
அத்தியாயம் 8
ஐவரும் மென்மொழியின் வீட்டில் கூடி இருந்தனர்.
யுகேந்திரன் தீவிர யோசனையுடன் காணப்பட, மற்ற நால்வரும் குழப்பத்துடன் அவர்கள் முன்னிருந்த புகைப்படங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.
அவை இரண்டும் மகிழுந்தின் புகைப்படங்கள். ஒன்று மருத்துவமனையில் ரவுடிகள் வந்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த அடர் பச்சை நிற மஹிந்திரா தார். மற்றொன்று யுகேந்திரன் வசமிருக்கும் நீல நிறக்கல் இருந்த கருப்பு நிற மஹிந்திரா தார்.
அவற்றைக் கண்ட இன்பசேகரன், “சார், இந்தப் பச்சை கலர் கார் ஏன், எங்களை ஆக்சிடெண்ட் பண்ண காரா இருக்கக் கூடாது?” என்ற சந்தேகத்தை எழுப்ப, “ஹ்ம்ம், நானும் அதை யோசிச்சேன் இன்பா. துரதிர்ஷ்டவசமா, உங்களுக்கு ஆக்சிடெண்ட் நடந்த இடத்துல சிசிடிவி எதுவும் இல்ல. இருந்தாலும், பக்கத்து ஏரியா சிசிடிவியை செக் பண்ண சொல்லியிருக்கேன். அதோட, அந்த ஹாஸ்பிட்டல் பக்கத்துல வேற ஏதாவது சிசிடிவில, இந்த காரோட நம்பர் தெளிவா தெரியுதான்னும் பார்க்கச் சொல்லியிருக்கேன். நம்பர் கிடைச்சாதான், இந்த வழியில அடுத்து மூவ் பண்ண முடியும்.” என்றான் யுகேந்திரன்.
மென்மொழியோ, தாத்தா வீட்டில் இருந்த நீல நிறக்கல் எப்படி அந்த மகிழுந்தில் கிடைத்திருக்க முடியும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
போதாததற்கு சுடரொளி வேறு, “இந்த சீக்வன்ஸ்ல முதல்ல வரது பிளாக் கார்தான். அதை அந்த திருடனுங்க திருடிட்டானுங்க. அதுக்கப்புறம், யாழ் – இன்பாவோட ஆக்சிடெண்ட். அதை செஞ்சது பச்சை கார் பார்ட்டி. அதே கார், நம்மள ஹாஸ்பிட்டலயும் ஃபாலோ பண்ணியிருக்கு. இதுல, அந்த ரவுடிஸ் வேற… இப்போ நமக்கு எதிரா எத்தனை வில்லன் குரூப் இருக்குன்னே தெரியலையே!” என்று புலம்பினாள்.
“ஹ்ம்ம், எத்தனை குரூப்னு தெரியல. ஆனா, அதுல ஒண்ணு கவர்மெண்ட் டிப்பார்ட்மெண்ட்னு கன்ஃபார்மா தெரியுது.” என்று யுகேந்திரன் அந்தக் கருநிற வாகனம் இருந்த புகைப்படத்தை உன்னிப்பாகப் பார்த்தபடி கூற, ‘எப்படி?’ என்னும் விதத்தில் மற்றவர்கள் அவனைக் கண்டனர்.
“அந்த திருடனுங்களோட மெமரியை ரீட் பண்ணப்போ, அந்தக் காரோட விண்ட்ஷீல்டுல, ஆர்க்கியாலஜி சர்வே ஆஃப் இந்தியாவோட (ASI) அஃபிஸியல் சீல் ஒட்டியிருந்ததைப் பார்த்தேன்.” என்றான் அவன்.
“ஆர்க்கியாலஜி டிப்பார்ட்மெண்ட்டா… ஒருவேளை, அந்தக் கல்லைப் பத்தி ஆராய்ச்சி பண்றதுக்கு தாத்தா யாருக்கிட்டயாவது குடுத்துருப்பாரோ?” என்று மென்மொழி சத்தமாக சிந்திக்க, “இப்போ அந்தக் கார்காரன் நமக்கு ஃபிரெண்டா எனிமியா?” என்று குழம்பினாள் சுடரொளி.
“இதைப் பத்தி இன்னும் கொஞ்ச இன்ஃபர்மேஷன் வேணும். அது கிருஷ்ணாவோட அப்பா மிஸ்டர். கரிகாலன் கிட்ட கிடைக்க சான்ஸ் இருக்கு.” என்று யுகேந்திரன் கூற, “அவரும் ஆர்க்கியாலஜி டிப்பார்ட்மெண்ட்லதான் வேலை பார்க்குறதா கிருஷ்ணா சொன்னானே. அவரை எந்தளவுக்கு நம்பலாம்?” என்று வினவினான் இன்பசேகரன்.
