்பா. நீங்க தான் பக்குவமா சொல்லி அவங்களக் கூட்டிட்டு வரணும்” என்று தந்தையிடம் கூறினாள்.
“சரிம்மா, புரியுது. பாத்துப் பேசி கூட்டிட்டு வர்றேன். நம்ம மாப்பிள்ளைய நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கும்மா மீனா. எப்படி இருப்பாரோ என்னமோன்னு ரொம்ப பயந்துட்டு இருந்தேன். ஆனா பாரு, இப்ப நம்ம நவீனோட உயிரையே காப்பாத்தி இருக்காரு. நமக்குக் கிடைச்ச பொக்கிஷம்மா அவரு!”
பெருமிதமாகக் கூறினார் மாணிக்கம். குரல் நடுங்கியது அவருக்கு.
“ஆமாப்பா.. நிஜம் தான்பா. அவர் புருஷனா கிடைக்கிறதுக்கு நான் ரொம்ப குடுத்துத் தான்பா வச்சிருக்கணும்”
குரலில் பெருமை தொனிக்கக் கூறினாள்.
“சரிப்பா, சீக்கிரம் வாங்க” கூறிவிட்டு அழைப்பை அணைத்தாள்.
அவளுக்குச் சபரியை அப்போதே பார்க்க வேண்டும் போல் மனம் துடித்தது. தன் அண்ணனை நினைத்து இன்னமுமே அவளுடைய இதயம் படபடவென அடித்துக் கொண்டிருந்தது.
கொஞ்சம் தாமதம் ஆயிருந்தாலும் உயிர் பிழைத்திருப்பதே கடினம் என்று மருத்துவர் கூறிய சொற்கள் நினைவில் வந்து அவளை இன்னமுமே துடிக்க வைத்தன.
அடுத்த அரைமணி நேரத்தில் மாணிக்கம், ரேணுகா மற்றும் அர்ச்சனா வந்து சேர்ந்தனர். வரும் போதே அழுகை நிறைந்த கண்களுடனே வந்தாள் அர்ச்சனா.
“மீ..மீனா, அவருக்கு என்னாச்சு?” இப்போது நன்றாகவே அழ ஆரம்பித்தாள்.
“ஏய் மீனா, உன் அண்ணனுக்கு என்னவாம்டி? பயம் எதுவும் இல்லையே?” பதட்டம் நிறைந்த குரலில் கேட்டார் ரேணுகா.
மாணிக்கமோ, ஒரு ஓரத்தில் அமைதியாக, கொஞ்சம் பயம் நிறைந்த முகத்துடன் நின்றிருந்தார்.
“அம்மா, பயப்பட்றதுக்கு எதுவும் இல்ல. அண்ணி, அழாதீங்க. டாக்டர் இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி தான் வெளியே வந்து, எந்தப் பிரச்சினையும் இல்ல இப்ப. அபாயக் கட்டத்த தாண்டிட்டதா சொல்லிட்டுப் போனாரு. அழாதீங்கண்ணி. அண்ணனுக்கு எதுவும் ஆகாது”
மூவரையும் சமாதானம் செய்தாள் மீனா.
அடுத்த பத்து நிமிடங்களில், கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான் சபரி.
கணவனைக் கண்டதும் அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை, அதற்கு மேல் பொறுக்க முடியாமல் பீறிட்டுக் கிளம்பியது மீனாவுக்கு.
தாம் எங்கிருக்கிறோம் என்கிற நினைவு கூட இல்லாதவளாய், வேகமாக ஓடிச்சென்று அவனை அணைத்துக் கொண்டு மார்பில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.
“ஹேய், நவீனுக்கு ஒன்னுமில்ல. நல்லா இருக்காரு. பயம் எதுவும் வேணாம். கூல் பேபி!”
மனைவி வந்து தன் மார்பில் சாய்ந்ததும் அது மருத்துவமனை என்பது அவனுக்கும் மறந்து போனது.
“மாப்பிள்ள, நவீனுக்கு நினைவு இருக்கா? நாங்க பாக்கலாமா?”
தன் தந்தையின் குரலைக் கேட்டுச் சட்டென்று விலகி நின்றாள் மீனா.
“நினைவு திரும்பிடுச்சு மாமா. நவீன் இப்ப நல்லா இருக்கார். வீணா நீங்க டென்ஷன் ஆகாதீங்க” கூறியவன், அர்ச்சனா அங்கு அழுது கொண்டே நிற்பதைப் பார்த்து,
“ஏய், பாரு உன் அண்ணிய. சமாதானம் பண்ணு அவங்கள” என்று மீனாவிடம் கூறினான்.
