Loading

தேடல் 6:

மயங்கி விழுந்தவளை மடியில் தாங்கிக் கொண்டு, சுற்றி நின்ற எவரின் அதிர்ந்த பார்வையும் கண்டுக் கொள்ளாது, “மிளிர்… மிளிர்… இங்க பாரும்மா… என்ன பாரும்மா… கண்ண திறந்து என்ன பாரும்மா… உனக்கு ஒன்னும் ஆகாது… மிளிர்… மிளிர்ம்மா… ” என கொஞ்சலாய் அவள் கன்னம் தட்டி எழுப்ப முயன்றுக் கொண்டிருந்தான் அக்னி. அப்படியும் அவள் கண் விழிப்பதற்கான சிறு அறிகுறியும் இல்லாதுப் போக, இப்போது கொஞ்சமாய் பதற்றம் தொற்றிக் கொண்டது அவனை.

 

“டேய்… மசமசனு பாத்துட்டு நிக்கறீங்களே… வெளிய டாக்டர் யாராவது இருந்தா கூட்டிட்டு வாயேன்… இல்ல ஆம்புலன்ஸ்காது கால் பண்ணேன்…” என இவன் பதறி பரபரத்துக் கொண்டிக்க, ‘அவனின் பதற்றம் தன்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை…’ என்னும் வகையில் கொஞ்சமும் பதறாது கழுத்தில் அணிந்திருந்த கல்யாண மாலையை கழற்றி கைகளில் ஏந்திக்கொண்டவன், அப்படியே இரு கைகளையும் மார்புக்கு குறுக்கேக் கட்டிக் கொண்டு அவனை குறுகுறுவென பார்தது வைத்தான்.

 

“டேய் ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணுனா… என்னை எதுக்குடா உன் பொண்டாட்டிய பாத்து வைக்கற மாதிரி இவ்வளவு பாசமா பாத்து வைக்கற…” என்றான் அக்னி இன்னும் கடுப்பாய் அவனை முறைத்துப் பார்த்து. அதை எல்லாம் கண்டுக் கொள்ளதவனாய் அதே பார்வையை அவன் தொடர,

 

“என் மூஞ்சையே ஏன்டா பாத்துட்டு இருக்க… என் மூஞ்சுல என்ன படமா ஓடுது…” என்றான் அக்னி எரிச்சலாய்.

 

“ஆமான் தம்பி படம் தான் ஓடுது… அதுவும் ஸ்பெஷல் காதல் படம்… அதான் நானும் என்ற புது பொண்டாட்டியும் ரசிச்சு பாத்துட்டு இருக்கோம்…” என்றான் மணகோலத்தில் நின்றவன் எரிச்சல் மிகும் குரலில்.

 

“இங்க ஒரு பொண்ணு மயங்கி விழுந்து இருக்கா… கொஞ்சமாச்சும் பதறுதா உனக்கு… நீயெல்லாம் என்ன மனுஷன்டா…”

 

“சிறு திருத்தம்… அதுவா மயங்கல… நீதான் தள்ளிவிட்டு மயங்க வச்சுருக்க…”

 

“பச்… இப்படி நின்னு வெட்டி பேச்சு பேசாம வெளிய போய் யாரையாவது கூட்டிட்டு வரலாம் இல்ல…”

 

“இங்காரு… ஓவறா ஆடாத… அந்த புள்ள உன் மூஞ்ச பக்கத்துல பாத்துத்தான் பதறிப் போய் மயங்கி இருக்குனு நினைக்கறேன்… இரண்டு கை தண்ணீய அள்ளி தெளிச்சா தன்னால எழுந்து உக்காந்துக்கும்… மறுபடியும் இந்த மூஞ்சிய கிட்ட காட்டி தொலைக்காத… படக்குனு மயங்கி தொலைய போகுது…” என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே யாரோ பாதி நிறைந்த தண்ணீர் பாட்டில் ஒன்றை, மிளிரை மடியில் கிடத்தியபடி தர்க்கம் புரிந்துக் கொண்டிருந்தவனிடம் நீட்டினாள் அந்த மணப்பெண்.