“இப்போ நம்ம இருக்க நிலைமைக்கு யாரையும் முழுசா நம்பக்கூடாது.” என்று வேறேதோ யோசனையில் கூறினாள் யாழ்மொழி.
“சரி இப்படியே பேசிட்டே இருந்தா எப்படி? அவருக்கு கால் பண்ணி பேசுங்க.” என்று சுடரொளி கூற, ஆராவமுதனிற்கு அவர் பழக்கமாக இருக்கக் கூடும் என்பதால் மென்மொழியே அலைபேசியில் கரிகாலனைத் தொடர்பு கொண்டாள்.
அழைப்பு சிறிது நேரம் கழித்தே ஏற்கப்பட, முதலில் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்ட மென்மொழி, அத்துடன் ஆராவமுதனின் பெயரையும் கூற, உடனே, “ராங் நம்பர்…” என்று அழைப்பு துண்டிக்கப்பட்டது.
அதில் ஏனைய அனைவரும் குழப்பத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட அலைபேசியையே பார்க்க, சில நொடிகளில், பிரைவேட் நம்பரிலிருந்து அதே அலைபேசிக்கு அழைப்பு வந்தது.
மென்மொழி ஒருவித குறுகுறுப்புடனே அதை ஏற்க, மறுமுனையில் பேசியவரோ, “நான் கரிகாலன். உங்க தாத்தா சம்பந்தப்பட்ட எந்த விஷயமா இருந்தாலும், அதை மொபைல்ல பேசுறது சரியா இருக்காது. நான் ஊருக்குத்தான் வந்துட்டு இருக்கேன். நேர்ல பேசுவோம். அதுவரை, மத்தவங்க கிட்ட எதையும் பேசாம இருக்குறது பெட்டர். எங்க, எப்போ மீட் பண்ணலாம்னு நானே சொல்றேன்.” என்று தகவலாகக் கூறியவர், அத்துடன் அழைப்பைத் துண்டித்து விட்டார்.
பேசியவரின் குரலும் பாவனையுமே விஷயம் எத்தனை தீவிரம் என்பதைக் கட்டியம் போலக் கூறிவிட, அங்கிருந்த ஐவரின் மனநிலையும் சற்றுத் தளம்பலாகவே இருந்தது.
*****
அழைப்பு விடுத்து சில மணித்துளிகளிலேயே நேரத்தையும் இடத்தையும் அனுப்பி இருந்தார் கரிகாலன்.
நேராக அந்த இடத்திற்கே செல்லலாம் என்று முடிவு செய்தவர்களிடம் தர்க்கம் புரிந்து சாப்பிடுவதற்கு அழைத்துச் சென்றிந்தாள் சுடரொளி.
அதுவும் நகரின் முக்கிய இடத்திலிருந்த பேரங்காடிக்குள் இருக்கும் உணவகத்திற்கு வந்திருந்தனர்.
உபயம் சுடரொளி!
“ஏன்டி இப்படிப் படுத்துற? இங்கதான் வந்து சாப்பிடனுமா?” என்று மென்மொழி சற்றே எரிச்சலுடன் வினவ, “இங்கதான் நீ என் புத்திசாலித்தனத்தை பார்க்கணும் மொழி. நம்மளைத் தேடுறவங்க நம்ம இடத்துலயோ, இல்ல மறைஞ்சுக்க வசதியா இருக்க இடத்துலயோதான் தேடுவாங்க. இது மாதிரி மெயின் பிளேஸ்ல எல்லாம் தேடணும்னு அவங்களுக்குத் தோணாது.” என்ற சுடரொளி, அந்த நொடி தன்னைதானே பெருமையாக உணர்ந்து கொண்டாள்.
போதாததற்கு, யுகேந்திரனிடமும் அவளின் அரிய யோசனையைப் பற்றிக் கேட்க, அவன் ஏதோ சிந்தனையில் இருந்ததால் ஆமோதிப்பாக தலையை மட்டும் அசைத்து வைத்தான்.
மென்மொழியும் சுடரொளியும் முதலில் கை கழுவி வந்துவிட, அவர்களைத் தொடர்ந்து யாழ்மொழியும் இன்பசேகரனும் சென்றிருந்தனர்.
யுகேந்திரனிற்கு முக்கியமான அழைப்பு வந்திருக்க, சத்தமில்லாத இடத்தைத் தேடி வெளியே சென்றிருந்தான்.
அப்போது திடீரென்று தீ எச்சரிக்கை கருவி (ஃபயர் அலாரம்) ஒலியெழுப்ப, அந்த இடமே படபடப்பானது.