“நீங்க எங்கே மாப்பிள்ள பாத்தீங்க நவீன? உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“மாமா, அது அந்தக் கடவுள் அருள்னு தான் மாமா சொல்லணும். இன்னைக்கு ஆஃபிஸ்ல இருந்து கிளையண்ட் ஒருத்தரைப் பாக்குறதுக்காக நான் போயிட்டு இருந்தேன். அந்த நேரத்தில எனக்குக் கொஞ்சம் முன்னாடியா தான் நவீன் வண்டியில போயிட்டு இருந்திருக்காரு. நானே கவனிக்கல.
அப்ப திடீர்னு பாத்தா, எனக்கு முன்னால போயிட்ருந்த ஒரு வண்டி மேலே எதுக்க வந்த லாரி ஒன்னு மோதிருச்சு. ஒரு நிமிஷம் பக்குன்னு தான் மாமா இருந்தது. போயி பாத்தா, அங்கே நம்ம நவீன் தான் ரத்த வெள்ளத்தில கிடந்தாரு.
உடனே ஆம்புலன்சுக்கு ஃபோன் பண்ணா கூட வர கொஞ்ச நேரம் ஆகுமேன்னுட்டு, உடனேயே அங்கே இருந்த ஒரு ஆட்டோவில கூட்டிட்டு நேரா இங்கே வந்துட்டேன். நான் அந்த நேரத்தில அங்கே இருந்ததால உடனே கூட்டிட்டு வர முடிஞ்சது மாமா என்னால”
மாணிக்கம், கண்ணீர் நிறைந்த கண்களுடன் கடவுளை வணங்கிக் கொண்டார்.
அடுத்த நாள் நவீனை ஐசியூவில் இருந்து தனியறைக்கு அழைத்து வந்தனர்.
அன்று காலை பத்து மணியளவில் மீனா மட்டும் மருத்துவமனையில் இருந்தாள். இரவு அங்கே தங்கியிருந்த அர்ச்சனா, சிறிது நேரம் முன்பு தான் மீனா வந்தவுடன் வீட்டிற்குக் கிளம்பிச் சென்றாள்.
நவீனை, செவிலியர் பெண்கள் இருவர் வந்து நடக்க வைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது மீனாவின் அலைபேசி சத்தமிட்டு அழைத்தது. எடுத்துப் பார்த்தாள் மீனா. தொடுதிரையில் புது எண் ஓடிக் கொண்டிருந்தது.
அழைப்பை ஏற்பதா வேண்டாமா என்று யோசித்தவள், எதற்கும் யாரென்று பார்த்து விடலாம் என்கிற எண்ணத்தில் அழைப்பை ஏற்றுக் காதுக்குக் கொடுத்தாள்.
“ஹலோ!”
“ஹலோ மீ..மீனா”
எதிர்முனையில் இருந்து வந்த குரல் இதற்கு முன்பு கேட்ட குரலாகத் தோன்றியது மீனாவுக்கு. ஆனால் யாரெனச் சட்டென நினைவில் வரவில்லை அவளுக்கு.
“யா.. யார் பேசுறது?” எனக் கேட்டாள்.
“நான் ஆகாஷ் பேசுறேன் மீனா”
தூக்கிவாரிப்போட அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து எழுந்து நின்றாள் மீனா.
“ஆ.. ஆகாஷ், நீங்களா? எ.. எப்படி இருக்கீங்க ஆகாஷ்? நல்லா இருக்கீங்க தானே? உங்களுக்கு எதுவும் ஆகலல்லே?” படபடவென வரிசையாகக் கேள்விகளாக அடுக்கினாள்.
அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நல்ல மனிதன் மருமகனாக வாய்த்த நிம்மதி மீனாவின் பெற்றோருக்கு.
தனது அன்பானவளுக்காக அவள் அடைந்த வேதனைகளுக்கு காரணமானவள் என்று எண்ணி தானே பழி வாங்க எண்ணினான்.
பழி வாங்கும் பொருட்டு கொடூரமாக நடந்து கொள்ளாமல் தனிப்பட்ட முறையில் மீனாவை மட்டும் மனம் நோக செய்ய எண்ணினான்.
இத்தனை நாட்களுக்கு பிறகு ஆகாஷ் எதற்காக மீனாவை தொடர்பு கொள்கின்றான்? சம்மந்தம் இல்லாமல் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டவன் அவன் தான்.
மிக்க நன்றி 😊