 

அதை வாங்கி அவன் அவள் முகத்தில் தெளிக்க, கொஞ்சமாய் அசைந்தவள் மெல்ல கண்களை திறந்துப் பார்க்க, அத்தனை அருகில் தெரிந்த அவன் முகத்தை கண்டு உண்மைக்குமே பயந்து தான் போனாள். பதறி இரண்டடி அவனை விட்டு தள்ளி அமர, இவனோ அவளை அங்குலம் அங்குலமாய் ஆராயும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவள் தன்னை சுற்றியும் ஒரு முறை பார்வையை ஓட்ட, இவனுக்கோ உள்ளே ஒரு பய பந்து உருண்டது. எங்கே படங்களில் எல்லாம் வருவதைப் போல மீண்டும், “நான் யாரு..? இப்போ எங்க இருக்கேன்..? நீங்களாம் யாரு..?” என கேட்டு வைப்பாளோ என்றிருந்தது அவனுக்கு. நல்ல வேளையாக அவள் அப்படி எதுவும் கேட்கவில்லை. ஆனால், அவனே வாய் அடைத்து நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு அமரும் அளவில் இருந்தது எழுந்து அமர்ந்தவளின் பேச்சு.

 

“ஹாலோ மிஸ்டர்… கொஞ்சமாச்சும் அறிவிருக்க உங்களுக்கு… இப்படி தான் எரும மாடு மாதிரி கதவ கூட தட்டாம இடிச்சு தள்ளிட்டு வருவீங்களா… மனுஷனா ஒரு மேனர்ஸ் வேண்டாம்… சரி அத கூட விட்டுடலாம்… இப்படி தடிமாடு மாதிரி உடம்ப வளத்து வச்சு இருக்கீங்களே… ஸ்டெடியா நிக்க தெரியாது… இப்படிதான் மேல வந்து விழறதா… ஏதாவது அடிபட கூடாத இடத்துல அடிப்பட்டு நா மேல போய் சேந்து இருந்தனா கொல கேசுல உள்ள போய்ருப்ப நீ… உன் நல்ல நேரமோ என் நல்ல நேரமோ நான் பொழைச்சு எழுந்து உக்காந்து இருக்கேன்… அது பொறுக்கலையா உனக்கு… அவ்வளவு கிட்ட கொண்டு வந்து உன் மூஞ்ச மூஞ்ச காட்டற… பாத்ததும் பக்குனு வருது எனக்கு… நெஞ்சடைச்சு செத்து தொலைஞ்சிருந்தா என்ன பண்ணி இருப்பா…” அவன் மட்டுமல்ல அங்கிருந்த அனைவருமே ‘ஙே…’ என்று தான் நின்றிருந்தனர்.

 

கேட்டுக் கொண்டிருந்த அவனுக்கு தான் பின்னால் நின்று,

 

கேட்டாளே ஒரு கேள்வி…

நெஞ்ச கிள்ளி விட்ட படுபாவி…

 

ஏதே ஏதோ என்ன பேசிப் புட்ட…

எக்குத் தப்பா வார்த்தை வீசிப் புட்ட…

 

என எஸ்.பி.பி சோகமே உருவாய் உருகிக் கொண்டிருக்க, ‘ஒரு கேள்வியா கேட்டா..? நல்லா நாக்க புடிங்கிக்கற மாதிரி மூஞ்சுல காறி துப்பாத குறையா நறுக்குனு நாலு கேள்வி கேட்டா..?’ என நேரங்கெட்ட நேரந்தில் மனசாட்சி வேறு கவுண்டர் கொடுக்க, அதை அடக்கத்தான் வழி தெரியவில்லை அவனுக்கு.