மென்மொழியும் சுடரொளியும் மற்றவர்களிற்காகக் காத்திருக்க, அவர்களின் முயற்சியைத் தவிடுபொடியாக்கி வெளியே இழுத்து வந்திருந்தது மக்கள் கூட்டம்.
நிலைமையை மேலும் மோசமாக்கும் விதமாக, அந்தப் பேரங்காடியில் இருந்த மற்ற கடைகளிலிருந்தும் எச்சரிக்கை கருவி ஒலியெழுப்ப, ஒருவித அசாதாரண சூழல் உருவானது, கூட்டமும் பெருகியது.
விளைவு, ஐவரும் தனியே பிரிக்கப்பட்டனர்.
அந்தக் கருவியை ஒலிக்கச் செய்தவர்களின் நோக்கமும் அதுதானோ!
யுகேந்திரன் வாகன தறிப்பிடத்தில் மாட்டிக் கொள்ள, மென்மொழியும் சுடரொளியும் முதல் தளத்தில் இருவேறு திசையில் இருந்தனர். யாழ்மொழியும் இன்பசேகரனும் அந்த உணவகம் இருந்த இரண்டாம் தளத்தில் இருந்தனர்.
ஐவரையும் தனித்தனியே அந்த ரவுடிகள் சுற்றி வளைத்தனர்.
சுடரொளியை நோக்கி வந்த ரவுடியைக் கண்டதும் பயத்தில் தானாக அவளின் சக்தி வெளிப்பட்டு மற்றவர்கள் கண்களிலிருந்து மறைந்து விட்டாள்.
சட்டென்று அவள் மறைந்ததைக் கண்டு அதிர்ச்சியான அந்த ரவுடியின் பாவனையைக் கண்டதும்தான், அவளின் சக்தி அவளின் நினைவிற்கு எட்டியது.
மானசீகமாக தலையிலடித்துக் கொண்ட சுடரொளி, மற்றவர்களுடன் சேர்ந்து கொள்ள அங்கிருந்து நகர்ந்தாள்.
செல்லும் வழியில், தன்னைப் பயமுறுத்தியவனைப் பயமுறுத்திப் பார்க்க, அவளின் நெஞ்சம் குறுகுறுக்க, அவளின் சக்தி கை கொடுத்த மகிழ்ச்சியில், அவனது காலை இடறி விட்டு, கீழே விழச் செய்த கையோடு மென்மொழியைத் தேடி ஓடி விட்டாள்.
அதே சமயம், வாகன தறிப்பிடத்தில் தன்னைக் குறி வைத்து வந்த ரவுடியின் மனதைப் படித்த யுகேந்திரன் அப்போதுதான் அவனிடம் இருந்த கல்லிற்கான மற்றொரு சக்தியைக் கண்டு கொண்டான்.
அவனால் பிறரின் மனதைப் படிப்பது மட்டுமல்லாது கட்டுப்படுத்தவும் முடிந்தது.
அதை உபயோகப்படுத்தி, அந்த இடத்தில் யுகேந்திரன் இல்லாததைப் போன்ற பிம்பத்தை, அந்த ரவுடியின் மனதில் பதியச் செய்து, அங்கிருந்து வெளியேறினான்.
மறுபுறம், இரண்டாம் தளத்தில் மாட்டிக் கொண்ட யாழ்மொழிக்குப் பதற்றத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. உருவத்தை மாற்றி தப்பிக்கலாம் என்ற எண்ணம் கூட அப்போது அவளிற்குத் தோன்றவில்லை.
அவளை நெருங்கி வரும் ரவுடியை விழியகல பார்த்துக் கொண்டிருந்தவளின் கரம் பற்றித் தன் பின்னே இழுத்த இன்பசேகரன், முன்னேறி வந்த ரவுடியை ஒரே அடியில் கீழே சாய்த்து விட்டான்.
“ஹையையோ, அவன் செத்துட்டானா? போச்சு இன்பா, கொலை கேசு…” என்று யாழ்மொழி பயத்தில் புலம்ப, அவளை முறைத்த இன்பசேகரனோ மற்றொரு ரவுடியைக் கவனிக்கச் சென்று விட்டான்.
இப்படி மற்ற நால்வரும், அவர்களிற்கு வந்த ஆபத்தைக் கடந்து விட, அதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் விழித்தது மென்மொழி மட்டும்தான்.
அவளிற்குக் கிடைத்த சக்தி கொண்டு ஆபத்தைத் தடுக்க முடியாதே!
செய்வதறியாது திகைத்தவளைச் சமீபித்த ரவுடியோ, அவளின் கரம் பற்றி வலுக்கட்டாயமாக இழுக்க, அதனால் உண்டான தள்ளுமுள்ளில் அவன் கரத்தில் இருந்த கத்தி அவளின் கையில் வெட்டியிருந்தது.