 

“காது கேட்கும் தானே… நான் பாட்டுக்கு பேசிட்டு இருங்கேன்… நீ என்னனா ஙே…னு பேக்கு மாதிரி உக்காந்து இருக்க… ஏந்திரிச்சு தொலனு ஆள் வச்சு மைக்ல அலோன்ஸ் பண்ணனுமா… ஆள பாரேன்… நவுந்து தொலை மொதல்ல… வந்துட்டான் பெரிசா சூச தூக்கிட்டு…” என்றவள் அருகில் அமர்ந்திருந்தவனை தள்ளிக் கொண்டு எழ முயன்றாள். லேசாய் உடல் தள்ளாட, மீண்டும் மயக்கம் வரும் போல இருக்க, அவனோ பதறிக்கொண்டு அவளை ஆதரவாய் பற்றிக் கொண்டான்.

 

“மிளிர்… என்னம்மா பண்ணுது…” என பதறியவனின் கையை விளக்கியவள், முயன்று தன்னை நிலைப்படுத்திக் கொண்டு திடமாய் நின்றுக் கொண்டாள். உச்சந்தலையில் இரும்பால் அடித்ததைப் போல சுறுக்கென்ற வலித் தோன்ற, முகத்தில் வலியை காட்டாது இருக்க முடியவில்லை அவளால்.

 

அவளின் முக சுறுக்கத்தில் பதறிவன், “என்ன பண்ணுது மிளிர்… தலைய வலிக்குதா… டாக்டர்ட போவோமா… ஒரு ஸ்கேன் எடுத்து பாத்திடலாம்…” என படபடவெனப் பொறிந்தவனை இப்போது ஆராய்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

 

‘இவனுக்கு எப்படி என் பெயர் தெரியும்..? எனக்கு ஒன்றென்றால் இவன் ஏன் இப்படி பதறுகிறான்..? யாராய் இருந்தாலும் இதை அத்தனை பெரிய விசயமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்..? இவன் பதறி ஸ்கேன் எடுக்கலாம் என்கிறான் என்றால் என்னைப் பற்றி தெரிந்திருக்குமோ..?’ இப்படிதான் இருந்தது அவளின் எண்ண ஓட்டம்.

 

“ஐ அம் ஓ.கே நவ்…” என்றவள் ஆழ்ந்து ஒரு முறை அவனை பார்த்துவிட்டு வெளியே சென்று விட்டாள். அவளுக்குமே அவனிடம் காய வேண்டுமென்று ஆசையா? எழுந்ததுமே தலையில் ஏற்பட்ட வலி அப்படி அவளை பேச வைத்திருந்தது. அதோடு சேர்ந்து எக்காரணம் கொண்டும் மீண்டும் தலையில் அடிப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என டாக்டர் கூறி இருத்தது வேறு சேர்ந்து அவளை பதற்றமடைய வைத்திருந்தது. சட்டென்று விழுந்ததில் மயக்கமும் வலியும் உண்டாகி இருக்க, அது ஒரு வித பயத்தை ஏற்படுத்தி இருந்தது.

 

செல்பவளையே பார்த்துக் கொண்டு நின்றருந்தவனை, “என்னடா அக்னி இதெல்லாம்…” என்றபடி நிகழ் உலகிற்கு கொண்டு வந்திருந்தான் இசை வேந்தன். இன்றைய நிகழ்வின் நாயகன். அக்னிமித்ரனின் உடன்பிறப்பு.

 

“எதெல்லாம்…” என்றவன் பார்வை இன்னும் அவளிடத்தில் தான் பதிந்திருந்தது.

 

“அக்னி… நான் உங்கிட்ட தான் பேசறேன்… என்ன பாரு முதல…” என அவனின் முகம் பற்றி திருப்பி தன் பக்கம் நிறுத்தினான் இசை.

 

“பச்… என்னடா இப்ப உனக்கு…” என்றான் சலிப்பாக.

 

“ஒழுங்கா அண்ணனு கூப்பிடு… இப்போ எனக்கு கல்யாணமும் ஆகிட்டு… இன்னமும் இப்படியே மரியாதை இல்லாம பேசிட்டு இருந்த சரியிருக்காது பாத்துக்க…”

 

“சரிங்க ண்ணா… சொல்லுங்க அண்ணா…” என அவன் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு பணிவாய் குனிந்து கைக்கட்டி கேட்ட விதத்தில் திவ்யா சத்தமாகவே சிரித்து விட்டிருந்தாள். அவள் இந்த விழாவின் நாயகி. அவனின் தற்போதைய அண்ணி + மாமன் மகள் திவ்யதர்ஷூனி.

 

“அந்த பொண்ண உனக்கு முன்னமே தெரியுமா..? என்னமொ பொண்டாட்டி மாதிரி மடியில போட்டுட்டு உருகுற… சதாரண மயக்கத்துக்கு இதெல்லாம் ஓவர்னு உனக்கே தெரியல…”

 

“தெரியல…” என அவன் அசால்டாய் சொல்லவும், அவனை திட்ட இசை வாயை திறந்த சமயம் வேகமாக அங்கே வந்தார் தெய்வானை. அவர்களின் அன்பு அன்னை.

 

“அடே… ஒரு சூஸை குடுத்துட்டு வர உனக்கு இவ்வளவு நேரமா..? இதான் சாக்குனு இங்கையே குத்தவச்சு உக்காந்துட்டீயாக்கும்… அங்க உன் பெரிய அத்தை ஜிங்ஜிங்குனு குதிக்காறா… நீ கொண்டி பஸ் ஸ்டாண்டுல விட்டாதான் பஸ் வருமாமன்… போடா சீக்கரம்…” என்றவர் அங்கிருந்த நாற்காலியை எடுத்துப் போட்டு அமர்ந்து, முந்தனையால் தனக்கு தானே விசிறிக் கொண்டார்.

 

“உங்க செல்ல புள்ளை என்ன பண்ணானு முதல கேளுங்க…” என்றான் இசை இப்போது வெளிப்பாடையாய் அக்னியை முறைத்துக் கொண்டு.

 

அப்போது தான் அறையை சுற்றிப் பார்த்தவர், “ஏன்டா ஒரு ஜூஸை உருப்படையா எடுத்துட்டு வந்து குடுக்க கூட உனக்கு துப்பில்லையா… கொட்டி கவுத்தாச்சா… நீயெல்லாம் என்ன போலீஸோ..? அப்படி என்னதான் ட்ரைனிங்ல சொல்லிக் குடுத்தாங்களோ..? போடா போ… சீக்கரம் போய் உன் பெரிய அத்தைய பஸ் ஏத்தி விட்டுட்டு வா… அதையாவது ஒழுங்கா பண்ணித் தொல… அப்புறம் அவ வந்து நீ மதிக்கவே மாட்டறனு ஜிங்ஜிங்குனு குதிச்சா என்னால முடியாது சொல்லிட்டேன்… எனக்கு வேற லோ சுகர்… இப்பவே கிறுகிறுனு வருது…”

 

“கேட்டுக்கடா… உன்ன பத்து மாசம் சுமந்து பெத்த தாயுக்கும் கிறுகிறுனு வருதாமான்… அப்படியே மடியில போட்டு தாலாட்டு பாடு… இப்பயெல்லாம் பாடா மாட்டீங்களே…” என இசை நொடிக்க, என்ன நடக்கிறது என ஒன்றும் புரியவில்லை தெய்வானைக்கு.

 

“ஏன்டா… இன்னைக்கு கூட உங்க சண்டைய நிறுத்த மாட்டீங்களா..? அதுக்குள்ள ஆரம்பிக்கனுமா..?” என்றார் இருவருக்கும் பொதுவாக.

 

“அவன் தான்ம்மா…” என்ற இசையிடம், “ஏன்டா பெரியவனே நீ அடுத்தது கோவிலுக்கு போகனும்… நியாபகம் இருக்கா இல்லையா… போட்டா எடுத்து முடிச்சுட்டீங்கனா… சட்டுனு சாப்பிட்டு போய் கோவிலுக்கு கிளம்பு போ… இப்ப கிளம்பினா தான் நல்ல நேரத்துல போய்டு வூட்டுக்கு வர முடியும்…” என்றவர் சின்ன மகனை ஏவவும் மறக்கவில்லை.