அவனே அதை எதிர்பார்க்காமல் அவளின் கரத்தை விட்டுவிட, காயத்தை குணமாக்கும் அவளின் சக்தி அப்போது கை கொடுத்தது.
ஆனால், ஏற்பட்டிருக்கும் ஆபத்திற்கு அது தீர்வல்ல என்பதை உணர்ந்த மென்மொழி, அடுத்து என்ன என்று யோசிக்க, குழப்பத்தில் இருந்த ரவுடி என்ன நினைத்தானோ, இம்முறை அவளைத் தாக்கும் எண்ணத்தில் நெருங்கினான்.
அதைப் பத்தடி தொலைவிலிருந்து சுடரொளியும், கீழ் தளத்திலிருந்து யுகேந்திரனும், மேல் தளத்திலிருந்து யாழ்மொழியும் இன்பசேகரனும் பார்த்தனர்.
தொலைவில் இருந்தததால், அவர்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை. கூட்டத்தின் காரணமாக, விரைவாக மென்மொழியை நெருங்கவும் வழியில்லை.
அந்த நொடி அனைவருக்கும் பதற்றம் தொற்றிக் கொள்ள, கத்தி மென்மொழியின் தேகத்தை பதம் பார்க்கும் இறுதி நொடியில், அதன் இலக்கை அடையாமல் கீழே சென்று விழுந்தது.
எப்படி இது நடந்தது என்று யாருக்கும் எதுவும் புரியவில்லை.
அதை யோசிக்கும் சமயத்தில் சுடரொளி மென்மொழியை நெருங்கி அவளின் சக்தி கொண்டு தோழியையும் மறைத்திருந்தாள்.
நடந்தது புரியாமல் விழித்தது ஐவர் மட்டுமல்ல, அந்த ரவுடியும்தான்.
அவன் புரியாமல் சுற்றிலும் பார்க்க, அடுத்த நொடியே அங்கு வைக்கப்பட்டிருந்த அலங்காரத் தூண் ஒன்று அவனை மோதி, கீழே விழச் செய்திருந்தது.
இம்முறை, அதைச் செய்தது யாரென்று கண்டிருந்தான் யுகேந்திரன்.
கூட்டம் கொஞ்சம் குறைவது போலிருக்க, மற்றவர்கள் மென்மொழி இருந்த இடத்தை நோக்கி விரைய, யுகேந்திரனோ, அந்த மர்ம நபரை சமீபித்தான்.
அந்த மர்ம நபர் மயங்கிச் சரிய இருந்த இறுதி நொடியில் தாங்கிப் பிடித்திருந்தான் யுகேந்திரன். முகத்தை ஹுடியினால் மறைத்திருந்ததால் அது யாரென்று அதுவரை தெரியவில்லை.
அதற்குள், மற்ற நால்வரும் அங்கு வந்திருந்தனர்.
“என்ன போலீஸ்கார், உங்க போஸே ஒரு மார்க்கமா இருக்கே.” என்று வாயடிக்க ஆரம்பித்த சுடரொளி, “நீ அங்க வெட்டுப்பட்டு கிடக்கிற. உன்னைக் கண்டுக்காம புதுசா யாரையோ தாங்கிப் பிடிச்சுருக்காரு. இதெல்லாம் கேட்க மாட்டியா நீ?” என்று மென்மொழியையும் ஏற்றி விட்டாள்.
“இந்த ரணக்களத்துலயும் உன் வாய் அடங்குதா?” என்ற மென்மொழி, யுகேந்திரனிடம், “இவங்கதான் என்னைக் காப்பாத்துனதா?” என்று வினவினாள்.
“ஹ்ம்ம், மிஸ்ஸாகுற ரெண்டு கல்லுல, ஒரு கல் இவரு கிட்டதான் இருக்கணும்.” என்று யுகேந்திரன் கூற, “எதே இவரா? அப்போ அது பொண்ணு இல்லையா?” என்று அதிமுக்கிய சந்தேகத்தை எழுப்பியிருந்தாள் சுடரொளி.
“சும்மா தொணதொணன்னு பேசிட்டே இருக்காத.” என்ற யாழ்மொழி, கையிலிருந்த தண்ணீர் போத்தலை யுகேந்திரனின் புறம் நீட்டினாள்.
நீரைத் தெளித்த சில நொடிகளிலேயே மயங்கி இருந்த புதியவனின் மயக்கம் தெளிந்தது.
அவனையே நோக்கிக் கொண்டிருந்த ஐவரிடமும், அவன் ‘மதுசூதனன்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.
அவன் எதுவும் சொல்லாமலேயே, அவனிடம் இருந்த செந்நிறக் கல் ஒளிர்ந்து அதன் இருப்பிடத்தைக் காட்டியது.
தொடரும்…