 

கொஞ்சம் ஆசுவாசமாக அமர்ந்திருந்தவர், இப்படியே நீண்ட நேரம் அமர்ந்திருக்க முடியாது என்பதை உணர்ந்து எழ போன நேரம், வேகமாக கையில் கப்புடன் வந்துக் கொண்டிருந்தான் அக்னி. “புள்ளைக்கு அம்மா மேல எவ்வளவு பாசம்… மயக்கமா வருதுனு சொன்னதுமே மனசு கேக்கமா காபி எடுத்துட்டு வருது பாரு… அந்த புள்ளைய போய் கொற சொல்லறான் பாரு… அறிவு கெட்டவன்…” என்றவர் முழுதாய் கூட பூரித்துத்துப் போகும் முன் அக்னி யூ டேர்ன் எடுத்து மிளிரின் அருகில் சென்றிருந்தான்.

 

அருகில் ஏலக்காய் மணத்துடன் டீ வாசம் வரவும் சட்டென்று நிமிர்ந்து பார்த்தவள் அங்கே அக்னி நிற்கவும் கேள்வியாய் புருவம் உயர்த்தினாள்.

 

“இல்ல தலையில கை வச்சுட்டு உக்காந்து இருந்தீங்களே அதான்…”

 

“எனக்கு தலைவலிச்சா உங்களுக்கு என்ன மிஸ்டர்…”

 

“எங்க அண்ணன் கல்யாணத்துக்கு வந்து இருக்கீங்க… உங்கள பாத்து பாத்து கவனிக்கறது என் கடமை…” என அவன் சொல்லவும், ஒரு மார்க்கமாய் பார்த்தவள் மறுப்பும் சொல்லது அதை வாங்கிக் கொண்டாள். அவளுக்கும் அது அப்போது தேவையாய் இருந்தது.

 

திரும்பி செல்ல இருந்தவனை தடுத்து நிறுத்தியவள், “என்னை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா…” என்றாள். “ஓஓஓ… நல்லா… ஒரு வாரத்துக்கு முன்னாடி இருநூறு ரூபாயை கையில திணிச்சுட்டு போனீங்களே…” என்றான் அவன் புன்முறுவலுடன்.

 

அவன் நினைவு படுத்தியும் அவளுக்கு இன்னாறென்று பிடிபடவில்லை. புருவத்தை சுருக்கி அவனைப் பார்க்க, “ஐ அம் மித்ரன்… அக்னி மித்ரன்… இன்ஸ்பெக்டர்…” என்று மிடுக்காய் அவள் புறம் கை நீட்டினான். ‘ஆமான் இவரு பெரிய ஜேம்ஸ் பாண்டு… வந்துட்டாரு கைய தூக்கிட்டு…’ என்று அன்றுப் போல் நினைத்தவள், மெல்ல அவனின் கைப்பற்றி குலுக்கினாள்.

 

“இப்படி தான்… ரொட்டுல போற வர எல்லாரையும் பேரோட நியாபகம் வச்சுபீங்களா…” என்றாள் அவள் அவனையே ஆராயும் பார்வை பார்த்து…

 

“எல்லாரையும் வச்சுக்கிறது இல்லைதான்… ஆனா எனக்கு முதல் முறை லஞ்சம் கொடுத்தவங்களை நியாபகம் வச்சுக்கனுமே… அதான்…” என்றவன் “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… இன்னொரு நாள் பாக்கலாம்… பேசலாம்…” என்றபடியே அவனையே வாசலில் நின்று முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த பெரிய அத்தையை நோக்கி நகர்ந்து விட்டான். செல்லும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் மிளிர்.

 

இதை பார்த்துக் கொண்டிருந்த தெய்வானைக்கோ உள்ளுக்குள் ஏதோ நெருடியது. மிளிரிடம் வந்தவர் அவளை பார்வையால் அளவெடுக்க, அந்த பார்வை வீச்சில் அவள் திரும்பிப் பார்த்தாள்.

 

“நீ அந்த மேக்அப் பொண்ணு தானே…” என்றார் பட்டென்று நினைவு வந்தவராக.

 

“ஆமான் ஆண்டி…” என அவள் சொல்லவும் தான் அவருக்கு பொறி தட்டியது. ‘இதுக்கு தான் சிம்பிளா வீட்டுல உள்ள ஆளுங்களே பண்ணிக்கலானு சொன்னத கூட கேக்காம பூயூட்டி பார்லர் வச்சாலே ஆச்சுனு தலைகீழ நின்னானா அந்த பய… வரட்டும் இன்னைக்கு… பேசிக்கறேன்…: என்று அவர் மனதிற்குள் அக்னியை வறுத்துக் கொண்டிருக்க, மிளிரோ அவரின் ஆராயும் பார்வையில் நெளிந்தபடி நின்றிருந்தாள்.

 

அதை உணர்ந்தவர், ” நீ இன்னும் சாப்பிடலயா..? அதான் மூஞ்ச பாத்தாலே தெரியுதே… வா… வா… வந்து சாப்பிடு முதல…” என அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றவரை முதல் சந்திப்பிலேயே பிடித்து தான் போனது அவளுக்கு. வேலை செய்யவென்று வந்தவளை சாப்பிட்டாயா என்று கேளாமல், முகமறிந்தே வந்து சாப்பிடு என உரிமையாக கைப்பற்றி இழுத்து செல்பவரை யாருக்கு தான் பிடிக்காது. சாப்பிட்டு தனது சம்பளத்தை வாங்கிக் கொண்டு உடனே கிளம்பி விட்டாள் மிளிர்.

 

அழகு நிலையம் செல்லாது நேராக வீட்டிற்கு வந்தவளை வாசலிலேயே வரவேற்றான் இனியன்.

 

“என்ன அதுக்குள்ள வந்துட்ட… பார்லருக்கு போகல…”

 

“இல்ல காலையிலேயே ஏந்திரிச்சது கொஞ்சம் டையார்டா இருக்கு… அதான் சூர்யாவை பாத்துக்க சொல்லிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போகலானு வீட்டுக்கு வந்துட்டேன்…”

 

“அப்போ நான் வேணா போய்ட்டு…”

 

“என்ன… என்ன சொன்ன இப்போ…”

 

“இல்ல… உனக்கு டையர்டா இருந்தா நான் வேணா போய்ட்டு ஜூஸ் எடுத்துட்டு வரவானு கேட்டேன் க்கா…”

 

“அது… அந்த பயம் இருக்கனும்… இனிமே கட பக்கம் வந்த கால ஒடைச்சுடுவேன்… ஒழுங்கா போய் டீ போட்டு எடுத்துட்டு வா… போ…” என்றவள் தனது அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

 

இவனும் தனது விதியை நொந்தபடி டீ போட சென்றான். முடியாது என்றால் கத்தி சமையலறையில் இருக்கும் தாயை அழைத்து பஞ்சாயத்தை கூட்டி விடுவாளே! இதை சொல்லியே, ஒரு நாளைக்கு ஐந்தாறு முறை அவனை டீ போட வைத்து விடுகிறாள் அவள்.

 

அவள் தன்னை தூய்மைப் படுத்திக் கொண்டு வந்தவள் இனியன் எடுத்து வந்த டீயை குடித்துவிட்டு படுத்து விட்டாள். எந்த வம்பும் வளர்க்காமல் அவள் படுத்தது இனியனுக்குஉள்ளுக்குள் உறுத்தியது. வழமையாக இப்படி இருப்பவள் இல்லையே என்ற எண்ணம் ஓட, மதிய உணவிற்காக கூட அவள் எழவில்லை. அசந்து தூங்கும் அவளை எழுப்பவும் யாருக்கும் மனம் வரவில்லை.

 

மெல்ல அவள் கண்களை திறந்த போது இன்னும் தலைப் பாரமாய் தான் இருந்தது. அழுந்த ஒருமுறை தலையை பிடித்து விட்டுக் கொண்டவள் நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தாள். அது மணி ஆறரை என்றது. வெளியே பார்க்க மிதமான வெளிச்சம் பரவியிருந்தது. உண்மைக்குமே இது காலையா மாலையா என்று குழம்பிதான் போனாள் அவள். மெல்ல எழுந்து வெளியே வந்தவள், இனியன் அமர்ந்திருப்பதை பார்த்துக் கொண்டே அவன் அருகில் சோபாவில் தொப்பென்று அமர்ந்தாள்.

 

“ஆமான்டா தம்பி… இது காலையா இல்லை மாலையா…” என்றாள் சந்தேகம் நீங்காமல்.

 

“ம்ம்ம் அர்த்தராத்திரி…” என்றான் அவன் கடுப்பாய் டிவியில் கவனத்தை பதித்தபடியே.

 

“அடேய்… இப்போ எல்லாம் அம்மாவ விட அதிகமா சீரியல் பாக்கறடா நீ…”

 

“பேசாம கம்முனு இருடி… அந்த ஹிந்தி சீரியல் போடற நேரம்… அதுல ஹீரோயின் வேற கும்முனு இருப்பா…”

 

அதற்கு மேல் அவள் எதையும் கேட்காமல் தலையை பிடித்தபடி அமர்ந்து விட திரும்பி அவளை பார்த்தவன், “நீ போய் ப்ரஸாகிட்டு வா… நான் டீ போட்டு தரேன்…” என்றுவிட்டு சமையலறையை நோக்கி செல்ல, “அம்மா எங்கடா…” என்றபடியே குளியறையை நோக்கி சென்றாள் மிளிர்.

 

“கோவிலுக்கு போயிருக்காங்க…” என சமையலறையில் இருந்து குரல் கொடுத்தவன், அவனுக்கும் அவளுக்கும் டீயைப் போட்டு எடுத்து வந்து அவளை தேட வீட்டில் அவள் எங்குமில்லை. வீட்டின் வாசலில் வந்து குரல் கொடுக்க, மாடியில் நின்று தான் இங்கிருப்பாதாய் குரல் கொடுத்தாள் அவள். டீய எடுத்துட்டு இரண்டு மாடியை ஏற வைக்கறாளே என நொந்தபடியே ஏறியவன் ஒன்றை அவளிடம் நீட்டிவிட்டு ஒன்றை தனக்காய் எடுத்துக் கொண்டான்.

 

மாடியில் இருந்து தெருவை வேடிக்கை பார்த்தபடி டீயை மிடறு மிடறாய் ரசித்து பருகியவள், எதிர்புறம் இருந்த வீட்டைகாட்டி, “இந்த வீடு எப்போ இருந்து பூட்டி இருக்கு இனியா…” என்றதுமே அவனுக்கு குடித்த டீப் புரையேறியது. அது முன்பு மகிழினி அவள் குடும்பத்தோடு இருந்த வீடு.

 

“அது… அது… ரொம்ப நாளாவே பூட்டி தான் இருக்கு…”

 

“அதான் எப்போ இருந்து… நான் ஒரு நாள் கூட அந்த வீட்டுக்கு யாரும் வந்து பாத்ததில்லையே… சுத்தம் பண்ண கூடவா யாரும் வர மாட்டாங்க…”

 

“அது… அது… அவங்க பையனுக்கு வெளியூர்ல வேலை கிடைச்சுட்டு… பையனோடவே போய் குடும்பமா செட்டில் ஆகிட்டாங்க…” என்றான் திக்கி திணறி.

 

அவள் சிறிது நேரம் அமைதியாக டீயை அருந்த, முடித்து விட்டாள் போல என நிம்மதியாக அவனும் டீயை குடிக்க முற்பட்ட சமயம், “மகிழினி யாரு இனியா..?” என்றாள் ஆழ்ந்து டீயை பருகிக் கொண்டு அவனை ஆராய்ந்துப் பார்த்தபடி. அவள் கேட்ட கேள்வியில் அவன் விக்கித்து அப்படியே சம்பித்து நின்றுப் போனான்.

 

      – தேடல் தொடரும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்